காலங்காத்தாலே அம்மாட நச்சரிப்பை தாழமுடியாமல் பாண்வாங்க சைக்கிளில் வெளிக்கிட்ட வேலன், சேர்ச்சந்தியிலே திரும்பியபோது எதிர்ப்பக்கத்தில் வீதியோரமாகவிருந்த வயிரவர்” கோவிலடியில் மக்கள் கூட்டமாக நிற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தச் சென்றான்.
“சிவத்திற்கு விசர் பிடித்துவிட்டது” கதிரேசு குமுறிக்கொண்டிருந்தான். பேச்சில் வீரம் எல்லாம் வந்து போய்க்கொண்டிருந்தது.
சிறிது தள்ளி “கையை வெட்டவேண்டும்” என்று கள்ளுமுட்டியோடு நிற்கிற செல்லன் சொல்லிக்கொண்டிருந்தான். இவன் பகிடிக்காரன். அவனை பெரியவர் சிறியவர் சூழ்ந்திருந்தார்கள். அவன் சீரியஸாக கதைப்பதாகப் பட்டது.
அப்படி என்ன நடந்துவிட்டது?
ஒரமாக நிற்கிற ராசையாண்னை “ரத்தம் தொடர்ந்தும் சிந்தப் போகிறதோ?’ முணுமுணுப்பதை பார்த்தான் முத்தனின் பெரியப்பா. பாரதூரமாக ஏதோ நடந்துவிட்டதைப் புரிந்து கொண்டான்.”அண்ணை” கிட்டப்போய் “என்ன நடந்தது?” கேட்டான். “உன்ர கூட்டாளிக்கல்லோ மண்டாவாலே ஏத்திப்புட்டான்கள்”
குரல் அடைக்கச் சொன்னார்.“முத்தனுக்கா.’ பதறிக் கேட்டான்.
“ஒம்” என்றார்“இப்ப எப்படி?”…. வார்த்தைகள் வரவில்லை.“பொன் பெடியள் ஆஸ்பத்திரிக்கு கொண்டோடி யிருக்கிறார்கள்” ஒருவித ஆறுதலுடன் சொன்னார்.
எந்த சிவம் ? என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை. பல சிவம் அங்காலயிருந்தனர்.”அண்ணை வாரன்” சைக்கிள்ளை கடைப்பக்கம் விட்டான்.
பவித்திரா கடைக்கு முன்னால் இருக்கிற வீதி போக் அங்கால பெடியன்களின் கேந்திரப்பகுதி. மாலை நேரங்களில் வரிசையாக இருபக்கமுமிருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். பிரச்சனை நடந்தாலும், லீவு நாளாகவிருந்தாலும் கனபேர் நிற்பார்கள்; அவன் வகுப்புத் தோழர்களை சந்திக்கலாம் என்று நினைத்தான். கனகன் மட்டுமே இருந்தான்.“எங்கடா சுரேஷ்” கேட்டான்.“முத்தன் கூட போயிருக்கிறான்” என்றான்.
“என்னடா நடந்தது?” கேட்டான். “நளினியை தெரியும்தானே (வகுப்புப்பெண்) அவளிட
கையை பிடித்து இழுத்தவனாம்?” அதிலே தொக்கி நின்ற பலாத்காரம் புரிய. உணர்ச்சி யைப் புரிந்துகொள்ள முடிந்தது. எவ்வளவு பெண்ணடிமைத்தனங்களை நாம் மேற்கொண்டாலும், மற்ற சாதி, இன, மதத்தைச் சேர்ந்தவன் நம்மூர் பெட்டைகளோட கதைத்து விட்டாலே ரத்தம் கொதித்து விடுகிறது. முத்தன் தவறாக நடப்பவனில்லை. கையைப்பிடித்து இழுத்துவிட்டால் சிக்கல்தான்.மண்டா வீரர்-சிவம்-நளினிட சித்தப்பா என்பதை புரிந்து கொண்டான்.அவன் அப்படிப்பட்டவனில்லையே’ என்றான் கவலையுடன்.
“நானும் நம்பவில்லை. வருகிற கதைகள்; அவன் கத்தியோட நின்றது எல்லாம் பிரச்சினையின் இறுக்கத்தையே காட்டின” என்றான்.பெண்ணை விரும்பாதவன் யாரிருக்கிறான்? 8ம் வகுப்போட படிப்பை நிறுத்தியவன் பருவமாற்றத்தினால், சபலப் பட்டிருப்பானோ? இயற்கையே! இருந்தால்.பெண்ணடிமைத் தனத்தைக் குறித்து நியாயம் வழங்கப்பட வேண்டும். அதை விட்டு விட்டு சாதிக் கொடியை தூக்கிப் பிடித்தபடி அல்லவா நிற்கிறார்கள்.கனகன் விபரித்தான்.“எங்கடயாட்கள் தடிகளோடு சூழ்ந்து நின்றார்கள். சிறிது வெறியோடு இருந்த சிவத்தான் மண்டாவை மறைவாக எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான். எல்லாம் நொடியிலே நடந்துவிட்டன” என்றான்.
எதுவுமே எங்கட கையிலே இல்லை’ என்ற சலிப்பு அவன் பேச்சில் இருந்தது.
சைக்கிளை.கனகனிற்கு கிட்ட ஒரமாக நிறுத்தி விட்டு, “பாண்னை வாங்கிட்டு வாரன்” என்று கடைக்கு போனன். அம்மாட நச்சரிப்பு ஞாபகம் வர விரைவாகவே வந்தான். முள்ளி அவ்விடத்திற்கு ஒடிவந்தான். சின்ன செட் பகிடிக்காரன் இவர்களோடு ஒட்டித் திரிகிறவன்.“கனகண்ணை கத்தி பொல், மண்டா, தடி எல்லாவற்றையும் மாமா வீட்டில் மறைவாக குவிச்சு வைச்சிருக்கான்கள்” என்ற சீரியஸ்ஸான செய்தியை சொன்னான். அவர் வீடு ரோட்டுப்புறத்தில் இருந்தது.
முத்தன் பகுதி அடிபட வந்தால், எதிர்த்து தாக்க இங்காலயும் கொஞ்ச பேர் தயாராகி விட்டார்கள்’ என்று புரிந்தது.
பெடியளால் பெரிய செட்டை கட்டுப்படுத்த முடியாது. கழகத்தில் காரசாரமாக கேள்வி கேட்பதாலும் ‘இன்னமும் சாதிப் பிரச்சினையை தூக்கிப் பிடிக்கப் போறிர்களா’ என்ற சூழவுள்ளவர்களோடு பரவலாக பேசுவதாலுமே கொஞ்சம் தனிக்கமுடியும்.“பொன்’னின் உறுதிப்பாட்டுக்கு அவர்களும் கணிசமானளவு காரணம் எனவே பெடியளின் பேச்சை சிறிதாவது கேட்க வேண்டியிருக்கும். கிராமத்திலே ‘கழகம்’ நல்லபேரை சம்பாதித்து வைத்திருந்தது. அவசரப்பட்டு அடிபாடுகளில் இறங்க மாட்டார்கள்’ என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது.
ஆனால், இந்த முன்னேற்பாடுகள் பயங்கரமானவை. மொக்குத்தனமாக அடுத்த பகுதி உணர்ச்சி வசப்பட்டு இறங்கி விட்டால் ரத்த ஆறு பயங்கரமாக பெருகித்தான் நிற்கும்.அமெரிக்கனிடம் அணுகுண்டு இருக்கப்போய்தானே ‘ஏலா’க்கட்டத்தில் ஜப்பானில் போட்டான். இவர்களும் முதலில் தடிகளோடு அணுகிப் பார்ப்பார்கள். ஏலாக் கட்டம் வந்தது என்றால்.மண்டாக்களும் (மீன் முள்ளு) திருக்கை வால்களும் வெளிய வந்து விடும். இவற்றுக்கெதிராக பாளை சீவல் கத்தி துளி நேரம் கூட நிற்க மாட்டாது.சிறிது நேரம் கதைத்து விட்டு லேட்டாக வந்தான். வீட்டிலே வழமை போல அர்ச்சனை தான்.
லீவு நாளான அன்று அம்மாவும் தங்கச்சிமாரும் யாழ்ப்பாணத்திலிருக்கிற ஆச்சி வீட்ட போய் காலைச் சினிமாவுக்கு போறதுக்காகவிருந்தார்கள்.7.00 மணிக்குப் போனவன் 8.30 போல வந்தால் எதிர்பார்க்க கூடியது தான். அவர்களுக்கு ஊர்ச் சோலி பற்றி. அவன்ர நண்பனைப் பற்றி கவலை ஏது? தன் பிள்ளை, குடும்பம், சுகம் என்ற குறுகிய வட்டங்களே சரியானவை’ என்று சொல்லி வாழ்கிறவர்களாச்சே!’பின்னேரம் போல கோவில் வளவுக்கு போன.போது சுரேஷ், கனகன் எல்லோரும் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
எதிர்த் தரப்பிலே சிவத்தான் இருந்தான். அவசரப்பட்டசெயற்பாடு அவனை ‘வில்லத் தன்மையான கதாநாயகனாக்கி விட்டிருக்கிறது. குகன், பரமு போல சமயத்தில் நல்லாய் விளையாடுறவன். இன்றைக்கு.விளையாட்டு சுமாராக இருந்தது. கனகன் சொன்னது போல குடித்ததனால் தான் அப்படி நடந்து விட்டானோ?
விளையாட்டு முடிய, அவனைப் பார்த்து உயிர்ப்பில்லாமல் சிரித்து விட்டுப் போனான். அவன், சுரேஷ், முத்தன் மூவரும் கூட்டாளிகள் என்பது அவனுக்குத் தெரியும்.
காலையிலே, அவன் சில விஷயங்களை கனகன் மூலமாக அறிந்திருந்தான்.
நளினிட மச்சாள் பார்வதியின் 7-வது பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்றிரவு நடந்தது. வழமைபோல பலகாரம் இவைகளோடு வாடகைக்கு வந்த வீடியோ விடிய விடிய ஒடியது. நளினியும் சரோசாவும் 2வது படத்தோடயே போய் விட்டினம்.
வயிரவரும் (நளினியின் அப்பர்) சிவத்தானும் அங்கேயே தங்கி.கொஞ்சம் மருந்தும் சாப்பிட்டிருந்தார்கள் காலையிலும் வெறி அவ்வளவாக கலைந்திருக்கவில்லை.
வயிரவனின் வளவில் பனைகளை கணபதி சீவல் குத்தகைக்கு எடுத்திருந்தான். முத்தனையே அங்கே அனுப்புறார். அவன் 7-8 மணிக்கெல்லாம் சீவிவிட்டுப் போய் விடுவான்.தூக்கக் கலக்கத்திலே போன வயிரவர்.களேபரத்தை ஏற்படுத்த, முத்தனும் எம்.ஜி.ஆர் கணக்கில் கத்தியை காட்டியிருக்கிறான். சந்தர்ப்பம் சதி செய்து விட்டது. திரும்பி வந்த சுரேஷிடம் “அவனுக்கு எப்படியடா இருக்கிறது?” என்று கேட்டான்.“நல்ல காலம் குடல் வெளிய வரல்லை” என்றவன் “5 இழைகள் பிடிச்சது” என்றான்.“வார்ட்டிலே 3 நாளைக்காவது கடைசி மறிச்சி விடுவார்கள்”
என்று உதவி நேர்ஸ் சொன்னதைச் சொன்னான்.
போக்கிலே போய் அமர்ந்தார்கள். எதிர்ப்பக்கத்தில் குகனும் 3-1 நண்பர்களும் இருந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். பஸ் ஒன்று விரைந்தது. ஏ 40 கார் 3 விரைந்தன. வேலையால் பிந்தின வட்டுக்கோட்டை தொழிலாளர் பட்டாளம் ஒன்று சைக்கிள்களில் வந்தது“நீ ஏன் எங்களோடு விளையாடக் கூடாது” என்று சுரேஷ் கேட்டான். “மற்றவயள் என்னம் சொல்லுவினம்டா” எங்கேயோ பார்த்து பதிலளித்தான். இருவருக்குமிடையிலிருக்கிற சாதியமே காரணம். சுரேஷ்க்கு புரியாமலில்லை.“நான் கேட்டு வைக்கிறேன் நாளைக்கு விளையாட வா” என்றான். ஒரு வேளை மறுப்பு வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. இருந்தாலும் நம்பிக்கை. நம்பிக்கை தானே வாழ்க்கை. தவிர, அவன் அக்கிராமத்தில் படிப்பிக்கிற ரீச்சரின் மகன்.
அடுத்த நாள், வகுப்பில் நளினியை விசாரிக்க காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றமாகவிருந்தது. அவவோட திரியிற கீதாவும் வரவில்லை. “உடற் பயிற்சி பாட வேளையில் கூட விளையாடாமல் அவர்கள் வகுப்பிலே இருந்தார்கள்.‘முத்தனிலே ஏதும் பிழையிருக்குமோ?” என்று பாபு சிந்தனையுடன் கேட்டான். ‘நளினி விரும்பியிருந்தால் கூட. ஏற்க மாட்டார்கள்” என்ற சுரேஷ்,
“சம்பவத்தை தெளிவு படுத்தாமல் மற்றவர்களைப் போல நாமும் கதைக்கக்கூடாது” என்றான் அவன்.”நியாயம் பிழங்கிறவர்கள் தமது தவறுகளை மறைக்கவும் பல கதைகளை கட்டி விடுகிறார்கள். அதன் குழப்பம் அப்பாவிகளை போர்க்கோலம் பூண வைத்து விடுகின்றன’ உணர்ச்சி மனிதர்களை அவ்வாறு பாபு சொன்னான்.பாபு ரேடியோ திருத்துறவன்.நாள் கணக்கிலே ரேடியோவில் பிழை தடவி, கடைசியில் பிடித்து விடுறவன். சமயங்களில் அவனிடம் சில விஷயங்களில் நிதானம் பிறளாமல் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து காட்டிவிடுற தன்மை இருந்தது.
“முத்தன் பகுதியிலே படிப்பில்லாததும்.பெரிய குறைபாடுடா” என்றான் சுரேஷ்.
“அவர்களை அடிமை குடிமைகளிலிருந்து விடுபட முடியாதவாறு சாதியக் கொள்கைகளை நாம் வைத்திருக்கிறது தவறு. பக்க விளைவுகள் அதன் தான் இந்த மாதிரி சம்பவங்கள்” என்றான் வேலன்.“பொதுவாக எல்லா சாதியிலும் முற்போக்கான இளைஞர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள்” என்றான் சுரேஷ்.
ஒருத்தியின் கழுத்தில் தாலிகட்டிய பிறகு இப்படி பேசியதை மறந்து விடுவானோ? வேலனுள் நினைப்பு ஒடியது.சுரேஷ் தொடர்ந்தான். “ஆனால் அவ்விளைஞர்கள் அக்கொள்கைகளை கடைசி வரை கை விடாது முன்னெடுக்க வேண்டும்”
“உன்ர குடும்பம் முழுதுமே பாதிக்கப்படும். ஆமா உன் தங்கச்சிட சீதனத்துக்கு நீ எங்கே போவாய்?” சிரித்துக் கொண்டு கேட்டான் பாபு.“ஏன் நீங்கள் எல்லாம் இல்லையா?”நேரிடையாக வே சுரேஷ் கேட்டான்.
இருவரும் சிரித்தார்கள். “ஒருவேளை சாத்தியப்படக் கூடியதாயிருக்கலாம் ஆனால் பெற்றோர்கள் உன்னை உந்த விசப்பரிட்சையில் இறங்கமாட்டார்கள். தவிர,. என் வீட்டிலே சீதனம் கேட்பார்கள். வேலன்ர பெற்றோரும் சூழ்நிலைக் கைதிகள்” என்றான் தெளிவாக பாபு.”அப்ப என்ன தான் வழி?” சுரேஷ் சோர்வாக கேட்டான். “உதுக்கு குடும்ப உறவுகளை அறுத்துக் கொண்டு
ஒடவேண்டும்” என்றான் பாபு தீர்க்கமாக, பிறகு இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கல்யாணமே நடக்காது. ஏற்கனவே பெண்ணடிமைத் தனத்திலிருக்கிறவயள் பெட்டைகள்.. எவள், கட்ட முன் வருவாள் என்று நினைக்கிறாய்?” பாபு கேட்டான்.
“எதையும் தீர்வாக எதிர்வு கூற முடியாதடா” என்று சுரேஷ் இழுத்தான்
“உண்மை தான். ஆனால், நம்மவர்களுக்கு இவ்வளவும் போதுமே என இருந்தது விடுவார்கள். திருப்பம், மாற்றம் இவற்றுக்கெல்லாம் மினக்கெடவே மாட்டார்கள்” சிரித்தான்.
சாதி சமய வாழ்க்கை முறைக்கு அமைய வாழ்றதை விட வேற வழியே இல்லையா?” சுரேஷ் விரக்தியுடன் கேட்டான்..“நமது இனப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று வெளிக்கிட்ட இளைஞர்களைப் பார்” அவன் சுட்டிக் காட்டினான். “கடைசியில் என்ன நடந்தது?” சாதாரணமாகக் கேட்ட பாபு. தொடர்ந்தான்.“அவர்களுடைய சுகதுக்கங்கள் பாதிக்கப்பட்டு விட்டன. என்றதை அறிந்திருந்தும்.கொஞ்ச காலங்கள் இழுத்தார்கள். 30-35 வயசு கடந்ததுதான் மிச்சம். மக்கள் அவர்களை கவனிக்கவே இல்லை. சிலர் குடியிலே வீழ்ந்து விட்டார்கள். அடுத்தத் தலைமுறை பக்குவப்படவில்லை. அது நல்லாவே அவர்களை நல்லாவே விமர்ச்சிக்கிறது” “குடிகாரர்கள், பெண்லோலர்கள், விடுதலைப் போராட்டத்தை விற்று விட்டார்கள் (விட்டு விட்டார்கள் என்று சொல்லத் தெரியவில்லை) பக்குவம் பத்தாது. இன்னும் கொஞ்சபேர் கல்யாணம் கட்டி…”பாபு தொடர, சுரேஷ் மறித்தான்.
“என்ன நீ கல்யாணம் கட்டுறதை பிழை என்கிறாயா?” “இல்லையப்பா. உன் நளினியை யாரும் கவர்ந்து கொண்டு ஒடமாட்டார்கள்” என்று அவன் சிரித்தான்.
“நான் என்ன சொல்ல வர்ரேன் என்றால்.பழைய வாழ்க்கையிலே சரணாகதி அடைந்து விட்டார்கள்’ என்பதைத் தான், அவர்களின் தோல்விக்குரிய சமூக நிலைமையை புரிந்து கொள்ளாமல் பிரயோக கணிதத்தில் ஒரு நிறுவலைப் போட்டுப் பார்ப்பது போல அரைகுறை மார்க்சிச அறிவுடன் பகிரங்கமாகவே கணக்குப் போட்டார்கள். பிழைச்சு விட்டது.இனி ஆராய நின்றார்களானால் 40-50 வயசிற்கு போய் நிற்க வேண்டிவரும் பயத்திலே.விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டவில்லை என்பது கணக்கிலே ‘நான் சரியாய் தான் இருந்தேன். இவன் ஏமாற்றி விட்டான். உவன் ஒருத்தனிலே பிழை, எல்லா சந்தர்ப்பங்களையும் குழப்பி இன நெருப்பை இங்காலையும் தூண்டி விட்டிருக்கிறான் சேச்சே எல்லாரும் கள்ளர்கள் இப்படியான பேச்சுகள். தமிழர்களைக் குறித்து தமிழர்களிற்கே மிச்சம் மட்டமான அபிப்பிராயங்கள்.சிறிய மகள் ‘அப்பா’ என்று வர “என்ன மேளே’ என்று கொஞ்சி விட்டு ‘எனக்கு இந்த பொறுப்புக்கள் போதும் ஆளை விடு” ஒடுகிறார்கள்.
“வாப்பாட (பாபுட) பேச்சிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனா நாங்களும் என்னம் செய்தாக வேண்டும்?” என்றான் வேலன். ஒருத்தருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை. பெல் அடிக்க வீட்ட வெளிக்கிட்டார்கள்.
வேலன், பின்னேரம் போல கோவில் வளவில் மைதானத்தோடு இருந்த கேணியடியில் வந்து நின்றான். பக்கத்திலே தான் விளையாட்டு மைதானம் இருந்தது.அரச உத்தியோகம் பார்க்கிற நடுத்தரமானவர் பலர் பேப்பரும் கையுமாக கதையளக்கிறவர்கள் – கட்டிலே இருந்தார்கள். சுருட்டுப்பிடித்துக் கொண்டு ஒரிரு கிழவர்கள், அவ்விடம் மக்கள் கூடுற கூட்டமாக விருந்தது.விளையாட்டில் ரசனையுடைய பெடியளில் கனகலிங்கம், ஜாரி பிரித்துக்கொண்டிருந்தான். சுரேஷ் “வேலனும் விளையாடக் கேட்கிறான்” என்றான்.”கூட்டிக்கொண்டு வாயன். இதைப் போய்க் கேட்கிறாய்” என்று பதிலளித்து விட்டு “அவன் உன்ர பக்கம் சுந்தரம் இங்கால.” என்று முடித்தான்.“டேய் வாடா” சுரேஷ் கையை அசைத்து கூப்பிட்டான். பலபேர் சார சண்டிக் கட்டுடன் நின்றார்கள். அவனும். சாரத்தைக் தூக்கிக் கட்டினான். புதிதாக தொடங்கியதால். ஒரு நிலை என்றில்லாமல்
.பந்தை துரத்தியும், நேரே வந்தால் அடி வாங்கியும், விளையாடினான். சுரேஷின் அண்ணன் குமார். “ஒல் ரவுண்டர்” என்று அவனை பகிடியாக விமர்சித்தான்.
வெட்டக் கூடிய ஆட்கள் இலகுவாக அவனை உச்சினார்கள். சமயங்களில் வென்று மிருந்தான் பொதுவாக இடைஞ்சல் என நினையாமல் அரவணைப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
மண்டாவால் குத்துற அளவுக்கு மோசமாகவிருந்த சிவத்தான் கூட நல்லத் தனமாக விளையாடினான். போற போது அவனைப் பார்த்து சிரித்து விட்டும் போனான். ‘தன் தவறை உணர்ந்து உள்ளுக்கு வருந்துகிறானோ?”
அடுத்த நாள் வகுப்பிற்கு மட்டம் அடித்து விட்டு மூவரும் முத்தனைப் பார்க்க கிளம்பினார்கள். வழுக்கியாற்றுப் பாலத்தைக் கடந்தார்கள். ஆற்று வாய்க்காலோடு அண்டிய நவாலி ரோட்டுக்கு புறமாகவிருந்த கொத்துக் கலட்டி வெளியில், மாரி காலம் என்றால் வெள்ளக்காடாகவிருக்கும். கோடை காலத்தில் சனங்கள் வீதியால் சிறிது தூரம் சென்ற நவாலிரோட்டில் ஏறாமல் மேடு திட்டமாக விருந்த அவ்வெளிக்கூடாக விழுந்தது போய் சிறுபாதை அமைத்திருந்தார்கள். சைக்கிள்காரர்கள் அதிலே பறப்பார்கள். நவாலிக்கு போக குறுக்குப் பாதை.
சர்க்கசில் ஒடுறது போல சைக்கிள்கள் ஒடியதால் ஒரு நிமிசத்திலே நவாலிக்கு வந்து விட்டார்கள். யாழ்ப்பாணம் போக இது சுத்து வழி. சுரேக்ஷும் அவனும் அவ்வழியை தேர்ந்ததால், பாபுவும் சம்மதித்து வந்தான் காலை நேரம் வெய்யில் கொடுமை கிடையாது. நேரே போயிருந்தால் காக்கை தீவிலே நின்றிருப்பார்கள். அது தீவு இல்லை. மீன் விற்கிற சிறு சந்தையையுடைய தோணித்துறை . ஆனால் , இதாலே போனால் காத்தும் கிடையாது, சந்தடி மிக்க பாதையாலே போறதால் ….மனநிறைவு இருக்கிறதடா என்பது அவர்களது வாதம். ‘பெட்டைகளை’ப் பார்க்கிறதுக்கு தான் அவர்கள் முக்கியமாக அதாலே வந்தது.
நவாலி, மானிப்பாய் ஆனைக்கோட்டை…. என ஒவ்வொன்றாக பார்த்து வந்தார்கள்.“வெள்ளை யூனிபார்மிலே அழகாய்யே இருக்கினம்” என்றான் சுரேஷ், “நளினியை விட்டிட்டியே” பாபு சிரித்தான். “சொல்ல மறந்திட்டேன் அவ சாமத்தியப்பட்டுட்டாளடா. 2 கிழமைக்கு வரமாட்டாள்” என்றான். சில பெட்டைகள் அவர்களை கடுகடுவென பார்த்தார்கள்.
“வில்லனாகவே நினைக்கினம்” என்றான் பாபு. “சீதனம், கெட்டுப் போனவள். வாழா வெட்டி போன்ற அடக்கு முறைகளால் நிறையவே பயப்படுகிறார்கள்; எச்சரிக்கையாய் இருக்கிறார்கள் அதன் விளைவு” என்றான் வேலன். “எப்பப் பெடியள் விழிக்கப் போகினமோ” அங்கலாய்த்தான் சுரேஷ்.”உவயல் வேண்டாமா?” பாபு கேட்டான். தொடர்ந்து “இவர்களிலும் மாற்றம் வராத வரையில் எதுவுமே நடக்கப் போவதில்லை” என்றான்.
9.00 மணிக்கு ஆஸ்பத்திரியை அடைந்தார்கள். 10 மணிக்குப் பிறகே நோயாளிகளை பார்க்க விடுவார்கள். அதுக்கு முதல் டொக்டரின் வருகை, நேர்ஸ்மாரின் ஊசிக் குத்தல்கள் போன்றன நடந்துவிடும். அங்கே வேலை செய்யிற அராலிப் பெடியனின் செல்வாக்கால் உடனேயே போனார்கள்.முத்தன் வயித்துக் கட்டுடன் பலவீனமாக படுத்துக் கிடந்தான். கண்ணப்பன் அவர்களை கண்கலங்க வரவேற்றார்.“எப்படியடா இருக்கு” வேலன் முத்தனின் நெற்றிலே கையை வைச்சுக் கேட்டான். “வலிக்கிறதா’ ஆதரவாக பாபு கேட்டான். சுரேஷ் நடைபாதைக் கடையில் வாங்கிய தோடம்பழங்களை சிறிய மேசையில் வைத்து விட்டு ஒன்றை எடுத்து வெட்டினான். கிளாசிலே சாறைப் பிழிந்து தண்ணிர் விட்டு ஜூஸ் ஆக்கினான். ஒன்றை கண்ணப்பனிடம் கொடுத்து ஒன்றை முத்தனிடம் நீட்டினான்.
“காய்ச்சல், வலியாகவும் இருக்கிறதடா” என்று பலவீனமாக மெல்லச் சொன்னான்.
ஜூஸையும் குடித்தான். சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். வெளி விராந்தைக்கு வந்து பாபுவிடம் “காயம் ஆழமானது இனி அவனால் மரம் ஏறமுடியாது” என்று டொக்டர் தெரிவித்ததை கண்ணப்பர் சொன்னார்.
“அவனை மேலே படிக்க விட்டிருக்கலாமே ஐயா” என்று பாபு அவரைக் கேட்டான்.
“வீட்டிலே கஸ்டம் தம்பி’ முணுமுணுத்தார். பார்க்க பாவமாகவிருந்தது. அவரிலே யும் பிழையில்லை சமூகநிலை அத்தகையது. மற்றயவைகளின் ஆதரவில்லாமல் அவர்களா லும் தலையெடுக்க முடியாது.முற்போக்குத் தனம் எங்குமே துளியும் இருக்கவில்லை பெடியள் மட்டுமே சளசளத்தார்கள். சளசளக்கிறார்கள்.
அது சிறிய சைகை, கணிசமான நம்.பிக்கையில்லை. உள்ளே வந்தார்கள். “எப்ப துண்டு வெட்டுவினம்” என்று பாபு கேட்டான்.”அநேகமாக நாளை என்றவையள்” கண்ணப்பர் பதிலளித்தார். “அப்பா நீங்க. வீட்ட போய் சாப்பிட்டுட்டு வாங்கோ” என்று முத்தன் மெதுவாக சொன்னான்.ஆஸ்பத்திரிகாரர் அவருக்கும் சாப்பாடு கொடுக்க மாட்டினம். நிலமை புரிய சுரேஷ் மிச்சமாக வைத்திருந்த 5 ரூபாய்யை எடுத்து “அண்ணை கடையிலே போய் சாப்பிடுங்கோ’ என்று கொடுத்தான். வாங்க அவர் மறுத்தார்.“டேய் முத்து வாங்கச் சொல்லடா” என்று பாபு சொன்னான். ‘வாங்கணை’ என்று சாடை காட்டினான். அவர் வெட்கத்துடன் வாங்கிக் கொண்டார்.ஆளுக்கு 5 ரூபாய் படி கொண்டு வந்தார்கள். அதிலே 10க்கு தோடம்பழம் 3 வாங்கினார்கள். மீதியை செலவுக்கு வைத்திருந்தார்கள். பெரிசாயில்லை. டீயும் பங்கீட்டு வடையும் வெட்டலாம்.ஆனால், அங்கத்தைய நிலமை அதைவிட மோசம்.
வேலன், அவர்களைப் பார்த்துச் சொன்னான் “போகேக்க ஆச்சிவீட்ட போய்யிட்டு போவோம்” என்றான்.அங்கேயிருக்கிற சின்னம்மா வாறவையளுக்கு நல்ல டீ போட்டு உபசரிக்காமல் அனுப்புவதில்லை. முத்தனையும் விசாரிக்கிற நிலமையில்லை. அவன் நட்புள்ளங்களால் மனநிறைவு பெற்றிருந்தான்.
கண்ணப்பர் வர விடைபெற்றார்கள்.
உச்சி வெயில், தலையைச் சுட்டது.ஆச்சி வீட்டில் குடித்த டீ. பசியை ஆற்றவில்லை.. அதே பாதையாலே வந்தார்கள். நிழலை நாடி போறது இப்ப தவிர்க்க முடியாதிருந்தது.பெட்டைகளை மருந்துக்கும் காணவில்லை. தூரத்தை நினைக்க பயமாக இருந்தது. ஆனால், அச்சூழலில் போவதும் சுகமாயுமிருந்தது. இரண்டொரு நெசவு சாலை பெட்டைகள் போனார்கள். கடைப்பரபரப்பு. சில கள்ளுக் கடைகளில் இருந்து எழுந்த களை கட்டிய பாட்டுக்கள் மிச்சம் பழசு. வயசு, சிறுசு என்ற மக்கள் சூழலில் போற போது துாரமும் தெரியவில்லை.
கொத்துக் கலட்டி வெளியை அடைந்தபோது, அந்த அருமையெல்லாம் போய்யே விட்டன. மண் சூடு. பாலையில் போறது போல முகத்தில் அடித்தது.
பாலத்தில் ஏறின பிறகே கடல் காற்று தந்த குளிர்மை – அக்காற்றை நல்லாய் சுவாசித்தார்கள்.
களைச்சு ப் போய் …. கிராமம் வந்து சேர்ந்தார்கள்.அவனிடமும் வீட்டுத் திறப்பு இருந்தது. அடுக்களையை கிளறினதில் பானும் கறியும் இருந்தன. முகத்தை அலம்பி விட்டு மூவரும் சாப்பிட்டார்கள். பின்னேரப் பள்ளிக்கூடம் முடியும் வரையில், அவனின் முன் அறையில், ‘செட்டிலே பாட்டையும் போட்டு விட்டு தூங்கி வழிந்தார்கள்.அம்மா வந்து அவனை தட்டி எழுப்பின பிறகே, இருவரும் முகத்தை கழுவி விட்டு வீட்ட வெளிக்கிட்டார்கள். வந்தபோது கொண்டுவந்த புத்தக கட்டையும் மறக்காமல் தூக்கிக் கொண்டு போனார்கள்.வீட்டுக்குப் புரியவைப்பது எங்குமே கஷ்டமாகத் தானிருக்கிறது.
அன்று மாலை 5.30 மணியோட விளையாட்டை நிறுத்திவிட்டார்கள். வழக்கமாக இருளும் வரை நடக்கும்.”இண்டைக்கு மீட்டிங்” என்றான் சுரேஷ். “வாறேன்ரா” என்று வேலன், சைக்கிளை எடுத்தான். “எங்கே போறே கொஞ்ச நேரம் இரடா” என்று மறித்தான். “மற்றவயள்?” என்று அவன் பரிதாபமாக இழுத்தான். “ஒன்றும் நினைக்க மாட்டார்கள்” தனக்குப் பக்கத்தில் இருந்திக் கொண்டான்.
பைல் கட்டுடன் கேணியடிக்கு லட்சுமணன் காரியதரிசி வந்தார்.
கூட கொமிட்டி அங்கத்தவர்களும் வந்தார்கள். நடுத்தர வயசுடைய இளைஞர்கள் சிலர்-விளையாட வருகிறவர்கள், சமயங்களில் வாழைக்குலை, பிஸ்கெற் என்று சொல்லி பெட்டுக்கு விளையாடுறவர்கள். விசேட நாட்களில் கல்யாணம் கட்டியவர்கள் என்று தனியாக பிரித்து போட்டிக்கு நிற்பார்கள்-‘பொன் கழகத்தின்’ உறுதிப்பாடு குலையாது கட்டிக் காப்பவர்கள்’ தூண்கள்.
முதலில் பழைய அறிக்கை வாசிக்கப்பட்டது. வெளிநாட்டு அங்கத்தவர்கள் அனுப்பிய பணத்திற்கு ‘பந்து, ஜெர்சி” வாங்கிய செலவை தெரிவித்தார். மைதானத்தின் ஒரமாக குறையில் நின்ற நாடக மேடையை கட்டி முடிக்க வேண்டும்’ என்று சொல்லி அது சம்பந்தமாக கதைத்தார்கள். பல பிரச்சினைகளை அலசி விட்டு கேள்விகள் கேட்கலாம் பகுதியில் வந்து நின்றார்கள். முத்தனின் பிரச்சினையை ஒரு அங்கத்தவர் ஞாபகப்படுத்தினார்.
“என்ன இருந்தாலும் மண்டாவாலே குத்தினது பிழை கன காலமாக எங்கட அயலிலே, சீவுறவர்களில் கண்ணப்பனும் ஒருத்தன். எனவே அவன்ர பக்கம் போய் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்” ஒருத்தர் துணிவாக தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார். கணிசமான பெடியள் செட் கரகோசம் எழுப்பியது. நடுத்தர இளைஞர் ஒருவர் “ஐயாவுக்கு ஒசியிலே கள்ளு குடுத்திருக்கிறான் அது தான் நன்றியிலே பேசுகிறார்” என்று கடுமையாக தாக்கினார்.“பிழையை ஒப்புக்கொள்றதில் என்ன தவறு” என்று பெடியள் செட் கேட்டது.‘அது பலவித பிரச்சினைகளை கிளப்பி விடும்’ என்பதால் கொமிட்டி “உது சாதிப்பிரச்சினை இல்லை. தனிப்பட்டவர்களிட பிரச்சனை பெண் பிரசையோட சேட்டை விடுறதை எந்த குடும்ப அங்கத்தவன் பார்த்துக் கொண்டிருப்பான்? பிழை எனவே யாரும் போய் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை” என்று சாதாரணமாக மறுத்து விட்டது. இருந்த நல்ல மனிதர்களும் அமைதியானார்கள்.
வேலனும்,சுரேஷும்’போக் கட்டிலே வந்து இருந்தார்கள். கார்காரர் ஒருத்தன் வேகத்தை குறைக்காமல் பறந்தான். விசரன், சந்தி சன நடமாட்டம். இதையெல்லாம் பார்க்கவேண்டாம். யாழ்ப்பான ரோடுகளில் நிறைய சரிவான போக்குகள் இருக்கின்றன. எந்த இடத்திலும், சைகைப் பலகைகள் கிடையாது. “மச்சான் ஒருநாள் எங்கேயும் கவிண்டு கிடப்பார்” என்றான் தொடர்ந்து சுரேஷ். “எவனுமே சுயநலமாகத் தான் இருக்கிறான்” என்றான். பேசாமல் சுரேஷை வேலன் பார்த்தான். மச்சானிட மனநிலை சரியில்லை (ஒரு குமுறல் வெடிக்கப்போகிறது?) கார்காரர் வாங்கிக் கட்டிக்கொண்டான். மெளனமாகவேயிருந்தான். எனவே அவன் கவனத்தை தளர்த்த ஏதோ பேசினான். “கொஞ்சநேரம் யோசித்துப்பார். கலவரக் காலங்களில் நம் அரசியல்வாதிகள், குண்டர்கள் (நம்மூர் சண்டியர் போன்றவர்கள்) நிகழ்த்திய கொலைகளை சித்திரவதைகளை, கற்பழிப்புக்களை சொல்லிச் சொல்லி.
எம்மக்கள் மனதிலேயும் இன நெருப்பையே எரிய விடுகிறார்கள். கலவரமே அறியாத சிறுவர்களுக்கு எல்லாம் உணர்ச்சி ஊட்டப்படுகிறது. அந்த நேரம் மனிதர்களாக உதவிய சிங்கள மக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் பல பெடியள்கள் திரும்பிவர அவர்கள் தான் காரணம். இருந்த போதும் அதை ஒதுக்கிவிட்டு இவர்களும் பிரச்சாரத்தையே பரப்புகிறார்கள்.
‘அரச பேரினவாதம் மேலோங்கி நிற்பதால், இங்கால பக்கம் இருக்கிற தவறுகள் தெரிவதில்லை; தெரிந்தாலும் யாருமே கதைப்பதில்லை. சாதிப்பிரச்சனைகளிலேயும், நாமும் பூசிமெழுகி ஒருவித நியாயவாதத்தையே வைக்கிறோம். இந்தப் பிரச்சனையும் அப்படிப்பட்ட தொன்றே!, பார்.
இனப்பிரச்சினையை தீர்க்க வெளிக்கிட்ட இளைஞர்கள் மத்தியிலும் சகோதரப் பாசம், குடும்பச்சூழ்நிலைகளே குழம்பிவிட்டன என்று அவன் நீண்ட பிரசங்கம் வைத்தான். அவன் சொன்னது அவனுக்கே புரியவில்லை போலயிருந்தது .சுரேக்ஷுக்கு எங்கே புரிந்திருக்கும்? “ஐயா கொஞ்சம் சிவப்பு மட்டை புத்தகங்களை படிச்சிட்டார்” என்று சுரேஷ் மெல்லச்சிரித்தான்.
“இப்படியான சாதி அவஸ்தைகளும் பேசவைக்குமடா” பதிலுக்கு மன தாங்கலுடன் சொன்னான். சுரேஷ் “பகிடியடா. வா முத்தனைப் பார்த்திட்டு வரலாம்” என்று எழும்பினான். சாதுவான இருட்டு.
எதிரான ஒரு சமூகம். அவன் சிறிது தயங்கினான். “இந்த நேரத்திலா?” “ஏன்?” ஆச்சரியமாக கேட்ட சுரேஷ் “எனக்கு என்னம் நடந்தா, நீ பொறுப்பாளி இல்லை. வேணுமென்றால் வா கட்டாயமில்லை” என்றான். திரும்ப முருங்கை மரத்திலே ஏறுது?
“அதில்லையடா உன் வீட்டிலே தேடமாட்டினமா?” என்று சமாளித்தான்.
‘தேடட்டும் வா போவோம்’ என்றான். அங்கால பக்கம்
‘குடிவெறியில் பிரச்சனைபடுற நேரம். எதுவும் நடக்கலாம் என்ற நிலமை. அதை அவனுக்கு விளங்கப்படுத்த முடியாது. இருவரும் முத்தனின் குடியிருப்பிற்கு வந்தார்கள். நகரத்தைவிட கிராமங்களே தெரியக்கூடிய சாதிக்குறிச்சிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் அடிமை குடிமையாக எல்லார் சாதிகளாலும் பாதிக்கப்பட்டவர்கள்.
பயன்படுத்தாத கலட்டி வளவுகளில், வெவ்வேறு ஆட்களின் பொறுப்பில் இருந்த கோவில் வளவுகளில் (சிதம்பரம், சிவன்கோவில்) அத்துமீறி குடியேறி, கத்திவெட்டு.முதலான உடற்காயங்களை பெற்று, அப்படியே இருந்தவர்களாகையால் அச்சமுகத்துடைய குடியிருப்பு மட்டும் எல்லாப் பகுதிகளிலும் திட்டு திட்டாக பரந்தும் கிடந்தன. முத்தனின், சேர்ச்சடி ஒரம் இருந்த பகுதி.
“ஆ” சுரேஷ் தம்பியா வா வா” என ஒழுங்கையிலே கண்டு விட்ட கண்ணப்பன் வரவேற்றார். ‘அப்பாடா’ மனநிம்மதியுடன் வேலன் அவர்களோடு நடந்தான் “முத்து இப்ப சுகமா?” என விசாரித்தான் சுரேஷ், குடிவெறியில் வந்த சின்னராசு “அங்கால ஆளா”.என்று குமுறிக் குறுக்கிட்டான். கண்ணப்பன் அடக்கினார்.
“சும்மா கிட இவன் தான் முத்தனைக் காப்பாற்றினவன்” உடனே பிளேட்டை மாத்தி அவன் கையை பிடித்துக்கொண்டு “அங்கால போய்ச் சொல்லு தம்பி’ என்று ஏதேதோ அலட்டினான்.
‘பாதிப்புகளை அறிவேன்’ என்பது போல ஆதரவாக அவர் கையை சுரேஷும் அமுக்கினான். வேடிக்கை பார்த்துக்கொண்டு வேலன் வந்தான்.
வீடுவர “சரி விடு சின்னராசு வீடு போய்ச் சேர்றா” என்று கண்ணப்பன் அனுப்பிவிட்டு “பரவாயில்லை. உள்ளே வாங்க தம்பி” என அழைத்துச்சென்றான். முன் விராந்தையிலிருந்து தேத்தண்ணி குடித்துக்கொண்டிருந்த முத்தன் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தான் “டேய் நீங்களா” என்றவன், அப்பனைப் பார்த்துவிட்டு நேரிடையாகவே சொன்னான்.
“டேய். எங்கடயாட்கள் நிதானமாய்யிருக்கிறயவயள் இல்லையடா. இந்த நேரத்திலே வாறது ஆபத்து”உங்கடயாட்களை நம்புறேன்ரா’ என்றான் சுரேஷ் திடமாக.
“என்ன நடந்தது?” முத்தன், வேலனைப் பார்த்து கேட்டான்.
“பொன்னிட கூட்டம் நடந்தது கொஞ்சபேர் கண்ணப்பனுக்காக போய் பொது மன்னிப்பு கேட்கணும் என்றார்கள். கொமிட்டி மறுத்துவிட்டது. அதுதான்”. என்று அவன் விளக்கினான்.கண்ணப்பனுக்கு நெஞ்சு பெருமிதமாகவிருந்தது எனக்காகவும் கதைக்க ஆட்கள் இருக்கிறார்கள்’ “தம்பி கொமிட்டியிலே பிழையில்லை. தேசவழமைச் சட்டத்தை மீறமுடியவில்லை. அதனாலே அப்படி கதைச்சிருக்கு” என்றார்.
“அப்ப, சட்டத்தை மாற்றலாம் தானே” என்று சுரேஷ் கேட்டான்.
“அதுக்கு எனக்காக கதைத்தவன் கூட ஒப்புதல் கொடுக்க மாட்டான் ” என்று சிரித்தார். தொடர்ந்து “அதுக்கு இந்த சாதியமைப்புகளை விட பலமான ஒரு அமைப்பு வரவேண்டும். எங்கட பகுதியை ஆள்கிற அரசுபோல தமிழீழமாக கூடவிருக்கலாம்” விளங்கப்படுத்தினார்.
தமிழீழம் சரியோ? பிழையோ? அது எத்தனை தூரம் எல்லாருடைய மனதிலேயும் வியாபித்திருக்கிறது என்பது அவனுக்கு புரிந்தது.
கமலமக்காட சிறுசுகளில் ஒன்று “சுரேஷ் அண்ணா” என்று வந்து விளையாடியது அவனிடம் மற்றது தீபனோ ரவியோ (பெயர் ஞாபகம் வரவில்லை) வர தூக்கி தன் மடியில் வைத்துக்கொலண்டு கதை குடுத்தான். தாய்க்காரி அவர்களுக்க தேத்தண்ணி கொண்டு வந்து வைத்தார்.
“இனி என்னடா ஐடியா?” என்று சுரேஷ் கேட்டான். “ஏதாவது கடை வைக்கலாம்” என்று இழுத்தான்.
“சைக்கிள் கடையை போடு” என்று யோசனை சொன்னான் சுரேஷ் தொடர்ந்து “ஆரம்பச்செலவுகள் குறைவு. எம்மாலும் உதவி செய்யக்கூடியது” என்றான்.
‘எனக்கு இந்த யோசனை வரவில்லையே’ என்று வேலன் நினைத்தான். இந்த விசயங்கள் சுரேஷுக்கு கொஞ்சம் அத்துப்படி. “ஆனால் பணப்பிரச்சினை” என்று தொடர்ந்து இழுத்தான் முத்தன்.
“கவலைப்படாதே நாங்க இருக்கிறோம்” என்றான் சுரேஷ், “இடம் எங்கையாவது பார்த்திருக்கிறாயா?” கேட்டான். “ரோட்டோரமாகவிருக்கிற சின்னையன்ர (சித்தப்பா) வீட்டு வளவிலே தாரளமாக போடலாம் என்றிருக்கிறார்” என்று பதிலளித்தான் முத்து.“டேய், நீ 100 ரூபா கடனாக மாறி முயற்சியிலே இறங்கு வாற திங்கள்கிழமை (4நாள் இருந்தன) 50 ரூபா தாரேன் அடுத்ததில் 50 தாரேன்” என்றான். முத்தனின் கண்கள் கலங்கிவிட்டன.எப்படி உழைக்கப்போறான்? வேலனுக்கும் புரியவில்லை. “நான் பூட்ஸ் ஜேர்சி வாங்க சனி ஞாயிறிலே மேசன் வேலைக்கு போய்த்தான் சமாளிச்சனான். நீ நம்பலாம்” என்று விளக்கினான். வேலனுக்கும் ரோசம் பிறந்தது “டேய் நீ போறபோது என்னையும் கூட்டிப்போ. இரண்டுபேர் வேலை செய்தால் கெதியிலே கடை போடலாம்” என்றான்.
“சரி நாகரத்தினம் அண்ணையிடம் சொல்லி வைக்கிறேன்” என்றான் சுரேஷ்.
இருவருடனும் ரோட்டு வரை வந்து கண்ணப்பன் வழியனுப்பிவைத்தார்.
அந்த நண்பர்களின் உள்ளம் கனநேரமாக அக்குடும்பத்தை ஆகர்சித்திருந்தது.
அடுத்தநாள் சுரேஷ் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. இரண்டு நாளுக்கு முதல் சொல்லியிருந்தது எப்படி அவனுக்கு மறந்துபோயிருந்தது?
ஏன் ஞாபகம் வரவில்லை? மூளையை போட்டு உடைத்தான்.
இடைவேளையில் அவனுடைய பக்கத்து வீட்டுப் பெடியன் நந்தனைத் தேடி ஐந்தாம் வகுப்பிற்குப் போனான். ஒரு மாதிரி தண்ணி குடித்துக்கொண்டிருந்த அவனை கண்ட பிறகு நிம்மதியாகவிருந்தது.
“நந்து, சுரேஷ் அண்ணா எங்கே போயிட்டார்” என்று அவன் முறையிலே கேட்டான்.
“என்னண்ணா உங்களுக்குத்தெரியாதா வசந்தியக்காட கல்யாணம் நாளைக்கல்லோ, உதவி செய்யிறத்துக்கு போயிருக்கிறார்” என்றான்.
மளமளவென ஞாபகம் வந்தது. வட்டுக்கோட்டையிலிருக்கிற பெரியம்மாட மகள். சுரேசிற்கு ஒன்றைவிட்ட அக்காவுக்கு சனிக்கிழமை கல்யாணம். அந்த வீட்டோட அவனுக்கு ஒட்டுறவு கூட. வேலன் கூட பலதடவை சுரேஷோட போயிருக்கிறான். அவனும் மறந்திட்டான். ‘சனிக்கிழமை வேலைக்குப்போய் வேற திங்கள் கிழமை காசு தாரேனென்றிருக்கிறான்’ பெரிய பிரச்சனைகள் சிறிய ஞாபகங்களை அள்ளிக்கொண்டு போய்விடுகின்றன.
அடுத்த கிழமையிலிருந்தே.முத்தன் கடைக்கான இடத்தை துப்பரவாக்கிறது’ என்று சொல்லியிருந்ததால் அவன் பின்னேரம் கோவில் வளவு பக்கம் வந்தான். ‘வொலிபோல் சீசன் தொடங்கியிருந்தது. பவித்திரா கடை ஒழுங்கைக்க அண்மையில் இருந்த வளவொன்றில் ‘வொலிபோல் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில் கால்பந்துக்கு அடுத்ததாக பிடித்த விளையாட்டு. சைக்கிளை நிறுத்திவிட்டு ஒழுங்கை பக்கம் நின்றவர்களோடு நின்று பார்த்தான்.
விதிமுறைகள் தெரியாது.
“லவ் ஒல்’ என்று அடிப்பதும் “லவ் லவ். என்று எண்ணப்படுவதும் “ஈச்’ என்பதுமாக விளையாட்டு ரசனையாக நடந்துகொண்டிருந்தது.
வாழைக்குலைக்காக நேர்ந்ததால் விளையாட்டு ‘களை’ கட்டியிருந்தது.பழத்தை வென்ற அணி எல்லார்க்கும் பகிர்ந்து கொடுத்தது. அவனுக்கும் ஒரு வாழைப்பழம் கிடைத்தது. இருள. வீட்ட வருகிற போது நிலவு பெரிய பந்து போல தெரிந்தது. வேலன், அதை கால்பந்தாக விளையாடினால் எப்படியிருக்கும்? என்று நினைத்தான். அடுத்த நாள், சனிக்கிழமை. ஆச்சிவீட்ட போய் வாரது போல சில அலுவல்களில் காலை கழிந்தது. சின்னம்மா கடனாக மாறி தந்த பணத்திலே அண்ணர் வெளிநாடு போயிருந்தார். கொஞ்சம் அனுப்பியிருந்தான்.
அதை கொடுப்பதற்காக போனான்.
ஆச்சியோட கதைப்பதில் வேறு அவனுக்கு ரசனையிருந்தது. சமுதாயச் சீரழிவுகளால் ஒவ்வொருத்தரும் பந்தாடப்பட்டே வருகிறார்கள். அப்படியான ஒருவர். அவர் வாழ்க்கையும் ஒரு காவியம் தான். பழசுகளின் கதைகளையும் கேட்கலாம்.அதை திருப்பிச் சொல்ல முயற்சிற்கிற போதே,ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பது தெரிய வருகிறது. நீங்களும் உங்கள் தாத்தா,பாட்டியிட கதைகளைக் கேட்டுப் பாருங்கள்.வெளிய சொல்ல முடியாதளவிற்கும் மேலே சுவாரசியங்கள் இருக்கும். அம்மாட தங்கச்சிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டவர்.ஆச்சியை “அச்சாவு இப்பவும் கூட இரவிலே ,எழும்பி இருளை வெறித்துப் பார்க்க வைக்கிறது “என்றார். அவனையும் அந்தச் சோகம் பற்றி இருந்தது.அந்தக்கால ஆட்களை பழி வாங்க வேண்டும் என்ற கோபம் இருக்கிறது.ஆனால் முடியாது. அவன் இருப்பது எதிர் காலத்தில்.அவர்கள் எல்லாம் இறந்து போய் புல்லும் முளைத்து விட்டிருக்கின்றன. ஆச்சி தான் நீண்ட காலமாக இருக்கிறவர்.
பின்னேரம் வந்தபோது, சுரேஷ் விளையாடிக் கொண்டிருந்தான். ஒருவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தான்.
“கல்யாணம் நல்லாய் நடந்ததா” என்று விசாரித்தான். “நடந்தது” சுரத்தில்லாமல் சொன்னான். “மாப்பிள்ளை “பாங்கிலே’ வேலை. ஏன் சலிக்கிறே?” என்று ஆச்சரியத்துடன் அவன் கேட்டான்.
மெளனமாகவிருந்தான். “சீதனம் கூடிப்போச்சுதா?” ஆதரவாகக் கேட்டான்.
“ஊர் நியாயம் என்று ஒன்றிருக்கிறதே. இரண்டு லட்சம் காசாகவும் ஒரு லட்சம் வீடு வளவாகவும் கொடுத்தபிறகும் கணேசும் விமலும் ஆளுக்காள் 10,000 படி பிற்காலத்தில் கொடுக்கவேண்டும் என்றும் உறுதி எழுதி வாங்கிவிட்டினம். உனக்குத் தெரியும் தானே நந்தனைப் போல.. சின்னப்பெடியள்கள்.
தவிர இன்னம் 2 பெட்டையள் வேற இருக்கினம்” வெறுப்புடனும் கோபத்துடனும் கொட்டினான்.
“வெளியப்போனால் – இது சுண்டைக்காய்க்காசு. கவலைப்படத் தேவையில்லை” என்று ஆதரவாக பதிலளித்தான்.
“அவங்களுக்கு சுய சிந்தனைகள் ஆசைகள் இருக்கக்கூடாது. பலிக்கடாவாக வேண்டிய நிலை. அவர்கள் வயசுக்கு வருகிறபோது மிக மோசமாக சீதனம் பேசப்போகிறார்கள். காதல்,கத்தரிக்காய் என்று தம்பிமார் ஒடமுடியாது. மனிதனாக வாழ எல்லா உரிமைகளும் இருந்தும் தேசவழமையான சிலந்திச் சிக்கலுக்காக வாழ நிர்ப்பந்திப்பது எவ்வளவு கேவலமானது” குமுறினான் சுரேஷ்.
இவனுக்கு ஏதாவது தலையில் கழண்டுவிட்டதா’ என்று பார்த்தான். சுகமாய்தானே இருக்கிறான்.
“உனக்கு தலையிடிக்குது என்றால் விடு. கதைக்கேலை” என்றான்.
“அப்படியொன்றுமில்லை. இந்த விசயத்தை நீயும் நானும் கதைத்து பிரயோசனமில்லை இளைய தலைமுறை முழுதுமே கதைக்கவேண்டும் இனப்பிரச்சினையால் வேலை வாய்ப்பில்லை. வெளிநாடு போக காசை எப்படி பெறுவார்களாம்? அதுதான் இப்படியெல்லாம் நடக்கிறது. பெண்களிடம் கேட்டுப்பார். அவர்களும் எதிர்ப்பதில்லை, பச்சைக் கொடி தான் ” என்றான். சுரேஷ் அவன் கருத்தை ஏற்கவில்லை என முக பாவம் காட்டியது.
வொலிபோல் மைதானத்தில் ஆட்கள் ஒவ்வொருவராக கழன்றுபோனார்கள். “நீயும் வந்து …பழகு” என்று கூட்டிச் சென்றான் சுரேஷ்.
சேவிஸ், கீழ்க்கை, மேல்க்கை எடுப்புக்கள். கையை பொத்துற அடிக்கிற விதம். எல்லாம் பழக்கினான்.
எதிர்பகுதியில் போய் நின்ற அவனிடம் பந்தை அனுப்பி அடிக்கவும் வைத்தான். நின்று விளையாடிக்கொண்டிருந்தவர்களும் கழர அவர்கள் மட்டுமே நின்றார்கள்.
“நீ கையைப்பொத்துற விதம் பிழை” என திருத்தினான்.
ஒருமாதிரி விளையாடக் கற்றுவிட்டான்.மேலும் இருள.நிறுத்தவேண்டியதாயிற்று.
“நாளைக்கு வேலைக்குப் போறியா?” என்று கேட்டான் வேலன்.
“ஏழரை மணிக்கு என்ரை வீட்டை வா” என்றான் சுரேஷ்.
இரண்டுபேர் போவதால் சனிக்கிழமை போகாதது பாதிக்கப் போவதில்லை என்று பட்டது.
மேசன் கரண்டி, மட்டக்கோல், நீர்க்குமிழி, மட்டம் தூக்குக் குண்டு போன்ற தொழிற்சாமான்களை உரப்பையால் சுற்றி பின் கரியரில் கட்டிய, நாகரத்தினத்தோடு ஒரு பட்டாளம் விரைந்து கொண்டிருந்தது. பின்னாலே அவனும் சுரேஷம் ஒரு சைக்கிளில் வந்தார்கள். இளங்காலை நேரம் இதமாகவிருந்தது. கடற்கரையோடு கிடந்த அந்த கல்லுண்டாய் ரோட்டு ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளை கடக்க ஒவ்வொருச் சூழலாகவிருந்தது. நவாலி ரோட்டை கடக்கும் வரையில் கடல்நீரின் காய்ந்த.மணம்.மாட்டொழுங்கையை அண்மிக்க வயல்வெளியில் தவழ்ந்து வந்த தூய்மையான காற்று. எதிர்த்தாற்போல் இருந்த தென்னைமரங்களுடன் கூடிய குடியிருப்பிலிருந்து தவழ்ந்த சீதளத்தென்றல், கடலோடு அண்டிய ரோட்டுப்பகுதியில் (காக்கை தீவடியில்) மீன் மணம், கடக்க.நாவாந்துறை குப்பை மேடுகளின் அழுகிய மணம், அதை சமப்படுத்தி தகரம், சாக்குகள் அடைப்புக்கள் செய்து வேய்ந்த உயரம் குறைய கட்டிய சிறிய குடிசைகளில் 4-5 குடும்பங்கள் வாழ்கிறார்கள். அந்த காலையிலேயும் ராத்திரி கடைசியாக கொட்டிய குப்பைகளை அவர்களின் பிள்ளைகள் கிளறிக் கொண்டிருந்தார்கள்.
ஆண்டவன் படைப்பில் எத்தனை மனிதர்கள்? சிலர்க்கு அளவுக்கு மிஞ்சிய பணம். பலருக்கு சமூகவியாதிகள். ஏழைகளுக்கு பசியோடு கூடிய சுகாதாரமற்ற வாழ்க்கை. விபச்சாரம் சீரழிவுகள் எல்லாம் பசிக்கு முன்னால் தூசாகி போய்விட்ட நிலையில் இந்த மக்கள். ஆனால்.மற்றவர்களிடமில்லாத சந்தோசம் அங்கே நிலவுமோ?
இப்படி நினைத்துக்கொண்டு வந்தான்.
தமிழ் இனவாதத்தை தூண்ட சிங்கள ஆமி ‘பெண்களை’ கெடுத்ததையே சொல்லித் திரிகிற பெடியளும், அரசியல்வாதிகளும் இவர்களைப்பற்றி கவலைப்படுவார்களா? இன்னமும் கூட, எங்க தரப்பிலே இருக்கிற காணி சாதிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வை நாம் கூட முன் வைக்கவில்லையே. எங்களைப்போல பலவீன முடையவர்கள் தானே அரசுவாதிகளும்.இனப்பிரச்சனைக்கான தீர்வை அவர்கள் எங்கே வைக்கப் போகிறார்கள்?
ஒட்டு மட வீதியாலே போய் நாவலர் பெருமான் சந்தியை கடந்து சிறிய தொலைவிலிருந்த ஒழுங்கையால் உள்ளுக்கை போனார்கள்.
5-வது வீ ட்டில், பின் விராந்தையோடு கூடியதாக மேலதிகமாக ஒரு அறை கட்டலும், சற்றுத் தொலைவில் ஒரு தண்ணிர் தாங்கி கட்டுதலுமே வேலைகள்.
இவ்வளவு கடக எண்ணிக்கையில் மணல், சீமேந்து போட்டு சாந்து குழைப்பதும் சமயத்தில் சல்லி போட்டு கொங்கிறீற் கலவை குழைப்பதும் காய்ந்த கற்களை (கொங்கிறீற் கல்) தூக்கி கொடுப்பதுமான தொட்டாட்டு வேலைகள், அன்று கல் அறுவையிருக்கவில்லை.வேலையில் நேரம் பறந்தது. 10.00 மணிக்கு “டீ’ வந்தது. களையாகவிருந்ததால் ருசியாகவிருந்தது. மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆளுக்கு 5 ரூபா கிடைத்தது. கொஞ்ச தூரம் தள்ளியிருந்த கடையிலே போய் மலிவுச் சாப்பாடுகளை (இடியாப்பம் சொதி சம்பல்) சாப்பிட்டார்கள்.
பிறகு, 3.00 மணி போல “டீ திரும்பவும் வந்தது. ஒரு 15 நிமிட ஒய்வு. 4 மணியிற்கு வேலையை நிறுத்தினார்கள். முகம்,கை கால் கழுவி வெளிக்கிட்ட போது அசதியாகவிருந்தது.தினக்கூலி முறைப்படி வேலை எடுத்ததால் நாகரத்தினம் அன்றைய கணக்கை எழுதிக்கொடுத்துவிட்டு வந்தார்.
அவர்களுடைய கூலி 50 ரூபா. அவர்க்கு 15 ரூபா போக 35 கையில் கிடைக்கும். ஒவ்வொருவரும் அவ்வாறே பெற்றார்கள். எங்குமே இருக்கிற பொதுவான தொழில்முறை.உபகரண வாடகை பல்வேறு செலவுகளுக்கு அந்த 15/= எடுக்கப்பட்டது. சமயங்களில் அப்பணம் உபரியாக அமையும்.
பணக்காரன் மேலும் பணக்காரனாவான் என்பது ஐதிகம். சிறு பணக்காரன் கூடத்தான்.
இரவு, சுரேஷ் ஜே.பி.மாமா வீட்டபோய், டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான். வேலையால் களைத்த பிறகு,குடி வகைகளை நாடுவது போல,இளைஞர்களிற்கும் வேலை செய்தால்,ஒரு ‘களிப்பு நிலை தேவையாய்யிருக்கிறது.தொலைக் காட்சியில் திரைப்படம் பார்த்தல்,செய்திகள் கேட்டல்,திரைப்பாடல்கள் கேட்டல்…எல்லாம் வேண்டியிருக்கின்றன.முந்தி,வானொலிப் பெட்டிகள் தான் இருந்தன.பெடியள்,பெட்டைகள் தொட்டு,சிறிசு,பழசுகள் எல்லாம் கூட “தணியாத தாகம்”நாடகத்தைக் கேட்க தவறியதில்லை.சாதாரணக் குடும்பத்தில் நிகழ்கிற பிரச்சனைகளைப் பற்றிய கதை.அதைக் கேட்பதில் ஒரு ஆறுதல்.தொலைக் காட்சிப் பெட்டிகளும் எல்லாரிடமும் இருக்கவில்லை.ஜெ.பி.மாமா வீட்டிலே இருந்தது.சுரேஸ்…அங்கே மொய்க்கிற பெடியள் கூட்டத்தில் ஒருத்தன்.கால்பந்துப் பயிற்சி என்றால்…அவ்வளவாக வர பிரியப் பட மாட்டான்.இப்படி வேலை,கீலை என்றால் மனமும் கலைத்துக் கிடக்கும்.ஒரு எண்டடெயின்மெண்ட் வேண்டும்.சினிமாவிலே…ஏன் குத்துப் பாட்டுக்கள் சேர்க்கிறார்கள் என்பது புரியிறமாதிரி தான் இருக்கின்றது .
வேலன் வீட்டிலே,அயலிலே தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கவில்லை.வானொலிப் பெட்டிகள் இருந்தன.அதில் அவன் பிலிப்பைன்ஸ் தமிழ் வானொலியான வெறித்தாஸ் அடிக்கடிக் கேட்பான்.பி.பி.சி தமிழ் ஒலிப்பரப்பையும் கேட்பவன்.அதோடு சரி.
அப்ப, எல்லாம் அவன் திரைப்பாடல்கள் கேட்பதில் ரசனையுடைபவனாக இருக்கவில்லை.பிறகு,தொழிற்நுட்பக் கல்லூரியில் படிக்கிற போது தான்,அவனோட கூடப் படித்த குலேந்திரன் (அவனுடைய அண்ணன் ட்ராஸ்மென்னாக இருந்தான்.பொக்கற் மணி கொடுக்கிறவன்)அதிலே அவன் புதிதாக வருகிற திரைப்பாடல்களைக் கொண்ட டேப் கசட்டுக்களை விக்டர் ரெக்கோடிங் கடையிலே வாங்கி விடுவான்.பதிந்த ஒரு கசட்டின் விலை இருபது ரூபா.வேலனைப் பொறுத்த வரையில் ஏழை.தவிர, அதிலே பிரியமும் இருக்கவில்லை.இவன் புதிய கசட்டைக் கேட்டு விட்டு அவனிட்ட “கொண்டுப் போய்க் கேள்”எனக் கொடுப்பான்.அப்படிக் கேட்டு, கேட்டு …இவன் ஜேசுதாஸ் ரசிகனாகி விட்டான்.இப்ப இவன் எந்த கசட்டையும் கேட்பான்.அதிலே, சில நல்ல பாட்டுகள் இருக்கின்றன் எனத் தெரிந்தன.
அடுத்த நாள் வகுப்பில், நளினி சிறிது சோர்வுடன் வீற்றிருந்தாள். முகத்தில் களை கூடியிருந்தது. நண்பர்களுக்கிடையில் சலசலப்பு நிலவியது. “உடற் பயிற்சி பாட நேரத்திலே, அவளோட எப்படியும் கதைத்துவிடு” என்று பாபு சுரேஷிடம் சொன்னான்.முத்தனை நம்பினாலும் அவளும் சம்பந்தப்பட்டவள். அவளுடனும் கதைக்காத வரையில் வதந்திகள் தெளிவுறமாட்டாது. ஒரு பெடியனுக்கு பெட்டையிலே ஆசை ஏற்படுவது இயற்கை. சாதியும் சமயமும் குற்றப்பத்திரிகை வாசித்தாலும் கூட அதை தவறென்று சொல்ல முடியாது. உடற் பயிற்சி 5வது பாடமிருந்தது; 4 வது பாட நேரத்திலே எதை? எப்படி? கேட்கிறது என்று மூளையை உடைத்துக் கொண்டிருந்ததால் சுரேஷ் விஞ்ஞான டீச்சர் கேட்ட கேள்விக்கு சரிவர பதில் சொல்லத் தவறினான். ஏச்சு வாங்கிக் கொண்டான்.வெளியில் நிறுத்தி விட்டதால் நோட்ஸ் எழுத முடியாமல் போய் விட்டது.நாளைக்கு பரீட்சை வைக்கப்போவதாக வேறு பயமுறுத்திவிட்டுப் போனார்.
உடற் பயிற்சி பாடத்திற்கு வகுப்பு கலைந்து போயிருந்தது. ஆண்கள் பிரிவு கிரிக்கெட்டில் ஈடுபட்டது. வேலனும், பாபுவும் சுரேஷிலே பொறுப்பை விட்டு விட்டார்கள்.
பெண்கள் பிரிவு பெரிய பாலை நிழலிலே கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருந்தது. நளினி வேர்ப்பகுதியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் மனதில் புதிதாக என்னென்ன ஆசைகளோ?, பயங்களோ? சுரேஷ், அவளை நாடிப்போனான்.
“நளினி உங்கட விஞ்ஞானக் கொப்பியை ஒருக்கால் தாறிங்களா எழுதிப்போட்டு தாரேன்” என்று கேட்டான்.
“தாரேன்” என்று எழும்பி வந்தாள்.
வகுப்பறையில் இவர்கள் மட்டுமே இருந்தார்கள். கட்டிட நீள இருபக்கத்திற்கும் ‘சீலிங் தடுப்புக்கள் வைத்து வகுப்புக்கள் பிரிக்கப்பட்டிருந்தன. அக்கட்டிடம் நாற்சதுர அமைப்பில் அமைந்திருந்தது. நாற்சதுரத்தின் ஒருபக்கம் யன்னல்களைக் கொண்டதாக அமைக்கப்பட்ட அறைகளாகவிருந்தன.
ஒபிஸ், விஞ்ஞான ஆய்வுக்கூடம். சிறிய லைபிரரி .
மற்ற பகுதிகள் முழுதும் அரைச்சுவருடன் திறந்த அமைப்பு. கிரவுண்ட்ஸ் பக்கமாகவே அவர்களுடைய வகுப்பு இருந்தது. நடுப்பகுதியில் வாழை, செவ்வந்தி, கனகாம்பரம் போன்ற மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மூன்று தண்ணிர் பைப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. சிறிது தள்ளி நீளமண்டபமாக வேறொரு கட்டிடத்தில் 5ம் வகுப்பு வரையில் இருந்தது.
கொப்பியை கொடுத்துவிட்டு சுவர்க்கட்டிலே கையை ஊன்றி வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.கொப்பியை பிரித்தான். என்ன அழகான முத்தெழுத்துக்கள் தன்னுடைய பிரிஸ்கிரிப்சன் எழுத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தான். அவளும் அழகாய்த்தானிருந்தாள். பெருமூச்சு வந்தது. “நளினி உங்ககிட்ட ஒன்று கேட்பேன் கோவிக்க மாட்டீங்களே” என்று கேட்டான். ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தாள். “முத்துவை தெரியும் தானே” என்று கேட்டான் ‘ம்’ என்றாள்.
நேரிடையாக விசயத்திற்கு வந்தான். “அவன் உங்கட கையை பிடித்து இழுத்தவனா?”
‘இல்லை’ என்றாள்.
உங்கப்பா அப்படித்தான் சொன்னவர் வெறுப்புடன் சிரித்தான்.
அங்குள்ள பெண்களுக்கு ‘கூட்டம்’ எதுவும் தெரியாது. படிப்பை நிறுத்தினால் நெசவு வேலைக்குப் போய் வருவார்கள் அல்லது மகளிர் சங்கம் ஒன்றை நிறுவ போராடி வரும் வனஜா அக்காவிடம் தையல், கைவேலை பழக போவார்கள்.
கட்டினால் சமையல், குழந்தை குட்டி என்று அப்படியே அமுங்கி கிழவியாகி உதிர்ந்து விடுவார்கள்.
கணிசமானவர்கள் பள்ளிக்கூடம் போய்வந்தாலும் (O/Lஐ) சாதாரண பிரிவை பாஸ் பண்ணியவர்கள் ஒருசத வீதமாகவே இருப்பார்கள். வேலை பார்த்திருந்தால் வெளியுலகம் சிறிதாவது புரிந்திருக்கும். ஆண் மனோபாவமும் மோசம். வேலை பார்த்த சிலரையும் முடிச்ச பிறகு வீட்டிலே இரு’ என்று நிபந்தனைகள் போட்டிருக்கிறார்கள் அவன் வகுப்பு சுகுணனின் தாய் ரீச்சராயிருந்தவர்,வீட்டிலேயிருக்கிறார்.
“என்னம் கூடாம பேசினவனா?”தொடர்ந்து கேட்டான்.
“இல்லையே” என்றாள்
“தண்ணி கேட்டவனா?” சுரேஷ்.
“ஒம்” என்று தலையை ஆட்டினாள்.
“என்னை பேர் சொல்லி கூப்பிட்டது தான் அப்பனுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவனும் அவசரப்பட்டு கத்தியை எடுத்ததாலே குத்து விழுந்து விட்டது” என்றாள்.
பெண்களுக்கு சம உரிமை கொடுத்திருந்தால் உப்படியான பிரச்சனைகள் இருந்திராது என்று பட்டது. தமிழ்ச் சினிமாவிலேயே உரிமையை எல்லாம் கொடுக்க பஞ்சிப்படுகிறார்கள். −
“ரொம்ப நன்றி நளினி. இப்ப, இவ்விசயம் பழங்கஞ்சி.
மேற்கொண்டு பிரச்சனைப்படமாட்டேன்” ” என்று உறுதி கூறினான்.
வீட்ட வாறபோது நண்பர்களிடம் “முத்தன்ர பேச்சு உண்மை தான்”என்றான்.
வொலிபோல் ரசனையுடன் நடந்து கொண்டிருந்தது. கனகன் அவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்தான். பக்கத்தில் நின்ற சுரேஷ் “பயப்படாமல் விளையாடு” என்று உற்சாகப்படுத்தினான்.
அங்கால சேவிஸ்க்கு போன போது “இண்டைக்கு கூட்டம் இருக்கிறது” என்றான்.
5.30 மணிக்கெல்லாம் நிறுத்திவிட்டார்கள். அவ்வளவில் கூடினார்கள். கொமிட்டியும் வந்து சேர கூட்டம் தொடங்கியது. “குளங்களை சிரமதான முறையில் செய்யிறதுக்கு தேனீர் செலவுகளை உப அரசாங்க பிரிவு தருகிறது. அப்பணத்தை வைத்து மேடையை கட்டி முடிக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். என்ன சொல்கிறீர்கள்’ என்று கேட்டார்கள்.
அவ்விடத்து பெடியன் உழைக்கிறதுக்கு பின்நிற்பவர்கள் இல்லையே! ஆதரவு தெரிவித்தார்கள்.கடைசியாக ‘கேட்போர்’ நேரத்தில் ஒருத்தன் வேலனின் அங்கத்துவம் பற்றிக் கேட்டான்
“அவனிட்டயும் சந்தா வாங்குங்களன்” அவனுக்கும் சரி என்றே பட்டது.
கொமிட்டிக்கு சட்டவிதிகள் முரணாகவிருந்தன. இதுவரையில் மற்றவயளில் இருந்து யாரும் வந்து …சேர்ந்து விளையாடியதில்லை. கொஞ்சநேரம் தமக்குள் சலசலத்தார்கள். பிறகு காரியதரிசி”வெளியூர் அங்கத்தவர் போல ஏற்கிறோம்” என்று பதிலளித்தார்.
“அவனுக்கு வோட்டுரிமை கிடையாது. சந்தா கட்டவேண்டியதில்லை. என்னம் உதவி செய்ய விரும்பினால் அன்பளிப்புளை தாராளமாகச் செய்யலாம்” என்று விளங்கப்படுத்தினார்.
‘இங்கையும் இரண்டாம் பிரஜை’ என்றது அவனுக்கு ஒரு மாதிரியாயிருந்தது. தேசவழமையை மீற யாரும் விரும்பவில்லை. சிறிலங்கா அரசு ஆச்சரியமானதில்லை. எவ்வளவு தான் நாம் வாய் கிழிய கத்தினாலும் இது எல்லா சமூகங்களிலும் கடைப்பிடிக்கிற பொதுவிதி. சாதியம் பிடியாத பெடியள்களை கூடஇவ்விதிகள் செயல்பட விடாது கட்டுப்படுத்திவிடும்.
அடுத்த நாள்,பள்ளிக்கூட நேரம் ரீச்சர்மாரின் உருக்குதல், படிப்பித்தல் தமது பராக்கிரமத்தை அளத்தல் எனப் போயிருந்தது. முதல் நாள் நடந்த கூட்டம் பற்றி இருவரும் கதைக்கவில்லை.
‘முத்து வீட்ட போறது என்றிருந்தததால் பாபு அவன் வீட்டிற்கு வந்திருந்தான். சுரேசும் வந்தான்.
“எங்கடயாட்கள் மாற மாட்டான்களடா. மன்னிச்சிடடா” என்று சுரேஷ் கவலையுடன் சொன்னான்.
“சேச்சே நான் ஒன்றம் நினைக்கேல்லை” என்று வேலன் போலியாக பதிலளித்தான்.
“என்ன விசயம்” என்று பாபு கேட்டான். இரண்டாம் பிரசை விசயத்தை சுரேஷ் விளக்கினான். “கவலைப்படாதே,நம் கையில் எதற்கும் வடக்கு, கிழக்கு ஆட்சி வர வேண்டும்.அதற்காகத் தானே பெடியள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பாபு சிரித்தான். “அதோடு, எல்லா இரண்டாம் தரத்திற்கும் மூடு விழா நடத்தப்படும் “‘சுயராட்சியமும்’ வேண்டும் தான் “என அவன் மனமும் நினைத்தது. ஆனால் தனி நாடானால் அடுத்த நிமிடமே உலகநாடுகள் உலகநாடுகள் இங்கேயும் இந்த இரு நாடுகளையும் தீராத பகையுள்ள நாடுகளாக்கி விட்டு புதிய பனிப்போரையும் தொடங்கி விடுமே,சிங்களச் சிறிலங்கா அமெரிக்கா தரப்பு நாடுகளின் ஒன்றாகவும்,அது தான் நேட்டோ நாடாகவும்,தமிழ்ச் சிறிலங்கா இந்திய சார்ப்பு நாடாகவும் ,இந்திய பாகிஸ்தான் நாடுகளைப் போல சதா கொதி நிலையிலே கிடக்குமே எனப் பயமாகவும் இருந்தது.
அப்ப, இயக்கங்கள் தனிநாடு கோரி உண்மையில் போராடவில்லையா?’இல்லை’ என்றே படுகிறது.சிறிலங்கா,தமிழர்களின் வரலாற்றை புறக்கணித்தும்,ஜனநாயக உரிமைகளை மறுத்தும் கிடக்கிற மிலேச்சத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகவே ,அதாவது அந்தப் பழைய ( மிதவாத) அரசியல்வாதிகளின் ஆயுதம் தூக்காத போராட்டத்தைத் தொடரவே போராடிக் கொண்டிருக்கின்றன.
அதேசமயம்,சிறிலங்காவின் இனப்படுகொலைகளிற்கும், தமிழ் நிலங்களை ஏப்பம் விடுவதற்கும், தமி ழர்களை மோசமாக விரட்டும் போக்குகளிற்கும் பழி தீர்க்கவும் என பாடம் புகட்டவே… விரும்புகின்றன. அதற்கு என்ன செய்வது?சிறிய கோட்டுக்குப் பக்கத்திலே பெரியக் கோட்டைப் போடுதல் தியரி தான். தமிழீழப் போராட்டத்தை நடத்துவதே.
உயரமானக் கொள்கை களை வைத்தால் தானே அதில் இருந்து கழித்து,கழித்து ஜனநாயக உரிமைகள் கிடைக்க சாத்தியம் இருக்கின்றன.
பிறகு , இந்த நிலமையை போராடுற சில இயக்கங்கள் கவனிக்கத் தவறி விட்டன போலவும் படுகின்றன.அல்லது வெளிநாட்டு சதி வலைகளில் விழுந்து ஏடாக்கூடமாக ராஜிவ்காந்தியையும் கொலை செய்து விட்டிருக்கிறது.அவருக்கும் அரசியல் அனுபவம் போதவில்லை.இரண்டு பக்கத்திலும் அரசியல் அறிவு இருக்க வேண்டும்.ஒன்றில் குறைவாக இருந்தால் கூட தடம் புரண்டு விடும்.அது தான் நடந்து விட்டிருக்கிறதாகப் படுகிறது.
பிறகு, வந்த இந்தியப் பிரதமர்களுக்கும் கூட சரிவரக் கையாளத் தெரியவில்லை எனவே தான் ,இந்தியாவின் அகிம்ஸைக் கொள்கைகளிற்கு மாறாக மற்றைய உலக வல்லரசு நாடுகளைப் போலவே…. இலங்கைத் தமிழர்களிற்கும் பெருமளவு மனிதப் பேரவலம் நிகழ அனாதரவாக விட்டு விட்டிருக்கி றார்கள்.நம் மனிதர் வாழ்க்கை மிச்சம் சிறியது தான்.நாமெல்லாம் விரைவிலே இறந்தும் கழிந்தும் போய் விடுவோம்.நாளைய சந்ததியாவது சமாதானமாக வாழ வேண்டும்.இந்தியா,பழையபடி சுய பாதைக்கே திரும்பி விட கடவுளை பிராத்திப்போம்.
2000 வருசங்களிற்கு முன் தலைநகராய் இருந்த ஜெருசேலம் தற்போ தைய இஸ்ரேலுக்கு தலைநகராய் (அந்த கதையே சரியானதா?என்பதே சந்தேகமானது? நூறு வருசக்கதையையே அழித்து,உரு சிதைக்கிறவர்கள் தான் உலகத்திலேயே இருக்கிறார்கள்.நூலகங்களைக் கூட விட்டு வைக்கிறவர்கள் இல்லை)ஆக முடியும் என்றால் ,இந்தியாவும், ,பழைய அசோக காலத்திற்கு இந்தியாவாக… அகண்ட இந்தியாவாகிறதும் பிழை இல்லை தான்.
எனவே,விரிந்த பாரதமாகி சமாதானம் நிலவ (தளைக்க வைக்க ) வேண்டும்”என பிராத்திப்போம்.
முத்தன் தனியாக நின்று புல்பூண்டுகளை செதுக்கி கற்களை கிளறிக்கொண்டிருந்தான்.மூவரும் கூட இறங்கினார்கள். ஒரு நொடியில் துப்பரவாக்கி விட்டார்கள். வேலிக் கம்பியை வெட்ட கத்திரிக்கோல் இல்லை என்ற போது சுரேஷ் சைக்கிளில் விரைந்து பெரியப்பாட கடையிலிருந்து அதை எடுத்து வந்தான். திறந்து மூடக்கூடியதாக அக்கம்பிகளைக் கொண்டே கதவொன்றை உறுதியாக அமைத்தார்கள்.
கமலமக்கா அவர்களுக்கு தேனிர் கொண்டு வந்தார். கனகசபை வீட்டில் கதியாலுக்கும். சிவநேசன் வீட்டில் கிடுகுக்கும் முத்தன் ஒடர் குடுத்திருந்தான்.
கதியால்களை அவர்களே வெட்டி எடுக்கவேண்டியிருந்தது.
பாபு மரத்தில் ஏறி மளமளவென்று கதியால்களை வெட்டினான். சுரேசும் அவனும் குழைகளை வெட்டி,முத்தன் வீட்டு ஆட்டுக்கு கொண்டு போய் போட்டார்கள். கிடுகையையும் அவர்களே சுமந்து வந்து அன்டன் வீட்டுச் சுவரோடு சாய்ச்சுவிட்டார்கள்.நாளைக்கு தொடர்வதென.தீர்மானித்து அன்றைய வேலையை நிறுத்தினார்கள்.முத்தன், சுரேஷ் கையிலே 50 ரூபாயை வைத்து “உன் பெரியப்பாவைக் கேட்டு ‘அடிப்படைச் சாமான்களை நாளைக்கு வாங்கிட்டு வாடா” என்றான்.
விடை பெற்றுச் சென்றார்கள்.
பெரியப்பாவிடமிருந்து வாங்கிய லிஸ்டை கொண்டு வந்திருந்தான் சுரேஷ். சிறு கத்தி, குறடு, சுத்தியல், போல்ஸ் செட், ‘ரிம் பக்கல் சாவி, என நீண்டிருந்தது.”50 ரூபா பத்துமா?” என்று வேலன் கேட்டான் அவன்.
“50 தொடக்கம் 100/= என்றாலும் சமாளிக்கலாம். தவிர முதலில் சிறிய அளவுகளிலும், கொஞ்சமாகவும் வாங்குவதால் பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்’ என்ற சுரேஷ் ‘வேற பெரியப்பா வாங்கிற கடையிலே. அவருக்குத்தான் சாமான்கள் வாங்குவதாக சொல்லச் சொன்னார். 5% விலைக்குறைப்பு இருக்கிறது என்றான். ‘முத்தனிட்டப் போய் கொஞ்சம் காசு எடுக்கலாமா என்று பார்த்திட்டு போவோமா” என்று வேலன் கேட்டான் .
“வேண்டாமடா, இதுக்க வாங்கப் பார்ப்போம்.
கடைக்கு கொஞ்ச சாமான்கள் ரெடியாயிருந்தால் சரி. பிறகு வாங்கிக்கொள்ளலாம்” என்றான். சுரேஷ் முத்தனுக்கு கரைச்சல் கொடுக்கவிரும்பவில்லை.
“சரி, வாடா போவோம்” வெளிக்கிட்டார்கள்.
அடுத்த நாள், சைக்கிளில் போனபடியே முத்தனின் இடத்தைப் பார்த்தார்கள். புதிதாக ஒரு கொட்டில் முளைத்திருந்தது. முத்தன்ர நண்பர்களான சுமன், பத்து, ரவி, பூர்ணம் போன்றவர்கள் வேலையாலே வந்தபிறகு இரவிரவாக போட்டு விட்டார்கள்’ என்பது புரிந்தது.
“கெதியிலேயே திறந்து விடுவான்’ என்றான் சுரேஷ், “டேய் “பம்ப் முக்கியமே. மறந்திட்டியே ஞாயமான காசு வேணுமே” திகிலுடன் வேலன் கேட்டான் . சுரேஷ் புன்முறுவல் பூத்தான் “பழைய பம்ப் ஒன்றை எடுத்து திருத்தி ரெடியாய் பெரியப்பா வைத்திருக்கிறார்” என்றான். “முத்தன் குடுத்து வைச்சவன். உன்னை நண்பனாகப் பெற்றதற்கு” என்றான் அவன்.
“மறந்திட்டியே. பெரியப்பாவை’ என்று சிரித்தான். உண்மைதான் (கலவர காலத்தில் சிங்களவர் மத்தியிலிருந்து காப்பாற்றி உதவியவர்கள்போல.) எங்குமே நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். “கடையை திறக்க முதல் முத்தனை ஒரு பகல் தன்னுடைய கடையிலே வந்து நிற்க சொன்னவர். எங்களைப்போல நிலையில் இருப்பதால் செய்முறைகளில் ஏற்படுகிற தவறுகளை சொல்லிக்கொடுப்பதற்கு” என்றான் சுரேஷ்.
“இவன் பயப்படப்போறான்” என்றான் அவன்.
“பகிடி விடுறாயா. பெரியப்பாவோட யாருமே நெருங்கமாட்டார்கள்” என்ற நிலமையை சுரேஷ் தெரிவித்தான். தொடர்ந்து “சிவத்தான் வெறியிலே உணர்ச்சி வசப்பட்டு விட்டான். மிச்சம்படி, வன்மம் வைச்சு சாதிப்பவனில்லை” என்று பதிலளித்தான். மனிதர்க்கு சமயங்களில் பலவீனமும் ஏற்பட்டு விடுகிறது.
மணியம் ஸ்ரோர்ஸை அடைந்தபோது 5.30 ஆகியிருந்தது. சாமான்கள் 50/-ஐ தாண்டவில்லை. வாறபோது முத்தனிடம் கையளித்து விட்டு வந்தார்கள்.
அடுத்த நாள், முத்தனைக் கூட்டிக் கொண்டு வந்து பெரியப்பாட சைக்கிள் கடையிலே விட்டு விட்டு சுரேஷும் கூட நின்றான். பவித்ரா கடையிலே ஏதோ சாமான் வாங்க வந்த நளினி அவர்கள் நிற்பதை பார்த்துவிட்டு சைக்கிள் கடைக்கு “வந்தாள் ‘எப்ப நீங்கள் இந்தக் கடையை வாங்கீனீர்கள்” என்று பகிடியாக கேட்டாள்.
“முத்து, எப்படி உங்க காயம் மாறிவிட்டதா?’ அன்புடன்
விசாரித்தாள். முத்தன் முகம் மலர “சுகம்” என்றான். “பள்ளிக்கு நேரமாகிறது வாரன்” என்று விடைபெற்றாள்.
‘கடை எப்படிப் போகுமோ? என்றிருந்த கலக்கம் அவன் முகத்திலிருந்து நீங்கியிருந்தது.அவனுக்கு தந்திருந்த பம்பை சுரேஷ் காட்டினான். நல்ல நிலையிலிருந்தது.
“எப்ப கடையை திறக்கப்போறாய்?” கேட்டான். சுரேஷ். “திங்கள் நல்ல நாளாம் அக்கா சொல்றா” என்றான்.
“பள்ளிக்கூடம் முடியத் தான் எங்களால் வரமுடியும்” என்ற சுரேஷ் சிறிது நேரம் கதைத்துவிட்டு, பெரியப்பா வர சாப்பிட ஒடினான். வகுப்பிலே, வேலனை “விளையாட வருவியா?” என்று கேட்டான்.
“இரண்டாம் பிரஜை என்ற பிறகு மனம் வெறுத்துவிட்டது. நீயிருக்கிற போது மட்டும் விளையாடுவேன்” என்றான். வேலன் “அதை விடு ,எப்படி முத்தன்? கடையை திருப்பி வைத்திருக்கிறானா?” பகிடியாக கேட்டான். “பழகி விடுவான்” என்றவன், “டேய், நளினி வந்து கதைத்து விட்டு போனாள். முத்தனுக்கு ஆறுதலாக இருந்தது” என்றான்.
ரீச்சர் வர பாடங்களில் அமுங்கிப் போனார்கள்.
சுரேஷ், “ வெள்ளிக்கிழமை அன்று போட்டி ‘மச்’டா” என்று சொல்லியிருந்தான். சுரேஷ் கோலி.அவன் ஏற்கனவே விளையாடுற அணியோடு போய் விட்டிருந்தான்
சங்கானையில் எங்கேயோ ஒரு கோவில் வள வில் நடை பெற இருந்தது . இன்ன இடத்தில் என ‘அடையாளம்’ சொல்லி இருந்தாலும் தேடிப்பிடிப்பது கஷ்ட மாகவே இருக்கும் எனப் பட்டது. ஊரிப்பட்ட வளவுகள் இருக்கின்றன. ஒரு ஒழுங்கைகளுக்கும் பேர் கள் கிடையாது.
வீட்டை விட்டு வீதியில் இறங்கினான் .வீதியிலே சனத்தைக் காணவில்லை. அவன்ர காலத்திற்கு இன்னொரு வகுப்புத்தோழனான கிருபன் சைக்கி ளில் வந்து கொண்டிருந்தான் “மச்சு’க்குத்தானே நானும் அங்கேதான்” என்றான் அவனைப்பார்த்து.
நீள வயல் பாதையில் சைக்கிள்கள் ஆடி அசைந்து ஒடின. ஒடக்கரையை அண்மித்ததும் (அது கடல்துறை இல்லை. பக்கத்தாலே வழுக்கியாறு. ஒன்று தான் ஒடுது. ஒருவேளை அதிலே பழங்காலத்தில் ஒடத்திலே பயணித்ததாக இருக்கலாம்) “இப்ப, உங்க போறதில்லையா?” என்று கிருபன் பகிடியாகக் கேட்டான்.
சங்கானையின் கிராமப்பிரிவுகளிலே ‘உடன் கள்ளுக்கு; இனிப்புக் கள்ளுக்கு பேர்போன தவறணைக் கொட்டில் அங்கேயேயிருந்தது. அங்கே, கிழவி ஒருத்தியின் ஆட்டு, மாட்டுக் குடல்களை அறுத்து வதக்கிய டேஸ்டும் பிரசித்தம். சிலசமயம் வதக்கிய ரத்தமும் (ஆடு, மாடு) வைத்திருப்பாள். அதனாலே கள்ளு டேஸ்டாகவிருந்ததோ? என்னவோ?
“கீரிமலைக்குப் போனால், வார போது போறனான். அரைப் போத்தல்க் கள்ளு தானே! நீயும், குடித்துப் பாரன். கால், கை உளைவு எல்லாம் தெரியாது” என்று வேலன் பதிலளித்தான். கிருபனுக்கு சங்கானை கொஞ்சம் தெரியும். சந்தியிலே ஏறி, சண்டிலிப்பாய் பக்கமாக சிறிது ஒடி, மண் ஒழுங்கையிலே விழுந்து, நீள ஒடி விளையாட்டு மைதானத்தை கடைசியில் அடைந்தார்கள்.
ஆட்டம் 4 மணிக்கே தொடங்கி விட்டிருந்தது. அடுத்ததாக, பொன், பருத்தியோடு மோதவிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த அப்பு ஒருவர் இவர்களைப் பார்த்துக் கேட்டார்.
“என்ன தம்பிகளா! பொன்னும் பருத்தியும் பேர்கள். என்ர பேரனைச் சொல்லி இந்த ஒழுங்கையில் ‘புண்ணாக்கு’ என்று ஒரு ரீம் தொடங்கப் போறேன்” என்றார்.
“வள்ளி தெய்வானை கடவுள் இல்லையா? அப்பு நீயும் ஒரு தெய்வானையைப் பிடியன், வாழ்க்கை ஜாலியாகவிருக்கும்” என்றான் வேலன்.
அப்பு விலகிப் போனார்.
தாசனும், ரங்கனும், இன்ஜினியரும் பந்தை கோலுக்குக் கிட்டவாக அடித்து , அடித்து கலகலப்பூட்டினார்கள்.
ஒரு தடவை சுரேஷ் முன்னுக்கு நின்று கஷ்டமான பந்தை நிலத்தில் விழாது எடுத்துக்கொடுத்தான். ஆட்டம் விறுவிறுப்பாகவிருந்தது. இரண்டும் ஆவேசமாக மோதின.
பருத்தி ஒரு முறை அடிச்ச பந்தை தடுக்க முயன்ற சுரேஷ் கீழே விழுந்து விட்டான்.
கோல் இறங்கி விட்டது. பொன் அடிச்ச பந்து நூலிழையில் கோல் கம்பங்களிற்கு தவறி ….வெளிய போனது. பருத்தி வெற்றியைப் பெற்றுவிட்டது.
கைகுலுக்கி விடைபெற்றார்கள்.
சுரேஷ் அவர்களிடம் வந்தான். “உங்களுக்கு ‘லக்’ இல்லையடா, அடுத்த முறை நிச்சியம் வெல்லுவீங்களடா” என்றான் வேலன்.
‘செமி பைனலிலே வந்து’ தோற்றது. அவர்களுக்கு நிறைய வருத்தமாகவே யிருந்தது.
முத்தன் சைக்கிள் கடை திறந்து விட்டிருந்தான். அவனிடம் பலர் சைக்கிள்களைக் கொண்டு வரத் தொடங்கி இருந்தார்கள்.கிராமத்தவர்களுக்கு வேலைக்கு போற ஒரே வாகனம் சைக்கிள் தானே.
சனிக்கிழமை அன்று, ஒரு மணி போல வேலனும்,சுரேஷும் கடைக்கு வந்தார்கள். பாபு ஏற்கனவே கடையில் இருந்தான் .ஒட்டுக்கு வந்த சைக்கிள்களில் ஒன்றை சுரேஷ் எடுத்துக் கொண்டான்.வேலன், சிறிய கொம்பவுண்ட் துண்டை வைத்து, சொலூசன் பூசி உலரவிட்டான்.சுரேஷ், றபர் துண்டை எடுத்து கத்தியால் பிராண்டி தூசை ஊதிவிட்டு சொலுசன் பூசி உலர விட்டான்.ஒரு நொடியிலே ஒட்டி வேலையை முடித்து காத்தடித்து சைக்கிளை கொடுத்தார்கள்.
முத்தனின் கஜானாப்பெட்டியில் வந்தவர் 1/-ஐப் போட்டார்.
2.00 மணிக்கு யார் வரப்போகிறார்கள். பிரித்த சைக்கிள் பகுதிகளுக்கு சுரேஷ் கிறீஸ் வைத்து போல்ஸ் வைக்க, அவன் கழுவாத பகுதியை வேலன் மண்ணெய்த் துணியால் கழுவிக் கொண்டும் இருக்க, பாபு பூட்டிய பகுதிகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான். இடையிடை ‘ச்சூ ச்சூ’ என்று வேறு சொல்லிக் கொண்டார்கள்.
“என்னடா” என்று முத்தன் கேட்க, “ஈ விரட்டுகிறோம்”என்றார்கள்.
“உங்களுக்கு வேற வேலை இல்லை” என்று விட்டு வேலையில் கவனத்தை பதித்தான்.
வந்த கண்ணப்பன் அவர்களைப் பார்த்து ஆச்சரியமாய் கேட்டான். “எப்ப தம்பியள் வந்தனிங்கள்?’
“அக்காட்ட தண்ணி வைக்கச் சொல்லணை” என்று அவரிடம் முத்தன் சொன்னான். கண்ணப்பன் போனபிறகு அந்த செய்தி வந்தது.
செட்டியா மடத்து வயல் கிணற்றிலே பூபதி தன் 3 குழந்தைகளையும் போட்டு விட்டு தானும் விழுந்து செத்துவிட்டாளாம். அச்செய்தி அவர்களை உலுப்பியது.
கைகளை அவசரமாக துணியில் துடைத்துவிட்டு, முத்தனை விட்டு விட்டு மூவரும் சைக்கிளில் பறந்தார்கள்.
பூபதிக்கு 20 வயசிருக்கும். இளம்பெண் 16 இலே கட்டியிருப்பாள். காட்டுப் புஷ்பங்களாக அழகான குழந்தைகள். ஒருத்தன் பெடியன் இருவர் சிறுமிகள், நண்பகலிலே குதித்து விட்டாள். ஆள் நடமாற்றிருந்த வேளை.ஒரிருவர் நடமாடிய போதும், யாரும் வயல் பக்கமாகவே இறங்கி கிணற்றை எட்டிப்பார்க்கவில்லை. பின்னேரம் பள்ளியாலே வயலுக்கு அப்பாலிருந்து வறிய சிறுவர்கள் தான் வீதியிலும் வயல் வரப்பிலுமாக விளையாடிக்கொண்டு போன போது கண்டிருக்கிறார்கள். செய்தி காட்டுத் தீயாகியது.
“கட்டி யவன் ஒழுங்காய் இருந்தால் இவள் ஏன் சாகப் போறாள்? என்றும் உழைச்ச காசை குடிச்சிட்டு வாறதாலே உவள் 3 நாளாய் வீட்டிலே பட்டினியோட கிடந்தாள். பிள்ளைகள் அழுவதைப் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் கஞ்சி வடிச்சுக் கொடுத்தேன் பெட்டச்சி மனசு வெறுத்து இப்படி முடிவை எடுத்திட்டாளே காவேரியக்கா அழுது கொண்டிருந்தாள்.
“குழந்தைகளை விட்டு அவளால் வயல் வேலைக்கு வர முடியவில்லை” என்று
சிநேகிதி ஒருத்தி கரைந்தாள். தண்ணியிலே சிறிது பலவீனமாக நின்ற மணியம் முதல் ராத்திரி சாப்பாடில்லை என்றபோது அடித்து துவைத்திருக்கிறான் அச்செய்தியும் வதந்தியாக வந்தது. பலவித விமர்சனங்கள்.அவளை விரும்பி (காதலித்து) கட்டியவன் குடியினால் உள்ள நிலைமையை உணரத் தவறிவிட்டான். எதிரே மூழ்கி கிடந்த பிரேகங்கள் அவனை பைத்தியம் பிடிக்க வைத்துக் கொண்டிருந்தன.
யார் மேலே குற்றம் சொல்வது? எதற்கும் சாவு தீர்வில்லை என்று வாதாடுகிற அவர்களுக்கும், என்ன சொல்றது என்று தெரியவில்லை. சோகத்துடன் நின்றார்கள்.
“இந்த சமூகத்திலே நெடுக இப்பிரச்சினைகள்” சலித்துக் கொண்டான் பாபு.
அவசரமாக தென்னோலை தோரணம் கட்டி 7.30 மணிக்கே சவத்தை எடுத்து விட்டார்கள். சிவில் சேவையாளர், பொலி சார் இல்லையா? நடுநிலை தவறிய ஆட்சியாளர்களால் மக்களுக்கும் அவர்கள் மேல் நம்பிக்கையற்று விட்டது. தவிர,வட பகுதியில் யாரும் அவர்களை நாடுவதில்லை.
சிறிய மழைத் தூறலில் புருஷன்காரர் சட்டியை காவ, 2 பாடையில் உடல்களை கிடத்தி காவிச் சென்றார்கள். சவப்பெட்டி உபயோகிக்கிறதெல்லாம் மற்றச் சாதியினர்தான். குறுகிய நேரத்தில் எவர்க்கும் இரக்கம் பொத்திக் கொண்டு வராது! கன நேரமாய் நீரிலே கிடந்ததாலும், எம்பாம் பண்ணாததாலும் உடனே எடுத்தார்கள் என்றார்கள்.
நீண்ட தூரத்தைக் கடந்து சென்ற சவம் பாலத்தடி கடலையை அண்மியது. மணிசர்களில் ‘தேவர்கள் இருந்து தொலைந்து விட்டார்களே! அச்சாதியினரை அச்சுடலையில் எரிக்க முடியாது. காவிச் சென்று வாடிப் பக்கமாகவிருந்த சுடலையிலே எரிக்க முடியும். அது நீண்ட தூரம். மற்றச்சாதிகள் கூட அதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒவ்வொன்றும் “தான் ஒடுக்கப்படுகிறோம்” என்ற பதாகையை வைத்திருந்ததே, தவிர, தமக்கு கீழ் இருப்பவர்களை ஒடுக்கியே வந்தது.
பள்ளிக் கூடத்தடியைச் சேர்ந்த பெடியள் சற்று துணிச்சல் உடையவர்கள். கணிசமானவர்களுக்கு நகர வேலையை நாடியதால் குடிமை வேலைகள் வேண்டியிருக்கவில்லை. அவர்களுடைய பெற்றோரும், பெண்களுமே அதிலே சிக்குப்பட்டிருந்தார்கள். வாசிகசாலைப் பெடியள்கள் ஐக்கியம் பேணி ,.அம்மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக விருந்தார்கள். தவிர, அதிபருடன் சேர்ந்து சிறுவர்களை படிக்க தூண்டியும் வந்தார்கள். அப்பெடியள்களே செத்த வீட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள்.
மழைத்தூறல் சிறிது பெலக்க. காவி வந்த நகுலன் “டேய். சவத்தை உந்த சுடலையிலே எரித்தால் என்ன?” என்று கேட்டான்.
பேச்சு சலசலத்தது.பாடையை திருப்பு முத்தனின் மச்சான் குணத்தான் உரத்துச் சொன்னான். கிட்டடியில் தான் பள்ளிக்கூடத்துப் பெட்டையை முடித்து அப்பகுதிக்கு போயிருந்தான்.பழசுகளும் நடுத்தர ஆட்களும் பயந்தார்கள். விறகு போய்க் கொண்டிருந்த ஒற்றைத் திருகல் வண்டியை சஞ்சயன் திருப்பிக் கொண்டு வந்தான்.
தயங்கியவர்கள் மெதுவாக சுடலைக்கு வந்தார்கள். மணியம் சட்டியை உடைத்து எரி மூட்டினான்.
வேலனுக்கு அந்த அரைகுறை மழையிலே குளித்ததால், அடுத்த நாள் ‘சளி’ ஒரேயடியாய் பிடித்து விட்டிருந்தது அதிகாலை 6.00 மணிக்கு மழை அடித்தும் ஊத்த தொடங்கி விட்டது. காலையிலே காடாத்தேடு (சாம்பல்) எடுத்திருக்க மாட்டார்கள். மழை அடித்துக் கொண்டு போயிருக்கும் போலப் பட்டது. பூபதி ஆண் இனத்தின் மீது சாபம் போட்டு விட்டாளோ? அவனை விட 4. வயது வித்தியாசமாகவிருந்தததால் அவன்ர பட்ச் என்ற நினைப்பு வேறு, அவனை என்னவோ செய்தது. அவள் சார்பாக நின்று எல்லார் மீதும் குமுறும் போக்கும் ஏற்பட்டிருந்தது. 2 தரம் தும்மினான்.
வீட்டிலே பள்ளிக்கூடம் ஒருத்தரும் போகவில்லை நண்பர்களும் போயிருக்க மாட்டார்கள் என்று பட்டது.10 மணி போல மழை சிறிது நிற்க. குலனைக்கு வெளிக்கிட்டான். ஒழுங்கையின் சமனின்மையால் கலங்கல் தண்ணிர் வெள்ளமாகவிருந்தது. சைக்கிள் வாறி அடித்தபடி, மட்காட் டயர் கழுவுப் பட சென்றது. குலனைப் பாதையை அடைநத போது திகைத்துப் போனான். விளையாட்டு மைதானத்தை ஊடறுத்துச் சென்ற பாதையை காணவில்லை. வெள்ளம் மூடியிருந்தது.
ஏற்கனவே பாதை சரியில்லை. மழை பெய்தால் சேறும் சகதியுமாக மாறி விடும். எப்படி மக்கள் போய் வருகிறார்களோ? பாபு வீட்ட போற எண்ணத்தை கை விட்டான்.அப்படியே மடத்தடி ஒழுங்கையாலே ஏறி வயல் வெளிகளை பார்த்தபடி நின்றான் . சுமார் 3 மணிநேரமாக அடித்து ஊத்தியதில் எங்குமே வெள்ளக்காடாகவிருந்தது. சிலர் வரம்புகளை உடைத்து நீரை பாயவிட்டார்கள். என்ர காணித் துண்டுக்க எப்படி விடுவாய் என சண்டை பிடிப்பவர்களும் நின்றார்கள். பரந்த மனப்பான்மையும், அறிவியல் வேட்கையும் அற்றவர்களாகவே யிருக்கிறார்களே. அதனாலேயே அரைக்கரைவாசி துன்பங்களையும் பெறுகிறார்கள்.
பின்னேரம் போல, பாபு, வேலன் வீட்ட வந்தான் “எப்படி ஒழுங்கை பரவாயில்லையா?” கேட்டான். “வெள்ளம் வடிந்துவிட்டது. கூலாய் சறுக்கிறதாகவிருக்கிறது. போன வருஷமும் இந்த பிரச்சனை வந்தது வி.சி.ஐக் கொண்டு திருத்தலாம் என்று பெரிசுகள் தட்டிக் கழிச்சு விட்டினம்.”
அரச நிறுவனங்களில் பேரினவாதமும், சாதியமும் விளையாடுகிற போது சுயமாக வாழ்கிறதே சரிபோல இருக்கிறது “பெடியளாய் சேர்ந்து திருத்துவதாக முடிவு செய்திருக்கிறோம்” என்றான்.
“நல்ல முயற்சி” என்று அவன் பாராட்டினான்.
பொறி தட்ட “AM 47 (ரேடியோவில் சனலற்றதாகவிருந்த மீற்றர்) இலே அறிவித்தல் செய்தனியா’ கேட்டான். பாபு புன்முறுவல் பூத்தான்.
“இந்த அடைமழை பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. பெடியள் அணி இந்த கிழமையில் ரோட்டை திருத்துவதாக மார் தட்டி எழும்பிவிட்டார்கள் என்ற நற்செய்தியை அறியத்தருகிறோம். ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணிக்கு ரோடு போடுவது பற்றிய செய்திகளை கேட்கலாம்’ என்று அறிவிப்பாளர் போல பேசினான்.
அவ்விடத்து பெடியள்கள் புத்திசாலிகள். ஒரு விசயத்தில் இறங்கினார்கள் என்றால் கச்சிதமாக முடித்தே விடுவார்கள்.எப்ப தொடங்கப்போறிர்கள்?’ கேட்டான்.
“கொஞ்சம் தரைக்காய. நாளைக்கு. நாளன்றைக்காய் இருக்கும்” என்று பதிலளித்தான்.நடைமுறை ‘ஒரு ஆமை’ என்பது தெரிந்த விசயம்.
“மண்ணுக்கு எங்கே போவீர்கள்?” கேட்டான்.
“பாலத்தடிப் பக்கம் இருக்கிற.உவர்ப்பு வெளிகளிலே மண் குவியல்கள் இருக்கின்றனவே! தவிர கிணறு தோண்டிய போது எடுத்த மக்கி மண்ணை, கல்லுகளை தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
‘ட்ராக்டருக்கும் சொல்லி விட்டோம். டீசலோடு இரவிலே வருவதற்கு செல்லமுத்தண்ணை சம்மதித்திருக்கிறார்” என்று விளக்கமாக சொன்னான். அவர் கிழக்கராலியைச் சேர்ந்தவர். குலனைப் பாதையையே அடிக்கடி பாவிப்பவர். சரியான முறையில் பலவற்றை இணைக்கிறதுக்கு யாரோ ஒரு ஆள் பின்னணியில் இருக்கவேண்டும்’ என்று நினைத்தான்.பாபு புத்திசாலி தான். ஆனால் இந்தளவுக்கு செயல்படக் கூடியவனில்லை.
“அப்ப பிரச்சினையில்லை. என்கிறாய்.” என்றான் வேலன்.
“இருக்கிறது” பாபு. “என்ன?’ கேட்டான்
“கொமிட்டிப் பெரிசுகள் ஆதரவு தர மறுக்கினம். வி.சி.யைக் கொண்டு போடுவோம் என்று, இந்த முறையும் அளக்கிறார்கள்” என்றான் பாபு.
“அப்ப காசுப்பிரச்சனை கொஞ்சம் இறுக்கப் போகிறதே” கேட்டான்.
“பெடியள் மேசன் வேலைகளுக்கு பகுதியாக அல்லது முழு நேரமாக போய் வாரது தெரியும் தானே. ஆளுக்கு 50 ரூபாய் போட்டு தொடங்கப் போறோம்” என்றான்.
கொஞ்சநேரம் இருந்து கதைத்து விட்டுப் போனான்.
ரேடியோவைத் திருப்பினான். “இரவு ஏழு மணிக்கு பெடியளை வாசிகசாலையில் கூடும்படி இத்தால் அறிவித்தல் விடப்படுகிறது. டீ முதலான உதவிகளை செய்ய விரும்புகிறவர்கள் வீரப்பனிடம் பெயர்களைக் கொடுக்கலாம்” என்று குலனைப் பெடியன் ஒருத்தன் பேசியதைக் கேட்க சந்தோசமாக இருந்தது.
வேலனுக்கும் அவர்களோடு செயற்படவேண்டும் போலிருந்தது.
ஆனால் “வீட்டிலே படிக்கிறதில்லை’ என்ற அர்ச்சனைகள்; ஆறு மணிக்கு முதல் வந்திடணும் என்ற கண்டிப்பு வேறு. சுயநல பழக்க வழக்கங்களையும், தேசவழமைகளையும் ஒட்டிய ஒழுக்கநெறிகளை பின்பற்ற போதிக்கிறார்கள். அவை மக்கள் மத்தியிலேயே வேலிகளை போட்டுக்கொண்டு வருவதை அறியாமல்.
ஆனால் பாபுவின் நடுத்தர வர்க்கத்தில் சிறிதளவு தளர்வுகள் இருந்தன. உத்தியோகத்திற்கு போன கொழும்பர்கள்; கடலுக்குப்போன மூதாதையர்; மற்றும் மேசன் தொட்டு நகர வேலைகளில் கனகாலமாக ஈடுபடுவதாலும் ஏற்பட்ட மாற்றங்கள். இன்று அவர்கள் மத்தியிலிருக்கிற டொக்டர்களும், இன்ஜினியர்களும் ஒரு காலத்திலே பகுதி நேரமாவது நகர வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களே! அதனால் அவர்களுக்கு எவ்விதத்திலும் ஒருவித வக்கிரத்தனம் காணப்படவில்லை.
‘அங்கே நானும் பிறந்திருக்கக்கூடாதா’ என்ற ஏக்கம் அவன் மனதை அரிப்பதுண்டு.
‘வீட்டுக்கு தெரியாமல் போவோமா? என்று நினைத்தான். அப்பர் நந்தி போல முன் விராந்தையிலிருந்து கதைப்புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார்.
‘எதிர் காலத்தில் இந்த வேலிகளை எல்லாம் உடைத்தாக வாழவேண்டும் கறுவிக்கொண்டான்.
பாணுக்கு கடைக்கு போற போது குலனைப்பக்கம் சைக்கிளை விட்டான். பாபு வீட்ட அந்த காலமை போகமுடியாது. அவர்கள் வீட்டில்.பெண்கள் பள்ளிக்கூடம் வெளிக்கிடுவதாக இருப்பதால் சரியாகப்படாது. இரவில் போடப்பட்ட ரோட்டைப்பார்த்தான் 15 தூரம் உரம் போட்டு வளர்ந்திருந்தது உரம் போடுறதுக்கு அவர்களுக்கு சொல்லியா தரவேண்டும். அவ்வளவு தூரமும் சைக்கிள்.துள்ளாமல் ஒடியது ‘பாணைக் காணாமல் திட்டு விழலாம்’ என்பதால் திரும்ப ஒடி, வாங்கிக் கொண்டுபோனான்.
அன்றும், வழமை போல ஆசிரியரின் அறுவை அவர்களை வருத்தியது. திடீரென பரீட்சை என்று. வைக்கப்பட்டிருந்தது. மூளை, ஒரு தடவை திரும்பிப் பார்க்காட்டி சிதம்பரச் சக்கரமாகவே பார்க்கும். தலை விண் விண் என்று வலித்தது. சுரேஷ்க்கும் பாபுவுக்கும் அதே நிலைதான். அவர்கள் அவனை சீண்டி விடைகள் கேட்டார்கள்.“டேய் எழுதிய விடை இதுதான்! சரியா? என்று சொல்லேலாது” என்று சொன்னான்.
நளினியின் வரிசையைப் பார்த்தான். வீட்டிலே அடைப்பட்டுக்கிடப்பதால் இப்ப நல்லாய் படிக்கத் தொடங்கி விட்டினம் போலக் கிடக்கிறது. அவள் சிம்பிளாக எழுதிவிட்டு நெட்டி முறித்தாள்.சுரேஷைப் பார்த்து சிரிப்பது தெரிந்தது. ‘மச்சான் வென்றிட்டான் போல.
அவனுக்கும் பெண் சகோதரம் 3 பேர். நளினி வீட்டிலே 4 பேர். சீதனப்பிரச்சனையில் காதல் பந்தாடாமல் தப்பினால் போதும். ஆனால், நடைமுறை அப்படி ஒப்பேற்றிவிடுமா? நீண்ட பெருமூச்சு விட்டான்.
ஆசிரியர் எல்லா விடைத்தாள்களையும் சேகரித்துக்கொண்டு போனார்.
“ராத்திரி ரோடு போட்டதில் படிக்கலையடா’ என்றான் பாபு. “நாங்க மட்டும் கிழிச்சோமா? இந்தப் பரீட்சையை தெரிந்திருந்தால் தட்டிப் பார்த்திருப்பேன்” என்றான் அவன்.
“T.V. பார்த்ததில் நான் கோட்டை விட்டிட்டேன்” என்ற சுரேஷ், தொடர்ந்து “உவரும், (ஆசிரியரும்) TV பார்த்தவர் அப்ப என்னைக் கண்டவர். அதனாலே அறுத்துவிட்டார்” சொன்னான்.
“நீ, நளினியை கொப்பியடிச்சிருக்கலாம். பாஸ்மார்க்காவது வந்திருக்கும் என்னை நம்பினது பிழை” என்றான் அவன்.
“கண்டறியாத பரீட்சை! விடடா, கடைசிப் பரீட்சைக்கு. இது ஒன்றும் உதவாது” என்று சுரேஷ் சொன்னதில் உண்மை இருக்கவே செய்தது.எல்லார் மூளையும் சமன் நிலைக்கு வர பிரிந்தார்கள். கோவில் வளவு பக்கம் பந்தை தட்டிவிட்டு வந்தபோது ரேடியோவிலே பாபுவின் குரல் ஒலித்தது.
“படியாமல் இருந்துவிடாதீர்கள்.” T.V. பார்ப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன..என்று கொஞ்ச நேரம் அறுத்தான்.
பெரியவர்கள் ஒத்துழைக்க முன் வாரததுக்கு நன்றி” என்று சொன்னான், சேர்ந்துவிட்டார்கள் போல.விளையாட்டு மைதானத்தை ஊடறுத்துக்கொண்டு பாதை இருந்ததால் அதை ஒழுங்கமைக்க வேண்டிய தேவை பெடியளுக்கே இருந்தது. அதனால் பெரியவர்கள் நாடகம் ஆடினார்களோ?.தோன்றியது.
“வேலை தொடங்குவதால் விடைபெற்றுக்கொள்கிறேன்” என்று முடித்துக்கொண்டான்.
பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தவன் இடையில் ஒரு தடவை ரேடியோவை.திருப்பினான்.“மீண்டும் ஒரு நன்றி” என்று அறிவித்தல் வந்தது. “சேவை நோக்கில் தோளோடு சேர்ந்து நிற்கும் செல்ல முத்தண்கைக்கு நன்றிகள்” என்றான் பிறகு,“பாதை வீடற்ற காணி வளவுவரையில் மைதானத்தை சுற்றிக்கொண்டு போயிருக்கிறது” என்றான். அதுவே சரியான
முறை.விடைபெற்றுக்கொண்டான். “வேலை முடிந்த பிறகும் அலட்டிவிட்டே படுப்பான்’ என்று தோன்றியது.
சுரேஷஸூம் ரேடியோ கேட்டிருந்தான். இருவரும் பாபுவை பள்ளிக்கூடத்திலே பாராட்டினார்கள். இவர்கள் பேச்சை அரைகுறையாய் கேட்ட தமிழ் வாத்தியார் சுந்தரம் நவாலியிலிருந்து வாறவர், பேப்பரிலே கதை-கட்டுரை என எழுதுற ஒரு இலக்கியவாதி “டேய் இங்க வாங்கடா தம்பி” என்று கூப்பிட்டு “என்ன விசயம்?” என்று கேட்டார்.
அவர்களுக்கு பிடித்த வாத்தியார் அவர் கல்லுண்டாய்க் கடலிலே கடல் அட்டை பிடித்தவர்களைப்பற்றி சிறுகதை ஒன்று கூட பேப்பரிலே எழுதி இருக்கிறார். அதை சுரேஷ் வெட்டி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். ‘நல்லகதை’ ஆனைக்கோட்டை மக்களின் நிசமான வாழ்க்கை’ என்று சொல்லலாம். யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் விளாசியிருந்தார்.
ஒட்டை வாய்கள் என்றதைவிட அந்த வாத்திக்கு தெரிந்தால் ‘எந்தகால குலனை மக்களும் வாசிக்கக்கூடிய வரலாறாக படைத்துவிடுவார் என்பதால், ரோடு போட்டதை விளக்கமாகச் சொன்னார்கள் ‘பரீட்சை வேணாம்’ என்ற அறுவையைச் சொன்னபோது சிரித்தார். பாபு வெட்கத்துடன் நின்றான்.அவன் தோளில் தட்டி, “ரேடியோ திருத்துற அறிவை நீ நல்லாய் வளைர்த்துக்கொள். பகிடி வேணும். நீ நிலமையை பகிடியாய் சொல்லியிருக்கிறாய். வெட்கப்படாதே துணிந்து மேலும் கூடிய விளக்கத்துடன் செய்யப்பார்” என்று பாராட்டினார்.
பின்னேரம். முத்தனின் கடையிலே மூவரும் இருந்தார்கள். சுரேஷ9ம் விளையாடாமல் வந்திருந்தான். “நீ ரேடியோ பற்றி சொல்லலையடா நானும் கேட்டியிருப்பேனே’ என்றான் முத்தன். “.இனிக் கேளன்.” என்றான் பாபு. சுந்தரம் வாத்தியோடு கதைத்ததையும் சொன்னார்கள்.
“ரோட்டு வேலை இண்டையோட முடிஞ்சுவிடும்” என்றான் பாபு “பிறகு சினிமாப்பாட்டுகள் தான் கேட்க முடியும்’ சிரித்தான்.
4-5 பஞ்சர்கள் வந்தன. மனதை கவ்வியபடி இரண்டொரு பெட்டைகள் சைக்கிளில் போனார்கள் “உதுகளிற்கு பஞ்சர் வராதா” நேர்ந்தார்கள்.
சிறிது இருள அரிக்கன் லாந்தரை ஏற்றினான். “டேய், ஏண்டா கள்ளக் கறன்ட் எடுக்கவில்லை” என்று கேட்டார்கள்.“செய்யனும் என்றிருக்கிறேன் ஒலைக்கொட்டில் என்பதால் கொஞ்சம் யோசனை’ என்று பதிலளித்தான்.
யாழ்ப்பாணத்தில் வசதியற்ற மக்கள் சிவில் நிர்வாகம் குழப்பியதால் வீதிக்கறன்ட் வயரில் ஒரு வயரை கொளுவி ‘வயறிங் செய்து மற்ற வயறை பைப் ஒன்றில் சேர்த்து கிடங்கு கிண்டி உப்பைப் போட்டு சரியான எர்த் அமைப்பை ஏற்படுத்தி எளிய விட்டார்கள். சிறிது ஆபத்துதான்.
மழைச் சமயங்களில் வயறில் வோல்ட்டேஜ் கூட வரும்போது எரிந்துவிடலாம் கிடுகு ஒலைகள் ஒரேயடியாய் எரிந்துவிடும். வாழ்க்கையே போராட்டம்தான். “பழைய பெற்றோல்மாக்ஸ் இருந்தாலும் நல்லம் தான் எங்கடப் பக்கம் விசாரித்துப் பார்க்கிறேன்” என்றான் சுரேஷ்.
“ரோடு போடணும் நான் போகிறேன்” என்று எழும்பினான் பாபு. அந்நேரம் ஊரே கலவரப்பட்டதுபோல செய்தி வந்தது. யாரோ சிலர் குணத்தானின் தோளிலே வெட்டிப்போட்டு ஒடிவிட்டார்களாம்.கடையை மூடிவிட்டு பள்ளிக்கூடப்பக்கம் ஒடினார்கள். சில தகவல்களை அறிந்தபிறகே வெட்டியவர்கள் பற்றி சிறிது அனுமானிக்க முடிந்தது.வாசிகசாலையை அண்டிய காணித்துண்டுகளில் ஒன்றில் கனகாலமாக நெல்லு விதைக்கப்படுவதில்லை. கலட்டித் தரையாகவிருந்ததும் ஒரு காரணம். ஆடுமாடுகளை அவ்விடத்தில் மக்கள் கட்டி வந்தவர்கள். சிவனோ, சிதம்பரக் காணித்துண்டு என்று கதைத்தார்கள். ஆனால் அது தெற்கராலியாட்களின் பொறுப்பிலேயிருந்தது.
தெற்கராலியாட்கள் உண்மையான விவசாயிகள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் அவர்கள். குழந்தை, குட்டி, பெடியள்,குமருகள், பெற்றோர் என எல்லோரும் வயலிலே இறங்கி வேலை செய்கிறவர்கள், கடின உழைப்பாளிகள், வடக்கராலியாட்களுக்கு அவர்களில் பலரைத் தெரியும். தவிர உறவுத் தொடர்புகளும் அதிகம்.தொழில் வாரியான சாதியம் அங்கே நிலவியது. தொழில் துறையில் ஐக்கியப்படுத்தப்பட்டிருந்ததால் கடுமையான போக்குகள் நிலவவில்லை .
ஆனால், அரச உத்தியோகம் VC. விவசாய உத்தியோகத்தர் முதலானவைகளை தம்மவர்களே கைப்பற்றிவிடவேண்டும் என்ற மெளனப் போட்டியிருந்தது.
அதில் ஆட்சியுடையவர்களாக அவ் விவசாயப் பிரிவினரே இருந்தனர். அதுவே அங்கே சாதியமாகவே நிலவ வைச்சது எனலாம். தம்மவர்களை சேர்ப்பது, மற்றவர்களை ஒதுக்குவது.இப்படி இழைகள் வடக்கராலியிலே, மேம்போக்காக விவசாயப் பிரிவினரே இருந்தனர். இங்கிருப்பவர்கள் மண்ணோடு ஒட்டியவர்களாக இவர்கள்ளிருக்கவில்லை (நிலப்பிரபுத்துவர்போல), குடிமைச் சாதியினரே மண்ணின் மைந்தர்களாகவிருந்தனர். இருந்தாலும், இருவரும் ஒரே சாதியினர் என்று சொல்லிக்கொண்டார்கள்.
தெற்கராலிப் பெடியளைக் கேட்டால், சொல்லுவார்கள், “எல்லாக் காணிகளுமே வடக்கராலியினர் கையிலேயிருந்தன. சிறிமாவோ காலத்திலே, குத்தகைக்கு எடுத்து வெங்காயம், மிளகாய், புகையிலை பயிரை வைச்சு உழைச்ச காசிலே அவர்களிடமிருந்து பெரும்பாலும் வாங்கிய காணிகளே தற்போது எங்களுடையதாக விருப்பன’ என்பார்கள். கோயில் காணிகள் மண் தொடர்பு காரணமாக இரு பக்கங்களிலும் ஒரிரண்டு இருந்தன. அக்காணிகள் பொதுவாக பொறுப்பு வகிக்கிறவர்களின் உரித்தாகவேயிருந்தன. 25-30 வருஷமாக மலிவுக்குத்தகை கட்டிய பிறகு கோயில்காரர்களின் விட்டு நழுவியிருந்தன. ஆனால் உறுதி கோயில்காரர்களிடமே இருந்தன. அக்காணிகளை யாரும் விற்க முடியாது.
பொதுவாக முத்தன்ர சமூகத்தினரின் குடியிருப்புகள் கணிசமானவை. அத்தகைய காணிகளிலே இருந்தன.குடிமைச் சாதியாக சீரழிந்த அவர்களுக்கு ஏது பணபலம்? கோயில் காணிகளை மனமுவந்து கொடுக்க. எல்லாச் சாதியினருக்கும் வருவதில்லையே! காணியிலே விழுந்த பற்றும், அதை விரிவாக்கும் சிந்தனை நோய் பிடித்தவர்களாக வே இருக்கிறார்கள். இன்றைய அரசிடம் காணப்படுகிற மண் அபகரிப்பைப் போல.அத்துண்டிலே, குணம் கனநாளாய் கண் வைத்திருந்தான்.
வடக்கராலியாட்களின் காணித்துண்டாகவிருந்ததால் இத்தனை தூரம் பிரச்சனை இருந்திராது. ஊரான் என்பதால் அல்ல.அவர்கள் மண்ணோடு பிணைக்கப்பட்டவர்கள் இல்லை. சில சமயங்களில் சிலர் அறுவடைக் காலத்தில் மட்டும் இறங்கி வேலை செய்யிறது. இருந்தது. அவை மட்டும் ஆழப்பிணைப்பை ஏற்படுத்த போதியதில்லை.
தெற்கராலியாட்கள் நிலமையோ வேறு. 300 நாளாவது காணியிலே இருப்பவர்கள். புருஷன் வேலைக்கு போயிருந்தால், பெஞ்சாதி, குழந்தை குட்டியோட காணியிலே நிற்பாள்.காணியற்றவர்களாக சீரழிந்து கஷ்டப்பட்டு .பெற்றிருந்ததால் அதைக் கட்டிக் காக்கிற தன்மை கூடுதலாக காணப்பட்டது.
ஆனால், குணத்தானும் மாமா, மாமி வீட்டிலே எத்தனை நாள் இருப்பான். வடக்கராலிக்காரர்.என்று தேடிப்போக முடியுமா? தவிர குடியிருப்புக்களோடேயே இருப்பது போல வும் வருமா , என்ன?‘அத்துமீறல்’ “வருவது வரட்டும்” என்று முதல் நாளிரவு நண்பர்களுடன் ரகசியமாக கொட்டில் போட்டிருந்தான். பகலில் வேலியடைத்திருக்கிறான். வெளிப்படையாக எதிர்ப்பு வராததால்.பயம் போயிருந்தது. நண்பர்களும் அகன்றிருந்தார்கள். ஏதும் நடந்தால் ‘கூப்பாடு’ போடுவதாக ஏற்பாடு இருந்தது.
வயல் இருட்டோடு நாலைஞ்சு பேர் வந்து “குணமண்ணை, குணமண்ணை” என்று கூப்பிட்டார்கள். ‘தெரிஞ்சவையள்’ என படலைக்கு வந்திருக்கிறான். இருட்டிலே யார் என சரிவரத் தெரியவில்லை. துணிஞ்சு வெளிய வர ஒருத்தன் மடக்கி வாயைப் பொத்திப் பிடிக்க, மற்றவன் காலைப் பிடித்து சத்தமில்லாது தூக்கிக்கொண்டு வயல் புறமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
வரம்பிலே வாயை துணியால் அடைத்துவிட்டு கையை பின்னுக்குக் கட்டிப்போட்டு தடிகளால் அடித்து துவைத்திருக்கிறார்கள். முன்கோபக்காரரான ஒருத்தன் வில்லுக்கத்தியை எடுத்து தோளில் இழுத்துவிட்டான். ஆழமாக விழுந்த காயம்.அவர்களுள் குழப்பம். வெறுமனே அடித்துவிட்டு போகவே வந்திருக்கிறார்கள். தோள் காயத்தை துணியால் ரத்தம் போகாதவாது இழுத்து கட்டிவிட்டு, கைக்கட்டை அவிழ்த்து விட்டு ஒடிப்போயிருக்கிறார்கள்.
மனுசிக்காரி கனநேரமாய் காணவில்லை என்று வெளிய வந்து பார்த்திருக்கிறாள். முணங்கிற சத்தம் வயல் பக்கமிருந்து மெதுவாக கேட்க, கலவரமுற்று கத்தி ஊரைக் கூட்டினாள். குணத்திற்கும் ஆட்களை சரிவர தெரியாது. ‘காணிக்காரர்கள் தான் செய்திருக்கவேண்டும்’ என்று அனுமானித்தார்கள்.
பாபு இவர்களுடன் இழுபட்டு வேடிக்கைப் பார்த்து 8.00 மணிக்கே வீடு திரும்பினான். இவ்விசயத்தால் செல்லமுத்தண்ணையும் 9.00 மணிக்கே வந்தார். அவர் மனநிலையும் சரியில்லை. இன்னும் கொஞ்ச வேலையேயிருந்தது.
குலனை மக்களுக்கு அச்செய்தி ஒரு பொருட்டாகவிருக்கவில்லை. பெடியளுக்கும் கூடத்தான். தன் மகனிடம் ட்ராக்டரைக் கொடுத்து விட்டு அவர் வீட்டுக்கு போய்விட்டார்.“சொந்த சகோதரர் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’ பாரதியாரின் வரியே பாபுவுக்கு ஞாபகம் வந்துகொண்டிருந்தது.
வடக்கராலிச் சமூகம் சுடலைப் பிரச்சனையை நெஞ்சில் வைச்சுக்கொண்டு ‘காணித்துண்டை விடாதீங்கடா’ என்று தெற்கராலிக்கு அட்வைஸ் பண்ணியது. பள்ளிக்கூடம் வெட்டினதுக்கு நட்ட ஈடுபற்றி பிரலாபித்தது.ஆத்திரத்தில் தம், பெரியவர்களைப் பார்த்து ‘அங்கால பக்கம் சாவீட்டுக்க விறகடுக்கல், கிடங்கு வெட்டல் முதலான குடிமை வேலைகளுக்கு போகக்கூடாது” என்று கட்டுப்படுத்தியது. வடக்கராலியில் சிதறிக்கிடக்கும் தம்மவர்களையும் போய் பார்த்தும் கேட்டது. “இனிமேல் குடிமைவேலைக்கு போகாதீர்கள்.”
அங்கே, “நீ யார் கேட்க, எங்கட வாசிகசாலைப் பெடியள்ளையே நாம்
கேட்போம்” என்று இலகுவாகப் புறக்கணிக்கப்படவே அவ்விடத்துப் பெடியளை அணுகினார்கள்.
“பல விளைவுகளை சமாளிக்க சூழல் சாதகமாக இல்லை. நாம் வற்புறுத்தமாட்டோம் ஏலுமென்றால் சொல்லிப் பார்க்கிறோம்.பிறகு, அவர்கள் பாடு” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.
அப்பெடியளுக்கு முதல் தடவையாக தம்மத்தியிலுள்ள சீரழிவு திகைக்க வைத்தது. அந்த முயற்சியை கைவிட்டார்கள். கோபமுற்ற மற்ற சமூகம் பள்ளிக்கூடத்தடி ஆட்களை யாரும் வேலைக்கு எடுக்கக்கூடாது. சாந்தனின் (பள்ளியைச் சேர்ந்தவன்) கடையிலே சாமான்கள் வாங்கக்கூடாது” என்று வீடு வீடாக பெடியள் அணியை அனுப்பி பிரச்சாரம் செய்தது. கடைவிசயம் சுகுணனின் சதி.
அராலியிலே குறிப்பிடக்கூடிய கடைகளில் ஒன்றாக சாந்தன் விடா முயற்சியுடன் புத்திசாலித் தனத்துடனும் கட்டி வளர்த்திருந்தான். தரமான சாமான்கள் என்று எல்லோருமே அக்கடையை நாடினார்கள். பலர்க்கு கடையிலே கொப்பிகள் இருந்தன.சுகுணன் புதிதாக கடையை திறந்தவன் அவனால் ‘கொப்பிகள் வைக்கமுடியவில்லை; தவிர, அவன் கடையில் சிறிய விலை அதிகரிப்பாகவும் இருந்தன எனவே சூழலை சாதகமாக பயன்படுத்தமுயன்றான்.
சாந்தனின் நிலமை மோசமானது. எதைக் குறித்தும் சரிபிழைகளைப் பார்க்காமல் இருபெடியள் அணிகளும் தம்பக்கமிருக்கிற துருப்புகளை வைத்து பகடைக்காய்கள் ஆடின. வேலியடைத்தல், வயல்வேலைகள், கோழிப்பண்ணைகளைப் பார்த்தல், ஆடுமாடுகளைக் கவனித்தல் பழப்புளிக் காலங்களில் அதோடு ஒட்டிய வேலைகள் என கணிசமான குடிமை வேலைகளை செய்தார்கள்.
அதைவிட பாரம்பரியமானவை.என சாவீட்டிலே தட்சணை பெறும் வேலைகள் (அடிமை குடிமையை ஞாபகமூட்டுவதாகவிருந்தன) சிலவும் இருந்தன.
வேலையற்றிருந்ததால் ஆண்கள் சீவின கள்ளை தாமே குடித்துவிட்டு ஒழுங்கை வழிய அடிபட்டு மண்ணில் புரண்டார்கள். தடுக்கப்போன பொஞ்சாதி, பிள்ளைகளையும் அடித்து என ஒருவித குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
வீம்பாக மறுதலித்த சமூகமும் மற்றபகுதி ஆட்களை வேலைகளுக்கு புதிதாக சேர்த்தது. ஒரே சமூகத்திலே ஒருவர் அழவும், மற்றவர் வேலை செய்யிற போக்கும் பெடியளுக்கு சிறிய கலக்கத்தைக் கொடுத்தது.ஒரே நாளில் அவர்களில் கணிசமான பேர் களவுகளில் ஈடுபடுவதை அச்சமூகத்தினர் கண்டார்கள். பெடியளை விட்டுவிட்டு பிற்பகல் 6.00 மணிக்கு சர்ந்தனின் கடையிலே ஏறி, சாமான்கள் வாங்கிக்கொண்டு வேலைக்கு பழையபடி வரச்சொல்லி அச்சமுகம் அறிவித்தது.
“பாரம்பரிய பழக்கமான குடிமை வேலைகளை மட்டும் செய்யாதீர்கள். மற்றவேலைகளை செய்யலாம்” என்று பள்ளிக்கூடத்தடியும் அடக்கி வாசித்தது.
நட்டஈடு பிரச்சனையால் தெற்கராலிக் காணிக்காரர் யாரும் பிறகு வரவில்லை
இப்படி நிறைய வேலிகள் ஒவ்வொரு கிராமங்களிலேயுமே போடப்பட்டிருக்கின்றன.
யாருமே பிடுங்கி எறியவுமில்லை; நிலமைகளை ஆய்வுக்குள்ளாக்கவுமில்லை. சரியான முறைகளில் கையாளவும் இல்லை. இப்பவும் கூட யாழ்ப்பாண நகரத்தில் சாதிக்குறிச்சிகளை சிறிதளவு இனம் காணமுடியும்.
அங்கு “கம்யூனிஸ்ட் கட்சியினரின் இடையறாத தேனீர்க் கடை, கோயில், சுடலை திறத்தல்….. என எடுத்த போராட்டங்களால் சிறிதளவு திருந்திய நிலை காணப்படுகின்றது என்னவோ உண்மை தான். அத்தாக்கங்கள் கிராமங்கள் வழியேயும் ஒருசதவீதமாவது பரவியேயிருந்தன.
வேரோடியிருந்த சாதியத்தால் அவை சீர்திருத்தங்களாக மட்டுமேஇருந்தன. தற்போதைய அரசியல் கட்சிகளைப்போல.மனம் ஒப்பாத அரசியலே நிலவின. அங்கே, கோயில் பிரச்சனை ஒன்றும் பிறகு ஏற்பட்டு மறைந்திருந்தது.
திருவிழாக் காலங்களில் ஒரு திருவிழாவை குடிமைச் சமூகத்திற்கு கொடுத்திருந்தார்கள். இருந்தாலும் உள்பிரகாரத்திலிருந்து. (பிள்ளைத் தண்டில்) சாமியை கட்டி வாரதை மேல் சமூகப்பெடியள்களே செய்தார்கள்.
வெளிய வந்து அது கொம்புகளில் கட்டிய பிறகே பள்ளிச்சமூகம் தூக்கி வெளிவீதியில் வலம் வந்தது.கோயிலுக்குள் போகவிட்டிருந்தாலும், இந்த வழக்கம் மட்டும் நீடித்தே வந்தது.
காணிப்பிரச்சனையால் முறுகல் அடைந்த ‘பெடியள் “பிள்ளைத்தண்டையும் நாம்தாம் சுமப்போம்” எனப் பிரச்சனைப்பட்டார்கள்.“அதை, இந்து இளைஞர் கூட்டத்திலே பேசி முடிவெடுத்த பிறகே சொல்ல முடியும்” மற்றவர்களால் இழுத்தடிக்கப்பட்டன.கடைசியில் தயங்கியே அவ்வுரிமையைக் கொடுத்தார்கள். அதேசமயம் இன்னொரு கோவிலே ‘சித்திராபெளர்ணமிக் கஞ்சி ஊத்தலை’ உள்ளே செய்து வந்தவர்கள், திடீரென வெளிவாசலில் வைத்து ஊத்த ஆரம்பித்தார்கள். எல்லார் சமூகத்தினரையுமே அங்கேயிருந்து வாங்க வைத்தார்கள். கோயிலுக்குள் வராதைக் கட்டுப்படுத்த இப்படி ஒரு மாதிரியை பின்பற்றினார்கள்.
மேளக்கச்சேரி, வில்லுப்பாட்டுக்கள் வெளிவீதியிலே வைக்கப்பட்டு வார சிறிய கோவிலாக விருந்ததால், அவர்களை யாருமே குறை சொல்ல முடியவில்லை.
கோவில் சம்பவங்களை எழுதி வேலன், “தர்மஓளி” என வாசிகசாலையில் போட்ட கையெழுத்துப்பத்திரிகை கிழித்தெறியப்பட்டது.
“நீ வாசிகசாலையில் எதையும் போடலாம் அது உன்னுடைய உரிமை. அதை நாம் எரிக்கலாம். கிழிக்கலாம். அது உங்கtஉரிமை” என்று இன்றைய அரசாங்கம் போல வக்கிரமாக அவன் பெடியள் அணி சொல்லியது.
எங்குமே வேலிகள்!
சொந்தச் சமூகத்தில், வெளிச்சமூகத்தில் நட்புகரம் நீட்டிய முற்போக்கு இளைஞர்கள் மத்தியில்.எல்லாம் நிறைய வேலிகள்.
அங்கே,கலப்பு திருமணங்களை யாரும் அனுமதித்ததில்லை. செய்தவர்கள் ஒதுங்கியவர்களாக.அல்லது வேறு பிரதேசங்களுக்கு (முன்னர் தீவுக்கு, திருமலை, மட்டக்களப்பு, வவுனியா) சென்றவர்களாகவேயிருக்கிறார்கள்.
வேலிகள் உறுதியாக நிற்கின்றன. காலம் ஒடி.இயக்கச்சூழல் கவிந்தபோது பெடியள், சாதியமைப்புகளைவிட மேலானவை என இயக்கங்கள் மேல் நம்பிக்கை வைத்தார்கள். அதிலே, அனைவரும் சகோதரர்களாக இணைதல் நடந்தது. “சாதியம் இனி எழும்ப முடியாது’ என்பது அவர்களின் கருத்தாகவிருந்தது. மூவரும், வேலிகள் உடைத்தெறியனும் என்ற ஆவேசத்தில் தம் நண்பர்கள் மூலம் சிற்சில இயக்கங்களுடன் தொடர்புகொண்டு ஒடினார்கள்.
பாபு , மட்டும் வீட்டோடு நிற்க, வேலன் ஒன்றிலே, சுரேஷ் இன்னொன்றிலே, முத்தன் கூட ஒன்றினுடைய ஆளானான். இயக்கங்கள் ஒன்றுபட்டிருந்தால் நண்பர்களில் சகோதரத்துவம் மேலும் வளர்ந்திருக்கும். பிளவுபட்டதாலும்.அரசியல் புகுந்ததாலும் இப்ப, அவர்கள் வேற இயக்கப் பிரதிநிதிகளாக விருக்கிறார்கள்.
முந்தி சாதி, இப்ப இயக்கம். பெரியவர்கள் இயக்கத்தைப் பார்க்கவில்லை. சாதியை மட்டும் பார்த்தார்கள் அதேபோல, பெடியள் புதிதாக பார்க்கிற சாதியாக இயக்கங்கள்.
எரிசட்டியிலிருந்து தப்பி, கொதிக்கிற எண்ணெயில் விழுந்தது போல.
‘மக்கள் விடுதலைக்காக போராடுவதால், எல்லோரும் ஏதோ ஒருநாள் என்று சேர்வார்கள்’ என்ற நம்பிக்கையையும் நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
– தாயகம் பத்திரிகையில் வெளியான குறுநாவல்.