கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 26,889 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னுரை

ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A Midsummer Night’s Dream), சிம்பலின் (Cymbeline), கார்காலக் கதை (The Winter’s Tale), ஒதெல்லோ (Othello) ஆகிய நான்கு கதைகளும் வெளிவருகின்றன. இப்பதிப்பில், சிறுவர்கட்குக் கதைகள் நன்றாய் மனத்திற் பதியும் பொருட்டுக் கதை உறுப்பினர்களையும் கதைச் சுருக்கத்தையும் ஒவ்வொரு கதையின் முகப்பில் எழுதிச் சேர்த்திருக்கிறோம். இளைஞர்கள் படித்து இன்புறத்தக்க எளிய இனிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆதலின், இவற்றைக் கற்கும் மாணவர் அறிவு வளர்ச்சியுடன் மொழித் தேர்ச்சியும் பெறுவர் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

கதை உறுப்பினர்

ஆடவர்

1. ஸிம்பலின்: பிரிட்டன் அரசன் – இமொஜன் தந்தை.
2. கிளாட்டென்: ஸிம்பலினை மணக்குமுன்னைய அரசியின் மகன்.
3. பாஸ்துமஸ்: போரிலிருந்த வீரன் மகன்-ஸிம்பலின் வளர்ப்புப் பிள்ளை – இமொஜென் காதற் கணவன்.
4. அயக்கீமோ: பாஸ்துமஸுடன் பழகிய தீய இத்தாலிய இளைஞன்- இமொஜென் வகையில் அவனை ஏமாற்றியவன்.
5. பீஸானியோ: ஸிம்பலின் அரண்மனை வேலையாள் – பாஸ்து மஸின் உண்மை நண்பன்.
6. பெலாரியஸ்: ஸிம்பலினால் நாடு கடத்தப்பட்டு அவன் பிள்ளைகளிருவரையும் கவர்ந்து காடு சென்று வளர்த்தவன்.
7. கிடரியஸ் ஸிம்பலின் பிள்ளைகள் – இமொஜென் உடன் பிறந்தார்–பெலாரியஸால் கவர்ந்து வெல்லப்பட்டுக் காட்டில் வளர்ந்தவர். மாற்றுருவில் பாலியடார் காட்ஸல் என்றழைக்கப்பட்டவர்.
8. அர்விராகஸ் – இமொஜென் உடன் பிறந்தார்–பெலாரியஸால் கவர்ந்து வெல்லப்பட்டுக் காட்டில் வளர்ந்தவர். மாற்றுருவில் பாலியடார் காட்ஸல் என்றழைக்கப்பட்டவர்.
9. லூஸியஸ்: ரோம் படைத்தலைவன் – இமொஜெனை ஆணுருவில் ஆதரித்தவன்.
10. பிடேலே: இமொஜெனுக்கு ஆணுருவில் பெயர்.

பெண்டிர்

1. அரசி: ஸிம்பலின் இரண்டாம் மனைவி – கிளாட்டென் தாய் – கொடியவள்.
2. இமொஜென்: ஸிம்பலினுக்கு முதல் மனைவியிடம் பிறந்த புதல்வி – கிடரியஸ் அர்விராகஸின் தமக்கை . மாற்றுரு-ஆண்- பிடேலே.

கதைச் சுருக்கம்

பிரிட்டனின் அரசன் ஸிம்பலினுடைய முதல் மனைவி இறந்த பின் அவன் வேறுமணம் செய்துகொண்டான். முதல் மனைவி யால் இமொஜென் என்ற மகளும் கிடரியஸ் அர்விராகஸ் என்ற இரு புதல்வரும் இருந்தனர். அரசனிடம் பகைமை கொண்ட பெலாரியஸ் என்ற வீரப் பெருமகன் அவர்களைக் கவர்ந்து காடு சென்று ஒரு குகையில் பாலிடோர் காட்வெல் என்ற பெயர்களு டன் அவர்களை வளர்த்து வந்தான்.

அரசி அரசனை மணக்குமுன்னுள்ள தன் மகனாகிய கிளாட் டெனுக்கு இமொஜெனை மணந்து அரசுரிமையைப் பெற எண்ணி னாள். ஆனால் இறந்துபோன ஒரு வீரன் மகனும் ஸிம்பலினால் எடுத்து வளர்க்கப்பட்டவனுமான பாஸ்துமஸை அவள் காதலித்து மறைவில் மணஞ்செய்து கொண்டாள். இதனை அறிந்த அரசி பாஸ்துமஸை நாடு கடந்திள்ை.

பாஸ்துமஸ் இத்தாலி நாடு சென்று இன்ப வாழ்விலீடுபட்ட நண்பர்களுடன் காலங்கழித்தான். அவர்களில் ஒருவகிைய அயாக்கிமோ என்ற தீயவன் அவன் நாவைக்கிளறித் தன் மனைவி யின் கற்புடைமைமீது ஆயிரம் பொன் பந்தயம் வைக்கத் தூண்டி னான். இமொஜனைக் கண்டதும் நம்பிக்கை யற்றது. ஆனால் வஞ்சகமாய்ப் பாதுகாப்புக்காக அவளறையில் வைக்கச்சொன்ன பெட்டகத்தி ஓட்கார்ந்து உடற்குறி முதலிய மறைச் செய்திக ளறிந்து கைவளையையும் கவர்ந்து இவற்றால் பாஸ்துமஸ் தன் – பொய்யை நம்பவைத்துப் பந்தயத்தையும் இமொஜென் கணையாழியையும் பெற்றான்

பாஸ்துமஸ் இதனால் பித்துக்கொண்டு அரண்மனை வேலையா ளான பிஸானியோ என்ற தன் உண்மை நண்பனுக்கெழுதி, அவளைக் கொல்லத் தூண்ட, அவன் செய்தியைக் கூறிவிட்டு அவனை விட்டுச்சென்றான். அப்போது அவன் இமொஜெனைக் கொல்ல எண்ணி நஞ்சொன்று மருத்துவனிடம் வாங்கி மருந்தென்று சொல்லிக்கொடுத்த மயக்க மருந்தையும் அவளிடம் கொடுத்தான். இமொஜென் அதனுடன் தற்செயலாக கிடரியஸ் அர்விராகஸை அடுத்து உடன்பிறந்தார் என்றறியாமல் அவர்களை உடன் பிறந்தாராக நடத்தினாள். பின்னொரு நாள் அயர்வால் அம் மருந்து கொண்டிறந்தாற்போற் கிடக்க, சிறுவர் பூப்பெய்து உடலை அடக்கஞ் செய்து போக, அவள் பின் எழுந்து சென்றாள்.

இச்சமயம் ரோமர் படையெடுக்க , பாஸ்துமஸ், பெலாரியஸ், சிறுவர் முயற்சியால் ரோமர் முறியடிக்கப்பட்டார்கள். ஆண் வடிவுள் இமொஜென் ரோமனாகிய லூஸியஸால் ஆதரிக்கப்பெற்று அவனுடன் சிறைப்பட்டாள். பாஸ்துமஸ் உயிர் வெறுத்து ரோமனாக நடித்துச் சிறைப்பட்டான். இமொஜென் கணவனைக் கண்டதுடன் அயாக்கி மோவிடம் தன் கணையாழி கண்டு, தன்மீது இரங்கிய அரசனிடம் வேண்டி அவனை ஒறுத்து உண்மை விளக் கித் தன் உருக்காட்டி எல்லோரையும் மகிழ்விக்கின்றாள்.

2. ஸிம்பலின்

க. காதலர் பிரிவு

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் (அஃதாவது இங்கிலாந்தில்) ஸிம்ப லின் என்றோர் அரசன் இருந்தான். அவனுடைய முதல் மனைவி இறந்தபின் அவன் மீண்டும் மணம் செய்து கொண்டான். முதல் மனைவி மூலமாக அவ னுக்குப் புதல்வி ஒருத்தியும் புதல்வர் இருவரும் இருந் தனர். இரண்டாம் மனைவி பேராசை யுடையவள். அவள் எப்படியாவது அரசுரிமையைத் தன் வசப் படுத்த நினைத்தாள். முதல் மனைவியின் புதல்வர் இருவரும் சிறுபிள்ளைகளா யிருக்கும் போதே எங்கோ காணாமல் மறைந்து போய்விட்டனர். முதல் மனைவி யின் புதல்வி அழகிலும் அறிவிலும் மிக்க இமொஜென்.

அவளைத் தன் புதல்வனான கிளாட்டெனுக்கு மணஞ் செய்து வைத்துவிட்டால் அரசுரிமை அவள் மூலமாக அவனுக்கே வரும் என அரசி எண்ணினாள்.

ஸம்பலினுடைய குடிகளுள் சிறந்த வீரனொரு வன் அவ்வரசனது போரில் மாண்டான். அப்போது குழந்தை ஒன்றை அவன் விட்டுப் போனான். அதன் துணையற்ற நிலைக்கு இரங்கி ஸிம்பலின் அப்பிள்ளையை எடுத்து வளர்த்தான். தந்தை இறந்தபின் பிறந்த பிள்ளையாதலின் அவனுக்குப் பாஸ்துமஸ் ( = பிந்திப் பிறந்தவன்) என்று பெயரிட்டனர். இப்பாஸ்துமஸ் உருவில் வளருந்தோறும் அறிவிலும் குணத்திலும் வளர்ந்து வந்தான். இமொஜெனும் பாஸ்துமஸும் இளமை முதற்கொண்டே விளையாட்டுத் தோழர்களாயிருந்தனர். அத் தோழமை முதிர்ந்து அவர்களிரு வரும் நாளடைவில் அரசன் அரசியை எதிர்பாராமலே தம்முள் மறைவாக மணம் செய்து கொண்டனர்.

அரசியின் ஒற்றர் இளவரசியின் நடைமுறைகளை ஊன்றிக் கவனித்து வந்தனர். ஆதலின் விரைவில் இம் மறைமணச் செய்தி அரசிக்குந் தெரிந்து விட்டது. தனது பகற் கனவின்மீது மண் சொரிந்த இமொஜெனிடம் அவளுக்கு மட் டற்ற சீற்றம் ஏற்பட் டது. அவள் அரசனுக் கும் இவ்வகையிற் சினம் மூட்டி பாஸ்து மளை நாட்டைவிட்டுவெளியே துரத்திவிட்டாள்.

ஒருவரை நேரே எதிர்த்துக் கெடுப்பதை விட, அவரை நயமாக அடுத்துக் கெடுப்பதே எளிது என்று அரசிக்குத் தெரியும். எனவே, தான் இமொஜெனுக்கு நல்லவ ளாக நடந்து கொண் டால், நாளடைவில் அவள் மனத்தை விட்டு பாஸ்துமஸை அகற்றி அவள் தன் மகனையே ஏற்கும்படி செய்யலாம் என்று அரசி இன்னும் மனப்பால் குடித்துக்கொண்டுதான் இருந்தாள். இந் நோக்கங்கொண்டு அவள் பாஸ்துமஸ் போகுமுன் இமொஜெனுடன் அவன் பேச இடம் கொடுத்தாள்.

பாஸ்துமஸ் இமொஜெனிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொள்ளும்போது அவள் அவனுக்குத் தனது வைரக்கணையாழி ஒன்றை நினைவுக்குறியாகக் கொடுத் தாள். அவனும் அதுபோலவே அவள் கையில் தனது நினைவுக்குறியாகப் பொன்வளை யொன்றை அணிவித்தான்.

பாஸ்துமஸ் தன்னுடைய பிரிவு நாட்களை எண் ணிக்கொண்டே ரோம் நகரில் வாழ்ந்து வந்தான். இமொஜெனும் தன் உயிரற்ற வாழ்க்கையைத் தந்தை அரண்மனையில் வேண்டா வெறுப்பாகக் கழித்து வந்தாள்.

உ. ஒரு புதுமையான பந்தயம்

ரோமில் பல நாடுகளிலிருந்தும் வந்த இளஞ் செல் வர் பலர் இருந்தனர். அவர்கள் கூட்டத்தில் சேர்ந்து பாஸ்துமஸ் வாழ்ந்து வந்தான். அவர்களது ஆரவார வாழ்வில் பாஸ்துமஸ் தன் மனத்துயரை ஒருவாறு அகற்ற முயன்று கொண்டிருந்தான். ஒருநாள் அவர் கள் பேச்சு தற்செயலாகப் பெண்கள் பக்கம் திரும்பி யது. முதலில் ஒவ்வொருவரும் தத்தம் நாட்டுப் பெண் களே உயர்வுடையவர் என்று நிலைநாட்ட முயன்றனர். அதிலிருந்து படிப்படியாகப் பேச்சு முன்னேறி ஒவ் வொருவரும் அவரவர் மனைவி அல்லது காதலியைப் போற்றும் அளவிற்கு வந்தது. பாஸ்துமஸும் அவர்கள் பேச்சிற் கலந்து கொண்டு தன் நாட்டு மாதர்களை யும் சிறப்பாகத் தன்னுடைய காதல் தலைவி இமொ ஜெனையும் பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து பேசினான்.

அப்போது அயாக்கிமோ என்ற செல்வன் ஒருவன் இடையில் வந்து, பெண்களிடம் எங்குமே உண்மைக் கற்பு என்பது கிடையாது; கற்புடையவர் என்பவ ரின் கற்பெல்லாம் இயலாக் கற்பேயன்றி வேறன்று. முயல்வார் முயன்றால் எம்மாதும் கற்பை விட்டுக் கொடுத்தே தீருவாள்’ என்றான். இது கேட்டுப் பாஸ் துமஸ் சினங்கொண்டு அவ்வுரையை மறுத்தான். “தான் கள்ளன் பிறரை நம்பான்,” என்ற பழமொழிக் கிணங்க அவன் அதையே பிடி முரண்டாகக் கூறினான். மேலும் தான் கூறியதை நிலைநாட்டப் பதினாயிரம் பொன் பந்தயம் வைப்பதாகவும் உறுதி கூறினான்.

பேச்சில் மிக முனைந்துவிட்டதாலும், தன் மனைவி யின் கற்பில் மாறா உறுதி இருந்ததாலும், (ஊழ்வினை முந்துறுத்தலாலும் ) பாஸ்துமஸ் இப் பந்தயத்தை ஏற்றான்.

இம் முயற்சியில் இறங்க உதவும் முறையில் பாஸ்துமஸ் அயாக்கிமோவிடம் தன் கணையாழியைக் கொடுத்து, இமொஜெனுக்கு அயாக்கிமோவை ஒரு நண்பன் என அறிமுகப்படுத்தி ஒரு கடிதமும்வரைந்து கொடுத்தான். இவற்றைப் பெற்றுக்கொண்டு அவன் பிரிட்டனை நோக்கிப் பயணமானான். இமொஜென் கைவளையையும் காதலையும் பெற்று வந்து விடுவதாக அவன் வீம்பு பேசிக்கொண்டு சென்றான்.

கூ. வஞ்சகன் வஞ்சம்

தன் கணவனுடைய நண்பன் என்ற முறையில் இமொஜென் அயாக்கிமோவை நன்கு வரவேற்றாள். அவனுக்கு யாதொரு குறையுமின்றி வேண்டும் உதவி களையும் புரிந்தாள். ஆனால், அவள் பாஸ்துமஸின் மனைவி என்று நடந்து கொண்டாளே யொழிய, பெண் என்ற முறையில் நடந்துகொள்ளவேயில்லை. தன் போன்ற இளைஞர் கருதும் காதலுக்கும் இமொஜென் போன்ற இல்லுறை தெய்வங்களுக்கும் எவ்வளவு தொலை என்பதை அவன் அறிய நெடுநாள் செல்ல வில்லை. ஆனால், இதனை அப்படியே உள்ளபடி ஏற்ப தென்றால், பத்தாயிரம் பொன்னும் போயின. அது கூட அவ்வளவு பெரிதன்று. தோழரிடைத் தான் கூறிய வீம்பு என்னாகும்? தன் மதிப்பு என்னாகும்? எனவே எப்பாடு பட்டாவது, என்ன பொய் சொல்லி யாவது தன் மதிப்பைக் காக்க வேண்டும் என்று எண்ணமிட்டான் அயாக்கிமோ.

இக்கருத்துடன் நஞ்சகங்கொண்ட அவ்வஞ்சகன் ஓராள் தங்கியிருக்கும் அளவு பெரிதான ஒரு பெட்டி வாங்கினான். பின் அவன் இமொஜெனிடம், நான் பிரிட்டனில் பல பகுதிகளையும் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். அதுவரைக்கும் இப்பெட்டியை நல்ல பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்து திருப்பித்தர வேண்டுகிறேன் ‘ என்று சொன்னான், இமொஜென் * அதனை என் கண் காண என் அறையிலேயே வைத் திருக்கிறேன் ‘ என்று உறுதி கூறினாள்.

பணியாட்கள் மூலம் பெட்டி இமொஜெனுக்கு அனுப்பப்பட்டது. சூதொன்றும் நினையாத இமொஜெனும் அதனைத் தன் படுக்கையறையில் கொண்டு வந்து வைக்கும்படி கூறினாள். ஆனால், அப்பெட்டிக் குள் அயாக்கிமோவே உட்கார்ந்திருந்தான்.

இரவில் இமொஜென் நன்றாய் உறங்கியபின் அயாக்கிமோ மெல்லப் பெட்டியைத் திறந்துகொண்டு வெளிவந்தான். அறையின் அமைப்பையும் அதிலுள்ள பொருள்களையும் அவன் நன்கு மனத்தில் குறித்துக் கொண்டான். இமொஜென் படுக்கும் கட்டிலின் அமைப்பு , அதன் உறுப்புக்கள் முதலிய விவரங்களை அதன்பின் கவனித்தான். அதன்பின் அவன் கண்கள் இமொஜென் உருவத்தின் மீது சென்றன. உள் ஒளி என்று ஒன்று உண்டானால், அஃது அன்று அவள் உடலைச் சுற்றிலும் வீசிக்கொண்டிருந்தது. அவள் முகத்தில் ஞாயிற்றின் ஒளியும் திங்களின் குளிர்ச்சியும் ஒருங்கே நிறைந்து தோன்றின. பாலாடை போன்ற அவளுடைய மெல்லிய ஆடைகள் அவள் உடலமைப்பையும் நிறத்தையும் கூட அப்படியே எடுத்துக் காட்டுவனவா யிருந்தன. தனக்கு மிகப் பயன்படுமெனக் கருதி அவற்றையும் அவன் நன்கு கவனித்தான். அப்போது அவளது தொடையில், படுக்கைக்கான அவ் வுடையிலன்றி வேறெவ்வுடையிலும் பிறர் கண்கள் காண முடியாத இடத்தில், மறு ஒன்று இருந்ததைக் கண்டான். இருளே நிறைந்த அவ் வஞ்சகன் நெஞ்சில் அம் மறுவைக் கண்டதே இருள் ஞாயிறு தோன்றியதென்னும்படி இருளொளி வீசிற்று.

அயாக்கிமோ இயொஜெனுடைய பணியாளருக் குக் கைந்நிறையப் பொன் கொடுத்து அவர்கள் துணையைப் பெற்றிருந்தமையால், அயாக்கிமோ அவள் படுக்கையறையில் பலநாள் தங்கியிருக்க முடிந் தது. தங்கி இரவுதோறும் ஓசையின்றி வெளிவந்து ஒன்றுவிடாமல் அவ்வறையின் நுட்பங்கள், பொருள் கள், அவளைச் சேர்ந்த ஒவ்வொரு நண்பர், உறவினர், தோழியர் இவர்களுடைய விவரங்கள், அவள் இயல்பு கள், பழக்க வழக்கங்கள் ஆகிய எல்லாவற்றையும் நன்கு அறிந்து கொண்டான். கடைசி இரவில் அவளது வளையையும் அரிய கைத்திறனுடன் அவள் கையி னின்று திருடிக்கொண்டான்.

இறுதியில் அயாக்கிமோ பணியாள ருதவியால் வெளிவந்து பெட்டியை மீட்டுக்கொண்டு ரோம் நகரத்துக்குப் புறப்பட்டான்.

ச. வீண் பழி

ரோமில் வழக்கம்போல் தோழர்கள் கூடியிருந் தனர். பாஸ்துமஸும் அவர்களிடையே இருந்தான். அயாக்கிமோ வலியத் தன் முகத்தில் வெற்றிக்குறியை வருவித்துக்கொண்டான். அதனைக் கண்டு வியந்தனர் பலர். புன்முறுவல் கொண்டனர் சிலர், பாஸ்துமஸ் மட்டும் தனக்குள் ‘ஏன் இந்த இறுமாப்பு ; சான்று கள் வரட்டும் ; பார்ப்போம்,’ என்றிருந்தான். அவன் முகத்தில் அமைதி குடிகொண்டிருந்தது.

அயாக்கிமோ தன பொய்யுரைகளைத் துணிகர மாக அளந்தான். ‘நான் சென்றேன்; சென்று பார்த் தேன்; பார்த்து வென்றேன்’, என்று வீம்புடன் கூறிய ளீஸர் மொழிகளை ஒத்தன அவன் மொழிகள். ‘இமொ ஜென் என்னை நன்கு வரவேற்றாள். முதலில் அவளு டனும் அவள் தோழியருடனும் நயமாக நடந்து கொண்டேன். பின் தோழியரைப் பல வழியில் வசப் படுத்தினேன். அவர்கள் உதவியாலும் ஒத்துழைப் பாலும் இமொஜெனுடன் நெருங்கிப் பழக முடிந்தது. இறுதியில் இமொஜென் என் வழிக்கு வந்தாள். பல வகையிலும் அவளுடன் பொழுது போக்கினேன். ஓரிரவு படுக்கையறையிலேயே கழித்தேன். பின் பல உறுதி மொழிகளுடன் பிரிந்தேன்’ என்றான்.

‘தோழர் ஒருவரை ஒருவர் நோக்கினர். பாஸ்து மஸ் பின்னும் புன் சிரிப்புடன் அத்தனையும் வெறும் கட்டுக் கதை’, என்றான்.

அயாக்கிமோ: ‘சரி, அப்படியே இருக்கட்டும். அவள் படுக்கையறை வெண் பொன் கரையிட்ட பட்டுமேற்கட்டியுடையது. அதில் தீட்டப்பெற்ற படம் ஒப்பற்ற அரசியான கிளியோப்பாத்ரா தன் தலை வன் அந்தோனியோவைக் கண்ணுறும் காட்சி ; ஆம்’ என்றான்.

‘அஃது உண்மையே ; ஆனால் இதனை நீ பார்க் காமலே கேட்டறிந்திருக்கக்கூடும்!’ என்றான் பாஸ்துமஸ்.

“புகைப்போக்கி, அறையின் தென்புறம் உள்ளது. அப்பக்கம் உள்ள படம் ‘திங்களஞ்செல்வி’ (Diana) குளிப்பது ஆகும்.”

“இதுவும் கேட்டறியக்கூடியதே.”

அதன் பின் அயாக்கிமோ அறையின் முகட்டை யும், தணலடுப்பின் முன் தட்டில் கண்ட இரண்டு வெள்ளிக் காமனுருவங்களையும் குறிப்பிட்டான். “இவையனைத்தும் நீ பணியாட்களிடமிருந்து உசாவி அறிந்திருப்பாய்” என்றான் பாஸ்துமஸ்.

சரி; ‘இதனை நீ நன்றாய் அறிந்திருக்கலாமே’ என்று பொன் வளையைச் சட்டைப்பையிலிருந்து எடுத்து முன் வைத்தான். பின், ‘நான் அவளிட மிருந்து பிரியும் போது அவள் பல உறுதிமொழிகள் கூறினாள். அதன் பின் நான் நினைவுக்குறியாக இப் பொன் வளையைத் தருக’ என்றேன். அவள் முதலில் நெடுநேரம் தயங்கினாள். அதைத் தருவதில் வருத்த முண்டானால் அதனைத் தரவேண்டுவதில்லை என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு கூறினேன். அவள் அதுகண்டு துணிந்து, ‘அப்படியொன்றும் இல்லை. அது, என் உயிருக்குயிராயிருந்த காலமும் உண்டு தான். ஆனால் உங்களிடம் தராத பொருள் என்ன இருக்க முடியும்?’ என்று கூறி ‘ இதனைத் தந்தாள்’ என்றான்.

பாஸ்துமஸின் முகம் சட்டென்று கறுத்தது. சினங்கொண்டு ‘இஃதனைத்தும் உன் மாயப் புரட்டு. நீ அதனைத் திருடியே கொண்டுவந்திருக்கவேண்டும், என்றான்.

‘ஆம். ஆனால், இதனை மட்டுமன்று; அவள் உள் ளத்தையும் திருடிக்கொண்டுதான் வந்திருக்கிறேன் என்று உனக்குக் காட்டுகிறேன்,’ என்று சீற்றத்துடன் மொழிந்து, பின் அவள் உடலமைப்புக்களையும் உறுப் புக்களின் அமைப்புக்களையும் விரித்துரைத்தான். இறு தியில் தனது மறுக்கக்கூடாத கடைசித் துருப்பாகிய மறுவைப்பற்றியும் கூறினான்.

பாஸ்துமஸின் முகம் வரவரச் சுண்டிக்கொண்டே வந்து இறுதியிற் குருதி கசியும்படி கன்றிவிட்டது. இனித் தோழர்களிடம் சீற்றங்கொண்டு என்ன பயன் ? சீற்றமெல்லாம் இனி இமொஜெனிடத்திலும் அவளைப் படைத்த இறைவனிடத்திலுமேயாம்.

பந்தயம் தோற்றது.

ஆனால், பாஸ்துமஸ் இழந்தது பத்தாயிரம் பொன் னல்ல. அவன் தன் உயிர் நாடியையே இழந்தவன் போலானான். பந்தயப் பேச்சுப்படி இமொஜென் கொடுத்த கணையாழியும் அயாக்கிமோவினிடமே சென்றது.

ரு. படுகுழிப் பிழைத்தல்

பாஸ்துமஸ் மனத்தில் ஊழித்தீயே பரந்தெரிவது மாதிரி இருந்தது. இமொஜென் பேரில் அவனுக்கிருந்த சீற்றத்தில் அவளைக் கொன்று விட்டுத்தான் மறுவேலை என்று துணிந்தான். அவள் செய்த பிழையின் தன்மை, தனது சினத்தின் தன்மை இவற்றை விரித்து அவன் தன் நண்பனும் ஸிம்பலின் பணியாளனுமான 1பிஸானியோவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அவள் நிலைதவறினாள் என்பதற்குத் தனக்குக் கிடைத்த சான்றுகள் இவை இவை என்பதை அதில் குறிப்பிட் டிருந்தான். பின் அவளை எப்படியும் கொன்று அவள் கறையை அகற்ற வேண்டுமென வேண்டிக்கொண் டான். அதற்கு வாய்ப்பாக அவன் தான் மில்போர்டு ஹேவனுக்கு வருவதாகவும் அங்குவந்து தன்னைக் காணும்படியாகவும் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதன்படி அவள் அங்கு வரும்போது பிஸா னியோ அவளைக் கொன்றுவிடவேண்டும் என்பதே பாஸ்துமஸின் திட்டம்.

கணவன் பெயரையும் அவனைக் காணும் செய்தி யையுந் தெரிந்து இமொஜென் எல்லையிலா மகிழ்ச்சி யுடன் பிஸானியோவுடன் பயணமானாள். பிஸானியோவுக்குத் தன் தலைவனாகிய பாஸ்துமஸை மீறவும் மனம் இல்லை; அவன் ஆணையைச் செய்யவும் மன மில்லை. இங்ஙனம் வழியெல்லாம் அவன் போராடி இறுதியில் அந்த ஆணையை மீறி அவளிடமே அவ்” ஆணையைப்பற்றிய செய்திகளைக் கூறினான்.

தன் ஆருயிர்த் தலைவனைக் காணும் மகிழ்ச்சி கொண்டு இமொஜென் இதுகாறும் விரைந்து வந் தாள். இப்போது அவன் உண்மையில் தன்னைக் கொல்ல விரும்பும் அளவுக்குத் தன்மீது வெறுப்புக் கொண்டுள்ளான் என்பதை அறிந்தாள். இது, அவ ளுக்குப் பேரிடிபோல் திகைப்புத் தந்தது. பின் ‘ஏதோ ஒரு தப்பெண்ணத்தினாலேதான் இப்படி ஏற் பட்டிருக்கவேண்டும். நாளடைவில் அது தெளிவடை யும்’ என்று பிஸானியோ தேற்ற ஒருவாறு தேறினாள். ஆயினும், தன் கணவன் வெறுத்தபின் வாழ அவள் ஒருப்படவில்லை. அப்போதும் பிஸானியோ அவளுக்கு நல்லுரைகள் கூறிப் ‘பாஸ்துமஸின் மயக்க நினைவு மாறினபின் அவன் தன் செயலை நினைந்து வருந்து வான். ஆதலால், அதுவரை வாழ்ந்திருந்தால் மட்டுமே அவன் துயரைத் தீர்க்க முடியும்,” என்று எடுத்துக் காட்டினான். ‘பாதுகாப்புக்கும் மறைவுக்கும் உதவும் வகையில் ஆண் உடை அணிந்து நீங்கள் ரோம் சென்று கணவனுடனிருந்து அந்த நல்ல நாளை எதிர் பார்த்திருங்கள்,’ என்றும் அவன் கூறினான்.

பிஸானியோ எப்படியும் அரண்மனைக்கு விடிய -முன் வரவேண்டியவன். எனவே இமொஜென் உரு மாற ஆனுடை பார்த்துக் கொடுத்துவிட்டுத் திரும் பினான். திரும்புகையில் அவன் அரசியிடமிருந்து தான் பெற்ற ஒரு மருந்துப் புட்டியை அவளிடம் கொடுத்தான். இதனை, ‘எல்லாப் பிணிகளுக்கும் மருந் தாய் உதவும் சஞ்சீவி’ என அவள் அவனிடம் கூறி யிருந்தாள். வழியில் உடல் நலத்திற்கு ஏதேனும் ஊறு நேரின், அதனைப் பயன்படுத்திக் கொள்க என் றான் பிஸானியோ. உண்மையில் இம் மருந்து சஞ்சீவி யன்று. தீநினைவே குடிகொண்ட அரசி சஞ்சீவி என்ற பெயரால் நஞ்சையே கொடுக்கத் துணிந்தாள். ஆனால், அவள் குணத்தை அறிந்து, அவள் எலி முத லிய உயிர்களை உடனே கொல்லும் நஞ்சு கேட்கும் போது, மருத்துவன் நஞ்சைக் கொடுக்காமல் மயக்க மருந்தொன்றையே கொடுத்து வைத்தான். எனவே இமொஜென் கையிற் கிட்டிய அம் மருந்து, பிஸா னியோ நினைத்தது போலச் சஞ்சீவி யன்றாயினும், அரசி நினைத்ததுபோல நஞ்சுமன்று.

சு. இயற்கையின் ஆற்றல்

இறைவனது திருவருளின் போக்குச் சில சமயம் புதுமையானதாக அமைவதுண்டு. இமொஜெனுக் கும் இங்ஙனமே நிகழ்ந்தது. ஏனெனில், அவள் தற் செயலாகத் தன் உடன் பிறந்தார் இருந்த இடத் திற்கே வந்து சேர்ந்தாள். இவர்களை ஸிம்பலினின் அரண்மனையினின்று மறைவாக எடுத்துக்கொண்ட வன் பெலாரியஸ் ஆவன். இவன் ஸிம்பலினின் பெருங் குடி மக்களுள் ஒருவன். இவன் மீது அரசன் பொய் யாக வீண் பழி சுமத்தி நாட்டை விட்டுத் துரத்தினான். அதனால் வெகுண்டு பழிக்குப் பழியாகவே இப்பிள்ளைகளைத் தூக்கிச் சென்றான். முதலில் அவன் நோக்கம் இதுவாயினும் அவர்களைத் தன் பிள்ளைகளென வளர்த்து, அவர்களிடம் பற்றுதலுடையவன் ஆனான்.

இமொஜென் மில்போர்டு ஹேவனுக்குச் சென்று ரோமுக்குக் கப்பலேற வேண்டுமென்று தான் விரைந்து நடந்தாள். ஆனால், எப்படியோ வழிதவறிக் காட்டில் அலைந்து மேற்கூறிய உடன்பிறந்தார் வாழ்ந்த குகைக்கு வந்து சேர்ந்தாள். வழியில் அவள் பட்ட துயர் கொஞ்ச நஞ்சமன்று. ஆணுடை அணிந் ததனால் ஆண் தன்மை வந்துவிடாதன்றோ? அவளது பஞ்சினும் மெல்லிய சீறடிகள் கல்லு முள்ளும் உறுத்தக் கொப்புளித்தன. பசியும் நீர் விடாயும் காதடைத்தன. இக் குகையினருகில் மனித வாழ்க் கைக்கான அறிகுறிகள் கண்டு, உணவு இருக்குமா என்று பார்க்க உள் நுழைந்தாள். உள்ளே ஆளில்லை. ஆனால், ஒருபுறம் பழ அமுது வைக்கப்பட்டிருந்தது. பசிக் கொடுமையால் பொறுமை யிழந்து முன் பின் எதுவும் நினையாது அதனை உண்ணலானாள். உண்ணும்போதும் தன் நிலை, தன் கணவனது கொடுமை இவற்றைப்பற்றிய நினைவு அவள் மனத்தை விட்டகலாதிருந்தது.

உடன் பிறந்தார் இருவருக்கும் முதலில் கிடரியஸ், 2 அர்விராகஸ் என்று பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பெலாரியஸ் அப் பெயர்களை மறைத்து அவர் களுக்கு, பாலிடோர், காட்வேல் என்னும் வேறு பெயர் களை வழங்கினான். அவர்கள் காட்டில் வளர்ந்தபோதி லும். பெலாரியஸ் அவர்களுக்கு எல்லாவகைக் கல்வியும் கற்றுக்கொடுத்தான். அரசிளங் குமரரது இயற் கைப்படி அவர்களும் வாட்போர், மற்போர், வேட்டை முதலிய அரசுரிமைக் கேளிக்கைகளிற் பயின்று வீர மிக்க இளைஞராயினர்.

குகைக்குள் அவ் இளைஞர் நுழைந்ததும், உண வின் முன் குனிந்து உட்கார்ந்திருந்த ஆண் உடை அணிந்த இமொஜெனைக் கண்டனர். கண்டு, ‘இஃ தென்ன! பொற்பாவையோ! பொன்னுலகத் தணங்கோ!’ எனத் திகைத்து நின்றனர். அதனிடையே இமொஜெனும் அவர்களைக் கண்டதும் தான் அவர்களை எதிர்பாராது அவர்களது இடத்தில் உரிமையுடன் புகுந்த துபற்றி அவர்கள் சீற்றங்கொள் வரோ என அஞ்சினாள். ‘ஐயன்மீர்! மன்னிக்கவும் ; பசி மிகுதியால் உங்கள் வரவுக்குப் பொறுக்காமல் உணவை உட்கொள்ளலானேன். ஆனால், அதனைத் திருடும் நோக்கம் எனக்கில்லை. அதற்கான விலையை இங்கு வைத்து விட்டு உங்களுக்கு நன்றி கூறிப் போகவே இருந்தேன்,’ என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்குப் பொருள் தரப் போனாள். அவர்கள் அதனை மறுத்தனர்.

பெலாரியஸ்: நீ யார்? எவ்விடத்திற்குப் புறப் பட்டு வந்தாய்?

இமொஜென்: என்பெயர் பிடேலே என்பது. என் உறவினர் ஒருவர் மில்போர்டு ஹேவனிலிருந்து ரோமிற்குப் புறப்படப்போகிறார். அவருடன் சேரும் நோக்கத்துடன் வருகையில் வழிதப்பி இங்கே வந்தேன்.

பெலாரியஸ்: ‘நீ மிகவும் உயர்குணமுள்ளவனாகவே காண்கிறாய். நாங்களும், இவ்விடத்திலே வாழ்கிறோமாயினும் காட்டாளர்கள் அல்லேம். இங்கு நீ எங்களுடன் தங்கி உணவுண்டு வாழ்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே,’ என்று கூறிவிட்டுப் பையன்களையும் அவளுக்கு வணக்கம் செய்து நல்வரவு கூறும்படி பணித்தான்.

அம் மூவரும் அதுமுதல் உடன் பிறந்தவராகவே வாழ்ந்து வந்தனர்; (அவர்கள் உண்மையில் உடன் பிறந்தவரே என்பது அவர்களுக்குத் தெரியாது). இமொஜெனும் அவர்களது குகையைத் தன் வீடாக்கி, அதில் தன தியற்கைப்படி தூய்மையும் ஒளியும் விளங் கச் செய்தாள். சிறுவர்கள் உணவு அன்று முதல் இமொஜென் கைகளிடமிருந்து இனிமையைக் கடன் வாங்கின. இத்தகைய இன்னுணவாலும் இனிய பாட்டுக்களாலும் இளைஞரிருவரும் அவளிடம் மாறாத பற்றுக்கொண்டனர்.

ஆனால், (பிடேலே என்று அவர்கள் வழங்கிய) இமொஜென் அவர்களுடன் எவ்வளவு தான் ஆடிப் பாடி நகையாடினாலும், அவள் முகத்தில் பொறுமை என்னுந் திரையால் மறைக்கப்பட்டு மங்கலான துய ரின் நிழல் தோன்றுவதை அவர்கள் அடிக்கடி கவனித் தனர். இமொஜெனும், அவர்களிடம் தன் செய்திகள் எவையுங் கூறாமலே பொழுதைக் கழித்தாள். உடல் நலிவெனக் காரணங் காட்டி, அவள் அவர்க ளுடன் வேட்டைக்குப் போவதைத் தவிர்த்துப் பின் தங்கினாள். உண்மையில் கணவனது நினைவும் காட்டில் அலைந்த அலைச்சலும் அவளுக்குப் பெரு நலிவை உண்டு பண்ணின என்பதில் ஐயமில்லை.

எ. மயக்க மருந்து

மற்றவர்கள் வேட்டையை நாடிச் சென்றபின் இமொஜெனுக்குப் பிஸானியோவிடமிருந்து பெற்ற மருந்தின் நினைவு எழுந்தது. அஃது எல்லாப் பிணிக்கும் மருந்தென அவன் கூறியிருப்பதையும் அவள் ஓர்ந்தாள். ஓர்ந்து அதனைப் பருகி உணர்விழந்து உயிரற்றவள் போல் விழுந்து கிடந்தாள்.

பெலாரியஸும் இளைஞரும் காட்டில் வேட்டை யாடி விட்டுத் திரும்புகையில் அவள் படுத்திருந்தது கண்டு முதலில் உறங்குகிறாள் என்று நினைத்தனர். ஆனால் அவள் மட்டுக்கு மிஞ்சி நெடுநேரம் உறங்கு வது கண்டு அவளை எழுப்ப முயன்றனர். அப்படியும் அவள் எழவில்லை. அவள் இறந்தனள் என்று இதனால் உறுதிப்படுத்திக்கொண்டு அவர்கள் கன்றினைப் பிரிந்த ஆவெனக் கதறியழுதனர். அந்த ஒரு நாளைக்குள்ளாக உடன் பிறந்து வளர்ந்தவர்களை விட மிகுதியாக இமொ ஜென் அச் சிறுவருடன் பழகிவிட்டபடியால் அவர் களும் கையற்றவர்கள் போன்று கவன்றனர்.

இரவு நெடுநேரம் வரை அழுதரற்றியபின் பெலா ரியஸ், ‘இனி அழுது பயனென்ன? பிடேலே போய் விட்டான். அவன் உடம்பை நல்ல முறையில் அடக் கம் செய்யவாவது முயலவேண்டாமா?’ என்றான்.

காட்டில் ஒரு நறுஞ்சோலையினுள் பூம்படுக்கை செய்து அதில் அவள் உடலைப் பண்ணும் இரங்கும் இனிய பாட்டுக்களுடன் அடக்கம் செய்தனர்.

(பாட்டு)

பெலாரியஸும் இளைஞரும் :

கஞ்சமலர் கண்டுனது கண்மறத்தல் செய்யோம்
காந்தளவை கண்டுனது கைவிரல்கள் மறவோம்
செஞ்சொலிளங் கிளியதனால் சொல்மறத்தல் செய்யோம்
தேம்பழத்தால் நின் உணவின் தீஞ்சுவையும் மறவோம்
வஞ்சமறு மான்மறியிற் சீரிளமை மறவோம்
வாழும்வரை உன்வாழ்வும் மாள்வும் இனி மறவோம்
நெஞ்சிலுறை கின்றனையாம் நேருறவா ராயோ
நேயமுடன் யாமழைக்க நேருறவா ராயோ

பாலிடோர் :
கூடப்பிறந்திலமே
கூடப்பிறந்திலமே
கூடிப்பிரிந்தனம் மேல் – கூடுவோமே!

காட்வேல்:
மன்றலிள நிலவு
தென்றலுள அளவும்
உன்றனுள ஒளிவு – பொன்றிடாதே!

கூட = உடனாக. கூட = ஒன்றாக வாழ.

வாழ்க்கையில் நிறைவென்ற ஒன்றையும் குறை வென்ற ஒன்றையும் அச் சிறுவர் பிடேலே தம் மிடையே வந்த நாளிலும் தம்மை விட்டுச் சென்ற நாளிலுந்தான் கண்டனர். பெலாரியஸும் பொற் பெட்டியை இழந்தவன் அதன் திறவுகோலைக் கண்டு மனமழுங்குவதுபோல துணை இழந்து கதறும் தன் இளை ஞரைக் கண்டு வருந்தினான்.

நிற்க, மயக்க மருந்தின் ஆற்றல் தீர்ந்து இமொ ஜென் விழித்தெழும்போது நள்ளிரவு கடந்து பின் யாமமாயிருந்தது. அப்போது அவள் என்றும் உறங்கி, எழுவதுபோல் எழுவதாக முதலில் நினைத்தாள். சுற்றும் முற்றும் பார்த்தபோது, தான் இருப்பது அரண் மனையுமன்று, வீடுமன்று ; காடே என்பது விளங் கிற்று. அப்பொழுது ஒன்றன் பின் ஒன்றாகத் திரைப் படக் காட்சிபோலப் பெலாரியஸினுடைய குகையின் நினைவுகள் வந்தன. ‘அவர்கள், தான் இறந்துவிட்ட தாக நினைத்திருப்பார்கள்; விடிந்ததும் அவர்களிடமே போவோம்,’ என்று முதலில் நினைத்தாள். ஆனால் கணவனது நினைவு இதனைத் தடுத்தது. அதன் பின் எப்படியும் இத்தாலி நாட்டுக்குப்போய் அவனைப் பார்ப்பது என்று துணிந்து புறப்பட்டாள். ஆயினும் பழையபடியே திருவருள் குறுக்கிட்டு அவள் வாழ்க்கையை மாற்றிற்று.

அ. போர்

இமொஜென் காட்டுக்கு வந்ததன்பின் ரோம் அரசர்க்கும் பிரிட்டன் அரசரான ஸிம்பலினுக்கும் போர் மூண்டது. ரோம் அரசர் படை ஒன்று பிரிட்டனுக்கு வந்து போர் தொடங்கிற்று.

பாஸ்துமஸ் அப் படையோடு கூடவே பிரிட்ட னுக்கு வந்தான். ஆனால், அவன் தன் தாய் நாட்டுக் கெதிராகப் போரில் கலக்க எண்ணவில்லை. அவன் மனமும் இப்பொழுது நல்ல நிலையிலில்லை. இமொ ஜெனைக் கொன்று விட்டோம் என்ற எண்ணத்தினால் அவன் மனம் எவ்வகை அமைதியையும் அடையவில்லை. உண்மையில் அதன் பரபரப்புக் குறைந்ததேயன்றித் துயரம் குறையவில்லை. ‘ரோமர்களோடு பிரிட்ட னுக்கு வந்தால், தன்னையும் ரோமன் என்று நினைத்து எவரேனுங் கொல்லக்கூடும் ; அன்றி, எதிரியுடன் சேர்ந்தவன் என்று ஸிம்பலின் கொலை செய்யவுங் கூடும், எப்படியும் உயிரைவிட்டு விட வாய்ப்பு நேரும்’ என்று கருதித்தான் அவன் அங்கே வந்தான்.

காட்டில் அலைந்து திரிந்து இமொஜென் ரோம் படை வீரரால் பிடிக்கப்பட்டாள். ஆனால் அவள் நாகரிகத்தையும் நற்குணத்தையுங் கண்டு ரோம் படைத்தலைவர் லூஸியஸ் அவளைத் தன் பணியாளாக ஏற்படுத்திக்கொண்டான்.

இப் போரில் சேர்ந்து சண்டைசெய்ய வேண்டு மென்று பாலிடோரும் காட்வெலும் விரும்பினர். பெலாரியஸும் வீரனாதலின் அவர்கள் விருப்பத்துக்கு உடன் பட்டதுடன் தானும் உடன் சென்று போரிற் சேர்ந்து கொண்டான்.

போரில் ரோமவீரர் மிகத் துணிகரமாகச் சண்டை செய்ததால் பிரிட்டனின் படை மிகவும் மலை வுற்றது. அச் சமயம் பாஸ்துமஸ் ஒருபுறம், பாலி டோர், காட்வெல் ஆகிய இளஞ்சிங்கங்கள் ஒருபுறம் நின்று தாக்கிப் பிரிட்டனின் படைக்கு ஊக்கந் தந்து வெற்றி யுண்டாக்கினர். பாஸ்துமஸ் நாட்டுப்பற்றுக் காரணமாக வெற்றிபெறப் போர் புரிந்தானாயினும் அவ் வழியில் தான் இறவாமையால், பகைவனாகவே நடித்துச் சிறை பிடிக்கப்பட்டான். ஆணுடை உடுத்த இமொஜெனும், அவள் தலைவனாகிய லூஸியஸும், இமொஜென் வாழ்க்கைக்கு உலை வைத்த சண்டாளனாகிய அயாக்கிமோவும் எஞ்சிய வீரருடன் சிறைப்பட்டனர். பாஸ்துமஸுக்கு அவன் எதிர் பார்த்தபடியே கொலைத் தீர்ப்பு அளிப்பதென்று துணியப்பட்டது.

வீரத்துடன் போர் புரிந்ததற்காகப் பாலிடோரும் காட்வெலும் பாராட்டப்பெற்று நன்கொடை பெறும் படி கொண்டுவரப்பட்டனர்.

பாஸ்துமஸ் அங்கு வந்திருப்பதை இமொஜென் கண்டுகொண்டாள். ஆனால் அவள் ஆணுடையி லிருந்தபடியால் அவன் அவளை அறிந்துகொள்ள வில்லை. பாஸ்துமஸின் நண்பன் என்ற நிலையில் தன் னிடம் சிலகாலம் பழகிய அயாக்கிமோ என்பவனும் அங்கு வந்திருப்பதை இமொஜென் கண்டாள். ஆனால் அவன் கையில் பாஸ்துமஸுக்குத் தான் கொடுத்த வைரக் கணையாழி இருப்பது கண்டு அவளுக்குச் சொல்லொணா வியப்பு ஏற்பட்டது. அதில் ஏதோ சூதிருக்கிறதென்று அவள் உடனே உணர்ந்துகொண்டாள். அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமே என்று அவள் மனம் விரைந்து பதைத்தது.

இமொஜெனை அங்கே வேறு சிலரும் அறிய இடமிருந்தது. அவளுக்கு ஆணுடை கொடுத்த பிஸானியோ அவர்களுள் ஒருவன். பெலாரியஸும் இளைஞரும் அவளைக் கண்டுகொண்டனர் : ஆயினும், இறந்தவள் எப்படி வந்தாள் என்றும், ஏன் பேசா திருக்கிறாள் என்றும் அறியாது விழித்தனர்.

கூ. முடிவு

எங்கும் கவலையும் விழிப்பும் ஆர்வமும் நிறைந்த இந்நிலையில், திருவருள், ரோம் படைத்தலைவன் லூஸி யஸின் நாவில் வந்திறங்கியது. அவன்,

“அரசே! நான் ரோம் நாட்டவன். என்னை நீங்கள் கொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். தெரிந்தும் நான் உயிருக்கு மன்றாடப்போவதில்லை. ரோமர்கள் சாவுக்கு அஞ்சார். ஆனால், எனக்காக ஒன்றுங்கேட்க வேண்டுவதில்லையாயினும், பிறருக்காக ஒன்று கேட்க விரும்புகிறேன். இதோ இப்பையன் (இமொஜெனைச் சுட்டிக் காட்டி) ரோம் நாட்டவன் அல்லன் ; பிரிட்டானியனே. அவன் உண்மை யுடையவன். அவன் பிரிட்டனுக்கு எதிராகச் சண்டையிற் சேர்ந்தவன் அல்லன். ரோமன் கையிற் சிறைப்பட்டு அதனால் அவனுக்கு உழைத்தவன். அவனைப் பாதுகாப்பீராக!” என்றான்.

“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்பதற் கிணங்க, ஸிம்பலின். இமொஜெனை இன்னாள் என அவளது ஆணுருவில் அறியாவிடத்தும் இயற்கையான பாசத்தின் உந்துதலால் அவளைப் பார்த்து, “உன்னைப் பார்க்க, நான் உன் உயிரைத் தருவதென்பது மட்டுமன்று; நீ வேண்டும் வேறு ஒருவரது உயிரைத் தருவதற்குங்கூடத் தயங்கமாட்டேன்’ என்றான்.

இத் தறுவாயில் எல்லாரும் இமொஜென் தன் உயிரை மறுத்து, அவளுயிர்க்கு மன்றாடிய லூஸியஸ் என்ற பெரியானது உயிரைத்தான் கேட்பாள் என எதிர்பார்த்து நின்றனர். அரசன்கூட அதனை எதிர் பார்த்தே அவ்வாறு கூறினான். லூளியஸும் அதுவே இயற்கை யென நினைத்தவனாதலால், முன்கூட்டியே ‘ நீ என் உயிரைக் கேட்காதே,’ என்றான். இமொஜென் , அப்பெருந்தன்மை வாய்ந்த லூஸியஸை நோக்கி, யாவருந் திடுக்கிடும் வகையில், ‘என் ஐயனே, மன்னிக்க வேண்டும். உங்கள் உயிரினும் சிறந்த பொருளாக நான் கேட்கவேண்டுவது ஒன்று உளது’ என்றாள். ‘இவ்வளவு இளமையும் அழகும் கொண்ட சிறுவனிடம் இத்தனை நன்றி கொல்லுந் தன்மையும் இருக்கமுடியுமா’ எனப் பலரும் மூக்கிற் கைவைத்து வியந்தனர்.

கருமமே கண்ணாய் நின்ற இமொஜென் பிறர் எண்ணத்தைப் பொருட்படுத்தவில்லை. தான் இன் னதுதான் கேட்கவேண்டும் என்பதை அவளது கூரிய அறிவு நொடிப்பொழுதில் முடிவு செய்துவிட்டது.

அயாக்கிமோவைச் சுட்டிக் காட்டி, “அதோ நிற்பவர் கையில் ஒரு வைரக் கணையாழி இருக்கிறதே; அது, அவர் கையில் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்தறிய வேண்டுகிறேன்” என்றாள்.

“என்ன புதுமையான கேள்வி இது! என்ன முட்டாள் தனமான கேள்வி” என்று கூடப் பலர் எண்ணினர்.

முதலில் அயாக்கிமோ யாதும் கூற மறுத்துப் பார்த்தான். ஆனால் இவ்வுண்மையை வெளியிடாவிட்டால் படிப்படியாகக் கொலைசெய்யப்படுவதாக அச்சுறுத்தப்பட்ட பின், அவன் முழு உண்மையையுங் கூறிவிட்டான்.

இதற்கு முன்னமேயே கொலைத் தீர்ப்பை அவாவி நின்ற பாஸ்துமஸ் குற்றமற்ற தன் மனைவியைக் கொன்றுவிட்டோமே என்ற கவலையால் தன்னை மிகவும் நொந்து கொண்டான். அவன் அரசன் முன் வந்து, இமொஜெனுக்குத் தான் செய்த தீங்கையும் வெளிப்படுத்தி, ‘என் இமொஜென் இறந்தபின் நான் இனி உயிர்வாழேன்; என் உயிரை நீங்கள் வாங்கா விடின், நான் வாங்க வேண்டியதே’ என்று சொல்லிப் புலம்பினான்.

கணவனது கொடுமை தப்பெண்ணத்தினால் வந்த தென்பதைக் கண்ட இமொஜென், அவன் துன்பங் காணப் பொறாமல் முன் வந்து, ‘இதோ! உங்கள் இமொஜென்!’ என்று அவனைத் தழுவிக் கொண்டாள்.

இங்ஙனம் எதிர்பாரா வகையில் மகளையும் மருமகனையும் மீண்டும் நன்னிலையில் அடையப்பெற்ற ஸிம்பலின், போரில் கண்ட வெற்றி மகிழ்ச்சியினும் பன்மடங்கு அகங்களித்து அவர்களை ஏற்றுக்கொண்டான்.

இச்சமயமே நற்சமயமாகக்கொண்டு பெலாரியஸ் முன் வந்து, தன் பிழைகளையும் வெளியிட்டுத் தான் வளர்த்த இளைஞர்களை முன் நிறுத்தி, ‘ஐயனே! நான் இதுகாறும் தங்களுக்கும் என் தாய் நாட்டுக்கும் இழைத்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன். இதோ இவ்விருவரும் உம்முடைய மக்கள். உம்மீது பகைமையால் அவர்களைக் கவர்ந்து சென்று வளர்த்தேன்’ என்றான்.

பிள்ளைகளைத் தந்தையினின்றும் பிரித்தது மிகப் பெருங் குற்றமேயாயினும், களிப்பே நிறைந்த இந்த நாளில் கறை வேண்டா மென்று கருதி, ஸிம்பலின் அவனை மன்னித்துத் தம் புதல்வரை அன்புடன் அணைத்துக்கொண்டான்.

இமொஜென், தான் ஆண் உடையிலிருந்தபோது தனக்குத் தலைவராயிருந்த லூஸியஸின் உயிரைக் கேட்க வேண்டாமலே எல்லாம் நலமாக முடிந்தது. இவ்வளவுக்குந் திட்டம் போட்டு முதலில் அவர் உயிரைக் கேட்காதிருந்த அவள் நுண்ணறிவுக்கு யாவரும் வியப்பெய்தினர்.

இளைஞரை உடன்பிறந்தவர்போல இதுவரை நடத்திய இமொஜென் இப்போது உடன் பிறந்தவரெனவே கண்டு அவர்களைத் தழுவிக்கொண்டாள். மயக்க மருந்தினால் நிகழ்ந்த செய்திகளனைத்தும் அவள் எடுத்துக் கூறினாள். அதன்பின், அரசியின் மருத்துவன் வந்து, ‘அரசி இங்கு நடப்பது யாவுங் கண்டு தனது மறைந்த தீவினை தன்னைச் சூழ்கின்றது என்று தெரிந்து மனங்கொதித்து மாண்டாள் என்று தெரிவித்தான். மேலும், அவள் கொல்லும் எண்ணத்துடன் நஞ்சு கேட்பதைத் தான் குறிப்பாக அறிந்து தான் மயக்க மருந்தைக் கொடுத்ததாக அவன் கூறினான்.

அயாக்கிமோவே இவ்வளவு தீமைக்கும் வேரானவன். ஆயினும், அவன் தீங்குகள் வெற்றியடையாததே போதும் என்று கருதி அவனை விட்டு விட்டனர்.

இமொஜென், பிரிந்த கணவனைப் பெற்றதோடு, பிரிந்த தந்தை, பிரிந்த உடன் பிறந்தார் ஆகியவர்களையும் பெற்று இறவா இன்பமும் புகழும் எய்தி வாழ்ந்தாள்.

– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (மூன்றாம் புத்தகம்), முதற் பதிப்பு: 1941, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *