வேடிக்கை மனிதர்கள் அல்லர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 3,875 
 

ஆஸ்பத்திரிச் சந்தியில் பஸ் வேகம் குறைத்து திரும்பியபோது டக்’ கென்று குதித்திறங்கி பஸ்ஸுடன் சற்றே முன்னாலோடி நிதானித்து நின்று கொண்டேன்.

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்திறங்குவது கூடாது தான். அபாயகர மானது தான். என்றாலும் எனது அவசரம் அந்த அபாயத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கிறது.

மணி அந்தா இந்தா என்று ஐந்து ஆகிக் கொண்டிருக்கிறது.

கேட்டை மூடிக் கொண்டான் என்றால் அவனிடம் தலை சொரிய வேண்டும். மூடிய கைக்குள் குறைந்த பட்சம் நூறு ரூபாய் தாளாவது நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

இரண்டுமே எனக்குப் பிடிக்காதவை!

ஆஸ்பத்திரியைத்தாண்டி கொஞ்ச தூரத்தில் இருக்கும் பஸ் தரிப்பில் பஸ் நின்றதும் சாவதானமாக இறங்கி நடந்து கேட்டிடம் வந்தால் தலை சொரிய நேரிடும் என்பதால் தான் இந்த ஆபத்தான குதிப்பு.

ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள். றிஸ்க்’ கான வேலை என்று. சூழ்நிலையைப் பொறுத்து சில றிஸ்க்’குகளும் வாழ்க்கையின் அத்தி யாவசியத் தேவைகள் தான்.

ஆஸ்பத்திரியில் இருப்பவர் எனது நண்பர்.

எழுத்து, இலக்கியம், நாடகம், சினிமா என்று ஓடித்திரிபவர்… ஓடித் திரிந்தவர். குடும்ப மற்றும் உறவினர்களிடம் ‘உருப்படாதவன்’ பிழைக்கத் தெரியாதவன்’ என்ற புகழாரங்களும், விருதுகளும் நிறைய வாங்கியவர்.

திடீரென ஒரு நாள் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.

தொலைபேசியின் மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்…

“நீங்கள்!” என்று இழுத்தது.

பெயரைச் சொன்னேன்.

நண்பரின் பெயரைச் சொல்லி “நான் அவருடைய மனைவி?” என்றார்.

“உங்களுக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை!. எத்தனையோ தடவை இரவின் அகால வேளையில் ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கின்றேன் அவரை!” என்றேன்.

“ஓ…” என்றார்

அந்த “ஓ…” வில் நீயும் ஒரு உருப்படாதவன் தானே என்னும் தொனி இருந்தது. பிறகு தொடர்ந்தார் “இந்த நம்பரைக் கொடுத்து உங்கள் பெயரைத்தான் கூறினார்…! ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருக்கின் றோம்’

“ஏன் என்ன நடந்தது?”

“நெஞ்சில் நோகுதென்றார். மூச்சு விட சிரமப்பட்டார். வயிறும் ஊதி இருந்தது. அட்மிட் செய்யச் சொல்லி விட்டார்கள்..!” என்று தகவல் தந்தவர்… ஆஸ்பத்திரி, வார்ட் நம்பர், கட்டில் எண் சகலதையும் கூறினார்.

“நன்கு பிடித்தமான ஒரு வேலை கிடைத்திருப்பதாகக் கூறினாரே!” என்றேன்.

“பிடித்து என்ன செய்ய..! கிடைத்ததைப் பிடித்து வைத்துக் கொள் ளவும் தெரிய வேண்டுமே..! எத்தனையாவது வேலை இது…?” என்றவர் ஒரு எரிச்சலுடன் போனை வைத்து விட்டார்.

முன்பொரு தடவை என்னுடைய நூல் வெளியீடு பற்றி நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததேன்.

அவரைத்தான் முதற் பிரதி வாங்க போட்டிருந்தேன்.

“என்னையா உங்களுடைய நூலையா” என்றார் ஒரு வியப்புடன்.

“உங்களைத்தான்… என்னுடைய நூலைத் தான்…” என்றேன்.

“நீங்கள் ஒன்றும் என்விலப்புடன் வரத்தேவையில்லை!’ ஒரு இலக் கியக்காரன் இன்னொரு இலக்கியக்காரனுக்குத் தரும் கனம் அது கௌரவம் அது” என்றேன்.

“அழைப்பிதழைத் தர வேண்டும் ஆபீஸ் வரவா” என்றேன்.

“வரலாம்… ஆனால் பழைய ஆபீஸ் இல்லை …” என்று ஒரு புது விலாசம் கொடுத்தார். எனக்குத் திகைப்பாக இருந்தது. பெயர் சொன்னால் இடம் தெரியும் பெரிய கம்பனி அது. அதற்குள் நுழையும் சகல தகுதிகளும் எனது நண்பருக்கு உண்டு என்பதும் நான் அறிந்ததே.

வரவேற்பறைப் பெண்ணிடம் பெயர் சொல்லி விசாரித்தேன். உள்ளே போனேன். தனியானதொரு பெரிய அறையில் அமர்ந்திருந்தார். கண்ணாடி பதித்த மேசையில் மூன்று தொலைபேசிகள் என்று ஆள் மிகவும் கலாதியாக இருந்தார்.

“என்விலப் கொடுத்தே வாங்கலாம் போல் இருக்கிறதே…?” என்று சிரித்தபடி விடைபெற்றேன்.

இரண்டு மூன்று மாதங்களின் பின் ஒரு நாள் ஆமர் வீதியில் சந்தித்தேன்.

“இந்த நேரத்தில் இங்கே எப்படி… லீவா?” என்றேன்.

முதலில் ஒரு அசட்டையான சிரிப்பு பிறகு கூறினார் “வேலையில் இருந்தால்தானே லீவு போடனும்?”

“என்ன மாதிரி இடம்..? என்ன மாதிரி உத்தியோகம்? கிடைக்குமா?” என்றேன்.

“கெடைக்காது தான்… அதுக்காக, மனுசனுக்கு சுதந்திரம் வேண்டாம்? ஒத்திகைக்கு நாலு நாள் லீவு போட்டேன். இல்லைய்னுட் டானுக. அவுட்ஸ்டேசன்ல ரிகர்சல்! போகாட்டி ஆர்ட்டிஸ்டெல்லாம் அல்லாடிப் போயிறுவாங்க ஒத்திகை ஒழுங்கா நடக்காட்டி ஆற்றுகை என்னவாகும்! லீவு குடுக்காட்டி போங்கடான்னுட்டுப் போயிட்டேன். அஞ்சாறு நாள் கழித்து ஆபீஸ் போனேன். வேலை இல்லைன்னுட் டானுக. வச்சிக்கோன்னுட்டு வந்துட்டேன்!” என்று கூறினார்.

குரலில் ஒரு வருத்தம் தெரியவில்லை. “அப்பத்தினால் மட்டுமே மனிதன் உயிர் வாழ்வதில்லை” என்னும் இயேசு மொழி என் நினைவிலோடியது.

தகவல் கிடைத்ததும் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.

அரசாங்க ஆஸ்பத்திரியின் நோயாளர்களைப் பார்க்கும் நேரம் என்ப தால் வார்ட் கட்டில்களைச் சுற்றிக் கூட்டம் கூட்டமாகச் சனங்கள். உறவினர்கள்… நண்பர்கள்… ஈக்கள் போல!

கட்டில் இலக்கத்தைக் கருத்தில் சுமந்தபடி உள் நுழைந்தேன்.

சுவரோரத்தில் கிடந்த கட்டிலில் சவர்க்காரம் போட்டு ஊற வைத்த அழுக்குத் துணிபோல் தனியாக கிடக்கின்றார் நண்பர். ஒரு கறுப்புப் புழுவைப் போல் சுருண்டபடி!

ஈக்கள் மாத்திரமே கட்டிலைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கின்றன.

வீட்டில் இருந்து கூட யாரும் வரவில்லையோ என்னும் நினைவு “வந்து விட்டுப் போயிருக்கிறார்கள்” என்று தீர்மானித்துக் கொண்டது.

தலைமாட்டில் இருக்கும் சின்ன மேசையின் மேல் தெரிந்த நீலக் கலர் பிளாஸ்க், லேசாகத் திறந்திருக்கும் மேசை லாச்சியில் எட்டிப் பார்க்கும் சில பழ வகைகள்! சாப்பாட்டுப் பொருட்கள் !

கட்டிலை நெருங்கினேன். லேசாக தொட்டேன். கண்கள் விரிந்தன. இடுப்பு, கை, கால் என்று ஒவ்வொன்றாக விரிந்தன. உடல் நீண்டது. குழிகளுக்குள் பதுங்கி இருக்கும் கண்கள் ஒளி வீசின. முகம் மலர் கின்றது.

நான் வந்திருக்கின்றேன் என்பதை விடவும் ஒரு இலக்கியக்காரன் வந்திருக்கின்றான் என்னும் பூரிப்பு கண்களில் ஒளி பாய்ச்சி ஒளிபாய்ச் சிப் பரவுகின்றது. மூக்கையும் வாயையும் சுற்றிப் போட்டிருந்த இலாஸ் டிக் வளையம் வைத்த துணி மூடியைக் காட்டி ஏதோ சைகை காட்டி னார். எனக்குப் புரியவில்லை . அருகிலிருந்த மேசையின் டிராயரைக் காட்டினார். திறந்தேன் அவர் முகத்தில் போட்டிருந்தது போல் இரண்டு மூன்று துணி மூடிகள் இருந்தன.

ஒன்றை எடுத்து வாயையும் மூக்கையும் சுற்றிக் காதில் மாட்டிக் கொண்டேன்.

அருகே சென்று ஆதரவாகக் கையைப் பிடித்தேன். அவருடைய கண்களில் நீர் முட்டி நின்றது. கால்கள் வீக்கம் கண்டிருந்தன. வயிறு ஊதிப் போயிருந்தது.

துணி மூடியை மூக்குப் பக்கம் தள்ளி வாய்க்கு இடம் ஒதுக்கிப் பேசினார்.

“நான் திரும்பி வீடு வருவேன் என்று நினைக்கவில்லை” என்றார். கண்கள் கலங்கி கிடந்தன. உதட்டின் மேல் விரலை வைத்து உஷ் என்று தடுத்தேன். “ஒன்றும் ஆகாது” என்று தைரியம் கூறியபடி என்ன சொல்கிறார்கள் என்று கேட்டேன்.

“நிறைய தகறாறுகள்…..! கால் வீங்குகிறது; திடீர் திடீரென வயிறு ஊதிக் கொள்ளுகிறது; கிட்னியைக் காணவில்லை என்கின்றார்கள்; வயிற்றில் கேன்சர் என்கின்றார்கள். எக்கச்சக்கமான கொம்பிளிக்கேஷன்ஸ்” என்றார்.

“அளவுக்கு மீறிக் குடித்தால் கிட்னி காணாமல் போகாமல் என்ன செய்யும்” என்றேன்.

நண்பர்களுடன் சேர்ந்தும், தனியாகவும் நிறையக் குடிக்கத் தொடங்கி இருந்தார்.

சில நாட்களில் ஜிவ் ஜிவ்வென்று சிவந்த கண்களுடன் நேராக நிற்க மறுக்கும் கால்களுடன் பஸ் ஸ்டாண்டில் நிற்பார்.

பஸ் வந்த பிறகு இவன் பஸ்ஸில் ஏறுவானா? அல்லது இவன் மேல் பஸ் ஏறுமா? என்று எரிச்சல் வரும்.

ஆட்டோ ஒன்றைப் பிடித்து வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவேன்.

என்னுடைய கதை ஒன்றை நாடகமாக்கும் முயல்வில் நண்பர் ஈடுபட்டிருந்தார். ஆகவே, ஒரு சில நாடக நண்பர்களுடன் நானும் கொஞ்சக் காலம் அவர்களுடன் சுற்றினேன் மாலை வேளைகளில்.

ஸ்டோரி டிஸ்கஸன் என்று ஏதாவது ஒரு பாருக்குள் நுழைவார்கள். பார் மூடும் வரை குடிப்பார்கள். நானும் ஒரு கிளாஸ் கொக்காகோலா வுடன் அவர்களது பேச்சுக்களை ரசித்தபடி குந்தியிருப்பேன்.

பார்காரன் மூடப்போகும்போது இன்னொரு குவாட்டர் கேட்டு அடம் பிடிப்பார்கள். பார்காரன் கால் கொண்டு வரமாட்டான் முன் கதவுக்குப் போடும் இரும்புபாருடன் வருவான். கழுத்தை பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே தள்ளிக் கதவை மூடிக்கொள்வான்.

கதவு மூடிக் கொண்ட பிறகும் தெருவில் கதை டிஸ்கெஸன்ஸ் தொடரும் கொஞ்ச நேரத்தில் பாதையில் ஏதோ நாணயத்தை தவறவிட்டவர்கள் போல் குனிந்து குனிந்து தேடுவார்கள். பிறகு தவழத் தொடங்குவார்கள்.

மற்றவர்கள் எப்படியாவது போய் விடுவார்கள். நண்பரை நான் தான் ஆட்டோவில் போட்டு வீட்டில் சேர்ப்பேன். இறங்கி நிற்க முடியாமல் தடுமாறுகையில் உள்ளே கொண்டு போய் கதிரையில் போட்டு விட்டுத் திரும்புவேன்.

அப்போதெல்லாம் குடித்து விட்டுக் கிடக்கும் தன் கணவனை கொண்டு வந்து பத்திரமாக வீட்டில் சேர்க்கின்றாரே என்னும் நன்றியுணர்வு நண்பரின் மனைவியிடம் இருக்கும் என்று தான் எண்ணியிருந்தேன்.

ஆனால், நானும் அவருடன் அமர்ந்து குடித்து கூத்தடித்துவிட்டு போதை மீறியதும் கொண்டு வந்து வீட்டில் தள்ளிவிட்டுப் போவதாகவே அந்தம்மாள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நேற்றைய டெலிபோன் ‘ஓ…’ வில் விளங்கியது.

தானே பாதுகாத்துப் பராமரித்து கொள்ள வேண்டிய தன் உடலை இப்படித் தானே குடித்துக் குடித்து சீரழித்துவிட்டு இப்போது கை வீக்கம், கால் வீக்கம் கிட்னியைக் காணோம்… குடலைக் காணோம் என்று அழுது அங்கலாய்த்து என்ன செய்ய, தன்னைத் தானே நோய் களற்றும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளல் என்பதுவும் ஒரு சமுதாயப் பணிதான்.

நண்பரைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. அவரோ கலங்கிய கண்களுடன் எனது கரம் பற்றிக் கூறினார்.

“நீங்கள் ஆயிரம் சமாதானம் கூறினாலும் எனது அந்தராத்மா கூறுகிறது ஆட்டம் முடிந்துவிட்டது என்று! பந்தயம் ஓடி முடிந்தாகி விட்டது என்று! நான் திரும்பி வரப் போவதில்லையே அதற்காக அழுது அரற்றப் போவதுமில்லை ! உங்களால் எனக்கு சில காரியங்கள் ஆக வேண்டும்! காரியங்கள் என்ன காரியங்கள் உதவிகள்” என்றார்.

பேசுவதற்கு அவர் படுகின்ற சிரமம் உயர்ந்து மடியும் நெஞ்சிலும் தெரிகிறது. அவரையே உற்று நோக்கினேன்.

“என்னுடைய அரங்கியல் கலை இலக்கிய செயற்பாடுகள் பற்றி என் வீட்டாருக்கு ஏதும் தெரியாது! அவை பற்றிய அக்கறையுமில்லை! நான் ஏதோ பிழைக்கத் தெரியாதவன் என்னும் நினைவுகளுடனேயே இன்னும் இருக்கின்றனர்… நீங்கள் தான் அவை பற்றிப் பேச வேண்டும். நாலு பேருக்குத் தெரியுமாப் போல் செய்ய வேண்டும்…..குறிப்பாக எனது குடும்பத்தினர் எனது உறவினர்கள்… என்னுடைய ஆளுமைகளை உணர வேண்டும். நாளைக்கு செத்தா நாளன்னிக்கு மூணாவது நாளுன்னு பாலூத்தி, அஸ்தி கரைச்சி அன்னதானம் கொடுத்து முடித்து விடுவார்கள்!”

“நான் அதற்காகப் பிறக்கவில்லை ! பிறந்தேன்…வளர்ந்தேன்…படித்தேன்…உத்தியோகம் பார்த்தேன்… ம்பாதித்தேன்…கல்யாணம் கட்டினேன்….வாழ்ந்தேன்…செத்துப் போனேன்….என்று ‘னேன்… னேன்…’ கொண்டு ஒருமையிலும், சோறு நிதம் தின்று வீண் கதைகள் பல பேசித்திரிந்த வெறும் மனிதனாகவும் மரித்து விட மனம் ஒப்பவில்லை…”

குரல் கனத்துத் தழுதழுக்கக் கூறிக் கொண்டிருந்தார்.

நண்பரை சமாதானப்படுத்தி ஆசுவாசப்படுத்தி படுக்க வைத்தேன்.

நோயாளர்களைப் பார்வையிடும் நேரம் முடிவுக்கு வருவதாகக் காவற் காரர்கள் வேகம் காட்டினர். மனம் முழுக்க அவரது செயற்பாடுகள் பற்றிய தேடலுக்கான ஆவல் நிரம்பி இருந்தது. விடைபெற்று வெளியே றினேன். ஒரு கலைஞனின் முடிவு அவனது மரணமாக இருந்துவிடக் கூடாது.

அவனை வாழ வைக்க வேண்டும். அது உயிரோடிக்கும் நம் அனைவரதும் கடமையாகும். ஒரு ஆரோக்கியமான சமூகப் பணியாகும். அந்தப் பணிக்கான பக்குவம் நம்மில் ஒரு சிலருக்காவது வரவேண்டும்.

ஒரு சிட்டியும், செல்லப்பாவும், க.நா.சுவும், ஜானகிராமனும் பேசத் தொடங்கி இராவிட்டால் கு.ப.ரா. நாற்பதுகளிலேயே செத்துப் போயிருப்பாரே.

மனம் அலை மோதுகிறது குழம்பித் தவிக்கிறது. மறுநாள் ஆஸ்பத்தி ரிருக்குப் போக வாய்க்கவில்லை. ஆனாலும் கூடுமானவரை கலை இலக்கிய நண்பர்களுக்கெல்லாம் கூறினேன். ஆஸ்பத்திரியில் போய் பார்க்கும்படி. நெருக்கமான பத்திரிகை ஆசிரியர் நண்பர்களுக்கு செய்தி கூறினேன். இன்னார் நோயுற்று மருத்துவமனையில் என்று படத்துடன் செய்தி போடும்படி.

கலாசார அமைச்சுக்குப் போன் செய்தேன். தமிழ் மொழி இணைப்பாளர் எனது நண்பர்.

நண்பர் பற்றி கூறினேன். தேசிய நாடக விழாவில் பங்குபற்றி இரண்டு முறை பரிசு பெற்றவர் என்று விபரம் கூறினேன். “என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார் “அமைச்சரை ஆஸ்பத்திரிக்குப் போய் பார்க்கச் செய்ய வேண்டும்” என்றேன்.

“சிரமம் தான் ஆனாலும் சொல்வேன்” என்றவர், “சிங்களக் கலைஞர் என்றால் கதையே வேறு!” என்று முடித்தார்.

“அமைச்சரின் வெற்றியில் நண்பருடைய வாக்கும் இருக்கிறது. பங்களிப்பும் இருக்கிறது என்பதையும் சொல்லுங்கள்” என்றேன்.

“குறைந்த பட்சம் அவருடைய வீட்டுக்குப் போன் செய்து மனைவியிடம் நண்பரின் சுகம் விசாரிக்கச் சொல்லுங்கள்” என்று முடித்தேன்.

“அதைக் கட்டாயம் செய்யலாம் நம்பரைத் தாருங்கள்” என்றவரிடம் நாளைய பேப்பர்களில் படத்துடன் செய்தி வருகிறது. அதையும் அவரிடம் காட்டுங்கள்” என்றேன்.

அடுத்த நாளும் ஆஸ்பத்திரிக்குப் போகக் கிடைக்கவில்லை. தனி மனிதப் பிரச்சினைகள் குரூரமானவைகள் தான்.

நண்பரின் மனைவிக்கு போன் போட்டுப் பேசினேன்…

“முன்னேற்றம் எதுவுமில்லை. அப்படியே தான் ஏதோ அவசர சிகிச் சையென்று முந்தநாள் இரவே பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கின்றார்கள். எனக்கே நேற்றுக்காலை ஆஸ்பத்திரிக்குப் போய் அல்லோலக்கல்லோலப்பட்ட பிறகு தான் ஓபீசில் கூறினார்கள்! நாளைக்கு தான் கொண்டு வருவார்களாம்”

“நல்ல வேளை எனக்கு ஆஸ்பத்திரிக்குப் போக கிடைக்கவில்லை…போயிருந்தால் எனக்கும் அலைச்சல் மட்டும் தான்” என்று எண்ணிக் கொண்டேன்.

நண்பரின் மனைவி தொடர்ந்தார்… “மந்திரி ஒருவர் பேசினார். அவர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தார். ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருப்பதாகப் பேப்பரில் பார்த்தாராம் பேப்பரை நான் பார்க்கவில்லை” என்றார்.

குரலில் கடுமை இல்லை. மாறாக ஒரு குளுமை இழைத்தது.

அவருக்குச் சுகமில்லையாமே என்று ஒரு அமைச்சரே விசாரிப்பதென்றால் பெருமையாகத்தான் இருந்திருக்கும்.

அவரைப் பற்றிய ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்தேன் இன்றும் நாளையும் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதில்லை என்பதால் ஓபீசில் இருந்து வந்தவுடனேயே எழுதத்தொடங்கினால் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனாலும், நம்பிக்கை கை கொடுக்கவில்லை. நண்பரின் கலை உலக ஆரம்பம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கான குறிப்புகளைத் தேடத் தொடங்கினேன்.

அவருடன் இத்தனை நெருக்கமாகவும் இத்தனை காலமாகவும் பழகி இருந்தும்கூட அவைகள் பற்றி தெரிந்து கொள்ளாத ஏக்கம் இப்போது புரிகிறது.

கட்டுக்கட்டாகவும் இங்கு… அங்கு….என்று சிதறியும் கிடக்கின்ற பத்திரிகைக் கட்டுக்கள் சிறு சஞ்சிகைகள் என்று தேடினேன். எழுதுவதற்கும் நேரமற்று தேடுதலே முக்கியமாகிவிட்டது.

நண்பர் பற்றிய கட்டுரைக்கான நிர்பந்தம் அவரை பற்றிய தேடுதல் களை வரவேற்றுக் கொண்டது.

கட்டுரைக்கான குறிப்புகள் தயார்! இனி எழுதிவிடலாம் ஒரு சில சந்தேகங்களை நாளை மாலை ஆஸ்பத்திரியில் கேட்டுக் கொள்வோம் என்று எண்ணிக் கொண்டேன். இவைகள் அனைத் தும் அவருக்கான ஒரு சமூக அங்கீகாரத்தைத் தேடித்தரும் முயல்வுகளே.

இலக்கிய அங்கீகாரத்தை அல்ல. இலக்கிய அங்கீகாரம் காலத்தால் நிர்ணயிக்கப்படுவது. காலமே மதியினுக்கோர் கருவி என்பதைப் போல்.

ஐம்பது நூறென்று ஆண்டுகளின் பின் காலவோட்டம் கண்டெடுத்துக் கொண்டுள்ள ஒரு சிலரைப் போல், காலம் தரும் அங்கீகாரம். அது நானோ நீங்களோ தருவதல்ல.

இன்று மாலை சென்று பார்க்க வேண்டும். நண்பர்கள் யார் யார் வந்தார்கள் என்று விசாரிக்க வேண்டும். பத்திரிகைச் செய்திகளைக் காட்ட வேண்டும். என்னும் நினைவுகளுடன் நேரத்துடனேயே கிளம்பினேன் றிஸ்க் எடுக்க விரும்பாததால்.

பஸ் தரிப்பில் இறங்கி பாதை கடந்து கேட்டைத் தாண்டி ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டேன். பூந்தோட்டம், நாய்கள் கூட்டம் என்று கடந்து வார்ட்டுக்குள் நுழைந்தேன். கட்டில் காலியாகக் கிடந்தது. மருத்துவமனைச் சிப்பந்திகள் கட்டிலைச் சுற்றி மருந்தடித்துக் கொண்டிருந்தார்கள்.

வார்ட் ஓபீசை நோக்கி விரைகிறேன் நண்பர் பற்றிய தேடலுக்கான வேர்கள் மனதுக்குள் ஆழமாக இறங்கிப் படர்ந்தன.

நண்பரே வேராகி நிற்பது போன்ற நினைவு வாழ்வும் செழுமையும் தரும் நினைவு….!

– வீரகேசரி 07.10.2012 – தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *