தன்னையே நினைத்து கொண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 5,523 
 

காலை பனி மூட்டம் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது நாராயணனுக்கு. கழுத்தில் இருந்த மப்ளரை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டார். காதில் குளிர் போவது நின்று போனதில் உடல் கொஞ்சம் சூடாய் இருப்பது போல் பட்டது. இருந்தாலும் மூச்சை இழுப்பதில் சிரமம் ஏற்படத்தான் செய்கிறது. இளமை காலத்தில் புகை பிடிக்காவிட்டால் எதுவும் ஓடாது. அந்த பழக்கமே இப்பொழுது குளிர்காலத்தில் வாட்டி எடுத்து விடுகிறது. மனதிற்குள் நினைத்துக்கொண்டார். எதுவுமே அப்படித்தான் போலிருக்கிறது. நான் அன்று செய்த பிடிவாதமே தன்னை இப்படி தனிமையில் வைத்திருக்கிறதோ !.

சூடான டீ தொண்டைக்குள் இறங்கியதும் கொஞ்சம் சுகமாக இருந்தது. நாராயணனின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த நாயர் “எந்தா சாரே டீ க்கு சூடு மதியோ” போதும் நாயர் நல்லா இருக்கு, பாராட்டியவர் தன் சட்டைப்பையில் இருந்து ஐந்து ரூபாய் எடுத்து நீட்டினார்.

நாயர் பெற்றுக்கொண்டு சினேகபாவமாய் முறுவலித்தார்.வர்றேன் நாயர், விடைபெற்ற நாராயணனின் மனதில் ஐந்து வருட பழக்கத்திலேயே நாயருக்கு என்னுடைய ரசனை ருசி தெரிந்து டீ கொடுக்கிறார். நான் பதினைந்து வருடமாக மனைவியுடன் குடும்பம் நடத்தியும் நான் அவளை புரிந்து கொண்டிருப்பேனா என்று தன்னையே கேட்டுக்கொண்டார். அவள் தன்னை புரிந்து கொண்டிருக்கலாமல்லவா? இப்படி யோசித்து பார்த்தவர், ம்ம்..இனிமேல் இப்படி எண்ணி என்ன பிரயோசனம்? தன்னையே நொந்து கொண்டவர் தான் தங்கியுள்ள அறையை நோக்கி வேகமாக நடையை கட்டினார்.

ஒரு கட்டில், டேபிள், நாற்காலி இவைகள் மட்டுமே வாசம் செய்யமுடியும் அந்த அறையில். தொட்டாற்போல் குளியலறையுடன் இணந்த கழிவறை. இது அவருக்கு வசதியாய் இருந்தது. வயது ஆனதால் தன்னால் வெளியேயோ, பங்கிட்டுக்கொண்டோ குளியலறை உபயோகப்படுத்த முடியாது. அது மட்டுமல்ல இரவு வெகு நேரம் உடகார்ந்து எழுதி விட்டு நடு இரவு கூட கழிப்பறைக்கு செல்ல உபயோகமாயிருந்தது.வாடகையை கூட நிரந்தரமாய் தங்குவதால் குறைந்த கட்டணமே வாங்குகிறார் இதன் சொந்தக்காரர்.பக்கத்து அறைகளில் இதை விட வாடகை அதிகம், நல்லவேளை உத்தியோகத்தில் இருந்திருந்த காரணத்தால் வருகின்ற ஓய்வூதியம் இந்த செலவுகளுக்கு சா¢யாக போய் விடுகிறது. மற்றபடி ஒரு வயதான மாது இந்த அறையை தினமும் சுத்தம் செய்து சில நேரங்களில் கழிப்பறை கூட சுத்தம் செய்து கொடுத்துவிட்டு செல்வாள். அவளுக்கு ஒரு தொகை கொடுத்தது போக, மிச்சமுள்ள தொகை இவரின் உணவு பட்டியலுக்கு சா¢யாகிவிடும்.

மற்றபடி இவர் எழுதி அனுப்பும் கதை கட்டுரைகளுக்கு வரும் சன்மானம் பேப்பர், பென்சில்,என்று சா¢யாகி விடுகிறது. இதற்காக இவர் தன்னை தயார்படுத்திக்கொள்ள அருகில் உள்ள நூலகத்துக்கு சென்று விடுகிறார். நூலகரும் இவர் எழுத்தாளர் என்ற அறிமுகத்தில் நல்ல நூல்களை தனியே எடுத்து வைத்து கொடுக்கும் பழக்கமுண்டு.

திடீரென விழிப்பு வந்து எழுந்த நாராயணன், அப்படியே எதிரிலிருக்கும் கடிகாரத்தில் நேரம் என்ன என்று பார்க்க முயற்சி செய்தார். அந்த இருளில், அல்லது வயதின் காரணமாகவோ,அவ்வளவு சா¢யாக பார்க்க முடியவில்லை.சிறிது நேரம் உற்று பார்த்தபின் மங்கலாக சிறிய முள் நான்கிலும், பெரிய முள் பனிரெண்டிலும் நிற்பதை பார்த்தவர் மணி “நான்கு” என்று உறுதி செய்து கொண்டார். இனி தூக்கம் வருவது சந்தேகம்தான். தன் உடலை அப்படியே கிடத்திக்கொண்டு இப்படியே ‘இறந்து விட்டால்’ எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தவர், அந்த எண்ணத்தை சட்டென உதறி வாழவேண்டும், ஓய்வு பெற்று பத்து வருடங்களாக தனியாக இருந்து விட்டோம், அதற்குள் இறப்பை பற்றி எண்ணுவானேன்? சட்டென எண்ணங்களை உதறி, மெல்ல எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

தன்னுடைய கதைகளில், கட்டுரைகளில் எத்தனையோ தன்னம்பிக்கைகளை வாசகர்களுக்கு விதைத்து விட்டு தான் மட்டும் இப்படி நினைப்பது மடத்தனம் என்று தனக்குள் எண்ணிக்கொண்டார்.இருந்தாலும் யாருக்காக வாழ்கிறோம் என்ற எண்ணம் மேலோங்குவதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒருவேளை தன் தாய் பார்த்த பெண்ணை திருமணம் செய்திருந்தால் உறவுகள் நிலைத்திருந்திருக்குமோ? தானே விருப்பபட்டு கூட வேலை செய்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் இந்த நிலையோ? அம்மா அதற்கப்புறம் கொஞ்ச நாள் நம்மிடம்தானே இருந்தாள், இவளுக்கும் அம்மாவுக்கும் ஒத்துக்கொள்ளாததால்தானே அம்மாவை அநாதை விடுதியில் விட வேண்டியதாயிற்று. அதற்கப்புறம் இவள் மட்டும் எத்தனை வருடம் என்னுடன் வாழ்ந்து விட்டாள். நான்கைந்து வருடங்கள் இருக்குமா? பதவி உயர்வும், என்னை விட ஊதியமும் உயர, என்னை திருமணம் செய்தது அந்தஸ்துக்கு குறைச்சல் என்ற எண்ணம் இவளுக்கு வந்து விட்டதே. என்னுடைய சில பழக்க வழக்கங்கள் கூட இவளுக்கு என்னை பிடிவாதக்காரனாக ஊராருக்கு வரித்துக்காட்டி என்னுடன் வாழ முடியாது என்ற ஒரு காரணத்தை தோற்றுவித்து விட்டாளே. அதற்கப்புறம் அம்மாவை தேடி சென்றால் அவள் என்னை விட்டு சொல்லிக்கொள்ளாமலே போய் சேர்ந்திருக்கிறாள். அவரையும் மீறி பல பல எண்ணங்கள் அவர் மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டன.வலுகட்டாயமாக மனதை திருப்ப வேண்டி எழுந்து வெளியே வந்தவர் கொடியில் தொங்கிய ஒரு துண்டை எடுத்தி தோளில் போட்டுக்கொண்டு,கதவை வெறுமனே சாத்தி விட்டு பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். எண்ணங்களை மட்டுப்படுத்த பார்வையை சுற்றிலும் செலுத்த ஆரம்பித்தார்.

நல்ல இருள் இருந்தாலும் விடியல் ஆரம்பிக்கு முன் ஏற்படும் குளுமையும் அந்த நேரத்தில் காணப்பட்டது. எதிரில் ஓரிருவர் பால் கேன்களுடன் சைக்கிளில் இவரை கடந்து செல்லும் போது உற்றுப்பார்த்து சென்றனர். யார் இந்த வயதானவர் இந்த குளிரில் தோளில் ஒரு துண்டை மட்டும் போட்டுக்கொண்டு கால் போன போக்கில் நடந்து கொண்டிருக்கிறார்? கேள்விக்கணைகள் அந்த பார்வையில் தென்படுவது அவருக்கு புரிந்திருந்தது. அது அவருக்கு மனதுக்குள் உற்சாகத்தை கூட அளித்தது. கால்கள் அவரையும் அறியாமல் நாயர் கடைக்கு அழைத்து சென்றது. நாயர் அப்பொழுதுதான் பாலை காய்ச்சிக்கொண்டிருந்தவர் இவர் வந்து எதிரில் நின்றவுடன் “எந்தா சாரே இத்ததர நேரத்திலே”? இவருக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தார்.

நாயர் காய்ச்சிய பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்தவர் அதனை மெல்ல ஆற்றி பின் இரண்டு குவளையை எடுத்து கடையை விட்டு கொஞ்சம் தள்ளி வந்து பாதையோரத்தில் வைத்து பாலை ஊற்றினார். பின் ஐந்து நிமிடங்கள் அப்படியே நின்றவர் ஓரிரு நிமிடத்தில் மியாவ்..என்ற சத்தம் கேட்டவுடன், முகத்தில் புன்னகையுடன் வா வா என்று கூப்பிட அது இவர் வைத்திருந்த பாலை மெல்ல முகர்ந்து சூடு இல்லை என்று தெரிந்து, நாவால் நக்கி குடிக்க ஆரம்பித்தது.அப்பொழுது எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று வாலை ஆட்டி இவர் மீது உரச பாட்டிலில் இருந்து ஒரு சில “பொரைகளை” எடுத்து நீட்டினார். நாய் அதை அவர் கையில் இருந்து லாவகமாய் பற்றி சாப்பிட்டது. பின் மற்றொரு குவளையில் வைத்திருந்த பாலை நக்கி குடிக்க ஆரம்பித்தது.

நாராயணன் வியப்புடன் என்ன நாயரே தினமும் இதுக இரண்டும் வருமா? ஆமா சாரே ! “கடை திறந்து முதல்ல ஈ இரண்டுக்கும் பாலை ஊற்றி பின்னதானே சார் கஸ்டமரை கவனிக்கும்”. சொல்லிக்கொண்டே டீ யை கலந்து நாராயணின் கையில் கொண்டு வந்து கொடுத்தார். அந்த இளம் காலை குளிரில் சூடான டீ அவர் தொண்டைக்குள் இறங்கியது சுகமாக இருந்தது. குடித்து முடித்த பின் தான்,பணம் எடுத்து வராதது ஞாபகம் வந்தது. அப்பொழுதுதான் தான் சட்டையே போடாமல் தோளில் ஒரு துண்டை மட்டும் சுற்றிக்கொண்டு வந்தது தெரிந்தது. நாயா¢டம் காசு கொண்டு வரவில்லை என்று சொல்ல மனசு சங்கடப்பட்டது, அதுவும் முதல் போணியே கடனா? என்று நாயர் முகம் சுழித்து விடுவாரோ என்று மனம் தத்தளித்தது. நாய்ரே..என்று இழுத்தார்.திரும்பி பார்த்த நாயர் “இ டீக்கு காசு கொடுக்காண்டா சாரே” என்று சொல்லி அவர் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார். இவருக்கு மனம் பொறுக்காமல் மன்னிச்சுங்குங்க நாயரே முதல் போணியே இப்படி ஆயுடுச்சுன்னு வருத்தமா? கேட்ட நாராயணனை பார்த்து கட கட வென சிரித்த் நாயர் “ஈ டைமுக்கு நிங்கள இவட இதுவரை வந்தில்லா, வந்தெங்கில் என்னைய அறியும்” !.கடை ஆரம்பிச்சு இத்தர வருசம் வரை யான் முதல் கஸ்டமா¢டத்து காசு மேடிச்சில்லா. புன்னகையுடன் சொன்ன நாயரை வியப்புடன் பார்த்து நின்றார் நாராயணன்.

உங்களுக்கு குடும்பம் ஒன்றுமில்லையா நாயரே? கேட்டதும் “நாட்டிலே எண்ட் அம்மையும், ஒரு சேச்சியும் உண்டு சாரே,” அவமாரு எண்டிடத்து பைசா எதுவும் எதிர்பார்த்தில்லா” யான் மட்டும் அப்பப்ப அவட போயிட்டி வரும்”

என்ன ஒரு வாழ்க்கை, தினம் தினம் டீ விற்று பிழைக்கும் ஒருவர் தனக்கென ஒரு கொள்கை வைத்து தன்னோடு பலருக்கு பங்கிட்டு கொடுத்து மகிழ்ச்சியாக வாழ நினைக்கும்போது, தான் பெரிய எழுத்தாள்ர் என்று சொல்லிக்கொண்டு, பலருக்கு தன்னம்பிக்கையை பற்றி எழுதிக்கொண்டு, நிரந்தர வருமானத்தையும் பெற்றுக்கொண்டு எப்பொழுதும் என்னைப்பற்றியே நினைத்து பொழுதை போக்கி உள்ளேன்.நினைத்த பொழுது அவருக்கே வெட்கமாக இருந்தது.

அறைக்குள் நுழைந்தவரின் வாய் அவர் இளமை காலத்தில் வெளி வந்த பிரபல பாடல் ஒன்றை முணுமுணுத்ததை கண்டு அவரே அவர் மீது ஆச்சர்யம் கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *