வைகுண்ட ஏகாதசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 6,239 
 

ஸ்ரீரங்கம்.

வரதராஜ மாமாவும், வேதவல்லி மாமியும் தனியாக மேல உத்தரவீதியில் ஒரு பழைய வீட்டில் குடியிருந்தார்கள். அந்தக் காலத்து சொந்தவீடு. வீட்டின் வாசலில் பெரிய விஸ்தாரமான திண்ணை. ரங்கநாதரை தரிசிக்க வரும் ஏராளமான பக்தர்கள் அந்த திண்ணையில்தான் ஓய்வெடுக்கும் சாக்கில் படுத்துப் புரள்வார்கள். அடிக்கடி காலிங்பெல் அடித்து தீர்த்தம் வாங்கிக் குடிப்பார்கள். பெரிய நீளமான வீடு. ரேழியிலிருந்து கிளம்பி பின்புறமுள்ள கக்கூஸ் போவதென்றால் அதுவே மாமா, மாமிக்கு ஒரு பெரிய நடைப்பயிற்சி.

மாமாவுக்கு அறுபத்தெட்டு வயது. மாமிக்கு அறுபது. இரண்டு மகன்களும் ஸ்ரீரங்கம் பள்ளியிலும், தொடர்ந்து செயின்ட் ஜோசப்பிலும் திறமையாக படித்துவிட்டு தற்போது மனைவி குழந்தைகளுடன் அயல்நாட்டு வாசம். மூத்தவன் ஸ்ரீவத்சன் கலிபோர்னியாவில். அடுத்தவன் ஸ்ரீராம். சிட்னியில்.

மாமா மாமிக்கு அவர்களிடமிருந்து மாதா மாதம் வங்கி மூலமாக ஏராளமாக பணம் அனுப்பப் படுவதால், எந்தவிதக் குறையுமில்லை.

மாமி தினமும் காலையில் குளித்தவுடன் நடந்தே சக்கரத்தாழ்வார், ரங்கநாதர் மற்றும் காட்டழகியசிங்கர் கோவில்களுக்குப் போய் சேவிச்சுவிட்டு வருவாள். அதுதவிர வெள்ளிக்கிழமைகளில் ஆட்டோ பிடித்து திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனை தரிசித்துவிட்டு வருவாள். அதன் பிறகுதான் சாப்பாடு.

இருவரும் நல்ல திடகாத்திரமாக இருந்தாலும், மாமாவுக்கு அதிகமான சர்க்கரை உண்டு. போனதடவை ஸ்ரீவத்சன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தபோது அவரை சென்னையின் அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு கூட்டிச்சென்று, டாக்டரின் அறிவுரைப்படி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தெரிந்துகொள்ள அக்வா-செக் உபகரணமும், அதுதவிர பகலில் போட்டுக்கொள்ள ஆக்ட்ராபிட் இன்சுலினும், இரவில் போட்டுக்கொள்ள மிக்ஸ்டார்ட் இன்சுலினும் பிரத்தியேகமாக வாங்கிக் கொடுத்து, அதை நோவோ நார்டிஸ்க் பேனா மூலம் தேவைக்கேற்ப தினமும் போட்டுக்கொள்ளச் சொன்னான். அந்தப் பேனாவின் முனையால் ஊசிபோடும்போது போட்டமாதிரியே இருக்காது. வலியே சிறிதும் தெரியாது.

அதனாலேயே கோவில், பூஜை, புனஸ்காரம் என்று எதிலும் வரதராஜ மாமா பட்டுக்கொள்ள மாட்டார். அவருக்கு வேளா வேளைக்கு காலைடிபன், மதியச்சாப்பாடு, மாலை டிபன், இரவுச்சாப்பாடு என்று எல்லாம் சரியான நேரத்துக்கு வேண்டும். .நேரம் தவறினால் உடம்பு வெலவெலத்து விடும்.

கோவில்களை விட்டால் மாமிக்கு பொழுதுபோக்கு ஓயாமல் டி.வி. பார்ப்பது. மாய்ந்து மாய்ந்து எல்லா சீரியல்களையும் பார்த்துவிடுவாள்.

போதாததற்கு இப்போது சனி, ஞாயிறுகளிலும் சீரியல்கள் தொடர்வது குறித்து மாமிக்கு ரொம்ப சந்தோஷம்.

பல நாட்கள் சமைக்க சோம்பல் பட்டுக்கொண்டு, தெற்கு சித்திர வீதியில் உள்ள மடப்பள்ளி ஹோட்டலில் மாமி போனில் ஆர்டர் செய்து விடுவாள்.

அவர்கள் அடுத்த பத்து நிமிடங்களில் மாமியிடம் டெலிவர் செய்து விடுவார்கள். “உன் சமையலைவிட மடப்பள்ளி நன்றாக இருக்கிறது” என்று மாமா உதார் காட்டுவார். .

மாமிக்கும் வயதாகிவிட்டதால் சமீப காலங்களாக மறதி அதிகமாகி விட்டது. அடிக்கடி சமைக்கும்போது உப்புபோட மறந்துவிடுவாள். ரேழியிலிருந்து கூடத்தைத் தாண்டி சமையலறைக்கு வந்தால், எதற்காக வந்தோம் என்பதே மறந்துவிடுகிறது. இதுவரை ஏழு குடைகளை மறதியில் தொலைத்த அனுபவம் உண்டு.

மாமியின் மறதி குறித்து மாமா அடிக்கடி உறவினர்களிடம் சொல்லி கிண்டல் செய்து சிரிப்பார். ஒருமுறை மாமி கடைத்தெருவுக்கு போனபோது மழை தூறிக் கொண்டிருந்ததாம். மாமி குடையை எடுத்துக்கொண்டு கிளம்ப, மாமா “குடையை மறக்காமல் எடுத்துவா” என்று படிச்சு படிச்சு சொன்னாராம். மாமியும் மறக்காமல் குடையை எடுத்து வந்து வீராப்பாக மாமாவிடம் ஆட்டிக் கண்பித்தபடியே வீட்டினுள் வந்தாளாம். வந்தவள் குடைய பொறுப்பாக சோபாமீது வைத்துவிட்டு தான் போய் சுவர் மூலையில் நின்று கொண்டாளாம். அவ்வளவு தூரம் கெட்டிக்கார மறதியாம்.

மாமியின் பூஜையறை நம்பிக்கைகள் மிகவும் வேடிக்கையானவை. தினமும் காலையில் புதுப் பாலை மாமிதான் சுடவைத்து, அகிலாண்டேஸ்வரி படத்துக்கு நைவேத்தியம் பண்ண வேண்டும். அதன் பிறகுதான் காப்பி போட்டு, தானும் குடித்துவிட்டு மாமாவுக்கும் காப்பி கலப்பாள். ஒருநாள் மாமாவுக்கு காலை நான்கு மணிக்கு தாழ்சக்கரை ஏற்பட்டு உடம்பு வேர்த்து வெலவெலத்து விட்டது. அவர் உடனே லைட்டைப் போட்டு தட்டுத்தடுமாறி சமையலறைக்குச் சென்று புதுப் பாலில் காப்பி கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தார்.

அவர் பாலை சுடவைத்து குடித்துவிட்டதால், அந்தப்பால் தீட்டாகி விட்டதாம். மாமி விறுவிறுவென வெளியே சென்று வேறு பால் வாங்கிவந்து சுடவைத்து நைவேத்தியம் செய்தாள்.

பூஜையறையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆரம்பித்து மதுரை மீனாட்சியம்மன் வரை ஒரே பிரேமில் ஒன்பது அம்மன்கள் படம் மாட்டியிருக்கிறாள். பூஜை முடிந்ததும் அதற்கு முத்தாய்ப்பாக, ஒவ்வொரு அம்மனையும் வரிசையாக மூன்று முறைகள் தொட்டு தொட்டுக் கும்பிட்டு கண்களில் ஒற்றிக் கொள்வாள். அவ்விதம் தொட்டுக் கும்பிடும்போது, அடிக்கடி போன் வரும் அல்லது வாசலில் நின்று யாராவது “மாமீ” என்று சத்தம்போட்டு விளிப்பார்கள். அதனால் மாமியின் கவனம் சிதறிவிடும்.

மாமிக்கு எந்த அம்மனை, எத்தனைமுறை கடைசியாக தொட்டோம் என்பது மறந்து குழப்பம் ஏற்படும். அம்மனுக்கு கோபம் வந்துவிட்டால் என்னாவது? அதனால் மாமி மறுபடியும் முதல்ல இருந்து தொட்டுக் கும்பிட ஆரம்பிப்பாள்.

வைகுண்ட ஏகாதசி வருவதால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அல்லோகலப்பட்டது. பயங்கர கும்பல். பகல்பத்து, ராப்பத்து, முத்தங்கி, ரத்தன அங்கி, மோகினி அலங்காரம் என்று தினமும் ஏதாவது விசேஷம் இருந்து கொண்டேயிருக்கும். அந்தச் சமயத்தில் கோவிலில் விற்கப்பட்ட எண்ணை சொதசொதக்கும் பட்ஷணம் எதையோ மாமி வாங்கி மாமாவுக்குத் தர, அதைச் சாப்பிட்டதும் அவர் வாந்தியும், பேதியுமாக இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டார். தொடர்ந்து காய்ச்சலும் விட்டு விட்டு அடித்தது. மாமா நிலைகுலைந்து போனார்.

அதிலிருந்து மாமிதான் அவருக்கு இன்சுலின் போட ஆரம்பித்தாள். மாமா பொறுமையாக அக்வா-செக் செய்து சர்க்கரையின் அளவைச் சொல்லி, எத்தனை யூனிட் இன்சுலின் வேண்டும் என்று சொல்வார். அவர் சொன்ன யூனிட்களை மாமிதான் இன்ஜெக்ஷன் மூலம் செலுத்துவாள்.

அன்று வைகுண்ட ஏகாதசி. ஞாயிற்றுக்கிழமை வேறு. சொர்க்கவாசல் பார்க்க ஏகப்பட்ட கூட்டம். மாமி அன்று காலையிலேயே தெரிந்தவர்கள் மூலம் இடம் பிடித்து சொர்க்கவாசல் கதவின் அருகேயே நின்று கொண்டாள். மிக நன்றாக தரிசித்தாள்.

மாலை வீட்டுக்கு வந்ததும் சீரியலில் மூழ்கினாள். இரவு ஏழு மணிக்கு படுக்கையிலிருந்தபடியே மாமா ஈனமான குரலில் “வேதா எனக்கு பசிக்கிறது…சுகர் இருநூற்றிப் பத்து இருக்கு. பதினைந்து யூனிட் மிக்ஸ்டார்ட் இன்சுலின் போட்டுவிடு…நான் சாப்பிடணும்” என்றார்.

“சித்த இருங்கோ அட்வர்டைஸ்மெண்ட் வரும்போது வந்து போடறேன்.”

அடுத்த பத்து நிமிடத்தில் விளம்பரங்கள் தொடங்கியதும், மாமி விரைந்து வந்து படுத்திருந்த மாமாவின் தொப்புளில் இன்சுலின் இன்ஜெக்ஷன் அக்கறையுடன் செலுத்தினாள்.

“இன்னும் கொஞ்சநேரம் பொறுங்கோ…இந்த சீரியல் முடிஞ்சதும் சாப்பிடலாம்….சப்பாத்தியும் உங்களுக்குப் பிடிச்ச மிதிபாகற்காய் பிட்லையும் இருக்கு” என்றாள்.

மாமாவின் பதிலுக்கு காத்திராது மறுபடியும் டி.வி.முன்பு சென்று அமர்ந்து கொண்டாள்.

சீரியல் ஏழரை மணிக்கு முடிந்தவுடன், தூங்கிக் கொண்டிருந்த மாமாவை எழுப்பி கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு சமையலறைக்கு கூட்டிச் சென்றாள்.

மாமா இரண்டு சப்பாத்தியும், மிதிபாகற்காய் பிட்லையும் ரசித்துச் சாப்பிட்டார்.

திரும்பவும் வந்து படுத்துக்கொண்டார். அப்போது மணி எட்டு.

மாமி மிச்சம் மீதி சீரியல்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு டி.வி.யை பத்து மணிக்கு அணைத்தாள். ‘ஐயோ…அவருக்கு மாத்திரை கொடுக்க மறந்துவிட்டேனே’ என்று நினைத்துகொண்டு மாமாவை எழுப்பினாள்.

மாமா எழுந்திருக்கவில்லை. அவர் போட்டிருந்த பனியன் வித்தியாசமான சொதசொதக்கும் ஈரப்பதத்தில் இருந்தது. உடம்பு சில்லிட்டிருந்தது.

மாமி பயந்துபோய் அடுத்த தெருவில் இருந்த டாக்டரை ஓடிப்போய் கூட்டிவந்தாள். டாக்டர் “அவர் போயிட்டார் மாமி” என்று சொல்லிவிட்டு வெளியேற, மாமி உடனே ஸ்ரீவத்சன், ஸ்ரீராம் இருவருக்கும் அழுதபடி விஷயத்தைச் சொன்னாள்.

அவர்கள் உடனே கிளம்பி வருவதாகச் சொன்னார்கள். ஸ்ரீவத்சன் நண்பர்கள் வந்து குளிர்பதன பெட்டியை வரவழைத்து மேலும் வேண்டிய

உதவிகளைச் செய்தனர்.

மாமாவின் இறப்புச்செய்தி கேட்டு வந்தவர்களிடம் “அவர் பாருங்கோ, வைகுண்ட ஏகாதசி அன்னிக்கு பெருமாளை சேவிக்க போயிட்டார்… அவருக்கு நேராக சொர்க்கம்தான்” என்று அந்த துக்கத்திலும் சிறிது பெருமைபட்டுக் கொண்டாள் மாமி.

வந்தவர்களும் “ஆமா மாமி…நீங்க தைரியமா இருங்கோ….அவர் பெருமாள்கிட்ட போனப்புறம்தான் சொர்க்கவாசல் மூடியிருக்கும்” என்றனர்.

இதில் சோகமான உண்மை, மாமாவை மேல அனுப்பியதே மாமிதான்.

டி.வி சீரியல் பார்க்கும்போது முதல் விளம்பர இடைவெளியில் பதினைந்து யூனிட்கள் இன்சுலின் போட்டுவிட்ட மாமி, அதை சுத்தமாக மறந்துபோய் இரண்டாவது விளம்பர இடைவெளியிலும் தூங்கிக் கொண்டிருந்த மாமாவின் தொப்புளில் உடனடியாக பதினைந்து யூனிட்கள் இன்சுலின் செலுத்தினாள். போதாதற்கு மிதிபாவற்காய் பிட்லை வேறு. மாமா தூக்கத்திலேயே சொர்க்க வாசலுக்கு மாமியால் அனுப்பப் பட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *