வேணி என்றொரு புதிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 716 
 
 

ஊருக்குள் நுழைந்தபோது பல கட்டடங்களுக்கு மத்தியில் ஒரு பழைய புகைப்படம் என நின்றிருந்த அந்தக் கட்டிடத்தை இடித்துக் கொண்டு இருந்தார்கள். வாழ்ந்த வீட்டை இடிப்பதைக் காண சகிக்க முடியாதவன் போல தனது மோட்டார் சைக்கிளை சற்று தள்ளியிருந்த டீக் கடையின் முன்பு நிறுத்தினான் ராமகிருஷ்ணன். “ஒரு டீ போடுங்ணா” என்றபடியே அதை ஏறிட்டுப் பார்த்தான். “ஏன் இந்தக் கட்டடத்தை இடிக்கிறாங்கொ?” என்றான். “வாங்குனவங்க இடிக்கறாங்கொ…ஊரும் பெருசாயிப் போச்சு…ரொம்ப பழசாப் போனதுனால காரை எல்லாம் விழுகுதுங்… அதுங்காட்டியும் பழைய கட்டடத்தை யாரு வச்சுருப்பாங்கொ? இடிச்சுப் போட்டு கடை கட்டி வாடகைக்கு விடப் போறாங்களாமா” என்றார் டீக் கடைக்காரர்.

ஊர் பெரிதாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக திருப்பூர் சாலையின் மேற்கிலிருந்து கிழக்கு வரை பார்வையை ஓடவிட்டான். ஆமாம் வளர்ந்து தான் விட்டது இந்த ஊர். ஒரு காலத்தில் இதே ஊரில் இருந்து திருப்பூர் கம்பெனிகளுக்கு காலை நேரத்தில் பஸ்ஸில் தொங்கிக் கொண்டு செல்பவர்களை பார்த்திருக்கிறான். அவனும் சில வருடங்கள் திருப்பூர் கம்பெனிகளுக்கு வேலைக்குச் சென்று வந்திருக்கிறான். அப்போதெல்லாம் ஒரு சில பெட்டிக் கடைகள், பழக்கடைகள், மளிகைக் கடைகள், சைக்கிள் கடைகளே இருந்தன. ஆனால் இன்று இந்தக் குறுநகரிலேயே ஆங்காங்கே பனியன் கம்பெனிகள் கட்டத் தொடங்கி விட்டார்கள். பெரிய பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனிகள் தங்களது யூனிட்டை திருப்பூரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தள்ளியுள்ள இந்த ஊரில் ஆரம்பித்து விட்டார்கள். செல்போன் முதல் வாகன விற்பனைக் கடைகள் வரை வந்துவிட்டன. இப்போது பல ஊர் மட்டுமல்லாமல் பல மாநிலத்தவர்கள் கூட இங்கேயே தங்கி வேலை செய்ய தொடங்கிவிட்டார்கள். விரைவில் இந்த ஊரும் கூட திருப்பூரின் சேட்டிலைட் நகராகவும் மினி பாரத விலாஸ் ஆகவும் மாறப் போகிறது என்று நினைத்துக் கொண்டான்.

“டீ இந்தாங்” என்ற சப்தம் கேட்டு இடிக்கப்படும் அந்தக் கட்டிடத்தின் நிகழ்கால துயரத்திற்கு வந்தான். இடிக்கப்பட்டு விழும் செங்கற்கள் கீழே கிடந்த தகரக் கூரை ஒன்றின் மீது விழுந்து தட் தட தட் தட தட் தட என எழுப்பிய ஓசை இதே கட்டிடத்தில் அமர்ந்து டைப்ரைட்டரில் asdfgf என அடித்துப் பழகிய நாட்களை நினைவூட்டியது. மனிதன் நினைவில் காடுள்ள மிருகம் என்று சொல்கிறார்கள். காடு மட்டும் தானா- நினைவில் தேவையற்ற எதுவெல்லாம் உள்ளது எதை எப்போது நினைத்துப் பார்க்கிறான் என்பது அவனுக்கே கூட உறுதியாய் தெரிவதில்லை. கட்டிடங்களும் தன் நினைவுகளை தங்களுக்குள்ளே வைத்துக் கொள்கின்றன. உயிரோடு இருக்கும் மனிதனைப் போல கம்பீரமாக நிற்கும் கட்டிடங்கள் ஒருநாள் உயிரற்ற மனிதனைப் போல் மறைந்து போகும் போது அதன் நினைவுகளையும் புதைத்து விடுகின்றன.

இடிந்து விழும் அந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் மறக்க முடியாத நீலவேணி அக்காவை நினைவூட்டியது. அவளைப் பற்றி நினைக்கையில் மனதிற்குள் ஏதோ ஒரு அன்பு சுரந்தது.

“எனக்கு இந்த asdfgf தலைகீழா அடிக்கவே வரமாட்டீங்குது வேணீ” என்றான் ராமகிருஷ்ணன். “அப்படித்தாம்பா இருக்கும், பழகப் பழக வேகமாக வந்துடும்” என்று தன் முட்டைக் கண்களை உருட்டியபடி நீலவேணி சொன்னது எல்லாம் நினைவில் எழுந்தது. அவனை விட அவள் இரண்டோ மூன்றோ வயது மூத்தவளாக இருந்தாலும் அவன் அவளை வேணீ என்று இழுத்தே அழைத்துப் பேசி இருக்கிறான். சில நேரம் அவள் திரும்பிப் பார்க்காமல் அல்லது வேறு யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் மட்டும் வேணிக்கா என்று அழைப்பான். “என்னை அப்படி கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்றது” என்று மூச்சுக் காற்று அவன் முகத்தில் படும்படி குனிந்து சொல்வாள். அப்போது பாண்ட்ஸ் பவுடர் வாசமும் ஃபேர் அண்ட் லவ்லி வாசமும் கலந்து என்னவோ செய்யும். ஆனால் அதெல்லாம் மற்றவர்களுக்குத் தான். அவனுக்கு அந்த மாதிரி எதுவும் தோன்றியது இல்லை. ஏன் தன்னை பெயர் சொல்லியும் வாப்பா போப்பா என்றும் செல்லத்துடன் அழைக்கிறாள் என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. அவள் வார்த்தைகள் மட்டுமல்ல, அவள் முகமும் அப்படித்தான் இருக்கும். ஏதோ பழங்காலக் கோயில்களில் எண்ணெய் பிசுக்கேறிய கல் தூணில் ஒரு ஓரமாக செதுக்கப்பட்டு நூற்றாண்டுகளாக அபிநயம் பிடித்து நிற்கும் புடைப்புச் சிற்பம் போல அவள் கண்களில் ஒரு புராதன சோகம் அப்பிக் கிடக்கும்.

முதன் முதலாக அந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தபோது அவளது முட்டை கண்களைப் பார்த்து பயந்து இருக்கிறான். புதிதாக வந்தவர்களுக்கு பழைய ரெமிங்டன் இற்றுப்போன மெஷினில் உட்கார வைப்பார்கள். ஃபிங்கரிங் பழகி வாக்கியங்கள் அடிக்கத் துவங்கிய பின்பே கோத்ரேஜ் இயந்திரம் கிடைக்கும். அப்போது அந்த மெஷின் தான் டைப் அடிக்க சற்று மென்மையாக இருக்கும். கைவிரல்கள் வலிக்காது. ஆனால் அவனுக்கு மட்டும் அவளது கண்களின் கரிசனம் வேறு மாதிரியாக இருந்தது. எல்லோரும் சென்ற பின்னர் கோத்ரேஜ் மெஷினில் டைப் அடிக்கக் கற்றுக் கொடுத்தாள்.

“வேணீக்கா இந்த asdfgf ஸ்பேஸ்க்கு அப்புறம் ரிவேர்சில் அடிக்க வரமாட்டிங்குது” என்று சொன்னதும் அவள் அருகில் வந்து நின்றாள். “ரொம்ப ஈஸிப்பா… சின்ன பையன் தானே நீ… சீக்கிரமா பழகிக்குவ” என்று தன் மென்மயிர் கரங்களால் அவன் விரலைப் பிடித்து சொல்லிக் கொடுத்தாள். நீலப்பச்சை பாவாடையும் வெள்ளை தாவணியும் அணிந்து பான்ட்ஸ் பவுடர் மணத்துடன் தன் விரல்களை ஒரு பருவப் பெண் தொடுவது ராமுக்கு கூச்சத்தை கொடுத்தது. சட்டென்று தன் கையை எடுத்துக் கொண்டவனை “ப்ச்.. ஏன் கையை எடுக்கிற” என்று செல்லமாக அதட்டினாள்.

“ஒன்னும் இல்லீங்க்கா” என்றான்.

“இங்க பாரு… அக்கானு சொல்லாதே… வேணும்னா வேணீனு கூப்பிடு” என்றாள். “சரீங்க்கா” என்றான்.

“இப்பதானே சொன்னேன்… மறுபடியும் அப்படியே கூப்பிடுற பாரு”

“அதான் ஏன்னு கேட்டேன்”

“அது அப்படித்தான்” என்றாள் புன்னகையுடன்.

புரிந்து கொள்ள சிரமம் கொடுப்பது வாழ்க்கை மட்டுமல்ல வாழ்வில் வரும் பெண்களும் தான் என்பதெல்லாம் அந்த வயதில் ராமகிருஷ்ணனுக்கு தெரியவில்லை. தனக்கு யாரும் அக்கா தங்கை இல்லை என்ற குறையால் யார் தன்னை பாசமாக அரவணைத்தாலும் மனம் நெகிழ்ந்து போகிறனாகத்தான் இருந்தான். இப்போதும் அப்படித்தான் இருக்கிறான்.

“ஏன் எப்பவும் ஒரு சோகமா இருக்கிறீங்க?”

“இல்லையே… என் முகமே அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லிவிட்டு அவள் தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்தபோது பார்வையை ஒரு நொடி இவன் கண்களுக்குள் இறக்கினாள். அது அவனை என்னவோ செய்தது.

“ஏன் அப்படி பார்க்கிறீங்க?”

“எப்படி பாக்குறாங்க?”

“இல்ல ஒரு ஓரக்கண்ணால பாக்கறீங்கள்ள அதச் சொன்னேன்”

“நீ பாக்குறதுக்கு என் மாமா பையன் போலவே இருக்குற” என்றபோது ராமிற்கு இறக்கைகள் முளைத்து உடல் லகுவானது போலிருந்தது.

“நான் என்ன அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?”

“அய்ய…ஆசயப் பாரு… அவன் உன்னை மாதிரி கருப்பா இருப்பான். அழகுனு சொல்ல முடியாது. ஆனால் களையா லட்சணமா இருப்பாப்லயா… அதே மாதிரி இருக்கிறதால அப்படிச் சொன்னேன்” என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தபோது இடது இதழோரம் தெரிந்த சிங்கப்பல் அவளை மேலும் அழகாக காட்டியது.

ஓரளவுக்கு சிவப்பு நிறம், முட்டைக் கண்கள், ஆங்காங்கே முகப்பருக்கள், எண்ணெய் தேய்த்து சீவிய ஒற்றைப் பின்னல் சடை, பான்ட்ஸ் பவுடர், ஃபேர் அன்ட் லவ்லி, நீலப் பச்சை பாவாடை தாவணி, கரிசனமான பார்வை, செல்லமான அதட்டல் என்று டைப் அடிக்கும் சத்தத்திற்குள் மூழ்கிக் கொண்டே அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பான்.

இவனுக்கு அண்ணன் போன்றவர்களும் டைப் கற்பதுபோல தங்கள் வாழ்க்கைக்கான தேடலில் ஈடுபட்டார்கள். நீலவேணிக்கு இவன் செல்லமாக இருப்பது கண்டு தினமும் டீயும் பிஸ்கட்டும் அன்பளித்தார்கள். “அண்ணா இதெல்லாம் வேண்டாம்ங்… எதுக்குங்க இதெல்லாம் என்று டீ மீதான ஆசையை அடக்கிக் கொண்டு பேசினாலும் கூட அந்த அண்ணன்கள் விடமாட்டார்கள். ”சும்மா சாப்புட்றா தம்பி” என்பார்கள்.

“ராம் அவனுக ஏதாவது கொடுத்தா இப்படித்தான் வாங்கித் திம்பயா” என்று ஒருமுறை எரிச்சலுடன் கேட்டாள் நீலவேணி.

“ஏன் அப்படி சொல்ற வேணி… சாப்பிட்டா என்ன?”

“எனக்குப் பிடிக்கல. இனிமே அவங்க ஏதாவது வாங்கி கொடுத்தா சாப்பிடக்கூடாது” என்று அன்பாக கட்டளை இட்டாள்.

திடீரென ஒருநாள் அவள் விடுப்பு எடுத்துக் கொண்ட அன்று ராமுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் துக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தான். அடுத்த நாள் போனதும் அவளிடம் சண்டை பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சென்றான். “நேத்து ஏன் நீ வரல? என்றான். அவன் கேட்டது அவளை என்ன செய்ததோ தெரியாது. அவ்வளவு கோபமாக அவள் பார்த்ததும் கிடையாது. அப்படி ஒரு நெருப்புப் பார்வை பார்த்தாள். யாருக்கு எப்படியோ தன்னிடம் அவளின் மென்மையான முகத்தையே காட்டுகிறாள். “எல்லாம் அந்தக் குண்டனால தான்” என்று டீ வாங்கித் தந்த அண்ணன்களில் ஒருவரான ரமேஷைத் தான் சொல்கிறாள் என்பது புரிந்தது. “என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு வேணி” என்றான். “எல்லாரும் போகட்டும் அப்புறம் சொல்றேன்” என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

மணி ஆறை கடந்திருந்தது. வேணியை அழைத்துப்போக அவரது அப்பா எப்போதும் ஆறரை மணி வாக்கில் சைக்கிளில் இன்ஸ்டியூட்டுக்கு வருவார். அவர் வரவும் இவள் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பவும் சரியாக இருக்கும். அதற்குள் கேட்டாக வேண்டும் என்று நினைத்தான்.

“எதுவுமே சொல்லாமல் கிளம்புற” என்றான். எல்லோரும் போய் விட்டார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நின்ற வேணியின் கண்கள் சற்று கலங்கிப் போய் இருந்தன.

“அந்த ரமேசும் இன்னொருத்தனும் டைப் அடிக்கவா வந்து இருக்கானுங்க? சைட்டடிக்கத் தானே வரானுங்க. அதுலயும் அந்த குண்டன் ரமேசு டேபிள் முன்னாடி உட்கார்ந்துகிட்டு பேச்சுவாக்கில் கால்ல உரசுறான். டபுள் மீனிங்ல பேசுறான்… ச்சை என்ன பொழப்பு இதுனு இருக்குது”

“தெரியாம பட்டிருக்கும் வேணி… இதுக்கு போயி…”

“உனக்கு அது தெரியாம பட்டதாத்தான் இருக்கும். ஆனா எனக்கு மட்டும்தான் தெரியும் அது எப்படினு” என்று கோபமாகக் கூறினாள்.

இவள் என்ன சொல்கிறாள் என்பதை புரிந்து கொள்ளத் தெரியாத கிராமத்து பையனாகவே இருந்தான். “காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிற உனக்கு இதெல்லாம் சொன்னாத்தான் புரியுமா?” என்று சொல்லிக் கொண்டே இன்ஸ்டியூட் விட்டு வெளியே புறப்பட்டுச் சென்றாள். அவள் கடைவீதியில் நடந்து சென்று பேருந்து நிறுத்தத்தில் போய் நிற்பது வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இவளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்று யோசித்தபடி நின்றான்.

இன்ஸ்டியூட்டிற்கு 4 மணியிலிருந்து 5 மணி வரை யாரும் வர மாட்டார்கள். அப்போது வேணியிடம் நேற்று நடந்த விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தபடி இன்ஸ்டிடியூட்டுக்கு சென்றான்.

“என்ன வேணீக்கா… என்ன பண்ற?”

“யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. நீயுமா?”

“இப்ப உன்ன அக்கான்னு கூப்பிட்டது தப்புதான். சரி கூப்பிடல, சொல்லு”

“எனக்கு தான் அப்படி கூப்பிட்டா பிடிக்க மாட்டேங்குதுன்னு சொல்றேன்ல”

“சரி சரி சொல்லு”

“வெறுப்பேத்துற மாதிரியே பேசுறீயே” என்று அழுகை தொண்டையில் நிற்பது போல் பேசினாள். அப்போதுதான் அவள் முகத்தை நன்றாகப் பார்த்தான். இரவெல்லாம் அழுதிருப்பாள் போல இருந்தது. முகமெல்லாம் வீங்கி இருந்தது.

“என்ன வேணி ஏதாவது பிரச்சனையா? எங்கிட்ட சொல்லு என்று கெஞ்சினான். “உனக்குப் புரியாது” என்றாள். “உன்னை விட சின்னவங்கிறதனாலதான இப்படி சொல்றே” என்றபடி எழுந்து செல்ல முயன்றான்.

“வாழ்க்கையே போர்க்களம்… வாழ்ந்துதான் பார்க்கணும்… என்ற பாட்டை முணுமுணுத்தாள்.

“என்ன வேணி பாட்டெல்லாம் பாடற”

“இன்னைக்கு பேப்பர் படிச்சியா?”

“இப்ப நீ சோகமா இருக்குறதுக்கும் பேப்பர் படிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்டுவிட்டு இல்லை என்பதாக தலையாட்டினான். அருகில் கிடந்த தினத்தந்தி பேப்பரை எடுத்து அதன் தலைப்புச் செய்தியை அவனுக்கு காட்டினாள். ‘சிலுக்கு சுமிதா தூக்குப்போட்டு தற்கொலை’ என்று கொட்டை எழுத்தில் போட்டு சில்க் ஸ்மிதா கயிற்றில் தொங்குவது போன்ற படம் போட்டிருந்தார்கள். “ஓ… இதுதான் காரணமா? என்று நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

“ஆண்களுக்கு எது தான் சிரிப்பை வரவழைப்பது இல்லை. எதுதான் இளப்பமாக இருப்பதில்லை. பெண் என்றாலே இளக்காரம் தானே. அதுவும் அவள் ஒரு கவர்ச்சி நடிகை தானே? காலையில் என்னடான்னா அந்த குண்டன் ரமேசு எத்தனை இளைஞர்களின் வாழ்க்கையை சிலுக்கு கெடுத்து இருப்பாள் என்று கொண்டாட்டமாக சிரித்து தொலைக்கிறான். அவ வந்து இவன் வீட்டுல டிங்கு டிங்குனு ஆடினாளா? இதா இப்ப நீ வந்து சிரிக்கிற… அவளும் ஒரு மனுசி என்பதாவது உனக்குத் தெரியுமா? என்று கேட்டு விட்டு அவனை முறைத்தாள். அதில் வீசிய அனல் இப்போது நினைத்தாலும் அவனுக்கு ஒரு பதற்றத்தை தருகிறது. “இல்ல… நான். ..சும்மாதான்… சிரிச்சேன்…” என்று ஏதேதோ சொல்லி அவள் கோபத்தை தணிக்கப் போராடினான்.

“என்னைக்காவது ஒரு நாள் நானும் இப்படி ஒரு நிலைமையில் கிடந்தாலும் நீ இப்படித் தானே சிரிப்பே” என்று அவள் கேட்ட கேள்வியில் மனம் நொறுங்கிப் போனவனாக அவள் முன் இருந்த சேரில் அமர்ந்தான். “என்ன வேணி… இப்படி எல்லாம் பேசுறே.. கஷ்டமா இருக்குது.. சாரி” என்று சமாதானம் சொன்னான். “பரவால்ல விடு” என்றாள்.

“ஆமா நேத்து மேடம் கோபமாக வெளியே போனீங்க. உங்க அப்பா வந்து கூட்டிட்டு போனாரா? என்று இயல்புநிலைக்கு கொண்டு வரும் தொனியில் பேசினான். “அவர் வரல, பஸ்ஸில் தான் போனேன். வீட்டுக்கு போனதும் அவர் பேசிய பேச்சு… கடவுளே…செத்துடலாம் போல இருந்துச்சு” என்றாள்.

வேணியின் அப்பா சற்று குட்டையான உருவமும் நரைத்த மீசையும் வழுக்கை விழுந்த முன் நெற்றியுமாக இருப்பார். கண்ணாடி அணிந்து மென்மையாக பேசியபடி வருவார். அவரா தன் மகள் அரற்றும் படியாக பேசினார் என்று அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. அப்படி என்னதான் பேசியிருப்பார் என்பது போல் புரியாமல் அவளைப் பார்த்தான்.

“அவருக்கு என் மேல சந்தேகம்”

“சந்தேகமா? உன் மேலயா? புரியலயே…”

“ஆமா… எப்ப பார்த்தாலும் ஏதாவது சொல்லி சந்தேகம் பிடிக்கிறதே வேலை. தண்ணி போட்டால் என்ன பேசுறாருன்னு அவருக்கே தெரியாது” என்றாள் விசும்பலுடன்.
“அன்னைக்கு என் மாமா பையன் ஒருத்தன் இங்க வந்தான்ல. அவன் எப்ப பார்த்தாலும் கிண்டல் கேலி பண்ணுவான். நானும் பெருசா எடுத்துக்காம சிரிச்சுக்குவேன். அவன் என்னை பிடிச்சிருக்குதுனு சொல்லி கல்யாணம் பண்ணிக்கறதா எங்க அப்பாகிட்ட கேட்டிருக்கான். அவுங்க குடும்பத்தில் யாரையும் எங்கப்பாவுக்குப் பிடிக்காது. அதனால அவன்கூட நா பேசறதும் அவருக்குப் புடிக்காது. எங்கே நான் அவன் கூட போயிருவேனோனு அவர் பயப்படுறார். நான் கொஞ்சம் லேட்டா வீட்டுக்குப் போனாக் கூட அவனோட பேசிட்டு ஊர் சுத்திட்டு வரையானு கேப்பாரு. நான் அப்படி எல்லாம் இல்லப்பானு சொன்னாலும், எவ்வளவு உண்மையாக இருந்தாலும் நம்பமாட்டாரு… செத்துப் போயிடலாம் போல இருக்குது” என்று அவள் உடைந்தபோது அவனுக்குள்ளும் ஒரு குமிழி உடைந்து சிதறியது.

பெண்ணுக்கு எங்கெல்லாமோ யாரெல்லாமோ எதிரி என்று கேட்டிருக்கிறான். இங்கே இவள் தன் தகப்பன் மீதே புகார் அளிக்கிறாள். யாரைத்தான் நம்புவது என்று புரியாமல் அவள் பாசம் வைத்துள்ள அவனிடம் சொல்கிறாள். அன்று முழுவதும் தினத்தந்தி பேப்பரையே பார்த்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் என்ற பாடலை ஒரு மந்திரம் போல ஜெபித்துக் கொண்டே இருந்தாள். அவள் ஏதோ சரியாக இல்லை என்பது மட்டும் ராம் மனதிற்குப் பட்டது. வேணீக்கா என்று சொல்லி சீண்டி பார்த்தான். பதிலேதும் பேசாமல் ஜன்னல் வழியாக வீதியை வெறித்துக் கொண்டிருந்தாள்.

நாளைக்கு வேணியுடன் வேலை செய்யும் செல்வி அக்காவிடம் அவளைப் பற்றி சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான். செல்வி இவனுக்கு பயிற்சி கொடுப்பதில்லை. அவள் காலையில் மட்டுமே வருவாள். 9 மணிக்கு மேல் திருப்பூருக்கு ஜாப் டைப்பிங் வேலைக்கு சென்று விடுவாள். எப்போதாவது வேலையில்லாமல் அல்லது டைப் தேர்வு இருக்கும்போது முழுநேரமும் இன்ஸ்டிடியூட்டில் இருப்பாள். அப்படியான ஒரு நாளில் தான் அவன் அருகே அமர்ந்து தட்டச்சுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். இயந்திரத்தின் லிவரை தள்ளும் பாணியைப் பார்த்து, “என்ன வேணியோட டிரெயின்அப் செமையா இருக்கும் போல…” என்று கேட்டாள். சிலர் லிவரை வேகமாக தள்ளுவார்கள். சிலர் மெதுவாக தள்ளுவார்கள். சிலர் ஸ்டைலாக தள்ளுவார்கள். யாரிடம் கற்கிறோமோ அந்த வித்தையின் சில துளிகள் கற்றுக் கொள்பவரிடமும் தொற்றிக் கொள்வது இயல்புதான். “ஆமாங்க்கா” என்றான். அவள் உனக்கு நல்லா சொல்லித் தந்து இருப்பான்னு எனக்கும் தெரியும் என்று சொல்லிவிட்டு வேணியை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டாள். இவனுக்கு பெருமையாகவும் அவள் தன் மீது பாசத்துடன் நடந்து கொள்வதாகவும் தோன்றியது.

டைப்ரைட்டிங் தேர்வு நடைபெறும் நாள் நெருங்கியது. “நீ நல்லாவே டைப் பண்ற… தைரியமா போ… ஆல் த பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு அவன் கண்களுக்குள் ஒரு கணம் ஆழமாகப் பார்த்தாள் நீலவேணி. அதில் உள்ள அர்த்தம் பற்றித் தெரியாமல் சரி வேணி என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

அதற்குப் பிறகு வேணியை இன்ஸ்டிடியூட் பக்கம் பார்க்க முடியவில்லை. டைப் ஹையர் வகுப்பிற்கு சேர்ந்த பின்னர் அவளைப் பார்க்க முடியாமல் தவிப்பாக இருந்தது. செல்வி அக்காவிடம் வேணி ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்டபோது அவள் மௌனமான ஒரு பார்வையுடன் நிறுத்திக் கொண்டாள். வேணி இல்லாமல் அங்கே டைப் கற்றுக் கொள்வது அவனுக்கு கொஞ்சமும் பிடிக்காததால் நின்றுவிடலாம் என்று முடிவெடுத்தான்.

மறுநாள் இன்ஸ்டிடியூட்டுக்கு சென்றபோது செல்வி அக்காவும் இன்னும் சில பேரும் பரபரப்பாகவும் அதிர்ச்சியாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். “ராம்…இப்படி பண்ணிப் போட்டாளே…நீலவேணி தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாளாம்” என்று அழுதபடி சொன்னாள் செல்வி. ராமகிருஷ்ணனுக்கு கண் இருட்டி தலை சுற்றுவது போலிருந்தது.

“என்னக்கா சொல்றீங்க. என்னாச்சுக்கா வேணிக்கு” என்று அழுதான். செல்வி அவன் தோளைப் பிடித்து ஆதரவாக அழுத்தினாள். “அழுவாதப்பா அவளுக்கு என்ன பிரச்சனைனு தெரியல… பாவம் இப்படி பண்ணி போட்டாளே” என்று அழுகையை அடக்க முடியாமல் அழுதாள் செல்வி.

நீலவேணியின் தற்கொலைக்கான காரணத்தை தேடி அலைந்தான் ராமகிருஷ்ணன். சின்ன வயது தான் அவளுக்கு. அப்படி என்ன சோகம் இருந்திருக்கக் கூடும். அவளுடன் படித்த பெண்களை கேட்டால் தெரிந்துவிடும். அவனது மாமா பையன் இருக்கிறானே அவனைப் பிடித்தால் தெரிந்துவிடும். இல்லை அவள் அப்பாவையே கேட்டால் என்ன? என்று அவள் கிராமத்துக்குச் செல்லும் பேருந்திலேயே ஒருநாள் ஏறிவிட்டான். ஊருக்குள் இறங்கி நடந்து சென்றபோது அங்கு சென்றாலும் கூட அவன் அப்பன் சந்தேகப்பட்டு ஏதாவது பேசிவிடுவான் என்பதை உணர்ந்து வந்த வழியே திரும்பிச் சென்றான்.

காலம் எல்லா புண்களையும் ஆற்றிவிட்டாலும் சில புண்களை தழும்புகள் ஆக்கி அழகு பார்க்கும் குரூர மனம் படைத்தது. பள்ளித் தோழிகள் ஒருசிலரிடம் கேட்டாகிவிட்டது. அவள் தற்கொலை பற்றி அப்போதுதான் கேள்விப்பட்டு கண் கலங்கினார்கள். இவனுக்கு இதற்கு மேல் விசாரிப்பதில் பலனில்லை என்று தோன்றியது. இப்படியே வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் வேலை நிமித்தம் வெளியூர் சென்று வந்தாலும் குடும்பம் குழந்தைகள் என்று ஆனபின்பும் வருடாவருடம் தேர் திருவிழாவுக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் நீலவேணி எனும் புதிருக்கு ஏதாவது விடை கிடைக்குமா என்று தேடுவது ஒரு சடங்காகிப் போனது. மீண்டும் மீண்டும் அந்தப் புதிர் கேள்விக்குறியின் முடிவில்லா வளைவுகளில் முட்டி முட்டி நின்று தோற்பான்.

இந்த முறையும் அப்படியான தேடலுக்கு கிளம்பிய போதுதான் அந்த இன்ஸ்டிடியூட் இடிக்கப்பட்டு கீழே விழுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றான். அப்போது தலை நரைத்து அருகே நின்று கொண்டிருந்தவர் வேணியின் மாமா பையனாக இருக்குமோ என நினைத்துப் பேசினான்.

“அண்ணா நீங்க சுப்பிரமணி தானே, பெரியபாளையத்தில் இருந்தீங்க தானே…?” “ஆமா… நீங்க யாருங்.. அடையாளம் தெரீலிங்ளே” “உங்களுக்கு நீலவேணி அக்கா தெரியுமா? அவங்ககிட்ட டைப்ரைட்டிங் படிச்சேன்…நீங்க கூட அடிக்கடி வருவீங்க” என்றதும் அவரது முகம் சுணங்கியது. “தெரியும் சொல்லுங்க” என்றார்.

“அந்த அக்கா அப்ப தூக்கு போட்டு இறந்து போனதா கேள்விப்பட்டேன். ஆனால் எதனாலங்கிறது எனக்குத் தெரியல. அவ்வளவு பாசமா பேசும் அந்தக்கா… ஏன்னே தெரீலிங்…. உங்களுக்கு ஏதாவது தெரியும்ங்ளாண்ணா?” என்றான்.

பீடி ஒன்றை பற்ற வைத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்த அவர் அவனைப் பார்த்தார். “அதைத் தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க. அப்பனும் அம்மாளும் சேர்ந்து கொன்னுட்டாங்கனு நினைச்சுக்குங்க. நான் கட்டிக் கொடுக்க கேட்டேன்… அவங்கப்பன் மாட்டேன்னு சொல்லிட்டாப்ல… ஆனா அவளுக்கு என்னைய புடிச்சிருக்கானு கூடத் தெரியல…அவங்கப்பன் பண்ணிய இம்சையில அப்படி பண்ணிட்டா போலிருக்குது…இதுக்கெல்லாம் காரணம் கேட்டுட்டு வந்துட்ட” என்று வெறுப்பாக பேசினார். “என் வாழ்நாளில் அதுக்கான காரணம் தெரியுமான்னு தெரியலீங்க.. ஆனால் இனி தெரிந்தும் ஒன்னும் ஆகப்போறதில்லீங்” என்றான். “அவ சோட்டு புள்ள ஒருத்தி குன்னம்பாளையத்தில் இருந்தா… பேரு சரியா ஞாபகம் இல்லை… இங்குதான் வேலைக்கு வந்துட்டு இருந்தாள். அவளே இப்ப இருக்கிறாளானு தெரியல… ஒரு வேள தேர் திருவிழாவுக்கு வந்திருந்தாலும் வந்து இருப்பாள். அவ ஊருக்கு போய் கேட்டுப் பாருங்” என்று முணுமுணுத்தபடியே சென்றார். அவர் செல்வி அக்காவைத்தான் சொல்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது.

வண்டியை நேரே குன்னம்பாளையத்திற்கு விட்டான். எல்லா கிராமத்திலும் இன்னும் பெட்டி கடை உள்ளது. அதில் நாலும் தெரிந்த ஏதோ ஒரு ஆள் இருக்கிறார். விசாரித்து ஒரு வழியாக செல்வியின் வீட்டை அடைந்து, கேட் அருகே நின்று செல்வி அக்கா இங்க இருக்காங்களா என்று கேட்டான்.

“நான் தான்… நீங்க யாரு?” என்று ஒரு பெண் வெளியே வந்தார்.

“என்ன தெரியுதாங்… டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் ரொம்ப வருஷம் முன்னாடி படிச்சேன். நீங்களும் அங்க வேலை பார்த்தீங்க..” “ஆமா நீங்க யாருன்னு தெரியலையே” என்றாள்.

“நான்தான் ராமகிருஷ்ணன்” என்று சொல்லவும் அவள் முகம் சற்றே மாறுவதையும் அதை அவள் உடனே சரி செய்து கொள்வதையும் கண்டுகொண்டான்.

“உள்ளே வாப்பா. எப்படி இருக்கிற” என்று நலம் விசாரித்தாள்.

“நீங்க எங்க இருக்கிறீங்க்கா?”

“நான் குன்னத்தூர்ல குடும்பத்தோட இருக்கேன். அங்கயே ஜெராக்ஸ் கடை வச்சிருக்கேன். அப்படியே போகுது… நீ என்ன பண்ற?

“நான் ஷேர் மார்க்கெட் பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்.”

“ஓ…அப்படியா.. என்ன இவ்வளவு தூரம்? என்றாள்.

“இருபது வருஷமா என் மனசை போட்டு குடையற ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரிஞ்சா போதும் அக்கா. ஒரே கேள்விதான். நீலவேணி ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என்றான்.

இதை செல்வி சற்றும் எதிர்பார்க்கவில்லை. “எப்ப முடிஞ்ச கதைக்கு எப்ப காரணம் கேட்டு வந்துருக்க தம்பி. காலம் எவ்வளவு மாறி போச்சு… இன்னைக்கு இருக்கிற புள்ளைங்களாட்டம் இருந்தா நீலவேணி செத்திருப்பாளா? அன்னைக்கு இருந்த நிலைமை அப்படி… அவங்க அப்பன் ஒரு வீணாப்போன நாயாத்தான் இருப்பான். நாயின்னு சொன்னாக் கூட தப்புதான்… நாய்ங்க கோவிச்சுக்கும்… பாவம் அவ… அவ மாமா பையன் இவளை லவ் பண்றதா சொல்லி கல்யாணம் பண்ணி தரச் சொல்லி கேட்டு இருக்காப்ல… அதுக்கு அவங்க அப்பா ஒத்துக்கல… ஆனா அவளும் மாமா பையனை லவ் பண்ண மாதிரி தெரியல… இருந்தாலும் அவ அப்பனுக்கு சந்தேகம்… எப்ப பார்த்தாலும் அவங்க ரெண்டு பேரையும் சேத்து வச்சுப் பேசிட்டே இருப்பாராம். இப்படி சந்தேகம் பண்ணினது அவளுக்கு புடிக்கல… அதுல தான் மனசு உடைஞ்சு போய் அப்படி ஒரு காரியத்தை பண்ணி போட்டான்னு நினைக்கிறேன்” என்றாள்.

“வேற எதுவும் காரணம் இருக்குமாங்க்கா” என்றான். “அதெல்லாம் தெரியல. ஆனா அவளுக்கு உன் மேல ஒரு பிரியம் இருந்துச்சுப்பா” என்றாள்.

“என்னக்கா சொல்றீங்க? என்றான் அதிர்ச்சியுடன்.

“உன்ன பத்தி யாரும் இல்லாதப்ப நிறைய சொல்லுவா… எனக்கே போர் அடிச்சிரும்… ஒரு நாள், அவனை லவ் பண்ற மாதிரியே ரசிச்சு பேசறயே ஏன்னு கேட்டேன். “அடிப் போடி… என்னை விட சின்ன பையன்… என் வயசு இருந்தா கூட அவனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனால் நம்ம ஊர் உலகம் எல்லாம் ஒத்துக்குமா… ஒருபக்கம் எங்க அப்பன் தொல்லை… இன்னொரு பக்கம் அம்மாவும் கண்டுக்கறதில்ல… தப்பா பேசாத, பாவம் அவன் சின்ன பையன்…அவன் வாழ்க்கையை நான் ஏன் கெடுக்கப்போறேன்” என்றெல்லாம் என்னிடம் புலம்பியிருக்கிறாள். கல்யாணம் பண்ணாட்டி என்ன மனசுக்குள்ள வெச்சு அழகு பார்க்கிறது ஒன்னும் தப்பில்லையே என்று அவ சொன்னபோது போடி பைத்தியக்காரி என்று திட்டி இருக்கிறேன். அவளுக்கும் உன் மேல ஒரு இது இருந்திருக்குது ராம். ஆனா மத்த பிரச்சனையில மனசு உடைஞ்சு போய் இருந்திருப்பா போல…அதுக்காக தற்கொலை எல்லாம் பண்ணுவான்னு நான் கனவுல கூட நினைக்கல” என்றாள்.

சரிங்க்கா நான் வர்றேன் என்று விறுவிறுவென வெளியே வந்தான். நீலவேணிக்கு தன் மீது ஒரு கிரஷ், ஒரு மயக்கம் இருந்திருக்கிறது என்பதை அன்றைக்கு நடந்த விஷயங்களுடன் இணைத்துப் புரிந்து கொண்டான் ராம். அந்த வயதில் அவனுக்கு அதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லை. பக்குவம் உள்ள இந்த வயதிலோ அவளே இல்லை. “அய்யோ வேணீ… என் மேல் உனக்கு அவ்வளவு பிரியமா… விட்டுப் பிரிவதை எண்ணித்தான் அன்றைக்கு கண்களுக்குள் இறங்கிச் சென்று ஆல் த பெஸ்ட் சொன்னாயா? இந்த புதிருக்கான துயரம் நிறைந்த விடையைத் தெரிந்து கொள்ளத்தான் இத்தனை வருஷம் அதைச் சுமந்து கொண்டு திரிந்தேனா வேணீ… சொல்லியிருக்கலாமே வேணீ…ஏன் சொல்லாம போன வேணீ…ஏன்?” என்று அவன் வான்நோக்கி மௌனமாய் நின்று கண்ணீர் விட்டான். அதன் சாட்சியாக உயரத்தில் ஒரு பருந்து வட்டமடித்துக் கொண்டிருந்தது.

நன்றி: நடுகல், 25/06/2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *