ஸ்ட்ரோபரி ஜாம் போத்தலும், அபிஸீனியன் பூனையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: October 25, 2022
பார்வையிட்டோர்: 4,240 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குதிரையே, கேள்!

ஆசை பெரும் கேடு விளைக்கும். இது எனக்குச் சிறு வயதிலேயே அடித்தடித்து போதிக்கப்பட்ட பாடம். ஆனபடியால் வாரா வாரம் ஸ்ட்ரோபரி ஜாமில் ஏற்படும் ஆசையைக் கட்டி வைக்க முயன்றேன். ஆனாலும் முடிய வில்லை. சுப்பர் மார்க்கட்டில், கடுமையான கத்தரிக் கலரில் ஜொலித்துக்கொண்டு, நிரையாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் போத்தல்களைப் பார்க்கும் போதெல்லாம் ஆசை பொங்கும். செய்த சங்கல் பங்களை மறந்து வாங்கி விடுவேன்.

ஆனால் அத்துடன் பிரச்சினை தீராது. இந்த ஜாம் போத்தல்களைச் செய்யும் Sun Fresh கம்பனிக்கு ஒரு கவலை இருந்தது. இரவிலோ, அல்லது மனிதக் கண்கள் கண்காணிக்காத நேரத்திலோ, யாராவது இந்த மூடியைத் திறந்து ஜாமை அபகரித்துவிடுவார்கள் என்று பயந்தது. ஆனபடியால் மிக உயர்ந்த மெசின்களைக் கொண்டு அந்தப் போத்தல்களின் மூடிகளை இறுக்கித் தயாரித்தி ருந்தார்கள். அதனால் என் அறையில் நிரையாக ஜாம் போத்தல்கள் இருந்தன, திறக்கப்படாமல் . இவற்றை நான் எவ்வளவு முக்கியும் திறக்க முடியவில்லை .

டோல்ரஸ் நீளமான பெண். ஒல்லி என்றாலும் அவள் கைகள் முறுகி, இறுகி இருக்கும். அவள் உடம்பில் இடைக்கு மேலேயும் சரி, கீழேயும் சரி, ஒரு சதைத் துண்டையும் பிடிக்க முடியாது. அவளுக்கு நீண்ட கண்கள், நீண்ட மூக்கு, நீண்ட விரல்கள். இந்த விரல்கள் போத்தல்கள் திறப்பதற்காக, அதிலும் Sun Fresh கம்பனி யின் ஜாம் போத்தல் மூடிகளைத் தளர்த்துவதற்காகவே, படைக்கப்பட்டவை. என் அறைக்கு அவள் வரும் போதெல்லாம் சர்வ சாதாரணமாக அந்த நீண்ட விரல் களை ஒரு சிலந்தியின் கால்களைப் போல பரப்பி, மூடியைக் கவ்வி ஒரு திருகிலேயே திறந்து விடுவாள்.

இப்படித்தான், ஒரு பெண் போத்தல் மூடி திறக்கும் லாவகத்திலே லயித்துக் காதல் வயப்பட்டது இந்த உலகத்திலேயே நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.

டோல்ரஸ் என்னைப் போல sophomore என்று அழைக்கப்படும் இரண்டாம் வருட மாணவி. சிவந்து நீண்ட அலகுடைய ஒரு பறவை யின் முகத்தைப் போல அவளுடைய முகம் கூரானதாக இருக்கும். அந்தக் குருவியைப் பழிப்பதுபோல ஒரு பக்கம் தலையைச் சாய்த்தபடி பேசுவாள். Resistors பற்றிய ஆய்வுக்குழுவில் என்னுடன் இருந்தாள். ஒரு அமெரிக்க கப்பல் மாலுமிபோல கால்களை அகட்டிவைத்து, கைகளைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு, 200 B.C.ல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ உலோகக்கலவை பற்றி பேராசிரியரிடம் எங்களுக்காகப் போராடியவள். கோபாவேசமான இவளுடைய கணங்கள் அதிகமானது என்று நான் உணர்ந்தது அப்போதுதான்.

இந்தப் பேராசிரியர் சொல்வார், உலகத்திலேயே முழு மூடன் ஒருவன் இருந்தால் அவனால் பெரும் உபயோகம் என்று. அவனிடம் ஒரு காரியத்தைச் செய்யக் கொடுக்க வேண்டும். அவன் எப்படி அதைச் செய்கிறானோ அதற்கு எதிர் திசையில் நாம் அந்தக் காரியத்தைச் செய்தால் வெற்றியாகும்.

டோல்ரஸ் இதைக் கேட்டு வயிற்றை அமுக்கிப் பிடித்துக்கொண்டு சிரித்தாள். நான் பரீட்சைகள் எழுதுவதிலும், எழுதிய பரீட்சைகளின் முடிவுகளுக்கு காத்திருப்பதிலும் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும் போது இவள் பாடப் புத்தகங்களைத் தொடுவதேயில்லை. நான் செய் வதற்கு எதிராகத் தான் செய்யப் போவதாகவும், தனக்கு வெற்றி நிச்சயம் என்றும் கூறி வந்தாள்.

போட்டரிக்காவில், காற்றுப் புயல் அடிக்கும் ஒரு கிராமத்தில் தான் பிறந்ததாகச் சொல்லுவாள். ஒரு தகரம் போட்ட வீட்டில், அப்பா பாரில் குடித்துக்கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டுப் பெண் மருத்துவம் பார்க்க, பிறந்தாளாம். இழுப்பதற்கு வசதியாக கால்கள் முதலில் தோன்றியபடியால் அதைப் பிடித்து இழுக்க வெளியே வந்து விழுந்ததாகச் சொல்லுவாள். அவளுடைய கால்கள் இன்று வரை நீளமாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்று அவளுடைய அம்மா தீவிரமாக நம்புகிறாளாம்.

டோல்ரஸ் கல்லூரி வகுப்புகளுக்கு அடிக்கடி மட்டம் போட்டு விட்டு நூலக மூலையிலிருந்து ஏதாவது படித்தபடி இருப்பாள். ஒருமுறை என்ன படிக்கிறாள் என்று எட்டிப் பார்த்தேன். Don Quixote என்று பெரிய எழுத்தில் தலைப்பு போட்டிருந்தது. அவள் படிப்பதற்கும் எங்கள் பாடங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக் குமோ என்று எனக்கு அடிக்கடி பயம் பிடித்துவிடும். வகுப்பில் நான் சிரத்தையாக எடுக்கும் குறிப்புகளை என்னிடம் வந்து கடன் வாங்குவாள். நான் போய் எடுக்கும் வரை அவை திரும்பி வராது.

அஸ்வமே, இன்னும் இருக்கிறது, கேள்.

ஒருநாள் அவளுடைய அறைக்குப் போனபோது அங்கே ஒரு மூன்று வயது பெண்குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது.

‘இதோ என்னுடைய மகள், எலினா என்று அறிமுகப்படுத்தினாள். எலினா, போட்டரிக்காவில் இருந்து வந்திருந்தாள். இரண்டு வாரம் தங்கிவிட்டு திரும்பிப் போய்விடுவாளாம்.

ஒரு முழு நிமிடம் என் வாயில் பேச்சு வரவில்லை.

‘உனக்கு மணமாகிவிட்டது என்பதை எனக்குச் சொல்லவில்லையே?’ என்றேன்.

‘மணமாவதற்கும் பிள்ளை பெறுவதற்கும் என்ன சம்பந்தம்?’ என்றாள்.

‘என்ன, உனக்கும் நட்சத்திரம் வந்து வயிற்றிலே உதித்ததோ?’

‘எனக்கு விருப்பமான ஒருவன், ஆமை இறைச்சி சாப்பிடாதவன், அவனுடைய உதவியில் பிறந்தவள் தான் எலினா’

‘நீ எனக்கு ஏன் முன்பே சொல்லவில்லை?’ என்றேன்.

‘நீ யார்? என்னுடைய சுயசரிதை எழுத நியமிக்கப்பட்டவனா?’

எனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டேன். ஆனால் அவள் சொண்டுக்குள் ‘சுத்தமான மூடன், சுத்தமான மூடன்’ என்று முணுமுணுத்தது மட்டும் கேட்டது.

அந்தக் கோபத்தை நீடிக்கும் சந்தோசம் எனக்குக் கிடைக்கவில்லை. அடுத்த நாள் அதிகாலை டோல்ரஸ் என் அறைக் கதவைத் தட் டினாள். இது அதிசயமான விஷயம். ஏனென்றால் டோல்ரஸ் காலை பத்து மணிக்கு முன் எழும்புவது கிடையாது. எலினாவைக் கூட்டி வந்திருந்தாள். டோல்ரஸ்ஸுக்கு கல்லூரியில் முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறபடியால் நான் ஒரு மணி நேரம் அந்தப் பெண் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்.

எலினா மிகவும் ஆயத்தமான குழந்தை. தன் புத்தகங்களையும், விளையாட்டு சாமான்களையும் மூட்டையாகக் கட்டி எடுத்து வந்தி ருந்தாள். மிகவும் பழகியவள் போல அங்கே தங்கியிருந்த மற்ற அறைவாசிகளுக்கு ‘ஹலோ , ஹலோ’ சொல்லிவிட்டு வந்தாள். அங்கிள், இந்த ஷூவைப் பாருங்கள்’ என்றாள். அப்பொழுதுதான் பார்த்தேன். முகப்பிலே லைட் பொருத்திய சப்பாத்து. அவளுடைய சிறிய பாதங்களுக்கு அது ஒரு சைஸ் கூடியதாக இருந்தது. அவற்றை அணிந்து இறுக்கக் கட்டியும், கழற்றியும் மாறிமாறிப்போட்டு விளை யாடினாள். ஒன்றிரண்டு முறை அதை அணிந்து தொப்பு தொப்பென்று நடந்தபோது அந்த ஒளியும் அவளுடன் ஆடியது.

திடீரென்று அங்கிள் ஒரு கதை சொல்லுங்கள்’ என்றாள். முழுக் கையையும் நீட்டி ஒரு புத்தகத்தைக் கொடுத்தாள். அண்ணன் பெயர் ஹன்ஸல்; தங்கை பெயர் கிரேட்டல். இருவரும் காட்டுக்குப் போகும் வழியில் ரொட்டித் துண்டுகளைப் போட்டபடியே சென்றார் கள். அந்தத் துண்டுகளைப் பறவைகள் கொத்தித் தின்றுவிட்டபடியால் திரும்பும் போது வழி தவறிவிட்டது. ஒரு சூனியக்காரியிடம் மாட்டிக் கொண்டார்கள். அவர்களைக் கொழுக்க வைத்து சாப்பிடுவதற்கு அவள் சமயம் பார்த்திருந்தாள். ஒருநாள் அவளிடமிருந்து சாமர்த்திய மாக அவர்கள் தப்பி நேராக வீடு வந்து சேர்ந்தார்கள்.

‘ஆகவே இதிலிருந்து தெரியும் படிப்பினை என்ன? சூனியக்காரியி டம் பிடிபட்டால் வீட்டுக்குத் திரும்பும் வழி எப்படியும் தெரிந்துவிடும்.’

அந்தப் பெண் குழந்தை வாய் விட்டு சிரித்தது. அவளுடைய முகம் தாயினுடையது போல கூம்பியிருந்தது. ஆனால் அந்தக் கண்கள் மட்டும் நீலமாக ஆமை இறைச்சி சாப்பிடாதவனுடைய கண்கள் போல இருப்பதாக எனக்குத் தோன்றியது.

வாய்நீர் இருபக்கமும் ஒழுக, புல்லை சாப்பிடும் துரகமே,
இதையும் கேட்டு விடு.

பல நாட்கள் காக்க வைத்த பிறகு ஒருநாள் மாலை டோல்ரஸ் என்னுடன் வருவதற்கு சம்மதித்தாள். அபூர்வமாகக் குறித்த நேரத்துக்கு வந்துவிட்டாள். பயிற்சிக்காலம் முடிவடையாத ஒரு சிகை அலங்காரியிடம் அவள் முடி திருத்தியிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இறைச்சி பிளந்தது போல சிவந்த அதரங்கள். இடது கையிலே மட்டும் பழுப்பு நிறத்திலான ஒரு ஜேட் காப்பு. அவள் கை நிறத்துக்குப் பொருத்தமாக இருந்தது.

மிகவும் சாதாரண உணவகத்தில் தயாரித்த மலிவு விலை சாப்பாட்டை உண்டுவிட்டு ‘பாறைக்குப் போகலாம்’ என்றாள். இந்தப் பாறை எங்கள் கல்லூரியில் மிகவும் பிரசித்தமானது. ஒரு ஒதுக்குப்புறத்தில் ஆயிரமாயிரம் கால்கள் பட்டு தட்டையாகவும் வழவழப்பாகவும் இருந்தது. இரண்டு பாய்ச்சலில் ஒருவர் உதவியும் இல்லாமல் டோல்ரஸ் பாறையின் உச்சிக்கு ஏறிவிட்டாள்.

சூரியன் முற்றிலும் மறைந்த பிறகு மிச்சமாயிருக்கும் வெளிச்சத்தில் அவள் முகம் ஒரு பூனையினுடையது போலத் தோன்றியது. இதமான குளிர் காற்று தொட்டு வீசியது. வெகு நேரம் ஒன்றும் பேசாமல் அவள் சுவாசக் காற்று கொடுக்கும் சத்தத்தையே கேட்டுக்கொண் டிருந்தேன்.

‘உன் உடம்பு முழுக்க என் காதலால் தோய்க்கப்பட்டு இருக்கிறது. உனக்குத் தெரியவில்லையா? உன் பதிலைச் சொல்லு. அவசரமே இல்லை. வேண்டிய நேரம் நீ எடுக்கலாம். வேண்டுமானால் பத்து செக்கண்ட் கூட எடுக்கலாம்’ என்றேன்.

என்ன நினைத்தாளோ, அவள் மௌனமாக இருந்தாள். அது அவளுடைய இயல்புக்கு மாறானது. தடவித் தெரிந்து கொள்ள வேண்டிய இருட்டு கவிந்துவிட்டது. நாலைந்து மூச்சுக்களை சேமித்து ஒரே மூச்சாக விட்டாள். மனிதனால் படைக்கப்பட்ட உலகத்து கார்கள் எல்லாம் கீழே அதிவேக சக்தியோடு நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக ஒளி வெள்ளத்தை முகத்தில் விட்டு விட்டு அடித்தபடி உருண்டு போக, எனக்குப் பக்கத்தில் அவள் நின்றாள். ஒரு ஒளி வெள்ளம் போய் மற்ற ஒளி வெள்ளம் வருமுன் ஏற்பட்ட இடைவெளியில் என்னை அணைத்து நீண்ட முத்தம் ஒன்று தந்தாள்.

இதற்குப் பிறகு, என் ஆசையை நான் அளவு மீறி வளர்த்து விடக்கூடாது என்பதை ஞாபகமூட்டும்படி ஒரு சம்பவம் நடந்தது.

இடைப் பரீட்சை நடந்து முடிந்த ஒரு மாலைப்பொழுது. நண்பர்கள் பலர் சேர்ந்துவிட்டார்கள். இப்படியான சமயங்களில் டோல்ரஸ் ஒரு பியருக்கு மேலே குடிப்பதில்லை. அன்றும் அப்படியே இருக்கலாம். நான் எண்ணத் தவறிவிட்டேன். மேசையின் மீது தாவிக் குதித்தாள். ‘நான் உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோசமான செய்தி சொல்லப் போகிறேன்’ என்று சொன்னபடி என்னைச் சுட்டிக்காட்டினாள். ‘நண்பரும் நானும் விரைவில் மணமுடிக்கப்போகிறோம்.’ எல்லோரும் ஆரவாரம் செய்தார்கள். சீட்டி அடித்தார்கள். அடிக்கத் தெரியாதவர் கள் அன்று பழகிக்கொண்டார்கள். கையமர்த்திவிட்டுத் தொடர்ந்தாள். ‘என்னுடைய நண்பரைப் பாருங்கள். அவருடைய உயரமின்மையை நான் பொருட்படுத்துவதில்லை. என் கழுத்தை அவருடைய நாக்கு தொடும்படிக்கு அவர் வளர்ந்த அன்று அவரை மணப்பதற்கு நான் சித்தமாக இருக்கிறேன்’ என்றாள். சிலர் ஹாஹா’ என்று சிரித்தார்கள்; சிலர் கை தட்டினார்கள். எல்லோரும் என் முதுகிலே குத்தினார்கள். முதுகுத்தண்டை வளர்ப்பதற்குக் கொடுத்த அச்சாரமாக அதை ஏற்றுக்கொண்டேன்.

அன்று கல்லூரியில் Integral Calculush ஓர் அபூர்வமான கணித நுட்பம் பற்றிய விவாதம் நடந்தது. டோல்ரஸ் வரவில்லை. அவளைத் தேடிப்போனேன்.

அறைக்கதவை நான் திறந்ததும் நல்ல காட்சி ஒன்று கிடைத்தது. நிலத்திலே ஒரு கும்பல் உடுப்பு. ஜீன்ஸ், நிக்கர், ஸ்வெட்டர், பிளவுஸ், பிரா என்ற ஓடரில் துகில் நீக்கியிருப்பதற்கான அறிகுறியுடன் அவை ஒன்றன் மேல் ஒன்றாகக் கிடந்தன. இனி அவள் அதைத் திருப்பி அணியும் போதும் அதே முறையில் அணிவாள் என்று எதிர் பார்க்கலாம்.

ஒரு வெல்வெட் மாதிரியான பசுந்துணியில் தயாரித்து மெத்தென இருக்கும் மயில் நீல பிளவுஸ் ஒன்று அவளிடம் இருந்தது. கடந்த இரவு அதைத்தான் அணிந்திருந்தாள் போலும். கடந்த வாரமும் அதைத்தான் உடுத்தினாள்; கடந்த மாதமும் அதுதான்; கடந்த வருடமும் அதையேதான் அணிந்திருக்கலாம்.

நாலு தடித்த கால் சோபா ஒன்றில் ஒரு முரட்டு கம்பளிப் போர்வையால் மூடிக்கொண்டு முழங்கால் நாடியைத் தொட, படுத்திருந்தாள். அவளுடைய படுக்கையில், நட்ட நடுவில் ஒரு அழகான பூனை தூங்கியது. சொக்லட்டுக்குக் கொஞ்சம் தகுதி குறைந்த நிறத்தில், தொட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும்படி, கத்தை கத்தையாக மெத்தென்ற ரோமம் கொண்ட பூனை. கால் களிலும் வாலிலும் ஒரு சொட்டோ சொட்டு கறுப்பு. மஞ்சள் கண்கள். அதனுடைய இமைகளை அவசரமின்றி மூடி அவசரமின்றி திறந்தது. சோம்பலாக என்னைப் பார்த்துவிட்டு மறுபடியும் சயனமாகி விட்டது.

‘இது என்ன பூனை, சொல்லு பார்ப்போம்?’ என்றாள். வான சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், பூனை சாஸ்திரம் ஒன்றிலும் பரிச்சயம் இல்லாத நான் என் புத்தி போகும் தூரத்துக்கு யோசித்து சயாமிஸ் பூனை’ என்றேன்.

‘இல்லையே. அபிஸீனியன் பூனை! பூனைகளின் மூதாதை. எகிப்தில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு வழிபாடு செய்யப்பட்டது என்றாள்.

‘அவ்வளவு வயதா?’ என்றேன் நான்.

‘சுத்த மூடன், சுத்த மூடன்’ என்றாள் அவள்.

இந்தப் பூனை வந்த பிறகு அவளிடம் ஒரு பெரிய மாற்றம் தென்பட்டது. அவள் கையிலே Don Quixote புத்தகம் இருக்கும். மடியிலே பூனையை வைத்துத் தடவிக்கொண்டு இருப்பாள். நீண்ட விரல்களில் அரைவாசி அந்தப் பூனையின் செழித்த மயிர் பிரதே சத்துக்குள் மறைந்துவிடும். அந்தப் பூனையும் அவளுடைய உருண்டை யான தொடைகளில் நீளவாக்காகப் படுக்கப் பழகிக்கொண்டது. பூனை தொக்கையாக வரவர அவளுடைய புத்தகத்தின் படிக்காத பக்கங்களின் தொக்கைத்தன்மை குறைந்துகொண்டு வந்தது.

இரண்டு பெரிய மூக்குத் துவாரங்கள் இருந்தும்,
மேலுதட்டினால் மூச்சுவிடும் கந்தகமே, மீதியையும்
சொல்லி விடுகிறேன்.

என்னுடைய Integral Calculus குறிப்புகளை ஒருநாள் அவள் கொண்டு போய்விட்டாள். இரவு முழுவதும் கண்விழித்துத் தயாரித்த குறிப்புகள் அவை. அவற்றை மீட்பதற்காகப் போயிருந்தேன். என் நோட்ஸை கேட்ட போது எரிச்சல்பட்டாள். தவழ்ந்து தவழ்ந்து அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினாள். சில அவளது சோபாவின் அடியிலும், சில படுக்கையிலும் கிடந்தன. சில தாள்களின் மூலையில் பூனையின் ஏதோவொன்று ஒட்டிக்கொண்டிருந்தது போலப் பட்டது. நான் மூன்று விரல்களை நீட்டி, இரண்டு விரல்களால் ஒற்றைகளைப் பிடித்து, பக்கங்களை எண்ணி சரிபார்த்தபடி ஒரு கேள்வியைக் கேட்டேன்.

உலகத்திலே சண்டையை உண்டாக்கும் கேள்விகள் சில இருக்கின் றன. அந்தக் கேள்விகளை ஊகிப்பதும் அவ்வளவு கஷ்டமானதல்ல. அவளுடைய பூனைக்கு என்ன பேர் என்று கேட்பது அப்படிப்பட்ட கேள்வியா? நான் கேட்டுவிட்டேன். அதிலிருந்துதான் மிகப் பெரிய போர் ஒன்று ஆரம்பமாகியது.

அந்தப் பூனையின் பெயர் கஸில்டா என்றாள். ‘கஸில்டா யார்?’ என்று கேட்டேன். அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.

‘நீ என்ன இலக்கியம் படிக்கிறாய். உலகத்தின் தலைசிறந்த ஆர்ஜண்டீனிய படைப்பாளி தந்த கதாநாயகி அல்லவா! தெரியாதா? என்றாள்.

தோல்வியை ஒப்புக்கொள்ள மனது வரவில்லை. சமாளிக்கப் போய் இன்னும் சேற்றுக்குள் மாட்டிக்கொண்டேன்.

‘கஸில்டாவின் குணாதிசயம் இதற்கு எப்படி பொருந்தும்?’

‘இது என்ன கேள்வி? எவ்வளவு காதலைக் கொட்டினாலும் திருப்பிக் காதலிக்காத பெண்’

‘அதைத்தான் சொல்கிறேன். பொருந்தாதே?”

‘அதுதான் நாய்க்கும் பூனைக்கும் உள்ள வித்தியாசம். இந்தப் பூனையில் நான் எவ்வளவுதான் அன்பைக் கொட்டினாலும் அது என்னை ஒரு நண்பியாக ஏற்பதே கிடையாது. தன்னுடைய இயல்பை அது மாற்றுவதே இல்லை. எப்பொழுதும் பூனையாகவே இருக்கும்.’

‘நீ இதைப் பூனைக்குச் சொல்கிறாயா? அல்லது எனக்குச் சொல்கிறாயா?’

‘பூனைக்குச் சொல்லத் தேவை இல்லை. அது மதியூகம் படைத்தது.’

மிகவும் பாரதூரமான ஒரு கதையை உனக்கு நான்
சொல்கிறேன். அதற்குரிய மரியாதை தந்து கேட்பாயாக,
பரியே.

அன்றிலிருந்து நான் முகம் கொடுக்கவில்லை. அவள் வரக்கூடிய இடங்களை முன்கூட்டியே அனுமானித்து அவற்றைத் தவிர்த்தேன். டெலிபோனை எடுப்பதில்லை. அதில் அவள் விடும் தகவல்களை யும் சட்டை செய்வதில்லை.

ஒருநாள் அவள் டெலிபோனில் இப்படி ஒரு செய்தியை விட்டி ருந்தாள் : ‘உன்னுடைய குரலுடன் பேசியது எனக்கு மிகவும் சந் தோசம். இந்த ஒரு வாரத்தில் உன் குரலுடன் பலமுறை பேசியிருக்கி றேன். ஆனால் நீ விடும் தகவல் ஒரே மாதிரியாக இருக்கிறது. கல்லூரி விடுமுறை தொடங்க முதல் உன்னுடைய உடம்புடன் கூடிய குரலுடன் பேச ஆசைப்படுகிறேன்.’

முழுவதும் பசப்பல்.

பனி பெய்து சேறாகிய ஒரு நாள் அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வேகமாக என்னைத் தாக்கியது. அவசரத்தில் கையுறை கூட அணியாமல் வெகுநேரம் நடந்து அவளுடைய அறைக்குப் போனால் அவள் அங்கே இல்லை. ஜோசெப் ஹெல்லர் எழுதிய Catch 22 புத்தகம் பாதி படித்தபடி தலைகுப்புறக் கிடந்தது. விஸ்காஸ் என்ற பூனை உலர் உணவு பெட்டிகள் பன்னிரெண்டு ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 25 வீதம் தள்ளுபடி என்பதால் வாங்கப்பட்டவை. அந்த வாரம் cafeteriaவில் அவள் வேலை செய்து சம்பாதித்த அவ்வளவு பணமும் இப்படி பூனை உணவு வாங்குவதில் செலவழிந்துவிட்டதாகப் பின்னால் அறிந்தேன்.

அந்தப் பூனை, கவனயீனமாகத் திறந்துவிட்ட உள்ளறையின் கதவில் தொற்றிக்கொண்டு என்னைச் சம்சயத்தோடு பார்த்தது. நான் நண்பனா எதிரியா என்பதை அது இன்னும் தீர்மானிக்க வில்லை. பிறகு ஒரு கொட்டாவி விட்டு தன் அசிரத்தையைக் காட்டியது.

காசை மிச்சப்படுத்துவதற்காக மிகக் குறைந்த வெப்பநிலையில் அறையின் உஷ்ண முள்ளைத் திருப்பி வைத்திருந்தாள். என்னுடைய மேலங்கியைக்கூட கழற்றாமல், முழங்கால்கள் ஒட்ட, அவளுடைய சோபாவில் நெடுங்காலமாக வசித்த ஒரு லேஸ் வைத்த உள்ளா டையைத் தள்ளிவிட்டு, உட்கார்ந்து என்னுடைய காத்திருக்கும் வேலையைத் தொடங்கினேன். நல்லகாலமாக எனக்குப் பிடித்த அவளின் மெல்லிய வியர்வை நெடி அவளுடன் போகாமல் அங் கேயே தங்கியிருந்தது.

இரவு இரண்டு மணி வரை அவளுக்காகக் காத்திருந்ததை அடுத்த நாள் கூறினேன். அவள் ஆச்சரியப்படவில்லை . நூற்றுக்கணக் கான வாலிபர்கள் இப்படி அவளுக்காகக் காத்திருப்பது வழக்கம் என்பது போல நடந்து கொண்டாள்.

எவ்வளவு சோம்பேறித்தனம் இருந்தாலும் கல்லூரிக்குக் கட்டுரை கொடுக்கும் நாளை அவள் தவறவிட்டதில்லை. மூன்று பக்கக் கட்டுரை ஒன்று தேவையென்றால் சரியாக மூன்று தாள்களை எடுத்துக்கொண்டு அச்சடிக்கச் செல்வாள். அவளுடைய கட்டுரையும் சரியாக மூன்று தாள்களில் அச்சடித்து முடியும். ஒருமுறை கூட அச்சடித்ததைத் திருப்பி சரிபார்க்க மாட்டாள். ஒருநாளாவது அவளுடைய மதிப்பெண் A+க்கு குறைவாகக் கிடைத்து நான் பார்க்கவில்லை.

பாடம் நடந்துகொண்டிருந்தது. முழங்கையால் என்னை இடித் தாள். ஏய் , உன் நகங்களைப் பார்! இந்த அரைச் சந்திர வடிவங்கள் அபூர்வமானவை. எப்படி வெள்ளை வெளேரென்று இருக்கின்றன, பார்த்தாயா? உனக்கு ஒரு பெண்ணினால் அதிர்ஷ்டம் கிட்டும்’ என்றாள். |

இது என்ன, போட்டரிக்கா சாஸ்திரமா? எனக்குத் தெரிந்தது ஓர் உயரமான பெண்தான். அவளுடைய காதுகள் வெகு தூரத்தில் இருக்கிறபடியால் நான் சொல்லும் வாசகங்கள் அவளுக்கு எட்டுவ தில்லை . இதில் எப்படி எனக்கு அதிர்ஷ்ட ம் வரும்?’ என்றேன்.

இவ்வளவு சீக்கிரம் தைரியம் இழக்கக்கூடாது. யார் கண்டது, நீ அவளுக்குக் கடன் கொடுத்த thermodynamics குறிப்புகள் உனக்கு திரும்பக் கிடைத்தாலும் கிடைக்கும்.’

அவள் கால்களை எட்டி வைத்துப் போகும் போது திரும்பி என்னைப் பார்த்து, பற்கள் தெரிய சிரித்து, பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பினாள். அது என்னிடம் வந்து சேர்வதற்கிடையில் ஒரு வாயிலோன் குறுக்கிட்டு விட்டான்.

உன் முன்னங்கால்களில் எது வலது கால், எது இடது கால் என்று நீ அறியாவிட்டாலும் வலது காலை மட்டும் தூக்கி கதவு தட்டுவது போல நிலத்தை தட்டுகிறாயே, முடிவையும் சொல்கிறேன் கேள், புரவியே. அன்று எப்படியும் அவளை மடக்கிவிட வேண்டும். அவளறி யாமல் அவளைத் தொடருவதென்று முடிவெடுத்தேன். வெகு நேரம் அவள் செய்கைகளைக் கவனித்தபடி அவளைப் பின் தொடர்ந் தேன். காத்திருந்தேன். தொடர்ந்தேன். காத்திருந்தேன்.

நாளின் நிறம் மாறிவிட்டது. நீளமான தோல்வார் கொண்ட அந்த மொசமொசவென்ற சிவப்புப் பையைத் தூக்கிக்கொண்டு, அதனுடைய தபால் தலை அளவு பக்கிள் அந்த மங்கிய வெளிச்சத் திலும் ஜொலிக்க, அபிஸீனியன் பூனையைத் தோற்கடிக்கும் பழுப்பு நிறக் கண்களை வீசிக்கொண்டு எதிர்த் திசையில் நடக்கத் தொடங்கினாள்.

நான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை எடுப்பதற்கு இரண்டே இரண்டு செகண்டுகள் இருந்தன.

பேராசிரியர் சொன்ன சுத்த மூடன்’ கதை ஞாபகத்துக்கு வந்தது. ஒரு சுத்த மூடன் எடுக்கும் முடிவுக்கு நேர் எதிரான முடிவை ஒருவன் எடுத்தால் எல்லாம் சரியாகி விடும். அப்படியே செய்வதென்று தீர்மானித்தேன்.

அவசரப்பட்ட காற்றுப்போல சிகை கலைய, நீண்ட கறுப்பு காலுறைகள் பளபளக்க, அவள் சாலையைக் கடந்தாள். அவளைத் தின்னவேண்டும் போலப் பட்டது.

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *