(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘வேறு எதை வேண்டுமானாலும் தருகிறேன்; வாங்கிக்கொண்டு போங்கள்!’ என்று கெஞ்சினாள் கனகம்.
‘வேறொன்றும் வேண்டாம் எனக்கு, அதை மட்டும் கொடு போதும்’ என்று பிடிவாதமாகச் சொன்னான் கோபு.
‘இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறீர்களே! இத்தனை வருஷங்களில் நான் எதை என்னுடையது என்று வைத்துக்கொண்டு உங்களுக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறேன்? இதைக் கொடுக்க முடிந்தால் கொடுக்க மாட்டேனா?’ என்று கனகம் கண்கலங்கிக் கேட்டபொழுது கூட அவன் மனது இளகவில்லை.
‘ஏன் முடியாது?’ என்று தான் மறுபடியும் கேட்டான்.
‘எவ்வளவு தரம் சொல்லுகிறது? அப்பாவுக்கு அந்த வைரமோதிரத்தின் மேல் உயிர் அதை தான் எடுத்து உங்களுக்கு எப்படிக் கொடுப்பது அவர் அறியாமல்?’
‘ஏன் இந்த வெறும் சாக்கெல்லாம்? உனக்கிஷ்டமில்லையென்றால் உன் அப்பாவின் தலையில் ஏன் போடுகிறாய்? அவர் என்ன தலை யிலா கட்டிக்கொண்டு போகப் போகிறார்? எல்லாம் உன்னுடையது. நீ அதை எடுத்ததற்காக உன்னை அவர் வீட்டை விட்டு துரத்திவிடப் போகிறாரோ?’
‘அம்மா நினைவாக அதை வைத்துக்கொண்டிருக்கிறார். அதை எடுத்தால், அப்பாவுக்குக் கோபம் வந்துவிடும் நிச்சயம். அது போதாதா? வீட்டை விட்டுத் துரத்த வேண்டுமா?’
‘இப்பொழுது எனக்குக் கோபம் வருகிறது, என்ன செய்யப் போகிறாய்?’
‘அதற்காகத்தான் உங்களை இவ்வளவு நல்ல வார்த்தை சொல்லு கிறேன்?’
‘அந்த வார்த்தைகளையெல்லாம் உன் அப்பாவுக்குச் சொல், எனக்கு வேண்டாம்’ என்று சீறினான் கோபு.
‘இப்படிப் பிடிவாதம் பிடிக்கலாமா?’
‘நீதான் பிடிக்கிறாய்!’
கனகம் ஆத்மநாத அய்யரின் ஒரே பெண். அவள் சிறு குழந்தையாக இருந்த பொழுதே அவளுடைய தாயார் சுவாசகாசத்தால் இறந்தாள். அவர் மறுவிவாகம் செய்து கொள்ளவில்லை. பெண்ணை நன்றாக படிக்க வைத்து நல்ல தேர்ச்சி கொண்டவளாகச் செய்தார்.
கோபு அவருடைய தமக்கை பிள்ளை. படிப்பைத் தவிர பாக்கி யெல்லாம் அவனுக்குத் தெரியும். கண்ணுக்கு அழகாக, எப்பொழுது பார்த்தாலும் குஷாலாகத்தான் இருப்பான். வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் பற்றியே அவனுக்குக் கவலை இல்லை. எப்படி யாவது பொழுது பவுஷாகக் கழித்தால் சரி. பிறர் அவஸ்தைகளைப் பற்றி அவனுக்கு யோசனை கிடையாது.
தெரிந்தேதான் ஆத்மநாத அய்யர் கனகத்தை அவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தார். தன் வீட்டிலேயே பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்துக் கொண்டு அவனை வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று எண்ணினார். முதலில் ‘ஜமக்காள வியாபாரம் செய்கிறேன்’ என்று மாமனாரிடம் மூவாயிரம் ரூபாய் வாங்கி அதைக் கடைவாடகையும் காபி சப்ளையுமாக செலவழித்துத் தீர்த்தான். பிறகு நீல வியாபாரம் அதில் ஆயிரம் ரூபாய் போயிற்று. பிறகு காகித விற்பனை ஏஜெண்டு, அதில் கொஞ்சம். கடையில் மாமனார் அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சும்மா வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டார்.
கனகம் அவனைச் சீர்திருத்த முயன்றான். ஆனால் அவளுடைய அழகு எதனாலோ அவனைக் கட்டுப்படுத்தவில்லை. முதல் இரண்டு வருஷம் அடிமை போலத்தான் அவள் காலடியில் கிடந்தான். பிறகென்னமோ அவளிடம், ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது அவனுக்கு அவள் உள்ள அழகு கூட அவனைக் கவரவில்லை என்றால் உடலழகு நிரந்தரமாக அவனைக் கவரவில்லை என்பதில் ஆச்சரியமில்லை!
ஆனால் கனகம் தன் அன்பைக் கொட்டி அவனை ஆதரித்தான் மாமனார் அவன் முகத்தைப் பார்ப்பதில்லை. தன் பெண்ணிற்காக அவனை வீட்டில் இருக்கும் படி அனுமதித்தார். என்றாவது புத்தி வந்து நல்ல வழிக்கு வந்துவிட மாட்டானா என்று நம்பிக்கொண்டு கனகம் அவனிடம் இரக்கம் கலந்த அன்புடன் நடந்து கொண்டாள். அவன் கேட்டதையெல்லாம் கொடுத்தாள். அவன் மனம் நோகக் கூடாதென்று அப்படித் தன் நகைகளில் பலவற்றை இழந்தாள்.
‘நான் சொல்லுகிறதைக் கேளுங்கள். கேட்கக் கூடாதா?’
‘எல்லாம் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறேன். ஒன்றும் புதிதாகச் சொல்லக் காணோம்!’
‘புதிதாக என்ன சொல்ல வேண்டும் உங்களுக்கு?’
‘நீ என்னிடம் வைத்திருக்கிறதாகச் சொல்லும் அன்பு உண்மை என்றுதான்!’
‘நான் அதை வாயைத்திறந்து சொல்ல வேண்டிய அவசியம் கூடவா இன்னும் இருக்கிறது?’
‘நான் கேட்கிறதிலிருந்தே தெரியவில்லையோ?’
‘நீங்கள் கேட்பது நியாயமல்ல. நியாயமாக நீங்கனே சொல்லுங்கள்.’
‘கேட்கலாமென்று தானே கேட்கிறேன்?’
‘எது கேட்கலாம். எது கேட்கக் கூடாது என்று தெரியவேண்டாமா?’
‘உன் அன்பில் அந்த மாதிரி விவகாரம் வித்தியாசம் கூட உண்டோ?’ என்று கோபு ஏளனம் செய்தான்.
சட்டென்று கனகத்தின் முகம் சிவந்தது. எழுந்து கோபத்தை அடக்கிக்கொண்டாள்.
‘உங்கள் அன்பில்?’ என்று திருப்பிக் கேட்டாள். அந்த சொல் சுருக்கென்று தைத்தது. அவன் மிருகமானான்.
‘என் அன்பிலா? பிறகு சாவகாசமாக யோசித்துச் சொல்லுகிறேன். இப்பொழுது அவசரம். உடனே அதைக் கொடு’ என்று முறட்டுத் தனமாகக் கேட்டான்.
‘எதற்காகக் கொடுக்க வேண்டும்?’ என்று மனத்தாங்கலுடன் கேட்டாள் கனகம்.
‘எதற்காகவா? நீ என்னமோ சொல்லிக் கொள்கிறாயே பின்-‘
‘அதற்குப் பதிவாக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லையோ?’ என்று அவள் குறுக்கிட்டுக் கேட்டாள்.
‘பதில் எதிர்பார்த்ததுதான் ஆனால்?’
‘அதெல்லாம் இருக்கட்டும் நீங்கள் என் மனதை அறிந்தா-‘
‘உள் மனதை -பெண் மனதை அறிந்தா?”
‘இல்லாவிட்டால் பிரயோஜனம் என்ன?’
‘யாருக்கு? அது கிடக்கட்டும். மோதிரத்தைக் கொடுப்பாயா மாட்டாயா?’
‘அதாள் சொன்னேனே. வேறு எது வேண்டுமானாலும் தருகிறேன்.’
‘வேறொன்றும் வேண்டாம்’
‘அதைத்தர முடியாது!”
‘நீ என் பெண்சாதியாக்கும்?’
‘பெண்சாதி யென்றால் பெற்றவனுக்குத் துரோகம் செய்வதோ? மாட்டவே மாட்டேன்!’
– பாரததேவி 27.08.1939