ஷேர்கான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 8,033 
 
 

வாடகை வீடு அழகாகவும், பொருத்தமாகவும் அமைவதென்பது நமது பூர்வ ஜென்ம புண்ணியம்தான். சுற்றிலும் மதில் சுவருடன் முன்புறம் கார் ஷெட் வாசலில் பச்சை நிற கிரில் கதவு கொண்ட தனி வீடு எங்களுடையது. எங்கள் வீட்டின் உரிமையாளர் மிகுந்த விருப்பத்துடன் பார்த்து பார்த்து, இழைத்து கட்டியிருந்தார். அவருடைய குழந்தைகளின் பள்ளி மத்திய சென்னையில் இருப்பதாலும், தாம்பரத்திலிருந்து சென்று வருவது அவர்களுக்கு சிரமம் என்பதாலும் இந்த வீட்டை எங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

ஒரு கோடை கால மதியம், உச்சி வெயில் மண்டையை பிளக்கும் நேரம், ஒரு கம்பனியில் நேர்முகத் தேர்வு முடிந்து, மிகவும் களைப்பாக வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தேன்.

நான் மிகுந்த களைப்புடன் எங்கள் வீட்டின் கிரில் கதவை திறந்தபோது எனக்கும் முன் அவசரகதியில் பயத்துடன் அழகான வெள்ளை பூனை குட்டி உள்ளே சென்று பதைபதைப்புடன் என்னையும் கிரில் கேட்டிற்க்கு வெளியிலும் மாறி மாறி பார்த்தது.

பயத்தில் மெல்ல நகர்ந்து வீட்டினுள்ளும் செல்லாமல், வெளியிலும் செல்லாமல் குறுக்கே அமர்ந்துகொண்டது.

நான் உள்ளே சென்றதும், கிரில் கதவின் கீழ் அது மாட்டிக்கொள்ளாமல் இருக்க என் கைகளில் பூனையை எடுத்துக்கொண்டேன். அப்போது தான் கவனித்தேன், வெளியே அதைப் பார்த்து ஒரு கருப்பு நாய் உறுமிக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ அந்த நாய் பூனையை துரத்திக்கொண்டு வந்திருக்கவேண்டும்.

என் கையில் பாதுகாப்பாக இருந்தபோதும் பயத்தில் அதன் மெல்லிய அதிர்வுகளை என்னால் உணரமுடிந்தது. கூரிய அதன் நகங்கள் என்மீது பதிந்திருந்தது.

கதவை மூடி தாளிட்டவுடன், பூனை அந்த நாயைப் பார்த்து புலியைப்போல உறுமத்துடங்கியது. நாய் சற்று அடங்கி மெலிதாக குறைத்துக் கொண்டே சென்றுவிட்டது. அதை நானே வளர்க்க முடிவு செய்தேன்.

வீட்டிலிருந்த ஒரு சாஸர் அது சாப்பிடுவதற்க்காக ஒதுக்கப்பட்டது. அந்த சாஸரில் பால் வைத்துவிட்டு, சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டிருப்பேன். பால் வாங்குவது அறை லிட்டர் கூடியது.

அம்மாவிற்கு எந்த வீட்டுவளர்ப்பு பிராணிகளிடமும் பழக்கமில்லை. தினமும் ஒன்பது கஜம் கட்டும் ஆச்சாரமான குடும்பத்திலிருந்து வந்தவள். ஆனால் முதல் முறையாக அது விதி விலக்கு பெற்றது.

வேளாவேளைக்கு சாப்பிட்டதால் நன்றாக கொழுகொழுவென்று வளர்ந்து பார்க்க குட்டி புலியைப் போல் காட்சியளித்தது. அப்போது அதற்கு ‘ஷேர்கான்’ என்று பெயர் சூட்டினேன். நன்கு துள்ளி ஓடி ஆடி விளயாடும்போது அதற்கு ‘மான்குட்டி’ என்று பெயரிட்டேன். நார்னியா வெளிவந்தபோது அதன் முன்புறமும், பிடறியிலும் வளர்ந்த மயிரை பார்த்து, அதற்கு ‘ அஸ்லான்’ என்று பெயர் சூட்டினேன். இருப்பினும் முதலில் வைத்த ‘ஷேர்கான்’ என்ற பெயரே அதற்கு நிலைத்தது.

குளிர் காலங்களில் அதற்கு மிகவும் பிடித்தமான இடம் எங்கள் வீட்டு டி.வி. பெட்டியின் பின்புறம்தான். கதகதப்பாக இருக்கும் போலும்.

மின்சாரம் இல்லாத நேரங்களிலும், பொழுதுபோகாத நேரங்களிலும் நான் ஷேர்கானுடன் விளையாடிக்கொண்டிருப்பேன்.

முதலில் ஒரு ரூபாய் நாணயத்தை அதனிடம் காட்டுவிட்டு, பின்பு நம் கைகள் இரண்டையும் தரையில் வைத்து ஏதேனும் ஒரு கையில் நணயத்தை அதற்கு தெரியாமல் மறைத்து வைத்தால் எந்த கையில் நாணயம் இருக்கிறது என்று மிக அதன் முன்னங்கையால் தொட்டு காட்டும். 95 சதவீதம் அதன் கணிப்பு சரியாக இருக்கும்.

ஒரு நாள் அது ஒரு பெரிய மீனை ஆர அமர ருசித்து சாப்பிட்டதிலிருந்து அதன் மேல் எனக்கு கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டது எனலாம்.

அம்மாவிடம் சொன்னபோது, “பூனை மீன் சாப்பிடறது சகஜம் தான்” என்றாள் மிக சாதாரணமாக. என்னால் அப்படி ஏற்றுகொள்ள முடியவில்லை. அன்றிலிருந்து அதனிடம் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொண்டேன்.

பிள்ளைகளின் கல்வி முடிந்ததால், தன் சொந்த வீட்டில் குடியேரப்போவதாக எங்கள் உறிமையாளர் கூறினார்.

நீண்ட தேடலுக்குப் பின் மெயின் ரோடை ஒட்டி வாசல் அமைந்த ஒரு வீடு கிடைத்தது.

புதிய வீட்டில் குடிபெயர்ந்து ஒன்றிரண்டு வாரங்கள் சென்றிருக்கும், ஒரு நாள் அது வழக்கமாக உறங்கும் இடத்தில் காணவில்லை, தேடிப்பார்த்தபோது முன்புற மதில் சுவரின் மேல் பரிதாபமாக படுத்துக்கொண்டிருந்தது. அதன் இடது முன் காலில் அடி பட்டிருப்பது தெரிந்தது. ஏதேனும் இரு சக்கர வாகனன்ளில் முன்னங்கால் சிக்கியிருக்கலாம். எப்படியோ அந்த சுவரில் ஏறிவிட்டு, பின்பு இறங்கமுடியாமல் தவித்துகொண்டிருந்தது.

மருத்துவ உதவி செய்தாலும், மீண்டும் வேறொரு இரு சக்கர வாகனத்தில் மாட்டிக்கொள்ளும் என்பதால் வேறுவழியின்றி,ஷேர்கானை ப்ளூ க்ராஸில் கொண்டு விடுவது என் முடிவுசெய்தேன். தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தெருவில் ஒரு பூனை அடிபட்டு பரிதாபமாக இருப்பதாக சொன்னபோது உடனே கொண்டு வரச்சொன்னார்கள்.

ஷேர்கானை ப்ளூ க்ராஸில் கொண்டு விடும்போதுதான் முதலில் பிருந்தாவைப் பார்த்தேன்.

சில நாட்களில் ப்ளு க்ராசிலிருந்து எங்களை தொடர்பு கொண்டு, பூனையின் முன்னங்கால் சரியாகிவிட்டதாக கூறினர். நாங்கள் அதே வீட்டிலேயே தொடர்ந்து வசித்ததால் இப்போது அதற்கு வசதியில்லை என்று கூறி மறுத்துவிட்டேன்.

ஏதேச்சையாக ஒரு நாள் தெருவில் நடந்து செல்லும்பொது எதிரில் நடந்து வந்த பிருந்தாவைப் பார்த்து ‘இந்த முகம் எங்கோ பரிச்சயமானதாக இருக்கிறதே’ என்று யோசித்தபோது அவளிடமும் அதே குறுகுறு பார்வை. நான் சற்று சுதாரித்து “உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்” என்றேன், அவள், ” ஐ ம் ப்ரிந்தா, நாம ஒருமுறை ப்ளு க்ராஸ்ல மீட் பண்ணோம்” என்றாள் கொஞ்சம் கூட யோசிக்காமல்.

தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறாளாம். பிறந்து வளர்ந்ததெல்லாம் கொல்கத்தாவாம், இப்போது சமீபத்தில் தான் சென்னையில் குடியேறினார்களாம். அவ்வப்போது ப்ளு க்ராஸில் தன்னார்வ தொண்டு செய்கிறாளாம். பின்பு, நானும் அடிக்கடி ப்ளூ க்ராஸ் செல்ல ஆரம்பித்தேன். எங்கள் நட்பு வளர அது போதுமானதாக இருந்தது.

ஃபேஸ் புக்கிலும், மொபைலிலும், ப்ளூக்ராஸிலும் எங்கள் நட்பு தினமும் தொடர்ந்தது. எங்கள் நட்பு காதலாக மலர அது போதுமானதாக இருந்தது.

அம்மாவிடம் விஷயத்தை சொன்ன போது வழக்கம்போல் உனக்கு பிடித்திருந்தால் சரி, என்று தடையேதும் சொல்லவில்லை.

பிருந்தா வீட்டில் மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இருக்கக் கூடாது என்ற ஒரே தடை மட்டும்!. எனக்கு மதுவருந்தும் பழக்கம் இல்லாததால் ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் திருமணம் இனிதே நிறைவேறியது.

ஐன்ஸ்டைனின் தத்துவப்படி, வாழ்வின் சில சந்தோஷமான தருணங்கள் ஃபாஸ்ட் ஃபார்வர்டிலும், மோசமான தருணங்கள் ஸ்லோ மோஷனிலும் நடக்கிறது.

இப்போது எங்கள் வீட்டின் வருமானம் இருமடங்காகியது. அதனால் இரு படுக்கை அறைகளுடன் கூடிய வேறு வீட்டிற்கு மாற முடிவு செய்தோம். எங்கள் நல்ல நேரம் பழைய வீட்டின் உறிமையாளர் அந்த வீட்டை விற்க முடிவெடுத்திருப்பதாக தெரிந்தவர் மூலம் சொல்லியனுப்பினார். எங்கள் இருவர் சம்பளத்திலும் வீட்டுக் கடன் வாங்கி அதே பழைய வீட்டில் குடியேறினோம்.

ஒரு முறை அதே கருப்பு நாய் வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த பிருந்தாவைப் பார்த்து குறைத்தது. பயத்தின் காரணமாக அவள் வேகமாக உள்ளேவந்து கதவை தாளிட்டுகொண்டாள். அதைப் பார்த்ததிலிருந்து அவளை பார்க்கும்போதெல்லாம் ஷேர்கானின் ஞாபகம்தான் வந்தது.

ஒரு இனம் புரியாத சோகம், எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாதது போன்றதொரு நிலை. .

பொறுமையிழந்த பிருந்தா ஒரு நாள் இரவு என்னிடம் நேரிடையாக கேட்டுவிட்டாள். முழு கதையையும் அவளிடம் சொன்னேன் .

இப்போது வீடு பெரிதாகவும் விஸ்தாரமாகவும் இருக்கிறதே திரும்ப கொண்டு வந்து விடலாமா என்று கேட்டபோது “அடடா போனவாரம் தானே ஒருத்தார் அதை எடுத்துட்டு போனார். பரவாயில்லை அட்ரஸ் கேட்டு போய் பாத்துட்டு வரலாம்” என்றாள்.

மனம் கொஞ்சம் சமாதானமடைந்தது.

ப்ளூ க்ராஸில் அவளுக்கு மிகுந்த செல்வாக்கு போலும், காலை எழுந்தவுடன் தொலைபேசியில் முகவரி வாங்கிவிட்டாள். அன்று விடுமுறை எடுத்துக்கொண்டு இருவரும் ஷேர்கானைப் பார்க்க சென்றோம்.

அவர்கள் வீடு தேடி கண்டுபிடிக்க ஒன்றும் சிரமமாக இல்லை. உள்ளே சென்றவுடன், அங்கிருந்தவரிடம் பிருந்தா வந்த விஷயத்தை நேரடியாக கூறாமல் தான் ப்ளூ க்ராஸிலிருந்து வருவதாக கூறி ஷேர்கானைப் பற்றி விசாரித்தாள்.

அது ஒரு மூலையில் படுத்திருந்தது. அதற்கென வைக்கப்பட்டிருந்த தட்டில், ஒன்றிரண்டு மீன் துண்டுகள் இருந்தன.

அவர் உடனே, “அட போங்க மேடம், எலியை பிடிக்கும்னு தான் இதை கொண்டு வந்தேன், இது எலியையும் புடிக்கிறதில்லை, கவுச்சியும் சாப்பிடறதில்லை, இதுக்காக நாங்க தினமும் பால் வாங்க முடியுமா?, திரும்ப கொண்டு விட்றலாம்னு பாக்கறேன்” என்றார்.

எனக்கு அதன் மேலிருந்த பரிதாபம் கூடியது. நேராக சென்று என் கைகளில் அதனை தூக்கிக்கொண்டேன். முன்பைவிட இப்போது கொஞ்சம் மெலிந்திருந்தது என்னை நிமிர்ந்து பார்த்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.

பிருந்தா, “உங்களுக்கு அந்த சிரமமே வேண்டாம் சார், நானே இதை தூக்கிட்டு போய்டறேன், ரொம்ப தேங்க்ஸ் ” என்றாள் இருவரும் அவரிடம் விடை பெற்று வீடு திரும்பினோம்.

வீட்டினுள் நுழைந்தவுடன் அம்மா அதைப் பார்த்து, “அட எங்கேயிருந்து புடிச்சிட்டு வந்தே?” என்றாள். அனைவருக்கும் இழந்த ஏதோவொன்று திரும்ப கிடைத்த சந்தோஷம்.

வழக்கம் போல் வீட்டிலிருக்கும் என் நேரத்தை பெரும்பாலும் ஷேர்கான் எடுத்துக் கொண்டது.

இப்போதெல்லாம் ஷேர்கானை பார்க்கும்போது பிருந்தாவின் பார்வையில் லேசான பொறாமை தெரிகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *