இயற்கை உபாதை

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 9,352 
 

ஷவரின் சத்தத்தில் என் மனைவி விழித்துக்கொண்டாள் என ஹாலின் விளக்கு வெளிச்சம் வெண்டிலேட்டர் வழியாக கசிந்ததைக்கண்டு தெரிந்துகொண்டேண்.

“என்னங்க… காலைல அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு எங்க கிளம்புறீங்க”

பொதுவாக என் மனைவிடம் நிறைய விஷயங்களை பகிர்வதில்லை. ஒவ்வொன்றிற்கும் எதிர்கேள்வி கேட்டிக்கொண்டேயிருப்பாள். அந்தளவுக்கு பொறுமை எனக்கில்லை.

ஆபிஸ் பையை தோளில் மாட்டிக்கொண்டு, சிறிய சந்திலிருந்த என் வீட்டிலிருந்து பைக்கை உருட்டிக்கொண்டு மெயின் ரோட்டிற்கு வந்தவுடன் பறக்கலானேன். காலை குளிர் ஹெல்மெட்டை தாண்டி காது வழியாக ஒருவித சிலிர்ப்பை உண்டாக்கியது. அம்பத்தூரிலிருந்து ஏர்போர்ட் செல்ல ஒரு மணிநேரம் பிடிக்கும். இவ்வதிகாலையில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் கிலோ மீட்டர்களை விரைவாக கடக்க முடிந்தது.

ஜெர்மனியை தலைமையிடமாகக்கொண்ட பிரபல மருந்துக்கம்பெனியின் சென்னை கிளையில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரியும் என்னிடம் ஜெர்மனியிலிருந்து எனது பாஸ் நேரடியாக தொடர்பு கொண்டு ஏர்போர்ட்டில் பிக்கப் பண்ண சொன்னது எனக்கு பெருமையாக இருந்தாலும் சிறிது குழப்பமாகவும் இருந்தது. எங்கள் கிளையில் எம்.டி. இருக்கும்போது என்னை வரச்சொன்னதன் நோக்கம் எதுவாக இருக்குமென நினைத்தபடி ஏர்போர்ட் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கிக்கொண்டு லாபியை நோக்கி துள்ளலும் நடையுமாகச் சென்றேன். எனக்கு முன்பே எம்.டி. மாலையும் கையுமாக நிற்பதைக் கண்டவுடன்தான் நினைவு வந்தது. மாலை வாங்கி வர மறந்துவிட்டேன்.

எட்டு மணிக்குத்தான் பிளைட்…அருகிலிருந்த எம்.டி. என்னைப் பார்த்த பார்வையில் பொறாமை கலந்த குரோதம் இருப்பதாக எனக்கு தோன்றியது.

ஆறரை அடி உயரமுள்ள எங்கள் பாஸ் அரக்கு கலர் கோட் சூட்டில் உதடுகளில் தவழும் மயக்கும் சிரிப்புடன் எஸ்கலேட்டரில் இறங்கிக்கொண்டிருந்தார். நீள் செவ்வக ரோஸ் நிற முகம். நீல நிறக்கண்கள். மொத்தத்தில் ஹேண்ட்சம் என்ற வார்த்தைக்கு முழு விளக்கமாக இருந்தார். எம்.டி. அணிவித்த மாலையை கழுத்தில் வாங்கிக்கொண்டு அவரை தவிர்த்து என்னருகே வந்தார்.

“ஹாய்….ராம்நத்ன்…” என் பெயரை ஆங்கிலத்தில் கடித்து துப்பிக்கொண்டே என் தோளில் கை போட்டு ஏர்போர்ட் வெளியே அழைத்துச்சென்றார். அவர் நடந்து செல்ல, நான் அவருடன் ஓட வேண்டியிருந்தது.

ஏர்போர்ட் வெளியே காலை வெயிலின் பிரதிபலிப்புடன் பளபளக்கும் நாவல்பழ நிறத்தில் பென்ஸ் கார் நின்று கெண்டிருந்தது.

“நீ காரை ஓட்டு” ஆங்கிலத்தில் கூறிக்கொண்டே டிரைவரிடமிருந்து கார் சாவியை வாங்கித்தந்தார். இனிமேல் ஆங்கிலம்தான் என முடிவு செய்து

“சார்…..பைக்……” என இழுத்தேன்.

“தெரியும்…..ஆபிஸ் பியூனை விட்டு எடுத்துக்கொள்ளலாம்…ஹோட்டலை நோக்கி வண்டியை விடு…”

அதற்குள் சென்னை சாலை பரபரப்பாக மாறிவிட்டிருந்தது. எனக்கு காரோட்டத்தெரியும் என்பதால் அழைத்திருப்பாரோ…..இல்லை எம்.டி.க்கும் காரோட்டத்தெரியுமே….மறுபடியும் குழப்பத்துடனே லா மெரிடியன் ஹோட்டலுக்குள் காரை நிறுத்தினேன். வாசலில் நின்றிருந்த சிப்பந்தி கார் சாவியை வாங்கிக்கொண்டு பார்க் செய்ய சென்றுவிட்டான். ஆறாவது மாடியிலிருந்த ராயல் சூட்டில் அவரை விட்டு

“சார்…வேறு ஏதாவது வேணுமா…..” நான் கேட்டது காதிலே விழாததுபோல்

“காலை ஆறு மணிக்கு வா”

எதற்கு ஆறு மணிக்கெல்லாம் வரச்சொல்கிறார். புரியாமல் வீடு நோக்கி பயணித்தேன்.

காலையில் ஹோட்டலுக்குள் நுழையும்போதே அவரை பார்த்துவிட்டேன். தோளில் கேமரா. கையில் தடித்த புத்தகம். ரிசப்ஷனிஸ்ட்டிடம் பேசிக்கொண்டிருந்தவர் என்னை கண்டவுடன் அருகில் வந்து

“தஞ்சாவூருக்கு போகனும். காரை எடுத்து வா”

எனக்கு கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது. தஞ்சை பெரிய கோவிலை பார்க்க வந்திருக்கிறார். எனக்கு சொந்த ஊர் கும்பகோணம் என்பதால் என்னை தேர்வு செய்திருக்கிறார். சென்னைக்கு வெளியே பைபாஸ் சாலையில் காரை விரட்டத்தொடங்கினேன். காருக்குள் ஏசியின் ரீங்காரமும் அதனுடன் சேர்ந்து கசிந்த மெல்லிய பீத்தோவனின் இசையும் காரோட்டும் எனக்கு மிகுந்த உற்சாகமளித்தது.

“ராம்நாத்ன்……….தஞ்சாவூரையும் கும்பகோணத்தையும் சுற்றியுள்ள கோயில்களைப்பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உனக்கு அதைப்பற்றி விரிவாக தெரியும் என்பதால் உன்னை அழைத்து வந்தேன்.”

சந்தோஷத்தை தாண்டி பெருமையாக இருந்தது. உற்சாகமிகுதியால் ஆக்ஸிலேட்டரை நூறை தாண்டி மிதிக்கத்தொடங்கினேன். வழியில் ஓட்டலில் காலை உணவை முடித்துவிட்டு என் மனைவிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு என் மாமியாரை தொடர்புகொண்டு துணக்கு இருக்குமாறு பணித்தேன்.

தஞ்சாவூர் நகருக்குள் நுழையும்போது மதியம் ஆகிவிட்டிருந்தது. மூன்று நட்சத்திர ஓட்டலில் எனக்கும் அவருக்கும் அருகருகே அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மதிய உணவை வரவழைத்து சாப்பிட்டுவிட்டு ஒய்விக்குப்பின் நாலுமணிக்கு கோயிலுக்குள் நுழைந்தோம். கோயிலின் பிரம்மாண்டத்தையும் கலை நுணுக்கங்களையும் தன் நீலக்கண்களை அகலமாக்கி ஆச்சர்மாகவும் ஆர்வமாகவும் ரசித்துக்கொண்டிருந்தார். பிடித்தவற்றை கேமராவிலும் கிளிக்கிக்கொண்டிருந்தார்.

நீண்டதூரம் பிரயானம் செய்ததால் சீக்கிரமே ரூமிற்கு திரும்பிவிட்டோம். என் ரூமிற்குள் நுழைந்ததும் எனக்கு தேவையான உடைகள் வார்ட்ரோபில் இருந்ததைக்கண்டு அவருடைய திட்டமிடலை நினைத்து ஆச்சரியப்பட்டேன். கைப்பேசியில் என்னை அழைத்தவர் காலை அஞ்சு மணிக்கு கிளம்பி இருக்குமாறு பணித்தார்.

குளித்து முடித்து பேண்ட்டுக்குள் நுழைந்துகொண்டிருக்கும்போது கடிகாரம் மணி அஞ்சு என ஒலி எழுப்பியது. கூடவே அழைப்புமணியும் ஒலித்தது.

“எஸ்…கமின்..”

` என் பாஸ்தான். இந்தளவு வாழ்க்கையில் அவர் உயர்ந்ததற்கு அவருடைய நேரம் தவறாமையும் ஒரு தகுதியாக இருந்திருக்கக்கூடும். அதே வசீகரிக்கும் புன்சிரிப்புடன் காருக்கு அழைத்து சென்று என்னருகே முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு

“ராம்நாத்ன்….உங்களுடைய வாழ்க்கைமுறையும் கலாச்சாரமும் பண்பாடும் இங்குள்ள கோயில்கள் பிரதிபலிக்கின்றன என கேள்விப்பட்டேன். அது சம்மந்தமாக எனக்கு தெளிவாக விளக்கிக்கூறுங்கள்.”

அப்பொழுதுதான் அவர் கையிலிருந்த புத்தகத்தைப்பார்த்தேன். “டெம்பிள்ஸ் இன் தமிழ்நாடு”.

இந்த ஊரையும் அதன் சுற்று வட்டாரங்களையும் எனக்கு நன்கு தெரியும். இங்குள்ள கோயில்களைப்பற்றியும் ஸ்தலபுராணம் பற்றியும் எனக்கு அத்துப்படி. உற்சாகமாகயிருந்தது எனக்கு.

பச்சைப்பசேலென்ற வயல்களின் நடுவே தூசு பறக்கும் தார்ச்சாலையில் மெதுவாக ஓட்டலானேன். மழைக்காலம் என்பதால் காற்று சுழன்றடித்து தூசியை முன்பக்க கண்ணாடி முழுவதும் படிய வைத்தது. கண்ணாடி கழுவும் திரவத்தை பீய்ச்சியடித்து வைப்பர் மூலம் துடைத்துக்கொண்டே வயல்வெளியைக் கடந்து தென்னந்தோப்புகள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தேன். சுமார் மூன்று கிலோமீட்டர் வரை எங்களுடனே வந்த தென்னந்தோப்பு தீடீரென காணாமல்போய் கருவேல முள்மரங்கள் அடர்ந்த செம்மண் பூமி தெரிந்தது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்ற சிறுசிறு குட்டைகளுக்கு அருகே வேட்டியை தலைப்பாகையாகவும் தோளில் துண்டாகவும் பயன்படுத்தி ஒழுங்கில்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய பேர் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். சூரியன் வானத்தை கேரட் நிறத்திற்கு மாற்றியபடி மேலெழுந்துகொண்டிருந்தது.

“இவ்வதிகாலையில் இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்”

இயற்கை உபாதையை கழிக்கிறார்கள் என்ற என் பதிலுக்கு மறுபடியும் அவரிடமிருந்து

“ஏன்… இந்த ஊரில் கழிப்பிட வசதியில்லையா…”

இதைப்பார்த்துப் பழகிப்போன எனக்கு அவரின் கேள்வி யோசிக்க வைத்தது. பதில் சொல்ல முடியாமல் கோவில்கள் இருக்கும் பகுதி நோக்கி காரை விரட்டினேன்.

புரட்டாசி மாதம் அனைத்து கோயில்களிலும் கூட்டமாகவே இருந்தது. ஒவ்வொரு கோயிலாக காண்பித்து அதன் பழமையையும் சிறப்புகளையும் விளக்கிக்கூறியதை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டார். ஒரு நாளைக்கு இரண்டு கோயில்களுக்கு மேல் செல்ல இயலவில்லை.

ஐந்தாம்நாள். சனிக்கிழமை காலை. மிகப்பழமைவாய்ந்த அந்த பெருமாள்கோயிலில் கூட்டம் வெள்ளமென நிரம்பியிருந்தது. கோயிலின் உள்ளேயும் வெளியேயும் ஒரே மனித தலைகள். இடப்புறம் மூன்று ஆள் உயரமுள்ள மதில் சுவருக்கு வெளியே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே எங்கள் காரையும் சொருகிவிட்டு கோயிலுக்குள் நுழைய முயன்றோம். மனித வெள்ளத்தில் நீந்தி கருவறை அருகே செல்லவே இரண்டு மணிநேரம் பிடித்தது. கருவறையில் திரை மூடி பூசை நடந்துகொண்டிருந்தது.

திடீரென என் பாஸ் என் பக்கம் திரும்பி அவசரமாக யூரின் வருகிறது. கழிப்பறை எங்கே என்றார். அப்பொழுதுதான் எனக்கே உறைத்தது. கோயிலுக்குள் கழிப்பிட வசதி கிடையாது என்று. இது புனிதமான இடம். இங்கேயெல்லாம் கழிப்பிடம் அமைக்கமாட்டார்கள் என்று காரை நோக்கி அழைத்துச்சென்றேன். காருக்கு அருகே மேலே சட்டை அணியாமல் நெற்றி நிறைய நாமத்துடன் வெள்ளை வேட்டியுடன் ஒருவர் கோயில் மதில் சுவரில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். என் பாஸ் என்னைப்பார்த்த பார்வையில் தலைகுனிந்தேன். அடுத்து அவர் கேட்ட கேள்வி செருப்பால் அடித்ததுபோல் இருந்தது.

“கோயிலுக்குள் இருக்கும் கடவுள் புனிதமானவர் என்பதால் கழிப்பிடம் கிடையாது என்றாய். அவரிருக்கும் கோயில் சுற்று சுவரில் இவர் செய்யும் காரியத்தால் புனிதம் கெட்டுவிடாதா”. பதில் சொல்ல திராணியில்லை எனக்கு.

அருகிலுள்ள ஓட்டலுக்கு அழைத்துசென்றுவிட்டு கோயிலுக்கு திரும்பினோம். கூட்டம் வடிந்திருந்தது.

“இவ்வளவு மக்கள் வருகிறார்களே…. குறிப்பாக பெண்கள் ஈர உடையோடு நின்று கொண்டிருப்பதையும் பார்த்தேன். அவர்களுக்கெல்லாம் இயற்கை உபாதை உந்துதல் ஏற்பட்டால் எங்கே செல்வார்கள்”. அவரின் கேள்விக்கு மௌனத்தையே பதிலாகத்தந்தேன்.

கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றி வருகையில் கருவறையின் இடப்புறமுள்ள கற்பாதையில் கசியும் அபிஷேக நீரை தொட்டு பக்தர்கள் தலையில் பவ்யமாக தடவிக்கொண்டிருந்தனர். அதை வித்தியாசமாக கூர்ந்து பார்த்துக்கொண்டே என்பக்கம் திரும்பினார். அது சம்மந்தமாக விளக்கம் கேட்பார் என நினைத்த எனக்கு அவர் கேட்ட கேள்வி என்னுள் பூகம்பத்தையே ஏற்படுத்தியது.

“இங்கு வரும் பக்தர்கள் வெளியே சென்றாவது இயற்கை உபாதையை கழிப்பார்கள். கருவறைக்கு உள்ளேயிருப்பவர்கள் இவ்வளவு கூட்டத்தின் நடுவே நெடுநேரமாகியும் வெளியே வருவதில்லை. அவர்கள் எங்கே செல்வார்கள். இதனுள் மட்டும் பாத்ரும் இருக்கிறதா…?…இங்கு கசிவது அவர்களின் சிறுநீர்தானா…?”

கடுமையான கோபம் தலைக்கேறியது. கோயிலின் கட்டுமானங்களையும் சிறப்புகளையும் பற்றி கேட்பார் என நினைத்தால் நமது ஆச்சார அனுஷ்டானங்களின் மீதே தாக்குதல் தொடுக்குகிறாரே….இவரைப்போன்றவர்களுடன் இங்கு வந்ததே தவறாகப்போய்விட்டது. ஆச்சாரமான பிராமணனான என்னிடம் இவ்வாறு கேட்டது அடி வயிற்றை கலக்கி குமட்டிக்கொண்டு வாந்தி வரும்போல் இருந்தது. என் பாஸ் என்பதையும் மறந்து கடுமையாக முறைக்க ஆரம்பித்தேன். காருக்கு ஓடிச்சென்று ஸ்டார்ட் செய்து உறுமவிட்டேன். ஓட்டல் ரூமிற்கு சென்று பொத்தென்று மல்லாக்க படுக்கையில் விழுந்தேன். அழ வேண்டும்போல் இருந்தது. வரும் வழியெல்லாம் என் முகவாட்டத்தைக்கண்டு

“நான் ஏதாவது தவறாக கேட்டுவிட்டேனா…ராம்நாத்ன்” என கேட்டுக்கொண்டே இருந்தார்.

நாளைக்கு அவருடன் செல்லலாமா.. .வேண்டாமா.. .யோசித்துக் கொண்டிருக்கும் போதே வயிற்றில் பசி மணி ஒன்பதை உணர்த்தியது. செல்போன் ஒலித்தது. என் பாஸ்தான்.. ஏழெட்டு ரிங்குகலை விட்டு விட்டு போனை எடுத்தேன்.

“ரூமிற்கு வா…….ராம்நாத்ன்….”

எதற்காக அழைக்கிறார்….நினைத்தபடி அவரது ரூமின் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன். ஆச்சரியமாக இருந்தது. என் ரூமும் அவருடைய ரூமும் ஒரே மாதிரியாயிருந்தது. சிறிய டேபிள் மேலேயிருந்த லேப்டாப்பை குட்டி சேரில் அமர்ந்து நோண்டிக்கொண்டிருந்தார். டீப்பாயின் மேல் விலையுயர்ந்த விஸ்கி பாட்டிலும் இரண்டு கிளாசும் வறுத்த முந்திரியும் அதனருகே அந்த தடித்த புத்தகமும்.

எழுந்து வந்து இரண்டு கிளாஸ்களிலும் அளவோடு விஸ்கியை நிரப்பி ஐஸ்கட்டியை அதனுள் போட்டு என்னிடம் ஒன்றை நீட்டியவாறே

“ராம்நாத்ன்…. உங்கள் மனதைப் புண்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. உண்மையிலேயே உங்கள் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் முழுவதுமாக எனக்கு தெரியாது. அதனால்தான் அவ்வாறு கேட்டுவிட்டேன். மன்னித்துவிடுங்கள்..”

எவ்வளவு பெரிய மனிதர். உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ளவர் என்னிடம் மன்னிப்பு கோருகிறார்….என் கோபமும் குழப்பமும் சற்று தணிந்தது. அவர் வேண்டுமென்றே அவ்வாறு கேட்டிருக்க வாய்ப்பில்லை. சாஸ்திர சம்பிரதாயங்களில் முழுவதுவாக ஊறிப்போய்விட்டதாலும் புதிய பகுத்தறியும் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டதாலும் நம் வருங்கால சந்ததியினருக்கு புதிய தேடல்களையும் புரிதல்களையும் கற்றுத்தர இயலாமல் தடுமாறுகின்றோமோ என்று கூட நினைக்கத்தோன்றியது. நான் எப்பொழுதாவது விஸ்கி குடிப்பேன். இது அவருக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. எனக்கு அது இப்போது தேவைப்பட்டது. வாங்கி ஒரே மடக்கில் குடித்தேன். மேற்கொண்டு இரண்டு ரவுண்டுகளை எதுவுமே பேசாமல் முடித்துவிட்டு ரூமிற்க சென்று படுத்துவிட்டேன்.

மறுநாள் காலை…. கும்பகோணத்திலிருந்து ஆலங்குடி செல்லும் வழியில் மிகப்பழமையான வைணவ கோயில் இருப்பதை அறிவேன். புராதன சிலைகள் அடங்கிய அந்த கோயிலை நெருங்குகையில் ஒலி பெருக்கி வாயிலாக மந்திர உச்சாடங்களை கேட்க முடிந்தது. அருகில் சென்றதும் அன்று கோயிலில் கும்பாபிஷேகம் எனப்பார்த்தவுடன் தெரிந்துகொண்டேன். விண்ணைத்தொடும் அளவு உயர கோபுரத்தில் உள்ள சிலைகள் அனைத்தும் புது வண்ணப்பூச்சுடன் அழகுற மிளிர்ந்தது. காரை பார்க் செய்துவிட்டு மக்கள் வெள்ளத்தின் நடுவே நின்றுகொண்டோம். மூங்கில்களாலும் சவுக்கு கழிகளாலும் அமைக்கப்பட்ட சாரத்தின்மேல் நிறையபேர் நின்றுகொண்டிருந்தனர். கோபுர கலசங்களின் அருகே ஐந்து பேர் கொண்ட வைணவப்பெரியார்கள் குழு கோரஸாக மந்திரங்கள் சொல்லிக்கொண்டிருந்தனர். பதினைந்து நிமிடம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என் பாஸ் ஏதோ நினைத்தவராக என் பக்கம் திரும்பி

“ராம்நாத்ன்…. கோபுர உச்சியில் இருப்பவர்கள் மேலே சென்று எவ்வளவு நேரமாகியிருக்கும்” எதற்கு கேட்கிறார் எனப்புரியாமல்

“ஒரு மணியிலிருந்து ஒன்றரை மணிநேரம் ஆகியிருக்கும்” சொல்லிவிட்டு திரும்பிப்பார்த்தேன். அவர் என்ன கேட்கப்போகிறார் என யூகிக்க முடிந்தது. கேட்டேவிட்டார்.

“அவசரமாக பாத்ரூம் வந்தால் அவர்கள் எங்கே செல்வார்கள்” இவருக்கு ஏன் இப்படியெல்லாம் கேட்கத்தோன்றுகிறது. நானும் சளைக்காமல்

“ அவர்கள் அனைவரும் பூஜை புனஸ்காரங்கள் செய்து மனதையும் உடலையும் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள். இயற்கை உபாதை உந்துதலை எவ்வாறு கையால வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.”

என் பேச்சை இடைமறித்து

“அவர்களுக்கு ஐம்பது வயது தாண்டியிருக்கும். பெருத்த வயிறுடன் வேறு இருக்கிறார்கள். நீரிழிவு நோயிருக்க வாய்ப்பிருக்கு…..அப்படி இருக்க எவ்வாறு கட்டுப்படுத்த இயலும்.”

ஏடாகூடமாக இப்படி கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது. கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டேன். சிறிது நேரத்தில் மேலிருந்து மஞ்சள் கலந்த புனித நீர் அனைவர்மீதும் விசிறி தெளிக்கப்பட்டது. என் பாஸ் தலைமீதும் கைகள் மீதும் நீர்த்திவலைகள் விழுந்தன. தன் கைமீது விழுந்த நீரை பார்த்த அவர் உடனடியாக கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டே என் பக்கம் திரும்பி அவர் பார்த்த பார்வை என்னை தூக்கிவாரிப்போட செய்தது. என்ன கேட்கப்போகிறார் என யூகிக்க முடிந்த நான் அவரை பரிதாபமாகப் பார்த்தேன். நல்லவேளை அவர் மௌனமாக இருந்தது எனக்கு பெரிய மனநிம்மதியை தந்தது. ஆறுநாட்கள் முடிந்திருந்த நிலையில் ஊருக்கு திரும்பலாம் எனக்கூறிவிட்டார்.

எம்.டி. அழைக்கிறார் என ப்யூன் சொன்னவுடன் என் ரூம் கதவு திறந்து ஏசியிலிந்து வெளியேறி எம்.டி. ரூம் ஏசியில் ஐக்கியமானேன். எம்.டி. இருக்கையில் என் பாஸ். எதிரே எம்.டி.. என்னை அமரச்சொல்லிக்கொண்டே கையிலிருந்த வெண்ணிறக் கவரை நீட்டினார் என் பாஸ். சுற்றிக்காட்டியதற்காக சன்மானம் தருகிறார் என ஆவலுடன் வாங்கிக்கொண்டேன்.

“பிரித்துப்பார்”

எனக்கும் அந்த ஆவல் இருந்ததால் கவரைப்பிரித்து உள்ளே பார்த்தேன். ஒரு செக்கும் கடிதமும். கடிதத்தை பிரித்துப்படித்த நான் பெரிய அதிர்ச்சிக்குள்ளானேன். என் வேலை நீக்க உத்தரவுக்கடிதம். என்னையும் மீறி கண்கள் குளமாகியது. என் மேல் உள்ள கோபத்தில் எம்.டி. என்னைப்போட்டுக்கொடுத்து என் வேலைக்கு உலை வைத்துவிட்டாரோ……. செக்கைப்பார்த்தேன் கணிசமான ஒரு தொகை செட்டில்மெண்ட்டாக இருந்தது.

“ராம்நாத்ன்….. இனிமேல் இங்கு உங்களுக்கு வேலை கிடையாது. நான் இங்கே கோயில்களை சுற்றிப்பார்க்க மட்டும் வரவில்லை. ஆபிஸ் விஷயமாகத்தான் வந்தேன். ஜெர்மனியில் இருக்கும் மருந்துக் கம்பெனிகளின் கழிவுகளை கொட்டுவதற்காக தூத்துக்குடிக்கு கப்பலில் அனுப்பி வைத்தேன். இங்கிருக்கும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் பேசி அவர்களுக்குரிய கமிஷனையும் தந்துவிட்டேன். இங்கு வந்து உங்கள் ஊரின் பழமையையும் தொன்மையையும் கலாச்சார அடையாளங்களையும் பார்த்த பிறகு என் மனசாட்சி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஏற்கனவே முறையான துப்புரவு முறை (Sanitary System) இல்லாமல் நீங்கள் தொற்றுநோய்களால் உங்களை நீங்களே அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். நானும் அதைச்செய்ய விரும்பவில்லை. முன்னரே கப்பலை ஆப்பிரிக்க நாட்டுப்பக்கம் திரும்பச் சொல்லிவிட்டேன்.

மேலும் ஒரு கவரை என்னிடம் நீட்டினார். பிரித்து உள்ளிருந்த செக்கைப்பார்த்த எனக்கு ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருந்தது.

செக்கில் ஐந்து கோடி ரூபாய் என இருந்தது.

“ராம்நாத்ன்…. இப்பணத்தைப் பயன்படுத்தி உங்களுக்குப்பிடித்த கடவுளின் பெயரால் ஒரு அறக்கட்டளை ஆரம்பியுங்கள். அவ்வறக்கட்டளை மூலம் எங்கெல்லாம் கழிப்பிட வசதி இல்லையோ அங்கெல்லாம் மொபைல் டாய்லட் வசதியோ அல்லது நிரந்தர கழிப்பிட வசதியோ செய்து தாருங்கள். குறிப்பாக கோவில்களுக்கு அருகில். அதனைப் பராமரிக்க தேவையான ஆட்களை நீங்களே நியமித்துக்கொள்ளுங்கள். இதன் நிறுவனரான நீங்கள் உங்கள் சம்பளத்தையும் வேலையாட்களின் சம்பளத்தையும் நீங்களே நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். உங்கள் ஊரில் சமூக அக்கறைகொண்ட நல்ல உள்ளங்களிடமிருந்து இவ்வறக்கட்டளைக்கு நிதி திரட்டுங்கள். மேலும் தேவையென்றால் நான் தருகிறேன். வேறு எந்த உதவியானாலும் தயங்காமல் என்னிடம் கேளுங்கள். உங்கள் ஊரை நோய்களிடமிருந்து காத்துக்கொள்ளுங்கள்.”

எங்கேயோயிருந்து வந்த மருந்துக்கம்பெனியின் முதலாளி மனித நேயத்துடன் தன் வியாபாரம் பாதிக்கும் எனத்தெரிந்திருந்தும் மக்களுக்காக இது மாதிரி முடிவு எடுத்திருக்கிறார். நம்மிடையே பிறந்து இம்மண்ணையும் மாண்பையும் நன்கறிந்த நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் இருக்கும் நம் தலைவர்கள் மக்களைப்பற்றி அக்கறை இல்லாமல் சுயநலமாய் திரிகிறார்களே…… வெட்கமாக இருக்கிறது தற்காலத்தில் இம்மண்ணில் வாழ்வதற்கு….. ச்ச்ச்ச்சேசேசேச……….

Print Friendly, PDF & Email

3 thoughts on “இயற்கை உபாதை

  1. உங்கள் கதை நன்றாக உள்ளது வாழ்த்துகள். நீங்கள் கதையின் ஊடாக கேட்ட கழிப்பிட வசதி சந்தேகங்கள் எனக்கும் கோயிலுக்கு செல்லும் போது ஏற்பட்டிருக்கிறது. அடிப்படை வசதிகள் செய்து தராத கோயில் நிர்வாகம் விசேச நாட்களில் ஆடம்பர செலவுகள் செய்வதை பார்க்கிறேன். கோயில் நிர்வாகம் மக்களிடம் காணிக்கை வாங்க பல தந்திரங்களைச் செய்கிறது ஆனால் மக்களுக்கு உடல் கழிகளை வெளியேற்ற வசதி செய்யாத்தால் அதை அடக்கி வைக்கும் மக்களுக்கு பல நோய்களையல்லவா தருகிறது.

  2. அருமை… வாழ்த்துக்கள்…

  3. அருமை … நிச்சயமாக நம் நாட்டின் நிலைமையை சீரமைக்க நம்மால ஆனா சேவைகளை செய்ய வேண்டும்.. இது நமது கடமையும் ஆகும்.. நமது தேசம் நமது பொறுப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *