கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 6,597 
 
 

(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி மூலையாக ஒரு இடம். கழைக்கூத்தாடி ஒருவன் கண்களை இடுக்கி, டமாரம் தட்டி, விசில் அடித்து ‘ஹா, ஹா,ஹா! என்று கூவிக் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தான்.

அந்த ஓசைக்கு பயந்த மரத்தடி நாய் ஒன்று அலறி அடித்து ஓடியது.

அடுத்த சில நிமிடங்களில் அங்கே வந்து சூழ்ந்த பெரும் கூட்டம் வட்டமடித்து நிற்க, ரயிலடி அழுக்குப் பையன்கள் மரத்தின்மீது அவசரமாக ஏறி ஆளுக்கொரு இடம் பிடித்துக் கொண்டனர்.

சுற்றி நின்ற கூட்டத்தில் மூர்த்தியும் ஒருவன்.

கறுப்பான எள் குவியலுக்கு இடையே வெண்மையான பச்சரிசி ஒன்று கலந்ததுபோல் அந்தப் பாமர மக்கள் கூட்டத்தில் அவன் சற்றும் பொருந்தாமல் நின்றான்.

கழுத்துச் சங்கிலியை அப்பா வாங்கிக் கொடுத்த நீலச் சட்டை போட்டு மறைத்திருந்தான். கையில் மான் தோல் பை. இப்படியும் அப்படியும் ஒதுங்கிக் கூட்டத்தின் இடுக்கு வழியாகப் பார்த்தபோது அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் மஞ்சு கவர்ச்சியாய்த் தெரிந்தாள்.

அவன் யாரைத் தேடி, ஊரைவிட்டு, பாடசாலையைவிட்டு வந்தானோ, யாருடைய அழகில் மயங்கினானோ, யாருடன் நிறையப் பேசி நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ அந்த மஞ்சுவை அங்கே கண்டபோது உள்ளத்தில் ஒரு பரவச மான உணர்ச்சி பொங்கியது!

மஞ்சு, மூங்கில் கழிகளை எடுத்து அவற்றின் நுனிப் பகுதியைப் பெருக்கல் குறிபோல் இறுகக்கட்டி தரையில் குத்திட்டுப் புதைத்தாள். பிறகு ஒரு நீளமான கம்பியால் அந்தப் பெருக்கல் குறிகளை இணைத்து அந்தக் கம்பிமீது ஏறி டமார லயத்துக்கு ஏற்ப ‘பாலன்ஸ்’ செய்தபடி நடந்தாள்.

உயரத்திலிருந்து பார்த்த மஞ்சுவின் கண்களில் கூட்டத்தோடு நின்று கொண்டிருந்த மூர்த்தி ‘பளிச்’சென்று தென்பட ‘அடடே, இவன் எப்படி இங்கே வந்தான்!’ என்று தனக்குள் வியந்தாள்.

அதேசமயம், மூர்த்தியின் சட்டைப் பையிலிருந்த மணிபர்ஸை யாரோ ஒருவன் ஜேப்படி செய்து கொண்டிருப்பதைக் கவனித்துவிட்ட மஞ்சு சட்டென்று கீழே குதித்து, கூட்டத்துக்குள் பாய்ந்து அந்த ‘ஜேப்படி’யின் தலைமயிரைப் பிடித்துத் தரதர வென்று இழுத்து வந்து ஓங்கி ஓர் அறை கொடுத்தாள்.

“திருட்டுப் பயலே! எடுடா அந்த மணிபர்ஸை!” என்றாள். அவன் திமிறிக்கொண்டு ஓடப் பார்த்தான்.

“தப்பி ஓடப் பாக்கறயா? இது உடும்புப் பிடி. இதிலிருந்து நீ அவ்வளவு லேசாத் தப்பிட முடியாது” என்று அவனை ஓர் உலுக்கு உலுக்கினாள்.

அருகில் நின்ற போலீஸ்காரரை விறைப்பாகப் பார்த்து, “என்னய்யா தாணாக்காரரே! திருடனைக்கூடப் பிடிக்காம அங்கே யாரைப் பார்த்து இளிச்சிட்டு நிக்கறீங்க? இவனை ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போய் நாலு போடு போடுங்க. அப்பத்தான் புத்தி வரும் இவனுக்கு” என்றாள்.

இதற்குள் ‘ஐயோ, அது என் மணிபர்ஸ்!’ என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான் மூர்த்தி.

மஞ்சு அவனை ஏற இறங்கப்பார்த்துவிட்டு, “வெள்ளத்தில் முழுகின ஆளில்ல நீ ! இங்க எங்க வந்தே?” என்று கேட்டாள்.

“உன்னைப் பார்க்கத்தான்.”

“முதல்ல இந்த பர்ஸை வாங்கிக்க; வித்தை முடிஞ்சதும் பேசலாம்!”


திடீரென்று வானம் இருண்டு எந்த நிமிடத்திலும் மழை வரும்போல் ஒரு சூழ்நிலை உருவாகி, புழுதிக்காற்று வீசவும் கூட்டம் மளமளவென்று கலையத் தொடங்கிற்று. ‘வசூல் போச்சே!’ என்ற ஏமாற்றத்தில் கிழவன் முகம் கறுக்க அவசரமாக ‘தருமவான்களே, தாய்மார்களே!” என்று டால்டா டப்பாவைக் குலுக்கிக்கொண்டு ஓடினான்.

இதற்குள் இடியும் மின்னலுமாய்ப் பேய் மழை கொட்டத் தொடங்கவே அத்தனை கூட்டமும் ஸ்டேஷனுக்குள் புகுந்து விட்டது. மழையில் தெப்பலாய் நனைந்து நின்ற மஞ்சுவைத் தொடர்ந்து மூர்த்தியும் போய் நின்றான்.

“வேற சட்டை வச்சிருக்கியா?” என்று கேட்டாள் மஞ்சு.

“இல்ல…”

“ராத்திரி எங்க தங்கப்போறே?”

”உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன். ‘தேடப் போன மருந்து காலிலே சிக்கின மாதிரி’ நீ இங்கயே கிடைச்சுட்டே!”

“முதல்ல தலையைத் துவட்டிக்கோ, இந்தா டவல்! மழை நின்னதும் ராஜா சத்திரம் போலாம். அங்கதான் நானும். அப்பாவும் தங்கியிருக்கோம்.

”இது யார்? உங்கப்பாவா?’

”ஆமாம்; வயசாயிட்டுது. வரவர கண்ணும் தெரியலே; காதும் கேட்கலே. நய்னா! நான் சொன்னனே … ஆத்துல ஒருத்தர் முழுகிட்டார்னு, இவர்தான் அது!”

“பிராமணப் பிள்ளையா?

“ஆமாம்; வேதம் படிக்கிறார்!…”

“உங்க மகதான் என்னைக் காப்பாத்தினார். அன்னைக்கு என் உயிரைக் காப்பாத்தினா. இன்னைக்கு என் மணிபர்ஸைக் காப்பாத்தினா!” என்றான் மூர்த்தி.

”மழை நின்னுட்டுது. வாங்க சத்திரத்துக்குப் போவோம்” என்றான் கிழவன்.

“இடியும் மின்னலும் நின்னபாடில்லை. மறுபடியும் மழை வரும் போலிருக்கு” என்றான் மூர்த்தி.

சத்திரத்துத் தாழ்வாரத்தின் ஒரு மூலையில் ஏற்கனவே இடம் பிடித்து வைத்திருந்தாள் மஞ்சு. அங்கேதான் சமையல் சாப்பாடு படுக்கை எல்லாம்.

மஞ்சு அடுப்பு பற்ற வைத்து சப்பாத்தி தயாரித்தாள்.

”சப்பாத்தி பிடிக்குமா உனக்கு?” மூர்த்தியைக் கேட்டாள்.

“இல்லே, நான் ஆனந்தா லாட்ஜுக்குப் போறேன்”.

“ஏன் நான் செய்யற சப்பாத்தி பிடிக்காதா?”

”உன்னைப் பிடிச்சிருக்கு!”

சிரித்தாள். அவள் அவனிடம் இந்த வார்த்தையை எதிர் பார்க்கவில்லை.

“போயிட்டு சீக்கிரம் வந்துடுவே இல்ல?’

”உடனே… இனிமே உன்கூடத்தான்.”

“ஏன்! வேதம் படிக்கப் போறதில்லையா?””

“நீ என்னைத் தொட்டு காப்பாத்தினதிலேர்ந்து என் மனசே சரியில்லே. பாடசாலையிலும் அமைதி இல்லாமப் போயிடுத்து. புத்தி வேதத்தில் லயிக்கலே. சரியோ தப்போ, துணிஞ்சு வந்துட்டேன்.”

”உனக்கும் உன் அப்பாவுக்கும் ஆட்சேபனை இல்லேன்னா நானும் உங்களோடு சேர்ந்து கழைக்கூத்து ஆடத் தயார். எனக்கு வித்தையெல்லாம் கத்துக் கொடுப்பியா?”

”நிசமாத்தான் சொல்றயா?”

”நிஜம்ம்மா!”

மின்னல் ஒன்று வெள்ளிக் கொடியாய்ப் பளிச்சிட்டது.

மஞ்சு யோசித்தாள். அப்பாவுக்குப் பிறகு தனக்குப் பாதுகாப்பாக ஒரு ஆண் துணை தேவை என்பதையும் தனக்கு ஏற்றவனாக யார் கிடைக்கப் போகிறான் என்பது பற்றியும் அவள் கொஞ்ச நாட்களாகவே யோசித்துக் கொண்டுதா னிருந்தாள். மூர்த்தி அதற்குப் பொருத்தமானவனாயிருப்பான் என்று ஒரு எண்ணம் மின்னலிட்டது அவளுக்கு.

“வேதத்தைப் பாதியில விட்டு வந்த மாதிரி இங்கிருந்தும் போயிடமாட்டயே!”

வானத்தில் ஒரு பலத்த இடி முழங்கியது.

“ஊஹும், மாட்டேன்.”

“உன்னை யாரும் தேடி வரமாட்டாங்களா?”

“வந்தாலும் போகமாட்டேன். எனக்கு அம்மா இல்லை. அப்பா ரிஷிகேசம் போயிட்டார். வேதம் சொல்லித் தரும் சங்கர கனபாடிகள் தான் என் தாய் தந்தை, குரு, தெய்வம் எல்லாம்… என்னை மறந்துடுங்க; தேட வேண்டாம்னு நான் கடிதம் எழுதிப் போட்டுட்டேன். அவர் என்னைத் தேட அவருக்கு மாட்டார். இதைச் சொல்லும்போது அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

கூடல்வாயில் மழைத் தண்ணீர் அருவியாய் கொட்டியது.

“அப்ப… அவரிடம் சொல்லிக்காம வந்துட்டியா?”

“ஆமாம்.”

“ஏன்?”

“அதை மட்டும் கேட்காதே! என்னால் பதில் சொல்ல முடியாத கேள்வி அது. சொல்லவே கூடாத பரம ரகசியம் அது” என்றான்.

“கழைக் கூத்தெல்லாம் கத்துக்கணும்னா, முதல்ல உடம்பை வில்லா வளைக்கத் தெரியணும். அதுக்கு தினம் தினம் ‘கவாத்து’ செய்யணும். நாளைக்கே நீ இத்தக் குடுமியை எடுத்துட்டு தியாகராஜபாகவதர் மாதிரி ஜில்பாக் குடுமி வச்சுக்கணும். அப்புறம் உன் கழுத்துல கறுப்புக் கயிறு முடிஞ்சு கையிலே தாயத்து கட்டி விட்டுருவேன். அதுதான் உனக்கு ரட்சை! சம்மதமா?” என்று கேட்டாள்.

மூர்த்தி சற்று யோசித்தான். ஒரு கணம் தன்னைக் கழைக்கூத்தாடி கோலத்தில் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான். கண்களில் கனபாடிகள் தெரிந்தார். ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

சம்மதம் என்ற பாவனையில் தலையசைத்தான்.

அப்புறம் அவன் ஆனந்தா லாட்ஜ் போய் சாப்பிட்டு வருவதற்குள் அவனுக்காக ஒரு புதிய தாழம்பாய் வாங்கி வைத்திருந்தாள் மஞ்சு.

அவன் திரும்பி வந்ததும் “இந்தா, இந்தப் பாயில படுத்துத் தூங்கு. அந்த மான் தோல் பையைத் தலைக்கு வச்சுக்க. மணிபர்ஸ் ஜாக்கிரதை!” என்றாள்.

தூரத்து டீக்கடையில் கிட்டப்பா ‘கோடையிலே’ பாடிக் கொண்டிருந்தார்.

பழக்கமில்லாத சூழ்நிலையில் தூக்கம் வரவில்லை அவ னுக்கு. அடங்கியிருந்த மழை நடு நிசிக்கு மேல் மீண்டும் கொட்டத் தொடங்கியது. மழைச்சாரல் தாழ்வாரத்தை நனைத்ததுடன் மூர்த்தி கால்களையும் ஈரமாக்கியது. அவன் நகர்ந்து போய்ச் சுவரோரம் முடங்கிக் கொண்டான்.

மஞ்சு சப்தப்படுத்தாமல் எழுந்து நின்று ‘மூர்த்தி எப்படி இருக்கிறான்?’ என்று பார்த்தாள். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். ‘பாவம், குளிருதா மூர்த்தி?’ என்று கேட்டுக் கொண்டே கனமான போர்வை ஒன்றை எடுத்து அவன் மீது போர்த்தி விட்டாள்.


இங்கே பாடசாலையில், அதே நேரம் கனபாடிகள் மூர்த்தியைப் பற்றிய விசாரத்தில் மூழ்கியவராய் தூக்கம் வராமல், “மூர்த்தி! மூர்த்தி!” என்று பித்துப் பிடித்தவர் போல் முனகிக் கொண்டிருந்தார்.

தூங்கிக் கொண்டிருந்த நொண்டி கிட்டாவை எழுப்பி, “ஏண்டா கிட்டா! இந்த மழை தஞ்சாவூர் பக்கமெல்லாம்கூடப் பெய்யுமோ?” என்று கேட்டார்.

தூக்கக் கலக்கத்தில் அவனுக்கு ஒன்றும் புரியாமல், “இப்ப இங்கே மழை பெய்யறதா?” என்று கேட்டான்.

“மூர்த்தி இந்த மழையில எங்கே கிடந்து கஷ்டப் படுகிறானோ? போர்வைகூட இல்லாமப் போயிருக்கானே! அவ னுக்கு யார் போர்த்திவிடப் போறா?” என்று கனபாடிகள் தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தார்.

கூடத்தில் அம்புலு சிணுங்கிக் கொண்டிருந்தது.

பாகீரதிக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. அந்த ‘முதல் இரவு’ நினைவுகள் அவளை வாட்டி எடுக்க, பொங்கி வந்த கண்ணீரால் நினைவுகளைக் கழுவிக்கொண்டு, முன்கட்டுப் பக்கம் போனாள். கனபாடிகள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தார்.

“என்னப்பா, தூங்கலையா நீங்க?”

“நீ ஏன் தூங்கலை? உனக்கு ஏன் தூக்கம் வரலை?” என்று பதிலுக்குக் கேட்டார் கனபாடிகள்.

அத்தியாயம்-8

நெய்யில் முந்திரிப்பருப்பு வறுபட்டுக் கொண்டிருந்த மணம் பாடசாலை முழுதும் ‘கமகம’த்தது. வெள்ளிக்கிழமை யானதால் சுவாமி நைவேத்தியத்துக்கு அவல் பாயசம்!

கனபாடிகளும் கிட்டாவும் பசு மாட்டுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கொண்டிருந்தார்கள்.

பத்து நாட்களுக்குமுன் கொட்டிலுக்குப் ‘புது வரவு’ ஒன்று சேர்ந்திருந்தது. காவேரிப்பாக்கம் பசு ஈன்றெடுத்த அந்த ஆண் கன்றுக்கு இன்று நாமகரணம்!

உடல் முழுக்க, பட்டை பட்டையாக, திட்டுத்திட்டாக, வெள்ளையும் பழுப்பும் கலந்த வெல்வெட் வழவழப்பில் அந்த சேங்கன்று துள்ளிக் கொண்டிருந்தது.

“அடே கிட்டா! இதுக்கு என்ன பேர் வைக்கலாம் சொல்லு! கமலாவையும் பாகீரதியையும் கூப்பிடு. அவாளையும் கேட்போம்” என்றார் சுனபாடிகள்.

அவர்கள் வந்தார்கள்.

“ராஜான்னு வைக்கலாம்ப்பா” என்றாள் கமலா.

“ஸ்வாமி பேர் எதுவும் தோணலையா? நீ என்ன சொல்றே பாகீ?”

ஏதும் சொல்லத் தெரியாதவள் போல் மௌனமாய் நின்றாள் அவள்.

“நம்ப மூர்த்தி ஞாபகமாக அவன் பேரையே வெச்சுடலாமே!” என்றான் கிட்டா.

கனபாடிகள் முகத்தில் ஒரு பிரகாசம் பளிச்சிட்டது. ”சரி; அந்தப் பேரையே வச்சுடுவோம். எனக்கு ரொம்ப திருப்தி. பாகீ உனக்கு?”

“அவளுக்கும் பரம திருப்திதான். எனக்குத் தெரியும்” என்றான் கிட்டா.

”உனக்கெப்படிடா தெரியும்?”

”கன்னுக்குட்டிக்கு மூர்த்தி பேரை வைக்கலாம்னு நேத்தே அவள் எங்கிட்ட சொல்லிட்டாளே!”

“ஓகோ, ஏற்கனவே தீர்மானம் ஆயிட்டுதோ!” என்றார் கனபாடிகள்.

கிட்டா எங்கேயோ ஓடிப்போய் கன்றுக் குட்டிக்குத் தர ‘பசும்புல்’ கொண்டு வந்தான்.

“இதை உன் கையாலேயே கொடுடா! உனக்கு ரொம்பப் புண்ணியம்” என்றார் கனபாடிகள்.

சேங்கன்று அதை ஆவலாய்ச் சாப்பிட்டது.

‘நம்ப மூர்த்தி இப்போ எங்கே இருக்கானோ? யார் அவனுக்கு சாதம் போடறாளோ?” என்று கனபாடிகள் துக்கப் பட்டார்.

இச்சமயம், பாடசாலைப் பையன் ஒருவன் ஓடி வந்து, “உங்களைப் பார்க்க வாசல்லே யாரோ கும்பலா வந்திருக்கா. பக்கத்து அக்கிரகாரமாம்!” என்றான்.

“திண்ணையில உட்காரச் சொல்லு, இதோ வந்துட்டேன். முதல்ல எல்லோருக்கும் மோர் கொண்டு போய்க் கொடு” என்றார்.

கனபாடிகள் வாசலுக்கு வந்தபோது அவர்கள் எல்லோரும் பவ்யமாக எழுந்து நின்றார்கள்.

“பக்கத்தூர்லேந்து வறோம்” என்றார் ஒருவர்.

அப்படிச் சொன்னவரைப் பார்த்து, ”நீ வெங்கடேச தீட்சிதர் பிள்ளை இல்லையோ? உன்னைப் பார்த்திருக்கேன். இத்தனை பேரும் எங்க இந்த வெய்யில் வேளையில?…” ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். வெங்கடேச தீட்சிதர் மகன்தான் பேசினார்:

“ஒரு முக்கியமான விஷயம். சாஸ்திரப் பிரச்னை. நீங்கதான் முடிவு சொல்லணும். அந்தத் தகுதி உங்களுக்குத் தான் உண்டு.”

“பூர்வ பீடிகையெல்லாம் பலமா இருக்கே. விஷயத்தைச் சொல்லுங்கோ” என்றார் கனபாடிகள்.

“அத்திப்பட்டு ராமகிருஷ்ண சாஸ்திரிகள்னு கேள்விப் பட்டிருப்பேள்!”

”நன்னாத் தெரியுமே; அவர் காலமாயிட்டார் இல்லையோ?”

“ஆமாம். அவருக்கு ஒரு பெண். பார்வதின்னு பேர். கல்யாணமாகி இருபது வருஷம் ஆறது. அவளுடைய புருஷன் கல்யாணமான ரெண்டு வருஷத்துக்கெல்லாம் கடல் கடந்து பினாங்கு போனவன் இப்பத்தான் திரும்பி வந்திருக்கான். பார்வதி இத்தனை நாளும் பட்டணத்திலே யாரோ ஒரு பணக்காரர் வீட்டிலே சமைச்சுப் போட்டுண்டு காலத்தைக் கழிச்சுண்டிருந்தா. இந்த வருஷம்தான் ஊரோட வந்து சேர்ந்துட்டா. குழந்தை குட்டி கிடையாது.”

“சரி, விஷயத்துக்கு வாங்க.”

“திடீர்னு இப்ப அவள் புருஷன் எங்கிருந்தோ வந்து முளைச்சிருக்கான்.”

”அப்புறம்?…”

“கெட்டழிஞ்சு வந்திருக்கான். யாரோ மலாய்க்காரியைக் கல்யாணம் பண்ணிண்டானாம். அவளும் போயிட்டாளாம். நிறையப் பணம் காசோட வந்திருக்கான். மறுபடியும் பார்வதியோட சேர்ந்து வாழப் போறேங்கறான்…”

“பார்வதி என்ன சொல்றா?”

”ஊர் ஒத்துக்குமா’ன்னு கேட்கிறா.”

“நீங்கள்ளாம் என்ன நினைக்கிறேள்?”

”அக்கிரகாரத்துல முக்கியமானவாளெல்லாம் கூடிப் பேசினோம். சில பேர் சேர்த்துக்கலாம்னு அபிப்ராயப்படறா. சில பேர் கூடாதுங்கறா. கடல் கடந்து போனவனை இருபது வருஷம் கழிச்சு வந்திருக்கவனை எப்படி சேர்த்துக்க அதுவும் முடியும்? மாமிசம்கூடச் சாப்பிட்டிருப்பான். ஜாதிப் பிரதிஷ்டம் பண்றதைத் தவிர வேற வழி இல்லேங்கறா. இப்ப அக்கிரா கரம் ரெண்டு கட்சியாப் பிரிஞ்சு நிக்கறது.அதான் உங்களைக் கேட்டு முடிவு பண்ணலாம்னு ரெண்டு கட்சிக்காராளும் சேர்ந்து வந்திருக்கோம்.”

“நான் சொல்ற தீர்ப்பை ஏத்துக்க வந்திருக்கேளா, இல்லே, சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு தெரிஞ்சுண்டு போக வந்திருக்கேளா?”

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“கனபாடிகள் சொல்ற முடிவை ஏத்துக்கலாம்னுதான் வந்திருக்கோம்.’

“கடல் கடந்து போனவனுக்கு, அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கான். ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் பண்ணிண்டிருக்கான். இதுக்கு பிராயச்சித்தமே கிடையாது. வேற சில பாவங்களுக்குத்தான் பிராயச்சித்தம் உண்டு. இப்படிப் பட்டவாளுக்கு சமூகத்துல அங்கீகாரம் கிடையாதுன்னுதான் சாஸ்திரம் சொல்றது. அதுதான் என் தீர்ப்பும்” என்றார் கனபாடிகள்.

”அப்ப அந்த அம்மா பார்வதியின் வாழ்க்கை சூன்யமாப் போயிட வேண்டியதுதானா?” என்று கேட்டது ஒரு குரல்.

”சாஸ்திரம் என்ன சொல்றது என்று கேட்டேன். சொன்னேன். என் தீர்ப்பையும் சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம்”என்றார் கனபாடிகள்.

“நம்ப சமூகம், சமுதாயம் எல்லாம் நல்லபடியா வாழணு கறதுக்குத்தானே சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம்? இப்படி வாழ்க்கையே அடியோடு நாசமாப் போயிடறதுக்கு ஒரு சாஸ்திரமா? அது நமக்குத் தேவைதானா? அப்படிப்பட்ட சாஸ்திரத்தை மாத்தி அமைக்க வேண்டியதுதானே!”

கனபாடிகளுக்குக் கோபம் பொத்துக் கொண்டது.

“என்ன சொல்றீங்க நீங்க? சாஸ்திரத்தையே மாத்தணுங்கறேளா? பேஷ்! சாஸ்திரங்கறது உங்க வீட்டு ஈயப் பாத்திரம்னு நினைப்பா? உங்க இஷ்டம்போல அழிச்சு மாத்த றதுக்கு. அது ஒரு பிரமாணம். யுகம் யுகமாய் மாறாமல், மாற்றாமல் இருந்து கொண்டிருக்கிற வேதப் பிரமாணம். சூரியனையும் சந்திரனையும் மாத்தணும்னு சொல்றது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் சாஸ்திரங்களை மாத்தணுங் கறதும். எப்பவோ ஏற்பட்ட சாஸ்திரம் இப்ப நமக்குப் பொருத்தமாயில்லேன்னா, நம்ம இஷ்டத்துக்கு அது வளைஞ்சு கொடுக் கலேன்னா, அதுக்காக மூலத்தையே மாத்திடறதா!”

“ஏன்,முடியாதா? கூடாதா?” என்று கேட்டது ஒரு குரல்.

“ஒரு தேசத்துல கடுமையான வெய்யில் தகிக்கிறது. இன்னொரு தேசத்துல தாங்கமுடியாத குளிர் நடுக்கறது. இந்த இரண்டு இடத்துக்குமே சூரியன் பொதுவானவன். அந்தந்த இடத்துக்குக் தகுந்தாப்பலதான் சூரிய வெப்பம் இருக்கணும், அதுக்கு ஏற்ற மாதிரி ஒரு சூரியனைச் சிருஷ்டி பண்ணணும்னு சொன்னா அது எப்படி சாத்தியமில்லையோ, அது மாதிரிதான் சாஸ்திரத்தை மாத்தணுங்கறதும். பூர்வ ஜன்ம பலனை ஜன்மத்துல அனுபவிக்கிறோம். அது அவரவர்களுடைய புண்ணியத்துக்கு ஏத்த மாதிரி அமையறது. அதை அனுபவிச்சு தான் தீரணும். சாஸ்திரம் எல்லா யுகங்களுக்கும் பொதுவானது. கால தேச வர்த்தமானத்துக்கு ஏத்த மாதிரி அதை மாத்திண் டிருக்க முடியாது. இது சத்தியம், வேதவாக்கு” என்றார் கனபாடிகள்.

“அப்ப பார்வதிக்கு மறுவாழ்வு கிடையாதுங்கறேள்! அதுதானே உங்க தீர்ப்பு?” என்று ஆவேசமாகக் கேட்டுக் கொண்டு முன்னால் வந்து,நின்றார் ஒருவர்.

“என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? நீங்க சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு என்னைக் கேட்க வந்தேள்? நான் சத்தியத்தைச் சொன்னேன்.

”ஆமாம்; உங்க சொந்த விஷயத்துல மட்டும் அந்த சாஸ்திரம் கிடையாதாக்கும்?” என்று கடுக்கன் ஆசாமி ஒருவர் வெடுக்கென்று கேட்டார்.

நெருப்பை மிதித்த மாதிரி ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று கூட்டத்தில் சப்தம் எழுந்தது.

“என்ன சொன்னீங்க?” கனபாடிகள் குரலில் ஒரு ஆக்ரோஷம் தொனித்தது.

”உங்க சொந்த விஷயத்துலே மட்டும் அந்த சாஸ்திரம் கிடையாதான்னு கேட்கிறோம். உங்க பெண் பாகீரதி மாங்கல்யம் இழந்தவதானே?” அவள் மட்டும் தலைமயிரை எடுக்காமல் இருக்கலாமோ? அது சாஸ்திர விரோதமில்லையோ? உங்க சாஸ்திரம் அதுக்கு மட்டும் ஒத்துக்கறதாக்கும். வாங்கய்யா போகலாம். இவரிடம் என்ன பேச்சு?” என்று ஆவேசமாய்ப் பேசிவிட்டுப் புறப்பட்டார் அந்தக் கடுக்கன்.

மற்றவர்களும் புறப்படத் தயாரானார்கள்.

“நாராயண! நாராயண!” என்று காதைப் பொத்திக் கொண்டார் கனபாடிகள்.

அந்த அக்னிக் கணைகளை தாங்கிக் கொள்ளும் சக்தி அற்றவராய் நெருப்பில் விழுந்த புழு மாதிரி துடித்துப் போனார்.

துடித்துத் துவண்டு, தவித்துத் தடுமாறி இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக் கொண்டார்.

கிட்டா அவரை ஆதரவாக அணைத்து அழைத்துக் கொண்டு போய் ஊஞ்சலில் உட்கார வைத்தான்.

“மனசை வாட்டிக்காதீங்க” என்றான்.

“சாஸ்திரம் அறிந்தவன். யாகம் செய்தவன், பிராம்ம ணோத்தமன் என்றெல்லாம் பெயரெடுத்து என்ன பிரயோஜனம்? என்னைப் பார்த்து இப்படிக் கேட்டு விட்டார்களே!” என்று உருகிப் போன கனபாடிகள் தம்மைச் சுதாரித்துக் கொண்டவராய் ”உம்,சரி பரவாயில்லே; அவா சொல்றதுலேயும் தப்பு இல்லே. அவாளையெல்லாம் உள்ளே அழைச்சுண்டு வா. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்னு சொல்லு. வீடு தேடி வந்தவர் களைப் பட்டினியோடு அனுப்பக் கூடாது”, என்றார்.

அன்றிரவு கனபாடிகள் அவமானத்தால் குன்றிப் போய், மனம் நொந்து தலை குனிந்து பெருமூச்சு விட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார். அப்போது பாகீரதி அவர் அருகில் வந்து நின்றாள்.

“என்னாலதானே அப்பா உங்களுக்கு இந்த அவமானமெல்லாம்?”

அவர் வேதனையோடு அவளைப் பார்த்தார். அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவள் போல் ஒரு விரக்தியோடு, ஒரு துணிச்சலோடு நிமிர்ந்து நின்றாள்.

“சாஸ்திர விரோதமான, சமூகம் ஏற்றுக்கொள்ளாத இந்தக் கூந்தல் எனக்கு வேணாம். இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நாளைக்கே இதை…”

மேலே பேசமுடியாமல் அவள் நெஞ்சுக் குழியில் துக்கம் அணை போட்டது.

– தொடரும்…

– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “வேத வித்து

  1. பளிச் என்ற கோபுலு சார் படங்களுடன், பத்திரிகை உலகப் பிதாமகர் என்று பலராலும் பாராட்டப்படக் கூடிய வேதவித்து நாவலை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். அலுப்பே வராது. அப்படிப்பட்டத் தைல தாரையான நடை. ஸ்நாப் ஷாட்’களாய்க் காட்சிகள் கண்முன் விரியும். அதை மீண்டும் வாசிக்க வாய்ப்பளித்த இந்த வலைப்பூவிற்கு என் அன்பு நன்றிகள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *