கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 7,296 
 
 

(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16

அத்தியாயம்-13

உள்ளே போன கிட்டா சர்பத் கொண்டு வந்தான்.

“இந்தா, ஐஸ் போட்டிருக்கேன், குடி! இந்த வெய்யிலுக்கு ‘ஜில்’லுனு இருக்கும்” என்றான்.

பரதேசிக்கோலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை நாயன ஓசை அறிவித்தது.

“காசி யாத்திரை கிட்டத்துல வந்துடுத்து. மாப்பிள்ளை வாசலுக்கு வரப் போறார். ஆர்த்தி, ஆர்த்தி!” என்று உரத்த குரலில் அவசரப்பட்டார் சாஸ்திரிகள்.

“மூர்த்தி! ஆபீஸ் போறவாளுக்காக இப்பவே ஒரு பந்தி போடப்போறா. நாம அந்தப் பந்திலேயே உட்கார்ந்துடுவோம்,” என்றான் கிட்டா.

“முகூர்த்தம் முடிஞ்சப்புறம் சாப்பிடலாமே!” என்றான் மூர்த்தி.

“மணி பதினொண்ணாயிடும். அது வரைக்கும் பசி தாங்காது. அத்தோட முதல் பந்தி சாப்பாடுதான் ஜோராயிருக்கும். எப்பவும் பந்திக்கு முந்திக்கணும்; தெரிஞ்சுக்கோ” என்றான் கிட்டா.

இருவரும் பந்தியில் போய் ஒரு மூலையாக உட்கார்ந்து கொண்டார்கள்.

“உங்க மாமாவிடம் என்னை அறிமுகம் பண்ணி வைக்கிறதாச் சொன்னயே!” என்றான் மூர்த்தி.

“ஆகட்டும், முகூர்த்தம் முடிஞ்சதும் கொஞ்சம் ஓய்வா இருப்பார். சமயம் பார்த்துப் பண்ணி வைக்கறேன்” என்று பச்சடியை விரலால் ருசி பார்த்தான் கிட்டா.

“பரிசேஷணம் பண்ணாம சாப்டறது தப்பு இல்லையா?”

“இது ஆபீஸ்காராள் பந்தி! இங்க வைதிகம் பார்க்க வேணாம்” என்றான் கிட்டா.

“எனக்கு மறுபடியும் வேத அத்தியயனம் பண்ணனும்னு கொள்ளை ஆசையா இருக்கு!”

“நீதான் வரமாட்டங்கறயே! என்னைத் தேட வேணாம்னு கனபாடிகளுக்குக் கடுதாசி வேற எழுதிப் போட்டுட்டே! உன் லெட்டரைப் படிச்சுட்டு அவர் எப்படி தேம்பித் தேம்பி அழுதார் தெரியுமா?”

“வேற எங்கயாவது பாடசாலை இருந்தா சேர்ந்து படிக்கலாம்.”

“இந்த ஊர்லயே ஒரு பாடசாலை இருக்கு! எங்க மாமாதான் அதுக்கு போஷகர். என்கிட்ட ரொம்ப அபிமானம் அவருக்கு. கவலைப்படாதே! நான் சொன்னா நாளைக்கே சேர்த்துடுவார். நீதான் ஒரு தீர்மானத்துக்கும் வரமாட்டேங்கறயே! சஞ்சலப்படறயே! க்ஷணசித்தம் க்ஷணபித்தமா இருக்கயே! இன்னைக்கு வேதங்கறே! நாளைக்கு வேணாங்கறே! முதல்ல மனசை திடப்படுத்திக்கோ… இன்னொரு ஜாங்கிரி சாப்பிடறயா? எப்படி இருக்கு பார் ரோஜாப்பூ மாதிரி!”

“எங்கப்பா கடுதாசி எழுதியிருக்கார்…”

“என்ன எழுதியிருக்கார்?”

“‘அம்மா சங்கலியைக் கழுத்தைவிட்டு எடுக்காதே. வேதத்தைப் பாதில நிறுத்தாதே! கனபாடிகள் பேச்சைத் தட்டாதே’ன்னு முக்கியமா மூணு விஷயம் எழுதியிருக்கார்.”

“வேதத்தை விட்டுட்டே! கனபாடிகள் பேச்சைத் தட்டிட்டே! ரெண்டு விஷயம் போச்சு. இன்னும் ஒண்ணுதான் பாக்கி. கழுத்துச் சங்கிலியை விட்டு வெச்சிருக்கே!”

“இப்ப அதையும் வித்துடலாம்னுதான் கடைத் தெருவுக்குப் போயிண்டிருந்தேன். நடு வழியில உன்னைப் பார்த்தேன்….”

“சந்தியாவந்தனம் ஒழுங்காப் பண்றயா? தினம் ஒரு ஆவ்ருத்தியாவது வேதம் சொல்றயா?”

”சத்திரத்துக்குப் பக்கத்துலயே புது ஆறு ஓடறது! காவேரித் தண்ணிதான். ஸ்நானத்துக்கு அங்க போயிடுவேன். ஜபதபம் எல்லாம் ஆனந்தா லாட்ஜ்ல. வைதிகாளுக்கு ஏத்த மாதிரி வசதியான இடம். மனஸ்லதான் நிம்மதி இல்லே”.

“எங்க தங்கியிருக்கே?”

“சத்திரத்துல. என்னை வெள்ளத்துலேந்து காப்பாத்தினாளே, அந்தப் பெண்ணோட!”

“அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்ணோடயா?” பாயசத்திலிருந்த முந்திரியை விரலால் நெருடினான் கிட்டா.

“ஆமாம்; அவளைப் பார்த்து நன்றி சொல்லிட்டுப் போலாம்னுதான் இங்க வந்தேன். குறள் படிச்சுட்டா மட்டும் போதுமா? நன்றி உணர்வை மனஸ்லயே வச்சிண்டிருக்கக் கூடாது. வெளிப்படையா வாய்விட்டுச் சொல்லணும். சமயம் வரப்போ காரியத்துலயும் காட்டணும். இங்க வந்தப்புறம், அவளோட பழகினப்புறம் அவளை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவளும் ரொம்பப் பிரியமா இருக்கா!”

“ம்… ஆசாரம் கெடாம இருந்தா சரி, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப்போற?”

“அதான் தெரியலே. ஒரே குழப்பமா இருக்கு. குடுமியை எடுத்துடச் சொல்றா. எனக்குதான் இஷ்டமில்லே. தட்டிக் கழிச்சுண்டே இருக்கேன். வேதத்தைப் பாதியில விட்டுடவும் மனசு வரலே. அதைத் தொடர்ந்து படிக்கணும்னு ஒரு வேகமே வந்திருக்கு. இன்னைக்கு அப்பா கடுதாசியைப் படிச்சப்புறம் அந்த வேகம் ஒரு வெறியாவே மாறியிருக்கு.”

“அவ பேர் என்ன சொன்னே?”

“மஞ்சு… ரொம்ப நல்ல பெண். என்மீது உசிரையே வச்சிருக்கா… எனக்குத்தான் இந்தக் கூத்தாடி வாழ்க்கை பிடிக்கலே. எந்த நேரமும் மனசு ‘வேதம் வேதம்’னு அடிச்சுக்கிறது. தாயைப் பிரிஞ்ச கன்னுக்குட்டி மாதிரி தவிச்சுண்டிருக்கேன். தினமும் ராத்திரி வேளைல சுவாமி வீதிவலம் போறப்போ பிராமணாள் கூட்டமா கணீர்னு வேதம் சொல்லிண்டு போறதைப் பாக்கறப்போ மனசு கிடந்து அடிச்சுக்கிறது. ஐயோ! இந்த உத்தமமான வேதத்தை விட்டுட்டு அர்த்தமில்லாத அசட்டு வாழ்க்கை நடத்தறமேன்னு எனக்கு நானே ஏங்கிப் போறேன். ‘சீக்கிரமே உன்னைப் பிரிஞ்சு வேதம் படிக்கப் போறேன்’னு ஒருநாள் மஞ்சுவிடமே சொன்னேன். பாவம், அவ அழுதுட்டா. அன்னிலேந்து உலகமே அஸ்தமிச்ச மாதிரி,பிரமை பிடிச்ச மாதிரி ஒடிஞ்சு போயிருக்கா! அவளைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. கிட்டா, அவளுக்கு எப்படி சமாதானம் சொல்றதுன்னே தெரியலே.”


கையலம்பிக் கொண்டு இருவரும் வாசல் பந்தலுக்கு வந்தார்கள். சூரிய ஒளி பந்தல் துவாரங்களில் புகுந்து தரையில் வட்டம் வட்டமாய் டாலர்கள் வீசியிருந்தன! பெஞ்சுமீது வெள்ளித் தட்டு நிறைய வெற்றிலையும் அசோகா பாக்கும், சந்தனமும் வைத்திருந்தார்கள்.

தற்செயலாய் மாமா அங்கே வந்தார்.

“யாருடா கிட்டா இந்தப் பையன்? விபூதியும் குடுமியுமா தேஜஸாயிருக்கானே!” என்று கேட்டார்.

“என்னோட வேதம் படிச்சிண்டிருந்தான் மாமா! மூர்த்தின்னு பேரு…இவனைப் பத்தி அப்புறம் விவரமாப் பேசணும். உங்களால ஒரு காரியம் ஆகணும்” என்றான்.

“அப்டியா? சாப்டாச்சா! ரெண்டு பேரும் வெத்தலை போட்டுக்குங்க. கும்போணம் கொடிக்கா வெத்தலை!” என்றார் மாமா.

“பிரம்மசாரிகள் வெத்தலை போடலாமா, மாமா?”

“பிரம்மசாரிகள் கல்யாணமே பண்ணிக்கிறா! வெத்தலை போடறது தப்பா?” என்று ஒரு ஜோக் அடித்தார் மாமா!

“நான் சொல்லலே, மாமா ரொம்பத் தமாஷாப் பேசுவார்னு!” என்றான் கிட்டா.

தவில் ஓசை காதைப் பிளந்ததால் அவர்கள் சம்பாஷணை தடைப்பட்டது.

மூர்த்தி வெளியே புறப்பட ஆயத்தமானான்.

“எங்க அதுக்குள்ள கிளம்பிட்டே?”

“சிவகங்கா கார்டன் பக்கத்துல வித்தை நடக்றது. இன்னைக்கு மஞ்சு புது ‘ஐட்டம்’ பண்ணப்போறா நான் போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்” என்றான் மூர்த்தி.

“நாலு மணிக்குள்ள வந்துடு. டிபன் காசி அல்வா, மெதுபக்கடா!…” என்றான் கிட்டா.

“ஞாபகம் வெச்சுக்கோ. மாமாவிடம் என்னைப்பத்தி சொல்றதுக்கு மறந்துடப் போறே” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் மூர்த்தி.

வெய்யில் கொளுத்தி எடுத்தது. தெருப் புழுதியில் கால் பொரிந்தது, மூர்த்தி தெரு ஓரமாக தாண்டிதாண்டி நிழலுக்குத் தாவினான்.

‘நாலு நாளைக்குச் சாப்பாட்டுக்குக் கவலையில்லை. அம்மா சங்கிலி தப்பியது!’ என்று மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான்.

கண்முன் பாகீரதியின் நிலவு முகம் தெரிந்தது. அந்த மூன்று நோட்டுகளும் சட்டைப்பையில் இருக்கின்றனவா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான். பாகீரதியின் முன் யோசனையையும் சாமர்த்தியத்தையும் வியுந்தான்.

அந்தப் பூவுக்குக் கீழ் அவள் எழுதியிருந்த வாசகம் அவன் காதுகளில் ஏதேதோ ரகசியங்கள் பேசியது. ‘இவளுக்கு என் மீது எத்தனை அக்கறை? பாவம்! தான் கெட்டதோடு என் பிரம்மசரியத்தையும் கெடுத்து விட்டாளே, அசட்டுப்பெண்!’ என்று பச்சாத்தாபப்பட்டான். அந்தக்கசப்பும் இனிப்பும் கலந்த உணர்வில் முகம் சுளித்தான்.


சிவகங்கா தோட்டம் முச்சந்தியை அடைந்தபோது அங்கு யாரையுமே காணவில்லை. ஒரு நாய் மட்டும் நாக்கை நீட்டியபடி படுத்திருந்தது. போலீஸ்காரர் ஒருவர் நடைபாதைக் கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருந்தார். மூர்த்தி அவரை நெருங்கி, “இங்கே கழைக்கூத்தாடிங்க யாராவது வந்தாங்களா?” என்று கேட்டான்.

“வந்தாங்களே! வித்தைகூட பண்ணாங்க. பாதில அந்தப் பொண்ணு வயித்துல கத்தி பாஞ்சுட்டுது. ரத்தமாவது ரத்தம், வெள்ளமாக் கொட்டிடுச்சு! பாவம், மயக்கமாயிட்டா. இப்பத்தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போறாங்க.”

“ஐயோ,மஞ்சு!” என்று அலறிவிட்டான் மூர்த்தி.

“அத பாருங்க ரத்தம் புழுதில உறைஞ்சு கிடக்கு!”

“எந்த ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனாங்க, தெரியுமா?”

“பெரிய ஆஸ்பத்திரி!”

அடுத்த கணம் மூர்த்தி பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடினான்.

அத்தியாயம்-14

வெய்யிலின் உக்கிரம் உடம்பெல்லாம் வியர்க்க, தெருப்புழுதி கால்களை நெருப்பாய்ச் சுட ‘மஞ்சுவுக்கு என்ன ஆயிற்றோ?’ என்ற கவலையில் ஒரு ஆவேசத்தோடு ஓடினான் மூர்த்தி. கால்கள் கொப்பளித்து நடக்க முடியாமல் தத்தளித்த போது வைதிக சாஸ்திரி ஒருவர் சைக்கிளில் வந்து நின்றார். சாதுவாய்,ஒல்லியாய், ருத்திராட்சமாலை அணிந்திருந்தார்.

“தம்பி! எங்க போயிண்டிருக்கே, இந்த கொளுத்தற வெய்யில்ல? கல்யாண வீட்ல பார்த்தனே உன்னை!” என்றார்.

“பெரிய ஆஸ்பத்திரிக்குப் போறேன். அங்க ஒருத்தரைப் பார்க்கணும்” என்றான் மூர்த்தி

“ஏறிக்கோ பின்னால. நான் கொண்டு விட்டுடறேன்” என்றார்.

மூர்த்தி தயங்கியபடி “வேணாம், பெரியவாளுக்கு சிரமம்!” என்றான்.

“பரவாயில்ல, ஏறிக்கோ.”

ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார்.

“உங்க உதவியை மறக்க மாட்டேன்” என்று கூறி நன்றியோடு நமஸ்கரித்தான்.

ஆஸ்பத்திரி வராந்தா பெஞ்ச்சில் மஞ்சுவின் தகப்பன் கவலையே உருவாக உட்கார்ந்திருந்தான்.மூர்த்தியைக் கண்டதும் துக்கம் பீறிட அழ ஆரம்பித்து விட்டான்.

“அழாதீங்க. மஞ்சு எப்படி இருக்கா?”

“என்னை இங்கயே உட்காரச் சொல்லிட்டு உள்ளே தூக்கிட்டு போனாங்க. ரொம்ப நேரமாச்சு. ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாங்க.”

”இங்கயே இருங்க. நான் போய்ப் பார்த்துட்டு வரேன்” என்று ஓடினான்.

எமர்ஜன்ஸி வார்டுக்குப் போய் கட்டில் கட்டிலாக மஞ்சுவைத் தேடினான்.

குறுக்கே வந்த நர்ஸ் ஒருத்தி ‘யாரைத் தேடுது தம்பி?’ என்று கேட்டாள்.

“வயத்துலே கத்தி பாஞ்சுட்டுதே…”

“ஓ, அந்தக் கேஸா? ஆபரேஷன் தியேட்டர்ல இருக்குது. தையல் போட்டுக்கிட்டிருக்காங்க.. கத்தி ஆழமாப் பாஞ்சிருக்கு. கொஞ்ச நேரத்துல ஸ்ட்ரெச்சர்ல கொண்டு வருவாங்க… வெய்ட் பண்ணு”.

“உயிருக்கு ஆபத்து இல்லையே? பிழைச்சுடுவளா?”

“பெரிய டாக்டர் வருவார். கேளு..”

காத்திருந்த சில நிமிடங்கள் சில யுகங்களாய் நீண்டன.

கடைசியில், மஞ்சுவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்து ஏழாம் நம்பர் கட்டிலில் கிடத்தினார்கள்.

அவள் கண்களை மூடி மயக்க நிலையில் இருந்தாள்.

டாக்டர்கள் மூன்று பேர் பின் தொடர்ந்து வந்தார்கள்.

“பயமில்லையே டாக்டர்!” என்று பெரிய டாக்டரை அணுகிக் கேட்டான் மூர்த்தி.

“நிறைய ரத்தம் சேதாரமாயிருக்கு. ஸீரியஸ் கேஸ்தான். நீ யார்?” என்று கேட்டுவிட்டு, ‘உனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?’ என்பதுபோல் பார்த்தார்.

“அவளுக்குத் தெரிஞ்சவன். நான் ரத்தம் தரலாமா?!” என்று கேட்டான்.

மூர்த்தியின் ரத்தத்தைப் பரிசோதித்தார்கள். பொருந்துகிறது என்று தெரிந்ததும் ஏராளமான ரத்தத்தை அவனிடம் உறிஞ்சிக்கொண்டார்கள்.

ஆறுமணி வரை காத்திருந்து மஞ்சு கண் விழித்துப் பார்த்த பிறகே மூர்த்தி கலியாண வீட்டுக்குத் திரும்பினான்.

இருட்டாகிவிடவே கலியாண வீட்டுப் பந்தலில் காஸ்லைட் எரிந்து கொண்டிருந்தது. உடலும் உள்ளமும் சோர்ந்து, கண்கள் சிவந்து வாடிய முகத்துடன் காணப்பட்டான்.

அவனைப் பார்த்ததும் –

‘ஏதோ நடந்திருக்கிறது’ என்பதை ஊகித்துக்கொண்ட கிட்டா, “என்ன ஆச்சு மூர்த்தி! ஏன் இவ்ளோ லேட்? மூணு மணிக்கே வந்துடுவேன்னு பார்த்தேன். உன் விஷயமா மாமாட்ட கூடப் பேசி வெச்சிருக்கேன். அவரும் ‘சரி வரட்டும், முகூர்த்த நாளாயிருக்கு. இன்னைக்கே சேர்த்துடலாம்’னு சொல்லி பாடசாலை கனபாடிகளைக்கூட இங்க வரச் சொல்லியிருந்தார். கனபாடிகள் இத்தனை நேரம் உனக்காகக் காத்துண்டிருந்தார்” என்றான் கிட்டா.

“மாமா எங்க போயிருக்கார்?”

“மாடில சீட்டாடிண்டிருக்கார்.”

“மஞ்சுக்கு வயத்துல கத்தி பாஞ்சு ஆஸ்பத்திரில் படுத்திண்டிருக்கா. இத்தனை நேரமும் அங்கதான் இருந்துட்டு வரேன்.’ரத்தம் கொடுத்தா மஞ்சுவைப் பிழைக்க வெக்கலாம்’னு பெரிய டாக்டர் சொன்னார். என் ரத்தம் பொருத்தமாயிருந்தது. கொடுத்துட்டு ஆறு மணி வரைக்கும் அங்கயே உட்கார்ந்திருந்தேன். அப்புறம்தான் கண் முழிச்சுப் முழிச்சுப் பார்த்தா. என்னைக் கண்டதும் விக்கி விக்கி அழ ஆரம்பிச்சுட்டா. ‘கவலைப்படாதே, நான் கவனிச்சுக்கறேன்’னு ஆறுதல் சொல்லிட்டு அவ அப்பாவையும் அங்கயே இருக்கச்சொல்லிட்டு வந்திருக்கேன். பாவம், ரொம்பப் பரிதாபமாயிருக்குடா அவ நிலமை. நினைச்சுப் பார்க்கவே கஷ்டமாயிருக்கு!”

“உயிருக்கு ஒண்ணும் பயமில்லையே? பிழைச்சுடுவாளோன்னோ!”

“பயமில்லேன்னுதான் டாக்டர் சொல்றார். இன்னும் நிறைய ரத்தம் செலுத்தணுமாம். நாலு நாளைக்கு ஆஸ்பத்திரிலயே தான் இருக்கணுமாம்.”

“நீ என்ன பண்ணப் போறே?”

“அப்பப்ப போய்ப் பார்க்கணும். என் உயிரைக் காப்பாத்தினவளாச்சே! நன்றிக்கடன் பட்டிருக்கனே! அந்தக் கடனைத் தீக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது. என் ரத்தத்தைக் கொடுத்து அவளைப் பிழைக்க வெச்சுட்டேன். அந்த வகையில ரொம்ப சந்தோஷமா திருப்தியாயிருக்கு…”

“ஏன் ஒரு மாதிரி விந்தி நடக்கறே?”

“மத்தியானம் கொதிக்கிற வெயில்லே நடந்தப்போ கால் கொப்புளிச்சுப் போச்சு…”

“மாமா ஏதாவது ‘ஆயிண்ட்மெண்ட்’ வெச்சிருப்பார்.வா, கேட்டுப் பார்க்கலாம்.”

மாமாவிடம் போனார்கள். அவர் சீட்டாட்டத்தில் மும்மரமாக இருந்தார்.

மரியாதையாக மூர்த்தி கொஞ்சம் தள்ளியே நின்றான்.

“மூர்த்தி வந்துட்டான். வெயில்ல செருப்பில்லாம நடந்திருக்கான், கால் கொப்புளிச்சுட்டுதாம்” என்றான் கிட்டா. ”செருப்பு போட்டுண்டு நடக்கறதுக்கு என்ன?” என்று மூர்த்தியைப் பார்த்தார் மாமா.

“வசதி இல்லையே!” என்றான் கிட்டா.

“அதுக்கென்னடா வசதி கலியாணத்துக்கு வந்தவா கழட்டிப் போட்ட செருப்பிலே எதையாவது மாட்டிண்டு போக வேண்டியதுதானே!” என்றார்.

“ரொம்ப எரிச்சலாயிருக்காம். ஏதாவது ஆயிண்ட்மெண்ட் இருக்கா, மாமா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாண்டா. தூங்கப் போறதுக்கு முன்னால தேங்கா எண்ணெயைத் தடவிண்டு தூங்கச் சொல்லு. கார்த்தால சரியாப்போயிடும். இத்தனை நேரமா எங்க போயிருந்தான்?”

“ஆஸ்பத்திரியில் யாரோ தெரிஞ்சவாளைப் பாக்கப் போயிருக்கான். போன இடத்துல லேட்டாயிடுத்தாம்!”

“யார் அது? சரி, அப்புறம் பேசிக்குவோம். முதல்ல அவனை கீழே அழைச்சுண்டுபோ. ஏதாவது சாப்பிடச் சொல்லு. களைச்சாப்ல தெரியறான், பாவம்!”

“என்ன சாப்பிட்றே மூர்த்தி?” என்று கேட்டான் கிட்டா.

“ஸ்நானம் பண்ணி சந்தியாவந்தனத்தை முடிக்காம பச்சைத் தண்ணிகூடக் குடிக்கமாட்டேன். இதோ வந்துடறேன்” என்று ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அங்கே போய், படிக்கட்டில் உட்கார்ந்து தண்ணீரில் கால்களை நீட்டித் துழாவினான். எரிச்சலுக்கு இதமாக இருந்தது. மீன்கள் குத்தவே கால்களை எடுத்துக் கொண்டான்.

பிறகு, ஸ்நானம் செய்து, ஜபம் முடித்து மஞ்சுவுக்காக மனமுருகிப் பிரார்த்தனை செய்தபின் கலியாண வீட்டுக்குத் திரும்பினான்.


இரண்டு நாளைக்கெல்லாம் மஞ்சுவும் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து விட்டாள். ‘ஒரு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டும்’ என்று ஆஸ்பத்திரியில் நிபந்தனை போட் டிருந்தார்கள்.

மூர்த்திதான் குதிரை வண்டி ஏற்பாடு செய்து, புல் மெத்தைபோட்டு, மஞ்சுவைப் பழையபடி சத்திரத்தில் கொண்டு சேர்த்தான்.

“தினம் என்னை வந்து பார்ப்பியா? மறந்துடமாட்டயே?” என்று துக்கம் பொங்கக் கேட்டாள் மஞ்சு.

“எனக்கு உயிர் தந்தவளாச்சே நீ ! உன்னை மறப்பனா?” என்றான் மூர்த்தி.

***

மாமா சிபாரிசின் பேரில் மூர்த்தியைத் ‘தஞ்சாவூர் ஸப்தரிஷி வேத பாடசாலை’யில் சேர்த்துவிட்டு கலியாணம் முடிந்த மறுநாளே கிட்டா ஊருக்குப் புறப்பட்டு விட்டான்.

“மாமா,மூர்த்தியை கவனிச்சுக்குங்க. ரொம்ப நல்லவன்” என்றான் கிட்டா.

“அவனைப் பத்தி எனக்கு நிறையவே தெரியும்டா.நீ கவலைப்படாம போயிட்டு வா” என்றார் மாமா.

கிட்டாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘மாமாவுக்கு நிறையவே தெரியுமாமே! எப்படி?’ என்று யோசித்தான்.

– தொடரும்…

– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *