கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 9,984 
 

கூடத்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு தனது கைபேசியை மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தபோது குமாருக்கு அந்த ‘கீச் கீச்’ சப்தம் கேட்டது. பின் பக்க வராந்தாவில் சென்று பார்த்தபோது குருவிகள் சப்தம் போட்டுக் கொண்டு பறந்தன. இவனைப் பார்த்ததும் சற்றுத் தொலைவில் சென்று அமர்ந்து கொண்டன.

‘ஓ! இந்தக் குருவிகளுக்கு மனிதர்களைக் கண்டால் பயம்!’ என்று நினைவுக்கு வந்தது. திரும்பிப் பார்த்தபோது பரணில் அட்டைப் பெட்டியின் மீது ஒரு கூடு கண்ணில் தென்பட்டது. குருவிகள் கூட்டிற்கும் வராந்தா ஜன்னலுக்குமாக மாறி மாறி பறந்து கொண்டிருந்தன. ‘ஸோ க்யூட்!’ என்று ரசித்து கொண்டே நகர்ந்தான் குமார்.

சில நாட்கள் கழிந்தன. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் அவன் வீட்டு காலிங் பெல் அடித்தது. குமார் கதவைத் திறந்தபோது அந்த வீட்டுச் சொந்தக்காரர் நின்று கொண்டிருந்தார்.

“குட் மார்னிங் சார்!” என்று வந்தனம் கூறி வந்தவரை உள்ளே வரவேற்று அமரச் செய்தான் குமார். குசலம் விசாரித்த பிறகு வீட்டுக்காரர், “என் சாமான்கள் உள்ள அட்டைப் பெட்டி பரணில் உள்ளது. அதை எடுத்துக் கொண்டு போகலாம் என்று வந்தேன்.” என்றார்.

“ஓ! வாங்க சார்!” என்று அவரை வராந்தாவிற்கு அழைத்துச் சென்றான். அவர் ஏற உதவியாக ஒரு ஸ்டூலை எடுத்துக் கொண்டு வந்தான். மேலே ஏறி அவர் அட்டைப் பெட்டியை எடுக்க அதன் மேலிருந்த கூடு கலைந்து கீழே விழுந்தது.

“தாங்க் யூ மிஸ்டர் குமார்!” என்று கூறி அவர் பெட்டியை எடுத்துச் சென்று விட, ‘ஆஹா! குருவிக் கூட்டை மறந்து போனேனே!’ குமார் பதைபதைத்து கீழே விழுந்திருக்கும் கூட்டின் அருகே ஓடினான். கூட்டிலிருந்து குச்சிகளும் வைக்கோலும் கீழே சிதறிக் கிடந்தன. குருவிகளைக் காணவில்லை. கவனமாகப் பார்த்துக் கொண்டே வந்தபோது, வராந்தாவின் ஒரு மூலையில் ஒரு சிறிய குஞ்சு இருந்தது. பறக்க முடியாமல் ஒரே இடத்தில் பதுங்கியிருந்தது. அதனைத் தொட முயன்றான் குமார். ஆனால் அது பயத்தோடு தத்தித் தத்தி விலகிச் சென்றது. சிறிது நேர போராட்டத்திற்குப் பிறகு முடிவில் வெற்றி குமாருக்கு தான். அதைப் பிடித்து மீண்டும் பரண் மேல் வைத்தான்.

சில மணி நேரம் சென்றிருக்கும். வராந்தா ‘வாஷ் பேசினில்’ கையலம்ப குமார் வந்தபோது மீண்டும் அது கீழே விழுந்திருப்பதைப் பார்த்தான். சிறிதளவு நீரிருந்த பக்கெட்டுக்குள் நடுக்கத்தோடு காணப்பட்டது. அதன் பெற்றோர்களை காணவில்லை. அதைக் கையிலெடுத்தவன், சற்றே யோசித்தபின் தானே அதை வளர்க்கலாம் என்று முடிவு செய்தான். தன் மேசை மேல் குச்சிகள், வைக்கோல் வைத்து ஒரு கூடு தயார் செய்து அதற்குள் அந்த குஞ்சை வைத்தான். கூட்டுக்குள் பொறி, நொய்யரிசி, காய்ந்த திராட்சை இறைத்து வைத்தான். கொஞ்ச நாட்கள் சென்றன. குமாருக்கும் அந்த குருவிக்குமிடையே ஒரு பிணைப்பு ஏற்பட்டது. அதற்கு ‘சிட்டு’ என்று பெயர் வைத்தான். இப்படியே நாட்கள் ஓடின. சிட்டுவுக்கும் குமாருக்கும் நட்பு வளர்ந்தது. இருந்தபோதிலும் குமாருக்கு மனசுக்குள் ஒரு சின்ன உறுத்தல். இக்குருவி நம்மோடு இருப்பதால் பறக்கக் கற்றுக் கொள்ளவில்லையோ என்று தோன்றியது. அது பறப்பதற்குப் பயில வேண்டும். அதன் பின்புதான் அது தன் இனத்தோடு சேர முடியும். ஏற்கெனவே கைபேசிக்காக அமைக்கப்பட்டிருக்கும் கோபுரங்களின் கதிரியக்கக் கசிவின் காரணமாக குருவிகள் அழிந்து போகின்றன என்று தெரிந்ததால் சிட்டு தன் இனத்தோடு சேர்ந்து அதன் வம்சம் வளரவேண்டும் என்கிற அக்கறையும், அதற்கு தான் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்கிற கவலையும் சேர்ந்து கொண்டது.

தன்னுடன் மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று தூக்கிப் போட்டுப் பார்த்தான். சிட்டு இறக்கையை அசைத்ததேயழிய அதனால் பறக்க முடியவில்லை. நெடுநேர முயற்சிக்குப் பின் குமார் களைப்படைந்தான். சற்றுத் தொலைவில் ஒரு குருவி அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். ஒருவேளை அந்தக் குருவியுடன் சேர்ந்தால் சிட்டுவும் பறக்குமோ என்று சிட்டுவை அந்தக் குருவிக்கருகில் தூக்கி வைத்தான். ஆனால் அந்தக் குருவி பறந்து விட்டடது. சிறிது நேரம் காத்திருந்தான். எந்தக் குருவியும் சிட்டுவை அண்டவில்லை. குருவியை மனிதன் தொட்டால் அந்தக் குருவியை தன் இனத்திலிருந்து மற்றக் குருவிகள் விலக்கி வைத்து விடுமென்று அவன் தாயார் சொன்னது குமாருக்கு நினைவுக்கு வந்தது. அதற்குக் காரணம் புரியவில்லை. ஒருவேளை மனிதர்கள் தொட்ட குருவியை மீண்டும் தன் இனத்தில் சேர்த்தால் ஏதாவது தொற்று நோய் வந்துவிடுமென்று பயப்படுகிறதோ என்று கூட சந்தேகம் வந்தது குமாருக்கு. கவலையோடு சிட்டுவை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான்.

நாட்கள் சென்றன. குமாரும் சிட்டுவும் சிறந்த நண்பர்களானார்கள். ஒருநாள் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது ஒரு பூனை தன் அறையிலிருந்து வெளியே ஓடுவதைப் பார்த்தான். உடனே கலவரத்தோடு அறையினுள் சென்று பார்த்தபோது, மேசை மேல் இருந்த கூடு கலைந்திருந்தது. சில சிறகுகள் சிதறிக் கிடந்தன. அதில் இரத்தக் கறையிருந்தது.

‘ஐயோ!’ என்று அலறினான். கண்களில் நீர் முட்டியது. பின்பக்கக் கதவைத் திறந்து வைத்து விட்டுப் போனது எவ்வளவு மடத்தனம் என்று வருந்தினான். அநாவசியமாக சிட்டுவை பூனைக்குக் காவு கொடுத்தோமேயென்று அரற்றினான். மிக நெருங்கிய நண்பன் காலமானால் எவ்வளவு துயரம் இருக்குமோ அதேமாதிரி துயரத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானான்.

மாதங்கள் சென்றபோதிலும் குமாரால் சிட்டுவை மறக்க முடியவில்லை. ஒரு நாள் திரும்ப வராந்தாவில் ‘கீச் கீச்’ ஒலி கேட்டது. சட்டென்று ஓடிப் போய் பார்த்தான். அங்கு இரண்டு குருவிகள் வாயில் குச்சிகளை எடுத்துக் கொண்டு பறந்து பறந்து பரணில் கூடு கட்டிக் கொண்டிருந்தன. சில நாட்கள் கழித்து ஒரு குஞ்சின் இளங்குரலில் ‘கீச் கீச்’ ஒலி கேட்டது. அவன் ஆர்வமாக மேலே பார்த்தபோதே அது பறக்க முயன்று முடியாமல் கூட்டின் அருகேயே பரணில் விழுவதைப் பார்த்தான். அதனை எடுக்கலாமா சிட்டுவைப் போல மேசை மேல் வைத்து வளர்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே எங்கிருந்தோ பறந்தோடி வந்த தாய்க் குருவி அதனை அலகால் கவ்வி கூட்டினுள் வைப்பதைப் பார்த்தான். அடுத்தடுத்த நாட்களில் தன் பெற்றோர்களின் மேற்பார்வையில் அது பறக்கக் கற்றுக் கொள்வதைப் பார்த்தான். பறவைகள் தம் இனத்தோடு இருந்தால் அதனதன் வாழ்க்கையை இயல்பாய் நன்றாய் வாழும் என்று புரிந்து கொண்டான்.

தன் மேசை மேலிருந்த கூட்டைத் தூக்கியெறியச் சென்றபோது அதனுள் ஒரு சிறகைக் கண்டான். சிட்டு தான் இல்லை. இக்கூடும் சிறகும் அதன் ஞாபகார்த்தமாக இருக்கட்டும் என்று அதனைத் திரும்ப மேசை மேல் கொண்டு போய் வைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *