கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 19, 2023
பார்வையிட்டோர்: 3,533 
 
 

(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

கமலாவும் பாகீரதியும் கண்விழித்துப் பரமபதம் விளையாடி, சிறுபிராய நினைவுகளை அசைபோட்டு, தங்களோடு கண்ணாமூச்சி விளையாடிய சமகாலப் பெண்களின் வாழ்க்கையை அலசி, சமையல்கார அம்மாள் திடுதிப்பென்று கல்கத்தா பேரனிடம் போய் விட்டதை எண்ணிப் பார்த்து, அம்மாவின் அன்பையும் பாசத்தையும் நினைத்து நெகிழ்ந்து, (அடி சனியன்களா. தலை பின்னிக்க வாங்கடி!) எல்லாம் பேசித் தீர்த்தபோது தோட்டத்தில் காகங்கள் கரையவும் பொழுதுவிடிய இன்னும் சிறிது நேரமே உள்ளது என்பதை உணர்ந்தார்கள்!

“வேடிக்கைதான்! பொழுது விடிந்ததுகூடத் தெரியாம இத்தனை நேரமா பேசியிருக்கோம்?” என்று இருவருமே சிரித்துக் கொண்டார்கள்.

தோட்டப்பக்கத் தெருவில் பஜனை கும்பல் ஒன்று அபஸ்வரமாய்ப் பாடிக்கொண்டு போயிற்று.

வாசலில், முனியம்மா தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். லேசாக பேச்சுக்குரல் கேட்க, பாகீரதி எட்டிப் பார்த்தாள். விடியற்கால இருட்டில் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவளுடைய எண்ணமெல்லாம் மூர்த்தியைப் பற்றியதாகவே இருந்ததால்,- ‘ஒரு வேளை மூர்த்திதான் வந்திருப்பானோ?’ என்ற ஆவலில் இருட்டில் உற்றுத் தேடினாள்.

நொண்டி கிட்டா தெரிந்தான்.

‘இந்த நேரத்தில் இவன் எப்படி வந்து முளைத்தான்?’ என்று வியந்தபடியே வாசலை நோக்கி விரைந்த பாகீரதி, “வாடா, தீபாவளிக்குப் போனவன் இப்பத்தான் வறயா? எங்கிருந்து வறே?”

“நஞ்சாவூர்லேந்து. நடுவழியில் பஸ் மக்கர்…அதான்…”

“பின் கட்டுக்கு வா, நிறையப் பேசணும்…”

“கனபாடிகள் வந்தாச்சா?” ஒரு மரியாதையோடு ரகசியக் குரலில் கேட்டான் கிட்டா.

“உனக்கெப்படித் தெரியும் அவர் ஊரில் இல்லேன்னு…”

“எப்படியோ…” என்றான்.

அவனிடமிருந்த கைப்பையை வெடுக்கென்று வாங்கிக் கொண்ட பாகீரதி, “என்னடா கொண்டு வந்திருக்கே?” என்று கேட்டாள்.

“பாருங்க…”

பச்சை திராட்சையும் சமித்துக்களும் இருந்தன.

“ஏன் ஒரு மாதிரி இருக்கே, அக்கா?”

“உற்சாகமாத்தானே இருக்கேன். ஏன், உனக்கு அப்படித் தோண்றதோ?”

“இல்லே; மூஞ்சி சொல்றதே!”

கொஞ்சம் தயங்கியவள் குரலைத் தாழ்த்தி, “மூர்த்தியைக் காணோம்டா, ரெண்டு நாளாச்சு. எனக்கு பயமாயிருக்குடா!” என்று சோகமாய்த் தழுதழுத்தாள்.

“தஞ்சாவூர்ல பார்த்தனே அவனை…”

“பார்த்தாயா! என்னடா சொன்னான்?”

“இந்தப் பாடசாலைக்கு இனி வரப் போறதில்லையாம். வேதமும் படிக்கப் போறதில்லையாம்!”

“ஏனாம்?”

“கேட்டனே? அதெல்லாம் சொல்ல முடியாதுன்னுட்டான். ‘இந்தா, இந்த திராட்சையையும் சமித்தையும் கனபாடிகளிடம் கொண்டுபோய்க் கொடுத்துடு. பச்சை திராட்சைன்னா அவருக்கு உயிர். வர வழிலே ஒரு பலாச மரத்தைப் பார்த்தேன். அதிலே நிறைய சமித்து கிடைச்சுது. என் வைதிக புத்தி கேட்கலே! அவ்வளவையும் பறிச்சுண்டு வந்துட்டேன். தஞ்சாவூர் கடைத் தெருவில் திராட்சையைப் பார்த்ததும் கனபாடிகளுக்குப் பிடிக்குமேன்னு வாங்கிட்டேன். வாங்கினப்புறம்தான் இதை எதுக்கு வாங்கினோம்னு நினைச்சேன். இப்ப பாரு, தெய்வமே உன்னை இங்கே கொண்டுவிட்டது பார்த்தயா! நீ கொண்டு போய்க் கொடுத்துடு. இதைத்தான் மனசுங்கறது.'”

“நீ ஏண்டா வந்துட்டே? அப்படி என்ன நடந்துட்டுது என்று திரும்பத் திரும்பக் கேட்டேன்.”

“அதுக்கு என்ன பதில் சொன்னான்?’ என்று கேட்டாள் பாகீரதி.

“ஸுகார்த்தீ சேத் த்யஜேத்வித்யாம்’னு ஒரு சம்ஸ்கிருத சுலோகம் சொல்லி,

“வித்தியார்த்தி என்பவன் சுகம் நாடுபவனாயிருக்கக் கூடாது. சுகம் நாடுகிறவன் வித்தியார்த்தியாயிருக்கக் கூடாதுன்னு அதுக்கு அர்த்தமும் சொன்னான்.

“நான் இப்ப சுகம் நாடும் வித்யார்த்தியாயிட்டேன். அதனால் எனக்கு இனிமே படிப்பு ஓடாது. இதை குருவிடம் சொல்லுகிற அளவுக்கு தைரியம் வரலை. அதனாலதான் சொல்லாம வந்துட்டேன். என்னை மன்னிச்சுடச் சொல்லு என்றான். உனக்கெப்படிடா இந்த சுலோகமெல்லாம் தெரிஞ்சு துன்னு கேட்டேன். கனபாடிகளே சொல்லிக் கொடுத்ததுதான் என்றான்.”

“என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா?” ஒரு ஏக்கத்தோடு, குற்ற உணர்வோடு, ஆவல் நிறைந்த பார்வையோடு கேட்டாள் பாகீரதி.

“ஊஹூம்; ஒண்ணுமே சொல்லலை.”

கமலா இதையெல்லாம் சற்று நின்று ஒட்டுக் கேட்டாள்.

“என்னைப் பத்தி ஏதாவது தூரத்தில் மறைவாக சொன்னானா?’ அதுக்கு என்ன அர்த்தம்? அவனிடம் இவளுக்கென்ன அத்தனை அக்கறை?

இந்த மாதிரி எதுக்கு ஒரு கேள்வி? கமலா அந்த ‘அவலை’ மென்று பார்த்தாள். ஒன்றும் கிடைக்கவில்லை.

“அவன் எங்கடா போயிருப்பான்?”

“சொல்ல மாட்டேன்னுட்டானே! என்னமோ ஒரு விரக்தியோடு பேசறானே. உலகமே அஸ்தமிச்சுட்டாப்ல ஒரு மூஞ்சி!”

“ஏதாவது சாப்பிட்டானா? கையிலே காச வெச் சிருக்கானா? கழுத்திலே சங்கிலி இருந்ததா?” (‘வழவழ’ன்னு எத்தனை அழகான கழுத்து, தந்தத்தால் செய்தாப்பல! அவன் பொன்மேனிக்கும் அந்த செயினுக்கும் எத்தனை பொருத்தம்! நான் கூட கொஞ்சம் நிறம் மட்டுதான்!)

“அவனும் நானும்தான் ஆனந்தா லாட்ஜ்ல சாப்பிட்டோம். ரொம்ப வைதிகமான ஓட்டல். பின் கட்டிலே ஆசாரமா மணை போட்டு, வாழை இலை போட்டு பரிமாறினா!”

“என்ன சாப்டீங்க?”

“காசி அல்வா, ரவாதோசை, தோசைக்கு கொத்சு, டிகிரி காப்பி…”

“வித்தியார்த்திகள் சுகம் நாடக் கூடாதுன்னு சொல்லிட்டு காசி அல்வா மட்டும் சாப்பிடலாமா? அது சுகம் இல்லையோ?”

“அதென்னவோ, நீ அவனையே கேளு,வந்தால்…”

“வருவான்னு நினைக்கிறயா கிட்டா நீ?”

“தெரியலையே; ஓடிப் போனவனைப் பத்தி உனக்என்ன இத்தனை கரிசனம்! போனாப் போறான்!”

“மனசு கேக்கலைடா! அப்பா வந்தா என்ன பதில் சொல்வேன்? மூர்த்தி ஏன் போனான், எதுக்குப் போனான்? இங்கே என்ன நடந்ததுன்னு ஆயிரம் கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துடுவாரே! குதிகுதின்னு குதிப்பாரே!” என்று பயந்து நடுங்கினாள் பாகீரதி.

இவ்வளவையும் காதைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்த கமலா ‘இதில் என்னமோ மர்மம் இருக்கு’ என்று தனக்குத்தானே தலையசைத்து ஆமோதித்துக் கொண்டாள்.

***

மறு நாள் காலை. கனபாடிகள் வரும்போது கூடத்து அழுக்கு கடிகாரத்தில் மணி ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது. புதுசாக சிவப்பு காஷ்மீர் சால்வை போர்த்தியிருந்தார். காதில் கடுக்கனும், கழுத்தில் ருத்திராட்சமும், பட்டை பட்டையாக விபூதியும் அணிந்து ஆசாரசீலராய்க் காட்சியளித்தார்.

வாசல் திண்ணையில் அவர் வரவை எதிர்நோக்கி யார் யாரோ காத்திருந்தார்கள்.

கனபாடிகள் வந்து விட்டார் என்று தெரிந்ததும் பாடசாலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டது!

“அதோ அப்பா வந்துட்டாரே!” என்று கமலா சொன்னதும் பாகீரதியின் வயிற்றில் தீக்குழம்பு கலங்கியது.

மற்றவர்கள் மரியாதையாக எழுந்து நிற்க, கனபாடிகள் திண்ணையில் காலைத் தொங்கப் போட்டு அமர்ந்தார்.

“நீங்கள்ளாம் எங்கிருந்து வரேள்?” என்று காத்திருந்தவர் களைப் பார்த்து விசாரித்துக் கொண்டிருந்தபோது “தேள் கொட்டிட்டுது சாமி!” என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான் ஒருவன்.

“அதோ அந்தக் குட்டிச் சுவரிலிருந்து கொஞ்சம் மண்ணாங்கட்டி எடுத்துண்டு வா, போ” என்று கனபாடிகள் அவனையே ஏவ, அவன் ஓடிப் போய் சில மண்கட்டிகளைப் பிய்த்து வந்தான்.

“தேள்கொட்டின இடத்தைக் காட்டு!” என்றார். அவன் வலது கையை நீட்டினான்.

மண்ணாங்கட்டியைச் சன்னமாகத் தூளாக்கி, கல்நீக்கி, மந்திரம் முணுமுணுத்து மூன்று முறை கொட்டின வாயில் வீசி ஊதினார். மூன்றாவது முறை விஷம் முழுவதுமாக இறங்கி கொட்டின வாய்க்கு வந்து எட்டிப் பார்த்தது.

“உன் பேர் என்னப்பா?’ என்று கேட்டார் கனபாடிகள்.

“மண்ணரங்கட்டி!”

“உன் பேரும் மண்ணாங்கட்டியா!” சிரித்தார், மற்றவர்களோடு அவனும் சிரித்தான்.

“வலி போயிட்டுதா?”

“பறந்துட்டுது சாமி!” என்று சந்தோஷமாக அவர் காலில் விழுந்தான்.

சுற்றி நின்றவர்கள் கனபாடிகளின் மந்திர சக்தி கண்டு பிரமித்துப் போனார்கள்.

“ஆகாசத்திலிருந்து வரும் வேத ஒலிகளை மகரிஷிகள் கிரகித்து மனப்பாடம் செய்து, கடுமையான விரதங்களைக் கட்டுப்பாடாக அனுஷ்டித்து, வழி வழியாக சீடர்களுக்கும் போதித்ததுதான் இந்தப் புனிதமான வேத மந்திரங்கள். விரத பங்கமின்றி இதை யார் கற்றுத் தேர்ந்தாலும் அவர்கள் வாக்கு பலிக்கும். ஆகவேதான் ரிஷிகளின் சாபத்துக்கு ஆளாகக்கூடாது என்று சொல்வார்கள். மந்திரசித்தி பெற்றவர்களை வேதம் காப்பாற்றும். வேதவித்துக்களால் உலகமும் காப்பாற்றப்படும்” என்றார் கனபாடிகள்.

“கமலா மாமி! உக்கிராண அறையிலே பாகீரதி மயக்கமா விழுந்துட்டா, ஓடியாங்க!” என்றான் நொண்டி கிட்டா. அடுத்த கணம் பாடசாலைப் பிள்ளைகள் அத்தனை பேரும் ஓடிச்சென்று பாகீரதியைச் சூழ்ந்துகொண்டார்கள்.

அத்தியாயம்-6

அத்தனை பேரும் ஒன்றும் புரியாதவர்களாய் செயலிழந்து நிற்க, நொண்டி கிட்டா மட்டும் வேகமாக இயங்கினான். துளசி தீர்த்தத்தை எடுத்து வந்து ‘வழி விடுங்க, தள்ளி நில்லுங்க!’ என்று உக்கிராண அறையில் சூழ்ந்து நின்றவர்களை அதட்டிக் கொண்டே பாகீரதியின் முகத்தில் தெளித்ததும், பாகீரதி கண் திறந்து பார்த்தாள்.

“காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடலையோன்னோ அதான்! மணி பத்தாகப் போறதே! கழுத்துப்படிவிட்டுப் போக அவரைக்காய் பறிச்சிண்டு நின்னா, காலை வெய்யில் பித்தம் தலைக்கேறாம என்ன பண்ணும்? இந்தா, இந்த மோரைக்குடி, முதல்ல” என்று தம்ளரை நீட்டினாள் கமலா.

அது வெய்யில் தலைசுத்தலா, அல்லது அப்பா வந்து விட்டாரே. அந்த ரகசியம் அம்பலமாகி விடுமோ என்ற அச்சத்தின் விளைவா என்பது பாகீரதி மட்டுமே அறிந்த ரகசியம்.

வாசலில் உட்கார்ந்திருந்த கனபாடிகளுக்கு இந்தச் செய்தி எட்டி, அவர் உள்ளே வருவதற்குள் பாகீரதியே எழுந்து போய் “அப்பா, வாங்க!” என்று கனிவோடு வரவேற்றாள்.

“என்னம்மா, உனக்கு?”

“ஒண்ணுமில்லப்பா, பசி மயக்கம்!” என்றாள்.

போர்த்தியிருந்த காஷ்மீர் சால்வையை கனபாடிகள் தம் உடம்பிலிருந்து அகற்றும்போதே கிட்டா ஓடிவந்து அதை வாங்கிக் கொண்டான்.

“அவன் எங்கடா, மூர்த்தி?” என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்தார் கனபாடிகள்.

“ஸ்நானத்துக்குப் போறதாச் சொல்லிட்டுப் போனான்…”

“அடடே! வாசல்ல பையை வச்சுட்டு வந்துட்டேன். போ, போ! எடுத்துண்டு வா, ஓடு” என்றார். அதில் மூர்த்திக்காக நாலு முழம் பட்டுவேட்டி ஒன்று வாங்கி வைத்திருந்தார்.

பாடசாலைப் பையன்கள் ஒவ்வொருவராக வந்து கனபாடி களுக்கு பக்தியோடு நமஸ்காரம் செய்தனர்.

நாலைந்து பையன்கள் மட்டும் ஒரு மூலையில் உட்கார்ந்து ஸுஸ்வரமாக சாமவேதம் இசைத்துக் கொண்டிருந்தார்கள். கனபாடிகளுக்கு நமஸ்காரம் செய்ய, அவர்கள் எழுந்து வர முயன்றபோது,

“வேணாம்; பாதி ஆவிருத்தியில் விட்டுட்டு நமஸ்காரம் பண்ண வர வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே தோட்டப் பக்கம் போனார் கனபாடிகள்.

“மூர்த்தி ஸ்நானத்துக்குப் போயிருக்கான்னு அப்பாகிட்ட பொய் சொல்லிட்டயே! உண்மை தெரிஞ்சா… ” என்று கேட்டாள் கமலா.

“நான் பொய் சொல்லலையே! அவன் ஆத்துக்குப் போறேன்னுதானே சொல்லிட்டுப் போனான். அது உண்மை தானே…?”

“அப்பாவுக்குத் தெரிஞ்சுதுன்னா என்ன ஆகுமோ!” என்றாள் பாகீரதி.

“நீ எதுக்கு அனாவசியமா பயப்படறே? நீயா அவனைப் போகச் சொன்னே?”

“உண்மையை மறைச்சுப் பேசறதுகூடப் பொய் தானேடா!”

“ஆபத்துக்குப் பொய் சொல்லலாம்னு சாஸ்திரமே சொல்றது. பசுமாட்டுக்குக் கொஞ்சம் புல் கொடுத்துட்டா பொய் சொன்ன பாவம் தீர்ந்துடுமாம். நம்மாத்துல பசுமாடும் இருக்கு. நிறையப் புல்லும் இருக்கு” என்றான் கிட்டா.

“பொய் சொல்ல நீயும் இருக்கே!” என்றாள் கமலா. இதற்குள் கனபாடிகள் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு மடியாகப் பூஜை மணையில் வந்து அமர்ந்தார்.

குத்து விளக்கும், வெண்கல மணியும் பஞ்சபாத்திரங்களும் தீக்கொழுந்துபோல் பளபளக்க, அர்ச்சனைக்குரிய புஷ்பங்கள் மூங்கில் தட்டில் குவிந்திருக்க, அந்த இடத்தில் ஒரு தெய்விக மணம் சூழ்ந்திருந்தது.

திராட்சைப் பழங்களை நைவேத்தியமாகக் கொண்டு வைத்தாள் கமலா.

“ஏது திராட்சை!” என்று கனபாடிகள் கேட்க ‘ஊர்லேர்ந்து கிட்டா கொண்டு வந்தான்’

பூஜை முடித்து, ‘ஆயதனவான் பவதி’ சொல்லி, தோட்டத் தில் காக்கைகளுக்கு அன்னமிட்டபின் சாவகாசமாக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார் கனபாடிகள்.

“மூர்த்தி எங்கடா போனான்? ஸ்நானத்துக்குப் போனவனா இன்னும் வரலை?”

“அவன் வரமாட்டான்!” என்றாள் கமலா.

“ஏன்?”

“இனிமே வேதம் படிக்கப் போறதில்லையாம். திரும்பி வரப் போறதும் இல்லையாம்! யாரிட்டயும் சொல்லிக்காமலே போயிருக்கான்.”

“திடீர்னு வேதத்தின் பேர்ல அப்படி என்ன கோபம்? இதெல்லாம் யாரிடம் சொன்னான்?”

“கிட்டா, மூர்த்தியை தஞ்சாவூர்ல பார்த்தானாம்.”

“கிட்டாவை இங்க கூப்பிடு.”

“அப்பா, கொஞ்சம் இப்படி கொட்டில் பக்கம் வரேளா? உங்ககிட்ட தனியாப் பேசணும்” என்று கனபாடிகளை ரகசியக் குரலில் அழைத்தாள் கமலா.

‘ஏதோ விபரீதமான செய்தி சொல்லப் போகிறாள்’ என்பதை ஊகித்துவிட்ட கனபாடிகள் தளர்ந்து, தள்ளாடியபடி கமலாவைப் பின் தொடர்ந்தார்.

பாகீரதிக்கு வயிற்றைக் கலக்கியது.

இரண்டு நாட்களாகவே கமலாவின் பார்வையிலும் பேச்சிலும் சந்தேகம் இழையோடிக் கொண்டிருப்பதை அவள் உணராமல் இல்லை.

‘அப்பாவிடம் எதையாவது கண்டதையும் காணாததையும் சொல்லி அவர் மனசில் விஷ விதையைத் தூவி விடுவாளோ?’ என்று அஞ்சினாள்.

அப்பாவைத் தனியாக அழைத்துப் போய் கமலா என்னதான் சொன்னாளோ தெரியவில்லை. கனபாடிகள் அத்துடன் ‘கப்சிப்’ பென்று அடங்கிப் பேசாமடந்தையாகி விட்டார்.

அன்று பகல் முழுதும் பாடசாலை உற்சாகமின்றி உயிரோட்டமின்றி கலகலப்பு இன்றி ஒரு மௌனமான சோகத்தில் ஆழ்ந்திருந்தது.


பகல் போஜனத்துக்குப் பிறகு கனபாடிகள் தினமும் சாதாரணமாகச் சற்று நேரம் ஒரு குட்டித் தூக்கம் போடுவது வழக்கம். இன்று தூக்கம் வராததால் இப்படியும் அப்படியும் கூண்டுப் புலிபோல் நடந்து கொண்டிருந்தார். அகத்தின் சஞ்சலம் முகத்தில் தெரிந்தது. சற்றுநேரம் அப்படி நடந்துவிட்டு வால்மீகி ராமாயண புத்தகத்தை எடுத்துப் புரட்டினார். ராமனைப் பிரிந்த தசரதர் புத்திர சோகத்தில் மூர்ச்சையாகிவிட்டார் என்ற வரிகளைப் படித்தபோது அவர் கண்களில் நீர் ததும்பி நின்றது.

“‘மூர்த்தியின் அப்பாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? அவனுக்கு தாய் தந்தை குரு தெய்வம் எல்லாம் இனி நீங்கள்தான்’ என்று என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறாரே, அவர் திரும்பி வந்து ‘என் மூர்த்தி எங்கே?’ என்று கேட்டால் எப்படி பதில் சொல்வேன்?” என்று தவித்தார்.


ராத்திரி, கூடத்து கடிகாரம் ஒன்பது அடித்து, ராப்பிச்சைக்காரர்கள் வந்துவிட்டுப் போன பிறகும்கூட கனபாடிகள் சாப்பிடாமல் மூர்த்தியை நினைத்து உருகிக் கொண்டிருந்தார். கமலா மெதுவாக அவர் அருகில் போய் நின்று “மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. சாப்பிட வாங்கப்பா!” என்று அழைத்தாள்.

“வேண்டாம்மா; எனக்குப் பசியே இல்லை!”

“வெறும் வயிற்றோடு படுக்கக் கூடாது. மூர்த்தி உங்களுக்குப் பிடிக்கும்னு திராட்சைப் பழம் வாங்கி அனுப்பி யிருக்கான். இந்தாங்க, இதையாவது சாப்பிடுங்க” என்றாள் பாகீரதி.

“மூர்த்தியா! எனக்கா? அனுப்பியிருக்கானா!” கனபாடிகள் ஆவலோடு அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டார். திராட்சை தேனாக இனித்தது. (அடாடா, இந்த மூர்த்திக்கு என் மீது எத்தனை அன்பு)

“கமலா! நான் படுக்கப் போறேன்,காலெல்லாம் வலிக்கிறது. இன்றைக்கு ரொம்ப தூரம் நடந்தே வந்தேன். கிட்டாவைக் கூப்பிட்டு என் காலைக் கொஞ்சம் மிதிக்கச் சொல்லு. நான் இப்படியே இந்த மான்தோல் மீது படுத்துக் கொள்கிறேன்” என்றார்.

கிட்டா வந்து அவர் கால்களை மிதிக்காமல் கைகளால் பிடித்துவிட்டான்.

“காலால் மிதிடா, அப்பத்தான் வலி போகும். இல்லைன்னா என் கால் வலியெல்லாம் உன் கைக்கு ஏறிடும்!” என்றார்.

“பரவாயில்லே; நான் பிடிச்சே விடறேன்” என்றான் கிட்டா.

“ஓகோ, உனக்கு ஒரு கால் ஊனமோ?…”

“அதுக்கில்லே. குருவைக் காலால் மிதிக்கலாமா? பாவமில்லையா!”

“குரு சொல்லைத் தட்றதுகூடப் பாவம்தாண்டா, பரவாயில்லை; மிதி” என்றார்.

அவன் ஒற்றைக் காலால் மிதிக்கும்போது கனபாடிகளின் கண்கள் மாலை மாலையாய்க் கண்ணீர் பெருக்கின.

“ஏன் இப்படி அழறீங்க? மூர்த்தியை நினைச்சுண்டா?”

“ஆமாம்; அவனை ஒருநாள் ராத்திரி இப்படித்தான் காலை அமுக்கச் சொல்லிட்டுத் தூங்கிப் போயிட்டேன். விடியற்காலம் கண் விழித்துப் பார்க்கிறேன். அப்பவும் காலை அமுக்கிண்டே உட்கார்ந்திருந்தான். அப்படி ஒரு அப்படி ஒரு பக்தி அவனுக்கு. அவன் பிரிவை என்னால தாங்கிக்க முடியலை கிட்டா! எனக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஆனாலும் புத்திர சோகம் என்பது எவ்வளவு கொடுமைன்னு புரியறது” என்றார்.

“மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. தன்னால வந்துடுவான், பாருங்க” என்றான் கிட்டா.

“ஊஹூம்; எனக்குத் தோணல்லே! கார்த்தாலே முதல் வேலையா நாம ரெண்டு பேரும் தஞ்சாவூர் புறப்பட்டுப் போகலாம். அங்கே போய் அவனைத் தேடிப் பிடிச்சு அழைச்சுண்டு வந்துடலாம். கிடைச்சுடுவானா?” என்று சின்னக் குழந்தை போலக் கண்ணீர் சிந்தியபடியே கேட்டார் கனபாடிகள்.


மறுநாள் காலை.

தபால்காரர் கொண்டு வந்து கொடுத்த கடிதத்தை ஆவலோடு பிரித்துப் பார்த்தார் கனபாடிகள். மூர்த்தி எழுதியிருந்தான்.

– தொடரும்…

– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “வேத வித்து

  1. பல முறைப் படித்த நாவல்தான். இப்போது படிக்கும்போது கூட புதுசாப் படிப்பது போல அப்படி ஒரு பாங்கு.
    வாய்ப்பு கொடுத்த சிறுகதை.காம்’க்கு மனப்பூர்வமான நன்றி.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *