எல்லாம் கடவுள் செயல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 6,715 
 

“இங்கே சந்தானம் வீடுன்னா எதுப்பா?” என்று சிதம்பரத்தின் அக்ரகாரத் தெருவின் முதல் வீட்டில் முதுகைச் சொரிந்து கொண்டிருந்த முதியவரிடம் கேட்டார் கூரியர் காரர்.

“எது சகுனம் சந்தானம் வீடா, இந்தத் தெருமுனையில் இருக்கிற அந்த நீல நிற வீடுதான்” என்று ஒரு ஏளனப் பார்வையோடு சலிப்போடு பதில் சொன்னார் முதியவர்.

தெரு முழுக்க சின்னச் சின்னக் கோலங்கள் இருந்த வீடுகளிடையே சற்று வித்தியாசமாக மார்கழி மாதக் கோலம்போல் பெரியதாய் இடப் பட்டிருந்த அந்த நீல நிற வீட்டு வாசலை அடைந்தார். “சந்தானம் இருக்காரா?”

வீட்டின் உள்புறம் அமர்ந்திருந்த 70 வயது பாட்டி எழுந்து வந்து “யாருடா நீ அம்பி, என் புள்ளைய பேர் சொல்லிக் கூபிடறவன். இந்தத் தெருவிலேயே என்னைத் தவிர என் புள்ளையாண்டான யாரும் பேர் சொல்லிக் கூப்பிடறதில்லைடா.” என்று நீட்டி முழக்கிக் கொண்டிருந்த பாட்டியை சற்றே ஓரம் தள்ளிவிட்டு அழகிய வளையல்களில் ஒளிந்து கொண்டிருக்கும் பளிங்குக் கரங்களை நீட்டினாள் செல்லம்மா.

“கூரியர் தானே, என்னிடம் கொடுங்கள், அவர் என் தோப்பனார்தான்”.

இந்தப் பேரழகியைக் கட்டிக்கப் போறவன் எந்தப் புண்ணியவானோன்னு மனசுக்குள்ளேயே நினைத்துக் கொண்டு. “இந்தாம்மா, உங்க அப்பா கிட்ட கொடுத்துடு. இதுல ஒரு கையெழுத்துப் போடு” என்றார். போகின்ற தருவாயில் அந்த தேவதை இருக்கும் வீட்டை ஒரு முறை ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு நடையைக் கட்டினார்.

“பாழாப் போறவன் கண்ணுல கொள்ளியைத்தான் வைக்கணும். எப்படி வெறிச்சுப் பார்த்துட்டுப் போறான் பாரு. அவன் நின்ன இடத்தைக் ஜலம் ஊத்தி அலம்பிதான் விடணும். இதுக்குத்தான் வயசுக்கு வந்தப் பொண்ணை சீக்கிரம் தாரவாத்துக் கொடுத்துடுன்னா கேக்குறானா சந்தானம்” என்று புலம்பிக் கொண்டே திண்ணையில் உட்கார்ந்தாள் பாட்டி.

கூரியரில் வந்திருந்த புகைப் படத்தையும், தகவலையும் பார்த்துவிட்டு, தன் மனைவியைக் கூப்பிட்டார் சந்தானம். “ஏண்டி மைதிலி, நம்ம பொண்ணுக்கு வரன் தேடி வந்திருக்குடி. பையன் 3 வருஷமா ஆஸ்திரேலியாவில் இருக்கானாம். விலாசமும், புகைப் படமும் இதுல இருக்குப் பாருடி. ஆனால் அவா இங்க வரலையாம். அவா வீட்டுக்கு நாம போகணுமாம். ஆஸ்திரேலியாவில் இருக்கப் பையனை அவங்க வீட்டுல இருந்தே கணினியில பார்க்கலாமாம். என்ன இழவோ, பொண்ணு வீட்டுக் காராவை, மாப்பிள்ளை வீட்டுக்குக் கூப்பிடற சம்பிரதாயம்?” என்று சத்தமாகப் பேசிவிட்டு கோவிலுக்குப் புறப்பட்டார் சந்தானம்.

செல்லம்மா படபடத்தாள், ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப்போட்டக் கல்யாணம் நடந்திடுமா என்று யோசித்தாள். எதிர்வீட்டில் இருக்கும் சுப்பிரமணியைத்தான் கல்யாணம் செய்துக்கனும்னு அவளுக்கு ஆசை. ஆனால் சுப்பிரமணிக்கு சுத்தமா கடவுள் நம்பிக்கை இல்லை. மீசையும், தாடியுமா கடவுளைக் கும்பிடாமல் அவன் அலையுறது சந்தானத்திற்கு சுத்தமா பிடிக்காது. “கடவுளே எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நீதான் நிறுத்தனும். நான் இன்னும் என் காதலை சுப்பிரமணியிடம் சொல்லவே இல்லை. ஆனால் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். இதுக்கு நீதான் துணை நிற்கணும்” என்று வேண்டிக்கொண்டாள்.

மாப்பிள்ளை வீட்டுக்கு மறுநாள் இவர்கள் கிளம்புவது சுப்பிரமணிக்குத் தெரிய வந்தது.

மறுநாள் மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பின சந்தானம், மைதிலி, இன்னும் சில சொந்தக் காரர்கள் வாசலுக்கு வரவும் எதிரே தனியாய் வந்த சுப்பிரமணியைப் பார்த்ததும் விருட்டென வீட்டுக்குள் போனார் சந்தானம்.

“என்ன இழவோ, காலையிலேயே ஒத்தப் பிராமணனா எதிர்க்க வர்றான், அதுவும் இந்த சமயத்துல. போற காரியம் விளங்குமோ? வேற எவனா வந்தாலும் ஒரு சொம்பு ஜலத்தைக் குடிச்சுட்டுப் போயிடுவேன். இந்த நாத்திகனா வரணும். அரை மணி நேரம் கழிச்சுப் போலாம்டி எல்லோரும் ஆத்துக்குள்ள வாங்கோ” என்று சத்தம்போட்டு பேசிவிட்டு உள்ளே அமர்ந்துகொண்டார் சந்தானம்.

ஒரு கால் மணி நேரம் கழித்து வந்த செல்லம்மாவின் பெரியப்பா மகன் சிவா, “சித்தப்பா, நீங்க பார்த்திருக்க பையன் அந்த அளவுக்கு நல்லவன் இல்லை. அவனுக்குப் பொம்மனாட்டிகள் பழக்கம் கூட இருக்காம், அவன் படிச்ச கல்லூரியில படிச்ச என் நண்பனிடம் விசாரிச்சேன்” என்று ஒரு குண்டைப் போட்டான்.

“என்னடா சொல்ற, கொஞ்சம் தாமதமா வந்திருந்தா அவா ஆத்துக்குப் போயிருப்போமேடா கடங்காரா. நல்ல வேளை இப்போவாவது வந்தே. எதிர்க்க வந்த சுப்பிரமணிக்கும், என் கடவுள் சுப்பிரமணிக்கும்தான் நன்றி சொல்லனும்” என்று சொல்லி விட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டார் சந்தானம்.

“டேய் சுப்பிரமணி, நீ சொன்னதை நான் அங்கே சித்தப்பாகிட்ட சொல்லிட்டேண்டா. உன்னால இந்த நிச்சயம் நின்னுடுச்சு. உனக்கு நல்லா தெரியும்ல, அந்தப் பையன் அப்படித்தானான்னு” என்று கேட்டான் சிவா.

“அவன் என் கல்லூரியில படிச்சவந்தான். எனக்கு நல்லாவே தெரியும். நீ வர்றதுக்கு நேரம் ஆச்சுன்னுதான் அவா எதிர்க்க வந்து கொஞ்சம் நேரம் கடத்தினேன்” என்றான் சுப்பிரமணி.

“சுப்பிரமணியை எதிர்க்க வரவழைச்சு அவகாசம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி கடவுளே. எப்படியாவது இனியும் காலம் கடத்தாம ஆத்துல சொல்லிடணும். எல்லாம் கடவுள் செயல்” என்று மெத்தையில் குப்புறப் படுத்துக் கொண்டு தலையணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டாள் செல்லம்மா.

– ஜூலை 10, 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)