கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 3,690 
 
 

(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-11

கௌரி அத்தையும் கனபாடிகளும் காலை பஸ்ஸுக்கே சிதம்பரம் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

“அத்தை ஒரே ஒருநாள்தான் தங்கி இருந்தா. எவ்வளவு கலகலப்பா இருந்தா. அவள் போனதும் வீடே வெறிச்சோடிப் போச்சு!” என்றாள் கமலா.

அத்தைக்குத்தான் எத்தனை ஆசை!

தலை பின்னி, பொட்டிட்டு, பூவைத்து காசுமாலை போட்டு அகமகிழ்ந்த அத்தை ‘எத்தனை அழகுடி நீ! மகாலட்சுமியாட்டம் இருக்கே!’ என்று பிரியமாகச் சொன்ன வார்த்தைகள், உள்ளத்தில் உறைந்துவிட்ட வார்த்தைகள்,-பாகீரதியின் கண்களில் கண்ணீராய் வெளிப்பட்டன.

வாசலில் கிலுகிலுப்பைக்காரன் ரோதனையாக ஒலி எழுப்பி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். அந்த ஓசையைக் கேட்ட அம்புலு தெருப்பக்கம் கையைக் காட்டிக் காட்டி அம்மாவைப் பார்த்து அடம்பிடித்து அழுதது.

“இந்த கிலுகிலுப்பைக்காரனுக்கு இந்த வீட்ல குழந்தை இருக்குன்னு எப்படித்தான் தெரிஞ்சுதோ? மூக்கிலே வேர்க்கும் போலிருக்கு!” என்று முணு முணுத்துக் கொண்டே பாத்திரத்தில் கொஞ்சம் அரிசி அள்ளிப் போட்டுக்கொண்டு பண்டமாற்று முறையில் கிலுகிலுப்பை வாங்கப் போனாள்.

கிட்டா வழக்கமில்லாத வழக்கமாய் காலையிலிருந்தே ரொம்ப உற்சாகமாய்க் காணப்பட்டான். கன்பாடிகளிடம் பழகியிருந்த பர்த்ருஹரி சுலோகங்களை தன்யாசி ராகத்தில் சேதப்படுத்திக் கொண்டிருந்தான்!

பாகீரதி சமையல் வேலையை மறந்து, உக்கிராண அறையில்போய் உட்கார்ந்து, மூர்த்தியின் தகரப் பெட்டியைத் திறந்து வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

பழைய பட்டு வேட்டி, திருக்குறள் புத்தகம், பகவத்பாதாள் சரிதம், காசி மடம் விபூதிப்பை, தக்ளி, முள் ஒடிந்த பேனா, செல்லாத அரையணாக் காசு – இவ்வளவும் அதில் கிடந்தன. திருக்குறள் புத்தகத்தின் முதல் பக்கத்தில் ‘அப்பா வாங்கிக் கொடுத்த தமிழ் வேதம்’ என்று எழுதி அதன் கீழ் மூர்த்தி என்று கையெழுத்திடப்பட்டிருந்தது.

பட்டு வேட்டியையும், திருக்குறளையும் மட்டும் எடுத்து வைத்துக் கொண்ட பாகீரதி பெட்டியைப் பழையபடி மூடி அது இருந்த இடத்திலேயே கொண்டு வைத்துவிட்டாள்.

அந்தப் பட்டு வேட்டியில் அவளுக்கு மூர்த்தி வாசனை தெரிந்தது.

திருக்குறள் புத்தகத்தில் ‘எழுமை யெழுபிறப்பு’ என்று தொடங்கும் வரிகளைக் கோடிட்டு வைத்திருந்தான்.மூர்த்தியைப் பாடசாலையில் சேர்க்க வந்தபோது அவன் அப்பா ‘நீ வேதம் ஓதப் போகிறாய். சம்ஸ்கிருதம் படிக்கப் போகிறாய். ஆனாலும் தமிழை மறந்து விடாதே. தமிழ் மறந்து போகாமலிருக்க தினமும் ஒரு குறளாவது படித்துக் கொண்டிரு. இந்தா, இது தமிழ் வேதம்’ என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப்போன புத்தகம் அது.

பாகீரதி பழுப்புத்தாள் ஒன்று எடுத்து வந்து அதற்கு அட்டை போட்டு, உள் பக்கமாக மூலை மடித்து ஒட்டி முடித்தாள்.

கிட்டா இன்னமும் குஷியாகப் பாடிக்கொண்டிருந்தான்.

“என்னடா, என்றைக்குமில்லாத குஷி!” என்று கேட்டாள் பாகீரதி.

இன்னைக்கு தஞ்சாவூர் போறேன். அங்கே ஒரு கலியாணம். நாலு நாளாகும் திரும்பி வர. மெதுவ்வா கனபாடி களிடம் லீவு வாங்கிட்டேன். முதல்ல கொஞ்சம் தயங்கினார். அப்புறம் ‘சரி, பரவாயில்லை,போயிட்டுவா’ன்னுட்டார்.”

“யாருக்குடா கலியாணம்?”

“எங்க மாமா பிள்ளைக்கு…”

“அப்படின்னா நானும் கமலாவும் தனியாத்தான் இருக்கணுமா? யாரும் ஆம்பிள்ளைத் துணை கிடையாதா?”

“பாடசாலைப் பிள்ளைகளெல்லாம் ஆண் பிள்ளைகளாத் தோணல்லியோ உனக்கு?” என்றான் கிட்டா.

“எல்லாம் ஜாண்ஜாண் உண்டு!…” என்றாள் பாகீரதி.

“ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைதானே?” என்றான் கிட்டா.

“கொஞ்சம் இப்படி கொட்டில் பக்கம் வறயா?” என்றாள் பாகீரதி.

“என்ன சமாசாரம்?…”

“கனபாடிகள் உன்னைக் கட்டவிழ்த்து விட்டுட்டார். தும்பிலே கட்டிப் போட்டிருக்கும் சேங்கன்னை மட்டும் கட்டிப் போடலாமா, அதையும் அவிழ்த்துவிட்டுரு. பாவம் காலாறச் சுத்திட்டு வரட்டும்” என்றாள்.

கிட்டா அதைத் தறியிலிருந்து அவிழ்த்து விட்டதும் அது நாலுகால் பாய்ச்சலில் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டது!

“கிட்டா, எனக்கு ஒரு ஒத்தாசை பண்ணுவியா?” என்று பூர்வ பீடிகையோடு ஆரம்பித்தாள் பாகீரதி.

“என்ன சொல்லு!”

“தஞ்சாவூர் போனா அங்க மூர்த்தியைப் பார்ப்பியோல்லியோ!”

“தெரியலையே. அவன் எங்க இருக்கானோ, என்னவோ, இருக்கானோ,என்னவோ, யார் கண்டா?”

“நன்னாத் தேடிப் பாருடா. நிச்சயம் தஞ்சாவூர்லதான் இருப்பான்…”

“கிடைச்சா என்ன சொல்லணும்?”

“அவனை எப்படியாவது கையோடு அழைச்சுண்டு வந்துடு இங்கே.”

“அவன் வரவே மாட்டான். ஏதோ ஒரு வைராக்கியமா இருக்கான். என்னன்னும் சொல்லமாட்டேங்கறான்?”

“சாப்பாட்டுக்கு என்ன செய்றானோ, என்ன கஷ்டப் படறானோ? கையில் இருந்த காசெல்லாம்கூடத் தீர்ந்து போயிருக்குமே, பாவம்!” என்றாள்.

“கூப்பிட்டுப் பாக்கறேன். வந்தா அழைச்சுண்டு வரேன். உனக்கென்ன அத்தனை அக்கறை அவங்கிட்ட? சொல்லிக்காமப் போனவனை வெத்திலை பாக்கு வெச்சு கூப்பிடணமாக்கும்! கனபாடிகள் மனசைக் கஷ்டப்படுத்திட்டுப் போனவனாச்சே அவன்?”

“அவன் கிட்ட எத்தனை பாசம் வெச்சிருக்கார் அவர்! எப்படிப் புலம்பினார்? ‘மூர்த்தி! நீ எங்கடா போயிட்டே?’ ன்னு ஒருநா ராத்திரி, நான் கால் மிதிச்சிண்டிருக்கப்போ, வாய் விட்டுக் கதறினாரே, அது எனக்கில்லையா தெரியும்?”

“மூர்த்தி இல்லாம இந்தப் பாடசாலையே அழுது விடியறது கிட்டா! களையாவே இல்லை. நீ தேடிப்பாரு; எப்படியும் கிடைச்சுடுவான். அவனைப் பார்த்து இந்தத் திருக்குறள் புத்தகத்தையும் பட்டு வேட்டியையும் கொடுத்துடு” என்றாள்.

“இந்த ரெண்டும் ஏது?”

“அவன் பெட்டியில இருந்தது…”

“எனக்குக்கூட திருக்குறள் படிக்கணும்போல ஆசையாயிருக்கு” என்றான் கிட்டா.

“இந்தப் புஸ்தகத்தை நீ எடுத்துண்டுராதே. இது அவன் புஸ்தகம். ஜாக்கிரதையாக் கொண்டு போய்ச் சேர்த்துடு. யாருக்கும் தெரிய வேணாம்…”

“திருக்குறள் எல்லாருக்கும் பொதுதானே! அதை ஏன் யாருக்கும் தெரிய வேணாங்கறே?” என்றான் கிட்டா.

பாகீரதி ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

இதற்குள் அந்தப் பக்கம் வந்த கமலா, மறைவில் சுவர் ஓரமாகச் சாய்ந்து என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்டாள். பிறகு அவர்கள் எதிரில் போய் நின்று “என்ன, எனக்குத் தெரியாம இங்க என்ன பேச்சு?” என்றாள். “ஒண்ணும் பேசலையே! கிட்டா தஞ்சாவூர் போறானாம். அப்பா உத்தரவு கொடுத்துட்டாராம். குதிக்கிறான்!”

“அதுக்கு நீ என்ன சொன்னே?”

“திரும்பி வறப்போ குடமிளகாயும் வறுத்த முந்திரியும் வாங்கிண்டுவான்னேன்…”

“பொய்! வேற ஏதோ சொல்லிண்டிருந்தயே!”

“வேற ஒண்ணும் சொல்லலையே!”

“மூர்த்தி பேர் அடிபட்டுதே! எப்படியும் தேடிக் கண்டு பிடின்னு சொல்லிண்டிருந்தது காதில் விழுந்ததே!”

“இந்தப் புதுக் கன்னுக்குட்டி மூர்த்தி எங்கேயோ ஓடிட்டுது. அதைத்தான் தேடிக் கண்டு பிடிடான்னு சொல்லிண்டிருந்தேன்!” என்று சமாளித்தாள் பாகீரதி.

“கையில் என்னடா அது?” என்று கிட்டாவைப் பார்த்துக் கேட்டாள் கமலா.

“பட்டு வேட்டி. திருக்குறள் புத்தகம்.”

“ஏது?”

“மூர்த்தி வெச்சுட்டுப் போயிட்டான். தஞ்சாவூர்ல மூர்த்தியைப் பார்த்தா அவன்கிட்ட கொடுத்துடுன்னு பாகீரதி தான் எடுத்துக் கொடுத்தாள்” என்றான் கிட்டா.

ஒரு அர்த்தபுஷ்டியோடு ‘அப்படியா!’ எனும் பாவனையில் தலையை மேலும் கீழும் அசைத்தாள் கமலா.

அத்தியாயம்-12

பாடசாலையை மறந்து, வேதத்தைத் துறந்து, தஞ்சைக்குப் புறப்பட்டு வந்த மூர்த்தி இங்கே வந்தபின் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சஞ்சலப்பட்டான்.

மஞ்சு அழகாக இருந்தாள். இவனிடம் அளவு கடந்த பற்றும் பாசமும் காட்டினாள். ஆயினும் மூர்த்தி மட்டும் அவளிடம் ஒட்டுறவு ஏதுமின்றி, தாமரை இலைத் தண்ணீர்போல் பழகிக் கொண்டிருந்தான்.

“மஞ்சு, நீ என்னை வெள்ளத்திலேருந்து மீட்கலேன்னா நான் அன்னைக்கே செத்துப் போயிருப்பேன். அதுக்காக உனக்கு நன்றி சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்.நீ என்மீது வெச்சிருக்கும் உண்மையான அன்பைப் பார்த்தப்புறம் உன்னோடயே தங்கிடலாம்னு தோணித்து. தங்கிட்டேன். ஆனாலும் என்னோட ஆசாரம், அனுஷ்டானம், வேதம் இவ்ளவும் உனக்கும் எனக்கும் நடுவே குறுக்குச் சுவர் போட்டிருக்கு. உன்னைத் தொடவோ, நீ சமைத்துப் போடுவதைச் சாப்பிடவோ, மனசு ஒப்பலை.நீயோ என்னைப் பெரிசா நம்பிண்டிருக்கே. நான்தான் ஒண்ணும் புரியாம குழம்பிண்டிருந்கேன்” என்றான் மூர்த்தி.

“உன்னை நம்பிப் பெரிய மனக்கோட்டையெல்லாம் கட்டிட்டேன். நீ குடுமியை எடுக்காம நாளைக்கடத்தறதிலிருந்தே சந்தேகப் பட்டேன்.

‘வேதத்தைப் பாதில விட்டுட்டு வந்த மாதிரி என்னையும் விட்டுட்டுப் போயிடுவியான்னு?’ நான் அன்னைக்கே கேட்டேன். நான் சந்தேகப்பட்ட மாதிரிதான் நடக்குது.”

“சரி, இப்ப எனக்கு ரொம்பப் பசியாயிருக்கு. முதல்ல ஆனந்தா லாட்ஜ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். அப்புறம் விவரமாப் பேசிக்கலாம்” என்றான் மூர்த்தி.

“நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வெளியே கிளம்பிடுவேன். அப்பாவை அழைச்சுட்டு வித்தை செய்யப் போறேன்.”

“எங்க?”

“சிவகங்கா கார்டன் பக்கத்துல இன்னைக்குப் புது மாதிரி வித்தை செய்யப் போறேன். இதுவரைக்கும் நீ பார்க்காத ஐட்டம்!”

“நான் அங்கயே வந்து பார்த்துடறேன்!” என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி.

“காசு வெச்சிருக்கயா?”

“என் அப்பா கொடுத்துட்டுப்போன காசெல்லாம் தீர்ந்து போச்சு. ஒரே ஒரு அரையணாத்தான் மிச்சம்!”

“அஞ்சு ரூபா தறேன், எடுத்துட்டுப்போ…!”

“வேணாம்; உனக்கு ஏற்கனவே நிறையக் கடன்பட்டிருக்கேன். நன்றிக்கடன்! எப்படித்தான் தீர்க்கப் போறனோ?”

“அரையணால் வயிறு ரொம்பிடுமா? ரெண்டே ரெண்டு இட்லிதானே கிடைக்கும். அது எப்படிப் பத்தும்? இந்தா காசு!”

“வேணாம்; கழுத்திலே எங்கம்மாவின் சங்கிலி இருக்கு. அதை வித்துடப் போறேன்…”

“அந்தப் பணமும் தீர்ந்து போச்சுன்னா அப்புறம் என்ன செய்வே?”

“அது ஆண்டவன் கவலை!”


மூர்த்தி கழுத்துச் சங்கிலியைத் தொட்டுப் பார்த்தான். அம்மாவின் நினைவு தோன்ற, கண் கலங்கியபடி ஐயன்கடைத் தெரு நோக்கிப் புறப்பட்டான். மெயின் ரோடைப் பிடிக்க குறுக்குச் சந்தில் புகுந்து நடந்தபோது எதிரில் காசி யாத்திரை போகும் கலியாணக் கும்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளையைச் சூழ்ந்து ஒரு பெரிய கூட்டம். நாதசுரக்காரர் வாத்தியத்தை தாராளமாய் வீசி வாசிக்க முடியாத அளவுக்குக் குறுகலான சந்து.

பரதேசிக்கோல மாப்பிள்ளைக்கு குடை பிடித்துக் கொண்டு நின்ற கிட்டா மீது மூர்த்தியின் பார்வை விழுந்தது.

‘அட! இவன் எப்படி வந்தான் இங்கே?’ என்ற ஆச்சரியத்துடன் அவனை அணுகி “கிட்டா!” என்று கூப்பிட்டான் மூர்த்தி.

மூர்த்தியைக் கண்டதும் கிட்டாவுக்குச் சந்தோஷம் தாங்க வில்லை. ‘அடடே!’ என்று ஓடி வந்து மூர்த்தியைக் கட்டிக் கொண்டான்!

“மூர்த்தி! நீ இன்னும் இந்த ஊர்லதான் இருக்கயா? மத்தியானத்துக்கு மேல் உன்னைத் தேடிப் பார்க்கணும்னு நினைச்சுண்டிருந்தேன். தெய்வமாப் பார்த்து உன்னை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கு!” என்றான் கிட்டா.

“மாப்பிள்ளை யாருடா? உனக்கு என்ன உறவு?”

“எனக்கு மாமா பிள்ளை. டாக்டருக்குப் படிக்கிறான். அதோ உயரமா வராறே, அவர்தான் எங்க மாமா. வெள்ளிக் கடை கிட்டப்பான்னா தஞ்சாவூர்ல தெரியாதவா இருக்கமாட்டா. ரொம்பத் தமாஷாப் பேசுவார். வேதம் படிக்கிறவாளைக் கண்டா ரொம்பப் பிடிக்கும். மத்தியானமா உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ இப்ப என்கூட வர். கலியாண வீட்லயே சாப்பிடலாம். மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்றான் கிட்டா.

“உனக்குத்தான் மாமா உறவு. எனக்கும் இந்தக் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு சங்கோஜமா இருக்குடா. நான் வரலே. என்னை விட்டுரு” என்றான் மூர்த்தி.

“அசடாட்டம் பேசாதே, உன்னை நான் விடப் போறதில்லே. இந்த நாலு நாளைக்கும் நீ என்னோடதான் இருக்கப்போறே, ஆமாம்.”

“கனபாடிகள் சௌக்கியமாயிருக்காரா? என் பேர்ல கோபமா இருக்காரா?”

“தினமும் உன்னை நினைச்சு நினைச்சு புலம்பிண்டிருக்கார். சதா உன் ஞாபகம்தான். காவேரிப்பாக்கம் பசு கன்னு போட்டிருக்கு தெரியுமோ? சேங்கன்னு! அதுக்கு உன் பேரைத்தான் வெச்சிருக்கோம்.”

“என் பேரா? எதுக்கு என் பேரை வெச்சீங்க?”

“பாகீரதிதான் உன் பேரை வைக்கணும்னு ஆசைப்பட்டா. உன் பெட்டியைக் குடைஞ்சு திருக்குறள் புஸ்தகமும் பட்டு வேட்டியும் கொடுத்தனுப்பியிருக்கா. அத்தோட உனக்கு ஒரு தபால் கொண்டு வந்திருக்கேன். கவர்!”

“கவரா? யார் எழுதியிருக்கா?”

“தெரியலே. ரிஷிகேசத்துலேந்து வந்திருக்கு. உங்கப்பாவா இருக்குமோ?”

அவசரம் அவசரமாய் இருவரும் கலியாண வீட்டுக்குப் போனார்கள். போனதும் கிட்டா எடுத்துக் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பிரித்தான் மூர்த்தி. அப்பாதான் எழுதியிருந்தார்.

சிரஞ்சீவி மூர்த்திக்கு ஆசீர்வாதம்.

க்ஷேமம். க்ஷேமத்துக்கு எழுதவும். கனபாடிகளை நான் விசாரிச்சதா சொல்லவும். கனபாடிகள் எனக்கு ஆப்த நண்பர். உன் எதிர்காலத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கேன். அவரே உனக்கு ஏற்ற பெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் கலியாணம் செய்து வைப்பார். அவர் சொல்படி நடந்துகொள்.

அம்மா சங்கிலியை ஒருபோதும் கழுத்தைவிட்டு எடுக்காதே. அந்தச் சங்கிலி ரூபமாய் உன் தாயார் உன்னை ஆசீர்வதிச்சிண்டிருப்பாள்.

பிராம்மணனாகப் பிறந்தவன் வேதாத்தியயனம் செய்வது முக்கியம். வேதம் தெய்வத்தின் சுவாசம். அதை ஒரு நாளும் மறக்காதே! நேற்று இங்கே ஆசிரமத்தில் வேதத்தின் பெருமைகள் பற்றி சுவாமிஜி ஒருவர் ரொம்ப அழகாகப் பேசினார்.

‘வேதம் ஓதுகிறவன் தினமும் அதை அப்யாசிக்க வேண்டும். எப்படி ஒரு மருந்தை உபயோகிக்காமல் கொஞ்ச நாள் வைத்திருந்தாலும் அதன் வீரிய சக்தி குறைந்து விடுகிறதோ, அப்படியே வேதத்தை அப்யாசம் பண்ணாமலிருந்தாலும் அந்த மந்திரங்களின் சக்தி குறைந்துவிடும்’ என்று சொன்னார்.

இப்படிக்கு,
பரசுதீட்சிதர்.

கண்களில் கண்ணீர் தளும்ப கடிதத்தை மடித்துப் பைக்குள் வைத்துக்கொண்டான். அடுத்தபடியாக திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான்.

பாகீரதி அதற்கு அழகாக அட்டை போட்டு வைத்திருந்ததைப் பார்த்தபோது ‘எதுக்கு இந்த அட்டை? அவசியமில்லையே!’

ஒட்டப்பட்டிருந்த அட்டையை மெதுவாகப் பிரித்தான் அதிலிருந்து பத்து ரூபாய் நோட்டுகள் மூன்று கீழே உதிர்ந்தன. நல்லவேளை! கிட்டா பார்க்கவில்லை.

“மூர்த்தி! கொஞ்சம் இங்கயே இருக்கயா? இதோ உள்ளே போய் கொஞ்சம் சர்பத் கொண்டு வந்துடறேன்” என் சொல்லிவிட்டுப் போனவன் இன்னும் வரவில்லை.

அட்டையை முழுதாகப் பிரித்தபோது உள் பக்கத்தில் வாடிப்போன மல்லிகைப் பூ ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது. அதன் கீழ்,

“மூர்த்தி! உனக்காக நான் இந்தப் பூவைப்போல் வாடிக் கொண்டிருக்கிறேன்.”

என்று எழுதி கையெழுத்திட்டிருந்தாள் பாகீரதி.

– தொடரும்…

– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “வேத வித்து

  1. இப்போதுதான் முதல் முறையாகப் படிப்பதைப்போல சுவாரஸ்யமான எழுத்து.
    வாசகர்களுக்கு விருந்திட்ட சிறுகதைகள் டாட்காமை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *