கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 1,373 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1.

“பாற்றா . பாற்றா. கிடக்காடா.கிடக்காடா. பாற்றா. பாற்றா” கைவிரலைச் சுண்டி வாயைக் குவித்து “உய்’ எனச் சீழ்க்கை ஒலி எழுப்பி கையிலிருக்கும் கூர்க்கொட்டனால் பற்றைகளையும் காவோலைகளையும் தட்டி, நாய்க்கு உற்சாகம் கொடுக்கிறார் தம்பர். நாயும் நெருங்கிய. அடர்ந்த.பற்றைக்குள் எல்லாம் அனாயசமாக வளைந்து, நெளிந்து, ஊர்ந்து, பதுங்கி மோப்பம் பிடிக்கின்றது. “வெள்ளையா. உதுக்குள்ளான் கிடக்கு . விட்டி டாதை.எழுப்படா. எழுப்படா…” மீண்டும் மீண்டும் உற்சாகமூட்டுகிறார் தம்பர். நாய் சுறுசுறுப்பாக இயங்குகிறது. தம்பர் ஒரு நிலையில் இல்லை. அவர் வேட்டை யிலேயே லயித்து . “கிடக்கடா . கிடக்கடா .. விட்டி டாதை.விட்டிடாதை.எழுப்பு.எழுப்பு.” தம்பரின் உற்சாக ஒலயினால் அந்தப் பற்றைப் பிராந்தியம் அமைதியை இழந்து அல்லோலப்படுகிறது. வெள்ளையன் எதையோ மோப்பம் பிடித்துவிட்டது. தம்பர் உசாராகிறார்.

“வெள்ளையா.அதுதான் ரா.இடைஞ்சலாய்க் கிடத் தால் மற்றப் பக்கமாய் வந்து, சுத்திவளை. மற்றப்பக்க மாய் வா.”

நாயைவிடத் தம்பரின் உற்சாகம் கூடிவிட்டது. அவர் சுற்றிச் சுழலுகிறார்.

வெள்ளையன் பற்றைகளை இடறி எறிவதும், வெளியில் வந்து பற்றையைச் சுற்றிச் சுற்றி ஒடுவதும். மீண்டும் பற்றைக்குள் புகுந்து இடறி இடறிக் கால்களால் மண்ணைத் தோண்டி ன்றிவதும்.தோண்டிய இடத்தில் முகத்தை வைத்துமுகர்வதுமாய் போராடுகிறது.

“வெள்ளையா.விலகு நான் பார்க்கிறேன்.என்ன புத்துக்கை விழுந்திட்டுதே. கொஞ்சம் விலகு வெள்ளையா!”

விலகவே மனமில்லாது நிற்கும் நாயைப் பலாத்கார மாக விலக்கிவிட்டுத் தமது கையிலுள்ள கத்தியினால் பற்றைகளை வெட்டி வழிசெய்து கொண்டு புற்றை நெருங்குகிறார் தம்பர்.

“இது என்னடாப்பா.இடைஞ்சலாய்க் கிடக்குது. மம்ப்ெட்டியாலை கூட வெட்டேலா போல கிடக்கு. வெள்ளையா. தம்பி.வாடா. வந்து விட்டு வீசாடியா நிண்டு பார்.என்னாலை வெட்டேலா.புத்துக்கை இடக்குது போல. வந்து பாரடி ராசா.”

இயலாத நிலைமையை உருக்கமான வார்த்தைகளால் வெள்ளையனுக்குக் கூறி உசார்படுத்துகிறார் தம்பர்.

வெள்ளையன் உள்ளே நுழைகிறது. மீண்டும் முன்னங் கால்களால் புற்றை விறாண்டுவதும் முகத்தை வைத்து முகர்வதுமாக அவலப்படுகிறது. தம்பர் சற்று ஓய்வாக மர நிழலில் அமர்கிறார்.

சடுதியென உடும்பு ஒன்று புற்றுக்குள்ளிருந்து விடு பட்டு வெள்ளையனையும் ஏமாற்றி விட்டு ஒடத் தொடங்குகிறது. தம்பர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழும்புகிறார்.

“பிடியடா.பிடியடா.. அள்ளடா.அள்ளடா…”

அந்தப் பிராந்தியம் கொஞ்ச் நேரம் தம்பரின் உற்சாக ஒலியால் நிலை தளர்ந்து அமைதியாகிறது.

வெள்ளையன் திறமையாக உடும்பைப் பிடித்து விட்டது.

தம்பர் மகிழ்ச்சியோடு வெள்ளையனைத் தட்டிக் கொடுக்கிறார்.

“எனக்குத் தெரியும் ராசாத்தி.எப்படியும் பிடிச்சுப் போடுவாய்” எண்டு வெள்ளையன் எஜமானின் பாராட்டி னால் உடலை வளைத்து வாலைக் குழைத்து நெளிகிறது. தம்பர் உடும்பை எடுத்து அதன் வாலால் உடும்பின் தலையைச்சுற்றி முன்னங்கால் பாதத்துள் வாலைச் சொருகி உடும்புக் கட்டுப் போடுகிறார். அந்தப் பருத்த உடும்பைப் பார்க்க பார்க்க அவர் முகத்தில் பெருமையின் சாயல் இழையோடுகிறது.

அந்த உடும்பைத் தாம் முன்னர் பிடித்த முயலோடு கோர்த்துக் குடலையாகக்கட்டுகிறார் தம்பர், “இண்டைக்கு இது போதும் நடவெடா வெள்ளையா” வெள்ளையன் முன்னே செல்ல வேட்டையை முடித்துக் கொண்டு தம்பர் மண்வெட்டி, கத்தி, குடலை சகிதம் கம்பீரமாகப் பின்னே நடக்கிறார். தம்பருக்குச் சுமார் எழுபது வயதிருக்கும். அவருக்கு அந்த வயதென்று யாரும் சொல்ல மாட்டார்கள். கணிப்பு என்கின்ற அளவுக்கு உட்படாத தோற்றம்.

தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நரை மயிர்கள் குத்திட்டு நிற்கின்றன. முகம் வெளுத்து நெற்றிச் சதை சுருங்கி.செறிந்த புருவ விளிம்புகளும் கனத்துத் தொங்கிய கன்னத் தசைகளும் மயிர்களால் கவியப் பெற்று. அதையும் ஊடுருவிக் கொண்டு அவரது சிவந்த கண்கள் மாலைச் சூரியனைப் போல பளபளத்துக் கொண்டு தெரிகின்றன. இவை எல்லாவற்றையும் வெற்றி கொண்டு தம்பரின் அகண்ட கூரிய நாசி மேலெழுந்து, கம்பீரமாகக் காட்சி தந்து கொண்டிருந்தது. தம்பரின் மெலிந்த தேகம் ‘உடும்புத்தோலைப் போல் சொரசொரத்து முந்திரிகை வற்றல் போல் சுருங்கி அலை யாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும். தம்பர் வயதுக்கு மீறிய செயல் செய்யும் ஒரு பிரகிருதி தான். அவரின் உடம்பில் ஒரு நான்கு முழத்துண்டும் ஒரு போத்தல் மேல் துணியும்தான் கிடக்கின்றன. பொத்தல் துணியால் அழகான ஒரு தலைப்பாகை கட்டியிருக்கிறார். அவ்விருதுண்டுகளும் சலவைக்குப்போய் எத்தனை நாளோ யாரறிவார்? தம்பருக்குக்கூட அது சலவைக்குப் போட்டு எத்தனை நாளென்பது ஞாபகம் இருக்காது. அவருக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு உயிரோடு யாரும் இல்லை. அந்த நாய்தான் அவரது அண்ணன், தம்பி, மகன், மனைவி எல்லாம். தம்பரும் நாயும் ஒரே மாதிரி, அந்த நாய்க்கும் வயது கடந்து விட்டது. மெலிந்து எலும்புகள் உடலைப் புடைத்துக் கொண்டு வெளியில் தெரிய, முன்னங்கால் ஒரு பக்கம் சாய்ந்து தம்பரைப் போல கம்பீரமாக நடக்கும் ஒர் அலாதி.நாய்தான் தம்பர். தம்பர்தான் நாய்.

2.

தம்ப்ர் அந்தக் கறுத்த நாய்க்கு ஏன்தான் வெள்ளைய னென்று பெயர் வைத்தாரோ? வெள்ளையன் என்று சொல்வதற்கு அந்த நாயில் சாட்டிற்காவது ஒரு சிறு வெள்ளை.கிடையவே கிடையாது. ஆனால் அதற்குத் தம்பர் இட்ட பெயர் வெள்ளையன், இது ஏன் என்பது இன்னமும் கூட ஒருவருக்கும் புரியவில்லை. தம்பர் வேட்டையில் மிகவும் கெட்டிக்காரர். வேட்டைக்கு அவர் வெளியில் சென்றால் வெறுங் கையோடு திரும்புவது கிடையாது. வேட்டையில் மட்டு மல்ல? வேட்டையைப் பற்றி வர்ணிப்பதிலும் அவர் மகாதீரர் . கைகளை வீசி வேட்டையில் என்ன நடந்தது; வெள்ளையன் எப்படிப் பிடித்தது; தாம் என்ன செய்தார் என்பதை அவர் நடித்துக் காட்டுவார். வேட்டையில் புலியான அவருக்கு “வெலிச்சோர். தம்பர்” என்றுகூட ஒரு பட்டம். தம்பருக்கு ஊரில் நல்ல மதிப்பு. யாராவது “தம்பர் முயல் தின்ன ஆசையாகக் கிடக்குது” என்று சொன்னால் போதும், அன்று அல்லது அதற்கு மறு நாள் அந்த ஆசையைத் தம்பர் நிறைவேற்றுகின்றார். தம்பரோடு யாரும் வேட்டைக்குப் போவது இல்லை. போனால் ஒரு மிருகத்தையும் தப்பியோட விடக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் தம்பர் சாதாரணமாக இருந்துவிட மாட்டார். அந்த மனிதர் மேல் ஒரே வசை புராணம் பாடி முடிப்பார். இந்த ஒரு காரணத்திற்காகவே அவரோடு யாரும் போவது இல்லை. மற்றும்படி அவருக்கு ஊரில் நல்ல மதிப்பு.

அளவோடு வேட்டையாடிக்கொண்டு தம்பர் திரும்புவதும் இதனால்தான். பலர் வேட்டைக்குப் போனால் எல்லோருமாக வேட்டையாட வேண்டும். இது அவருக்கு மட்டும்தானே ஒன்று அல்லது இரண்டு அது போதும். வயதான காலத்தில் நாயையும் தம்மை யும் வருத்துவதற்கு அவர் விரும்புவது இல்லை. அவருக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் அந்த வெள்ளையனுக்கு முதலில் சாப்பாடு போடாமல் தான் உண்ணமாட்டார் தம்பர். அவரது கூப்பன் எப்போது தொலைந்து போயிற்றோ அன்றிலிருந்து அவர் சோறு உண்பதில்லை. முயல் இறைச்சியும் உடும்பு இறைச்சியும்தான் அவரது அன்றாட உணவு. அவரை உயிருடன் உலாவ விடுவதே அந்த இறைச்சிகள்தான் என்று தம்மர் கூறுவார். எனவே அவரது உயிர் வெள்ளையன். வெள்ளையன் இல்லாது விட்டால் உடும்பேது; முயலேது?

“பாற்றா.பாற்றா. உதுக்குள்ளான். உதுக்குள்ளான்” சூரியன் சந்தாதோட்ட வடலிக்குள் விழுந்து விட்டான். தம்பர் வேட்டையை இன்னமும் முடிக்க வில்லை.அவர் கையில் உடும்புக் குடலையோ, முயல் குடலையோ இல்லை. ஒன்றுமே பிடிபடாத ஏமாற்றம். அவரது வார்த்தையில், “ராசா உதுக்குள்ளான்ரி கிடக்குது எடி.பாற்றா பாற்றா” தம்பர் துரிதமாக இயங்குகிறார். இல்லை இயங்குவது போல் நடிக்கிறார். வெள்ளையன் பற்றைக்குள் நுழைந்து வளைந்து மோப்பம் பிடிக்கிறது.

வெள்ளையனின் முந்தைய சுறுசுறுப்பு இல்லை. ஏன் தம்பரும் அப்படித் தான். வயது போய் விட்டது மட்டு மல்ல மத்தியானத்துச் சாப்பாடு கூட இன்னமும் வயிற் றுக்குள் போகவில்லை. தம்பர் முன்பென்றால் இவ்வளவுக்கு வேட்டையை முடித்துவிடுவார். ஆனால் இன்று அவருக்கு வேட்டையை முடிக்க விருப்பமில்லை.“வெலிச்சோர் தம்பர் வெறுங்கை யோடு திரும்புவதா?”. “பாற்றா.பாற்றா கிடக்கடா எழுப்படா. வெள்ளையா உதுக்குள்ளான் . உதுக்குள் எான்”. . ۔ ஈனஸ்வரத்தில் முனகுகிறார் தம்பர். கடமைக்காகப் போராடுகிறது வெள்ளையன். *தம்பி மற்றப் பத்தையைப் பாரடி. கிடக்குது எழுப்படி இராசா. ஒண்டெண்டாலென்ன…எழுப்படி இராசா” வெள்ளையன் ஆவேசமாக மோப்பம் பிடிக்கிறது.

“தம்பி பொழுதுபட்டால் படட்டுக்கும் நீபாரடி ராசா.பாற்றா.பாற்றா”தம்பருக்கு வீட்டிற்குப்போகும் எண்ணமே இல்லை. வெள்ளையனுக்குப் போக மனமிருந் தாலும் தம்பரில்லாமல் அது போக முடியுமா? தம்பர் போகத்தான் விடுவாரா? பற்றைகளை இடறுகிறது வெள்ளையன், முட்கள் அதன் உடலைக் கீறி, இரத்தம் கசிந்து அதன் எலும்புட லில் உறைகிறது. வேதனையைக் காட்டிக் கொடுக்காமல், எஜமானுக் காக மோப்பம் பிடிக்கிறது வெள்ளையன். “தம்பி பாற்றா. கிடக்கடா. கிடக்கடா. பாற்றா பாற்றா வெள்ளையா. எழுப்படா”

வெள்ளையன் பகீரதப் பிரயத்தனம் செய்கிறது “மறறப்பத்தையுக்க போடா. அதையும் பாரடா. உதுக் குள்ளை கிடக்கெடா. “

வெள்ளையனின் நாசியில் ஏதோ தட்டுப்பட்டு விட்டது. தம்பர் உசாராகிறார் “விட்டிடாதை.கிடக்குத்து எழுப்பு. எழுப்பு.”

வெள்ளையனின் சாமர்த்தியத்தால் ஒரு சிறிய உடும்பு எழும்பி விட்டது. “பிடியடி.பிடியடா அள்ளடா. அள்ளடா வெள்ளையா”

வெள்ளையனாலும் ஓடமுடியவில்லை. தம்பராலும் ஒடமுடியவில்லை. உடும்பு ஓர் அடர்ந்த புதருக்குள் நுழைந்து விட்டது. தம்பருக்கு ஆத்திரம்

“உதைப்பிடிக்காமல்.விடு றேல்லைராசாத்தி உள்ளுக்கைப்போய். எழுப்படி. . நான்.இஞ்சாலை நிக்கிறன்” தம்பர் வெள்ளையனை ஊக்குவிக்கிறார். வெள்ளையன் பற்றையைச் சுற்றிச் சுற்றி வருகிறது உள்ளே நுழையாமல் வெளியிலேயே நின்று கொண்டு சுற்றிச் சுற்றி வருகிறது. மோப்பம் பிடிக்கிறது.

“வெள்ளையா.பயப்படாதை.உள்ளுக்கை போய் எழுப்படா தம்பி’ ‘போடி.உள்ளுக்கை போய்.அதை எழுப்பு. உதையாவது பிடிச்சுக் கொண்டு வீட்டை போவம்’ வெள்ளையன் உள்ளே நுழைகிறது, எதனுடனோ போராடும்.ஒலி. அதனால் அந்தப் பற்றையே கிடுகிடுக் கிறது: “வெள்ளையா.விட்டிடாதை படுக்கையில வைச்சு அமத்து’ தம்பர் வெளியில்ே நின்று ஆவேசமாகக் கத்து கிறார். சிறிது நேர அண்மதிக்குப் பிறகு வெள்ளையன் வெளியே வருகிறது. அதன் வாயில். தம்பர் அதை வாங்க மகிழ்ச்சியோடு கையை நீட்டுகிறார்.

‘பாம்பு.ஐயோ வெள்ளைய்ா.இது என்ன..?” தம்பரின் வாய் பயத்தால் அலறியது. வெள்ளையன் வலிகண்ட நாயைப் போல நிலத்தில் சரிகிறது. அதன் உடல் நீலம் பாரித்து. தம்பர் கதறினார். அவரது தாயும் தகப்பனும் இறந்தபோதும், மனைவி மக்கள் வீடு விழுந்து மடிந்த போதும் எப்படி அழுதாரோ அதேபோல.இது அவரது கடைசி நஷ்டம். அவரது உணவுக்கு வழி செய்யும் அந்த உயிரின் நாடித்துடிப்பு மெதுவாக அடங்கிக் கொண்டி குந்தது.

– ஈழநாடு 1969.

– அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *