அவசரமாகப் படியிறங்கித் தெருவின் திருப்புமுனை வரை, அசுர கதியில் சென்று மறையும் அம்மாவின் நிழலையே பார்த்தபடி சூர்யா ஜன்னலடியில் சோகம் கவிந்த முகத்தோடு உறைந்து போய் நின்றிருந்தாள். அவள் அப்படி நிற்பது இன்று நேற்றல்ல ஒரு யுகம் போல் நீண்டு செல்கிற முற்றுப் பெறாத அந்தக் காலக் கணக்கின் நிரந்தர சோகமும், அதனால் ஏற்படுகிற தீர்வற்ற மனக் குழப்பமும் அவளுக்கு மட்டுமல்ல அம்மாவுக்கும் கூடத்தான். இவ்வாறான குரூரமாக வந்து வதைக்கும் அனுபவச் சூட்டில் ,தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டிய, சவால்களை எதிர் கொள்ளும் பரிதாபகரமான வாழ்க்கைச் சோகம் அவர்களுடையது.
அவளது முழுப் பெயர் சூர்யகுமாரி. தினமும் நித்திய களையுடன், ஒளி விட்டுப் பிரகாசிக்கும் சூரியனின் ஏக சாயலாக, முழுவதும் ஒளி மயமான உயிக்களையுடன் அவளும் வாழ்ந்து சிறக்க வேண்டுமென்பதை, மனதில் கொண்டே அப்பா அவளுக்கு இந்தப் பெயரை வைத்திருக்கவும் கூடும்.பெயர் இருக்கட்டும். அது அவளோடு ஒட்டிய புறம்போக்கு அடையாளம்தான் அதை மெய்யாக்குவது போல என்றைக்குமே அவள் இருந்ததில்லை அவளை அவ்வாறான இருள் கனக்கின்ற சோக நிலையிலிருந்து மீட்டெடுக்கிற, பகீரதப் பிரயத்தனமாகவே , அம்மாவின் சமகாலச் செயற்பாடுகள் அவளை மையமாக வைத்து அரங்கேறி வருகிற, இந்தக் கல்யாணத் தேடலும் அதையொட்டி ஏற்படுகிற அனுபவங்களும், அம்மா எதிர் கொள்கிற பெரும் சவால்கள் தான். இதற்காக நின்று பேசக்கூட நேரமில்லாமல் அவள் ஓடிக் கொண்டிருக்கிறாளே? எதற்காக இந்த ஓட்டம்?
வாழ்க்கையென்ற பெருஞ் சமுத்திரத்தினுள் மூழ்கிக் கரையேறத் துடிக்கிற நிலைமைதான் அவளுக்கு, பாவம் ஒற்றை மனுஷியாய எவ்வளவு பெரும் பொறுப்புகளையெல்லாம் சுமக்க நேர்ந்திருக்கிறது, அவளுக்கு, இதிலே சூர்யாவின் கல்யாணம் வேறு இழுபறியாய் போய்க் கொண்டிருக்கிறது. அது ஒப்பேறினால்தான் இப்போது சூழ்ந்திருக்கிற, இருளிலிருந்து அவள் முற்றாக விடுதலை பெற முடியும்.
அதற்காகவே அம்மாவின் இன்றைய புறப்பாடு, முன்பென்றால், அப்பா அம்மா காலத்தில் ,இப்படியொரு பேச்சுக்கால் என்றாலே மாப்பிள்ளை வீட்டில் கல்யாணக் களை கட்டித்தான் நடைபெறுமாம் .அம்மா சொல்லியிருக்கிறாள். இன்று அந்தச் சம்பிரதாயச் சடங்குகளே இல்லாதொழிந்த நிலையில்,கல்யாணத் தரகரின் காரியாலத்திலேயே வெறும் வாய் மொழியாகவே இது ஒப்பேறி விடுகிற நிலைமைதான்.
இரு பகுதியினரும் கூடிப் பேசுவார்கள் இன்றைக்கு அதற்குத்தான் முதற் புள்ளி போட அம்மா அங்கு போயிருக்கிறாள். சூர்யாவின் மனக் கண்ணிலோ ஆசை ஆசையாக எவ்வளவோ காட்சி நிழல்கள்.. ஒரு கனடா மாப்பிள்ளைக்கு இலக்கு வைத்துத்தான், அம்மா போட்டுக் கொண்டிருக்கிற இந்த வேடம். அரங்கேறுகிற நாடகம். மனதை மையலில் ஆழ்த்தும் அற்ப சலனப் பொறிகள் சூர்யாவிற்கு அவை கனவுகள் தானென்றாலும் அவளுக்கு மயக்கம். கட்டறுந்த மனதில் வரக்கூடிய மயக்கம் தான் .அந்தக் கனடாக் காவிய புருஷந்தான், இப்போது அவள் மனம் முழுக்க.. கனடா என்றால் சும்மாவா? பண மழையாகவே கொட்டப் போகிற ஒருசகாப்த புருஷன் மாதிரி அவன்.
அவனோடு சேர்ந்தால், அவள் கூடச் சொர்க்கத்தில்தான் கொடி கட்டிப் பறக்க நேரிடும் அதன் பிறகு காலுக்கடியில், புதை குழிக்குள் புதையுண்டு, மறைந்து போன சொந்த மண் பற்றிய ஞாபகமே அடியோடு மறந்து போகும். வாழ்க்கை திசை மாறும் அவள் இப்போது போலில்லாமல் , முழுவதும் சூரியக் குளியல் குளித்தபடி என்னமாய்த் தேரேறிப் பறக்கப் போகிறாள் வானத்தில் மிதந்தபடி, அப்படி வரக்கூடிய பொன்னிறைக்கைகளிலான தேர் இப்பொழுதே அவள் காலடியில் கனவு மனதில்.
அவளுக்கென்ன? கனவு காண்கிற வயது தான்.. ஆனால் அது நிறைவேற வேண்டுமே! நிச்சயம் அம்மா நிறைவேற்றி வைப்பாளென்று அவள் திடமாக நம்பினாள் எனினும் அம்மாவைப் பொறுத்தவரை இதில் எதிர் மறையான பல சவால்களுக்கெல்லாம் முகம் கொடுத்துக் காரியம் சாதிக்க வேண்டிய மிகவும் தர்ம சங்கடமான நிலைமை அவளுக்கு.
அங்கு புரோக்கரின் தரகு மேடையில் முழுவதும் பலியாடாகிப் போகிற நிலைமைதான் அவளுக்கு.. பெண்ணைப் பெற்று விட்ட குற்றத்தினால் , தலை குனிந்து தாங்கிப் போக நேர்ந்த தீராத மன உளைச்சலும், சாந்தியின்மையும் அவளுக்கு மட்டும் தான்.. ஆனால் அவர்கள்……………….?அந்தக் கனடா மணமகனை வைத்துப் பேரம் பேச மட்டுமல்ல தீட்டிய கத்தியில் கூர் பார்க்கவும் அவள்தான். மடை திறந்த வெள்ளம் போல் அவர்களிடமிருந்து புறப்பட்டு வரும் கேள்விக் கணைகளே, ஆளைப் பதம் பார்க்கப் போதும்.. மணமகனின்
அக்காவும் புருஷனுமாக அவளைத் துருவித் துருவிக் கேள்வி கேட்பதிலேயே பொழுது கரைந்து போனது அவள் ஒளிவு மறைவில்லாமலே பதில் சொல்லி முடித்தாள்.
இருப்பினும் ஒரே ஒரு விடயத்தை மட்டும் வெளிப்படையாக மனம் திறந்து பேச அம்மாவால் முடியவில்லை. அதைச் சொன்னால், சூர்யாவிற்குக் கடைசி முறையாக வந்து பொருந்தியிருக்கும் இக்கல்யாணமும் தடைப்பட்டுப் போகும் ஏனென்றால் சூர்யாவின் அக்கா சம்பந்தப்பட்ட ஒரு பாரதூரமான வாழ்க்கைச் சோகம், அவர்கள் அறியக் கூடியதாக மனம் திறந்து பேசக் கூடிய ஒரு சாதாரண விடயமல்ல. .சுமார் பத்து வருடங்களுக்கு மேலாகச் சராசரிப் பெண்களைப் போல வாழும் பாக்கியமின்றி, மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால், கூண்டிலடைக்கப்பட்ட நித்திய சிறைக் கைதி மாதிரிச் சூர்யாவின் அக்காவான ரம்யா இருந்து வருகிறாளே.
பெயரில் மட்டும் தான் அவள் ரம்யமான ஓர் உயிர்ச் சித்திரம் போல. அந்த உயிர்ச் சித்திரமே இல்லாதொழிந்த, நடைப் பிணம் போலாகி விட்ட வெறும் வரட்டுப் பிறவியே இப்போது அவள். அவளின் இத்தகைய பரிதாப நிலைக்காக அம்மா உட்பட அவள் சார்ந்த உறவுகளுமே, சிலுவையில் தொங்கி வருந்தி அழுகிற நிலைமைதான். சூர்யா மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. எனினும் இப்படியொரு பாவப்பட்ட அக்காவுக்காகத் தானும் அவள் போலாகி முழுவதும் சிறகொடிந்து போன நிலையில் கருகி அழிந்து போக அவள் தயாரில்லை அவளுக்கு வாழ்க்கை வேண்டும்.. மின்னிச் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்ற பொன்னிறைக்கைகளோடு, வானில் மிதந்து அவள் பறக்க வேண்டும். இயற்கை நியதிக்கு ஏற்றவாறு, நெஞ்சில் கனக்கின்ற அக்கா பற்றிய துயர நினைப்புகளை மறந்து விட்டு, இப்படியான கற்பனை செய்வதே அவள் மனதைச் சிறிது ஆறுதல் படுத்தியது..அதுவே நிஜமானால், இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும்.
புரோக்கரின் தரகு மேடைக்குப் போய்க் கல்யாணப் பேச்சுக்கால் முடித்துக் கொண்டு அம்மா வீடு திரும்பும் போது வாசலில் நின்று சூர்யா அவளை எதிர் கொண்டாள்.
வீடு நிசப்தமாக இருந்தது.. அப்பா பேப்பரில் மூழ்கி போயிருந்தார். வெளியே என்ன நடந்தாலும் மெளன கவசம் பூண்டு வாழ்கிற மாதிரி, எதிலும் ஒட்டாமலிருக்கிற தனி உலகம் அவருடையது. ரம்யாவைப் பற்றிய,
ஆத்மார்த்தமான கவலை அம்மாவுக்கு மட்டும் தான். சூர்யா வழிமறிக்கும் போது அவள் சலனமின்றி நின்று கொண்டிருந்தாள். ரம்யா உள்ளே தூங்கிக் கொண்டிருந்ததால், சூர்யா பயமற்ற தொனியில் குரலை உயர்த்தி ஆவலோடு கேட்டாள்.
“அம்மா! அவையள் என்ன சொன்னவை?”
இதற்குப் பதில் சொல்ல முடியாமல் அம்மா தயங்கினாள். முடிவு அவள் கையில் இருந்தால் வெளிபடையாகக் கூறி விடலாம். இது ஒரு பெண்ணின் தலை விதியை நிர்ணயிக்கிற கல்யாண காரியமென்பதால் நிறைய யோசித்தே கவனமாகப் பேச வேண்டியிருக்கிறது அதுவும் ரம்யாவின் காதில் விழாமலே ,இது பற்றிப் பேச வேண்டிய மிகக் குரூரமான ஒரு வாழ்க்கை நிர்ப்பந்தம் அவர்களுக்கு.
“சொல்லுங்கோவனம்மா” என்று சூர்யா மீண்டும் ஆவல் அதிகரித்துக் கேட்கிற போது மெளனத்தைக் கலைத்து கொண்டு பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்று படவே , சுருதி கலைந்து பேசுவது போல் நா வரண்டு அவள் கூறினாள்.
“எதற்கும் அவர்கள் ஊரில் போய் விசாரித்து விட்டுத்தான் சொல்வார்களாம்”
அது வரைக்கும் சூர்யா என்ன செய்யப் போகிறாள்? ’மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு விட்ட நிலைமைதான். இது அம்மாவுக்கும் பொருந்தும் கரையேறி மீளவே முடியாமல் போன ஒரு பாவத் தீயாய், அவர்களின் மனதை மட்டுமல்ல, வீட்டையே கொளுத்திக் கொண்டிருக்கிறது. போல எப்போதும் ஓர் அவல நிலை தான். சந்தோஷ ஒளி காணாத அந்தகார இருட்டுத்தான். இதிலிருந்து அவர்கள் மீண்டு வந்து சுகம் பெறுவதும், வாழ்வதும் ரம்யாவின் நோய் நீங்கிய புது வாழ்விலேயே தங்கியிருப்பதாக அவர்களுக்குப்படும்.
அப்படியொரு வரம் கிடைத்தால், கூடவே சூர்யாவுக்கும் ஒரு வாழ்வு கிடைக்கும். அவள் நோய் நீங்கித் தேறாத வரை, சூர்யாவின் வாழ்க்கையும் அதனால் வரப் போகிற குடும்ப உறவு சார்பான உச்சகட்ட இன்பங்களும், அவர்கள் எதிர்கொள்ளப் போகிற சவால்களையெல்லாம் வென்றெடுத்தே பெற வேண்டிய பரிதபகரமான நிலைமை சூர்யாவுக்கு. ரம்யா பற்றிய வாழ்க்கை உயிரோட்டமிழந்த திரிபு நிலையில், அவள் இதில் தேறுவாளா என்பதே பெரும் சந்தேகம்தான்.
சூர்யா இப்போதிருக்கிற இந்த அக்கினிக் குண்டத்திலிருந்து முழுவதும், எரிந்து போகாமல், காப்பாற்றப்பட வேண்டுமானால் விண்ணிலிருந்து ஒரு தேவ புருஷன் தான், அவளை நோக்கி மாலையும் கையுமாக வர வேண்டும். . அப்படி வர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், வாழ்க்கை என்ன சொல்கிறது? மிகவும் பாவப்பட்ட மனதோடு ஒரு நாள், சூர்யா அதைக் கேட்க நேர்ந்தது. அவளைப் பரிசுத்தப்படுத்திப் புனிதமாக்கும் ஒரு வேத பிரகடனமாகவல்ல.. சுற்றி வளைத்துக் கொன்று போடும், ஒரு பாவப் பிரகடனமாகவே அவளை முற்றாகக் கருவறுக்கவென்றே அது வந்த போது, அவளால் தாங்க முடியவில்லை. இப்படித்தான் இரை விழுங்கும் மனித உண்மைகள் அம்மா இதை எப்படித்தான் மனசளவில் ஏற்றுக் கொண்டு ஜீரணிக்கப் போகிறாளோ தெரியவில்லை.
புரோக்கரிடம் கொடுக்கப்பட்ட அவளது நிழற் படத்தின் அழகில் எடுபட்டுத்தான் அந்தக் கனடா மாப்பிள்ளை சம்பந்தமான திருமண காரியம் நடைபெற்று முடிந்தது. .அந்த நிழல் அழகிற்குப் பின்னால், நிஜமென்று ஒன்றிருப்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை அதை அவர்கள் அறிய, அம்மா கூறியிருந்தால் , அது அப்பவே முறிந்து போயிருக்கும் . ஏன் சொல்லவில்லை? தினமும் இந்த உயிர்களுக்காக,, அவள் பெற்ற பிள்ளைகளுக்காகத் தினமும் தீக்குளித்தே பழக்கப்பட்ட அவளுக்கு, இப்போதும் அப்படியொரு நிலைமைதான்.. வாழ்க்கை குறித்து எரிக்கின்ற சத்தியத் தீயின் எடுபடாத ஒரு மறு துருவமாக இருந்து கொண்டே, அதைச் செய்து முடிக்க வேண்டிய தார்மீகக் கடமை ஒன்றே அப்போதிருந்த மனோநிலையில் அவளுக்குப் பெரிதாகப்பட்டது.
ரம்யா என்றொரு மூத்த சகோதரி, சூர்யாவுக்கு இருப்பதாகவும், செவ்வாய் தோஷம் காரணமாக அவளுக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை என்று மட்டுமே, அவள் அவர்களிடம் கூறியிருந்தாள். அது எப்படியோ ஊரின் காது வரைக்கும் எட்டி, இன்று காற்றில் பறக்கிறது எப்படியென்றால் அலை பாயும்
போன் வழி மூலமாகத்தான்….அம்மா அதை பொறுமையிழந்து கேட்டுக் கொண்டிருந்தாள் அவர்கள் தெய்வவரம் தருவார்களென்று நம்பியிருந்த அந்தக் கனடா மாப்பிள்ளையின் அன்பு அக்காதான், எதிர் முனையிலிருந்து கோபக் கனல் பறக்ககக் கேட்கிறாள்.
“நீங்கள் சொன்னதெல்லாம் பொய் தானே? ஏன் உங்கடை மகளுக்கு, இன்னும் கல்யாணம் நடக்கேலை என்று எங்களுகு நல்லாய் விளங்குது. உங்கடை மகளுக்கு சாதக தோஷமில்லை விசர்! இப்படியொரு இடத்திலை எப்படி நாங்கள் பெண் எடுக்கிறது?”
இதற்கு அம்மாவால், என்ன பதிலைத்தான் கூற முடியும். வருந்தி அழுகிற அவர்களின் உலகம் வேறானது அங்கு உளுத்துப் புரையோடியிருக்கிற அவர்களின் ரணமும் , வலிகளும் மாற்று உலகின் கண்களுக்கு எட்டாமல் போனது அதன் தவறல்ல இப்படியொரு நிலைமையில் , வாழ்க்கை வரம் வேண்டி, மண்டியிட்டுக் கையேந்தி நின்றதற்காகத் தன்னையே நொந்து சபிப்பது போல, அம்மா தன் தலையில் கை வைத்துத் தனது இந்த இயலாமையையும் வெறும் போக்குத்தனதையும் எண்ணிப் பெருங்குரலெடுத்து அழுகிற போது, அப்படி அழுகிற தாய்க்காகத் தனது இவ்வாறான வாழ்க்கை வரம் கிடையாமல் போன துயரங்களையெல்லாம் புறம் தள்ளி மறந்து விட்டுத் தாயை ஆசுவாசப்படுத்தி ஆறுதல்படுத்துவதொறையே பெரிதும் மன விரும்பியவளாய் , அம்மாவின் தோள் மீது கை போட்டுச் சலனமின்றிக்கூறினாள் சூர்யா.
“விடுங்கோவம்மா!…….எனக்குக் கல்யாணமாகாவிட்டாலென்ன? . ரம்யாவுக்கு ஒரு நல்ல துணையாகக் கடைசிவரை நானே இருந்திட்டுப் போறன். இனி இதை மறந்திடுங்கோ”
“எதை…………….?” அம்மாவுக்கு அது விளங்க நீண்ட நேரம் பிடித்தது. சிருஷ்டியென்ற மிகப் பெரிய அளவிலான இந்த உலக நடப்புகளுக்கெல்லாம், ஆதார சுருதியாக இருந்து இயங்குவதே , ஆணும் பெண்ணுமாய் இணைந்து சிறப்புப் பெறுகிற இந்தத் திருமண பந்தம் தான். அதை அடைவதனால், ஏற்படுகிற வம்ச விருத்தியும் வளமான வாழ்வும் பெறுவதே , யதார்த்த வாழ்வின் சிறப்பு அடையாளங்கள் என்று கூறப்பட்டாலும் , அது இல்லாதொழிந்த நிலையிலும், உண்ர்ச்சிகளடங்கி மனதளவில் எல்லாக்
கறைகளும் நீங்கப் பெற்றுப் பூரண ஒளி கொண்டு பிரகாசிப்பது அதை விடச் சிறப்பு.
அப்படியொரு தபஸ்வினி போலாக விரும்புகிற சூர்யாவை, இனி எந்தச் சலனங்களுமே அசைக்காதென்று அம்மா மனப்பூர்வமாக நம்பினாள். ஏனென்றால் வாழ்க்கை மாயமான கறைகளை எரிக்கத்தான், மனதில் சுவாலை விட்டுப் பற்றியெரியும் அக்கினிக் குண்டம். அது சூர்யாவிற்கும் பொருந்தும்..
– மல்லிகை (ஒக்டோபர் 2009)