கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 27,548 
 
 

அடுப்பில் சாம்பார் கொதிக்க தாளித்து இறக்கி வைத்தாள் வத்சலா.

ஹாலில் அபியும், அவள் அப்பாவும் சிரிக்கும் சப்தம் கையை டவலால் துடைத்தபடி வந்தாள்.

“”அப்பா, இந்த ப்ரோக்ராம் இன்னும் ஒரு வாரத்தில் முடித்தாகணும்” லேப்டாப்பைத் திறந்து அதில் தலையைக் கவிழ்த்திருந்தார்கள் எட்டிப் பார்த்தாள்.
போஸ்ட்கவரில் ஏதோ புள்ளிபுள்ளியாய் ஓடி விழுந்தபடி இருந்தது என்ன பண்றீங்க?

வேரில்லா மரம்!

“”டவுன்லோடு பண்ணிட்டு இருக்கோம்” கண்களை எடுக்காமல் மாதவன் பதிலளிக்க,

“”அப்படின்னா என்னங்க?”

“”ஐயோ அம்மா நீ வேற தொணதொணன்னு உனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது. கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?”

மகளின் பதிலில் முகம் வாடிப் போக,

“”சரி, சமையல் ரெடியாயிடுச்சு. பசிச்சா சொல்லுங்க. எடுத்து வைக்கிறேன்.

“”என்ன வழக்கம் போல சாம்பார், பொரியல் செய்திருப்போ புதுசா எதுவும் ட்ரை பண்ண மாட்டே.”

“”ஓ.கே. பசிச்ச பிறகே சாப்பிடலாம்.”

கணவனின் பதில்ல வாடிய முகம் மேலும் வதங்கியது.

மகனின் அறை நோக்கி நடந்தாள்.

காதில் ப்ளூடூத்தை மாட்டிக்கொண்டு, பேசிக் கொண்டிருந்தான்.

“”குணா சாப்பிட வர்றியாப்பா?”

சைகையாலே வேண்டாம் என சொல்ல,

“”காலையிலும் சாப்பிடலை வந்து ஒரு வாய் சாப்பிட்டுப் போடா.”

“”ஜஸ்ட் ஒன் மினிட்…”

திரும்பி அம்மாவைப் பார்த்தான்.

“”உனக்கெதாவது அறிவிருக்காம்மா ஸ்கைப் லாக் கின் பண்ணி, லண்டனில் இருக்கிற என் ப்ரெண்டோடு பேசிட்டு இருக்கேன். குறுக்கே வந்து பேசற.”

“”தெரியலைடா… நீ ஏதோ பண்ணிட்டு இருக்கேன்னு நினைச்சேன்.”

“”ஐயோ அம்மா உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. நீ போய் கிச்சனில் இரு இன்னும் அரை மணியில் வரேன்.”

நான் ஒரு மக்கு எட்டாம் வகுப்பு வரை படித்தவள்.

இவர்கள் அளவுக்குப் படிப்பறிவில்லை.

மனம் வலித்தது.

எண்ணெயில் அப்பளத்தைப் பொரித்து எடுத்து வைத்தவள், சாப்பிடும் மூவவுக்கும் வைத்தாள்.

“”அம்மாவுக்கு செல் போன் வாங்கிக் கொடுத்ததே வேஸ்ட்.”

“”என்னடா சொல்றே.”

“”எல்லா நம்பரும் போட்டுக் கொடுத்திருக்கேன். எனக்கு அதில் பார்க்கத் தெரியாது. நோட்டு புக்கில் எழுதி வைன்னு சொல்றாங்க.”

குணா சொல்ல, சிரிக்கிறார்கள்.

“”நீ எந்த உலகத்தில் இருக்கே. மகள் சாஃப்ட்வேர் இஞ்சினியர், பையன் மெக்கானிக்கல் இஞ்சினியர், கணவர் க்ரேட் லாயர். நீ மட்டும் எதுவும் தெரியாததால் சுத்த வேஸ்ட்டா இருக்கே.”

“”எது எப்படியோ, நீ வச்சிருக்கிற சாம்பார் சூப்பர்.”

“”இத்தனை வருஷமா செய்யறாங்க. அதை கூட நல்லா செய்யாட்டி எப்படி?”
குணா சொல்ல, திரும்பவும் சிரிப்பு.

ஆத்திரமும், ஆறாமையும் வர, அடுப்படுக்குள் நுழைகிறாள்.

குளித்து ஈரத்தலையுடன் சுவாமி விளக்கேற்றி அமர்ந்தவன், கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது.

கடவுளே… என்னை ஏன் எதுவும் தெரிந்துகொள்ள முடியாதவளாய் தற்குறியாய் படைத்தாய். என் பிள்ளைகளை என்னைக் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்.
இவர்கள் முன் அறிவிலியாய் நிற்கிறேன். இவர்கள் உலகமே வேறு, நான் மட்டும் தனித்து விடப்பட்டது போல… அவர்களுடன் ஒன்ற முடியவில்லையே.

ஈரத்தலையை துவட்ட மனமில்லாமல் படுத்தவள், அப்படியே தூங்கிப் போகிறாள்.

“”அம்மா, உடம்பு அனலாகக் கொதிக்குது.”

அபி சொல்ல, அடுத்த நிமிடம் அம்மாவை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் செல்கிறான் குணா.

அம்மாவைப் படுக்கையில் படுக்க வைக்கிறாள்.

“”அக்கா, அம்மாவுக்குப் பால் கலந்து எடுத்து வா.”

“”மாத்திரை போட்டுட்டு, ரெஸ்ட் எடும்மா, சரியாயிடும்.”

குணா சொல்ல,

“”ஆமாம், வத்சலா எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம், நீ நிம்மதியா தூங்கு.”

அருகில் அமர்கிறார் மாதவன்.

“”கொஞ்ச நாளா அம்மா முகமே சரியில்லை. நாம் சிரிச்சு பேசினா கூட, அவங்க கலந்துக்கிறதில்லை. தனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லைங்கிறதைப் போல உட்கார்ந்திருப்பாங்க.”

அபி சொல்ல, மௌனமாக இருக்கிறான் குணா.

மறுநாள் அபி, அவளுக்குத் தெரிந்ததைச் சமைக்க,

“”நீங்க ரெண்டு பேரும் வேலைக்குக் கிளம்புங்க. நான் அம்மா கிட்டே இருக்கேன்” குணா சொல்ல,

“”அம்மாவுக்குக் கஞ்சி வச்சுக் கொடுக்கணும் உன்னால முடியுமா குணா?”

“”எல்லாம் முடியும். நீங்க கிளம்புங்க.”

“”அம்மா எழுந்திரு. சூடா கஞ்சி கொண்டு வந்திருக்கேன். இப்ப ஜுரம் எப்படிம்மா இருக்கு.”

“”பரவாயில்லைப்பா. நீ வேலைக்குப் போகலையா குணா.”

“”எப்படிம்மா. உன்னை இந்த நிலையில் விட்டுட்டு எல்லோரும் போக முடியும்.”

“”ஸாரிப்பா… என்னால உங்களுக்கெல்லாம் கஷ்டம்.”

“”என்னம்மா இது… ஏன் இப்படிப் பேசற?”

“”இல்லை. உனக்கு எத்தனையோ வேலை இருக்கும்.”

“”எனக்காக…”

கஞ்சி டம்ளரை டேபிளில் வைத்தவன் அம்மாவைப் பார்க்கிறான்.

“”உனக்கு எனஅனம்மா பிரச்சனை. மறைக்காம சொல்லு எதுவாக இருந்தாலும், மனசு விட்டுப் பேசும்மா.”

அம்மாவின் முகவாயைப் பிடித்து நிமிர்த்த… கண்களில் கண்ணீர்.

“”அம்மா என்ன இது… எதுக்கு அழறே?”

“”நான் படிக்காதவ. உங்க அளவுக்கு என்னால எதையும் தெரிஞ்சுக்க முடியலை. நீங்க மூணு பேரும் அதைக் காரணமாக வச்சு, என்னை எதுக்குமே லாயக்கில்லாதவன்னு நினைச்சு, சிரிக்கிறது, கேலி பேசறது…”

நீங்க என்னை ஒதுக்கிறதை தாங்க முடியலை.

“”எனக்கு தெரிஞ்சதெல்லாம்… நான் உங்க மேலே வச்சிருக்கிற அன்பு ஒண்ணு தான்.”

ஐயோ… மக்கு அம்மா. நீ புரிஞ்சுக்கிட்டது அவ்வளவுதான். இப்பப்பாரு நீ இரண்டு நாளா படுக்கையிலே இருக்க.

எங்க யாருக்கும் ஒரு வேலையும் ஓடலை. அக்கா முடிச்சுக் கொடுக்க வேண்டிய ப்ரோக்ராம் அப்படியே இருக்கு. கேட்டா அம்மாவுக்கு முடியலை. அதே நினைப்பா இருக்குன்னு சொல்றா.

அப்பா… இந்த வாரம் இருந்த இரண்டு கேஸையும் அடுத்த வாரம் தள்ளிப் போட்டுட்டாரு. “மனசு ஒரு நிலையில் இல்லை குணா. அம்மா எழுந்து நடமாடட்டும்னு’ சொல்றாரு.

இன்னைக்கு என் க்ளோஸ் ப்ரெண்ட் லண்டனில் இருக்கிறவன் பர்த்டே. நான்தான் முதலில் விஷ் பண்ணுவேன். இப்ப வரைக்கும் அவன்கிட்ட பேசலை.

எல்லாத்துக்கும் காரணம் நீதான்மா…

உன்னைச் சுத்தி தான் நாங்க இயங்கிட்டு இருக்கோம். உன் அன்பும், பாசமும் தான் எங்களை இயக்கிட்டு இருக்கு.”

உங்கிட்டேயிருந்து வந்தவங்கம்மா நாங்க. இந்த அறிவும், புத்திசாலித்தனமும் நீ கொடுத்தது.

உனக்கு எதுவும் தெரியலைன்னு வருத்தப்படாதே. ஆணிவேராக இருந்து எங்களை வளர்க்கிறது நீதான்மா. நாங்க பேசினது… எங்க செல்ல அம்மாவை வருத்தப்பட வச்சிருந்தா எங்களை மன்னிச்சிடும்மா…

உன் மேல நாங்க வச்சிருக்கிற அபரிமிதமான அன்பினால் தான் பேசறோமே தவிர, உன்னை என்னைக்குமே ஒதுக்கமாட்டோம்.”

கண்களைத் துடைத்துக் கொண்டவளாய், பெருமிதம் பொங்க மகனைத் தழுவுகிறாள், வத்சலா.

– மே 2014

1 thought on “வேரில்லா மரம்

  1. Really very very touching my heart. I love my mother. Sister you are given nice emotional live story. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *