(2000 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எத்தனை வருடமாய்ப் போய்விட்டது. இப்பதானும் எனது கணவரைப் பிடித்துக் குடும்பப் பெண் உத்தியோகம் பார்க்கலாமோ என்று கேட்டால் ஓம் என்கிற சாரத்திலும் இல்லை என்கிற சாரத்திலும் பல தடுமாற்றமான நியாயங்கள் வெளிவரும். என்னுடைய உயர்தரப் பரீட்சைத் தராதரப்பத்திரம் அலுமாரியின் அடித்தட்டில் கும்பகர்ணத் தூக்கத்தில் சாதனை புரிந்துகொண்டு இருக்கிறது. அதே நேரம் எனது ஒரே மகன் பிறந்து வளர்ந்து வேலைக்குப் போகத் தொடங்கி ஒரு மாதத்துக்கும் கிட்ட நெருங்கி விட்டது.
இளையவளான எனது ஒரே மகள் , ‘அப்பா……. பெண்கள் உத்தியோகம் பார்க்கும் விடயத்தில் நீங்கள் ஒரு முடிவை எடுத்துத்தான் ஆக வேண்டும்’ என்று அவரை நிர்ப்பந்திப்பதுபோல உயர்தர வகுப்பில் சுட்டியாக இருந்து சாதித்து வருகிறாள்! தங்கள் தங்கள் மனைவிமாரை வேலைக்குப் போகவிடாமல் பக்குவம் பண்ணுகின்ற சில ஆண் பிள்ளைகள் வருகின்ற மாப்பிள்ளைமார் அநுபவித்துப் பார்க்கட்டும்’ என்கிற தயாள குணத்தில் தங்களுடைய புத்திரிகளை உத்தியோகம் பார்க்க அனுப்பி வைக்கின்ற பெருந்தன்மைகளைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்..
தலைநகரின் காலைநேரச் சுறுசுறுப்புச் சத்தம் சந்தடி எல்லாம் ஒரு படிமானத்தில் தணிந்து வருகிறது. எங்கள் போர்சனுக்குரிய மொட்டைமாடியில் நின்று பார்க்கும் பொழுது தலைநகரின் தெருக்கள், ஒழுங்கைகள், சந்துபொந்துகளெல்லாம் வரைபடத்தில் பார்ப்பது போலவோ..அல்லாவிட்டால் சில சமயம் பாதுகாப்பு ரோந்தில் ஈடுபட்டிருக்கின்ற விமானத்திலிருந்து பார்த்தால் எப்படி இருக்கக் கூடுமோ அப்படி அழகாகக் காட்சி அளிக்கின்றன!
வேலைக்குப் போகின்ற எனது கணவன்…. அடுத்த போர்சனில் இருக்கின்ற தொழில் பார்க்கும் சோடி ஏன் அந்தத் தொடர் மாடியில் வசிக்கின்ற அத்தனைபேருமே தொழில் நிமித்தமோ கல்வி காரணமாகவோ அந்தக் காலை நேர அலையுடன் அடித்துச் செல்லப்பட்டுவிட நான் மட்டும் சோர்வுடன் வந்து சோபாவில் விழுகிறேன்.
சமையல் செய்ய வேண்டும்..உடுதுணிகள் துவைக்க வேண்டும்…தூசி தட்டி வீட்டைப் பெருக்கி..பாத்திரங்களை துலக்கி ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை…அவற்றிற்கே நான் பழக்கப்பட்டு விட்டேன்!
ஆனால் என்றுமில்லாதபடி இன்று எனது மனம் பரிதவிக்கின்றது. நானும் தொழில் புரிந்திருக்கலாம்…
இன்று அடுத்த ‘போர்சனில் வசிக்கும் மனோகரி அவள் பணிபுரியும் வங்கிக் கிளை ஒன்றின் திறப்பு விழாவிற்காக எவ்வளவு அழகாகவும் ஆடம்பரமாகவும் தன்னை அலங்காரம் செய்து கொண்டு புறப்பட்டாள்.
எனது கணவருக்கு முன்பாகவும் மற்றவர்களுக்கு முன்பாகவும் அலங்காரத்துடன் தோற்றமளிக்க எனக்கு ஆசையிருக்காதா?
இதற்கெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு கல்யாணவீடு, சாமத்திய வீடு, பிறந்தநாள் விழா என்று வந்தால்தான் ஆகும்.
இவற்றிற்காக காத்திருந்தே எனது இளமைக்காலம் தீர்ந்து விட்டது.
அழைப்புமணி அடித்தது. இந்நேரத்தில் யாரும் வரமாட்டார்களே! ‘லென்சினூடாக’ உற்று நோக்கினேன். மனோகரியின் மகள் கவிதா! காலையில் மனோகரி என்னிடம் கூறிச்சென்றதை நன்றாகவே மறந்து விட்டேன்.
“பிள்ளை நீங்கள் வீட்டில் நிற்பதாக அம்மா காலையில் சொல்லிப் போனவா…நான்தான் வேலைப்பராக்கில் மறந்து போனேன். எப்படிப்பிள்ளை சுகமா?…மருந்து குடிச்சனீங்களா? இருங்கோ .”
சுரிதார் அணிந்திருந்தாள் ‘ஸ்லிம்’ ஆக…அலட்சியப் பார்வை தெறிக்க.. நாளைக்கே வேலைக்குப் போகத் தயார் என்பதுபோன்ற தோற்றத்துடன்…
ஓம் அன்ரி, மருந்து குடிச்சனான். வீட்டில் இருக்க ஒரே ‘போர்’. அன்ரிக்கும் ஏதாவது உதவி செய்ததுமாகு மென்று…அதோடு அம்மா சொன்னவ…அன்ரி இரசம் வைப்பா வாங்கிக் குடியெண்டு….நான் வந்தது அன்ரிக்கு கரைச்சலா?”
என்ன இலாவகம்.. எங்களுடைய பிள்ளைகள் இப்படி வளரவில்லை. மூக்கைப்பிடித்தால் வாயைத்திறக்கத் தெரியாததுகள். நான் உத்தியோகம் பாத்திருந்தால் என்ரை பிள்ளைகளும் வல்லமையோடு வளர்ந்திருப்பார்கள் போலும்.
என்னுடைய அவரோடு சண்டை பிடிச்செண்டாலும் எனது மகளை நான் வேலைக்கு அனுப்பத்தான் வேணும். எதிர் வீட்டுக்காரி எனது பிள்ளையிடம் வந்து ‘நீங்கள் வீட்டில் தானே இருக்கின்றீர்கள்…. எங்களுடைய வீட்டையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கோ’ என்று சொல்லுகிற ஒரு நிலையை என்னுடைய பிள்ளைக்கெண்டாலும் நான் விட்டு வைக்கக் கூடாது.
ஒரு சிறுகதையில் வந்தது போல ‘உத்தியோகம் பார்க்காத குடும்பப் பெண்ணுக்குத்தான் வீட்டை வாடகைக்கு விடுவம்’ என்ற நிபந்தனை எனது மகளுக்கு பொருந்தி வரக்கூடாது.
கவிதாவை எனது மகளுடன் சேர்த்து மனம் எடைபோட்டது…
“என்ன மாதிரிப்பிள்ளை , உங்களுடைய புது ‘சிலபஸ்’? நீங்கள் என்ன தலைப்பில் செயல்திட்டம் வரைந்தனீங்கள்? வினவினேன்.
கவிதா நல்ல பிள்ளை. அன்ரி என்று கூப்பிட்டால் இன்னும் ஒரு தடவை கூப்பிட மாட்டாளோ என்று மனம் தவிக்கும்.
‘ஓம் அன்ரி, ‘விவசாயம் எதிர் நோக்கும் பிரச்சனைகள்’ என்ற தலைப்பில் ஆய்வொன்று எழுதினேன். எங்களுடைய வகுப்பில் எனக்கு மட்டும் தான் ஏ சித்தி கிடைத்திருக்கிறது.”
தாய்க்காரி சும்மாவா விட்டிருப்பாள்….மகளுக்காக விவசாயக்கந்தோர், நீர்ப்பாசனக் கந்தோர் என்று எல்லா இடமும் தானே ஏறி இறங்கித் தகவல்கள் சேர்த்திருப்பாள்….
இன்னுமேன் …. கல்விக் கந்தோருக்குப் போய் தன்னுடைய மகளுக்கு விசேட சித்தி போடவேண்டும் என்று சொல்லி வந்திருப்பாள்.
எல்லோருக்கும் பல் இளிக்கின்ற பெண்கள் மேல் தானாம் ஆடவருக்கு கவர்ச்சி இருக்குமாம். ‘எதையோ விரிச்சால் போச்சோ..’பொம்பிளை சிரிச்சால் போச்சோ என்னமோ என்று சொல்லுறது. சரியாக நினைவில் இல்லை. உதையெல்லாம் தூக்கிப்பிடித்தால் வேலைக்குப் போகமுடியாது…. அமைதியைக் கலைக்கின்ற மாதிரி கவிதா வினா தொடுத்தாள்.
“ஏன் அன்ரி நீங்களும் படித்திருந்தால் மற்றவர்கள் மாதிரி உத்தியோகம் பார்க்கலாம்தானே?” எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். என்னுடைய மேதாவிலாசத்தை இந்தச் சின்னப் பெண்ணிடம் அளக்கிறதால் என்ன லாபம். மௌனமாக இருந்து விட்டேன்.
“பிள்ளை கொத்தமல்லி நிறையப் போட்டு…வேர்க்கொம்பும் பெருங்காயமும் சேர்த்து இரசம் தயாரித்து இருக்கிறன், அளவான சூடாக இருக்கிறது. குடிச்சுப்பாரும். தடிமன் காய்ச்சல் பறந்துவிடும்…” என்று கூறித் துலக்கிய வெள்ளிப் பாத்திரத்தில் இரசத்தை நீட்டினேன்.
‘இச்’ கொட்டி இரசித்துக் குடித்தாள். அழகாக இருந்தாள்.
“ஏன் பிள்ளை பெண்கள் உத்தியோகம் பார்த்தால் என்ன லாபம்?”
“ஏன் அன்ரி பெண்கள் உத்தியோகம் பார்ப்பதால் என்ன நட்டம் என்று கேளுங்கோவன்.”
என்னை வாரித் தூக்கி எறிந்தது போல் இருந்தது. பார்சல்கள் கட்டியபின் எஞ்சிய வெற்றுப்பாத்திரங்களை ‘சிங்கில்’ கழுவி உலர வைத்தபின் வீட்டை மேலெழுந்த வாரியாகப் பெருக்கினேன்.
கவிதா “தடிமனே நின்றுவிட்டது அன்ரி” என்று கூறியபடியும் மூக்கால் சுவாசத்தை உள்ளிழுத்துப் பார்த்து உறுதி செய்தபடியும் பாத்திரத்தைக் கழுவி எடுத்து வைத்தாள்.
“என்ன கவிதா, இப்ப நீர் எனது பிள்ளையாயிருந்து –உமக்குத் தடிமன் காய்ச்சல் சுகவீனமென்று வருகிற நேரத்தில் நான் பக்கத்தில் இருந்து உம்மை அன்பு காட்டிப் பராமரித்தால் நீர் சந்தோசப்படுவீரோ அல்லது உம்மைத் தவிக்க விட்டு விட்டு நான் வேலைக்குப் போனால் நீர் சந்தோசப்படுவீரோ..?”
ஒத்த வயதாக இருந்தாலும் எனது மகளைக் காட்டிலும் கவிதா ‘மர்ச்சுவேட்’. நான் தயங்கித் தயங்கிக் கேட்கும் கேள்விகளுக்கு அவள் பதில் இறுக்கும் வேகமே இதற்குச் சான்று!
“தடிமன் காய்ச்சல் அன்ரி எப்போதாவது இருந்து விட்டுத்தான் வரும். வேணுமென்றால் அம்மாவும் உத்தியோகம் பார்க்கிறபடியால் காசை எறிஞ்சு ‘பிறைவேட்டில்’ மருந்து எடுத்து விட்டால் சரி. இதற்காக ஏன் ஒரு வருவாயை இழக்க வேண்டும்?”
கவிதா சொல்வதும் சரிதான்…அவளுடைய வீட்டில் இல்லாத சாமான்கள் என்ன? கடைசியில் போனமாதம் ‘கொம்பியூற்றரும் வாங்கியாச்சு.
எவர் எப்ப வந்தாலும் ‘பிறிட்ஜிலை’ தேவையான எதுவும் இருக்கும். என்னுடைய இவர் இல்லாவிட்டால் எங்கள் வீட்டுக் கதவு எவருக்கும் திறக்காது. ஆனால் எந்த வகையான விருந்தினர் வந்தாலும் புருசன்காரன் இல்லாவிட்டாலும் கூட மனோகரி வீட்டுக் கதவு ‘ரிமோட்’ டில் போல திறக்கும். எந்த ஆண்களுடனும் சமவாதம் செய்யாவிட்டால் மனோகரிக்குப் பத்தியப்படாது… கேட்டால், எவரும் அவளோடு தொழில் புரிகின்ற ஆட்கள். ‘உத்தியோகம் புருஷ இலட்சணம் என்று ஆண்கள் தங்களுக்கு வசதியாய் சொல்லி வைச்சிருக்கினம் அக்கா. நாங்கள் உத்தியோகம் ஸ்திரீ இலட்சணம் என்று சொல்லிப்போட்டு போவம்.’
என்று மனோகரி சிரித்துச் சிரித்து சொல்லும் அழகே தனி..
“அன்ரி, நீங்கள் உங்களுடைய வேலையைப் பாருங்கோ. நான் போய் கொஞ்சநேரம் ‘கொம்பியூட்டர்’ செய்யிறன். அம்மா நேரத்தோடு என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னவா. அம்மா வந்தபிறகு நான் அன்ரியைக் கூப்பிடுகிறன்.”
நாகசடை மாதிரி என்ன நீளமான தலைமயிர். இந்தத் தலைமயிருக்காகப் பத்து இளந்தாரிகள் பின்னால் வரத்தான் செய்வாங்கள். இவளும் தாய் மாதிரிப் பல்லை இளித்திருக்கா விட்டால் அன்று அந்தப்பையன் கடிதத்தை நீட்டியிருக்கவும் மாட்டான். சச்சரவுப் பட்டிருக்கவும் மாட்டான்.
கவிதாவினுடைய தமையன்மார் இருவரில் மூத்தவனுக்கு என்னுடைய குஞ்சிலை ஒரு கண். கவிதா மாதிரியே என்னுடைய பெடிச்சி, பெட்டிப் பாம்பெல்லே! ஏன் என்னுடைய ஆண்பிள்ளை எப்ப என்றாலும் கவிதாவை நிமிர்ந்து பார்த்திருக்குமா?
எவரும் இல்லாத வீட்டில் தான் வேலைகூட. அதைத் தொடாதே இதைத் தொடாதே என்று தடுக்க ஆளில்லாத வீட்டில் எத்தனை தரம் எண்டாலும் கூட்டிப்பெருக்கி துப்பரவு செய்துகொண்டு இருக்கலாம்தானே!
நேரம் போனதே தெரியவில்லை . கவிதா ‘பெல்’ அடித்து தாய் வந்து விட்டமையைத் தெரிவித்தபோதுதான் சுவர்க்கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தேன். மதியம் ஒரு மணி.
காலையில் மனோகரி அணிந்திருந்த ஆடையலங்காரத்துடன் மீண்டும் அவளைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலில் வீட்டுக் கதவினைப் பாதி பூட்டியும் பூட்டாமலும் எட்டி அடி வைத்து அவளது முன் மண்டபத்துக்குச் சென்றேன். அந்த நேரத்தில் நான் அங்கு ஒரு பிற ஆடவனை எதிர்பார்க்கவில்லையாதலால், சிறிது தயங்கி திரும்ப எத்தனித்தேன்.
மனோகரி காலையில் அணிந்திருந்த சேலை உட்பட உள்ளாடைகள் அனைத்துமே ‘சோபாவில் வீசப்பட்டிருந்தன. அவள் ‘ஹவுஸ்கோட் அணிந்து, முகமலம்பிய கோலத்துடன் நின்றாள். திரும்பிச் சென்றுவிட முயற்சித்த என்னைத் தடுத்து நிறுத்தினாள்.
யாரோ அவளுடன் வேலை செய்பவராம்!
வீட்டில் ஆடவன் இல்லாத வேளைகளில் பிற ஆடவர்களுக்கு என்ன விசிட்டிங்’ வேண்டிக்கிடக்கிறது!
சிறிய போர்சனாக இருந்தாலும் படுக்கை அறையில் களைய வேண்டிய ஆடைகளை மண்டபத்தில் எதேச்சையாக விட்டு வைப்பதா? இப்படியான கூச்சமில்லாத தன்மை ஒரு பெண்ணிடம் உருவாக காரணமென்ன?
“கவிதா எங்கே?” ஒரு போடிபோக்காகத்தான் கேட்டேன். ஆனால் மனோகரி அவளை கடைவீதிக்கு அனுப்பி வைத்ததான உண்மை அதனால் எனக்கு தெரிய வந்தது. ச்சே … கணவன் இல்லாத சமயம் விவஸ்தையில்லாமல் ஒரு ஆடவன் வருகை தந்தபோது, அவனைப் பிறிதொரு நேரம் வருமாறு பணித்திருக்கலாம். அதனையும் புரியாமல் ஒரு பக்கத்துணைக்கு இருந்த பிள்ளையையும் வெளியே அனுப்புமளவிற்கு என்ன அவசரம் வந்தது.
எனது மனம் வெதும்பியது!
மறுபுறம் மனோகரியின் கணவரது ‘ஸ்கூட்டரில்’ பல்வேறு பெண்கள் ஏற்றிச் செல்லப்படுவதனை நான் பார்த்திருக்கின்றேன். தொழில் பார்க்கும் பெண் ஒருத்தியின் வீட்டிற்கு அவள் இல்லாத வேளை யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதனை யார் கணக்கிடக்கூடும்!
மனோகரிக்காகக் கவலைப்படுவதா…? அவளுடைய கணவனுக்காக அனுதாபப்படுவதா..?
நல்லொழுக்கமுடைய எனது கணவன்…அன்புமிக்க மகன்…பாசமிக்க எனது மகள். இவர்களை நான் ஆகர்சித்து நிற்கின்றேனா?
மாலையானது. கணவர் அலுவலகத்தால் வீடு திரும்பியிருந்தார். மகன் தந்தையிடம் சென்று “அப்பா எனக்கு முதல் மாதச் சம்பளம் கொடுத்து விட்டார்கள்.” என்று கூறிப் பணத்தை அவரிடம் நீட்டியபடியே என்னையும் தங்கையையும் பெருமையுடன் பார்த்துப் புன்முறுவல் செய்கின்றான். இதுவும் கூட மகன் தந்தைக்கு ஆற்றும் பணியாகுமோ என்று நான் சிந்திப்பதற்கு முன்னரே..”தம்பி, அதை அம்மாவிடம் கொடு ஐயா” என்று எனது கணவர் பணிக்கின்றார்.
எனது மெய் சிலிர்க்கின்றது. ஆனந்தக் கண்ணீர் தாரைதாரையாக வழிகின்றது. எனது பதினெட்டு வயது வரை எனக்காகப் பெரும் பாடுபட்டு சீதனம் சேர்த்த எனது தந்தை…கடந்த இருபத்து நான்கு வருட காலமாகத் தனது சம்பளம் முழுவதையும் என்னிடம் ஒப்படைத்துவிடும் குழந்தையுள்ளம் படைத்த எனது கணவர்….தனது முதல் மாதச் சம்பளத்தையே என்னிடம் ஒப்படைத்துவிட்ட எனது பாசமிகு மகன்…
எனக்கு ஏன் ஐயா உத்தியோகம்?
– ஞானம் ஜுன் 2000, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.