வேலை(ளை) வந்துவிட்டது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2013
பார்வையிட்டோர்: 10,251 
 
 

“ஏதாவது ஒரு பெரிய கம்பெனியில் கெமிஸ்டாகச் சேரலாம். இல்லையென்றால் கெமிகல் அனலஸ்டாகப் போகலாம். அதுவும் கிடைக்காவிட்டால் மெடிகல் ரெப்ரசன்டேடிவ் அல்லது லாப் அஸிஸ்டெஸ்ட். உருப்படியாக எந்த வேலையும் அமையாவிட்டால் இருக்கவே இருக்கிறது, ஏதாவது ஒரு கல்லூரியில் கெமிஸ்டரி டெமான்ஸ்ட்ரேட்டர் உத்தியோகம்.”

இப்படித்தான் நினைத்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன். நெல்லை எக்ஸ்பிரûஸ விட்டு இறங்கிய என்னை வரவேற்க எழும்பூர் ரயிலடிக்கு யாருமே வரவில்லை.

இத்தனைக்கும் பொன்னையா மாமாவுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். கண்டிப்பாக ஸ்டேஷனுக்கு
வரவேண்டுமென்று. பொன்னையா மாமா வேறு யாருமல்லர்; என் அம்மாவின் உடன்பிறப்பு. இன்னும் நெருக்கமாகச் சொல்வதானால் என்னுடைய சொந்த அக்காவின் கணவர் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து தான் வேலை தேட வேண்டும்.

“என்னங்க ஊர்லேந்து இன்னிக்கு ரகு வர்றான். ஸ்டேஷனுக்குப் போய் கூட்டிட்டு வாங்க…..” என்றிருப்பாள் அக்கா.

“ஆமா இவன் பெரிய இவன். சீமையிலேர்ந்து வர்றான். இவனைப் போய் ஸ்டேஷன்லே காத்து நின்று மாலை போட்டு வரவேற்கணுமாக்கும். அட்ரஸ்தான் கையிலே இருக்கே. மூதேவி தேடிப்பிடிச்சு வந்து சேரும்.” இப்படித் தட்டிக் கழித்திருப்பார் மாமா. அவரைத் தெரியாதா எனக்கு?

இப்ப இவரு மதிக்கமாட்டார். ஏன்னா எனக்கு உத்தியோகம் இல்லை. நாளைக்கே ஒரு பெரிய கம்பெனியிலே கெமிஸ்ட்டா, மெடிகல் ரெப்ரசென் டேடிவா….. லாப் அஸிஸ்டெண்டா….
காலேஜ் டெமான்ஸ்ட் ரேட்டரா…….

கனவுகள் விரிந்தன. ஆசையில் ஊறிய எச்சிலே எனக்கு குளுக்கோஸ்-டி அளித்தது. உற்சாகமாக ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தேன்.

அடேயப்பா…. எவ்வளவு பெரிய நகரம்! வள்ளியூர் தெப்பத் திருவிழாவன்று வருகிற கூட்டம் இங்கே சாதாரண நாள்களில் கூட இருக்கிறதே. குரங்குகள் போல இந்த மனிதக் கூட்டம் தான் என்னமாய் பஸ்களிலும். ரயில்களிலும் தொற்றிக் கொண்டு போகிறது? எத்தனை கடைகள்…… எத்தனை வாகனங்கள்…. எத்தனை ரகங்கள்!

ஆண்கள்….. பெண்கள்! இந்தப் பெண்களில்தான் எத்தனை நிறங்கள்?

“அமிஞ்சிக்கரைக்கு எந்த பஸ் போகுது சார்?”

“27. 27ஏ”

அமிஞ்சிகரைக்கு வந்தாகிவிட்டது. இனி அடுத்த வேலை கண்ணையாச் செட்டி தெருவைக் கண்டுபிடிக்க வேண்டும். நேராகப் போய். பீச்சாங்கை பக்கம் கட் பண்ணி சோத்துக்கை பக்கம் திரும்பி. அப்பால நேராப் போய் வெற்றிலைப் பாக்கு கடைகளில் கேட்டு அலைந்து அலுத்து, களைந்து இறுதியாக பஸ்சை விட்டு இறங்கிய இடத்திற்குப் பக்கத்திலேயே கண்ணையாச் செட்டித் தெரு. கண்ணையாத் தெருவாகக் கண்ணில் பட்டது.

இந்தத் தெருவில் இனி அந்த ஒன்பதாம் நம்பர். கதவிலக்கங்கள் கட்டுப்பாடில்லாமல் எங்கெங்கோ இருக்க, மிகுந்த குழப்பத்தோடு திரிந்து கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் அக்காவே எதிரில் வந்தாள்.

“ரகு….. இப்பத்தான் வர்றியா?…… ஊர்ல அம்மா அப்பவெல்லாம் சொகமா இருக்காகளா?”

“ம்”……. எனக்கு கோபம் அதிகம் பேசவில்லை. முகம் உம்மென்று இருக்கிறது.

“உன்னைப் பார்க்கறதுக்குத்தான் மாமா ஸ்டேஷனுக்குப் புறப்பட்டாக. ஆனா புறப்பட்ட நேரத்திலே
அரும்பாக்கத்திலேர்ந்து ஒருத்தர் வந்து வாசக்கால் போடணும்னு அவசரமாக கூட்டிட்டுப் போய்ட்டார்”.

“அதனாலென்ன பரவாயில்லே. நான்தான் பத்திரமாக வந்துட்டேனே…..”

பேசிக்கொண்டே வந்தவன் ஒரு குடிசைக்கு முன்னால் நின்றான்.

“குனிஞ்சுப்போ ரகு…..”

இதுவா இவர்கள் இருக்கிற வீடு! நம்பர் ஒன்பது. ஒரு பங்களாவாக இல்லாமற்போனால் பரவாயில்லை குறைந்தபட்சம் ஒரிரு அறைகள் கொண்ட ஒரு ஓட்டு வீடாகவாவது இருக்குமென்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

குடிசையாக இருக்கிறதே……

தலையில் சுமந்து வந்து கூடையை இறக்கி வைத்தால் அக்கா. மாமாவின் பட்டறையிலிருந்து மரஇழைப்புத் தூளை அள்ளிக் கொண்டு வந்திருந்தாள். தூசியும் தூளுமான அந்த மரத்தூள் நெடி பக்கத்தில் இருந்த கூவத்தின் மணத்தோடு கூட்டணி அமைத்துக் கொண்டது.

“அக்கா இதிலேயா இருக்கே! இதுக்கு வாடகை வீடே கிடைக்கும். அது சரி அப்பாவுக்கு வேலை நடக்கா?”

“300 ரூபா. நம்ப ஊர்ல 300 ரூபாய்க்கு ஒரு பெரிய மச்சு வீடே கிடைக்கும். அது சரி. அப்பாவுக்கு வேலை நடக்கா?”

“ஆமாக்கா…. நம்மவூர் முருகன் கோவில் தேர் ரிப்பேர் வேலை நடந்திட்டிருக்கு. அப்பாதான் அதை ஏத்துச் செய்திட்டிருக்காக. வெட்டூர்ணிமாடத்திலேர்ந்து ரத வேலைக்காக நிறைய வந்திருக்காக. ஆனாலும் அப்பா ரொம்ப கஷ்டப்படறாக…. வயசாயிடுச்சில்லையா….”

“ஆம்…. நான் உத்தியோகத்துக்குப் போய்விட்டால்…… கெமிஸ்ட்…. கெமிகல் அனலஸ்ட்.. மெடிகல்
ரெப்ரசென்டேடிவ் லாப் அஸிஸ்டென்ட்……. காலேஜ் டெமான்ஸ்ட்ரேட்டர் என்று மீண்டும் கனவுகள் விரிந்தன.

அடுத்த நாள் காலை ராகு காலம். எமகண்டம் நீங்கலாக ஒரு நல்ல நேரம் எதிரே யார் வருகிறார் என்று பார்த்து அக்கா என்னை வெளியே அனுப்பி வைத்தாள். இனி வேலை தேட வேண்டும்

ஊரிறீருந்து வரும்போதே சென்னையில் உத்தியோகம் பார்க்கும் சில வள்ளியூர்க்காரர்களின்
முகவரிகளைக் குறித்து வைத்திருந்தேன்.

“முருகன் அண்ணாச்சி ஸ்டேட் பாங்க் ஹெட் ஆபீஸிலே இருக்காக. முதல்லே அவுகளைப் போய் பாரு. பல பெரிய இடங்கள்லே அவுகளுக்குப் பழக்கம் இருக்கும். அவுக மனசு வச்சா உனக்கு ஒரு நல்லவேலை வாங்கிக் கொடுக்க முடியும்.”

இம்பொஸிஷன் போட்ட மாதிரி அப்பாதான் இதை எத்தனைமுறை சொல்-யிருப்பார். முருகன் சார்வாளிடம் தான் முதலில் சென்றேன்.

“எல்லாம் சரிதான் நம்பி…… இங்கே எண்பத்திரண்டாம் வருஷம் பதிஞ்வங்களுக்கே இப்பத்தான் எம்ப்ளாய் மெண்ட் எக்ஸ்சேஞ்சிலேர்ந்து இண்டர்வியூ கார்டு வரத்தொடங்கியிருக்கு. நீ என்னடான்னா போன மாசம் பாஸ் பண்ணிட்டு வந்து உடனேயே வேலை வேணுங்கிறியே…!”

“அண்ணாச்சி… பாங்கிலே முடியலேன்னா பரவாயில்லே…ஏதாவது ஒரு பிரைவேட் கம்பெனியிலேயாவது…”

“பார்க்கறேன்… ஆனால் என்னை மட்டும் நம்பிட்டிருக்காம நீயும் ட்ரை பண்ணிட்டிரு….”

பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சினிமாவில் வருகிற பிளாஷ் பேக் மாதிரி மறுபடியும் அப்பா வந்தார்.

சென்னையில் நான் அவசியம் பார்க்க வேண்டிய நபர்கள் பட்டியலில் அடுத்த பெயரை நினைவுக்குக்கொண்டு வந்தார்.

பிளாஷ்பேக் அப்பா.

“நம்ப பெரிய வீட்டு ராஜாசிங் அம்பத்தூர்ல ஒரு கம்பெனியிலே யூனியன் தலைவர். வேலை கிடைக்காம ஊர் சுத்திட்டிருந்த அந்தத் தம்பி எப்படியோ இப்படியொரு பெரிய நிலைக்கு வந்திருக்காக. அவுக நினைச்சா உனக்காக அங்கே ஒரு வேகன்ஸியையே உண்டாக்க முடியும்…..”

முருகன் அண்ணாச்சி சொன்னது போல. அவரை மட்டுமே ஏன் நம்பிக்கொண்டிருக்க வேண்டும். நானும் முயற்சி செய்ய வேண்டுமல்லவா! அம்பத்தூர் பஸ்ûஸப் பிடித்தேன். ராஜாசிங்கைப் பார்க்க……

“தம்பி நீ…. நம்ப ராமசாமி ஆச்சாரியோட மூத்த மகன்தானே….”

என்னைச் சட்டென்று அடையாளம் கண்டு கொண்டு அன்போடு வரவேற்றதால் அவரைப் பற்றிய மரியாதை என்னுள் விலைவாசியானது. மகிழச்சிப் பிரவாகத்தில் நம்பிக்கை துளிர்விட்டது. வந்த விஷயத்தைச் சொல்லி முடித்தேன்.

“தொழிற்சங்கத் தலைவன்னா வேலைக்கு வந்தவங்களோட நலனைக் கவனிக்கிறவன் தானேயொழிய வேலைக்குப் போக ஏற்பாடு பண்ற எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் இல்லே. என்னைக் கேட்டா ஒவ்வொரு இளைஞனுக்கும் தன்னோட சொந்தக் கால்லே நிக்கிற துணிச்சலும் திறமையும் வரணும்தான் சொல்வேன். இந்த சிபாரிசுகள்லே எனக்கு நம்பிக்கையும் கிடையாது. விருப்பமும் கிடையாது.”

பெரிய வீட்டு ராஜாசிங் ஒரு பேருரையையே நிகழ்த்தி அனுப்பி வைத்து விட்டார். அவரைப் பார்க்கப் போன வகையில் பன். டிபன் செலவுக்காகத் தண்டச் செலவு முப்பத்தேழு ரூபாய் ஐம்பது காசு.

“உன்னைப் போல ஒரு கூமுட்டை எவனும் இருக்க மாட்டான். அவுகளை வீட்டிலே போய்ப் பாருலேன்னு சொன்னா யூனியன் ஆபீஸிலே அதுவும் தொழிலாளர்கள் மத்தியிலே போய்ப் பார்த்திருக்கே. அவுங்க முன்னால அவுக அப்படித்தான் பேசுவாக தனியாப் போயிருந்தா காரியம்
பழமாகியிருக்கும். காரியத்தைக் கெடுத்திட்டியேலே. உனக்கெல்லாம் எங்கே வேலை கிடைக்கப் போகுது?”

மாமா எரிந்து விழுந்தார். இது நேருக்கு நேர் இன்னும் அக்காவிடம் என்னென்னவெல்லாம் திட்டினாரோ? அக்காவும் இப்போதெல்லாம் அடிக்கடி புத்திமதிகள் சொல்லத் தொடங்கி விட்டாள்.

நாள்கள் சில நகர்ந்திருக்கும் அக்கா இப்போது புதிதாய் ஒரு சங்கடத்தை உருவாக்கி விட்டாள்.

“ரகு. அதோ பாரு! உங்க மாமா தனியா பலகையை இழைச்சிட்டிருக்காக. கூடமாட கொஞ்சம் ஒத்தாசை பண்ணக்கூடாதா?” என்று சொல்லும் போதெல்லாம் ஒப்புக்குக் கொஞ்சம் இழைத்து
விட்டு நழுவிக் கொள்வேன். பி.எஸ்.ஸி.. கெமிஸ்டரி. ஹைசெகன்ட் கிளாஸ் தச்சு வேலை செய்வதா……!

“படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். இவன் வந்து ரெண்டு மாசமாச்சு. இன்னும் ஒரு உத்தியோகத்தைத் தேடிக்க வக்கில்லே. நானென்ன இவனை
மாதிரியா படிச்சிருக்கேன். கையெழுத்து கூடப் போடத் தெரியாது. மெட்ராஸýக்கு வந்து இறங்கின மறுநாளே வேலை கிடைச்சிட்டுது.அப்பவே தினமும் 20 ரூபா சம்பாதிப்பேன். மாமா வருத்தப்படுவதாக அக்கா கூறினாள்.

“மெட்ராஸிக்கு வந்த மறுநாளே வேலை கிடைக்கிறதுக்கு நானென்ன தச்சு வேலைக்கா வந்திருக்கேன்? ஆபீஸ் உத்தியோகம் அது மெதுவாகக் கிடைச்சாலும் எடுத்த எடுப்பிலே நாலாயிரம் ரூபாய்க்குக் குறையாத சம்பளம் கிடைக்கும்”.

“ஆமா. ஆயிரத்தை நம்பிகிட்டு அரை ரூபாய்க்குக் கூட பிரயோஜனமில்லாம சுத்தறதுதான் மிச்சம்.அறுபது காசு கொடுத்துக் கவர் வாங்கணும்னா கூட இன்னொருத்தர் கையைத் தானே நம்பிக்கிட்டிருக்கே….”

அக்கா இப்படிச் சொன்னது கொள்ளிக் கட்டையால என் கண்களைத் தொட்டதுபோலச் சுட்டது. எனக்கும் என்னுடைய பி.எஸ்.ஸி ஹைசெகன்ட் கிளாஸýக்கும் இதைக் காட்டிலும் பெரிய அவமரியாதை வேறெதுவும் இருக்க முடியாது.

இவரென்ன கைநாட்டு. இவர்கிட்ட இனிமே சல்லிக்காசு கூடக் கேட்கக் கூடாது. முடிந்தால்….. கண்டிப்பாக முடியும்.

இவர் வீட்டில் சாப்பிடுகிற சாப்பாட்டுக்கும் ஏதாவது பணத்தை கொடுத்து விடவேண்டும்.

“ரகு எனக்கு நேரமாச்சு நான் வேலைக்குப் புறப்படுறேன். உங்கக்கா வீட்டிலே இல்லே எக்மோர் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கா. இன்னிக்கு நீ எங்கேயும் போக வேண்டாம். போனாலும் என்ன வேலையா கிடைச்சிடப் போவுது. அண்ணாநகர்லேர்ந்து நம்ம குப்புசாமி ஆச்சாரி ஒரு பையனை
அனுப்பறதாச் சொல்லியிருந்தார். அந்தப் பையன் வந்தான்னா திண்ணையிலே கிடக்கற பலகைகளையெல்லாம் இழைச்சுப் போடச்சொல்லு சாயங்காலம் நான் வர்றதுக்கு லேட்டாய்ட்டா
இந்தா…. இந்த அம்பது ரூபா சம்பளத்தை அவனுக்கு கொடுத்து அனுப்பிடு. உங்கப்பாவுக்குக் கடுதாசி போட்டியானா செலவுக்கு கொஞ்சம் பணம்கேட்டு வாங்கி வச்சிக்கோ. விலை பிடிக்க முடியலே நீயும் கொஞ்சம் பணம் கொடுத்தியானாதான் சாப்பாட்டுச் செலவைச் தாக்குப்பிடிக்கலாம்…… இப்படிச் சொன்னேன்னு உங்க அக்காகிட்டே சொல்லித் தொலைச்சிடாதேலே……”

அக்கா விட்டிலே இல்லாததைப் பயன்படுத்தி கொண்டு அவர்களோடு நானிருப்பதைப் பாரமென்று சுட்டிக்காட்டிய மாமாச் சனியன் அம்பது ரூபாயைக் கையில் திணித்து விட்டு வெளியேறியது. எனக்கு அவமானமாகப் போயிற்று. இரண்டு மூன்று மாதங்களாக இவர்கள் வீட்டில் சாப்பிட்ட உணவு தண்டச் சோறுதான். அதை அவர்களே சுட்டிக் காட்டிய பிறகு…இனிமேல் சாப்பிட்டால் குமட்டிக் கொண்டல்லவா வரும்?

மாலையில் வீடு திரும்பிய மாமா விசாரித்தார். இந்தச் தண்டச்சோற்றை எங்க புள்ளே காணோம்? குப்புசாமி ஆச்சாரி அனுப்பின பயலுக்கு வேலை வச்சிட்டு போயிருந்தேன். வேலை முடிஞ்சிதோ சம்பளம் கொடுத் தானோ தெரியலே. கொஞ்சம் அசந்திருந்தா அதையும் செலவழிச்சிட்டு வந்து அப்ளிகேஷன் அனுப்பச் செலவாயிடுச்சின்னு சொல்லுவான்.”

வசவுகளை முற்றிலுமாக வழங்கி முடிக்கவில்லை. மாமாவுக்கு முன்னால் பிரசன்னமானேன்.

“என்ன மாமா சொன்னீங்க…. தண்டச்சோறா…. இதுவரை அப்படியே இருந்துட்டேன். இனிமே அப்படி யில்லே. இந்தாங்க இதிலே அம்பது ரூபா இருக்கு. இரண்டு நாள் சாப்பாடு போடுங்க…..

“எலே ரகு. குப்புசாமி ஆச்சாரி அனுப்பிய பயலுக்குக் கொடுத்த கூலியை நீயே வச்சிக்கிட்டடியா…..?

“ஆமா. நான்தான் வச்சிக்கிட்டேன். வேலையை அவன் செய்து கூ- வாங்கினா என்ன? நான் செய்து வாங்கினா என்ன? உங்களுக்கு வேலைதானே முடியணும்? பேனாவும். தாளும் எனக்குத் தராத வேலையை இந்த இழப்புளியும் மட்டப்பலகையும் தரலாமில்லையா….? இந்தாங்க என் சம்பளம்…..”

இருபது ரூபாயை மாமாவிடம் நீட்டியபோது பழக்க மில்லாத வேலையைச் செய்திருந்த என் பூவிரல்கள் சிவந்து இருப்பதைப் பார்த்து அக்காவின் கண்களில் நீர் அரும்பியது.

அதில் வருத்தமிகுந்த அளவுக்குப் பெருமிதமும் இருந்தது. இப்போது வேலையில்லாப் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *