அந்திப்பொழுது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 21, 2022
பார்வையிட்டோர்: 4,118 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1-10 | 11-20

1

அந்தக் கொழுத்த உடும்பு தன்னிடமிருந்து தப்பிப் போனது ஐயனுக்கு எல்லை மீறிய கவலையினைக் கொடுத்தது. மிகவும் கொழுத்த, முற்றிய மரவள்ளிக் கிழங்கு போல உடல் திரண்ட நல்ல இரை.

காயான் மரத்துக்கு அருகே அந்த உடும்பினைக் கண்டதும் மெதுவாகப் பதுங்கியவாறு கும்முனைச் செடி களின் மேலே தவழ்ந்து சென்றும் அந்த உடும்பினைப் பிடிக்க முடியவில்லை . அது அரவமறிந்து சரசரவென்று செடிகளை மிதத்தி முதுகு நிமிர்ந்திருந்த கருங்கற்பாறை யின் மேலே ஏறி அப்படியே நாவல் மரத்திற்கு அருகி லுள்ள பற்றைச் செடிகளின் பசுமைக்குள் வேகமாகக் கரைந்து போயிற்று.

ஐயனுக்கு இது மிகவும் கவலை. காட்டுக்குப் புறப் படவென்று எண்ணியிருக்கவில்லை அவன். அதனாலே தனது இரு சகபாடிகளையும் கூட்டிவரவில்லை. வெறுமனே சுரைக்குடுவையினை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட அவனுக்கு, அன்றைக்கு அந்தக் காட்டுக் கத்தியைக் கூட எடுத்துக் கொள்ளத் தோன்றாதது மிகவும் எரிச்சலையூட்டுகின்றது. அல்லாவிட்டால் அந்தக் காட்டுக் கத்தியை வீசியெறிந்தே அந்த உடும்பினைச் செயற்படாமற் செய்திருப்பான்.

உடும்பைப் பிடிப்பதற்குள்ள சுகமான வழி அதனைக் காயமடையச்செய்வதுதான். அதுவும் பின்னங்காலினை ஊனப்படுத்தி விட்டால் எப்படியும் அது கைக்கு எட்டியதற்குச் சரி. மற்றப்படி அதனை ஒரே தாக்கில் கொல்வதென்பது மிகவும் சிரமமான காரியமே. கடைசி மூச்சு வரையில் அது திடமாகப் போராடிக் கொண்டே தப்பித்து விடும். பிடிவாதமான மிருகம்.

உடும்பு வறுவல் என்றால் ஐயனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான் நன்றாகப் பிடிக்கும். கட்டியான சதை. அந்த இறைச்சியைச் சாப்பிட்டவுடன் உடலிலே உடனே சேர்ந்து விடுகின்றது. உடலிலேயுள்ள எந்த முறிவு நெரிவையும் உடும்பு இறைச்சி நேர்ப்படுத்தி விடுகின்றது. அதனைத் தோல் உரித்து, குடல் முதலிய வற்றை வீசிவிட்டு செந்தணலிலே வாட்டி எடுத்துத் தின்பது தனியான ருசி. அதுவும் புதிதாக இறக்கப்பட்ட தென்னங்கள்ளும், சாமிப்பிட்டும் இருந்து விட்டால் அதற்கு நிகரான விருந்தாக எதைக்கூற முடியும்?

ஐயனின் வீட்டிலே சாமித் தானியத்தை நன்றாகக் குற்றி மாவாக்கி வைத்திருக்கிறாள் கிட்டி. குடிசையின் பின்புறத்திலேயுள்ள பதினான்கு தென்னைகளிலே முட்டி கட்டியிருக்கிறான் ஐயன். அந்த அயலிலே அவனோடு மூவருக்கு மட்டுந்தான் இப்படியான தென்னைகள் கிடைத்திருக்கின்றன. ஏறுபட்டி, தளநாரோடு ஐயன் புறப்பட்டானென்றால் அந்தப் பகுதி முழுவதுமே அன்று ஆனந்தமடையும். எல்லாக் கலயங்களிலும் கள் நிறைகிறபோது எவருடைய மனந்தான் ஆனந்த மடைவதில்லை ?

நேற்றுத்தான் கள் இறக்கினான் ஐயன். இன்றைக்கு லேசாகப் புளித்திருந்தாலும் உடும்பு இறைச்சியோடு அதைக் குடிப்பதென்றால் நல்ல ருசியாக இருக்கும். கிட்டி கூட கொஞ்சம் கூடுதலாகக் கள் குடிக்க விரும்புவாள்.

வெகு தூரம் வரை பன்புற்கள் பரவி நின்றன. இடையிடையே சீறி எழுந்து நிற்கிற பாலைமரங்கள் பிணைபட்ட கொடிகளால் மூடுண்டு, கொடிப் பூக்கள் சோம்பலோடு இதழ் விரித்து நிழலினுள் அடங்கியிருந் தன; மிருகங்களிற்கும், குருவிகளுக்கும் அடைக்கல மளித்திருந்தன. வயதான நாவல் மரங்கள் நிரையிட்டு, அடர்காட்டிற்குத் தொடக்கம் காட்டியிருந்தன. அந்த எல்லையைத் தாண்டி விட்டால் திடீரெனச் சூழ்நிலையே மாறிவிடும். சிள்வண்டுகளும், கானாக்குருவிகளும் பரபரத்து ஓசையிடும். இடையிடையே மஞ்சள் வாற் குருவி ஒரு நீளத்திற்குக் கூவிக்கொண்டு இறகை யடித்துக் கொண்டு அந்த அடர்காட்டினைச் சிலிர்க்க வைக்கும். குளத்தில் விழுந்த கல், வளையங்களை மிதக்க விடுவது போல இந்தக் குருவியின் ஆர்ப்பரிப்பு எல்லாக் காட்டினையும் அதிரச் செய்யும். குரங்குகள் கொடிகளிலே தாவிக் குருவிகளை எழுந்து பறக்க வைக்கும். பிறகு தாமே பரபரப்பைத் தோற்றுவித்துக் கீச்சிடும்.

இவையெல்லாம் ஐயன் வழமையாகவே காணுகின்ற காட்சிகள் தான். ஆனால் சரிந்திருக்கின்ற விண்ணாங்கு மரத்திலேயிருந்தபடி யோசனையில் ஆழ்ந்திருக்கிற போது, இன்று இவையெல்லாம் தனக்கு அந்நியப்பட்டி வக்கின்றதெனப் பிரமை கொண்டான் ஐயன், எல்லாம் இந்த உடும்பை இழந்ததால் வந்த வெற்றுணர்வுதான்.

முசுறுகள், காய்ந்த இலையொன்றோடு வந்து அவனது முதுகிலே சிதறின. இவன் அவற்றை முதுகி லேயே வைத்து நசுக்கிக் கொன்றான். வழமையாக வெனில் முசுறுகளை அவன் கொல்லாமல், வெகு அவதானமாக அவற்றைத் தூக்கிப் பாதுகாப்பாகத் தூர விட்டு விடுவான்.

மு சுறுகள் அறிவு கெட்ட பிராணிகள். சிவபெருமானை நோக்கி எல்லா முசுறுகளும் தவம் இருந்தனவாம். அகோர தவம். அவற்றின் மனதிலே தாங்கள் உலகில் மனிதனைவிடப் பலம் பெற வேண்டு மென்ற எண்ணம் முளைத்து விட்டதாம். மனிதனைத் தாங்கள் கடித்தால் மனிதன் இறந்துவிட வேண்டுமென்று கடவுளைக் கேட்க அவை நினைத்து விட்டன இதைக் கடவுள் அறிந்து விட்டார். முசுறுகளின் தவம் உச்ச நிலைமையினை அடைந்தபோது, கடவுள் அவற்றின் முன்னே தோன்றி உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். உடனே முசுறுகள் தாங்கள் கடித்தால் மனிதன் செத்துவிட வேண்டும் என்று வரம் பெறுவதற்கு நினைத்தவாறு கேட்க முனைந்த போது, கடவுள் அவர் களின் நாக்கினிலே மனிதன் என்ற சொல்லை வராமற் தடுத்து விட்டார். உடனே முசுறுகள் ‘நாங்கள் கடித் தால் செத்துவிட வேண்டும்’ என்று கடவுளிடம் வரங் கேட்க, கடவுள் அப்படியே ஆகட்டும்’ என்று சொல்ல அன்றிலிருந்து முசுறுகள் யாரைக் கடித்தாலும் உடனே தாமே செத்துப்போய் விடுகின்றனவாம். இதைப் பட்டங் கட்டி சின்னையாதான் ஐயனுக்குச் சொன்னார்.

பட்டங்கட்டி சின்னையா உண்மை சொல்கிற மனிதன். முசுறுகளின் கதை உண்மையானது என்று ஐயன் உறுதியாக நம்பினான். அந்தத் துர்ப்பாக்கிய மான பிராணிகளை சாதாரண நேரங்களிலே இதனாலே தான் அவன் கொல்வதில்லை. முசுறுகளைப் போலவே உடும்புகளுக்கும் கடவுள் ஏதாவது வரம் கொடுத்திருக்க லாம். தந்திரமான, திடகாத்திரமான பிராணி. இன்றைக்கு மட்டும் அந்தக் கொழுத்த உடும்பு ஐயனின் கைகளுக்கு அகப்பட்டிருந்தால் அவன் இந்நேரம் வீட்டிலே மகிழ்ச்சிப் பரபரப்பில் திளைத்துப் போயிருந் திருப்பான்.

பட்டங்கட்டி சின்னையாவுக்கு ஐயனின் மேல் நல்ல அபிமானமிருந்ததால், குருவிக்கல் கிராமத்திலே வாழு கின்ற எல்லாக் குடும்பங்களுக்கும் ஐயனின் மேல் மதிப் பும் மரியாதையுமிருந்தது. என்ன பிரச்சினை ஏற்பட்டா லும் அதனைத் தீர்த்து வைக்கும் உரிமையும் ஐயனுக்குத் தான் இருந்தது. ஐயனை மீறினால் அல்லது ஐயனே தானாக முன்வந்து ஏதாவது பிரச்சினையைப் பட்டங் கட்டி சின்னையாவிடம் கொண்டு போனால்தான் உண்டு. ஐயனின் குரலுக்கு உள்ள மரியாதை இது.

“எடே ஐயா, உங்கடை உலகம் காடுதானடா… மிருக சாதியை வேட்டையாடுகிற வேடுவன்களுக்குத் தங்களுக்குள்ளை சண்டையிருக்கப்படாதடா…. நான் சொல்லுகிறது கேட்டதாடா… இப்படித்தானடா முந்தி யொரு காலத்திலே சிவபெருமான்…”

இப்படிப் பட்டம் கட்டி சின்னையா கூறத்தொடங் கியதும், ஐயன் அவருக்கு முன்னே வெகு மரியாதையாக சம்மாளமிட்டு உட்கார்ந்து அவர் கூறுகிறதை நிறைந்த கவனிப்போடு கேட்கத் தொடங்கி விடுவான்.

2

கிட்டி, காவல் கொட்டிலின் அருகாக நின்று சோளஞ் சேனையைப் பார்த்துக் கொண்டு நின்றாள். கண் தூரத் திற்குச் சோளஞ்செடிகள் பசும் அலையாய்த் தெரிந்தன.

இடையிடையே எரிந்து கருகிய மரங்களின் கிளைகள் அபயங் கோரி நிற்பன போலத் துருத்திக் கொண்டு தெரி கின்றன. வாலாட்டிக் குருவிகள் கூட வந்திருக்க முடியாத அளவிற்கு அம் மரங்களின் கிளைகள் கருகிக் கூர்மையடைந்திருந்தன.

இந்த மரங்களைப் போல விறைப்பாகத்தான் சேனைக்காவல் காக்க வேண்டும். கிட்டியும் ஒரு விதத்தில் இம் மரங்களைப் போலத்தான்; சேனைக் காவலில் அவ்வளவு கவனமானவள். அவள் காவல் காத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கின்ற எவருமே, அவள் வடிவழகில் லயிக்கவே செய்வார்கள். நீரோடை யருகே செழித்த வாழை மரம் அவள். இன்னுமின்னும் குட்டிகளை ஈன்று பார்வைக்கு ரம்மியமளிக்கிற வாழை போலவே, பதினொரு பிள்ளைகளைப் பெற்றும் இன்னும் இளமையின் வேகமாய் பொலிவாய், சிலிர்ப்பாய், உற்சாகமாய் நிற்கிறவள் கிட்டி. நீண்ட கழுத்திலே ஆண்மயிலின் கம்பீரம், பளீரிடுகிற கறுப்பு நிறம். வெற்றிலை போட்டே சிவந்த உதடுகள். தழையும், மடலு மவிழ்ந்து நிற்கிற சோளம் பொத்தி போலவே அச் சேனை யில் அவள். இந்தப் பருவத்திலே. சேனைக் காவல் நிற்கையில்தான், இளமை உணர்வுகளைக் கிளர்ந்தெழ வைத்து ஐயன் அவளைப் பெண்ணாக்கிக் கொண்டான். இப்பொழுது அவற்றை நினைத்தாலும் கிட்டிக்கு உடல் சிலிர்த்து அந்தரங்கமாய்ப் புன்னகை மலரும்.

சோளம் பொத்திகளை இன்னும் ஒரு மாதத்திலே முறித்துவிடலாம். இப்போது அவை பழுத்துக் கொண்டு வருகின்றதை சோளஞ் செடிகளின் சரிவு அறிவிக்கின்றது. இந்த மார்கழி மாதத்திலே குருவிக்கல்லிலே யாரும் கண்ணோடு கண் மூட முடியாது. மிருகங்கள் அழிவு வேலையைத் தொடங்கிவிடும். பன்றிகளும், கிளிக் கூட்டமும், அணில்களும் தொகை தொகையாகச் சேனைக்குள் புகுந்து பெரும் நாசம் செய்யத் தொடங்கி விடும். அது அழிவுமல்ல துவம்சம். சோளன் குலைகளை அரை குரையாகக் கொத்தி, வேரை அறுத்து நடுநடுவே கோதி அவை செய்கின்ற அட்டூழியங்களை ஒருவர் இருவரால் மட்டும் தடுத்து விடமுடியாது. அங்குள்ள குஞ்சு குருமான்களிலிருந்து, முதியோர் வரை ஓயாமல் கூவிக் கலைத்துக் கொண்டிருப்பார்கள். தகரப் பேணி களினை உலுப்புகின்ற போது ஏற்படும் முரட்டுக் கிணுகிணுப்பு கிளிகளையும், அணில்களையுமே துரத்த முடியும். பன்றிகள், இரவிலே-அதுவும் எல்லோரும் கண்ணயர்ந்து போகின்ற தளர்ச்சியினையடைகின்ற அதிகாலையின் போதுதான் சருகுகளை மிதித்துக் கொண்டு உர்உர்ரென்ற ரகசியத்தோடு சோளஞ் சேனையினுள்ளே பிரவேசிக்கும். தன் முரட்டு மூஞ்சை யினால் வேர்களை அகழ்ந்து, கால்களால் ஆவேசத் தோடு செடிகளைப் பிய்த்தெறியும், அவற்றை விரட்ட வேட்டை நாய்களால்தான் முடியும்.

ஒவ்வொரு சோளஞ் சேனைகளுக்கும் இருபதடி வரை உயரமான நெடும்பரண் காட்டுத்தடிகளினால் கட்டப்பட்டிருக்கும். அதிலே நின்றுதான் அந்தப் பிராணிகளை நோட்டம் இட முடியும். ஒவ்வொரு சேனையைச் சுற்றியும் காட்டுத்தடியாலும், கிளாக் கொடி யினாலும் பிணைத்த வேலிகள் கட்டப்பட்டிருக்கும்.

சென்ற ஆண்டிலே அறுவடையின்போது கிட்டி நிறைமாதப் பிள்ளைத்தாய்ச்சி, அவளின் மகள் கண்ணாத்தைதான் எல்லா வேலைகளையும் கவனித் தாள். அவள் அணில்பிள்ளை போல சுறுசுறுப்பானவள். தாயைப் போலவே ஆகிருதி. ஒரு பகல் முழுவதும் சோளனைப் போட்டுக் களைப்பின்றிக் குற்றி மாவாக்குவாள். பளீரிட்டுச் சிரிக்கிற போது அவள் பால் ஐயனுக்கு மிகுந்த பரவசம் ஏற்படும். இரண்டு ஆண்டுகளே அவள் பூப்பெய்தி. இந்தப் பொங்கலோடு அவளுக்கு “சோறு கொடுக்க’ வேண்டும். அவளுக்குச் சோறு கொடுத்தாலும் அவள் தனது புருஷனோடு இதே சேனையில்தான் இருப்பாள். புதிதாகக் காடழித்துச் சேனையினை உண்டாக்குகிறபோது அந்த ஆண்டிலே அவருக்கும் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும். எல்லாமாக ஐயனுக்கும், கிட்டிக்கும் பதினொரு பிள்ளை கள். ஒருவன் மட்டும் அதிலே தவறிப்போய் விட்டான்.

கிட்டிக்குத் தனது பிள்ளைகள் எல்லாரிலும் நிறையப் பெருமையுண்டு. நாலு பெட்டைக்குட்டிகளும், ஆறு பொடியன்களும் தேக்கமரக்கன்று போலச் செழித்துக் கொழுத்தவர்கள். தாயைப்போல எல்லோருக்குமே மரை போல நெடுங்கழுத்துக்கள். சிறிது பிளந்த உதடுகள். பெண்கள் எல்லோருக்கும் தகப்பனைப் போலவே சுருட்டை முடி.. வைரனுக்கு மட்டுந்தான் ஆண்களில் தகப்பனைப் போன்ற சுருண்ட கேசம். எல்லோருக்கும் பெரிய கண்கள். பார்ப்பதற்கு வசீகரமான ஒளிமிக்க கண்கள். கண்ணாத்தைக்கு மட்டும் அபூர்வமாக அங்குள்ள எல்லோரையும் விடக் கருகருத்து அடர்ந்த புருவங்கள். அந்தக் கருமையான முகத்திலே அப் புருவங்கள் வெகு அழகாகத் திகழ்வதாக கண்ணாத்தை யின் சினேகிதிகள் சொல்கின்ற போது கிட்டிக்கு மனதி

னுள்ளே பெருமிதம் பொலிந்து பூவெனச் சிலிர்க்கும். கண்ணாத்தையைக் காணுகின்ற போதெல்லாம், கரப்புக் குள் நிற்கிற சிவப்பு நிறமான கன்னிக்கோழியின் நினைவுதான் கிட்டிக்கு வரும், கன்னிக்கோழிக்கு, சம்பன் தமக்கையினுடைய பெயரைச் சூட்டியே அழைப் பான். சம்பனுக்குத்தான் எல்லோரையும் விடத் தமக்கை மீது வாத்ஸல்யமும் பாசமும்.

பத்து வயதான சம்பனுக்கு மயில்களைத் தேடித் திரிவதிலேதான் பிரியம். மயில் குடும்பத்தைப் பற்றிய விவரங்களெல்லாவற்றையும் நன்றாக அறிந்து வைத் திருக்கிற அவனுக்கு பட்டம் கட்டி சின்னையாவைக் கண்டால் முற்றாகவே பிடிப்பதில்லை. நகரத்தில் வாழ்கிற பறங்கி ஒருவனுக்கு ஈழை நோயென்று இரண்டு மயில்களைப் பட்டங்கட்டி சின்னையா சுட்டுக் கொன்று சென்றதை மனதிலே மாறிடாத புண்ணென நினைவிலே வைத்திருக்கிறான் சம்பன்!

என்ன பரிதாபகரமாக வீரிடலால் அக் காட்டி னையே உலுப்பிக் கொண்டு அந்தத் துப்பாக்கியின் உரத்த ஓசையையும் மீறியவாறு அவை மடிந்து போயின. இரத்தம் சொட்டச் சொட்ட, அலகுகளால் பக்கத்திலி ருந்து புற்றறைகளைக் கொத்தி, உடல் நெளிந்து, குஞ்சு இறகுகள் உதிர்ந்து புயலுக்குச் சிதறிய அழகிய காட்டுப் பூவெனச் சிதைந்து போய்க் கிடந்தன அந்த மயில்கள்… இனிமையான அகவுதலால் அக் காட்டினையே மகிழ்ச்சி யில் ஆழ்த்துகிற அந்தமயில்கள் இறந்ததின் பிறகு, அந்த நாவல் மரத்தினைச் சுற்றி வாழ்ந்த ஏனைய மயில்கள் இடம் பெயர்ந்து போய் விட்டன.

நாவல் மரத்தினடியில் தூர்ந்திருந்த புற்றினுள்ளே இப்போது பாம்புகள் மீண்டும் குடிகொண்டதற்கு அடை யாளமாக, அவை உரித்துப் போட்ட பாம்புச் சட்டை கள் நாயுருவிச் செடியோடு பின்னப்பட்டுக் கிடந்தன. அந்தச் செடிக்கு அருகாகப் போகின்ற போதெல்லாம் சம்பனின் மனம் எல்லையில்லாத துயருற்று மௌன மாகவே புலம்பிடும். அந்த நாயுருவிக் செடியை ஆத்திரத் தோடு கையிலே வைத்துள்ள காட்டுத் தடியினால் மாறி மாறி அடித்துவிட்டு, ஆவேசத்தோடு அந்தத் தடியினை அருகிலுள்ன பாம்புப் புற்றின் துவாரத்தினுள்ளே வெகு வேகமாகச் செருகுவான். பின்னர் சொல்லக்கூடாத தூஷணை வார்த்தைகளைப் பட்டங்கட்டி சின்னையா வின் மீது அவன் பொழிந்து தள்ளியதன் பின்னரே தனது

இன்றும் அப்படித்தான் செய்துவிட்டு, கிளாக்கொடி வெட்டுவதற்காக அடர்ந்த காட்டினுள்ளே காலடி எடுத்து வைக்கிறபோது, காடு தொடங்குகிற இடத்திலுள்ள சிறிய குளத்தினருகே இரண்டு மயிலிறகுகள் கிடப்பதைக் கண்ட உடனே அவன் மனதிலுள்ளே பேரானந்தம் தோகை விரித்தாடிற்று. கானாக் குருவியின் மெல்லிய சோகக் கீரிடலை, வழிவிலக்கிக்கொண்டு அப்போதே அங்கு கேட்ட அகவுதற் குரல் அவனை மேலும் உற்சாகப்படுத்தி, அவனது நடையினைத் துரிதப்படுத்த, கிளாக் கொடியினையும் மறந்து காட்டினுள்ளே விரைந் தான் சம்பன். பாலைமரத்தின் பின்னே மறைந்து நின்ற ஓ நாயொன்று அரவங்கேட்டதும் இடறியடித்துக் காட்டி லுள்ளே தறிகெட்டு ஓடிற்று. அந்த ஒலியின் சிதறலால் பறவைகள் கிறீச்சிட்டு சிறகடிக்க, காடு சினத்துடன் விழித்து உறுமுகிறாற்போல ஒலியெழுந்து சிறிது நேரத்தில் மீண்டும் மௌனத்துள் புகுந்து உறங் கலாயிற்று.

காட்டின் ஒற்றையடிப் பாதையினை விட்டு விலகி, மருக்காலை மரக்கூட்டப் பக்கமாக நடக்கின்றபோது, கொடிகளுக்கும், மரங்களுக்கும் இடையேயுள்ள வெளி யூடாக மெல்ல அடியெடுத்து வைக்கின்றமையினால் சிரிக்கின்ற வண்ணத் தோகையின் பின்புறத்தைக் கண்டான் சம்பன். இருபுறத்தையும் அசையவிட்டு தள்ளாடுகிறாற்போல நடக்கிற அம்மயிலின் முன்னே, பேடுகள் நான்கு புழுக்களைக் கொத்துவதும், இலேசாக அகவுவதுமாய் நின்றன. இன்னொன்று கூரிய சொண்டி னால் பாலைமரத்தைக் கொத்துவதும், கீறுவதுமாய் நின்றது. சிறு அசைவின் ஒலிவும் அந்த மயில்களை அதிர்வுற்று எச்சரிக்கை அடையச் செய்துவிடுமென்பதை சம்பன் நன்கு அறிவானாதலால், மெதுவாகத் தவழ்ந்து போய் அடிபெருத்த தேக்கமரமொன்றின் பின்னாலே ஒளிந்துகொண்டான்,

மாட்டு இலையான்களும், முசுறுகளும் சாம்பனின் முதுகைப் பிய்த்தபோதிலும் அவனது கவனம், அம்மயில் களிடமிருந்து சிறிதேனும் பிசகவில்லை . அந்த மயில் களின் இடத்திற்குச் சிறிது தள்ளி இலைகளும், சருகு களும் குவிந்துகிடந்தன. அவை சிதறிய இடத்திற்கு இன்னொரு மயில், தளர்ந்த நடையோடு வந்து கொண்டிருந்தது………

சம்பனின் உருண்டையான முகம் இப்போது பிரகா சத்தினால் சூரியகாந்திப் பூவைப் போல மலர்வுற்றது. வாய்க்குள் மெதுவாக முணுமுணுத்துக் கொண்டான். ‘மயிற் பிள்ளையார், குஞ்சு பொரிக்கப் போறார்!’ சம்பனின் முன்னால் அம்மயில்களினைப் பார்த்திருக்கை யிலேயே காட்சிகள் விரிந்தன. சிறிய குழிகளைத் தோண்டி, அவற்றினுள்ளே தமது முட்டைகளை ஒதுக்கி அதன் மேலே இலைகுழைகளால் மூடிக் காத்திருக்கிற மயில்…… பின்னர் மெதுவாகத் தத்துப்பித்தென்று சருகு களால் வெளியேறுகிற சின்னச்சின்னக் குஞ்சுகள்… அவற்றில் எத்தனைக்கு கொண்டை அரும்பியிருக்குமோ? ‘நுணுக் நுணுக்’ என்று மயிலொன்று எச்சரிக்கைக் குரலிட்டதும் சம்பனின் கனவுகள் கலைந்தன. மயிலிற்கு மனித மணம் தெரியுமென்றுதான் அம்பலவி சொல்லி யிருக்கிறான். ஆனால் சம்பனின் அனுபவத்தில் அது பொய்யாகவே அவனுக்குப் புலப்பட்டிருக்கின்றது. ஆயினும், மயில்களுக்குச் சீற்றம் வந்துவிட்டால் அவற்றின் தாக்குதலைச் சமாளிக்க முடியாது; சொண்டி னாலும், நகங்களினாலும் எதிரியைக் கிழித்துக் கொதறி விடும். சிலவேளை கண்களையே கொத்தி ரணமாக்கிய பின் தான் அவற்றின் சீற்றம் தணிவதுண்டு. சம்பனின் இடது தோட்புறத்திலும் மயில் கொத்திய இடம் இப் போதும் ஆழமான தழும்பாகி, மிதந்து தெரிகின்றது.

3

இடுப்புவரை சுற்றியிருந்த சேலைத் தலைப்பை எடுத்து மார்பை மூடிக் குறுக்காகக் கட்டிக்கொண்டு புன்னகை பொலிகின்ற மூகத்தோடு வந்து கொண்டிருக்கிற சம்பனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கிட்டி.

சம்பனுக்கு உருண்டு திரண்ட தேகக்கட்டு. சிறிது குள்ளமான அவனைப் பெற்றபோது மிகுந்த சிரமம் அடைந்தாள் கிட்டி, நல்ல கனத்தோடு பிறந்தான் அவன். வயிற்றுள்ளிருந்த போதும் உருண்டு புரண்டு உதைத்து அவளை மூச்சிழக்க வைத்தவன் சம்பன்.

பச்சைச் சோளன் இலைகளிடையே கருகருவென்ற தோற்றத்தோடு வருகிற அவன், மிருகங்களையும், பறவைகளையும் விரட்டவென நீண்ட கயிற்றில் கோர்த்துக் கட்டியிருக்கின்ற வெற்றுத் தகரங்களை ஒலி யெழுப்புமாறு உலுப்பிக்கொண்டே, ‘ஞன ஞன டட மண டட்டடம்’ என்று சத்தமிட்டவனாய் காவற் கொட்டிலின் மிதிபலகையில் ஏறி விழுந்து, தாய் நின்ற இடத்திற்கு வந்தான். மூச்சுத்திணறத் திணற, மயில்களின் கதையைத் தாய்க்குச் சொல்லிய அவன், சிறிது எச்சரிக்கையான குரலிலே, ‘அப்புவுக்கு மட்டும் இதைச் சொல்ல வேணாம். பிறகு பட்டங்கட்டி மயிலுகளைச் சுட்டுச் சாக்காட்டி விடுவான்’ என்று கூறினான் சம்பன். தாய் புன்னகை யோடு உள்ளே போய் மகனுக்கு சுட்ட மரவள்ளிக் கிழங்கு கொண்டு வந்து கொடுத்தாள்.

இன்னும் பசித்தால் சோளம் பொத்தி அவிந்து வைத் திருக்கிறேன், அதையும் எடுத்தித் தின் என்று கூறிவாறு, மீண்டும் காவற்கொட்டில் அருகே போய் நின்றாள் கிட்டி. நேரத்தோடு வெளியே போன, ஐயனை இன்ன மும் காணாதது அவளுக்கு அதிசயமாயிருந்தது. ஐயன் ஒருபோதும் வெளியே இப்படித் தாமதிப்பதில்லை. அப்படியென்றாலும் பட்டங்கட்டியரோடு போனால் தான் தாமதம் ஏற்படும். இன்று அவன் பட்டங்கட்டிய ரோடு வெளியே போகவில்லை. சிலவேளை எங்காவது பொந்திலேயோ, உச்சிமரத்திலேயோ, கல் இடுக்கிலையோ தேன்கூட்டைக் கண்டுவிட்டாலோ அல்லது கொழுத்த உடும்பையோ, மானையோ வழியிலே போகையில் சந்தித்தாலோ ஐயன் அவற்றின் பின்னாலே போய் விடுவான்……. ஆயினும் அவற்றுக்கும் இவ்வளவு நேரத் திற்கு அவன் தாமதம் செய்யமாட்டானே!

காவற் கொட்டிலுக்கு அருகேயுள்ள நெடிய நாவல் மரம், இலைகளற்று ஒரு கிளையை மட்டும் ஆகாயத்தை நோக்கி விரலைச் சுட்டுகிறாற் போல நெடிதாய் உயர்த்தி சரிந்த வெய்யிலின் ஒளித்தெறிப்பால் காவற் கொட்டிலின் மேல் நிழல் விழுத்தியிருந்தது. இப்படி நிழல் விழுந்து, பொழுதுபோன நேரத்திற்கு அவன் சேனைக்குத் திரும்புவதில்லை. சூரியனும் காட்டு மரங் களிற்குள், கால்தடவி இறங்கி- ஆயத்தம் செய்து கொண்டிருந்தது.

கிளாயடிப் பக்கமாக மெலிதான குரல்கள் கேட்டன. கிட்டி ஆர்வத்தோடு பார்த்தாள். சுரைக் குடுவையொன்றைத் தூக்கியவாறு கண்ணாத்தை வைரனோடும், உம்மிணியோடும் வந்துகொண்டிருந்தாள். அவளைச் சுற்றிச்சுற்ழி கறுவலும், முண்டனும் குரைத்து அட்டகாச மிட்டுக்கொண்டு வந்தன.

குருவிகள் இரைச்சலிடத் தொடங்கிவிட்டன. ஹூய் ஹூய் என்ற மனிதக் குரல் மாடுகளை பட்டிக் குள் ஒதுக்கிக்கொண்டு, குருவிக் கல்லின் மனதிலே அந்திநேர வேலைகளைத் துரிதப்படுத்தி ஒலித்தன. “ம்ம்மாஆ” என்ற பேரொலியை எழுப்பிய பசுவின் தீனமான குரல், இந்த ஒலிகளோடு ஒட்டாது தனித்துக் கேட்டது.

கிட்டி விறுவிறுவென்று காவற் கொட்டிலின் பக்க மாகப் போனாள். பிறகு மெதுவாகக் காவற் கொட்டிலின் ஏணியில் காலை வைத்து மேலே ஏறத்தொடங்கினாள்.

மிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்த அந்த காவற் கொட்டிலில் ஏறிப் பார்த்தால் குருவிக்கல்லு தெளி வாகவே தெரியும். எல்லையிலுள்ள அடர்க்காடு, எதையும் கூறவோ, காட்டவோ மாட்டேன் என்ற உறுதி யோடு கரும்பச்சையால் தன்னை மூடி அசைவற்று உறைந்துபோய்க் கிடந்தது. முன்னாலுள்ள பிச்சன்

குளமும், அதனருகே அசைபோட்டுக் கிடக்கிற மாட்டுக் கூட்டமும் புள்ளிகளாய்ச் சிதறியிருந்தன. இதே திசை யால் பட்டி மாடுகளைச் சாய்த்துக்காட்டிவிட்டு அவளது பிள்ளைகள் இனித் திரும்பிவருவார்கள்.

கிட்டி பார்வையைத் திருப்பினாள். பெரும் புல்வெளியாய் நீண்டிருந்த மேய்ச்சல் தரையில் இடையிடையே பறட்டை மரங்கள் மாட்டுக் கூட்டங்கள் போல, நிலத்தோடு மண்டிப் புதைத்திருந்தன. மறுபுறத் திலே தென்னஞ் சோலை. கிட்டி, சிறிது உயர்ந்து விண்ணாக்கன் வாய்க்கால் பக்கமாகப் பார்த்தாள். சளசளத்துப் பரவி நிற்கும் அந்த நீளமான வாய்க்கால் தான், குருவிக்கல்லை ஏனைய பகுதிகளிலிருந்து தனியே பிரித்திருக்கிறது. பரவைக் கடலின் ஒரு பகுதியாக உள்ள அந்த வாய்க்காலைக் கடப்பதற்கு இரு பக்கத்திலும் புணைகள் கட்டியிருக்கும். நீண்ட மரங்களைக் கோதி இரு புறங்களிலும் சவள் பொருந்தியும் அந்தப் புணை களின் துணையோடுதான் வாய்க்காலைக் கடக்க முடியும். வாய்க்காலைத் தாண்டியே பட்டங்கட்டியரின் வீடும் உள்ளது.

கிட்டி, ஏமாற்றத்தோடும் இனத்தெரியாத எரிச்ச லோடும் குறுக்காகக் கட்டியிருந்த முந்தானைச் சீலையை அவிழ்த்து உதறினாள். பின்னர் இடுப்பிலேயே சேலையை இறக்கிக் கட்டியவளாய், காவற் கொட்டிலின் உறுதியான பிடிமானப் பகுதியிற் சாய்ந்தவாறு எதிரே பசுங்கடலாய் கதிரலைக்கின்ற சோளஞ்செடிகளை துறு துறுப்பாகப் பார்த்துக்கொண்டு, இம்முறை எவ்வளவு அவணம் சோளன் அடிக்கலாம் என்று யோசித்தபடியே நின்றபோதுதான் ஐயன் அவளைத் திருட்டுத்தனமாகச் சந்தித்தான். திரண்ட தோள்களும், சுருள் முடியும், சதைக்குள் புதைந்த கண்களும், வாட்டசாட்டமுமான தேகமுள்ள ஐயனைத் திடீரென்று கண்டதும், தன்னைச் சுதாரித்துக்கொண்டு திறந்திருந்த மார்பகங்களை முந்தானைச் சேலையால் அள்ளி மூடியவளாய், கோபம் தெறிக்க ”என்ன நீ காட்டுப் பூனையாட்டம்” என்று சீறினாள். அவன் அதிராமல், அரவமெதுவுமின்றி இப்படித் திடீரென்று தோன்றியது அவளைக் குழப்பத்திற்குள் ளாக்கிவிட்டது. ஆனால் அவளின் சீற்றத்தையே கருத்திற் கொள்ளாதவன் போல, வெகு சாவதானமாக புன்னகை மிதக்கிற முகத்தோடு ஐயன் சொன்னான்…….. “உன்னைத்தான் பார்க்க வந்தன். ஒருதருமில்லை. பெண்சாதியாக உன்னைத்தான் நான் எடுக்கப்போறன்” சொல்லி முடித்துவிட்டு அவளுடைய முகத்தையே ஊடுருவிப் பார்த்துக்கொண்டு நின்றான் ஐயன்.

‘கருகருவென்று என்ன அழகாக இருக்கிறாள். சின்ன மூக்கு. பெரிய கண்கள். கொழுப்பான மானைப்போல சதைப்பிடிப்பான தோற்றம். சேனை ஒன்றைக் கவனிக்க வும், எல்லா வேலைகளையும் செய்து சேனையின் விளைச்சலைக் கூட்டவும் வல்லமை உள்ள பொம்பிளை.’

அவளின் பெரிய பிளந்த உதடுகள் லேசாக நடுங்கு வதை அவதானித்த ஐயன், எட்டி அவனது கையைப் பற்றினான். மறுகணம் அவள் அவள் கையை உதறி விட்டு, என்னை விடு” என்றவளாகக் கீழே இறங்கி மறைந்துவிட்டாள்.

மறுநாள், அவள் சோளம் எடுத்துப் பருப்பாக்கிக் கொண்டிருக்கையில் ஐயனின் நினைவு அடிக்கடி வந்து கொண்டிருந்தது, அவளது அப்பன் சுள்ளியன், ஐயனைத் தான் புருஷனாக்கிக் கொள்ளுவதற்கு எதிர்ப்புச் சொல்ல மாட்டான் எனவே கிட்டி நினைத்திருந்தாள். ஐயனைப் பற்றி நல்ல பேச்சு அங்கே இருந்தது. அவன் சிறந்த வேட்டை யாளி, எந்தக் கரடுமுரடான காட்டையும் தனியாக நின்று மரங்களைத் தறித்து விழுத்தி அவற்றைக் கொளுத்தி எரிந்து அதனை சிறந்த விளைச்சல் தரக் கூடிய சேனை நிலமாக ஆக்கக்கூடிய வல்லமை உள்ளவன் அவன். அதோடு சேனைக்குள்ளேயே பூசணை, வாழை, சுரை ஆகியனவற்றை நட்டு நல்ல விளைச்சலை இப்போதும் கண்டு கொண்டிருப்பவன் அவன். ஆளும் நாம்பன் மாடு போல உறுதியாயிருக்கிறான்.

அன்று, நிழல்கள் கிழக்குப் பக்கமாக படுக்கத் தொடங்கிய போதே அவள், காவற் கொட்டிலிலேறி பெரிய கண்களால் அங்குமிங்குமாகத் தேடிக்கொண்டி ருந்தாள். அவன் வந்தான். அவள் அதே இடத்தில் அவனுக்காக வந்த போது அவளை ஏமாற்றாமல் மீண்டும் அவன் வந்தான். மறுநாளும் வந்தான். இப்படியே சில நாட்கள் வந்தான். பௌர்ணமி நாளன்று சுள்ளியன் பரபரத்துக் கொண்டு நின்றான். நிறைந்து பொங்கி வழிகின்ற கள்ளோடு முட்டிகள் வந்தன. வெட்டியன் பெரிய மானொன்றை நெருப்பில் வதக்கிக் கொண்டு நின்றான். சாமிப் பிட்ட விப்பதிலே மூன்று கிழவிகள் ஈடுபட்டிருந்தனர்.

எல்லாம் இப்படி அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டு இருக்கையில் சிலர் ஐயனை அவ்விடத்திற்கு அழைத்து வந்தனர். வெளியே பச்சைத் தென்னோலை யில் எல்லோருமாய் உட்கார்ந்திருக்க, சில பெண்கள் கிட்டியைக் குளிப்பாட்டிவிட்டு குடிசைக்குக் கொண்டு போய் விட்டனர்.

ஒரு வட்டிலில் சோறுகறியிட்டு அதைக் கொண்டு போய் அறையுள் பரப்பிவிட்டு வந்த ஐயைக் கிழவி ஆண்களுக்கு மத்தியிலே நின்ற ஐயனைப்போய் கையிலே பிடித்து இழுத்தவாறு கொட்டிலுக்குள் கொண்டு போய் விட்டுவந்து வெளிப்படலையை தென்னை நாரினால் இறுக்கிக் கட்டிவிட்டு ஆபாசமாக அவர்களை வாழ்த்திக்கொண்டு வெளியே வந்து நேரே கள்ளுக் கலையம் இருந்த இடத்திற்குச் சென்றாள். பின்னர் எங்கும் கூச்சலும் குரவைகளும் எழுந்தன. இவ்விதம் அன்று கிட்டியும் ஐயனும் புருசன் பெண்சாதி ஆகினர்.

4

தீப்பந்தத்தை ஐயன் காவற் கொட்டிலுக்கு அருகே உள்ள இரண்டு உரல்களுக்கு நடுவே செருகிக் கொண்டி ருந்தபோது, கறுவலும் முண்டனும் அவனைத் தாவிக் காலோடு அணைந்து மகிழ்ச்சிக்கறிகுறியாக ஊழை யிட்டபோது, கிட்டி திடுக்கிட்டு எழுந்து நித்திரை கலைந்து வெளியே வந்தாள்.

வெளியே இருள் அவ்விடம் முழுவதையும் மூடி மண்டிக்கிடந்தது. ஹூ…ஹூ…. என்று கிளாயடிப் பக்கமாக யாரோ கூவிய குரலில் பன்றியைக் கலைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சத்தத்தைக் கேட்ட கறுவலும் முண்டனும் அம்புகளாய்ச் சீறிச் சோளஞ் சேனையுள்ளே புகுந்து மறைந்தன அலுப்போடு கொட்டாவி விட்ட கிட்டி, முதுகில் அவிழ்ந்து வழிந்திருக்கின்ற தலைமயிரை வாரி உச்சிக் கொண்டைகட்டியவாறு. ”இவ்வளவு பொழுதும் எங்கை காடலைஞ்சு வந்திருக்கிறாய்.?” என்று தீப்பந்த ஒளியில் கருங்கல்லென ஒளிர்கிற தன்னையே பார்த்து நிற்கிற, ஐயனைப் பார்த்துக் கேட்டாள். ஐயன் வலக்கையில் வைத்திருக்கிற சுரைக்குடுவையை அவளுக்கு நேராக நீட்டி “இதைக் குடி. பிறகு சொல்லுனன்” என்றான். சொல்லியவாறு காவற்கொட்டிலுக்கு அருகாமையிலுள்ள பாலைக் குற்றியொன்றில் போய் அமர்ந்து கொண்டான். அவனிடமிருந்து கிட்டி வாங்கிய சுரைக் குடுகை நிறைய நுரை குமிளி தத்தளிக்கின்ற புதுக் கள் இருந்தது. புதுக் கள்ளின் மணம் லேசாக அவ்விடம் எங்கும் கமழ்ந்தது. அவள் அவனுக்குப் பக்கத்தில் குற்றிக்குக் கீழே குந்திய வாறு ஒரு மிடறு கள்ளை உறிஞ்சி விட்டு தலை நிமிர, அவன் தான் அன்று செய்த வேலைகளை விஸ்தாரமாக அவளுக்குக் கூறத் தொடங்கினான். காலையில் வெறுங் கையோடு போனமையினால் கொழுத்த உடும்பினை இழந்து போனமை பற்றிக் கூறிவிட்டு அதே எரிச்சலில் நின்ற தன்னிடம், நீலன் வந்து பட்டங்கட்டியர் அவசர மாக வரச் சொன்னதைக் குறிப்பிட்டபோது திடுக்கிட்ட குரலிலே கிட்டி கேட்டாள்…. “என்ன வியளம்?”.

மிகவும் கொழுத்த முற்றிய மரவள்ளிக்கிழங்கு போல உடல் திரண்ட அந்த உடும்பு கும்முனைச் செடிகளின் மேலே – தான் தவழ்ந்து சென்ற அரவம் கேட்டதும், செடிகளை மிதத்தி முதுகு நிமிர்ந்திருந்த கருங்கற்பாறை பயின் மேலே ஏறி அப்படியே நாவல் மரத்திற்கருகே உள்ள பற்றைச் செடிகளின் பசுமைக்குள் கரைந்து போனதன் பிறகு மிகுந்த ஆத்திரத்தோடு சிறிது தூரம் தள்ளி வந்து விண்ணாங்கு மரத்தடியிலே உட்கார்ந்திருந் தான் ஐயன். அவன் கையிலே மட்டும் அன்று வழமை யாகவே கொண்டு செல்கிற காட்டுக்கத்தி இருந் திருக்குமேயானால், அந்தக் காட்டுக்கத்தியை வீசி எறிந்தே அந்த உடும்பின் பின்னங்கால்களை ஊன மடையச் செய்து அதனைத் தோற்கடித்திருக்கலாம். பிடிவாதமான அந்தப் பிராணியினைக் கொல்வதற்கு ஓர் சிறந்த வேட்டைக்காரன் கையாளுகின்ற வழி அதுதான். கள்ளிற்கும், உடும்பு வறுவலுக்கும், சாமிப் பிட்டிற்கும் என்ன ருசியான இணைப்பு இருந்திருக்கும்!

எரிச்சலோடு தன் முன்னே நின்ற வெள்ளெருக்கம் செடியை ஒரு வெறுப்புக்குரிய பகைவனைப் போல ஆத்திரத்தோடு பிடுங்கி வீசிவிட்டு இவையெல்லாவற்றை யும் வேடிக்கை பார்த்து ரசிப்பது போலக் கல்லடியில் தலையாட்டிக் கொண்டிருந்த ஓணானைக் கெட்ட வார்த்தைகளால் வைது கொண்டு எட்டி உதைத்தான் ஐயன். அந்த வேளையிலேதான் அவனைத் தேடிக் கொண்டு வெற்றிலைச் சாறு கடவாய் வழியாக ஒழுக ஒழுக திக்கு வாயானான நீலன் அவ்விடத்திற்கு வந்தான். ஆடொன்று தண்ணீர் குடித்து முடியும் பொழுதளவிற்கு இழுத்து திக்கியும் ஐயனை, பட்டங்கட்டி சின்னையர் அவசரமாக அழைத்து வரச்சொன்ன சேதியைச் சொல்லி முடித்தான். அந்த வார்த்தைகளைக் கேட்டதும், கவண் கல்லைக் கண்ட சேனைக் குருவிகள் போல ஏனைய கவலைகளெல்லாம் ஐயனின் மனதை விட்டு அந்தக் கணமே பறந்து விட்டன.

புணையிலேறியது, விரைந்தோடிப் போய் பட்டங் கட்டிச் சின்னையாவின் வீட்டுப் படியேறியது எல்லாமே குருவி வேகத்திலே கழிந்தது. ஊமத்தங்கூகை போல எதையுமே இருவரும் பேசிக்கொள்ளாது பட்டங்கட்டி சின்னையா வீட்டுப் படியில் ஏறி மரியாதையோடு “ஐயா” என்று ஐயன் கூப்பிட்டபோது முதிய குரல் சிலிர்த்துக் கொண்டே கேட்டது… “ஐயன் வந்திட்டான். எடே ஐயா, கதவைத் திறந்து கொண்டு உள்ளுக்குள் வாடா.”

சர்வாங்கமும் மரியாதை வடிவமிட கதவினைத் திறந்து கொண்டு ஐயன் உள்ளே போனதும் அவன் கண்களிலே மூன்று புதியவர்கள் எதிர்ப்பட்டார்கள். கதிரைகளில் அமர்ந்திருந்த மூவரும் வெள்ளை வெளே ரென்ற ஆடை – அணிந்திருந்தனர். பட்டங்கட்டி சின்னையா பொது பொதுத்த தேகத்தைச் சால்வையால் மூடிப் போர்த்திருந்தார். சாய்வு நாற்காலியில் வெகு ஆறுதலாக உட்கார்ந்திருந்த பட்டங்கட்டி, தான் இருந்த சாய்வு நாற்காலிக்கு அருகேயுள்ள சீமேந்துக் குந்தி னைக் காட்டி, “எடே ஐயா, அப்பிடி இரடா… நீலா நீ போய் அளுங்கனிட்டை நான் சொன்னேனென்று இறால் வாங்கி வாடா…ஓடு” என்றதும் நீலன் அங்கிருந்து விரைந்து போக ஐயன் மட்டும் அதே மரியாதையோடு அவர் காட்டிய இடத்தில் நின்றவாறு சொல்லுங்க ஐயா” என்றான். மீண்டும் பட்டங்கட்டி வற்புறுத்தவே, அந்தச் சீமேந்துத் தரையில் சம்மாளமிட்டு உட்கார்ந்து கொண்டான் ஐயா.

வந்திருந்தவர்கள் பட்டணத்தைச் சேர்ந்தவர்கள். குருவிக்கல்லுப் பக்கத்தில் உற்பத்தியாகின்ற சோளத் தானியம், தேன் ஆகியவற்றினை வாங்கிச் செல்வதற்காக வந்திருப்பவர்கள். சொந்தமாக லொறி வைத்திருக்கிறார் கள். இவர்களிடம் வாங்கும் பொருட்களுக்கு நேரடி யாகவே அவர்கள் பணங் கொடுக்கச் சம்மதிப் பார்களென்று பட்டங்கட்டி சின்னையா சொன்ன போது மட்டும், ஐயன் தலையைச் சொறிந்தவாறு அசடு வழிய அவனை ஏறிட்டான்.

“என்னடா ஐயா மனதில் உள்ளத்தைச் சொல்லு?.”

ஐயன் முணுமுணுத்தான்.

காசை வைத்து என்ன செய்யலாம்? வழக்கப் படியே இருக்கட்டும்.” அவன் சொன்னதைக் கேட்டு பட்டங்கட்டி சின்னையா உரக்கச் சிரித்தார். வெற்றிலைக்காவி ஏறிய பற்கள் தெரியச் குலுங்கிச் சிரித்தவர், தானே தன்னை அடக்கிக்கொண்டு சடைத்த தனது நரை மீசையைத் தடவியவாறு, “ஐயன் தீ சொன்னது சரிதான்டா. காசை வைச்சு நீங்களெல்லாம் என்னடா செய்ய முடியும்? உங்கடை பொருளுக்குரிய காசை நான் வாங்கிக் கொண்டு உங்களுக்குத் தேவை யானதை எடுத்துத் தருவன்”. என்று அவனுக்குப் பதில் சொன்னவர் தனக்கு எதிரே உட்கார்ந்திருந்த சிவப்பு நிறமான மழுமழுவென்று சவரம் செய்த மத்தியதர வயதானவரைப் பார்த்துக் கூறத் தொடங்கினார் : இவங்களுக்குப் பணத்தினுடைய அருமை தெரியாது. வழமையாகவே இவங்களொட்டை சோளன், தேன் வாங்கிற வியாபாரிகள் அரிசி, புகையிலை, வெற்றிலை ஆகியவற்றைக் கொடுத்து விட்டுத் தங்களுக்குத் தேவை யானதை வாங்கிக் கொள்ளுவார்கள். எப்பவாவது ஒரு முறை உடுபிடவை கேட்டாங்கள்”

வந்திருந்தவர்களுன் முகம் வியப்புணர்வால் மாறுதல் கண்டது.

சுப்பிரமணியம் ஐயா சொன்னதுக்காக நான் இதைச் செய்யிறன். ஐயனுக்கு மீறி எதுவும் நடக்காது. ஐயன், இந்த ஐயாமாருக்குத் தேவையானதை நீதான் கவனிக்க வேணும்… என்னடா?”

பட்டங்கட்டி சின்னையா வீட்டிலே நிகழ்ந்தவற்றை ஐயன் கூறக்கேட்ட கிட்டி “அது நல்லதுதான்” என்று அவனிடம் சம்மதம் கூறினாள்.

5

அந்தப் பரவைக் கடலைப் போர்த்திருந்த இருள் வலையைப் பிய்த்துக் கொண்டு துள்ளியெழுகின்ற ஜந்துக்களைப் போல, கணவாய் லாம்புகள் குபுக் குபுக் கென்று சுடர் கிளப்பி வெளிச்சம் வீசிக் கொண்டிருந்தன.

மார்கழி மாதம் வந்து விட்டால் கடல் நிறைய மட்டு இறால் வந்துவிடும். மட்டு இறால் ஒவ்வொன்றும் பிஞ்சுச் சோளம் பொத்தியளவிற்குப் பெரிதாயிருக்கும். குருவிக்கல்லிலிருந்து அரைவாசி ஆண்கள் இரவில் மட்டு இறால் பிடிக்க வந்துவிடுவார்கள். இறால் பிடிக்கப் போனால் சாராயம் நன்றாகக் குடிக்கலாம். இறாலை மொத்தமாக வாங்குகின்ற வியாபாரி, சாராயப் போத்தல் களையே அவர்களுக்கு முதலில் காண்பிப்பது வழக்கம். சாராயப் போத்தல்களைக் கண்டுவிட்டால், அந்தக் கடலில் ஆளைப் புதைக்கின்ற சுரியும், கிடுகிடுக்க வைக்கின்ற குளிரும் இறால் பிடிகாரருக்கு முற்றாகவே நிலையில் இருந்து நழுவி எங்கோ போய் மறைந்து விடுகின்றது…

முக்கோணமான மூடியுள்ள பாத்திரத்தின் வயிற்றுப் புறத்திலே, உருளை வடிவிலுள்ள தகரக்குளாய் பொருத்தியிருக்கும். அந்தக் குழாய்க்குள்ளாக வெளியே தெரிகின்ற திரியினைக் கொளுத்தலாம், பாத்திரம் நிறைய மண்ணெண்ணை நிரம்பியிருக்கும். பாத்திரத்தின் மிகுதிப் புறத்திலே சிறிய பிடி பொருத்தியிருக்கும். இந்த அமைப்புப் பொருந்தியதுதான் கணவாய் லாம்பு. கடலில் வாழும் கணவாய் மீனைப் பிடிப்பதற்கு தயாரிக்கப்பட்ட இக் கணவாய் லாம்பு, இப்போது இறால் பிடிப்பதற்கு மிகவும் பொருத்தமுள்ளதாகி விட்டது. நாலைந்து இறால் சேர்ந்தால் ஒரு இறாத் தலுக்கு நிறை வந்துவிடும். கணவாய் லாம்பு சிணுங்கிக் கொண்டிருந்தால் இறால் பிடிப்பது வெகு கஷ்டம்.

ஐயன் தனக்குப் பின்னாலே கணவாய் லாம்பைப் பிடித்துக் கொண்டிருந்த உதுரனை அச்சுறுத்தினான். அந்தக் குளிரான காற்றும், சுரியின் சீதளமும் இருந்தும் கூட உதுரனுக்கு கண்களினுள் நித்திரை பொங்கிக் கொண்டிருந்தது. நின்ற இடத்திலே வரும் கண்ணயர்வை ஐயனின் அதட்டலே விரட்டிக் கொண்டிருந் தது. தன்னுடைய பெரிய உதட்டைக் கடித்துக் கொண்டே பொசுபொசுத்த சேற்றில் இருந்த கால்களை இடம் மாற்றினான் உதுரன். இன்றைக்கு நிறைய இறால் பிடிபட்டமையால், ஐயனின் மனம் மிகவும் புழுக மடைந்திருந்தது. அல்லாவிட்டால் சிறிது கண்ணயர்ந் தாற் கூட உதுரனுக்கு பிடரிப்புறம் கிண்ணென்று அறை விழுந்திருக்கும்.

இன்றைக்கு இறால் பிடித்த ஐயன் புறப்பட்ட போது உதுரன் அவரோடு கூடப் போகப் பிரியப்பட வில்லை. கிட்டிதான் அவனை தகப்பனோடு அனுப்பி வைத்தாள். அதற்குக் காரணமும் இருந்தது. உதுரன் முன் கோபி. கரடி போலக் கத்துவான். பிராண்டுவான். சேனையிலே இப்போது நல்ல காவல் வேண்டும். காவற் கொட்டில் காவலோடு மட்டும் பழுத்த சோளங் குலைகளைக் காப்பாற்ற முடியாது. சிறிய குடிசை போன்ற வடிவத்திலே வாடி கட்டி, நாய்களோடு காவலுக்குக் காத்திருக்க வேண்டும். கண்ணோடு கண் மூடவே முடியாது. கிட்டியின் எல்லாப் பிள்ளைகளும் காவலுக்கு இருப்பார்கள். உதுரன் இவர்களோடு இருந் தால் ஏதாவது வாக்குவாதம் வந்துவிடும் என்பதால் கிட்டி அவனைத் தகப்பனோடு இறால் பிடிப்பதற்கு அனுப்பிவிட்டாள். இறால் கடலுக்குப் போனால் உதுரனால் நல்ல உழைப்பு வருமென்பதைத் தெரிந்து வைத்திருக்கின்ற ஐயன் கிட்டி கூறியதற்குச் சம்மதித்தான்.

இங்கே பிடிக்கப்படுகின்ற இறால்களில் பெரும் பாலானவை வியாபாரிகளால் உடனுடனே கொள்வனவு செய்யப்பட்டு ஐஸினாற் பதப்படுத்தப்பட்டு வெளி யிடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். சில வேளைகளில் இறால் பிடிகாரரின் தேவைக்குக் கூட இறால் கிடைக்காமற் போய்விடுகின்றது… இந்நாட் களும் அப்படித்தான். ‘மார்கழி வந்துவிட்டால் மட்டு இறாலும் வந்துவிடும்’ என்பது ஊர்ப்பழமொழி. இம் மாதங்களில் இறாலோடு சாராயப் போத்தல்களும் அப் பகுதியிலே தாராளமாகவே அகப்படும்…

பரவைக் கடலினை நடுவாகப் பிரித்து ஓடுகிற கற்பாதையிலே கலகலப்புச் சத்தம் கேட்டுக்கொண் டிருக்கிறது. யாராவது திருட்டுத்தனமாகத் தேங்காய் பறித்து அவசர அவசரமாகச் சந்தைக்குக் கொண்டு போய்க் கொண்டிருப்பார்கள். அல்லது கட்டாக்காலி மாடுகளைச் சிரமப்பட்டு கட்டியிழுத்து விடிவதற்கு முன் இறைச்சிக்கடையில் விற்பதற்கு முயற்சிகள் அவ சரப்பட்டுக் கொண்டிருக்கும்.

கள்ளச் சின்னான் இருள் மங்கிக் கொண்டிருந்த பின்னேரம் போல மசிந்து சேனாதியோடு கள்ளுக் கொட்டிலிற் கதைத்துக் கொண்டிருந்தது ஐயனின் மன திலே ஒரு நெருப்புப் பொறியாகி நினைவிலே ஒளிர்ந்தது. சேனாதி எப்படி மரியாதையீனப்பட்டாலும் திருந்துகின்றவனாக இல்லையே என நினைத்து மனதினுள் வேதனை கலந்த அதிசயங்கொண்டான் ஐயன். யாருடைய மாட்டையோத் திருடிக் கொண்டுவந்து இறைச்சியடித்து நெருப்பினில் வதக்கிப் பதனிட்டு மானி றைச்சியென்று கூறி விற்றபோது பட்டங்கட்டியாரிடம் அவன் முறையாகப் பிடிபட்டான்.

பட்டங்கட்டியரிடம் பிடிபடும் எவராயினும் அவர் அவனுக்குத் தோலுரிக்காமல் விடமாட்டார். பலமுறை அடிபட்டும் திருந்தாது சேனாதி இனிமேற் பிடிபட்டால் புதுவிதமான தண்டனை கொடுக்க வேண்டுமெனக் கூறிக்கொண்டிருந்த பட்டங்கட்டியருக்குச் சேனாதியைக் கண்டதும் ஆத்திரம் பொருமிக்கொண்டு வந்தது. தனது எரிச்சல் முழுவதையும் வெளிக்காட்டும் விதத்தில் அட்ட காசமாகச் சிரித்துக்கொண்டார். பின்னர் சேனாதி இறைச்சியடித்த மாட்டுத்தோல், கொம்பு ஆகியவற்றை எடுத்து வரும்படி கூறி, மாட்டுத்தோலை அவனுக்கு மேலாகச் சுற்றிக்கட்டி, இரண்டு கொம்புகளையும் கயிற்றிலே பிணைத்துக் கழுத்தில் மாலையாக அணி வித்து” நான் மாட்டுக்கள்ளன்… நான் மாட்டுக்கள்ளன்…” என்று அந்தக் கிராமம் முழுவதும் சேனாதியைச் சுற்றி வரச் செய்தார் பட்டங்கட்டியர்,

அந்தச் சம்பவம் நடந்ததன் பிறகு இரவோடு இர வாக அங்கிருந்து தலைமறைவாகி விட்ட சேனாதியால் இனிமேல் எவ்விதமான கவலையுமில்லை என்று அந்தப் பகுதியில் நிம்மதி பரவியிருக்கிற வேளையில்……..

காலிலே நெருடிய கடல் ஊரியை, கையால் அப் புறப்படுத்திய ஐயன் பரவைக் கடலின் மையப்பகுதியிற் திட்டுத்திட்டாகத் தோன்றிய ஒளிப் புள்ளிகளினைக் கண்டபோது தனது யூகமானது சரியானதே என்று உறுதிகொண்டவனாக உதிரனிடம் உதுரா நீ இறாலைப் பிடி. இப்ப நான் வந்திடுவன்…” என்று கூறியபடியே கடலினுள் மெதுவாக உழக்கிக்கொண்டு வெளிச்சப் புள்ளிகளை நோக்கி நடந்தான்…….

எங்கோ கடற்குருவிகள் அமைதியைக் கீறி ஒலி எழுப்பின. க்ளக் க்ளக்… கடல் நீரினுள் சத்தம் அரும் பிச் சலசலத்து அழிந்துகொண்டிருந்தது. முகத்திலே மோதிய குளிர் காற்று ஐயனுக்கு இதமாயிருந்தது. இப்பொழுது ஒரு சுருட்டைப் பற்றினால் நெஞ்சுக்குக் காரமாயிருக்கும் என்று எண்ணிக்கொண்டான்.

அடிபட்டுச் செயலற்றுப்போன காட்டுப் பன்றியைப் போல, எதிரே கண் பார்வைக்கு அவனது சுற்றுப்புறம் இருளினுள் மௌனித்து வடிவமிட்டு உறக்கத்திற் கிடந்தது. அரவங் கேட்டதும் இருளினுள் இறுகி நின்ற காட்சிகள் லேசாகவே பாதையில் விலகி இழுபறிப்படு கின்ற ஓசை கேட்டது. நன்றாகக் கூர்ந்து பார்த்தவாறே பாதையிலே காலடி எடுத்து வைத்த ஐயன் மிகவும் அதிசயமுற்றான். மூன்று பிணைக்கப்பட்ட மாடுகள் அனாதரவாக நின்றன. அதற்குச் சற்றுப் பின்னே சிறிய வெளிச்சத்தோடு லோறி ஒன்று நின்றது. இரண்டொரு கணவாய் லாம்புகள் மெலிதான ஒளி சிந்தி, அங்கு நின்றோரை இலேசாக இனங்காட்டின. பட்டங்கட்டி சின்னையா வீட்டிலே ஏற்கனவே ஐயன் சந்தித்த வெள்ளை உடுப்பணிந்த மூவரோடு கரியன், வண்டன், செவ்வான் ஆகியோர் இனந்தெரிந்தனர். ஏதோ சொல்ல ஐயனின் வாய் உன்னியபோது, கரியனின் முரட்டுக் குரல் ஓங்கிக் கேட்டது; “ஐயா, சேனாதி பிறகும் திருகுதாளந்தொடங்கி விட்டான் பார்த்தியா? கள்ளமாடு கொண்டு வந்திருக்கிறான்…. லொறி வெளிச்சத்தைக் கண்ட உடனே இந்த இடத்திலையும் நில்லாமல் ஓடி விட்டான்…”

ஐயன் மனமகிழ்ச்சி கொண்டான்; தன் யூகம் மெய்ப் பட்டது அவனிற்கு வார்த்தைகளில் பூரிப்பளித்தது.

“கடலுக்குள்ளே நின்றபோதே நான் நினைச்சன். சேனாதிதான் மாடு கொண்டு போறான் என்று. நல்லது, இப்பிடியொரு லொறி இந்தப் பகுதியிலை இரவு பக லாகத் திரியுமாயிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்…”

ஐயன் சொல்லி முடித்தபோது, லொறியில் வந்த வர்களில் இளைஞனானவன், “நீங்க ஒத்துமையாய் எங்களோடை இருந்தது என்றால் நாங்க இந்தப்பக்கம் எந்நேரமும் வரி வந்து போவம்தானே….” என்று வித்தி யாசமான உச்சரிப்பில் கூறியபடி, சிகரெட் ஒன்றை ஐயனுக்கு நீட்டினான். இதுவரையிலே தானே சுருட்டு கிற சுருட்டையே புகைக்கிற ஐயன் சிகரெட்டைப் பெற்றுக் கொள்வதற்குக் கூச்சப்பட்டபோது, அந்த இளைஞன், “பரவாயில்லை. பத்திப்பாருங்க” என்று ஐயனின் கையிலே சிகரெட்டைக் கொடுத்தான்.

அண்ண டே சின்னி வாறான் அண்ண டே சிரிச்சு வாறான் பூசணிக்காய் பழத்தைப் போல புரையிலுள்ள பருப்புப் போல அண்ண டே சின்னி வாறான்

அண்ண டே சிரிச்சு வாறான். பின்னிக் கிடந்த பூசணிக் கொடிகள் பெரிய பெரிய காய்களை ஈன்றிருந்தன. பிள்ளைகளின் தலையைத் தடவுவது போல, ஒவ்வொரு பூசணியையும் வருடியபடி மகிழ்ச்சி பொங்குகிற குரலிலே பாடிக்கொண்டிருந்தான் ஐயன். அலைந்து பறக்கும் பரட்டைத் தலைமயிரைப் படிய கைகளால் அடக்கியவனாக, ஓங்கிய குரலிலே பாடிக்கொண்டிருந்தவன், தலையிலே சுமையோடு அழகாக நடந்துவரும் கிட்டியைக் கண்டதும் குரலைக் குறைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான். தலையிலே சுமையோடு நின்ற அவள், ஐயனைப் பார்த்து, “என்ன நீ, நெடும்பரண் மாதிரி நிற்கிறாய்? இந்தச் சுமையில் ஒரு கை பிடி” என்றாள், ஐயன், அவளின் சுமையை இறக் கினான். “மூண்டு அவுணம் பருப்பு இருக்குது…”

மார்புச் சீலையை விசிறி, வேர்வையைத் துடைத்த வாறே, சோளன் பருப்புகளை ஒரு கையினால் அள்ளிப் பார்த்தாள் கிட்டி. சிவப்பும், பழுப்பும், இளஞ்சிவப்பு மாய் வண்ண வண்ணமான சோளன் பருப்புகள்! எவ்வளவு இரவுகள் கண் விழித்து, உடல் நொந்து காவல் காத்துப் பெற்றுக் கொண்ட பொருள் இது! வியர் வையும், இரத்தமும் சொரிந்திட்ட அந்தப் பாசனத்திலே அறுவடையான இச் சோளன் மணிகள் அவளுக்கு எல்லையில்லாத களைப்பினை அளித்தன. அந்த மக்களின் உழைப்பே தானிய மணிகளாய் அம் மண்ணிலே அறுவடையாயிருப்பதை அவர்களின் புன்னகை வெளிச்சமிட்டுக் கொண்டிருந்தது.

7

சோளன் முறித்தபின்னர் அங்கே அதனை அடித்து முதன் முதலிலே பருப்பாக்குகிற பெருமை கிட்டிக்குத் தான் உரியது. கிட்டத்தட்ட ஆளளவு உயரத்திலே புரை கட்டித்தான் பருப்படிப்பார்கள். புரையிலே மேற்புறம் வரிச்சுப்பரவி, சிறிது கீழே நெட்டிகட்டியிருக்கும். புரையின் அடிப்பாகத்திலே, சோளன் பருப்பு குவியும். புரையிலே சோளன் போட்டு பத்து நாட்களில் பிறகு தான் பருப்பை எடுக்கலாம்.

சோளன் முறிக்கிற காலம் எவ்வளவு சந்தோஷகர மானது! ஒரு ஆண்பிள்ளை பெறுவதைப் போல, நல்ல இறைச்சியைத் தின்று கள்ளையும் மாந்தி நிலைமறந்து கணவனோடு சுகித்திருப்பதைப் போல, பெண்பிள்ளை களுக்கு நல்ல புருஷனைக் கொண்டாட்டங்களொடு, கட்டிக் கொடுப்பதைப் போல. போட்ட பயிரெல்லாம் பசுமையாய் செழித்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் செழித்துத் சிலிர்த்திருக்கிறதுக்கு நிகரான சந்தோஷ மாகவே இதுவுமிருக்கும்!

இப்பொழுது ஏறக்குறைய எல்லோருமே சோளன் முறித்துவிட்டார்கள். காவற் கொட்டில்களும், நெடும் பரண்களும் மந்தைகளற்ற மேய்ப்பன் போல, தமக் கெதிரே வெறும் சேனை நிலமாய், நெட்டிகள் துருத்தி நிற்கிற நிலமாகக் கிடக்கிற விரிந்த பரப்பினுள் தனித்து நின்றன. சிலரின் நிலங்களில் சுரையும், பூசணியும் பாம்புக் கூட்டங்களாய் பின்னி நிலத்தினை மூடி கொடிபடர்த்தியி ருந்தன.

கிட்டியின் நிலத்தினுள் பூசணிகள் இம்முறை நன்கு சிரித்திருந்தன. கொஞ்ச நாளைக்கு கிளிகளையும், பன்றி களையும் விரட்டுகின்ற ஹூ ஹூ இசை இங்கே கேட்க மாட்டாது. பயிற்றம் பருப்பையும், வற்றகைப் பழங் களையும் கொத்தித் திருடவரும் கிளிக் கூட்டங்களுக்கு கவுண் வீசிக் கல்லெறியவேண்டும். வேறெதற்கும் கிளிகள் அஞ்சுவதில்லை.

கிட்டியின் கவனமெல்லாம் இம்முறை செய்யும் சடங் கிலேயே லயித்திருந்தது. சோளன் முறித்த பின் அதைச் சாமிக்குப் படைக்க வேண்டும். சோளன் மாவை, தேங் காய்ப் பாலோடு குழைத்து அப்பம் தட்டவேண்டும். சோளன் புக்கை செய்யவேண்டும். பெரிய வாழைக் குலை ஒன்றை மரத்தில் முற்றவிட்டிருக்கிறாள் அவள். நல்ல கறிவகைகளோடு இந்தச் சடங்கைச் செய்தால் தான் சாமி, இந்தச் சேனைக்கு மேலும் மேலும் நல்ல விளைவினைக் கொடுப்பார்… அல்லது சிறு நெருஞ்சியும் வெள்ளெருக்கும் இவ்விடமெல்லாம் படரும், பன்றியும், அணிலும், கிளியும் இரவும் பகலுமாய் எல்லாவற்றையும் துவம்சம் செய்து நாசமாக்கும். இந்தச் சடங்கினைச் சிறப்பாக முடித்தால், கண்ணாத்தைக்கும் மாப்பிள்ளை கிடைத்துவிடுவான். வரப்போகிற கண்ணாத்தையின் புருஷனுக்காக இப்போதே சேனை நிலம் பார்த்து விட்டான் ஐயன் …… நல்ல செழித்த கன்னிலம்.

தனது ஆசைகளையெல்லாம் அவ்விடத்திலிருந்து ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் கிட்டி. கண்களில் நிறைந்த எதிர்காலக் கனவுகளோடு கிட்டி சொல்லிக் கொண்டிருக்கையில் ஐயனுக்கு பெருமையும், மகிழ்வும் நெஞ்சினுள்ளே பிரவகித்துப் பொங்கிற்று. தன் பெண்சாதி எவ்வளவு அற்புதமானவள். இவளைத் தான் பற்றியதால் எவ்வளவு பெருமை பெற்றுவிட்டேன் என நெஞ்சு நெகிழ்ந்தான் அவன்.

கிட்டியின் வடிவழகில் லயிக்காதவர் அங்கு யாரு மில்லை. சேனைக் காவலிலும், சோளஞ் செய்கையிலும் எல்லோருக்கும் முன்னுதாரணமான அவளின் பளீரிடு கின்ற கறுப்பு நிறமும், பளீச்சென்ற புன்னகையும், வெற்றிலை போட்டுச் சிவந்த உதடுகளும், கொழுத்த மானைப் போன்ற சதைப்பிடிப்பும் இதோ அன்று கண்ட அதே வடிவில் இன்னும் அதே வண்ணமாக….

அவனது குரலினிலே தழும்புகின்ற மோக மயக் கத்தின் அந்தரங்கத்தை அவள் அறிவாள். அவனது மௌனத்தின் அர்த்தம் எப்படியொரு விஸ்வரூப மெய்தும் என்பதை அறியாதவளா அவள்?

கிட்டி தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்தாள். ” சடங்கு முடிஞ்சதும் கண்ணாத்தைக்குச் சோறு கொடுக்க வேணும். அதைப் பற்றி நான் சொல்ல நீ எதை யோசித்துக் கொண்டிருக்கிறாய்…”

கிட்டியின் குரலில், சிறிது அதட்டலும் கலந்திருந்தது. பெரிய கண்களின் கண்டிப்பு ஐயனை என்ன வோ செய்தது. அவளின் கண்டிப்பு கரடிப் பிடியைப் போல. ஆரை நீ நினைச்சு வைச்சிருக்கிறாய்?”

கிட்டி ஒரு கணம் யோசித்தாள். கண்ணாத்தையின் உருவம் கண்களிலே வந்து நின்றது. கருமையான முகத்திலே, இன்னமும் கறுப்பாக அடர்ந்து தெரிகின்ற புருவங்கள். சிறிது பிளந்த, நாயுருவிப் பழத்தின் செந்நிறச் சொண்டுகள். சுறுசுறுப்பான மான் குட்டி. அவளிற்கு ஏற்றவனாக பொம்மன், பெரியான் என்ற இளைஞர்களிருவரையும் அவள் தனது மனதினுள்ளே தேர்ந்து வைத்திருக்கின்றாள். இவர்களில் ஒருவனைத் தான் கண்ணாத்தைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல உழைப்பாளிகள், முறுக்கேறிய பன்றிக் குட்டி கள் போல சுறு சுறுப்பானவர்கள், இவர்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்துச் சடங்கு வைக்கலாம்.

கண்ணாத்தையை அடைய எவருக்கும் பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்று நினைத்தவளாக தனது எண்ணத்தினை ஐயனிடம் சொன்னாள். ஐயன் சிறிது நேரத்திற்கு மௌனமாயிருந்து விட்டுத் தலையைச் சொறிந்து கொண்டான். மனதிலே அவனுக்குத் தெரிந்த ஒவ்வொருவரும் தெரிவாகிக் கொள்ள, ஆர்வத்தோடு ”பெரியான் தான் சரி”” என்று பதில் சொன்னான் ஐயன். பெரியான் நல்ல உழைப்பாளி, இறால் பிடியில் அதிக வல்லமையுள்ளவன்; சாராயம் குடித்தாலும் அசையாமல் நின்று வேலை செய்வான்.

சோளன் முறித்த பின்னர் அங்கு தனியானதொரு மகிழ்ச்சி எல்லோரது முகத்திலும் பொலிந்திருந்தது. நெட்டிகள் துருத்தி, கொடிகளே மேனிபுரட்டி, அங்கு மங்குமாய் தாராளமாக இடம் பிடித்து காய்களோடும், பூக்கள் பிஞ்சுகளோடும் நிம்மதியாகப் படுத்திருக்கின்ற நாய்குட்டிகள் போல சேனை நிலங்களிலே செறிந்து கிடந்தன. பெரிய பூசணிப் பூக்களின் மலர்ச்சி இன்னொரு நிறைந்த விளைவிற்குக் கட்டியஞ் சொல்லி நின்றன. நன்றாக இரைவிழுங்கி உறங்கிக் கிடக்கின்ற வெங்கிணாந்திப் பாம்புகளை கல்லுக்கட்டி நீண்டு அசைகின்ற புடலங்காய்கள் நினைவூட்டின. சுரைக்கா யொன்றினைக் காம்பை உடைத்து முறித்த கிட்டி, தன் பின்னே நின்ற கண்ணாத்தை கைகளிலே அதனைக் கொடுத்தாள். அந்தச் சுரைக்காயில் நல்லதொரு குடுவை செய்ய வேண்டுமென்று எப்போதோ நினைத் திருந்த அவள், அந்தச் சுரைக்குடுவை கண்ணாத்தை தேனெடுக்க மிகவும் தேவையான ஏனம் என அடிக்கடி மனதிலே நினைத்துக் கொண்டிருந்து, ஒவ்வொரு தருணமும் அதனை மிகவும் கவனமாகக் கவனித்து வந்து இன்றே பிடுங்குகிறாள். அங்கு வாழுகின்ற பெண்ணிற்கு மிக அத்தியாவசியமான பொருள் இது, ஆண் மகனுக்குக் காட்டுக்கத்தியைப் போல.

எல்லோரும் கிட்டத்தட்ட அங்கே சோளன் அடித்துப் பருப்பாக்கிப் புரையிலே போட்டு விட்டார் கள். சோளன் பத்து நாட்களுக்குப் புரையிலே கிடந் தாகவே வேண்டும். பின்னர் தான் மரைக்காலால் அளந்து எடுக்கலாம்.

எல்லாமாக ஐந்து ஏக்கர் நிலத்திலேயும் இருபது அவுணங்கள் அளவான சோளன் தானியம் ஐயனுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விளைவின் ஆணிவேர் கிட்டியே என அவன் அறிவான். புரையிலிருந்து ஒன்றி ரண்டு பருப்பை உள்ளங்கையிலே வைத்து நசுக்கிய வாறு மனதினுள்ளே கிட்டி எண்ணிக்கொண்டாள்; ‘நல்ல வீரியமான, கொழுத்த சோளன் இம்முறை சாமி தந்திருக்கிறார். அடேயப்பா என்ன மசமசப்பாய், பால் கொண்டிருக்குது. சாதுக்கு நல்ல சடங்கு வைக்க வேணும்!’

கிட்டியின் மனதிலே இம்முறை நிறையக் கனவு களிருப்பதனை ஐயனுக்கு அவள் அடிக்கடி சொல்லி வைத்திருக்கிறாள். அந்தக் கனவுகளை யெல்லாம் நனவாக்குகிற மனத்தைரியமும், திடமும் அவளுக்கிருக் கிறது. அவளுடைய முக்கியமான மனத்துடிப்பு இது தான்; எல்லாவற்றையும் விட கண்ணாத்தைக்கு இம் முறை ‘சோறு கொடுக்க வேண்டும்’. அதற்கு முன்னர் சோளன் குறித்த சடங்கையும் இவர் களின் இறந்துவிட்ட முன்னோர்களுக்கான உத்தியாக்களுக்கு வந்த சடங்கை யும் வெகு தடபுடலாகச் செய்து முடித்துவிட வேண்டும். இவற்றைச் சரியாகவும், செம்மையாகவும் செய்து முடித்தால்தான் சேனையும் முடியப் புட்டுப் பானையும் இறக்குவாங்க” என்ற பழமொழியை தாங்கள் பொய்யாக் கும் வாய்ப்பினையும் வலிமையையும் பெறமுடியும் என்று தனது அனுபவத்திலே தெரிந்து வைத்திருக்கின்றாள்

சடங்கை குஞ்சு குருமானிலிருந்து, கண்மாங்கி உடல் தளர்ந்த கிழங்கள் வரை எல்லோரும் தான் எதிர் பார்த்திருந்தார்கள், கண்ணாத்தை தனது எல்லாச் சகோதரங்களையும் கூப்பிட்டு தென்னோலை இழுத் தாள். இதுதான் அதற்கு நேரம். சின்னச் சின்னக் குடிசைகளெல்லாம் இப்போது புதிய கிடுகுகளால் முக் காடிட்டு தம்மைப் புதுப்பித்துக் கொண்டிருந்தன. மண்ணும் சாணமும் குழைத்து குந்துகளும், நிலமும் பூசி மெழுகப்பட்டு, கோழிக்கால்களிலும், மனிதக் கைகளிலும் சுண்ணாம்பு பூசி, சுவர்களிலே அவை சித்திரங்களாய் அழுத்தப்பட்டு அழகு கூறின. திண்ணையோரத்து சுவரிலே மான் கொம்பும், கொம்பை யொட்டி மயிலிறகும் காட்டின் வனப்பை மெல்லிய சித்திரமாக்கினாற் போலப் பொருத்தப்பட்டிருந்தன. கரும்பச்சை , சிவப்பு, இளஞ் சிவப்போடு குழைந்த மஞ்சள் வர்ணச் சோளங் குலைகள், வளை ஓரமாக நிரையிட்டு ஒரே வரிசையில் தொங்கி இக்குடிசை யின் சேனை வளத்தினையும், உழைப்புத் திறனையும் உணர்த்தி நின்றன, இனியதொரு கவிதைபோல. சோளஞ் சேனையில் ஒவ்வொருவரும் கொஞ்சக் கொஞ்சம் கஞ்சாச் செடியும் நாட்டுவது வழிவழி வந்த வழக்கம். கஞ்சாவை உருவி சோளன் மாவோடு பிசைந்து அப்பம் தட்டி வைக்காத எந்தச் சடங்கும் சுத்தமானதில்லை.

சடங்கு வெகு கோலாகலமாகத் தொடங்கி விட்டது. தாராளமான கீற்றுக் கொட்டகையின் கீழே மொழு மொழுப்பான உருண்டைக் கல்லாக இருந்து சாமி, அங்குள்ள எல்லாப் பூக்களையும் அலங்காரமாகக் கொண்டிருந்தார். யாரோ, வெள்ளை வெளேரென்ற பெருங் கோடைப் பூக்களையும் செவ்வலரிப் புஷ்பக் கொத்துக்களையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்துப் பின்னணியிலே தொங்கவிட்டிருந்தமை மிகவும் அழகா யிருந்தது. எத்தனை வட்டில்கள் நிறைந்த அப்பங்கள், சோளம் புக்கை சுகந்த மணத்தினை அவ்விடமெல்லாம் வாரியிறைத்துக் கொண்டிருந்தது. கதலி, இரதை வாழைக்குலைகள் ஒவ்வொன்றும் சேனை நிலங்களின் வீரியமான வெளியீடுகள் நாங்களே என்று நிதர்சனப் படுத்திக் கொண்டிருந்தன. சற்று உடல் வளைந்த தென்னை மரத்தடியில் கட்டப்பட்டிருந்த இரண்டு ஆட்டுக் கிடாய்கள் மொச்சை மணந்தன. நாய்களெல் லாம் ஒன்றையொன்று பார்த்து உறுமுவதையும், சீறுவது மாயிருக்க சிறு பையன்கள் அவற்றை அதட்டி ஒழுங் கிற்கு உட்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஐயன் இன்றைக்கு அங்கே மிக முக்கியமானவன். அவன் ஒரு குட்டிச் சாமி போலவே தோற்றங்கொடுத்தான். இடுப்பிலே வேப்பிலையை மாலைபோலப் புனைந்து சுற்றிக் கட்டியிருந்தான். அவன் தான் சாமிக்கு சடங்கை ஒப்பேற்றுபவன். அதிகம் பேசாமலே, கட்டளை யிட்டுக் கொண்டிருக்கிற அவன் முன்னாலே எல்லோரும் மிகவும் பயபக்தியோடு நின்று அவற்றை ஒப்பேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

பனை வடலியருகே கண்களைக் கோணிக்கொண்டு நின்ற சேனாதியோடு எவரும் எதையுமே பேசவில்லை. என்ன குற்றங்கள் செய்திருந்தாலும் சடங்கின் போது எவருமே கலந்து கொள்ளலாம்; யாருமே தடைபோட மாட்டார்கள். பல விரோதங்கள் தீர்வதும், குடும்பங்கள் உருவாவதும் அந்த நாளின் களிப்பான பொழுதுகளின் போதுதான்!

கிட்டியின் கண்கள் இன்றைக்கு அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன, அவள் கண்கள் பெரியானையும் கண்ணாத்தையையுமே அடிக்கடி கவனித்துக்கொள் கின்றன. பெரியான் பார்வைக்கு நல்லாகவே இருக் கிறான். கறுத்துத் திரண்ட தோள்கள். நெஞ்சிலே வயதுக்கு மீறிப் புசுபுசுவென்று அடர்ந்திருக்கின்ற ரோமச் சிலிர்ப்பு. ஒடுங்கிய முகத்திலே எந்நேரமுமே சிரித் திருக்கிற பிரமையைத் தோற்றுவிக்கின்ற முகப்பொலிவு. கண்ணாத்தை தன்பாட்டிற்கு பன்புல் ஒன்றைப் பிய்த்துக் கொண்டு உதுரனுக்கு எதையோ சொல்லிக் கொண்டிருக் கிறாள். நாளிலும் பொழுதிலுமாய் கண்ணாத்தையின் உடலிலே பரிமளிக்கின்ற யௌவன மலர்ச்சியால், தாய் அடையும் பெருமிதம் கொஞ்ச நஞ்சமல்ல. அவ்விடத் திற்கு அவளே மயில்; அவளே மான்; அவளின் யௌவனக் கவர்ச்சியினால் மனதிலுள் ளே கனவுகளை வளர்க்காத இளைஞன் அங்கே யார்?

சடங்கு முடிந்து உணவினை ஒவ்வொருவரும் தனியாக எடுத்துக்கொண்டு செல்கையில் கிட்டியின் கண்கள் பெரியானைத் தேடின. அந்தத் தேடலின் முடிவில் அவளது பெரிய கண்கள் தரித்தபோது திடுக் காட்டமே விளைத்தது. யாரும் கவனிக்க வில்லை என்ற நினைப்பின் துணிவோடு பெரியான், மூலை மேம்படி யிலே பொன்னாளோடு சரஸம் செய்து கொண்டிருந்த தைக் கண்ட கிட்டி அடைந்த அதிர்ச்சியினுக்கு ஒரு அளவேயில்லை. கிட்டி அந்தக் கணமே மனமுடைந்து திகைத்துச் செயலற்ற நிலையினை அடைந்தாள்.

வீட்டுக்குப் போன அவள் நிம்மதியின்றி ஒரு மூலை யிலே உட்கார்ந்து பலவாறாக யோசித்தாள். அவளைக் கவனியாத ஐயன் மூக்கு முட்டிய வெறியிலே ஏதோ புசத்திக் கொண்டிருந்தபோது, கிட்டி தாங்கமுடியாத சினத்தோடு எழுந்து வெளியே போனாள். பசுமை செறிந்த சோளஞ் செடிகளில்லாத, சேனை நிலத்தைப் போலவே அவளது மனம் வெறுமையுற்றிருந்தது. சேனை நிலத்திலே தனித்து நிற்கிற காவற் கொட்டிலுக்குக்கூட உதுரன் தென்னோலைகளால் அலங்காரம் செய்திருப் பதனை அவளது கண்கள் கண்டன. இந்தச் சடங்கு முடிந்ததும் கண்ணாத்தைக்குச் சோறு கொடுக்கின்ற வைபவத்தினை மிகமிகச் சிறப்பாக நடத்துவதற்கு அவள் கொண்டிருந்த கனவுகள் எத்தனை! காவற் கொட்டிலின் கீழே முண்டன் உடும்புத் தோலொன்றோடு மல்லிட்டுக் கொண்டிருந்தது. பெரியான், பொன்னா ளோடு சரஸம் செய்கிற பெரியான்! கிட்டியின் மனம் ஆறுதலின்றி வேதனையுற்று சேனைப் புற்களைப் போல எரிந்து புகைந்து கொண்டிருந்தது……..

8

காட்டின் ஒற்றையடிப் பாதையினை விட்டு விலகி, மருக்காலை மரக் கூட்டப் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்த ஐயனின் மனதிலே, கிட்டியே இப்போது நிறைந்திருந்தாள். வழமையாகவே கலகலப்பான சுபாவ முள்ளவளான அவள், சடங்கு காலத்திலே சுறுசுறுப் பான மைனா குருவி போல ஓடியாடித் திரிவாள் . புதுப் புதுக் கறிவகைகள் செய்வாள். நுரை தளும்புகிற கள்ளினை அவனுக்கு மொண்டு கொடுத்துவிட்டு இறைச்சி வறுவலை அவனுக்குத் திகட்டுமளவிற்கு ஊட்டுவாள், அவள். இக்காலமே அங்கு மனோகர மானது. புதுத் தளிர்களை உடலெங்கும் சுமந்து குலுங்கு கின்ற கொடியினைப் போல மனமும் உடலும் களிப் பிலும், மோகமையலிலும் நிறைய, அவ்விடத்தே சொர்க்க லோகமொன்று விரிந்து போயிருக்கும். சேனாதிகூட அடைக்கோழி போல அங்கேயே தரித்து நல்ல மனிதனாய், தாழ்ந்த பார்வையோடு, மரியாதையைப் பாவனை செய்கிற புன்னகையோடு உலவிவருவான். ஐயன், சடங்கு முடிந்து, குடிசையின் பின்னே தலை யெல்லாம் காய்கள் சுமந்திருக்கின்ற பலாமரத்தின் கீழேயிருந்த போது, கிட்டி அவ்விடம் வந்தாள். ஐயனுக்கு கொஞ்சம் கஞ்சா மயக்கமிருந்தது. அவள் மிதந்து வருகிறாற் போலவும், இடுப்புக்கு மேலே வெறு மையான மேனியோடு மோக அழைப்போடு வருகிறாற் போலவும், இன்னும் இன்னும் அழைக்கிற உடல் வாகினைத் தனக்கு சலியாது ஒப்படைக்க விழைகிற அழைப்பேயாகவும் தோற்றமொன்று நிழல் விரித்தது. வட்டிலோடு கொண்டு வந்த அப்பத்தை, அவனது அருகாக வைத்துவிட்டு நிமிர்ந்த கிட்டியின் கையினை குரல் தளதளக்கிற வாஞ்சையோடு பற்றினான் ஐயன். கிட்டி திரும்பி அவனைப் பார்த்துவிட்டு கையை உதறிய வளாய் விறுக்கென்று அங்கிருந்து போய்விட்டாள், தன்னுடைய மகிழ்ச்சியினை எல்லாம் வேரோடு அவள் பறித்துக் செல்வது போல மனமுணர்ந்த ஐயன், மிகுந்த விரக்தியோடு அவ்விடத்திலிருந்து எழுந்து, பப்பாக் குழல் ஒன்றைக் கையில் எடுத்து சடக்மடக் கென்று முறித்தவாறு கிட்டியின் பெயரோடு தூஷணை அடைமொழியொன்றைச் சேர்த்துத் திட்டியவனாய் அங்கிருந்து காட்டை நோக்கி நடந்தான்.

கிட்டியின் போக்கு என்றுமே இப்படி இருந்ததில்லை என்பதினாலேயே இவ்வளவிற்கு விசனமடை கின்றான் ஐயன். இவள் மனதிலே என்ன வேதனை வந்ததினால் இப்படியாக என்னை மனம் நோகவைத்துச் சென்று விட்டாள்?’

கும்முனைச் செடிகளுக்கூடே முறுகிக் கிடக்கின்ற கிளாக் கொடிகள் இவ்வளவு தொகையாகப் படர்ந்திருக் கின்றதனை இப்போதே முதன் முறையாகத் தன் எதிரே கண்ட ஐயன் திடீரென்று உற்சாகம் வரப்பெற்றான். இந்த முறை கண்ணாத்தைக்கு எப்படியும் சோறு கொடுத்தே ஆகவேண்டும். அவளுக்கு ஏற்றவனையும் தெரிவு செய்தாகிவிட்டது. கண்ணாத்தைக்காக எத்தனை பேர் ஏங்கி நிற்கிறார்கள்; பெரியான் அதிர்ஷ்டக்காரனே என மனதிலுள்ளே சொல்லியவனாய், அவனுக்காகப் பார்த்து வைத்துள்ள சேனை நிலத்தையும், அதில் அமையவுள்ள காவற் கொட்டிலையும் கட்டுவதற்கு மிகச் சிறந்த, பலமான தேவையாக இக் கிளாக்கொடியே இருக்கும் என அவன் மனதினுள்ளே பேருவகை கொண்டான். இப்போது காட்டுக் கத்தி இருந்தால் எல்லாக் கிளாக் கொடிகளையுமே வெட்டிச் சரித்துவிடலாம். இருந்தாலும் என்ன இதனை அடையாளப்படுத்திவிட்டுச் சென்றால் யாருமே இதனைத் தொட மாட்டார்கள்; ஐயன் கொடிக்கு அருகாகச் சென்று அதனைப் பிடித்துப் பார்த்து, அதன் வைரிப்பினிலே மனம் திருப்தியடைந்தான்.

இனி நான்கைந்து மாதங்களுக்கு நிரந்தரமான தொழில் அங்கு ஆணுக்கோ பெண்ணுக்கோ இருக்க மாட்டாது. பெண்களுக்கு நல்ல ஓய்வு வாய்க்கிற காலங் களிலே பன்புற்களைப் பிடுங்கி உலர்த்திப் பாய் இளைப் பார்கள். ஏதாவது சிறு தானியங்களையோ, காய்கறிச் செடிகளையோ சேனை நிலத்தில் புதிது புதிதாக நடுவார் கள். ஒதுங்குப் புறத்தில் மரவள்ளி நாட்டிக் காப்பார் கள். ஆவணி மாதம் வந்துவிட்டால் அங்குள்ள எல்லோரது மதிைலே புது வேகம் பிரவாகம் எடுக்கத் தொடங்கி விடும். குடும்பம் குடும்பமாகக் காடு வெட்ட ஆரம்பிக்கிறார்கள். வண்ணாத்திப் பூச்சிகளாக பரட்டைக் காடுகளிலே அங்குமிங்குமாய்ச் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். பரட்டைக் காடுகளிலே சிலவேளை களிற்தான் விசப்பூச்சிகள் வெளிப்படையாகவே ஊர்ந்து திரியும். பெரிய மரங்கள் அப்படியே பரட்டைக் காடு களின் இடையிடையே வெட்டப்படாமல் நாகப்பாம்பு போலத் தலை நிமிர்த்தித் தனித்து நிற்கும். ஆவணி மாதத் தினில் அழிந்த காட்டிற்கு நெருப்புக் கொடுத்து எரியூட்டி விட்டால் இரண்டொரு நாட்கள் அணையா மலே தீ தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டி ருக்கும். காடு வெந்து தணிந்தபோது பொடியான சாம்பல் இள நிலத்தை அணைந்து இறுகிக் கொள்ளும். அவ் வேளையிலே லேசான மழை துமித்து அந்தச் சாம்பற் பசளை கலந்த நிலத்திலே கலந்து விடுமாயின் அதைப்போல மகிழ்ச்சிகரமென்ன. ஒரு மழைத் துமியின் பிறகு எவ்வித தயக்கமுமின்றி விதைகளை நாட்டலாம். கன்னி நிலத்தினில் சோளம் விதைகளை நாட்டுவதற்கு பயிற்சிமிக்க ஒரு லாவகம் வேண்டும்.

புதிய நிலத்திலே சோளன் பயிர்கள் பச்சைப் பசே லென்ற கதிர்களை சீறிக் கொண்டெழுவதைப் பார்ப்பதே அங்குள்ளவர்களுக்கு மிகப் பரவசமான தொரு அனுபவமாகவும் தொடர்ந்து வந்திருக்கிறது. ஆண்டு தோறுமே இந்தச் சம்பவம் நிகழுகின்ற ஒன்றுதான். ஆனாலும் புதிது புதிதாக இது நிகழ்ந்து அறிமுகமாவது போல இங்குள்ளோரை இவை மனதினை நிறைவிக்கின்ற ஒரு நற்காரியமாக உள்ளது.

மண் நிலத்தை பீறிட்டு எழுகின்ற முதல் இரு மடல் களின் பசுமையான நிறத்தைப் பார்த்தால் அந்தப் பயிரின் ஆரோக்கியத்தை அங்குள்ள எவராலுமே கூறி விடமுடியும். ஒரு மாத காலத்திற்கு குறிக்காவல் என்ற பேருக்குள்ளாகி இந்தச் சிறு பயிர் காவலற்ற சிறு குழந்தையாகவே இவர்களாற் பராமரிக்கப்பட்டு நாற்பது நாட்களின் பிறகு வருகின்ற குடலைப் பருவக் காலத்தில் அங்குள்ள எல்லோரதும் கண்மூடிடாக் காவலுக்கு உரிமை பெற்றுவிடுகின்றது. சோளஞ் செடியில் பாளை வந்துவிட்டால் வாடி போட்டு காவலும் தொடங்கிவிடும். பிறகு அந்தச் சேனை எங்குமே உறக்கமென்பதே தொடர்பில்லாத ஒன்றாகிவிடும்….

கிளாக் கொடியினை தன் பலம் முழுவதையும் பிரயோகித்து இழுத்து முறித்துவிட்டு, தன் மேல் உதிர்ந்த முசுறுகளை மெதுவாகத் தட்டிக் கீழே வீழ்த்தினான் ஐயன். இப்போது அவனது கவனமும், சிந்தனையும் புதிதாகதான் வெட்டவுள்ள சேனை நிலத்தின் பரட்டைக் காடுகளிலேயே லயித்திருந்தது. எண்ணற்ற ரகசியங் களின் உறைவிடமான அந்த அடர்காட்டின் நடுவே ஒன்றிய சிந்தனையோடு நின்ற அவனது பலமான தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத கிளாக்கொடி தன் அவயவங்களை இழந்து சிதைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த செய்பகக் குருவி திடீரென்று அடைத்த குரலிற் கரைந்தவாறு அங்கிருந்து விறுக் கென்று பறந்து சென்றது.

9

சம்பன் உருண்டு திரண்ட தனது உடலால் அந்தக் குளத்தினுள்ளே துளாவிக் கும்மாளித்துக் கொண்டிருந் தான். குள்ள உருவமுடைய அவன் நன்றாக நீந்து வான். குளத்தினுள் அதிக நேரம் சுழியோடிச் சென்று தாமரைப் பூக்களையும், அல்லி மலர்களையும் பிடுங்கி வந்து கரையிலே நிற்கிற சிறுவர்களுக்கு மிகத் தாராள மாக அவன் பங்கிட்டுக் கொடுப்பான். இன்று தனியாக எருமைக்கன்று ஒன்றினைப் போல அவன் குளத்தினுள் அமுங்கிக் கிடந்தான். பத்து வயதான சம்பன், இந்தப் பிச்சன் குளத்திலே தனிமையிலே அச்சமின்றி நீந்துவ தனை, குளத்திலிருந்து சிறிது தள்ளியுள்ள முதிர்ந்த பாலை மரத்தின் கீழே நின்று புதினம் போலப் பார்த்தவா றிருந்தான் குண சிங்கா.

குளத்துக்கு அருகாக பட்டிமாடுகள் அசை போட்டவாறு கிடந்தன. குளத்தினுள்ளே தாமரையும், செவ்வல்லிகளும் நிறையப் பூத்திருந்தன. தாமரைக் கிழங்குகளைத் தோண்டி எடுத்த இடத்திலே மட்டும் வெற்றிடமொன்று நீர்ப்பரப்பினைக் காட்டி நின்றது. தர்மதாவும், சுப்பிரமணியமும், குணசிங்காவும் இன்றைக் குத்தான் பணத்தையும் கொண்டு பட்டம்கட்டி சின்னையாவிடம் வந்திருக்கிறார்கள். இப்போது சோளனுக்கு வெளியிடங்களிலே நல்ல விற்பனை வசதி கிடைத்திட வாய்ப்புகளிருக்கின்றன. அதோடு இந்த மக்களிடம் கலப்படமற்ற சுத்தமான தானியத்தினை மலிவாகவே கொள்வனவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. பட்டங்கட்டி சின்னையாவை, அவர்களுக்கு கொழும்பிலிருந்து இப் பகுதிக்கு வந்து மீன் கொள்வனவு செய்கிற வியாபாரி யான பேதுருப்பிள்ளை தான் அறிமுகம் செய்திருந்தார்.

பட்டங்கட்டி சின்னையாவையும், ஐயனையும் சந்தித்த முதல் தரத்திலேயே அவர்களின் மேல் குணசிங்காவிற்கும் ஏனையோருக்கும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

குணசிங்காவிற்கு இப்போது வயது இருபத்தொன்று, அவன் கண்டியிலேயுள்ள ரஜவத்தையில் பிறந்தவன். சிவப்பு நிறமான, எவரையும் வசீகரிக்கக்கூடிய தோற்றமுள்ள அவனது நேர்மையான போக்கினை நன்றாக அவதானித்து மனதினுள்ளே குணசிங்காவைப் பற்றி நல்லபிப்பிராயத்தைத் தோற்றுவித்துக் கொண்ட விமல தர்மா என்ற பிரபல வியாபாரி தனது பெரிய விற்பனை நிறுவனத்திலே அவனுக்குப் பிரதான பொறுப்புகளைக் கொடுத்து வைத்திருக்கின்றார். அவருக்குப் பல வியாபார நிறுவனங்கள் நாடெங்குமுள்ளன. விலை குறைவான பகுதியிலேயிருந்து பொருட்களைக் கொள் முதல் செய்து விற்பதற்கு வசதியாக பல லொறிகளை அவர் சொந்தங்கொண்டிருந்தார். இப்படிக் கொள்வனவு செய்யப் போகின்ற இடங்களிற்கு விமலதர்மா மிக நம்பிக்கையோடு குணாசிங்காவை அனுப்பி வைப்பார். பணமும் அவனிடமேயிருக்கும். கண்டியிலும், கொழும்பு வியாபாரப் பகுதிகளிலும் சரளமாகவும், இதய சுத்தியாகவும் அவன் தமிழர்களோடு பழகிக் கொண்ட தால் தெளிவாகத் தமிழிலே பேசிக் கொள்ளும் இயல் பினையும் உடையவனாகி விட்டான். இன்றைக்கு பட்டங்கட்டியர் சின்னையா வீட்டிற்கு வந்தபோது அவர்கள் மூவருக்கும் சிறப்பான விருந்து போடப் பட்டது. நல்ல பன்றி இறைச்சிக்கறி. பன்றி இறைச்சி யிலேயே வறுவலும் செய்து, பன்றிக் கருக்கலையும் வைத்திருந்தார் பட்டங்கட்டியார். பெரிய இறால்களைப் பொலித்து, தனித்தனியாக வெங்காயம் கருக்கிச் சேர்ந் திருந்தது. போதாக் குறைக்கு இரண்டு சாராயப் போத்தல் கள். குணசிங்கா சாராயம் குடிப்பதில்லை என்று வெட்கத்தோடு சொன்ன போது, அவனை மிகுந்த அதியத்தோடு உலகிலேயே இப்போதுதான் சாராயம் குடியாத ஒருவனை எதிர்கொள்வது போன்ற பாவனை யில் பார்த்து விட்டுப் பட்டங்கட்டி பெருமிதமாகச் சொன்னார்!

“உங்களினுடைய வயதிலை எவ்வளவு காரியம் செய்யவேணும் தெரியுமா? நான் உங்களினுடைய வய திலை இருக்கிறபோது மணியகாரனுக்கும், உடையாருக் கும் பின்னாலேயே திரிந்திருக்கிறன்: நானில்லாமல் அவங்களாலை ஒன்றுமே செய்யமுடியாது. உடையார் தவசீலர் என்னை கிடாய் சின்னையன் என்று பட்சமாகக் கூப்பிடுவார். கிடாய் என்னமாதிரியானதென்று உங்க ளுக்குத் தெரியுந்தானே… (திடீரென்று இறந்த காலத்திலே கால்தரித்து நிகழ்காலத்திற்குத் திரும்பியமையினால் சின்னையாவுக்குள்ளிருந்து அவரையறியாமலே பெரு மூச்சுச் சீறிற்று.) அதெல்லாம் இனித் திரும்பி வரவா போகுது?” என்று கூறி முடித்தவர் கதையிலிருந்து தடம் புரண்டு “எடே, நீலா” என்று சத்தம் வைத்தார். வாய்க் குள் திக்கித்திக்கி ஏதோ முணுமுணுத்தவாறு அவ்விடத் திற்கு வந்த நீலனைப் பார்த்து, “எடே நீலா, கடவாயில் வெத்திலையைத் துடைத்துவிட்டு ஐயாவுக்குக் கட்டித் தயிருக்குள்ளை கொஞ்சம் தேனும் விட்டுக் கொண் டோடி வாடா” என்று அதே குரலிலே கட்டளையிட்டார் பட்டங்கட்டியர்.

குணசிங்கா இப்படியான கட்டித்தயிரை இதுவரை சாப்பிட்டதில்லை. சுத்தமான வெண் தயிர், தயிரின் வெண் நிறத்தினை, செந்தேன் கண்ணாடியினைப் போல, கவர்ந்து மூடித் தளதளத்தது. சின்னக் கரண்டியினால் தயிரையும், தேனையும் குழப்பிக் கலக்கி ருசித்து ருசித்து குணசிங்கா அருந்திக் கொண்டிருந்தபோது, பொரியல் களொடு சாராயத்தினை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந் தனர் மற்றவர்கள். சாப்பிட்டு முடிந்தபோது, பட்டங் கட்டியர் எல்லோருக்கும் சிறிது கண்ணயர ஒழுங்குகள் செய்யும்படி நீலனுக்குக் கட்டளையிட்டபோது குணசிங்காதானே முன்வந்து கொஞ்ச நேரம் இப்பகுதி யினை நடந்து சென்று பார்த்து விட்டு வருவதாகக் கூறி இப்போது இங்கே வந்து நிற்கிறான்.

– சம்பன் இன்னமும் நீராடி முடியவில்லை . பாலை மரத்தின் கீழே நின்று பார்த்தால் பிச்சன் குளம் நன்றாகவே தெரியும். குளத்தினுள்ளே நின்று பார்க் கின்ற எவருக்கும் பாலைமரத்தின் கீழே நிற்பவர்களைத் தெரியமாட்டாது. இப்போதும் அப்படித்தான். திடீரென்று சம்பனின் குரல் உற்சாகத்தோடு கூவியது;

“அக்கை, வா…மாடுகளை விட்டிட்டு வந்து தோய்…” குணசிங்காவின் பார்வை, ஒரு கையிலே சுரைக் குடுவையோடும், மறு கையிலே நீண்ட விண்ணாங்குத் தடியோடும் நின்ற கண்ணாத்தையின் மேலே விழுந்தது. பார்வைக்கு இனிமையானவளாய், வசீகரத்தோடு இளமையின் கம்பீரமாக மதர்த்து நின்றாள் அவள். சுருண்ட முடி. வாரப்படாது அலைந்து கொண்டிருந்தது. உறுதியாகத் திரண்ட கால்கள் தெரியத்தக்கதாகப் பாவாடையை முழங்கால்வரை இழுத்துச் செருகியிருந் தாள், பெரிய கண்கள் படபடக்க, பளீரென்று சிரித்த வாறு சுரைக்குடுவையையும், விண்ணாங்குத் தடியையும் குளத்தருகேயுள்ள சிறுகல்லில் சார்த்தி வைத்தாள் கண்ணாத்தை. பின்னர் வெகு ஆறுதலாகக் குளத்துக்கு முதுகு காட்டியவளாய் மேற்சட்டையைக் கழற்ற ஆரம் பித்தாள்…

குணசிங்காவிற்குத் திடீரென்று நரம்புகள் சிலிர்த்தன. உடம்பு முழுவதும் நடுங்குகிற உணர்வு. தொண்டைக்குள் என்னவோ செய்தது. என்ன செய்வதென்று புலப் படாதவனாய் அடித்து வைத்த சிலையாகி அவ்விடத் திலேயே நின்றான், அவளிலே விழுந்த பார்வையினைக் கழற்ற முடியாமலே.

கண்ணாத்தை இடைவரை வெறுமையாக நின்றாள். மேற்சட்டையைக் கல்லில் எறிந்து விட்டு, தோகையாக முழுகிலே வழிந்துகிடக்கின்ற தலைமயிரை இரு கைகளை யும் பின்புறமாக வைத்து அள்ளியெடுத்து உச்சிக் கொண்டையிட்டுக் கொண்டிருந்தாள் அவள். மினுமினுப் பான அவளது கறுப்பான தேகத்திலே இளமார்பகங்கள், இரு பியர்ஸ் கனிகளென திமிறி உயர்ந்து நின்றன. உச்சிக் கொண்டையை முடிந்ததும், தொப்புளடியி லிருந்த பருவொன்றினை நகத்தினால் சுரண்டிவிட்டு, பாவாடையை அவிழ்த்து, மார்பங்களினை மூடிக்குறுக் காகக் கட்டிவிட்டு கிறுகிறுவென்று குளத்தினுள்ளே இறங்கி நடந்து, குமுக்கென்று நீரினுள் மூழ்கி எழுந்தாள் கண்ணாத்தை.

இன்னமும் சுய நினைவு வரவில்லை குணசிங்கா வுக்கு. வெகு ஆறுதலாக, சுற்றஞ் சூழலைப்பற்றி அக் கறைப்படாத அப்பாவித்தனத்தோடு தன் இளமையின் அந்தரங்கத்தை அவனுக்குக் காட்டி, ஒரு தாமரை மலரெனவே குளத்தில் நீராடுகிற அவள், குணசிங்காவின் இளமனதிலே பொறியெனவே தனது நினைவினை அழுத்தலாகப் பதித்துவிட்டாள்….

10

பட்டங்கட்டி சின்னையா மகிழ்ச்சி பிடிபடாமல் அங்கு மிங்குமாக உலாவிக் கொண்டிருந்தார். குருவிக்கல்லன் முழுச் சோளனையும் நியாயமான விலைக்கு வாங்குவதற்கு வந்திருந்தவர்கள் சம்மதித்து பணமும் கணக்கிடப் பட்டுவிட்டது. அந்தக் கணக்கெல்லாம் அவரிடமே யுள்ளது. இந்தக் கருமம் வெற்றியானது ஐயனாலேதான் என்பதை நன்கு உணர்ந்தமையினால் அவனது கையிலே இரண்டு முழுப் போத்தல் சாராயத்தினை நேற்றுப் பின்னேரம் அவர் கொடுத்தபோது பூசணிப்பூவாய் அவனது முகம் மலர்வுற்றுப் பிரகாசித்ததை அவர் கண்ணுற்றார். இனி சோளனை அளந்து முட்டை கட்ட வேண்டியது தான். பட்டங்கட்டி சின்னையாவின் கணக்குப்படி கிட்டத்தட்ட நூறு அவுணம் அளவிலான சோளன் தானியத்தினை இதுவரையிலும் ஐயன் சேகரித்துவிட்டான்.

கிட்டத்தட்ட இப்போதைய விலைக்கு இருபதிலி ருந்து முப்பதாயிரம் ரூபா வரையிலும் பணம் கிடைக்கக் கூடும். பேதுருப்பிள்ளை , குணசிங்கா பகுதியினரை அறிமுகபடுத்திய யோதே, “வியாபாரமென்பதல் நாண யத்தையும், நறுக்கையும் அப்படியே கைப்பிடிப்பவர்கள். நல்ல மனிதர்கள். இவர்களைக் கையுக்குள்ளை வைத் தருத்தால் நீ லட்சம் லட்சமாய் உழைக்கலாம். ஆனால் நேர்மை தப்பி நடவாதே…” என்று கூறியிருந்தார். அது இப்போழுதுதான் அர்த்தம் பெற்ற உண்மையாய் பட்டங்கட்டிக்குப் புலப்படுகின்றது. பின்னரும் ஒரு நாள் பேதுருப்பிள்ளை பட்டங்கட்டி சின்னையாவைக் கண்டபோது எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு, ”வியா பாரி யாருக்கு நேர்மையில்லாமலிருந்தாலும் பரவா யில்லை. ஆனால் தன்னோடை தொடர்புள்ள மற்ற வியாபாரியோடை முழு நேர்மையாக இருக்க வேணும். அப்பதான் வியாபாரமும் செழிப்படையும்…. நான் இன்றைக்கொரு பணக்காரனாயிருக்க சர்வேஸ்வரன் வழிதந்ததுக்கும் அதுதான் காரணம், என்ன, நான் சொல்லுறது விளங்கிச்சுதா பட்டங்கட்டி?…” என்ற பொழுது, பொதுபொதுத்த தனது தேகத்தினைக் குறுக்கி வெகு பவ்வியமாகவே, அப்படியே” என்று பதில் கூறினார் பட்டங்கட்டி சின்னையா.

பட்டங்கட்டி சின்னையாவின் தகப்பன் செல்லன் நல்ல கமக்காரனாயிருந்தவன். சிறிய கிராமப்பகுதி களுக்கு வருகின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு. வேட்டைக்கு உதவி செய்வது, காய்கறி கொடுப்பது, தேனெடுத்துக் கொடுப்பது அவர்களின் நலன்களைக் கவனிப்பது ஆகியனவற்றை அந்தக் கிராமத்திலே செல்லனே மேற்கொண்டு வந்தால் எந்த அதிகாரி வந்தாலும் செல்லன் அங்கே கூப்பிடப்படுவான்.

ஒரு மந்தார நாளன்று செல்லனின் குடிசையின் முன்னே சத்தம் கேளாமல் வந்து நின்ற ஜீப் வண்டி யொன்று, பலத்த சத்தத்தோடு கோர்ண்ணலியை எழுப் பிற்று. சத்தத்தைக் கேட்டதும் பிள்ளைகளெல்லாம் பயந்து ஒடுங்கி மஞ்சமுன்னாப் பற்றைகளுக்குள்ளே ஒளிந்துவிட்டார்கள். ஒருவாறாக தன்னைச் சுதாரித்துக் கொண்டு செல்லன் வெளியே வந்தபோது முதலிலே உடையாரையே கண்டான். உடையாரின் பின்னாலே செம்பட்டை நிறத்தலை மயிரோடு உயர்ந்த தோற்ற முள்ள வெள்ளை மனிதனும், காற்சட்டை, சர்ட் போட்ட வேறு இருவரும் நின்றனர். ஏதோ கசுபுசு என்று அவர்கள் விளங்காத மொழியிலே பேசிக் கொண் டிருக்க. உடையார் செல்லனைப் பார்த்து அடங்கிய குரலிலே “டே, செல்லா வந்திருக்கிறது ஆரென்டு உனக்குத் தெரியுமோ? மணியகாரனும், ஏசண்டுத் துரையும் தானடா… உன்னட்டைத்தானடா வந்திருக் கனை…” என்றார். செல்லனுக்கு எதுவுமே விளங்க வில்லை. உடலெல்லாம் பதறி நடுங்கியது. உடையாரை விட மேலும் பதுக்கமான குரலிலே, ”ஐயா, ஏசண்டுத் துரை ஆர்?” என்று கேட்க, உடையார் அவனுக்கே விளங்கும் விதத்தினில் ஏஜண்டுத்துரையை அடை யாளங் காட்டினார். பின்னர் அவனது காதிற்குள் ஏதோ குசுகுசுத்துவிட்டு ஒரு புறத்திலே ஒதுங்கி நிற்க, செல்லன் அந்த ஏஜண்டுத் துரையின் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான். பறங்கியரான அந்த அரசாங்க அதிபர், இந்த மரியாதை முறையினை அறிவாராயினும் திடீரென்று அவன் தனது காலடியிலே விழுந்ததும் நன்றாகவே திகைத்து விட்டார்.

பின்னர் தனது திகைப்பினைக் காண்பிக்காதவராய் உடையாரைப் பார்த்து ஆங்கிலத்தினில் எதையோ சொல்ல, உடையார் அதட்டலோடு, “செல்லா, நீ செய்தது ஐயாவுக்கு நல்ல சந்தோஷம். சரி, இனிப் போதும் எழுந்திரடா” என்றதும் உடம்பில் படிந்த மண்ணையும் தட்டாமல், வெகு மரியாதையோடு கைகளைக் கட்டிக்கொண்டு ஒதுங்கி நின்றான் செல்லன். அரசாங்க அதிபர் அங்கு வந்ததற்கான காரணத்தை உடையார் செல்லனுக்கு விளக்கினார். இப்பகுதியினைப் பார்வையிட்டுப் போக அவர் மணியகாரனோடு இப்பகுதிக்கு இன்று வந்து இரண்டு நாட்களுக்குத் தங்கியிருக்கப் போகின்றார். மக்கள் தங்களுக்கு ஏதேனும் கஷ்டங்கள் இருந்தால் உடையார் மூலமாக அதனை மணியகாரனுக்குத் தெரிவித்தால் மணியகாரன் ஏஜண்டுத்துரையின் கவனத்திற்குக் கொண்டுவருவார். இவை ஒரு புறமிருக்க, ஏஜண்டுத்துரை தங்கியிருக்கிற இரு நாட்களுக்கும் அவருக்கு இறைச்சிக்குரிய எல்லா ஒழுங்களையும் செல்லனே செய்யவேண்டும்.

செல்லனுக்கு மகிழ்ச்சியினால் கண்மண் தெரிய வில்லை. எல்லை மீறிய புளுகத்தினால் இளித்துக் கொண்டு கைகளைப் பிசைந்தவாறிருந்தான். இரண்டு நாட்களாக அப்பகுதியின் அடர்காடுகள் கலங்கி அதிர்ந்தன. தோட்டாச் சத்தங்களில் அப்பகுதி முழுவதுமே உறக்கம் குலைந்தது. ஏஜண்டுத்துரை அங்கிருந்து மிகவும் மகிழ்ச்சியுடனே புறப்பட்டுச் சென்றார். செல்லனைத் தனிப்பட்ட முறையிலே அவர் பாராட்டினார். உடையாருக்குத் தனது அதிகாரத்திற்குட் பட்ட எல்லாப் பகுதிகளையும் பரிபாலிப்பதற்குப் போதிய நேரமின்மையால் அவருக்கு உதவியாகச் செல்லனையே ஒரு ‘பட்டங்கட்டி’ யாக நியமிக்கலாம் என மணியகாரன் ஆலோசனை கூறியபோது சந்தோஷத்தோடு ஏஜண்டுத்துரை அதனை ஏற்றுக் கொண்டார். அவ்விடத்திலேயே அந்த நியமனத்திற்கு அங்கீகாரமும் வழங்கிவிட்டுப் புன்முறுவலோடு செல்லனை அவர் பார்த்தபோது, ஏஜண்டுத்துரை தன்னையும் பார்த்துவிடுவாரென்ற எண்ணத்திலே வாடி யிருந்த தனது முகத்தின் மேல் சிரிப்பு முகமூடியினை அணிந்துகொண்டார் உடையார்.

செல்லனுடைய மகன் சின்னையா ஐந்தாம் வகுப் போடு குழப்பிவிட்டு அதன் பின்னர் தகப்பனுக்குப் பின்னாலேயே திரியத் தொடங்கிவிட்டான். சின்னப் பையன்களுக்கிடையே அவர்களுக்கு அவன் தான் பட்டங்கட்டி. அவன் வைத்ததுவே சட்டம். செல்லன் இறந்தபின்னர் . சின்னையாவே பட்டங்கட்டி யானான்…

இவ்வளவு காலமும் பட்டங்கட்டியாயிருந்த போதி லும் இதுவரையும் நூறு, பத்து ரூபாய் நோட்டுக்களைத் தானும் ஒன்றாகவே கையில் வைத்துப் பார்த்திட வாய்ப்புக் கிடைக்காத தனக்கு இப்படியொரு ராஜ யோகம் வாய்த்ததை எண்ணிப் பற்கள் தெரியச் சிரித்துக் கொண்டே சாராயப் போத்தல் ஒன்றை மூடி திறந்து கிளாசினுள் சரித்தார் பட்டங்கட்டி, வாய் அவரையறியாமலே முணுமுணுத்தது.

“ஐயனை இனிமேல்தான் நல்லாகக் கையுக்குள்ளை வைக்க வேணும். அவனை கவனித்து வைத்திருந்தால் தான் எல்லார்க் காரியங்களும் சிக்கலில்லாமல் நடக்க முடியும். அவனுடைய குடும்பத்திலை உள்ள எல்லாருக் கும் நல்ல உடுபிடவைகளை இரண்டொரு நாளைக் குள்ளை வாங்கிக் கொடுக்கவேணும். எப்பிடியிருந்தாலும் அவங்களுக்குள்ளை யார்தான் காசுக்கு ஆசைப்படப் போறாங்கள்? காசை வைத்து அவங்களாலை என்ன தான் செய்யமுடியும்?”

– தொடரும்…

– அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், முதற் பதிப்பு: டிசம்பர் 1985, தமிழோசைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *