சண்டைக்காரி! – ஒரு பக்கக் கதை





அண்டை வீடு சண்டை வீடாக இருந்தால் நாம் எப்படி நிம்மதியாகத்தூங்க முடியும்? அலுவலகத்திலிருந்து மருமகள் ரம்யா வந்தவுடன் மாமியார் வசந்தியுடன் இரவு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் சண்டைச்சத்தம் பதினோரு மணி வரை தொடர்ந்து பின் அடங்கும்.

பக்கத்து வீட்டு ரம்யா சாரங்கனுக்கு ஒன்று விட்ட சொந்தம் தான். உறவுகள் வசிக்குமிடத்தில் வசித்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்கள் எனும் நம்பிக்கையில் வயதாகி நடக்க இயலாத நிலையிலும், இங்கு வாடகைக்கு வீடு பிடித்து மனைவி சங்கரியுடன் குடியேறியவருக்கு ரம்யாவின் செயல் வருத்தமளித்தது.
குடி வந்து பத்து நாளாகியும் முதல் நாள் பால் காய்ச்ச அழைத்ததால் வந்தவர்கள் இன்று வரை தன் வீட்டில் காலடி வைக்காதது கண்டு வருந்தியவர், ‘நகரவாசிகளின் பழக்கம் இப்படித்தான்’ என நினைத்ததோடு ‘நாம் அவர்கள் வீட்டிற்கு போனாலும் ஏதாவது நினைப்பார்களோ…?’ என நினைத்தபடி இவரும் போக மனமின்றி இருந்தார்.
இரவில் சத்தம் அதிகம் வருவதால் ரம்யா அலுவலகம் சென்ற பின் பகலிலேயே தூங்கப்பழகி விட்டார்.
‘இந்த சண்டைக்காரி ரம்யாவைத்தானே நம் மகனுக்கு முதலில் பெண்பார்த்தோம். நல்ல வேளை சோதிடர் பொருத்தம் வரவில்லை என கூறியதால் தப்பித்தோம்’ என எண்ணி நிம்மதியடைந்தார்.
இன்று ரம்யா வந்ததும் வராததுமாக அவர்கள் வீட்டில் சத்தம் அதிகமானது. சாரங்கனுக்கு கோபம் தலைக்கேறியது. ‘நேரிலேயே போய் கேட்டு விட வேண்டும்’ என முடிவு செய்தவராய் ஊன்று கோலைக்கையிலெடுத்தவராய் கிளம்பிய போது மனைவி சங்கரி காலில் விழாத குறையாகத்தடுத்தாள். ஆனால் மனைவி சொல்லைக்கேட்காமல் ரம்யாவின் வீட்டினுள் நுழைந்தவர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
தொலைக்காட்சியில் நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. நாடகத்தில் மாமியார் மருமகளை முடியைப்பிடித்து அடித்துக்கொண்டிருந்தாள். மருமகள் பதிலுக்கு சத்தமிட்டு ஓர் அராமியைப்போல் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள்.
அலுவலகத்திலிருந்து வந்ததும் பசியுடன், மனச்சோர்வு நீங்க சோபாவில் அமர்ந்தபடி, நாடகத்தை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்த மருமகள் ரம்யாவுக்கு மாமியார் வசந்தி தான் செய்து வைத்திருந்த கேசரியை ஒரு வயதுக்குழந்தைக்கு ஊட்டுவது போல் பக்கத்தில் அமர்ந்து தானும் நாடகத்தைப்பார்த்து ரசித்தபடி ஊட்டி விட்டுக்கொண்டிருந்தாள்!