கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 2,628 
 
 

(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் அடிக்கடி குற்றாலத்துக்குப் போவதுண்டு; குற்றாலம் போனால் ஷண்பகா தேவிக்குப் போகாமல் இருப்பதில்லை. 

ஒரு நாள் காலை, தன்னந்தனியாகப் புறப்பட்டு, பிறவி மலைப் பளிங்கனைப் போலக் களைப்பில்லாமல் மலையேறி ஷண்பகா தேவி யடைந்தேன். 

போன வருஷத்துக்கு இந்த வருஷம் ஒரு மாறுதலும் காணவில்லை. எல்லாம் அப்படியப்படியே இருந்தன. ஒரு பனை உயரத்திலிருந்து ஆகாச கங்கை போலச் “சோ”வென்ற இரைச்ச லுடன் நீர்வீழ்ச்சி விழுந்து கொண்டிருந்தது. கீழே விழுந்த ஜலம் கொந்தளித்துக் கொதித்துப் பாதாளத்தை நோக்கி உருண்டு சென்றது. பிறைச் சந்திரன் போல் வளைந்திருந்த குன்றின் சரிவுகளில் பெயர் சொல்லி முடியாத விருட்சங்கள் பூதாகாரமாய் நின்று நடுங்கிக் கொண்டிருந்தன. அவைகளின் உடலைச் சர்ப்பம் போன்ற கொடிகள் பிணைத்துக் கொண்டு தலை தூக்கி ஆடிக் கொண்டிருந்தன. அங்கங்கே தோன்றிய புதர்களுக்குள் இருட்டு அடைந்திருந்தது. 

நீர் வீழ்ச்சிக்கு வலப்புறத்தில் ஷண்பகா தேவியின் சிறிய கோவில். அவை இரண்டுக்கும் மத்தியில் ஒரு குகை. அதில் ஒரு கிழட்டுச் சாமியார் ரொம்ப காலமாய் வசித்து வந்தார். அவர் அங்குள்ள குரங்குகளைப் பழக்கி, அவைகளுடன் விளையாடி வந்ததால், அவருக்குக் குரங்குச் சாமியார் என்ற பெயர் இடப் பட்டது. அவரை நான் அங்கு வரும்போதெல்லாம் பார்த்திருக்கிறேன். 

அருவியையும், மலையையும், மரங்கொடி புதர்களையும் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போய்விட்டது. ஒரு பாறையின் மேல் உட்கார்ந்து ஆனந்தமாய் ராக ஆலாபனம் செய்தேன். 

“ஆத்மநாபா” என்று குகையிலிருந்து ஒரு குரல் வந்தது. அந்தக் குரலில் இனிமை தொனித்தது. கொஞ்ச நேரம் கழித்து ஒரு யௌவன சன்னியாசி குகையிலிருந்து வெளியே வந்தார். அரையில் ஒரு சின்னக் காவி வஸ்திரம் தரித்திருந்தார். தலைமயிர் தோள் பட்டையில் புரண்டு கொண்டிருந்தது. குகை வாயிலில் ஒரு கணம் நின்று நாலா பக்கமும் அண்ணாந்து பார்த்தார். என்னைப் பார்த்தும் பார்ககாதது போல், நிழல் போலச் சந்தடி செய்யாமல், அருவிக் கரையை யடைந்து நாலு கை நீர் பருகிவிட்டுக் குகைக்குள் சென்று விட்டார். 

இதற்கு முன் இவரை எங்கேயோ பார்த்திருப்பதாக எனக்குத் தோன்றியது. “எங்கே பார்த்திருக்க முடியும்? அவருக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்காது. இவ்வளவு வாலிபத்தில் ஒருவன் துறவு கொண்டு, இந்தக் காட்டுக் குகையில் வசிப்பானேன்?” என்ற கேள்விகள் என் மனதில் எழுந்தன. 

‘அவர் முகத்தில்தான் என்ன தேஜஸ், என்ன பிரகாசம்!’ என்று வியந்து கொண்டிருக்கும்போது, ஷண்பகா தேவிக் கோவிலில் மணிச் சப்தம் கேட்டது. மணியின் நாதம் அமர்ந்ததும், கோவில் பூசாரி, ஒரு கட்டி நைவேத்திய அன்னம் கொண்டு வந்து, குகைக்குள் வைத்து விட்டு, என்னருகில் கைகளைச் சுத்தி செய்ய வந்தார். 

“இங்கே இருந்த குரங்குச் சாமியார் எங்கே?” என்று கேட்டேன். 

“அவர் சமாதி அடைந்து விட்டார்.” 

“இவரோ?” 

“இவர் ஊர் பேர் ஒன்றும் எனக்குத் தெரியாது. அவர் சமாதியடைந்த மறு நாள் இவர் குகைக்கு வந்தார். வந்து ஆறு மாசமிருக்கும். வாய் திறந்து ஒருவரிடமும் பேசுவதில்லை.”

சன்னியாசியைப் பற்றிப் பூசாரிக்கு அவ்வளவுதான் தெரியும்.

“நீர் ராத்திரி இங்கே தாமசிப்பதுண்டா?” என்று கேட்டேன். 

“இங்கே ராத்திரி தங்கினால், ஒரே அறையில் பேய் பிசாசுகள் அடித்துக் கொன்று விடும், அவ்வளவுதான். ஆனால் அவைகள் சாமியாரை ஒன்றும் செய்வதில்லை. மந்திர பலம், ஸ்வாமி!” என்றார். 

“உலகத்தில் எவ்வளவோ பெரியவர், எவ்வளவோ ஞானிகள் இருக்கிறார்கள். நானும் இருக்கிறேனே, அற்ப ஜந்துவாய்!” என்று எண்ணியபடியே, கடைசி முறையாகக் குகை வாசலைப் பார்த்து விட்டு, படிகளின் வழியாகக் கீழே இறங்கினேன். 

சுமார் நூறு படிகள் இறங்கி இருப்பேன். கீழிருந்து மூன்று பேர்கள், இரண்டு ஆணும் ஒரு பெண்ணும் விரைவாக ஏறி வருவதைப் பார்த்தேன். அப்படியே நின்று விட்டேன். வந்தவர்கள் என் சென்னை நண்பன் மகரமும், அவன் தங்கை ராஜமும். மற்றவன் வழிகாட்டி. 

“என்ன எதிர்பாராத சந்திப்பு!” என்று குதூகலமாய்க் கை நீட்டினேன். 

அடுத்த நிமிஷம் நீட்டிய கையை மடக்கிக் கொண்டேன். என் குதூகலம் மறைந்து விட்டது. அவர்கள் முகத்தில் ஏதோ கவலையும், துக்கமும் குடி கொண்டிருந்தன. 

“வா, எங்கள் கூட வா!” என்று மட்டும் மகரம் சொன்னான். நானும் பின் தொடர்ந்தேன். 

“உயரே ஒரு சாமியாரைப் பார்த்தாயா?” 

“ஆமாம்.” 

“அவரை அடையாளம் தெரிந்ததா?”

“இல்லையே!” 

“அவன் ராஜத்தின் கணவன்.”

நாங்கள் இன்னும் விரைவாக நடந்தோம். நீர் வீழ்ச்சியின் சப்தம் எதிரில் கேட்டது. நீர் வீழ்ச்சி கண்ணிலும் பட்டது. மூச்சிளைக்கக் குகை வாயிலை அடைந்தோம். 

‘ஓ’வென்று ராஜம் கதறி விட்டாள். சன்னியாசி வெளியே வந்து, எங்களைக் கண்டதும் குழப்பமடைந்து, பித்துப் போல் நின்றார். எங்கள் ஒவ்வொருவரையும் மாறி மாறிப் பார்த்தார். 

சாமியார் சமாளித்துக் கொண்டு, குகை வாசலில் உட்கார்ந்து கொண்டு, காலடியிலுள்ள பாறையைப் பிளக்க யோசிப்பது போல் அதையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். விம்மி விம்மி ராஜம் அழுது கொண்டிருந்தாள். மகரம் சாமியாரையும் குகையையும் கோபத்தோடு கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான்….. “சோ” வென்று அருவி விழுந்து, புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. 

திடீரென்று, “போய் விடுங்கள், போய் விடுங்கள்!” என்று சன்யாசி கூறினார். 

”ஐயோ, விதியே, என்ன கோலம்!” என்ற பதங்களை அடிக்கடி உபயோகித்து, என்னவெல்லாமோ ராஜம் அழுகைக்கு இடையிலே சொன்னாள். இவள் சொன்ன வார்த்தைகளைச் சன்னியாசி கேட்கவே இல்லை போலத் தோன்றியது. அவர் அசங்காச் சிலையாயிருந்தார். 

என் நண்பனுக்குக் கோபாவேசம் வந்து விட்டது. “ஒரு பெண்ணைப் பரிதவிக்க விட்டுவிட்டு, சன்னியாசியாகப் போய் விட்டானாம்! என்ன தபஸ் வேண்டியிருக்கு, தபஸ்! மௌனமாம். மௌனம். வாய் என்ன கட்டிப் போய்விட்டதோ! மனுஷனைப் பாரு, மனுஷனை!’ என்று அடுக்கினான். 

சன்னியாசி குனிந்தபடியே லேசாக நகைத்தார். 

“சிரிப்பதைப் பாரு! உன்னை…” என்று இன்னும் ஏதோ சொல்வதற்குள், நான் அவன் கையைப் பிடித்து அழுத்தினேன். 

ராஜம் பேசவாரம்பித்தாள். “நீங்கள் வீட்டை விட்டு வருவதற்குக் காரணம் என்ன? யார் என்ன செய்தார்கள்?” 

சாமியார் தன் கைகளைப் பின்னிக் கொண்டு. “நான் யார் என்று அறிந்து கொள்ளவே வீட்டை விட்டு ஓடி வந்தேன். ஆத்ம ஞானம் பெறவே காட்டுக்கு வந்திருக்கிறேன். மெய்ப்பொருளைக் காணும் விதத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். வீணாக என் திடத்தைக் குலைக்காதீர்கள். போய் விடுங்கள்!” என்றார். 

நான் பெருமூச்செறிந்தேன். 

“அதற்கு இந்தப் பயங்கரமான இடத்திலா இருக்க வேண்டும்? கீழே, குற்றாலத்தில் ஒரு வீடு அமர்த்துகிறேன். அங்கே இருந்து கொண்டு உங்கள் பூஜை புனஷ்காரங்களைச் செய்தால் என்ன?” 

“பூஜை! புனஷ்காரம்! பெண்ணே, உனக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஞான சூன்யம்… சே, நான் ஏன் அப்படிப் பேச வேண்டும்? இன்னும் என் அகந்தை மாறவில்லையே! மன்னித்து விடு…ஒரே வார்த்தையில், எனக்குக் காடுதான் வீடு, பரந்தாமா!” 

சன்னியாசி குகைக்குள் சென்று விட்டார். குகைக்குள்ளிருந்து “பரந்தாமா” என்று மறுபடியும் கேட்டது. 

தலை குனிந்தவாறு ராஜம் படிகளை நோக்கி நடந்தாள். நாங்களும் பின் தொடர்ந்தோம். கீழே இறங்க இறங்க நீர் வீழ்ச்சியின் இரைச்சல் குறைந்து கொண்டே வந்தது. பிறகு நின்று விட்டது. சுளீரென்று எங்கள் உச்சியில் வெய்யில் அடித்தது. 

நான் கேட்காமலே மகரம் சன்னியாசியின் வரலாற்றைச் சொன்னான். 

“ராமனாதன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். அவன் அனாதையாம், ஆதரவற்றுக் கிடந்தான். அவனை என் தகப்பனார் தான் முன்னுக்குக் கொண்டு வந்தார். பி.எல். வரை படிக்க வைத்தார். ராஜத்தையும் கலியாணம் செய்து கொடுத்தார். என்ன, கேட்கிறாயா? 

“அவன் நாலைந்து வருஷமாய் ஒழுங்காகக் குடும்பம் நடத்தி வந்தான். ராஜத்தினிடம் உயிருக்கு உயிராக இருந்தான். நல்ல சம்பாத்தியம், நல்ல போகம். 

“சுமார் இரண்டு வருஷத்துக்கு முன்னால் அவன் கண்ட கண்ட சாமியார்களை வீட்டுக்கு அழைத்து வரத் தலைப்பட்டான். அவர்கள் இல்லாத பித்துக்குளித் தனத்தை அவனுக்குப் புகட்டி விட்டார்கள். இதைப் பற்றி ராஜம் என்னிடம் சொன்ன போது நான் அலட்சியமாய் இருந்துவிட்டேன். 

“திடீரென்று போன வருஷம் ஒரு நாள், அவனைக் காணவில்லை. அது முதல் அவனைத் தேடித் தேடி என் கால் தேய்ந்து விட்டது. என் குடித்தனமும் தொழிலும் பாழாகி விட்டது. முந்தா நாள்தான் இங்கே இருப்பதாகத் தகவல் கிடைத்தது. 

“இங்கு வந்தும் என்ன பலன்? நான் வரும்போதே சொன்னேனே, கேட்டாளா?… அவன்தான் என்ன ஞானத்தைக் கண்டுவிட்டான்! அவன் தலையோ! காவித்துணியோ! தாடியோ! எனக்கு அவமானமாய் இருக்கிறது, மடையன்…” 

“அண்ணா நீங்கள் என் காது கேட்க அவரைத் தூஷிக்க வேண்டாம்!” என்று ராஜம், கன்னத்தில் அறைந்தாப் போல் மார்பு விம்மச் சொன்னாள். 

நான் திகைத்து விட்டேன். அருகிலுள்ள வில்வத்திலிருந்து ஒரு மணிப்புறா சிறகடித்துச் சென்றது. தூரத்தில், ஏதோ ஒரு பறவை உருகிக் கூவியது. 

ஒருவரும் பேசாமல், மலையடிக்கு வந்து விட்டோம். அவர்களை என் பங்களாவுக்குக் கூட்டிக் கொண்டு போனேன். 

மாலை, அஸ்தமிக்கும் சமயத்தில், “ராஜம், இங்கே நமக்கு இனிமேல் என்ன ஜோலி? என்ன, ஊருக்குப் புறப்படுவோமே!” என்று மகரம் யோசனை கேட்டான். 

“இல்லை, அண்ணா. நாளைக்கும் ஷண்பகா தேவி போய் அவர் மனதைத் திருப்ப முடியுமா என்று பார்க்கலாம். கொஞ்சம் தயவு செய்யுங்கள்.” 

“அட பைத்தியமே, சரி,” என்று சம்மதித்தான். 

அன்று இரவு முழுவதும் ராஜம் தூங்கவேயில்லை. “இப்படிக் காற்று ஊளையிடுகிறதே, அங்கே அவருக்குப் பயமாயிருக்காதா? இப்படி மைக்கொத்துமை ருட்டாய் இருக்கிறதே! அங்கே அவருக்குப் பயமாயிருக்காதா?” என்று புலம்பித் தவித்துக் கொண்டிருந்தாள். 

எனக்கும் தூக்கம் வரவில்லை. “அந்த இருட்டில், அந்த நீர் வீழ்ச்சிக்கருகில், அந்த இருண்ட குகையில் அந்தச் சன்னியாசி என்னமாய்த்தான் இருக்கிறானோ? ராஜம் எவ்வளவு அழகாய் இருக்கிறாள்! என்ன தங்கமான பொருள் அவள்! அவளையும் வெறுக்க ஒரு மனிதன் இருக்கிறானே! என்ன விநோதம்!” 

ஊதல் காற்று உறுமிக் கொண்டு அடித்தது. குற்றால அருவியின் சப்தம் விட்டு விட்டு இருட்டைப் பிளந்து கொண்டு வந்தது. 

பொழுது புலர்ந்தது. புள்ளினம் பாடியிருக்கலாம், பூக்கள் மலர்ந்திருக்கலாம். ஆனால் எங்கள் கண்கள் ஷண்பகா தேவிக்குப் போகும் பாதையில் ஊன்றிக் கிடந்தன. நீர் வீழ்ச்சியின் சப்தத்தை எப்போது கேட்போம் என்று விரைந்து கொண்டிருந்தோம். பூக்களைப் பார்க்கவில்லை, புள்ளினத்தையும் கேட்கவில்லை. 

நெருங்க நெருங்க நீர்வீழ்ச்சியின் இரைச்சல் அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. கொந்தளித்துப் பொங்கி விழும் நீர் வீழ்ச்சியைக் கண்டோம். ஆனால் குகைக்குள் சன்னியாசியைக் காணவில்லை. நேற்று “பரந்தாமா!” என்று ஒலித்த குரல் எங்கே? குகை மூலையில், ஒரு கமண்டலமும் செப்புச் சொம்பும் இருந்தன. வெளியில் எங்கேயினும் போயிருப்பாரோ என்று தயங்கி நின்றோம். 

மரங்கள் சலனமற்று நின்றன. வானத்தில் தட்டுத் தட்டாய் மேகங் கூடியிருந்தது. சகிக்க முடியாதபடி “ஊமை” வெயில் அடித்துக் கொண்டிருந்தது. 

கோவில் பூசாரி வந்து சேர்ந்தார். 

“சன்னியாசி எங்கே போயிருக்கலாம்?” என்று கேட்டோம். 

அவர் யோசித்துப் பார்த்து, “அதோ அந்தப் படிகள் வழியாய்ப் போனால் குன்றின் உச்சிக்குப் போகலாம். அந்த இடத்துக்கு அவர் அடிக்கடி போய் நிஷ்டையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்,” என்று சொன்னார். 

செடி கொடிகளை விலக்கிக் கொண்டு, கரடு முரடாகச் செதுக்கப்பட்ட படிகளில் ஏறிச் சென்றோம். 

சிகரத்தை யடைந்தோம். வலது பக்கத்தில் கெடு பாதாளத்தில் ஷண்பகா தேவிக் கோவில் தெரிந்தது. எதிரே, பத்து கஜத்துக்கு முன்னால் நாலடியில் நீர் வீழ்ச்சியாகச் சறுக்கி விழப்போகும் காட்டாறு கடகடவென்று உருண்டு கொண்டிருந்தது. 

மூன்று பேரும் ஒரே சமயத்தில் இடது பக்கம் திரும்பினோம். அங்கே வெகு சமீபத்திலுள்ள வேங்கை மரத்தினடியில், சந்நி யாசியின் உருவம் தோன்றியது. முகமும் மார்பும் நீலம் பாய்ந்து கிடந்தன. வலது காலில் இரண்டு சிகப்புப் புள்ளிகள் தோன்றின. நாங்கள் பார்த்தது உயிரற்ற உடல்; பாம்புக் கடியால் மரணம் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. 

“ஐயோ, ராஜம்! நில்லு, ஐயோ பிடி!” என்று மகரம் கூவினான். 

குன்றின் விளிம்பை நோக்கி, அந்தச் சறுக்கை நோக்கி ராஜம் ஓடிக் கொண்டிருந்தாள். கண் கொட்டுமுன், கைகளை உயரே தூக்கிக் கொண்டு, வெட்டுண்ட வாழை போல் அவள் சரிந்து விட்டாள். “ஓ” என்ற பயங்கரமான சப்தம் பாதாளத்தைப் பிளந்து கொண்டு வந்தது. அவள் பின்னால் மகரமும் பாயப் போனான். நான் பிடித்து இழுத்தேன். அவன் பிரக்ஞையற்று என் மார்பில் சாய்ந்து விட்டான். 

கீழே கெடு பள்ளத்தில் ஒரு சிறிய உருவத்தை அருவிப் பிரவாகம் பாறைகளில் உருட்டிக் கொண்டு சென்றது. என் தலை சுழன்றது. 

இந்தக் கோரக் காக்ஷிகளைப் பார்க்க நேர்ந்தது என் கண் செய்த பாவமல்லவா! 

– மணிக்கொடி இதழ் தொகுப்பு, 1935

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *