வைராக்கிய வைரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 2,417 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

நெல் பிரிந்து அரிசியாகவும் உமியாகவும் மாறியதுபோல் தாயும், மகளும் தத்தம் போக்கில் ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். செல்லாத்தாவின் வலது கையில் அகத்திக்கீரைக் கட்டு இருந்தது. மகள் ராஜகுமாரியின் தலையில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக இரண்டு புல்கட்டுக்கள். சற்றத் தொலைவில் அம்மாவால் புல்லுக்கட்டுடன் மல்லுக் கட்ட முடியாமல் போனபோது அதையும் தானே சுமந்து கொண்டு கையில் இருந்த அகத்திக் கீரைக்கட்டை அம்மாவிடம் கொடுத்தாள். தலைச்சுமை பெரிதில்லை என்று சொல்லாமல் காட்டுவதுபோல் அனாயசமான லாகவத்துடன் ராசகுமாரி நடந்து கொண்டிருந்தாள். பெயருக்கேற்ற கம்பீரம், நனைத்து வைத்த மக்காச்சோளம் போன்ற நிறம். வயல்கிணற்றில் குளித்து விட்டு முடித்துவிடப்பட்ட கூந்தலின் பின்புறம் செருகப்பட்ட ஒற்றை ரோஜா. கருப்புக் கூந்தலுக்கும், பச்சைப் புல்லுக்கும் இடையே தோன்றிய பின்னணியில் மழைமேகத்திற்கும் மலைக்கும் இடையிடையே தோன்றிய சூரியத் தோற்றம் காட்டியது.

அல்லாடி வந்த செல்லாத்தாவும், அடிபிசகாது நடந்த ராசகுமாரியும் மந்தைப் பக்கம் வந்து சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மலையில் இருந்து விறகுக் கட்டுக்களைக் கொண்டு வந்திருந்தவர்கள் கவுண் கம்புகளில் அவற்றை வைத்துக் கொண்டு கண்விரிய நின்றார்கள். அருகே ஒருசில காய்கறி வியாபாரிகள். இன்னொரு பக்கம், ‘எள்’ அடிக்கப் பட்டது. மற்றொரு பக்கம் சீட்டு விளையாட்டுக் கும்பல். ஆங்காங்கே சிறுவர் – சிறுமியரின் தெல்லாங்குச்சி விளையாட்டும், கிளித்தட்டு விளையாட்டும் நடந்தபடி இருந்தன.

வாடிக்கையான இடத்தில் புல் கட்டுக்களைப் போட்டு விட்டுத் தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இரண்டு கட்டுக்களும் நான்கு ரூபாய்க்குப் போகும். அன்றைய அடுப்பு எரியும். ராசகுமாரி வழியில் ஒரு பையன் சைக்கிளால் மோதிய கால்பாதத்தைத் தூக்கிப் பிடித்து அழுத்தினாள். செல்லாத்தா மகளருகே சென்று அவள் காலைத் தூக்கி தன் இடுப்பில் வைத்துக் கொண்டே, “அடி பலமாப் பட்டுட்டா..? கண்ணு மண்ணு தெரியாத காவாலிப் பய… சைக்கிளை அவன் ஓட்டுனா இல்ல… அவனை சைக்கிள் ஓட்டுச்சுதா…?” என்றாள்.

ராசகுமாரி பூவிரிந்ததுபோல் சிரித்தாள். மகள் கண் சிவப்பாக இருப்பதைப் பார்த்ததும் தன் முகம் சிவக்க. “கண்ணுல தூசி கீசி விழுந்துட்டா? நான் வேணுமுன்னா ஊதட்டுமா…” என்று சொல்லிக் கொண்டே செல்லாத்தா மகளின் இமைகளை விலக்கப் போனாள்.

உடனே ராசகுமாரி, “போம்மா. நாலுபேரு நிக்கிற இடத்துல ரகள பண்ணப்படாது.” என்று சிணுங்கிய படியே சொல்லிவிட்டுச் சிறிது நகரப் போனாள். இதற்குள் விறகுக்காரர் ஒருவர் சிரித்தபடியே கேட்டார்.

“செல்லாத்தா, அத்த! பேருக்கு ஏத்தபடி பொண்ணப் பெத்தே. எட்டாவது வகுப்புல நல்லாப் படிச்ச பொண்ணயும் நிறுத்திட்டுப் புல்லு வெட்டப் போட்டுட்டே… கண்ணுலகூட முள் குத்தும்… காலுட பட்டுட்டுன்னு கலங்கினா என்ன அர்த்தம்….”

செல்லாத்தா, சொன்னவரைப் பார்த்தாள். அந்த பார்வையில், முன்பு இதேமாதிரி கேள்வி கேட்டவர்களுக்கு, “வயித்துல மூதேவி இருக்கும்போது வாயில எப்படி சரஸ்வதி நிப்பாள்..? அந்த மனுஷன் செத்த பிறவு இந்த மவள் எப்படிப் படிக்க முடியும்?” என்ற பதில் மண்டிக் கிடந்தது.

இதற்குள் மனம் பொறுக்காத இன்னொரு மனிதர், “போக்கா… நம்ம ஊருக்கு ஒருதடவ கலெக்டரம்மா வரும்போது, நான் நம்ம ராசகுமாரியத்தான் நினைச்சேன். இவளும் படிச்சிருந்தால் கலெக்டரா வந்திருப்பாள்” என்றார்.

எல்லோரும் ராசகுமாரியையே பார்த்தார்கள். அவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. காடு, மலைகளில் புல்வெட்ட விறகு வெட்டப் போனாலும், உடம்பில் எந்தவிதச் சுவடும் பதியாமல் தோன்றும் அந்த சேதாரம் இல்லாத சிறுசையே பார்த்தார்கள். இதர பெண்களைப்போல், ‘என்ன சின்னய்யா.. கத்தரிக்காய் வித்ததுல எவ்வளவு கிடச்சது’ என்று கேட்கவும் மாட்டாள். அப்படிக் கேட்ட பெண்கள் தகராறு என்று வந்துவிட்டால் “சொத்தக் கத்தரிக்காயையா கொடுத்தே… ஒன் கையில கரையான் அரிக்க…” என்பதுபோல் திட்டவும் மாட்டாள். பார்வையிலேயே மரியாதை கொட்டுபவள் குறுஞ்சிரிப்பிலேயே பண்பாட்டைக் காட்டுபவள்.

அந்தப் பக்கமாக ‘களை’ வெட்டிவிட்டு வந்த முத்துமாரி, “செல்லாத்தா சித்தி! ஒன் மவளுக்குக் கல்யாணமாம். மெட்ராஸ் மாப்பிள்ளையாம்… சொன்னால் சாப்பாடு போடணுமுன்னு நினைச்சு சொல்லலியா…” என்றாள். செல்லாத்தா ஆதங்கத்தோடு சொன்னாள்.

“கண்காணாத சீமைக்கு இவள அனுப்பப் போறத நெனச்சா எனக்கு காலும் ஒட மாட்டக்கு கையும் ஒடமாட்டக்கு… இவள விட்டுட்டு எப்படித்தான் பிரிஞ்சிருக்கப் போறேனோ…”

தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிரிவுத்துயர் பிழிந்தெடுத்தது. ராசகுமாரி கண்களை மறைக்க வேறு பக்கமாகத் திரும்பியபோது செல்லாத்தா, “புல்லுக்கட்டுல உட்காரண்டி ஏன் நிக்கே? இல்லன்னா வீட்டுக்குப் போயேன். உட்காருடி…?” என்று சொல்லிக்கொண்டே மகளருகே போனபோது, அவள், “ஒனக்கு வேற வேல இல்ல இப்போ? நின்னா கால் ஒடுஞ்சுடுமா…” என்று மெல்ல முணுத்தபோது, செல்லாத்தா, “பாரு இவள…” என்பது மாதிரி முத்துமாரியைப் பார்த்தாள்.

உடனே முத்துமாரி “இவள் வயித்துலயும் ஒரு பூச்சி புழு பிறந்த பிறவுதான், ஒன்னோட துடிப்பு இவளுக்குத் தெரியும். ஒனக்குத் தெரியாதா? ஒருத்தி தாயாவும் போதுதான் அவள் தன்னோட அம்மாவுக்கு மகளாகிறாள். ஏடீ… ராசகுமாரி… உடனே ஒன் அம்மாவுக்குப் பேரனக் குடுடி அவளே வளர்த்துக்கட்டும்.”

ராசகுமாரி எல்லோரையும் கூச்சமாகப் பார்த்துக் கொண்டாள். பிறகு கல்யாண விளைவுகளைக் கற்பனை செய்ய நினைத்தவள்போல் புல்கட்டில் உட்கார்ந்தாள். செல்லாத்தா வயிறாற பெற்ற மகளை வாயாரப் பருகிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று பன்றி உறுமுவதுபோல் சத்தம் கேட்டது. எல்லோரும் நிமிர்ந்து பார்த்தபோது, மிராசுதார் மனைவி பூவம்மா, என்னடி நெனச்சிக்கிட்டிய இரப்பாளிபய பெண்டாட்டிவளா..” என்று கத்திக்கொண்டே ஓடிவந்தபோது அங்கிருப்பவர்களில் யாரையும் அவளால் திட்ட முடியும் என்பதால் எல்லோரும் குழப்பத்துடன் நின்றார்கள்.

பூவம்மா, நேராக செல்லாத்தாவின் கையையும் அதோடு இருந்த அகத்திக்கீரைக் கட்டையும் கைப்பற்றியபடியே, “யாரைக்கேட்டுடி என் வயலுல கீரை பறிச்சே? ஒன் கள்ளப் புருஷன் வயலாடி?” என்றாள்.

செல்லாத்தாக் கிழவிக்கு எதுவும் ஓடவில்லை. இந்த அனுபவத்திற்கு அவள் புதியவள். ஒரு தடவை பூவம்மா தன் வயல்வேலை செய்யக் கூப்பிட்டபோது தான் வரமறுத்ததால்தான், இப்போது அவள் வாயால் கேட்டதை கையால் காட்டுகிறாள் என்பது தெரியாதவள் – அதிர்ச்சியால் வாயடைத்துப் போனவள், பிறகு, “சுப்பையா வயலுல அவன்கிட்டச் சொல்லிக்கிடலாமுன்னு பறிச்சேன். வேணுமுன்னா… மருதமுத்துக்கிட்ட கேட்டுப் பாரு…” என்று முனங்கினாள். பூவம்மாவுக்கு சுருக்கென்றது. அதேசமயம் பற்றிய கையை எடுக்க கெளரவம் விடவில்லை. “எங்க சித்தி மவன் வயலு மட்டும் திறந்தாடி கிடக்கு? கிழட்டு முண்ட… வா… வந்து அவன் கிட்டப்பேசு” என்று சொல்லிக் கொண்டே செல்லாத்தாவைப் பரபரவென்று இழுத்தாள். இழுத்த வேகத்தில் இழுக்கப்பட்டவளின் கால்கள் தரையில் உராய்ந்து கால்கள் தரையில் உராய்ந்து கால்கள் நிலத்திற்கும் நிலம் – கால்களுக்கும் கோடுகள் போட்டன.

ராசகுமாரிக்கு அவமானமாக இருந்தது. அம்மாவை, இந்த மாதிரி எவரும் அவமானப்படுத்தியது இல்லை. ஏதோ ஒரு வேகத்துடன் இழுபறி நடந்த இடத்திற்குத் தாவினாள். அப்போதுகூட அச்சத்தாலோ என்னவோ இழுத்த லட்சுமியைப் பிடிக்காமல் இழுபட்ட அம்மாவின் முதுகைப் பிடித்தாள். செல்லாத்தா முன்னாலும் பின்னாலும் மேனி இழுபட்ட வேதனையில் அலறியபோது ஆவேசமடைந்த ராசகுமாரி அம்மாவை விட்டுவிட்டு பூவம்மாவின் கைகளைப் பிடித்து விலக்கப் போனாள். உடனே அவள், “எச்சிக்கலநாய்களா… தாயும் மகளும் சேர்ந்தாடி சண்டைக்கு வாரீய… என்னைத் தொடுற அளவுக்கு திமுரு வந்துட்டாடி…” என்று யானை பிளிறுவதுபோல் கத்தியபோது சீட்டு விளையாடிக்கொண்டிருந்த அவளின் இருபத்தைந்து வயது மகன் முத்துப்பாண்டி, ஒடோடி வந்தான். வந்த வேகத்தில், ராசகுமாரியைக் காலால் இடறிக் கீழே தள்ளினான். மல்லாந்து விழுந்தவளின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி கன்னத்தில் தன் கை சிவக்கும் வரை அடித்தான். அவள் காலை காலால் முட்டினான். அவனைத் தடுக்க வந்த செல்லாத்தாவை இடதுகை முட்டியால் தட்டிவிட்டான்.

ராசகுமாரியை இன்னும் அடித்திருப்பான். அதற்குள் நிலைகுலைந்து நின்ற சில்லறை வியாபாரிகளும் விறகு வெட்டிகளும் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். ஒரு சில ஏழைபாளைகள் எதிர்ப்புக் காட்டப் போனார்கள். அதற்குள் அவன், “என்கிட்ட எவன் வாராமுன்னு பாக்கலாம்” என்று கர்ஜித்தபோது அந்த அன்றாடம் காய்ச்சிகள் அடங்கிப் போனார்கள். மனதிற்குள் திட்டிக் கொண்டார்கள்.

பத்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடிய கூட்டம் எந்தவிதமான கருத்தையும் சொல்லாமல் கலைந்து கொண்டிருந்தது. ராசகுமாரியும் அந்தக் கூட்டத்தைப்போல் கலைந்துபோனாள். கிழிந்த ஜாக்கெட்டை மறைக்காமல் – நொறுங்கிய வளையல்களைக் கழற்றாமல், நிலையிழந்த கோலத்தோடு – களையிழந்த முகத்தோடு – கண்நிறைந்த நீரோடு புல்லுக்கட்டில் சாய்ந்து கிடந்த மகளை நோக்கி முத்துப்பாண்டியின் கனத்த உதையில் கீழே விழுந்து கிடந்த செல்லாத்தா மெள்ள எழுந்து மகளருகே நொண்டியடித்துச் சென்றாள். பிறகு அவளைக் கட்டிப் பிடித்துக் கதறினாள். எல்லோரும் இருவரையும் பரிதாபமாகப் பார்த்தபோது ராசகுமாரி மலங்க, மலங்க விழித்தாள். செல்லாத்தா மகளை விட்டு விட்டு நிமிர்ந்து நின்று சபதமிட்டாள்.

“கவலப்படாதடி… ஒன்னைக் கைநீட்டி அடிச்சவனைப் பழிக்குப் பழி வாங்குறேனா இல்லியான்னு பாரு. ஒன்னைத் தலைகுனிய வச்சவனைத் தலைநிமிர முடியாமச் செய்யுறேன் பாரு எழுந்திருடி…”

அம்மாவின் போர்க்குரலுக்குக் கட்டுப்படாமல் ராசகுமாரி வெறித்துப் பார்த்தபோது, யாரோ இருவர் அந்த இளங் கன்றைப் பிடித்துத் தாயிடம் விட்டார்கள். இதற்குள் எதுவுமே நடக்காததுபோல் மீண்டும் சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட முத்துப்பாண்டி செல்லாத்தாவின் குரல் உயர்ந்ததால் அங்கிருந்து திமிறினான். சீட்டுச் சகாகள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். ‘துருப்பு’ தெரிஞ்ச பிறவு அவன் போவலாமா…?

தாயும், மகளும் வாய் செத்த ஊர்த் தெருவழியாகத் தலை குனிந்த படி நடந்து குடிசைக்கு வந்தார்கள். ராசகுமாரி வீட்டுக்குள் போனவுடனேயே வேகமாக ஒடி நார்க்கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டாள். “எய்யா… என்னப் பெத்த அய்யா ஒரு தடவ வந்து எங்களப் பாத்துட்டுப் போங்க… ஒரே ஒரு தடவ” என்று கூறியபடியே கூப்பாடு போட்டாள்.

செல்லாத்தாவுக்கு ஏதோ ஒரு வைராக்கியம், புடவையை இறுக்கிக்கட்டியபடியே வெளியே புறப்பட்டாள். அப்போது பக்கத்துக் குடிசைக்காரர் வந்தார்.

“எங்க அக்கா போறே…”

“போலீஸ் ஸ்டேஷனுக்கு. என் மகள கை தொட்டு அடிச்ச பய கையில விலங்கு மாட்டுறத நான் பாக்கணும். அவனப் போலீஸ்காரங்க நாய் மாதிரி நடுரோட்ல இழுத்துட்டுப் போறத என் மவள் கண்ணால பாக்கணும். நீயும் துணைக்கி வாரீயா…”

“சொல்றேன்னு தப்பா நினைக்காத… இங்க நடக்கிற அநியாயத்துக்காவ அங்க போறே, அங்க நடக்கிற அநியாயத்துக்கு எங்க போவே..? உன் மகள அடிச்சதுக்கு யார் சாட்சி சொல்லுவாவ? கோர்ட்டுக்குப் போவியா? புல்லு வெட்டப் போவிய? உன் மகளக் கூண்டுல நிறுத்தி வக்கீல் பச்ச பச்சயா கேப்பான். அந்தச் சின்னஞ் சிறிசால தாங்க முடியுமா…?”

செல்லாத்தா, மருவினாள். மருவி மருவி கருவிக்கொண்டே கேட்டாள்.

“அப்படீன்னா அடிச்சவன் கையில விலங்கு போட முடியாதா?”

“உன் கைக்கு விலங்கு போடாம இருந்தால் சரி…! முத்துப் பாண்டி அடிச்சதுனால கை வலிக்குன்னு உன்கிட்ட நஷ்ட ஈடு கேக்காம இருந்தா சரி! பேசாம நாலு பெரிய மனுஷங்கன்னு இருக்கவங்ககிட்ட நியாயம் கேளு…” செல்லாத்தா நிதர்சனத்தின் புலப்படாத – அதேசமயம் புரியக் கூடிய கரம் ஒன்று தலையில் அழுத்தியதுபோல் தரையில் உட்கார்ந்தாள். உள்ளே ராசகுமாரி, “ஏம்மா.. எனக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருந்தால் இப்படி ஆவுமா… ஆவுமா..?” என்று குமுறிக் குமறி அழுதாள்.

செல்லாத்தா எழுந்தாள். ஊருக்குள் ஓடினாள். மகளும், தானும் அடிபட்ட அதே இடத்தில் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்த பெரிய மனிதர்களைப் பார்த்து பொதுப்படையாகப் பேசினாள்.

“அய்யாமாரே… நான் கூட என் பொண்ண அணைக்கதுக்காவ தொட்டிருக்கேனே தவிர அடிக்கத் தொட்டதுல்ல. அப்படிப்பட்ட என் அருமை மவள முத்துப்பாண்டி கைநீட்டி அடிச்சிட்டான்யா… இந்த அநியாயத்தக் கேட்டுத்தாங்கய்யா…”

ஒருவரும் கேட்டுத் தரவில்லையானாலும் ஒருவர் கேட்டார்.

‘பேசாம போம்மா… அதோ முத்துப்பாண்டி வாரான். அனாவசியமாய் பழையபடியும் சண்டை வரும். நாங்க கூப்பிட்டுக் கண்டிக்கோம். நீ போ…”

“என்னய்யா இது? அடிச்சவனை அடிக்காம அடிபட்டவளைப் போகச் சொல்றீய… உங்க பொண்ண இப்படி யாராவது அடிச்சா…”

“இதோ பாரு. அனாவசியமாய் வீட்ல இருக்கிற பொண்ணுங்கள இழுக்காத…”

“தெருவுல நின்ன பொண்ண அடிச்சிட்டானே… அடிச்சிட்டானே…”

“இப்போ அவனைக் கொலை பண்ணச் சொல்றியா. நடந்தது நடந்துட்டு. அவனச் சத்தந்தான் போட முடியும். நீயும், அகத்திக்கீரைய, கேட்டுட்டுப் பறிச்சிருக்கணும். வயல் வயக்காட்ல ஒரே திருட்டாப் போச்சு… அருணாசலம் மச்சான்! நாம ஏதாவது பண்ணணும். நேத்துக்கூடி… என் தென்ன மரத்துல… சரி… நீ போம்மா…”

செல்லாத்தா போவதற்கு முன்பே முத்துப்பாண்டி வேட்டியை முட்டிக்குமேல் தூக்கிப் பிடித்துக்கொண்டு கம்பீரமாக வந்து நின்றான். செல்லாத்தா கூனிக்குறுகி வீட்டுக்கு வந்தாள். இரவில் தாயும், மகளும் சாப்பிடவில்லை. அடுப்போடு சேர்ந்து விளக்கும் எரியவில்லை. இருவரும் புரண்டு படுத்தார்கள். ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக் கொண்டார்கள். ஏங்கி ஏங்கி அழுதுகொண்டார்கள். அடிபட்ட இடங்களை அழுத்திக் கொண்டார்கள்.

இருவருக்கும் விடிவு இல்லாமலே பொழுது விடிந்தது.

ராசகுமாரி இன்னும் சுயத்திற்கு வரவில்லை. பழக்க தோசத்தில் எழுந்தவள் பழக்கமில்லாத நிகழ்ச்சியை நினைத்தாள். நினைவு அவளை நெருப்பாக்கிக் கட்டிலில் போட்டது. என்ன செய்வது என்று புரியாமல் செல்லாத்தா மகளையும், ஆகாயத்தையும் மாறி மாறிப் பார்த்தபோது முத்துமாறி வந்தாள்.

“பேசாமக் காளியாத்த கிட்ட முறையிடு, இன்னைக்கு வெள்ளிக்கிழம. நல்ல நாளு காளியாத்தா பழி வாங்கிக் காட்டுவாள்.”

செல்லாத்தா, முத்துமாரியைப் பார்க்காமலும் – பதிலளிக்காமலும் காளி கோவிலுக்குப் போனாள். சிங்க வாகனத்தில் திரிசூலத்துடன் காட்சியளித்த காளியின் களிமண் சிலையின் முன்னால் நின்று கூப்பாடு போடுவதுபோல் கூக்குரலிட்டாள்.

“காளியாத்தா… என்னோட மகள இல்லல்ல… ஒன்னோட மகள முத்துப்பாண்டி அடிச்சு அவமானப்படுத்திட்டான். அவன் கையில கரையான் அரிக்கணும். என் மகளோட குனிஞ்ச தலை நிமுறணும். ஒரு அறிகுறி காட்டு தாயே… அடுத்த வெள்ளிக் கிழமைக்குள்ள அவன் நாசமாப் போவனும்”

சொல்லி வைத்தாற்போல் கவுளி அடித்தது. ஏழெட்டுத் தடவை, காளியம்மன் சிலையின் பின்புறம் ‘டக்டக்’கென்ற சத்தம். செல்லாத்தா குலுங்கக் குலுங்க அழுதாள். “நீ இருக்கே தாயே இருக்கே” என்று சொல்லியபடியே உடைந்த சட்டி ஒன்றில் இருந்த குங்குமத்தை எடுத்துத் தன் நெற்றியில் பூச மறந்தவளாய் நேராக வீட்டுக்கு வந்தாள். கட்டிலில் அலைமோதிக் கொண்டிருந்த ராசகுமாரி நெற்றியில் குங்குமத் திலகமிட்டபடியே, “காளியாத்தா வரம் கொடுத்துட்டாடி… அடுத்த வெள்ளிக்கிழமைக்குள்ள என்ன நடக்குதுன்னு பாரு” என்றாள் கம்பீரமாக. ராசகுமாரியும், ஆறுதலடைந்தவள் போல் எழுந்து உட்கார்ந்தாள். செல்லாத்தா நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் வினாடி வினாடியாக எண்ணினாள். பலதடவை காளியம்மன் கோவிலுக்குப்போய் ‘நீ பதிலளிச்சது பலிக்குமா தாயே?’ என்று கேட்டுக் கொண்டாள். ஒரு வராத்தில் எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. சைக்கிளில் டவுனுக்குப் போகும் முத்துப்பாண்டி பைக்கில் போனான். செல்லாத்தாவே கண்ணழுகக் கண்டாள்.

சனிக்கிழமை செல்லாத்தாவும் மகளோடு சேர்ந்து முடங்கிப் போனாள். திடீரென்று குடுகுடுப்பைச் சத்தம்.

“நல்லகாலம் பொறக்குது… இந்த வீட்ட அவமானப் படுத்துணவன் ஒடுறான்… ஒடுறான்… தலைதெறிக்க ஒடுறான் செக்கம்மாவால… நாலு நாள்ல நாசமாப் போவுறான்.” செல்லாத்தா எழுந்தாள். “நாலு நாள்னா… அடுத்த செவ்வாய். அதுக்குள்ள ஏதாவது நடக்கும். காளியாத்தா… சீ… அவள இனிமேல் கும்பிடப்படாது. செக்கம்மா… நீ சொல்றத நம்புறேன்.”

செக்கம்மா சொன்ன பிறகும் அவளை நம்பாததுபோல் – வயல் வெளிக்குப் போகாமல் முடங்கிக் கிடந்து தெய்வ நிந்தனைக்கு ஆளாக விரும்பாதவள்போல் களை கொத்தியையும், ஓலைப் பெட்டியையும் தூக்கிக் கொண்டு செல்லாத்தா புல்வெட்டப் புறப்பட்டாள்.

சனிக்கிழமையில் தோன்றிய நம்பிக்கை, ஞாயிறில் கம்பீரமாகி, திங்களில் சந்தேகமாகி, செவ்வாயில் படபடப்பாகியது. அவளால் அன்று புல்வெட்டப் போக முடியவில்லை. செல்வாய் இரவில் ஊரில் பரபரப்பு. செல்லாத்தா விரைந்து போனாள். முத்துப்பாண்டிக்கு நிச்சயத் தாம்பூலமாம்.

ராசகுமாரி எலும்பும் தோலுமாகிவிட்டாள். உடலுக்காக உண்டவள். உயிருக்காக கஞ்சி குடித்தாள். குடித்தது குடலில் தங்கவில்லை. வாந்தியானது. கண்களில் வெளுப்பு ஏற்பட்டது. ஒருநாள் யதேச்சையாக வெளியே சற்று உலவிய ராசகுமாரி திடீரென்று, “எம்மா… எய்யா… இந்த ஊர்ல தெய்வம் இல்லியா… மனுஷங்க மாதிரி அதுவும் செத்துட்டா…?” என்று புலம்பிக் கொண்டே முற்றத்திற்கு வந்து தன் தலையை வைத்துச் சுவரில் இடித்தாள். மகளின் அழுகைக்கான காரணத்தை அறிய வெளியே ஒடிய செல்லாத்தா முத்துப்பாண்டி தன்னுடன் போகும் தோழர்களுடன் தன் வீட்டைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே சிரித்தபடி பேசிக்கொண்டு போவதைக் கண்டாள். உடனே அவளும் ஓடிவந்து அழுதாள். சுவரில் மோதிய மகளைப் பிடிக்கப் போனாள். முடியவில்லை. தானும் தன் பங்கு சுவரில் மோதியபோது ராசகுமாரி நிதானப்பட்டாள்.

செல்லாத்தா, நம்பிக்கை இழந்தவளாக புல்வெட்டப் புறப்பட்டாள். எதிரே சுடலைமாடச்சாமியாடி வந்தார். அவளால் தாளமுடியவில்லை. ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் சாமியாடி, “எனக்கு எல்லாம் தெரியும். இன்னும் பத்து நாள்ல பாரு, ஒன் மகள அடிச்சவன் அக்குவேறு… ஆணிவேறா ஆகப்போறான் பாரு… சொள்ளமாடன் சொல்லிட்டான்” என்றார்.

செல்லாத்தாவுக்குப் பாதி நம்பிக்கை வந்தது. கம்மாக்கரையில் நடந்தபோது, “சொள்ளமாடா… சாமியாடி… சொன்னது சரிதான்னா இப்பவே அசரீரியா ஏதாவது கேக்கணும்” என்றாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு முன்னால் போன இரண்டுபேர், “உப்பத் தின்னவன் தண்ணியக் குடிச்சுத்தான் ஆகணும். வேணுமுன்னால் பாரு” என்று பேசிக்கொண்டு போனார்கள். செல்லாத்தா தைரியப்பட்டாள்.

பத்து நாட்களில் ஐந்து கழிந்தன. செல்லாத்தாவுக்கு நம்பிக்கை சந்தேகமாகியது. வீட்டுக்குத் திரும்பும் வழியில் எதிரே ஒரு நாய் வந்தது. “இந்த நாய் திரும்பி நடந்தால் நான் நினைச்சது நடக்கும்” என்று நினைத்துக் கொண்டாள். நாய் திரும்பி நடந்தது. அவள் திருப்தியோடு நடந்தாள். எட்டாவது நாள், ஒரு சின்னப்பையன் எதிரே வந்தான். அவளால் தாள முடியவில்லை. “ராசா… பாட்டி நினைச்சது நடக்குமா? தெய்வ வாக்காய் சொல்லுடா ராசா…” என்றாள். பையன் பயந்துபோயோ என்னவோ, “நதக்கும்… நதக்கும்…” என்றான்.

செல்லாத்தாவுக்குப் பூரிப்பு. நாட்கள் நகர்ந்தன. “காளியாத்தா… செக்கம்மா… சொள்ளமாடா… என் மகளோட குனிஞ்சதல நிமுறணும்… நிமுறணும்” என்று சொல்லிக் கொண்டாள். நாட்கள் கூடியதுபோல் அவள் விண்ணப்பித்துக் கொண்ட தெய்வங்களின் பட்டியல்தான் கூடியது. பத்து நாட்களும் கழிந்து பதினோராவது நாள் வந்தது. முத்துப்பாண்டி வீட்டில், பங்காளிகளின் ‘ஆக்கிப் போடும்’ கூட்டம்.

செல்லாத்தா ஆவேசத்துடன் வீட்டுக்கு வந்தாள். ராசகுமாரி மூலையில் சாய்ந்தபடியே ஒரு கடிதத்தைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டே யாருக்கோ சொல்வதுபோல், தாயிடம் சொன்னாள்.

“என்னைக் கட்டிக்கப்போறவருக்குக் கடுதாசி போட்டேன். நடந்ததை எழுதினேன். என் அவமானத்தத் துடச்சிட்டுத்தான் தாலி கட்டணுமுன்னு எழுதினேன். அதுக்கு அவரு, ‘இவ்வளவு நடந்த பிறகு கல்யாணம் பண்ண முடியாது’ன்னு எழுதியிருக்கார்.

செல்லாத்தா மகளின் கையில் இருக்கும் கடிதம்போல் கசங்கிப் போனாள். பத்து நாட்களுக்கு முன்பு ராசகுமாரி பக்கத்து வீட்டுப் பையன் மூலம் கவர் வாங்கிக் கடிதம் எழுதியதைப் பார்த்தாள். இளமையில் தன்னோடு படித்து இப்போது பல இடங்களில் நல்ல வேளையில் இருக்கும் சிநேகிதிகளுக்கு மகள் கடிதம் எழுதுவதுண்டு. அந்தக் கடிதத்தையும் அப்படித்தான் எடுத்துக்கொண்டாள். ஆனால்..?

ராசகுமாரிக்குக் கல்யாணம் நடந்து சென்னைக்குப் போய்விட்டால் அவளுக்குப் பட்ட அவமானம் மறந்து போகலாம் என்றம், தானும் ஒருவேளை அங்கே போய் ஒதுங்கிக் கொள்ளலாம் என்றும் நினைக்கத் துவங்கிய செல்லாத்தா, உடல்போய் உயிர் மட்டும் பிடிதாரம் இல்லாமல் நிற்பதுபோல் நின்றாள். மகளைப் பார்த்தாள். அவளோ முடங்கிக் கொண்டாள்.

செல்லாத்தாவின் தலைக்குள் ஏதோ ஒன்று குடைந்தது. யாராவது ஒருவர் அவளிடம் ‘கவலைப்படாதே’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. வெளியே ஓடினாள். வெறி பிடித்தவள்போல் ஓடினாள்.

கண் பார்க்காப் பாதையில் மண்புழுபோல் நகர்ந்தாள். மரணக் கிணறைத் தாண்டும் யந்திர வண்டிபோல் தாவினாள். எதிரே சுடலைமாடச் சாமியாடி வந்தார். ஆறுதலை விரும்பினாள். அடைக்கலம் நாடினாள். நல்லது நடக்கும் என்ற நப்பாசை.

“என்னய்யா… ஒருவாரத்துல நீரு நன்மையாய் ஆரம்பிக்குமுன்னு சொன்னது தீமையாய் முடிஞ்சிருக்கு… சொள்ளமாடன் இப்போ என்ன சொல்லதார்?”

சாமியாடிக்கு அப்போ ஏதோ கஷ்டகாலம். கத்தினார். ‘சொள்ளமாடன்னு கிடையாது. அப்படி இருந்தால் அவனை நான் கொல பண்ணிப்பிடுவேன். நீ வேற! இனிமேல் மாடனப் பத்திக் கேட்காத… அது வெறும் கல்லு…!”

சாமியாடி, தன் பாட்டுக்குப்போன போது செல்லாத்தா ஏதோ ஒரு குறுக்குத் தெருவில் இலக்கு இல்லாமல் நடந்தாள். அந்த வழியாக வந்த முத்துப்பாண்டியின் தாய்மாமன் அவளை எச்சரித்தார்.

செல்லாத்தா, தன்பாட்டுக்கு நடந்தாள். உயிரே எந்திரமாகி, உடலே ஒரு ஜடமானதுபோல் யாரோ தன்னை இழுத்துக்கொண்டு போவது போல நடந்து நடந்து ஊர்க் கச்சேரியின் முகப்பிற்கு வந்தாள். அங்கே திரண்டு நின்ற கூட்டமோ, கசாமுசா சத்தங்களோ, அவள் காதில் பதிவாகவில்லை.

கோயில் விழாக்களிலும், கல்யாணம் கருமாந்திரங்களிலும் அவசர அவசரமாக வந்துவிட்டு பிழைப்புக்கு ஒடும் அன்றாடம் காய்ச்சிகள், நாட்டாண்மைக்காரரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அன்று கத்தி கம்புகளோடு திரண்டு நின்றார்கள். எல்லோருக்கும் ஏனோதானோவாய் தெரிந்த ஒரு சேதியை, தலை நரைத்தாலும் உடல் நரைக்காத நாட்டாண்மை எடுத்துரைத்தார்.

“இவ்வளவு நாளா… நான் உங்களுக்கு தீர்ப்பளிச்சேன். இப்போ நீங்க எனக்குத் தீர்ப்பளிக்கணும். வெட்டாம்பட்டிக்கு என் மகன் போயிருக்கும்போது, நம்ம ஊரை கேவலமா பேசியிருக்காங்க. அத தட்டிக்கேட்ட என் மகன் ராசதுரைய. அந்த ஊரு பயலுவ அடி அடின்னு அடிச்சிருக்காங்க. இந்த பதினெட்டு பட்டிகளும் பாத்து பயப்படுற பட்டி நம்மபட்டி இத என் விவகாரமா நினைக்காம, நம்ம ஊர் மானமா நெனச்சு, அந்த ஊருக்குபோயி அடிச்ச பயலுகள பிடிச்சிக்கிட்டு வரணும். உங்களோட இன்னய பொழப்புக்கு நான் பொறுப்பு. ஏதாவது ஏடாகுடமா நடந்தாலும் சகலத்தையும் நான் பார்த்துக்கிடுவேன். பொறப்படுங்க.”

சில வேல் கம்புகள் ஆவேசமாய் உயர்ந்தன. அரிவாள்கள் முதுகிலிருந்து முன்பக்கம் வந்தன. வேல் கம்பில்லாத ஏழை பாழைகளின் கைகளில் சாட்டைக்கம்புகள் ஓங்கி நின்றன. ஆங்காங்கே பெண்களின் ஒப்பாரிகள். இந்தப் பின்னணியில், அம்மாவை தேடிவந்த செல்லாத்தாவின் மகள் ராசகுமாரி, கூட்டத்தின் முகப்பிற்கு வந்தாள். பேய் அறைந்தவளாய் நின்ற தாயை இழுத்துக்கொண்டு போய் நாட்டாண்மைக்கு முன்னே நிறுத்தினாள். அப்போதுதான், சுய உணர்வு பெற்றதுபோல் செல்லாத்தா “இவ்வளவு பெரிய சபையில் என் மவளுக்கு நடந்த அநியாயத்த கேப்பாரில்லையா. கேப்பாரில்லையா…” என்று தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

ஆளிருக்கு என்பதுபோல் இரண்டு மூன்று பெண்களும், ஒரு ஆணும். அவள் கைகளை தலையிலிருந்து விடுவித்தார்கள். அவளோடு கூலி வேலைக்கு ஒன்றாக போகிறவர்கள். ஒருத்தி ஆவேசமாக கத்தினாள்.

“ஒரு வயசுப் பொண்ண கை நீட்டி அடிக்கிறது கற்பழிக்கிறது மாதிரி. ராசகுமாரிக்கு நடந்தது நாளைக்கு என் மகளுக்கு நடக்கலாம். மறுநாளைக்கு இதோ இந்த பறட்டைச்சிக்கு நடக்கலாம். முதல்ல முத்துப்பாண்டிய தட்டிக் கேப்போம். என்ன சொல்றீய? நீங்கள்லாம் வேட்டி சேலை கட்டின செனங்கன்னா நம்ம ஊரு அநியாயத்துக்கு மொதல்ல நியாயம் கேட்போம். அப்புறம் வேணுமுன்னா வெட்டாம்பட்டிக்கு போகலாம்.”

‘அதானே… அதானே’

ஆவேசப்பட்ட கூட்டத்தை நாட்டாண்மை கையமர்த்தப் போனார். அதற்குள் கூட்டத்தில் பெரும்பாலோர் கும்பலாகி சாட்டைக் கம்புகளோடும். அரிவாள்களோடும், முத்துப்பாண்டி வீட்டைப் பார்த்து ஓடினார்கள்.

– கமலம், 7-2-1982

– சிக்கிமுக்கிக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *