சின்ன உருவங்கள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 4,507 
 

(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸ்கூல் கேட்டருகே போனதும் அந்த நினைவுகள் ஒரு திரைப்படமாய் விரிந்தன. அவன் மனம் அப்படியே வெலவெலத்துக் கால்கள் கேட்டைத் தாண்டிப் போகத் தயாராகின.

இன்று வகுப்பிற்குப் போனால் நிச்சயம் தலைமை ஆசிரியர் “சரஸ்வதி பூஜைக்கு காசு கொண்ணாந்தியா?” என்று கேட்பார். அவன், தான் கொண்டு வரவில்லை என்பதை உறுதிப்படுத்துவதைப் போல் எழுந்து தலையைக் கீழ் போட்டவாறு நிற்பான். அப்போது தலைமை ஆசிரியர் “மத்தவங்கள் எல்லாம் காசு கொண்டார நேரம் உன்னால மட்டும் ஏன் கொண்டார முடியல்ல” என்பது போல் முறைத்துப் பார்ப்பார்.

அவன் மௌனமாக நிற்பான். கடைசியில் அவனுக்கு சேர்த்து மொத்தமாக “இன்னைக்கி காசு கொண்டு வராதவங்க நாளைக்கி கொண்டு வாங்க” என்று சொல்லிவிட்டு போவார்.

இது நேற்றுவரை நடந்த காட்சி. இன்று அப்படி நடக்காது. நாளை மறுநாள் சரஸ்வதி பூஜை. இன்றோடு பணம் வசூலிப்பது கடைசி. நேற்று தலைமையாசிரியர் வகுப்பு வகுப்பாக நாளைதான் கடைசி என்று சொல்லிவிட்டுப் போனார். இன்றும் காசு கொண்டு வரவில்லை என்றால் என்ன சொல்வாரோ என்று தவித்தான் அவன்.

முதன் முதல் தலைமை ஆசிரியர் வகுப்பிற்கு வந்து சரஸ்வதி பூஜை வருது. எல்லாரும் காசு கொண்டு வாங்க’ என்று சொல்லிவிட்டுப் போனார். அவன் அப்பாவிடம் காசு கேட்டுப் பார்த்தான்.

“சரஸ்வதி பூஜைக்கு ஸ்கூல்ல காசு கொண்டு வரச் சொன்னாங்க…”

அவனுடைய அப்பா எத்தனை ரூபா என்பதுபோல் அவனையே பார்த்தார். அவன் தயங்கித் தயங்கிச் சொன்னான்….

“நாலு ரூபா…”

“நாலு ரூபாவா, அடேயப்பா! நாலு ரூபாவுக்கு எங்க போவன்? எனக்கு ஒருநாள் சம்பளமே பத்து ரூபா. நாலு ரூபாவை அதில் சரஸ்வதிக்கு குடுத்தா வீட்டிலிருக்கிற லச்சிமிக்கு யார் காசு குடுப்பா….?

அவன் ஒரு லொறி டிரைவர். மாதச் சம்பளம் எதுவும் இல்லை . எந்த நிமிஷத்திலும் சீட்டுக் கிழிக்க வாய்ப்பாக தினச்சம்பளம். லொறி ஓடினாலும் ஓடா விட்டாலும் கையில் பத்து ரூபா விழும். எப்போதாவது அந்த லொறி ஓடினால் மேற்கொண்டு ஏதாவது கிடைக்கும்.

இப்போதெல்லாம் பெட்றோல் விற்கும் விலையில் அந்த பழைய காலத்து மாடல் லொறிக்கு தீனி போட எவரும் விரும்புவதே இல்லை. எப்போதாவது அதிர்ஷ்டம் அடித்தாற் போல் எவராவது வருவார்கள். மற்ற நாட்களில் வீதியோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கும் லொறி. அந்த லொறியோடு சேர்ந்து வெய்யிலில் காய்வான்.

“முந்தியெல்லாம் சரஸ்வதி பூஜைக்கு அம்பது சதம்தான் கேப்பாங்க…. இப்ப எதுக்கு நாலு ரூபா…”

அதற்கு அவன் பதில் சொன்னான். ஆனால் அது அவனுடைய பதில் அல்ல. திங்கள் தோறும் நடக்கும் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் சரஸ்வதி பூஜை கட்டணம் உயர்ந்தது ஏன்? என்று விளக்கம் கொடுத்ததில் இருந்த எடுத்த பதில்.

“மாஸ்டர் சொன்னாரு…சாமான் விலையெல்லாம் கூடியிருச்சாம்…அதுதான் நாலு ரூபாவாம்…”

மகன் சொன்னதைக் கேட்டு அவன் ஞானப் புன்னகை உதிர்த்துக் கொண்டிருந்தான். மகனது வேண்டுகோளை அவன் குறைத்து மதிப்பிடவில்லை. காசு கிடைக்கும் என்று நம்பியிருந்தான். லொறியை ஓட்டும்படி சரஸ்வதியிடம் வேண்டினான். சரஸ்வதி கல்விக்குரிய தெய்வம். அவள் எப்படி லொறியை

ஒட்டுவாள்? லொறி ஓடவேயில்லை. காசு அவனுக்கு கிடைக்கவே இல்லை,

வீட்டிற்குத் திரும்பிப் போய் விட்டால் என்ன என்று நினைத்தான் அவன். அப்போது அவன் நெஞ்சில் வகுப்பு ஆசிரியரின் ஞாபகம் வந்தது. அவன் சரஸ்வதி பூஜைக்கு காசு கொடுக்கவில்லை என்பதைக் கேள்விப்பட்டு அவனைக் கூப்பிட்டுச் சொன்னார்.

“சரஸ்வதி பூஜைக்கு காசு கொடுக்கலேன்னு ஸ்கூலுக்கு வராம இருந்திராதே! படிப்பு முக்கியம்.”

அவருக்கு பூஜை, விழா என்ற பெயரில் ஆடம்பரமான விழாக்களை நடத்தி பள்ளி மாணவர்களின் நேரத்தை வீணாக்குவதும், அதற்காக கட்டணம் என்ற பெயரில் காசு வசூலிப்பதும் பிடிக்காது. என்றாலும் தலைமை ஆசிரியரின் விருப்பு வெறுப்புகளுக்கு அடங்கி நடக்க வேண்டியிருந்தது. அவருக்கு எவருடைய படிப்பும் எதனாலும் வீணாகக் கூடாதென்பதில் கருத்தாக இருந்தார்.

சரஸ்வதி பூஜைக்கு நாலு ரூபா கட்டணம் என்று ஆசிரியர்கள் கூட்டத்தில் அறிவித்ததும் அது அதிகமென்று எதிர்த்தார். மற்ற ஆசிரியர்கள் யாரும் தலைமையாசிரியரின் கட்டணத்தை ஆதரித்தார்கள். அவருடைய எதிர்ப்பு முடங்கிப் போய் விட்டது. சகல தரப்பிலான மாணவர்களும் நாலு ரூபா கட்டணம் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டார்கள்.

கொண்டு வர முடியாதவர்கள் தலைமையாசிரியருக்குப் பயந்து ஸ்கூலுக்குப் போகாமல் இருந்தார்கள். அவனும் அப்படி வராமல் இருக்கக் கூடாது என்பதால்தான் அவனுடன் பேசினார்.

அவன் வகுப்பில் முதல் மாணவன். எல்லா ஆசிரியர்களும் அவனிடம் பிரியம்.. ஆனால் ஒழுங்காக உடுத்தி வரமாட்டான். காலுக்கு செருப்பில்லாமல் வருவான். ஒழுங்கான புத்தகங்கள் கொண்டு வரமாட்டான். ஒழுங்காக உடுத்தக்கூடாது, ஒழுங்காக புத்தகங்கள் கொண்டு வரக்கூடாது, செருப்பு போடக்கூடாது என்பது அவன் கொள்கையல்ல. அவைகளுக்கெல்லாம் தேவையான பொருளாதாரம் அவன் குடும்பத்தில் இல்லை.

இப்போது அவனுள் ஒரு துணிவு பிறந்தது. தலைமையாசிரியர் கேட்டால் வழக்கம் போல் மௌனமாக நின்று விட்டு வழமையாக அவர் பாடும் புராணத்தைக் கேட்டுவிட்டுப் பேசாமல் இருக்க வேண்டியதுதான் என்ற எண்ணத்துடன் ஸ்கூல் கேட்டைத் தாண்டி உள்ளே போனான்.

அவனுடைய வகுப்புக்குப் போகும் வழியில்தான் தலைமையாசிரியரின் காரியாலயம் இருந்தது. அதைத் தாண்டிப் போனபோது, காரியாலயத்திலிருந்து தலைமையாசிரியர் வெளியே வந்தார். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போனார். அந்தப் பார்வை, “இன்றாவது காசு கொண்டு வந்தியா?” என்று கேட்பது போலிருந்தது.

மறுபடியும் ஒரு நடுக்கம் அவன் நெஞ்சில் புகுந்தது. திரும்பிப் போய் விடவோமா என்று யோசித்தான். எப்படித் திரும்புவது..? தலைமையாசிரியர் பார்த்து விட்டாரே! இன்று வகுப்பிற்குப் போகா விட்டால் நிச்சயம் தலைமையாசிரியர் பிரப்பம் பழம்’ தான் பரிசாக கொடுப்பார். அதுவும் வழக்கத்தை விட இரட்டிப்பான பழங்களைக் கொடுப்பார்.

-ஓ…. அந்தப் பிரப்பம் பழங்களைப் பரிசாக வாங்குவதை விட வகுப்பிற்குப் போவதே நல்லது. ஒரு தைரியத்துடன் வகுப்பிற்குள் நுழைந்து வழக்கமான இடத்தில் உட்கார்ந்தான். அவன் வந்ததும் எப்போதும் பக்கத்தில் இருக்கும் ஜோசப் ஒரு புன்னகை பூத்தான். பிறகு மெல்ல அவனிடம் “சரஸ்வதி பூஜைக்கு காசு கொண்ணாந்தியா? ஹெட் மாஸ்டர் கேட்டுவிட்டுப் போனாரு” என்று கேட்டான்.

அவன் பதில் சொல்லவில்லை. அவனையே பார்த்தான். அவன் கிறிஸ்தவன். அவனே சரஸ்வதி பூஜைக்கு காசு கொடுத்து விட்டான். இவனோ இந்துவாயிருந்தும் கொடுக்கவில்லையே…

“ஏன் பேசாம இருக்க? காசு கொண்ணாந்தியா?” ஜோசப் மறுபடியும் அவனைக் கேள்விக் குறியால் இழுத்தான்.

“காசு கொண்டுவரல்ல…” வழக்கமான பதிலையே கொடுத்தான். ஜோசப் ஏன் என்று கேட்கவில்லை. அவன் காசு கொண்டு வராததன் காரணம் அவனுக்கு மட்டுமல்ல அந்த வகுப்பிற்கே தெரியும்.

“காசு கொடுக்காதவங்களுக்குப் பிரசாதம் இல்லேன்னு ஹெட்மாஸ்டர் – சொன்னாரு…”

“பிரசாதம் இல்லாட்டி என்னா விபூதி கூடவா கொடுக்க மாட்டாங்க” என்று எதிர்க் கேள்வி தொடுத்து சமாதானம் அடைந்தான்.

ஜோசப் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது வகுப்பாசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். அவருக்குப் பின்னால் தலைமையாசிரியர் வந்தார். அவரின் கையில ஒரு கொப்பி இருந்தது. மாணவர்களின் வணக்கத்தை ஏற்று பதில் வணக்கம் தெரிவித்தவாறு வகுப்பாசிரியரின் நாற்காலியில் உட்கார்ந்தார் தலைமை ஆசிரியர்.

பின்னர் கையிலிருந்த கொப்பியைப் பிரித்துப் பார்த்தார். அதில் தான் யார் யார் சரஸ்வதி பூஜைக்கு காசு கொடுத்திருக்கிறார்கள் என்ற விவரம் இருந்தது. அவன் கேள்விக்குறியைப் போல் எழும்பி நின்றான். அவருக்குப் புரிந்து விட்டது. அவன் காசு கொண்டு வரவில்லை.

“அப்ப உன் பேரை வெட்டட்டுமா?” போனாவும் கையுமாகக் கேட்டார் தலைமையாசிரியர்,

“வெட்டுங்கள்…” அவன் தலையாட்டினான். அதற்கு அதுதானே அர்த்தம்… தலைமையாசிரியர் அவன் பெயரை வெட்டிவிட்டு அந்தக் கொப்பியை எடுத்துக் கொண்டு போய்விட்டார். வகுப்பாசிரியர் பாடத்தை தொடங்கினார். அவன் மனமோ பாடத்தில் லயிக்கவில்லை .

அவனைத் தவிர வகுப்பில் எல்லோரும் காசு கொடுத்திருக்கிறார்கள். அவன் காசு கொடுக்காததையிட்டு மற்ற மாணவர்கள் எதுவும் சொல்லவில்லை. மாறாக அவனை அனுதாபத்துடன் பார்த்தார்கள். ஆனாலும் அவன் மனம் சஞ்சலப்பட்டது.

சரஸ்வதி பூஜை அன்றுதான். பள்ளிக்கூடமே அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் சிலரின் கைத்திறன் ஸ்கூல் கேட்டிலிருந்து பிரதான மண்டபம் வரைக்கும் நீண்டிருந்தது. பாதை நெடுக இரு பக்கத்திலும் உயரக் கயிறு கட்டித் தொங்க விடப்பட்டிருந்த குருத்தோலைகளில், மாவிலைகளில் அந்தத் தோரணம் மிளிர்ந்தது. விதவிதமான வடிவங்களில் பூவால், மொட்டால், சதுரமாய், நட்சத்திரமாய் உருவெடுத்துத் தொங்கி அசைந்தன குருத்தோலைகள். அவைகளின் இடையிடையே பச்சைப் பசுமையான மாலைகள்….

காலை எட்டு மணியைப் போல் பூஜைக்கு முன்னோடியாக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அது முடிந்ததும் தலைமையாசிரியர் பேசினார். தலைமையாசிரியருக்குப் பின்னர் சில ஆசிரியர்கள், மாணவர்கள் பேசினார்கள். கடைசியாக சரஸ்வதி தேவிக்கு தோத்திரப் பாடல் பாடப்பட்டது. அதன் பின்னர் பூஜை ஆரம்பமாகியது.

பூஜை செய்தவர் தலைமையாசிரியர். அவன் வீட்டுக்குப் போய் விடுவோமா என்று நினைத்தான். பின்னர் “பூஜைவரை இருந்தாயிற்று. விபூதி வாங்கி விட்டுப் போவோமே” என்று சமாதானம் அடைந்தான். சரஸ்வதிக்குத் தீபாராதனை காட்டி

முடித்த பின்னர் தலைமை ஆசிரியர் விபூதி கொடுக்கத் தொடங்கினார். வேறு சில ஆசிரியர்கள் சந்தனம், குங்குமம் கொடுக்கத் தொடங்கினார்கள்.

தலைமை ஆசிரியர் தன்னருகே விபூதி கொடுக்க வந்தபோது அவன் மனம் தவித்தது. விபூதி கொடுக்காமல் போய்விடுவாரோ என்று பயந்தான். ஆனால், அவர் அவனுக்கு விபூதி கொடுத்தார். என்றாலும் ஒரு முறை முறைத்துவிட்டு விபூதி கொடுத்தார். ஓ! அவன் காசு கொடுக்கவில்லை அல்லவா?

விபூதி, சந்தனம், குங்குமம் கொடுத்து முடிந்ததும் தலைமை ஆசிரியர் பிரசாதம் கொடுக்க நடவடிக்கை எடுத்தார். மாணவர்கள் மத்தியில் பெரிசாக அலை கிளம்பியது. மாணவர்களின் வெகு நாளைய கனவு நனவாகும் நேரமும் அதுதானே.

சரஸ்வதியின் திருவுருவத்தின் முன்னே பொலித்தீன் பேக்குகளில் போடப்பட்ட பிரசாதம் ஐந்தாறு கூடை நிறைய இருந்தது. தலைமை ஆசிரியர் இரண்டு மாணவர்களை அழைத்து, அதில் ஒரு கூடையை தூக்கிக் கொண்டு வரச் சொன்னார். அந்த மாணவர்கள் ஒரு கூடையுடன் மாணவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்தார்கள். தலைமையாசிரியர் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொன்றாக அந்தக் கூடையில் இருந்த பொலித்தீன் பேக்கை எடுத்துக் கொடுத்தார்.

அப்போது அவன் வெளியே போக நினைத்தான். ஆனால் அவனால் நகரக்கூட முடியவில்லை. அவ்வளவு கூட்டம். அப்படியே இருந்தான். அவனருகே அந்தக் கூடை வந்தது. தலைமையாசிரியரும் வந்தார். அவனுக்குப் பக்கத்தில் உள்ளவனுக்குப் பிரசாதம் கொடுத்தார்.

இப்போது அவன் முறை… தலைமையாசிரியரும் அவனை மறுபடியும் ஒரு முறை முறைத்துவிட்டுக் கையிலிருந்த பிரசாதத்தை அவனுக்கு இடது பக்கத்தில் இருந்த ஜோசப்பிற்குக் கொடுத்து விட்டுப் போய் விட்டார். அவனுக்குப் பிரசாதம் கிடைக்கவில்லை.

பிரசாதம் பெற்ற மாணவர்கள் மெல்லமெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவன் அப்படியே இருந்தான். அவன் பிரசாதத்திற்காக காத்திருக்கவில்லை. கூட்டம் குறைந்ததும் சரஸ்வதி தேவியின் திருவுருவத்தின் முன்னே விழுந்து வணங்கி விட்டுப் போகவே காத்திருந்தான். அவனோடு ஜோசப்பும் ஏனோ காத்திருந்தான்.

அவன் சரஸ்வதியின் திருவுருவத்தின் முன்னே விழுந்து வணங்கி விட்டு மண்டபத்தை விட்டு வெளியேறி வந்தான். அவனோடு வெளியே வந்த ஜோசப் அவனருகே வந்து, தன் கையில் இருந்த பிரசாத பேக்கை அவன் கையில் திணித்தான்… அவன் தடுத்தான்….

“நல்லா படிக்கிறவங்களுக்கு சரஸ்வதி பூஜை நடத்தி பிரசாதம் கொடுக்காம விட்டா சரஸ்வதி பூஜை நடத்துறதுனாலே கெடைக்கிற பலன் கெடைக்காது. நீ

நல்லாப் படிக்கிறவள், ஆனா உனக்குக் காசு கொடுக்கலேங்கிறதுக்காகப் பிரசாதம் கொடுக்காம விட்டது நல்லதில்ல….. இந்தா பிரசாதம்….!”

அவன் மறுத்தான். “பிரசாதம் கெடைக்கலேங்கிற கவலை எனக்கிட்ட இல்ல…”

“நீ ஏன் காசு கொடுக்கலேங்கிறது எனக்குத் தெரியும். ஆனா ஹெட் மாஸ்டர் அது தெரிஞ்சும் இப்படிச் செஞ்சுட்டாரே! சரி கொஞ்சமாவது பிரசாதம் எடுத்துக்கவேன்…! ஜோசப் அவனிடம் அந்தப் பிரசாத பேக்கை நீட்டினான். இத்தனை தூரம் அவன் வற்புறுத்துகிறானே, அதை மறுப்பது சரியல்ல என்ற எண்ணத்தில் அந்த பொலித்தீன் பேக்கில் கைவிட்டு கொஞ்சம் சர்க்கரைச் சாதத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். பிறகு கேட்டான்,

“அது சரி… ஜோசப்! சரஸ்வதி பூஜையைப் பத்தி யாரு உனக்கு விவரமா சொன்னது?”

ஜோசப் சொன்னான், எங்க பெரிய அண்ணன் ஒரு ஸ்கூல் மாஸ்டர். அவரும், தான் படிச்சிக் கொடுக்கிற ஸ்கூல்ல சரஸ்வதி பூஜை நடத்துவாரு. அவருதான் இதைச் சொன்னாரு. அவங்க ஸ்கூல்ல காசு கொடுக்காத, கொடுக்க வசதியில்லாத புள்ளைகளுக்கும் பிரசாதம் கொடுப்பாங்களாம். நான் நேற்று உன்னப் பத்தி அண்ணன் கிட்டே சொன்னேன். அப்பதான் இதைச் சொன்னாரு.”

அவன் முகத்தில் புன்னகை மிளிர்ந்தது. இருவரும் ஒன்றாக நடந்து போனார்கள்.

அந்தக் காட்சி இத்தனை நேரமும் அங்கே நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த தலைமையாசிரியரின் நெஞ்சை ஏதோ ஒன்று குடைந்தது. கவலையுடன் பூஜையில் இருந்த சரஸ்வதி தேவியைப் பார்த்தார். சற்று முன்னர் பார்த்ததை விட, சரஸ்வதி தெய்வீகக்களையுடன் இருப்பதைப் போலிருந்தது அவருக்கு.

உண்மையாவே அவனுக்கு வசதியில்லை…அது தெரிந்தும் இத்தனை பெரிய கூட்டத்தில் அவனுக்குப் பிரசாதம் கொடுக்காமல் விட்டு விட்டேனே…அவர் மனம் இப்போதுதான் பேசியது.

அவசர அவசரமாக கைதட்டிக் கூப்பிட்டார். அவனும், அந்த ஜோசப்பும் வெகு தூரத்திற்கு அப்பால் போய் விட்டார்கள். அவர் கண்களுக்கு அவர்கள் மிகச் சிறிய உருவங்களாகத் தெரிந்தார்கள். ஆமாம், அது அவரின் கண்களுக்கு மட்டும்.. மனதுக்கு…..?

– சிந்தாமணி, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *