கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 25,514 
 
 

திருவேங்கடம்-சரோஜா தம்பதியினர் மிகவும் சிரமத்துடன் மணவாழ்க்கையை ஆரம்பித்தனர். யார் துணையும் இல்லாமல் காலை உந்தி விசை கொடுத்து, தம் பிடித்து முன்னேற வேண்டிய வாழ்க்கை. போராட்டம், பசி, பட்டினி, வறுமை இவற்றோடு ஆரம்பமான தாம்பத்யம். ஒவ்வொரு பைசாவையும் சேமிக்க வேண்டும். எதையும் வீணாக்கக் கூடாது. வியர்வையைச் சிந்தி, ரத்தம் சுண்ட ஒரு வீடு கட்டினார்கள். சிறிய குடியிருப்பு. நீண்ட தாழ்வாரம். உள்ளே மூன்று அறைகள்.

சரோஜா, ட்யூஷன் எடுப்பதற்கு என்றே கட்டப்பட்டதுபோல் இருந்தது அந்தத் தாழ்வாரம். காலையிலும் மாலையிலும் மாணவர்கள், தனி வகுப்புக்காகக் குவிவார்கள். அவர்களைக் கவனிப்பதிலேயே சரோஜாவும் கரைந்துபோவாள். இப்படி வீட்டு நடப்பைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்ததற்கு, அவள் மாமியார் ஒரு காரணம். மாமியார்… சமையல், பிள்ளைகளுக்குச் சாப்பாடு என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். இரண்டு மகன்கள், ஒரு மகள். சாகர், சந்தேஷ் என மகன்களுக்குப் பெயர். சாஹித்யா என்ற கடைக்குட்டி.

ஒருமுறை, சாஹித்யாவுக்குக் கடுமையான காய்ச்சல். அருகில் இருந்த நமச்சிவாயம் மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். அவர் ஊசியெல்லாம் போட்டார். அப்போது இதுபோன்ற பெரிய தனியார் மருத்துவமனைகள் இல்லை. ‘மிக்சர்’ என்று பொட்டலம் கட்டி டாக்டர் கொடுத்தார். அப்போது சூரமங்கலத்தில் அவர்தான் பிரபலம். ஆனால், காய்ச்சல்தான் அடங்கவில்லை.

‘பெண் வேண்டும்’ என்று ஆசையாகப் பெற்றுக் கொண்ட குழந்தைக்குக் காய்ச்சல் அடங்கவே இல்லை என்பது, சரோஜாவைக் கன்னத்தில் கைவைக்க வைத்துவிட்டது. அவள், தன் பள்ளி வேலையில் இருந்து முதல்முறையாக விடுப்பு எடுத்தாள். வேண்டாத கடவுள் இல்லை. நான்காவது நாள், ஜுரம் குறைய ஆரம்பித்தது. அதுவரை இழவு வீடு போல இருந்த அந்தக் குடியிருப்பு, மீண்டும் கலகலப்பானது.

சாஹித்யா, மீண்டும் பள்ளிப் பையைத் தூக்கிக்கொண்டு திருவேங்கடத்தின் மிதிவண்டியின் பின்னால் அமர்ந்து செல்வதைப் பார்த்ததும்தான் சரோஜாவுக்கு உயிர் வந்தது. அவள் கண்கள் நீரால் ததும்பின. ‘இந்தக் குழந்தைகளை வளர்க்க, எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன். எத்தனை நாள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்குச் சென்றிருப்பேன். கடவுளே!’ என்று எண்ணிக்கொண்டாள்.

சாஹித்யாவுக்கு உடல் பழையபடி தேறியது.

இரவு 8 மணிக்கு, திருவேங்கடம் வந்தார். அவர் வரும் வரை வீடே காத்திருக்கும். அவர் வந்ததும், மிதிவண்டியை தாழ்வாரத்தின் ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே வந்து முகம், கை, கால்களைக் கழுவிவிட்டு அமர்ந்தார். அவருக்கும் அலுவலகம், வீடு இரண்டே கதி. அவர் தேயிலை கம்பெனி ஒன்றின் பிரதிநிதியாக இருந்தார். தாரமங்கலம், இளம்பிள்ளை என்று பல இடங்களுக்குக் குதிரை வண்டியில் சரக்குகளோடு போக வேண்டும். எனவே, வீட்டுக்கு வந்தால் ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றுமே தவிர, வேறு சிந்தனைகள் தோன்றவில்லை.

பக்கத்திலேயே இருக்கும் ஏற்காட்டுக்குக்கூட, அவர் குடும்பத்தை அழைத்துச்சென்றது இல்லை. பசங்களும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதும் இல்லை.

அன்று திருவேங்கடம் முகம் கழுவி வந்ததும், தயங்கியவாறு சரோஜா, ”ஏங்க… ஒரு விஷயம்..!” என்று இழுத்தாள்.

”என்ன?”

”ஒண்ணுமில்லை. நம்ப சாஹித்யாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ, ‘நல்லா ஆயிடுச்சின்னா, திருப்பதிக்குக் குடும்பத்தோட வர்றோம்’னு வேண்டிக்கிட்டேன். அதுதான்…” – சரோஜா தயங்கியவாறே பயந்தவண்ணம் சொன்னாள்.

”உன்னை யாரு என்னைக் கேட்காம வேண்டிக்கச் சொன்னது? அதுவும் குடும்பத் தோட திருப்பதி தரிசனம் என்ன அவ்வளவு லேசுப்பட்ட விஷயமா? அவனவன் 10, 12 மணி நேரம் க்யூவுல நிக்கிறான். நண்டு, சிண்டுகளைக் கூட்டிக்கிட்டுப் போறது அவ்வளவு ஈஸியா? எல்லாத்துலயும் பெரியத்தனம். இன்னைக்குக் காலையில உன்னோட தம்பி, கம்பெனிக்கு வந்தான். ‘சாஹித்யாவுக்கு உடம்பு சரியாயிடுச்சின்னா, கோட்டை மாரியம்மனுக்குப் பட்டுப்புடைவை சாத்துறதா வேண்டிக்கிட்டேன். சாத்திடுங்க’னு சொல்லிட்டுப் போறான். அவன் வேண்டினதுக்கு நாம எப்படிச் சாத்த முடியும்? அவனைத்தான் நாலு சாத்துச் சாத்தணும். உங்க குடும்பமே ஒரு டுபாக்கூர் குடும்பம்!” – திருவேங்கடத்தின் முகம் ஜிவ்வென்று கோபத்தில் சிவந்தது.

‘திருப்பதிக்குப் போகப்போறோம். வழியெல்லாம் ஹோட்டல்ல சாப்பிடப்போறோம்’ என்று அம்மா சொன்னதைக் கேட்டு, மகிழ்ச்சிக் கனவுகளில் இருந்த குழந்தைகளுக்கு, பெரிய ஏமாற்றமாக இருந்தது.

பிறகு, அங்கு வெகுநேரம் அமைதி. சரோஜா மூடிய வாயைக் கொட்டாவி விடுவதற்குக்கூடத் திறக்கவில்லை.

சரோஜாவின் ட்யூஷன் வகுப்புகள், சின்னப் பள்ளிக்கூடம் போல இருக்கும். ஆறாம் வகுப்பில் இருந்து, எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில ஊடகத்து மாணவர்கள் கலந்திருப்பார்கள். காலையில் ஓர் அணி; மாலையில் ஓர் அணி.

சந்தேஷ், ஆறாம் வகுப்பு. அவனுக்கு வகுப்பு ஆசிரியையே சரோஜாதான். ‘அம்மாவை வகுப்பில் எப்படிக் கூப்பிடுவது?’ என்று எப்போதும் அவனுக்குக் குழப்பம். அதனால் வகுப்பில் எதுவும் பேசாமல் இருந்துவிடுவான்.

சந்தேஷ் வகுப்பில் ஸ்ரீதர் என்கிற பையனும் படித்தான். சேலத்தில் அப்போது பகவதி டிரான்ஸ்போர்ட் என்ற பஸ் கம்பெனி ஒன்று இருந்தது. அவனுடைய அப்பாதான் அதற்கு முதலாளி. படிப்பில் அவன் பலவீனமானவன். தினமும் காரில்தான் வந்து இறங்குவான்.

ஸ்ரீதரும் சந்தேஷ§ம் நெருங்கிய நண்பர்கள். காக்காய்க்கடி கடித்து மிட்டாயைப் பகிர்ந்துகொள்வது முதல் ஸ்ரீதருக்குத் தெரியாத பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது வரை நெருக்கமும் சிநேகிதமும் இருந்தன.

ஒருநாள் சந்தேஷ், ”டேய் நாங்க திருப்பதிக்குப் போகணும்.”

”போலாமே… நல்லா இருக்கும்டா. போன மாசம் நாங்க கார்லயே போயிட்டு வந்தோம். ஜாலியா இருந்துச்சு!”

”நீங்க பணக்காரங்க… கார்ல போறீங்க. நாங்க காருக்கு எங்கடா போறது?”

”என்னடா அப்படிச் சொல்லிட்ட… நான் காரை அனுப்பிவைக்கிறேன். எங்கப்பாகிட்ட சொல்லி அனுப்பி வைக்கிறேன். என்னிக்குப் போறீங்க சொல்லு!”

சந்தேஷ§க்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவனை வெகுநேரம் கட்டிக்கொண்டான்.

‘டேய்… பிராமிஸா?”

”பிராமிஸா… காட் பிராமிஸா… போதுமா?”

”சரிடா… எங்க அப்பாவைக் கேட்டுட்டு வந்து சொல்றேன்!”

சந்தேஷ், சரோஜாவிடம் அன்று மாலை மகிழ்ச்சியாக விஷயத்தைச் சொன்னான். முதலில் சரோஜா நம்பவில்லை.

”போடா… விளையாட்டுத்தனமா காரை அனுப்பறேன்னு அவன் சொன்னா அது நடக்குமா? அவங்க அப்பா அதுக்குச் சம்மதிக்கணுமே!”

”அம்மா… நீங்களே வேணும்னா கேட்டுப் பாருங்க!”

சரோஜா, மறுநாள் வகுப்பு முடிந்ததும் ஸ்ரீதரை தனியாக அழைத்து, ”ஏம்பா… நீ கார் அனுப்பறேன்னு சொன்னது உண்மையா? உங்க அப்பாகிட்ட சொன்னியா?” என்று கேட்டாள்.

‘சொன்னேன் டீச்சர். ‘அனுப்பி வெக்கிறேன்’னு சொன்னார். ‘அம்பாஸிடர் வேணுமா, ஃபியட் வேணுமா?’னும் கேட்டார்!”

”ஏம்பா… நீ ஒண்ணும் விளையாட்டாச் சொல்லலியே? இது ரொம்ப சீரியஸான விஷயம்!”

”இல்ல டீச்சர். நான் அப்பாகிட்ட ஏற்கெனவே சொல்லிட்டேன்” என்று அவன் அழுத்தமாகச் சொன்னான். சரோஜாவுக்கும் மகிழ்ச்சி. ஆனால், உள்ளூர ஒரு பயம். 15 ஆண்டு ஆசிரியப் பணியில் எந்த மாணவன் குடும்பத்திடமும் எந்தச் சலுகையையும் அவள் பெற்றது இல்லை. ‘ஒருவேளை இது தவறோ!?’ என்றுகூட நினைத்தாள்.

அன்று இரவு திருவேங்கடத்திடம் சொன்னாள்.

‘காரை அனுப்புனா, நாம பெட்ரோல் போட்டுக்கலாம். என்னோட அத்தை பையன் காளியாப்பிள்ளை லாரிதான் ஓட்டிக்கிட்டு இருக்கான். அவனை வரவெச்சிடுவோம். காரைத் திருப்பி அனுப்பும்போது, டேங்க் முழுக்க பெட்ரோல் போட்டுக் குடுத்துடுவோம். போதுமா?”

சரோஜாவுக்கு இருந்த குற்ற உணர்வு நீங்கியது.

திருவேங்கடம், எந்த நிகழ்வாக இருந்தாலும் முன்கூட்டியே யோசிப்பவர். கற்பனை செய்து சுகம் காண்பவர். அவருடைய இயல்பு அது. பஞ்சாங்கத்தைப் பார்த்து, நாள்காட்டியைப் பார்த்து ‘என்று பயணம் செய்தால் நல்லது’ என்று முடிவு செய்தார்

”அடுத்த வாரம் திங்கட்கிழமை ராத்திரி போகலாம். அந்தப் பையன்கிட்ட சொல்லிடுங்க” என்றார் புருவத்தைக் குறுக்கியவாறு. தினமும் இரவு திருவேங்கடம் வந்ததும், திருப்பதி பயணத்தைப் பற்றித்தான் பேச்சு.

”திருப்பதியில நாம, பீமாஸ்ல தங்கிடலாம். ஏ.சி. ரூம்!”

சாகருக்கும் சந்தேஷ§க்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

”ஏ.சி. ரூம் எப்படிப்பா இருக்கும்?”

”ஜில்லுனு இருக்கும்!”

இரண்டு நாள் கழித்து ஸ்ரீதர், சந்தேஷ் வீட்டுக்கு வந்தான்.

”காரை அனுப்ப வழி தெரிய வேண்டும். அதுக்குத்தான்” என்றான்.

சரோஜா, ”உங்க வீட்டு போன் நம்பரைக் குடுப்பா. உங்க அப்பா பேரு என்ன?” என்று ஸ்ரீதரிடம் கேட்டாள்.

”2234. அப்பா பேரு சாரதி” என்றான்.

அவள் தன்னுடைய டைரியில் குறித்துக்கொண்டாள்.

”ஸ்ரீதர்… கரெக்டா திங்கட்கிழமை 8 மணிக்கு காரை அனுப்பிடு. நாங்க பெட்ரோல் போட்டுக்கிறோம். மறக்காம அனுப்பிடுப்பா. ஏன்னா… வரிசையா லீவு. உன்னைப் பார்க்க முடியாது!”

”சரிங்க டீச்சர்.”

ஞாயிற்றுக்கிழமை காளியாப்பிள்ளை வந்தார்.

”அண்ணே! கூப்பிட்டு அனுப்பிச்சீங்களாமே!” என்றார். அவர் பேசும்போது வாயில் இருந்து பீடி நாற்றம். மடித்துவிடப்பட்ட கறுப்பு முழுக்கை சட்டை. முன்பக்கம் சொட்டை. கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை. நெற்றியில் பட்டை. பளபளவென முகம். முறுக்கிய மீசை.

”ஆமாம்பா. திருப்பதி போகணும். கார் ஏற்பாடு பண்ணியிருக்கோம். நாளைக்கு ராத்திரி நீ வந்துடணும். நீதான் ஓட்டணும். வேற வேலை இல்லையே!”

”இந்த வாரம் டியூட்டி இல்லண்ணே. நீங்க சொன்னா, எது இருந்தாலும் உட்டுட்டு ஓடி வந்திட மாட்டேனா!” என்ற காளியாப்பிள்ளைக்கு, பார்வதி பாட்டி சாப்பாடு பரிமாறினாள். அவர் விடைபெற்றுக்கொண்டு சென்றார்.

திங்கட்கிழமை மாலையில் இருந்தே சரோஜா வீடு அல்லோலகல்லோலப்பட்டது. சட்டைகளை எடுத்து வைப்பதும், சோப்பு, சீப்பு, கண்ணாடியை அடுக்குவதுமாக மும்முரமாக இருந்தனர். ‘முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியே போகப்போறோம்’ என்பது மிகப் பெரிய சந்தோஷம்.

சரோஜா, சாஹித்யாவுக்கு உடம்பு சரியில்லாதபோது வேண்டிக்கொண்டு முடிந்துவைத்த மஞ்சள் துணியை, மறக்காமல் எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டாள். எடுத்துட்டுப் போகவேண்டிய பைகள் எல்லாம் தயாராகத் தாழ்வாரத்தின் மூலையில் தவம் இருந்தன. 6 மணியில் இருந்து காளியாப்பிள்ளையை எதிர்பார்த்து அவர் வராததற்குக் கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டிருந்தார் திருவேங்கடம்.

திருவேங்கடத்துக்கு, திருப்பதி வழி முழுவதும் அத்துப்படி. அவரே திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு பிறந்தவர்தான். ஐந்து பெண்களுக்குப் பிறகு பிறந்தார். பார்வதி, அதற்காக சனிக்கிழமை விரதமும், புரட்டாசி நோன்பும் இன்று வரை இருந்து வருபவள்.

காளியாப்பிள்ளை வந்ததும், திருவேங்கடத்தின் கோபம் காணாமல்போனது.

7 மணிக்கு எல்லோருக்கும் சுடச்சுட இட்லியும், தோசையும், தக்காளிக் குழம்பும் பார்வதி பாட்டி பரிமாறினாள். வீட்டைப் பார்த்துக்கொண்டு பார்வதி பாட்டிக்குத் துணையாக இருக்க, தன் அக்காள் ஜெகதாவையும் திருவேங்கடம் வரவழைத்திருந்தார்.

மணி எட்டைத் தொட்டது. கார் எப்போது வரும் என்று பார்த்துக்கொண்டே இருந்தனர் அனைவரும். எட்டரை மணி ஆயிற்று. அவர்களுக்கு இருப்புத் தாங்கவில்லை.

”ஒருவேளை, டிரைவருக்கு வழி தெரியலையோ என்னமோ!” என்றார் காளியாப்பிள்ளை.

”அந்தப் பையன் வந்து வீட் டைப் பார்த்துட்டுப் போனானே!”

சாகர், பள்ளிக்கூடம் வரை ஒரு நடை போய் ‘கார் வருகிறதா’ என்று பார்த்தான். ஏதாவது மோட்டார் சத்தம் தூரத்தில் கேட்டால் ‘கார் வருகிறதோ..?’ என்று காதைத் தூக்கிக்கொண்டு ஒட்டுமொத்தக் குடும்பமே கவனித்தது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்.

மணி ஒன்பதரை ஆயிற்று. காரைக் காணோம்.

”இப்ப என்ன பண்றது? எப்படித் தெரிஞ்சிக்கிறது? அவங்க அட்ரஸைக் கேட்காம விட்டுட்டோமே!” என்றார் திருவேங்கடம்.

”அவங்க போன் நம்பரை நான் வாங்கி வெச்சிருக்கேங்க” என்று கைப்பையைத் துழாவினாள் சரோஜா.

”இதை முதல்லியே சொல்லித் தொலைச்சிருக்கக் கூடாதா? உன்னை என்னா பண்றது?” என்று கடிந்துகொண்டார் திருவேங்கடம். பலமுறை இப்படித் திட்டு வாங்கி மரத்துப்போயிருந்ததாலும், அவற்றையே பாராட்டாகக் கருதும் பக்குவத்தைப் பெற்றிருந்ததாலும் சரோஜா அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் கைப்பையில் இருந்த சீட்டை எடுத்துக் கொடுத்தாள். அதில் ‘சாரதி – 2234’ என்று எழுதப்பட்டிருந்தது.

திருவேங்கடம், சாகரை அழைத்தார்.

”டேய்… நம்ப எஸ்.கே.பி. ஸ்டோர்ல போன் இருக்கு. அங்க நீயும் சந்தேஷ§ம் போயி, ஒரு ரூபாய் கொடுத்து போன் பண்ணி ‘என்னா?’னு கேட்டு வாங்கடா” என்றார்.

எஸ்.கே.பி. ஸ்டோரின் கதவை மூடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சாகர் ஓடிப்போய் கடை முதலாளியிடம், ”சார்… ஒரு போன்” என்று ஒரு ரூபாயைக் கொடுத்தான்.

அவர் ‘2234’ என்று நம்பரைப் போட்டு சாகர் கையில் கொடுத்தார். அவன் போன் பேசும் முதல் அனுபவம் அது. வெகுநேரம் மணி அடித்தது. பிறகு, கரகரப்பான குரல் ”ஹலோ” என்றது.

”சார்… நாங்க ஸ்ரீதர் ஸ்கூல்ல இருந்து பேசுறோம்!”

”……………………..”’

”சார், நாங்க சரோஜா டீச்சர் பசங்க . . .” என்று சாகர் பேசும்போதே, சந்தேஷ் போன் பேசவேண்டும் என்ற ஆசையில் ரிசீவரைத் தரும்படி நச்சரித்தான். அவன் தலையில் குட்டிவிட்டு உரையாடலைத் தொடர்ந்தான் சாகர்.

”அதுக்கு என்ன?”

”சார்… நாங்க திருப்பதிக்குப் போக காரை அனுப்பறோம்னு ஸ்ரீதர் சொன்னான். நாங்க எல்லோரும் கார் வரும்னு காத்துக்கிட்டு இருக்கோம். இன்னும் வரலே!”

”அதெல்லாம் வராது. அவன் என்கிட்ட இது பத்தியெல்லாம் சொல்லவே இல்லை. ஒவ்வொரு டீச்சரும் இப்படி கார் கேட்டா, நாங்க என்ன பண்ண முடியும்?”

போன் மறுமுனையில் ‘டொக்’கென்று வைக்கப்பட்டது.

சாகரின் கண்களில் நீர். அதுவும் கடைசி வரிகள் அவனுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நடந்த உரையாடலை அப்படியே அவன் சரோஜாவிடமும் திருவேங்கடத்திடமும் சொன்னான். நேர்மையில் இருந்து சிறிதும் பிறழாத சரோஜாவுக்கு, அந்தச் சொற்கள், முகத்தில் வெந்நீரைக் கொட்டியதுபோல் இருந்தது.

”என்னோட புள்ளைங்க என்னோட கிளாஸ்ல படிச்சாலும், ஒரு நாள்… அவங்களுக்கு கொஸ்டீன் பேப்பரை முன்கூட்டியே குடுத்திருப்பேனா? எவ்வளவு அவமானம்!” என்று அழுதாள். முந்தானையை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.

”விளையாட்டுப் பசங்க சொல்றதை எல்லாம் நம்புனோமே, நம்மளத்தான் சொல்லணும்!” என்று சொன்ன திருவேங்கடம், எதிர்பாராத நேரத்தில் சந்தேஷின் கன்னத்தில் ஓர் அறைவிட்டார். அவன் அழுதுகொண்டே உள்ளே ஓடினான்.

”உன்னையெல்லாம் குடும்பத்தோட திருப்பதிக்கு வர்றோம்னு யாரு வேண்டச் சொன்னது?” – சரோஜாவின் மீது பாய்ந்தார்.

காளியாப்பிள்ளை, நிலவரத்தைப் புரிந்து கொண்டு ”அண்ணே… கவலைப்படாதீங்க. ஏதாச்சும் வாடகைக் கார் கிடைக்குமானு பாத்துட்டு வர்றேன்” என்று சொல்லிப் போனார்.

அந்த நம்பிக்கையில் வெகுநேரம் விழித்திருந்தது அந்தக் குடும்பம். காரும் வரவில்லை; காளியாப்பிள்ளையும் வரவில்லை.

பள்ளி திறந்தது!

”தோ பாரு சரோஜா. நீ அந்தப் பையன்கிட்டே இது சம்பந்தமா எதுவும் பேசாதே. நமக்குத்தான் அசிங்கம். நான் வர்ற மாசம் திருப்பதிக்குப் போக பஸ்ஸை ரிசர்வ் பண்றேன்” என்றார். பிறகு சந்தேஷிடம் திரும்பி, ”டேய்… இனிமேல் அந்தப் பையன்கிட்ட எந்த சகவாசமும் வெச்சிக்காத. அவன்கிட்ட இதுபத்தி ஏதாவது பேசுனா, தோலை உரிச்சுடுவேன்” என்று முன்கூட்டியே முதுகில் ஓர் அடிவிட்டார். ”முழு ஆண்டு லீவுல திருப்பதிக்குப் போகலாம்” என்று சொல்லிட்டு மிதிவண்டியில் ஏறினார்.

வகுப்பில் சந்தேஷ், ஸ்ரீதர் பக்கம் திரும்பவே இல்லை. ஸ்ரீதரோ, சரோஜா பாடம் நடத்தும்போது எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இயல்பாக இருந்தான்.

முழு ஆண்டுத் தேர்வுகள் நடந்தன. ஆறாம் வகுப்பு கணக்குத் தாள் சரோஜாவிடம் திருத்த வந்தன. அவற்றில் ஸ்ரீதர் விடைத்தாளும் இருந்தது. அவனுடைய வகுப்பு ஆசிரியர் என்ற முறையில் அவனுடைய கையெழுத்து அவளுக்குத் தெரியும். அவனுடைய விடையைத் திருத்தினாள். அவளுக்கு கார், சத்தியம், ஏமாற்றம் எல்லாம் நினைவுக்கு வந்தன.

சந்தேஷ் ஏழாம் வகுப்புக்குப் போனபோது ஸ்ரீதரும் தேர்வாகியிருந்தான். ஆனால், தேர்வில் அவன் ஃபெயில் ஆகியிருக்கவேண்டியது. அவனை ஃபெயில் ஆக்கினால், ‘கார் கொடுக்காததால் ஃபெயில் ஆக்கினோம்’ என்று மனச்சாட்சியே குத்தும் என்ற எண்ணத்தில் இரண்டு மதிப்பெண்கள் கூடுதலாகக் கொடுத்து சரோஜா அவனைத் தேர்ச்சி பெறவைத்தாள் என்ற உண்மை, திருவேங்கடத்துக்குக்கூடத் தெரியாது.

‘நடுத்தரக் குடும்பத்தால் யாரையும் பழிவாங்க முடியாது. அவன் கார் அனுப்பாதது பற்றிச் சிறிதும் குற்ற உணர்வு கொள்ளவில்லை. நாம் அவன் வாங்கியிருக்கிற மதிப்பெண்ணுக்கு ஃபெயில் ஆக்கக்கூட பயப்படுகிறோம். பணம், குற்ற உணர்வை உறிஞ்சிக்கொள்கிறது’ என்று அவள் நினைத்தாள். ‘கார் கேட்ட பாவத்துக்காக ஒருவனைத் தேர்ச்சி பெறச் செய்துவிட்டோம்’ என்று மட்டுமே அவள் மனத்தில் வடு தங்கிவிட்டது. முதல்முறையாக அவள் செய்த முறைகேடு அது.

வெளியில் வந்து பளபளவென்று நிற்கும் டொயோட்டா இன்னோவா காரைப் பார்த்து பூரிப்பு ஏற்பட்டது. ‘இவ்வளவு நாள் உழைப்பும் வீண்போகவில்லை’ என்று அவனுக்கு மகிழ்ச்சி. சாதித்த திருப்தி.

‘டேய்… எனக்கும் ஒரு கார். சாதாரண கார் இல்லை. சொகுசுக் கார்’ என்று சந்தேஷ் மனம் முழுசும் பூரிப்பு.

”சார்… காரை எங்கேயாவது முதல்தபாவா ரொம்பத் தூரத்துக்கு ஓட்டிட்டுப் போணும். அப்பால சர்வீஸுக்கு வுடணும். ஒரு கோயிலுக்கு சவாரி போனா நல்லது” என்றார் டிரைவர் பன்னீர்செல்வம்.

”திருப்பதிக்குக் குடும்பத்தோட போயிட்டு வரலாம். எங்க அப்பா-அம்மாவையும் கூட்டிக்கிட்டு…” என்றான் சந்தேஷ்.

அவன் மனத்தில், 20 ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த ஏமாற்றம் ஆறாத காயமாகவே இருந்தது. திருப்பதி போய்வந்தால் மட்டுமே அது ஆறும்!

– மார்ச் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *