திரும்பவும் குழறலாக ஏதோ சொன்னார் நாணா என்கிற நாராயணன். ‘‘என்னம்மா அப்பா எப்படி இருக்கார்?” வழக்கமான கேள்வியுடன் மதியம் சாப்பிட வீட்டிற்குள் நுழைந்த மகனிடம், “குரு! என்னமோ சொல்லறார். புரியலை…” என்றாள் கங்கா.“பெய், பெய்மா… ழங்கா…’’ அதற்கு மேல் பேச முடியாமல் நாணாவின் முகம் கோணியது. “ரங்கானு சொல்லறார்மா…” என்றவனைப் பார்த்து, “ரங்கனை வரச் சொல்லுடா…” என்று சந்தோஷமாய் சொன்னாள் கங்கா. கால்மணி நேரத்தில் கங்காவின் ஒரே தம்பி ரங்கன் என்கிற ரங்கராஜன், ‘‘என்னக்கா, பாவாவுக்கு என்னை கண்டாலே ஆகாது. இப்ப என்ன பாவமன்னிப்பு கேட்கிறாரா?” அட்டக்காசச் சிரிப்புடன் உள்ளே நுழைந்தான்.
“என்னமோ சொல்லறார். ரங்கான்னு ஒம் பேரை சொன்னா மாதிரி இருக்கு…” “என்னையா? இருக்காதே..!” என்றவன் யோசனையுடன், “பெருமாள்னு சொல்லறாரா?” என்றதும், நாராயணனின் கண்கள் திறந்தன. திரும்பத் திரும்ப ‘ழங்கா பெய்மா’ என்று அரட்ட ஆரம்பித்தார்“ஆமா இல்லே! எங்க கல்யாணத்துக்கு மறுநாள் கோயிலுக்கு போனோம். அன்னைக்கு யாரோ விஐபி வர்றார்னு ஒரே கெடுபிடி. உள்ளே போகவே முடியலை. அடுத்து ரெண்டு முறை கோயிலுக்கு போகணும்னு கிளம்பியும் ஏதோ தடை. அப்படியே விட்டுப் போச்சு. ஸ்ரீரங்கத்தில் இருந்தும் பெருமாளைப் பார்க்கலைனு அவர் மனசுல குறை இருந்திருக்கு. அதுதான் புலம்பறார்…” என்ற கங்கா மகன் பக்கம் திரும்பினாள்.
“கெளம்புடா குரு…” “என்ன விளையாடுறீயாமா..? எவ்வளவு நடக்கணும்? கூட்டம் கேக்கவே வேணாம்…’’“மணி நாலாகப் போகுது. இப்ப கூட்டமிருக்காது. ரெண்டு பக்கம் பிடிச்சிக்கிட்டு அப்படியே தள்ளிக்கிட்டு போயிடலாம்…” கங்கா சொன்னது சரியென்று குருவுக்கு பட்டது. நாணாவுக்கு சலவை வேட்டி, சட்டை அணிவித்து சால்வையைச் சுற்றி தயார் செய்தார்கள். குரு அழைத்த ஆட்டோ வந்ததும், “என்னா கோபாலி எப்படி இருக்க? நியூ ரங்கா நகர்ல லேண்ட் வாங்கியிருக்கியாமே…’’ ரங்கராஜன் அலட்டலாகக் கேட்டதும், ‘‘நானே கைல துட்டு இல்லாம அல்லாடிக்கினு இருக்கேன். சும்மா வெறுப்பேத்தாதே…” என்றான் ஆட்டோ டிரைவர் கோபாலி. அத்துடன் நிறுத்தவில்லை.
“குரு, இந்த நெலைமையில உங்கப்பாவ இட்டுக்கினு எதுக்கு கோயிலுக்குப் போற? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போவுது…” என்றான். ‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது கோபாலி… ரொம்ப நாளா கேட்கணும்னு நெனச்சேன். அது என்ன புரூஸ்லி மாதிரி கோபாலி…?’’ சிரித்தபடி ரங்கன் கேட்டதும் கோபாலி முகம் மாறியது.‘‘குரு, ஒம் மாமனை சொம்மா இருக்க சொல்லு. அதுதான் ஒங்க அப்பாரு இவன வெக்கிற எடத்துல வெச்சாரு. மாமன்னு பார்த்தே ஏதாவது வம்புல இஸ்து வுட்டுடுவான். நா சொல்லற சொல்லிட்டேன்…” “எங்க ரெண்டு பேருக்குள்ளே சண்டையா மூட்டுறே?” ரங்கன் கேட்டு முடிப்பதற்குள் கோபுர வாசல் வந்தது.
ஆட்டோவை ஓரமாக கோபாலி நிறுத்தினான். கோபுரம் கண்ணில் விழுந்ததும், ‘அதிகம் படுக்கையில் விழாமல் அழைச்சிட்டு போயிடு பெருமாளே… உன் திருமுகத்தை ஒரு தரம் பார்த்தால் போதும். என் ஜென்மம் சாபல்யம் அடையும்…’ நாணாவின் மனம் வேண்ட, வாயில் ‘ழங்கா பேய்மா…’ என்ற புலம்பல் அதிகரித்தது. டூரிஸ்ட் கும்பல் தபதபவென்று ஓடியது. “குள்ள ரங்கு இருக்கானா பாரு. அஞ்சு பத்து தந்தா நேரா சந்நதிக்கே அழைச்சிக்கிட்டு போவான்…” ரங்கன் சொன்னதும், குரு செல்போனை எடுத்து அழைத்தான். “ரிங்கு போகுது. எடுக்கலை…” இரண்டு பெண்கள், ‘இதெல்லாம் ஒரு கூட்டமா, வைகுண்ட ஏகாதசிக்கு வரும் பாரு ஜனங்க…’ என்று பேசியது நாராயணன் காதில் விழுந்தது.
மனதில் இருந்த ரங்கநாதர் மறைந்து, மளிகைக்கடை ரங்கராஜுலு நாயுடு விஸ்வரூபம் எடுத்தார். வைகுண்ட ஏகாதசிக்கு வரும் கூட்டத்துக்கு வடைக்கும், இட்லிக்கும் உளுந்து வேண்டுமே என்று ஒரு மூட்டைக்கு முன்பணமாக மூவாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்ததும், அதை கணக்கில் எழுதாததும் நினைவுக்கு வந்தது.‘வுளுந்து… வுளுந்து…’ வாய் புலம்பியது “மாமா… அப்பா நமஸ்காரம் பண்ணணும்னு சொல்லறார்…’’ குரு சந்தோஷமாகக் கூவினான். ‘‘நம்ஸ்காரம்னு சொல்லலாம் இல்லையா…” ரங்கன் கேலியாய் சொன்னதும், “பாவம் மாமா. நமஸ்காரம்னு அவரால சொல்ல முடியலை…” வருத்தமாய் சொன்னான் குரு.“சரிடா. கூட்டம் பார்த்தியா? அந்தப் பாழாய்ப் போன குள்ள ரங்குவையும் காணலை.
நீ அந்தப் பக்கம் பிடி. நான் இந்தப் பக்கம் பிடிக்கிறேன். ஒரு நமஸ்காரம் செய்ய வெச்சிட்டு நாம கிளம்பலாம், அவருக்கு கொடுப்பினை அவ்வளவுதான்…” ‘வுளுந்து, வுளுந்து’ என்று அரட்டும் நாணாவின் இடுப்பிலும் கழுத்திலும் கையை வைத்து கீழே படுப்பது போல் கிடத்தும் பொழுது, “என்னடா பண்ணுறீங்க..?” அங்கு வந்த கோயில் ஏ.ஓ.சாரங்கன் கட்டைக் குரலில் அதட்ட, அதிர்ச்சியில் குரு கையை விட, ஒரு பக்கமாய் சரிந்து அலங்கோலமாக விழுந்தார் நாணா.‘‘அப்பா…’’ என்று அலறி அவரைத் தூக்கி நிறுத்தினான் குரு. அவர் தலை ஒரு பக்கமாக சாய்வதைப் பார்த்த சாரங்கன் கோபத்துடன், கூட வந்த செக்யூரிட்டியிடம், “இவனுங்களை வெளியே அனுப்பிட்டு வந்து ஆபீசில் சொல்லணும். ஏண்டா குரு, இவன் ஒரு திருவாழத்தான்.
இவன் லட்சணம் தெரிந்து ஒங்கப்பன், இவனை கிட்டவே சேக்கலை. கிளம்பு கிளம்பு…” என்றார். கோபுர வாசல் வரை வந்த செக்யூரிட்டி நகர்ந்ததும், “குரு, மனச தேத்திக்கோ. வீடு வரும் வரை மூச்சு விடாதே. ஒங்கப்பா போயிட்டார்னு நினைக்கிறேன். வீட்டுக்கு போனதும் அப்படியே படுக்க வெச்சிட்டு, ஒரு மணி நேரம் கழிச்சி சொல்லலாம்…” ரங்கன் சொன்னதும், ‘‘மாமா…’’ என்று குருவின் குரல் தத்தளித்தது மேற்கொண்டு பேசாமல் ஆட்டோவில் ஏறினார்கள். ‘‘என்ன, சாமி கும்பிட்டீங்களா?” கோபாலி கேட்டதும், லேசாய் விம்மினான் குரு. சும்மா இரு என்பது போல் அவன் தோளைத் தட்டினான் ரங்கன். “அப்பா… மாமா…’’ தாங்க முடியாமல் தேம்பினான் குரு.
கோபாலி இருக்கான் என்பதை ஜாடை காட்டி, ‘‘சரியாயிடும், கவலைப்படாதே’ என்றவன், “அது என்னா படம், பிரதாப் போத்தன் நடிச்சானே! மூன்றாம் பிறையா? அதுல சொல்லுவானே ‘அப்பா மாமா!’ அதுமாதிரி சொல்றியே…’’சொல்லிக்கொண்டே, ரங்கன் ஜாடை காட்டினான் “அய்யே அது ‘மூடுபனி’ படம். பிரதாப் போத்தன் லாஸ்ட் சீன்ல ‘அப்பா மாமா’னு அழுவாப்ல… ‘என் இனிய பொன் நிலாவே…’’’பாடிக்கொண்டே திரும்பிய கோபாலியின் கண்ணில் நாணாவின் தலை சாய்ந்திருப்பது பட்டது.“ஏங் குரு அழுவுறே? இன்னாடா ஒங்கப்பாரு ஒரு மாதிரி இருக்காரு…” சந்தேகத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்தவன், ‘‘டேய் ரங்கா, புத்திய காமிச்சிட்ட பார்த்தியா? பாவிகளா!
டெட் பாடியையா ஏத்தியிருக்கீங்க?”அலறிக்கொண்டு சடன் பிரேக் போட்டான். பின்னால் வந்த டெம்போ சமாளிக்க முடியாமல் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. அரை மயக்கத்தில் இருந்த குரு, ஒரு பக்கம் கோபாலியும், மறுபக்கம் ரங்கனும் விழுந்துகிடப்பதைப் பார்த்து மெல்ல எழுந்தான். காதில், ‘வுளுந்து வுளுந்து…’ என்ற வார்த்தைகள் விழுந்தன.‘‘அப்பா…’’ என்று எழுந்தவனின் தலை ஆட்டோவின் மேல் பக்கம் நன்றாக மோதியது. ஸ்ரீரங்கம் கோபுரத்தைப் பார்த்தபடியே மயங்கினான். ‘வுளுந்து வுளுந்து…’ என நாணா முணுமுணுத்தபடி இருந்தார்.
– Feb 2018