கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2023
பார்வையிட்டோர்: 3,320 
 
 

அருணும் தன் தாய்மேல் பாசத்தைக் கொட்டினான்..! கொட்டுகிறான்..! கொட்டுவான்..! இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு வந்த பூமிகா தன்னை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்கிறாள் என்பதை ஒரு சதவீதம் கூட அறியாதவன் அருண்.

அன்னபூரணியம்மா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.

துளசி மாடத்துக்குக் கோலம் போட்டுவிட்டுத் திரும்பும்போது,

“துளசியம்மா; உனக்கு இதுதான் என்னோட கடைசி பூஜையா இருக்கும். இருக்கணும்..!”

விண்ணப்பம் போலவும், வேண்டுதல் போலும் அவளது உள்ளக்கிடக்கை வெளிப்பட்டது. அதே சமயம் ஆழ்மனம் விழித்துதெழுந்து கசப்பான அனுபவங்களை கண்முன் நிறுத்தின.

மருமகள் பூமிகாவை நினைத்தபோதே நடுக்கம் வந்தது அன்னபூரணிக்கு.

“ பொம்பளையா அவ..! பிசாசு..!”

தன்னை அறியாமல் ஆத்திரத்துடன் வாய்விட்டே கத்திவிட்டாள்.

இப்போது என்னவேண்டுமானாலும் கத்தலாம்.. அதை காதில் வாங்கத்தான் வீட்டில் ஒருவரும் இல்லையே..!

கணவரின் அகால மரணத்திற்குப் பின் தன் ஒரே மகன் அருண் மீது பாசத்தைக் கொட்டி வளர்த்தாள் அன்னபூரணி. அருண்தான் அவள் ஒரே உலகம்.

அருணும் தன் தாய்மேல் பாசத்தைக் கொட்டினான்..! கொட்டுகிறான்..! கொட்டுவான்..! இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு வந்த பூமிகா தன்னை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்கிறாள் என்பதை ஒரு சதவீதம் கூட அறியாதவன் அருண். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படி ஒரு நடிப்பு நடிக்கிறாள் பூமிகா.

திருமணமாகி, அருணுடன் பூமிகாவும் புது மண தம்பதியராய், வீட்டுக்கு வந்த முதல் நாள்; இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.

நினைத்தாலே குலை நடுங்குகிறது. முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடக்கூடாது… நாம் விலகிவிடவேண்டும் என்று தோன்றியது அன்னபூரணிக்கு…

டயாப்டீஸ், ப்ரஷர், முழங்காலில் மூட்டுத் தேய்மானம், தோள் பட்டை வலி என மாத்திரைகளும் மருந்துகளும் அதிகரிக்க அதிகரிக்க… நடமாட்டம் குறைந்த தாய் அன்னபூரணியை கண்ணும் கருத்துமாக கவனித்தான் அருண். அலுவலகம் செல்லும் முன் அம்மாவுக்கு ஒத்தாசையாக அத்தனை காரியங்களையும் பார்த்துவிட்டுத்தான் செல்வான் அவன்.

வேலைக்காரி என்று ஒருவரை வைத்துக்கொண்டால் வீட்டின் பிரைவசியும், சமநிலையும் கெட்டுவிடும் என்பது அருணின் சித்தாந்தம். எனவே, பற்றுப் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகளையும் சிஸ்டமேட்டிக்காக செய்துவிடுவான் அவன்.

‘மைண்ட்ஃபுல்னெஸ்’ஸோடு, அதாவது முழு ஈடுபாட்டோடு ஒரு காரியத்தை செய்வதில் நிபுணன் அருண். அவன் அப்பா மாதிரி.

அடுப்பில் ஏற்றி இறக்குவதைத் தவிர அனைத்து சுற்றுக் காரியங்களையும் காய்கறிகள் நறுக்குவது முதல் பாத்திரம் தேய்ப்பது முடிய; சிறப்பாகச் செய்வான் அருண்.

‘இவ்வளவு புத்திசாலியான அருண் தன் மனைவி திரை மறைவில் அன்னபூரணியைக் கொடுமைப்படுத்துவதை மட்டும் எப்படிக் கண்டுபிடிக்காமல் இருக்கிறான்..!’ நாமே சொல்லிவிடலாம் என்றால்…

“உங்க மகன் கிட்டே என்னைப் பத்திப் போட்டுக்கொடுத்தீங்கன்னா அடுத்த நொடி நான் அம்மா வீட்டோட போயிருவேன். வாய மூடிட்டு நான் சொல்றபடி நடந்துக்கணும்.. தெரியுதா..!”

வலது கால் வைத்து முதன் முதலில் வீட்டுக்குள் வந்ததுமே தன் காதுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு சிரித்துக்கொண்டே பூமிகா கூறியதை இப்போது நினைத்தாலும் வயிறு சில்லிடுகிறது.

பூமிகாவுக்கு பயந்து கால் தாங்கியபடி மெதுவாக நடந்து கிச்சனில் நின்று பால் காய்ச்சி, மஞ்சள் தூள் போட்டு கொண்டுபோய் கொடுத்தபோது

“மருமகள் வந்ததும் தெம்பு வந்துருச்சேம்மா உனக்கு…!” என்றான் உண்மை நிலை உணராத அருண் அப்பாவியாக.

அப்போது “நீங்க எதுக்கு அத்தை சிரமப்படறீங்க..?” என்று இயல்பாக பூமிகா கூறியதை காதில் வாங்கிய உடனே ‘B.P’ எகிறிவிட்டது அன்னபூரணிக்கு.

“ஒழுங்கு மரியாதையா பால் காய்ச்சி, மஞ்சப்பொடி போட்டுக் கொண்டாங்க.. இல்லேன்னா நடக்கறதே வேறயா இருக்கும்..” என்று காதருகில் சிரித்துக்கொண்டே மிரட்டிவிட்டு இப்போது இப்படி சீன் போடுகிறாளே..!

சினிமாவில் வரும் வில்லி கேரக்டர் போல அல்லவா நடந்துகொண்டாள். அவள் அப்படிப் பேசினாள் என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள். அப்படி ஒரு டாக்டீஸ்… “இவளோடு எப்படி காலம் தள்ளுவது..?” அன்னபூரணி கவலைப்பட்டாள்.

வாஷிங் மெஷினில் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு சிக்கலாக இருந்த துணிகளை எடுத்து உதறி முற்றத்தில் உலர்த்தினாள். நாளை நாம் இதை உலர்த்தப் போவதில்லை என்ற எண்ணம் வர நிதானமாக உலர்த்தினாள்

முதல் நாள் பால் காய்ச்சச் சொன்ன பூமிகா, மறுநாள் காலை புருஷனுக்கு முன் எழுந்து நேராக தன் அறைக்கு வந்து அவள் நடந்து கொண்ட விதம் இப்போது நினைத்தாலும் அவளை உலுக்கியது.

“வாம்மா…!”

“என்ன ஓம்மா…! அதென்ன குரல் ஹீனஸ்வரத்துல வருது. சாப்பிட்டு ஒரு வாரம் ஆனாப்பல… நல்லாத்தானே திங்கறீங்க… கனீர்னு பேசுங்க…” என்றவள், “காய்கறிகளை கொண்டு வந்து சாப்பாட்டு மைசைமேலே வைத்து இதை நறுக்குங்க.. உங்க மகனை நறுக்கச் சொன்னா தெரியும் சேதி.. நான் கிளம்பிடுவேன் அம்மா வீட்டுக்கு…” என்று மிரட்டிவிட்டுச் சென்றுவிட்டாள்.

அருண் படுக்கையிலிருந்து எழுந்து வரும்போது “ஏம்மா நீயே காய் நறுக்கறே..?” என்று அதிர்ச்சியாய்க் கேட்க, அவன் பின்னாலேயே வந்த பூமிகா.. “எதுக்கு அத்தே நீங்க சிரமப்படறீங்க.. நான் நறுக்கமாட்டேனா..?” என்று தேனொழுகப் பேசி ரத்தக் கொதிப்பை ஏற்றிய அந்த நாள் அவளையறியாமல் நினைவுக்கு வந்தது.

‘“டெவில்…” பாசமாய் வளர்த்து இப்படி ஒரு மோசமானவளுக்குக் தாரைவார்த்துவிட்டோமே…! என்று கழிவிரக்கத்தில் கலங்கினாள் அன்னபூரணி.

சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டாள். சாப்பிட்ட தட்டு உட்பட, ஸிங்கில் கிடந்த அம்பாரம் பாத்திரங்களையும் தேய்த்துக் கவிழ்த்தாள். பின்பு ஈர நைப்பைத் துணியால் துடைத்து அதனதன் இடத்தில் இடைவெளி விட்டுக் கவிழ்த்தாள்.

“ஏன் பாத்திரம் பண்டம் கழுவக்கூட முடியாம கை கால் இழுத்துக்கிட்டதோ..?” என்று ஒரு நாள் பூமிகா கறுவியதிலிருந்து அன்னபூரணிதான் இதைச் செய்கிறாள்.

கடைசியாகச் செய்கிறோம் என்கிற எண்ணத்தில் மிகவும் நேர்த்தியாக பாத்திரங்களையெல்லாம் அடுக்கினாள். சமையல் மேடை கண்ணாடி போல பளபளத்தது.

படுக்கைக்கு அடியில் இருந்த சூட்கேஸை வெளியே இழுத்தாள். அகலத் திறந்தாள். ‘இது வேணாம்’, ‘இது அநாவசியம்’ என்று தோன்றியதையெல்லாம் ஒதுக்கினாள். அவசியத்திற்கும், தேவைக்கும் தேவையானவற்றை மடித்து வைத்துக்கொண்டாள். துவைத்து உலர்த்தியதில் தேவையானவை இருந்ததால் முற்றத்தில் உலர்ந்த துணிகளை அங்கேயே நின்றபடி நேர்த்தியாக மடித்து எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

மகன், மருமகள் துணிகளை அவர்கள் அறையில் வைத்துவிட்டு, இவள் துணிகளை சூட் கேஸில் வைத்தாள்.

வழக்கமாக எழுதும் ஸ்ரீராமஜெயம் எழுதி முடித்துவிட்டு, அன்றைய நாளிதழோடு வந்த ஒரு ரியல் எஸ்டேட் விளப்பரப் பேப்பரை எடுத்தாள். ஒரு புறம் பால் போன்ற வெண்மையான பக்கத்தில் எழுத ஆரம்பித்தாள்.

எழுதி முடித்ததும் இரண்டு மூன்று முறை படித்தாள். சரியாக இருப்பதாகத் தானே திருப்திப் பட்டுக்கொண்டாள்.

எழுதிய கடிதத்தை ஸ்ரீராமஜெயம் நோட்டில் மடித்துவைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள். பூரிக்கு மாவு பிசைந்தாள். பூரி என்றால் அருணுக்கு அவ்வளவு இஷ்டம்.

பூரி பொரித்து சம்புடத்தில் வைத்தாகிவிட்டது. பூரிக்கிழங்கும் தயாராகி விட்டது.

அறக்கட்டளைக்கு மீண்டும் ஒரு முறை போன் செய்து கேட்டாள். “ஒன்பது மணி வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம்…” என்றார்கள்.

‘ஐந்து மணிக்கு அருண் வந்துவிடுவான். ஐந்தரைக்கு அந்த டெவில் பூமிகா வந்துவிடுவாள். அவள் வருவதற்குள் அருணிடம் சொல்லி மூட்டையைக் கட்டிவிட வேண்டும்.’ என்பதில் உறுதியாக இருந்தாள் அன்னபூரணி.

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் உலகில் ஏதுமில்லை.. என்ற சித்தாந்தம்தான் எவ்வளவு உண்மை.

இன்றெனப் பார்த்து அருணும் பூமிகாவும் சேர்ந்தே வந்தனர்.

‘நாமோ கிளம்பப்போறோம் எதுக்கு பயப்படணும்…?’ என்ற அசட்டுத் துணிச்சல் வர “இந்தா அருண்…!” என்று அவள் எழுதிய பேப்பரை ஸ்ரீராமஜெயம் நோட்டை எடுத்து நீட்டினாள்.

“என்னம்மா..?” என்று கேட்டுக்கொண்டே, படிக்கப் படிக்க அருண் முகம் கலவரமானது…

“என்னம்மா..உனக்கு இங்கே என்ன குறை..? எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தே..”

அருண் தோளுக்குப் பின்னால் நின்று மாமியாரின் கடிதத்தைப் படித்து முடித்த பூமிகா… “உணர்ச்சி வசப்படாதீங்க… நான் அத்தைக்கு எடுத்துச் சொல்றேன். நீங்க போய் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு வாங்க…” என்று அருணை அனுப்பினாள் பூமிகா.

“அத்தை…!”

“சொல்லு…”

“நீங்க அந்த லெட்டர்ல எழுதியபடி முதியோர் இல்லத்துக்கு போயித்தான் ஆகணுமா…?”

“ஆமாம்..! என்னை யாரும் பாத்துக்க வேணாம். எனக்கு என்னைப் பாத்துக்கத் தெரியும்..!” வெடித்தாள் அன்னபூரணி.

“அலோபதி, ஹோமியோபதி, சித்தா, யுனானி..னு உங்களைச் சுத்தி இருந்த எண்ணெய், மருந்து – மாத்திரைகளோட படுத்த படுக்கையா இருந்த உங்களுக்கு, இப்படி ஒரு தன்னம்பிக்கையை கொடுக்க நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம் அத்தை.”

“…”

“உங்களை ரொம்பக் கடுமையா, கொடுமையா நடத்தினேன். நாக்குல நரம்பில்லாம சுடுசொல் பேசினேன். நான் பேசினதும் நடந்துக்கிட்டதும் உங்க நன்மைக்காகத்தான். நீங்க யாரையும் சார்ந்து இல்லாம திடமா கடைசி வரை இருக்கணும்னுதான்”.

“…”

“இதுக்கு மேலேயும் நீங்க முதியோர் இல்லத்துக்குப் போகணும்னா நான் தடையா நிக்கலை..!” என்றாள் பூமிகா ஒரு புன்சிரிப்புடன்.

“அம்மா…! என்ன முடிவெடுத்திருக்காங்க பூமிகா…?” என்று கேட்டுக்கொண்டே படபடப்புடன் வந்தான் அருண்…

“நான் எங்கேயும் போகலை வருண். இங்கியே இருப்பேன்..” என்ற அன்னபூரணி; பூமிகாவைப் பார்த்தாள்.

அன்னபூரணியின் பார்வையில் பூமிகா இப்போது வில்லியாகத் தெரியவில்லை. ‘லவ்வி’யாகத் தோன்றினாள்.

– 25.04.2022

இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *