வைத்தியநாதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2024
பார்வையிட்டோர்: 188 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டாக்டர் சுந்தரமும் அவன் மனைவி ஜானகியும் ஊரைவிட்டுக் கிளம்பும்போது, அவனது மாமியார், மாமனார், மற்ற பந்துக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் விசனம் குடிகொண்டிருந்தது. கண்களிலிருந்து பெருகிய கண்ணீரைப் புடைவைத் தலைப்பிலும், கைக் குட்டையிலுமாகத் தோய்த்து எடுத்தார்கள். 

டாக்டர் சுந்தரம் பட்டாளத்தில் சேர்ந்து எதோ வெகு தூரம் போகப்போவதாக நண்பர்கள் நினைத்து விடக்கூடாது. ஆனால் அவர்களுக்கு அப்பொழுது ஏற்பட்ட துக்கத்துக்குக் கார ணம் என்னவென்றால், சுந்தரம் தன் ‘பிராக்டீஸை ஆரம்பிக்க அவன் சொந்த கிராமமான கீழையூருக்குப் போகப் போகிறான் என்பதுதான். ஆரம்பத்தில் சுந்தரம் தன் அபிப்ராயத்தைச் சொன்னபோது, அவன் மாமனார் விழுந்து, விழுந்து சிரித்தார். 

”ஆமாம்; உனக்குக் கோழி வைத்தியம் தெரியுமா, கோழி வைத்தியம்?” என்று கிண்டலாகக் கேட்டார். 

“ஏன், அது என்ன வைத்தியம்?” என்றான் சுந்தரம். 

கீழையூரில் நாலைந்து மனிதர்கள்தானே இருக்கிறார்கள்? கோழிகள்தான் நிறைய இருக்கின்றன. போனால் கோழிகளுத்தான் வைத்தியம் செய்யவேண்டும் ‘ என்றார். 

டாக்டர் சுந்தரம் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை நிஜமாகவே கிராமத்துக்குப் போகப் போகிறான் என்று தெரிந்ததும் அவன் மாமனாருக்குப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. 

“கிராமத்துக்குப் போய் வைத்தியம் செய்கிறேன் என் கிறானே! சுய புத்தியோடு பேசுகின்றானா? பட்டாளத்தில் வைத்தியனாகப் போனாலும் 700, 800 என்று சம்பளம் வரும், கீழையூரில் என்ன வரும்படி வரும்? அந்த ஊரின் ஜனத்தொகை என்ன?” என்று அவன் காதில் விழும்படியாக மனைவியைக் கேட்டார் அவர். 

“சுய புத்தியோடுதான் பேசுகிறேன், மாமா! நான் வரும் படிக்காகக் கீழையூருக்குப் போகவில்லை. ஏழை ஜனங்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான் போகிறேன். இருபது வருஷங் களுக்கு முன் கீழையூர் ஜனத்தொகை 1500 ஆக இருந்தது இப்பொழுது 500 ஆகிவிட்டது. எதனால்?” என்று உற்சாகத் துடன் கேட்டான் சுந்தரம். 

“என்னை எதற்காக அப்படிப் பார்க்கிறாய்? நான் தான் ஜனங் களை அழித்துவிட்டேன் என்று நினைக்கிறாயா?” என்றார் மாமனார். 

“இல்லை, மாமா! அந்த ஊரில்சரியான சமயத்தில் வைத்திய உதவி செய்ய யாரும் இல்லாததால் அங்கு பரவிய கொள்ளை நோய்க்குப் பல மக்கள் பலியானார்கள். இவ்வாறு இனி நேராமல் தடுப்பதற்காகத்தான் நான் அங்கு போகின்றேன். வருகிற வரும் படியை வைத்துக்கொண்டு நானும் ஓர் ஏழையாகவே இருக்க உத்தேசம்,” என்று முடிவாகச் சொல்லி விட்டான், டாக்டர் சுந்தரம். 

ஜானகி என்ன செய்வாள், பாவம்? தகப்பனார் பேச்சே ஏற வில்லை என்றால், அவள் பேச்சு எப்படி ஏறும்? ரொம்பவும் பயந்த சுபாவம் உள்ள ஜானகி ஒரு குடம் கண்ணீர் வடித்து விட்டுக் கணவனுடன் புறப்பட்டாள். 


“ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு குழந்தை இருந்ததாம். அதற்கு பாலூ, பாலூ என்று பெயராம்…” என்று அருகிலிருந்த குழந்தைக்குக் கதை சொல்லியபடியே, அதன் காலில் உள்ள சிரங்குக்கு மருந்துபோட்டுக் கட்டிக்கொண்டிருந்தான் டாக்டர் சுந்தரம். 

டாக்டர் சுந்தரம் கீழையூரில் குடியேறி ஒரு வாரம் கூட ஆக வில்லை. ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். வாசல் திண்ணைதான் அவன் ஆஸ்பத்திரி, புதிதாக அந்த ஊருக்கு வைத்தியர் வந்திருக்கிறாரென்று தெரிந்தால் கூட்டம் வருவதற்குக் கேட்கவா வேண்டும்? 

ஆனால் ஜானகிக்கு இது ஒரு பெரும் ஏமாற்றமாக இருந்தது. கணவன் நகரத்தில் வைத்தியம் செய்து அதிகப் புகழையும் பொருளையும் சம்பாதிப்பான், தானும் நல்ல ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்த ஜானகிக்குத் தன் கணவனின் கிராம சேவைப் பித்து கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன் மனத்தில் உள்ள ஆசைகளைத் தன் கணவன் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றி வைக்கவில்லையே என்று ஏங்கினாள் ஜானகி. 


கீழையூர் நல்ல கத்திரிக்காய்களுக்குப் பெயர் போனது? டாக்டர் சுந்தரத்தின் நோயாளிகள் அவனுக்குக் கூடை கூடை யாகக் கத்திரிக்காய்களைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். இதனால் அவனுக்குக் “கத்திரிக்காய் டாக்டர்” என்ற பெயர் ஏற்பட்டது ! 

ஒரு நாள் ஜானகி அருகில் மலைமேலுள்ள முருகர் கோவிலுக் குச் சென்றாள். அங்கே சில பெண்கள் அவளைக் கண்டதும், ‘”அதோ பார்! கத்திரிக்காய் டாக்டரின் மனைவி வருகிறாள்!” என்று கூறியது ஜானகியின் காதில் விழுந்தது. அவளுக்கு நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் கோபத்துடன் அவள் வீடு திரும்பினாள். 

அப்பொழுதே போலிருந்தது. 

நாளாக, ஆக, டாக்டர் சுந்தரம் வீட்டில் தங்குவதே இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் ஒரு நிமிஷம் கூட அவரை வீட்டில் விட்டு வைப்பதில்லை. 

இந்நேரத்தில் ஜானகி வியாதிக்கு உள்ளாகிப் படுத்தபடுக்கை யானாள். ஆகாரம் செல்லாமல் அவள் உடல் இளைத்துக் கொண்டே வந்தது. மனைவிக்கு மனோவியாதிதான் என்று சுந்தரத்துக்குத் தெரியும். அந்த ஊரைவிட்டுப் போனால்தான் அவள் வியாதி குணமாகும் என்பதை அவன் அறிவான். அவன் ஊரைவிட்டுப் போனால் பலர் உடம்பு குணமாகாமல் போகும். மனைவிக்குத் தன் கடமையைச் செய்ய ஊரைவிட்டே போவதா? நோயால் வாடும் கள்ளமில்லா உள்ளம்கொண்ட ஏழை கிராம மக்களுக்காக அவ்வூரிலேயே தங்கித் தன் கடமையைச் செய்வதா? 

ஒரு நாள் ஜானகி, “நான் இங்கே இனிமேல் இருக்கமாட் டேன். நாம் பட்டணத்துக்கே போய்விடுவோம், வாருங்கள்,’ என்று சுந்தரத்திடம் கூறினாள். 

*அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு சுந்தரம் மூட்டை கட்டினான். டாக்டர் சுந்தரம் ஊரைவிட்டுப் போகும் செய்தி எங்கும் பரவிவிட்டது. நோயாளிகள் சுந்தரத்தைப் பார்க்க விரைந்து வந்தார்கள். டாக்டர் புறப்படும் நேரமும் வந்தது. 

“நீங்கள் எங்களை விட்டுப் போகிறீர்களா?’ என்று கூறி கிராம மக்கள் கண்ணீர் வடித்தார்கள். டாக்டர் சுந்தரம் அவர் களிடம் விடைபெற்றுக்கொண்டபோது அவன் கண் கலங்கியது, உள்ளம் துடித்தது. இதையெல்லாம் பார்த்த ஜானகியின் உள்ளமும் உருகியது. அவள் திடீரென்று மூர்ச்சை போட்டுக் கீழே சாய்ந்தாள். 

ஜானகி கண்ணை விழித்துக் கொண்டபோது, பெரிய படுக்கை யில், விசாலமான ஓர் அறையில் படுத்துக்கொண்டிருந்தாள். 

“நான் எங்கே இருக்கிறேன்?” என்றாள் அவள். 

“பட்டணத்தில்தான்,” என்றான் சுந்தரம். 

“அந்த நாசமாய்ப்போகிற கிராமத்தைவிட்டு நாம் வந்து விட்டோமல்லவா?” என்றாள் ஜானகி. 

“ஆமாம், அதன் முகத்தில் இனி நாம் விழிக்கவேண்டாம்,” என்றான் சுந்தரம். 

பல வாரங்கள் கழிந்தன. ஜானகியின் உடம்பு குணமாகி வந்தது. மெதுவாக எழுந்து நடமாட ஆரம்பித்தாள். 

ஒரு நாள் சுந்தரம் வீட்டிலில்லை. வேலைக்காரியிடம்,”நான் கொஞ்ச தூரம் நடந்து போய்விட்டு வருகிறேனே!” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் ஜானகி. “வேண்டாம் அம்மா! உங்களால் முடியாது. வெளியில் வரக்கூடாது என்று ஐயா சொல்லியிருக்கிறார்!” என்று வேலைக்காரி சொன்னதை அவள் பொருட்படுத்தவில்லை. 

இரண்டடி எடுத்துவைத்த ஜானகி, சற்று தூரத்தில் மலையையும், முருகர் கோவிலையும் பார்த்துவிட்டுத் திடுக்கிட்டு நின்றாள். இது எந்த ஊர்? நான் எங்கே இருக்கிறேன்? 

சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே சிறிது தூரம் நடந்ததும், அவளுக்குப்பழகின இடமாக இருந்தது. எதிரே ஒரு வீட்டில் ஏகக்கூட்டம்! ஆம்; அவள் இருப்பது கீழையூர்தான்! அவள் பட்டிணத்தில் இருப்பதாகச் சொன்னது சுத்தப்பொய்! 

கூட்டமாக இருந்த வீட்டை நோக்கி அவள் சென்றாள். அங்கே ஒரு சிறுவனின் பக்கத்தில் டாக்டர் சுந்தரம் உட்கார்ந்து அவனைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். 

ஜானகி அமைதியாக அவன் அருகில் சென்று நின்றாள். அவளைக் கண்ட சுந்தரம் திடுக்கிட்டு, “ஜானகி, நீ இங்கே ஏன் வந்தாய்?” என்றான். 

பிறகு, சுந்தரம் அவளை வெளியே அழைத்துக் கொண்டு வந்தான். 

நான் இந்த வீட்டிலேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றாள் ஜானகி. 


சிறிது நேரம் கழித்து, “நான் உன்னை ஊருக்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லி ஏன் ஏமாற்றினேன் என்று தானே கேட்கிறாய்? அந்தச் சமயத்தில் ரயில் பிரயாணம் செய்தி ருந்தால் நீ இறந்து போயிருப்பாய். அதைத் தடுக்கத்தான் அந்த வீட்டில் உன்னைக் கொண்டு போய்ச் சேர்த்தேன். சென்னையிலிருப்பதாக உனக்கு மனப்பிரமையை உண்டாக்கியதால் தான் நீ பிழைத்தாய். உனக்கு என் மேல் கோபமா?” என்று கேட்டான் சுந்தரம். 

“எனக்கு உடம்புக்கு வந்ததுமே என் மனம் மாறிவிட்டது. அந்த வீட்டில் என்னைக் கொண்டு போய் நீங்கள் எனக்கு வைத்தியம் செய்தீர்களல்லவா? அப்பொழுதே நீங்கள் என்மீது கொண்ட அன்பை உணர்ந்து கொண்டேன். என் அசட்டுத் தனத்தை நினைக்க எனக்கே வெட்கமாக இருந்தது. ஒரு நோயாளி யின் துன்பத்தையும் உங்களைப் போன்ற வைத்தியரின் அருமையை யும் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அடடா! இப்படிப் பல நோயாளிகளைத் தவிக்க விட்டுவிட்டு உங்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டேனே! நீங்கள் இல்லாமல் அவர்கள் என்ன பாடுபடுவார்கள்?” என்று நினைத்து வருந்தினேன். மறுபடியும் உயிர் பிழைத்து வந்தால் கீழையூருக்கு உங்களுடன் திரும்பி வந்து உங்கள் கிராமசேவையில் நானும் பங்கு கொள்வதென்று தீர்மா னித்தேன்….” 

“நிஜந்தானா? இப்படி நினைத்தவளையா நான் நாலு வீட்டுக்கு அப்பால் கொண்டு போய் வைத்துப் பட்டணத்தில் இருப்பதாகச் சொல்லி ஏமாற்றினேன்!” 

“ஆரம்பத்தில் தான் என்னை நீங்கள் ஏமாற்றினீர்கள். சில நாட்களுக்கெல்லாம் நான் கீழையூரில் தான் இருக்கிறேன் என்ப தைத் தெரிந்து கொண்டேன்.” 

“எப்படி?”

“வேலைக்காரி கொண்டு வந்த ஜலம் கொஞ்சம் உப்புக் கரித் தது. கீழையூர் ஜலம் தான் உப்புக் கரிக்கும். பட்டணத்து ஜலம் உப்புக் கரிக்காது. மேலும் நீங்கள் அடிக்கடி என்னை விட்டுவிட்டு வந்ததிலிருந்தே, ஆஸ்பத்திரிக்குத்தான் வருகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். 

“நீ மிகவும் பொல்லாத பெண்” என்றான் டாக்டர் சுந்தரம்.

“உங்களை விடப் பொல்லாத டாக்டர் யார்?” என்றாள் ஜானகி; 


சில நாட்கள் கழித்து, டாக்டர் சுந்தரம் ஒரு நோயாளியைப் பரிசோதனை செய்து கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு பெண் சுறு சுறுப்பாக அங்கு மிங்கும் ஓடியாடி அவனுக்கு உதவி செய்து கொண்டு அவன் கவனத்தைச் சிதறடித்துக் கொண்டிருந்தாள்! 

அந்தப் பெண் ஜானகிதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *