வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 9,408 
 
 

நானும் சந்திர சேகரும் சேலம் பிளாட்பாரம் முழுவதும் நடந்து, கும்பகோணம் டிகிரி காபி வேண்டாம் என்று முடிவெடுத்து வெளியே வந்து காத்திருந்த காரில் ஏறி அடுத்த ஒரு மணி நேரம் நாமக்கல் அடையும் வரை பேசிக்கொள்ளவே இல்லை

வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரசில் போயிருக்கிறீர்களா?

நல்ல நட்ட நடு மத்யானம் சென்னையில் கிளம்பி ஒரு நாள் முழுக்க விரயம் பண்ணிவிடும் வண்டி அது. ஆனால் முதல் நாள் இரவு நைட் ஷோ போயிருந்தீர்களானால் அது நல்ல ஆப்ஷன். செகண்ட் ஏசியில் சௌக்கியமாக தூங்கிக்கொண்டு போகலாம்.

அப்படித்தான் நானும் சந்திரசேகரும் நினைத்துக்கொண்டிருந்தோம்.

கிளம்பினவுடனே கொஞ்சம் அடுத்த நாள் மீட்டிங் பத்தி பேசிட்டு இட்லி தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு கட்டையை சாய்த்தோமானால் நாலேமுக்காலுக்குதான் சேலம். இறங்கின உடன் இரண்டாம் பிளாட்பாரத்தில் நல்ல கும்பகோணம் டிகிரி காபி சாப்பிட்டு விட்டு நாமக்கல்லுக்கு கிளம்பலாம் என்று ஐ நா சபை ரேஞ்சுக்கு திட்டம்.

எங்களுக்கு தெரியவில்லை அப்போது!

வண்டி கிளம்புவதற்கு பத்தே நிமிடங்கள் இருக்கும்போது கம்பார்ட்மெண்டில் ஏறின மூன்று பேர். நாற்பது வயது மதிக்கத்தக்க மெல்லிசான நாமம் போட்ட தொள தொள டீஷர்ட் அணிந்தவர், பொருத்தமேயில்லாத சுடிதார் அணிந்த அவரின் மனைவி மற்றும் ஒரு ஆறு வயதுப் புயல்.

ஒல்லியான உருவம். நீளம் பச்சை மஞ்சள் என்று கொடு போட்ட டாப், சுருள் சுருள் ஸ்கர்ட் காலில் சிங்கப்பூர் செருப்பு, கிராப் தலை, காதில் சின்ன முத்து தோடு. ஓயாத வாய்!

“கௌசி! நாந்தான் ஜன்னல் சீட்”

அம்மாவை பேர் சொல்லி அழைத்தது!

“கல்யாணி! அங்கிளுக்கு தொந்தரவு தரப்படாது”

“சீ போ சீனுவாசா!”

அப்பாவுக்கும் அதே கதி!

நானும் சந்திரசேகரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

“அங்கிள்! நா இந்த ஜன்னல் சீட்டுல உட்கார்ந்துக்கறேன்”

அனுமதிக்கெல்லாம் காத்திருக்க வில்லை. என்னை தள்ளிக்கொண்டு ஓரமாக போய் உட்கார்ந்து கொண்டு விட்டது.

“ உம பேர் என்ன?”

“ சீனுவாசனைக்கேளு”- பட்டென தெறித்தது பதில்.

அந்த சீனுவாசன் முகத்தில் கொஞ்சம் வேதனையோடு ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டார்.

மனைவி “ கல்யாணி” என்று கொஞ்சமே கொஞ்சம் கடுமை காட்ட, அது திரும்பவேயில்லை.

“நீங்களும் சேலமா சார்?”

சீனுவாசன் இன்னும் ஜன்னல் பக்கத்திலிருந்து முகத்தை எடுக்கவேயில்லை.

“ஆமாம்”

“கொஞ்சம் பொறுத்துக்கோங்க. இவள் விஷமம் ஜாஸ்தி”

கல்யாணி வெடுக்கென திரும்பி பார்த்து” கௌசி! வாயை மூடு”என்றது!

நாங்கள் embarrassed ஆக வேறு பக்கம் பார்த்தோம்.

வண்டி கிளம்பின உடனேயே Pantry ஆளிடம் ஏழு ரூபாய் கொடுத்து செம்மண் கலர் வெந்நீர் வாங்கி சாப்பிட்டோம். கொஞ்சம் காபி வாசனை அடித்தது.

அடுத்த பல நிமிஷங்களுக்கு கல்யாணி அடித்த ரகளை கொஞ்ச நஞ்சமில்லை.

“ பெர்த் மேல ஏத்தி விடு இப்பவே”

ஏறின ரெண்டாம் நிமிஷம் “எறக்கி விடு சீனுவாசா”

அடுத்த கம்பார்ட்மெண்டுக்கு ஓடி திரும்பி வந்த போது கையில் ஒரு கார் பொம்மை. கூடவே இன்னொரு குழந்தை வீல் வீல் என்று கத்திக்கொண்டு வர பின்னால் அதன் அம்மா.

“ பிடுங்கிண்டு வந்துட்டாம்மா”

“ கல்யாணி! கொடுத்துடு. உனக்குதான் அனுமார் டாய் இருக்கே”

“அது பழசு. எனக்கு இதான் வேணும். ஆண்டி! நீங்க உங்க கொழந்தைக்கு வேற வாங்கிக்கொடுங்க. இத நா எடுத்துக்கறேன்”

அதை வாங்கி அந்த குழந்தையிடம் கொடுப்பதற்குள் இங்கே சர்வ தேச ஒப்பந்தம் போட வேண்டியிருந்தது.

“ நீங்க என்ன விஷயமா போறேள், ஆஞ்சநேயர் தரிசனமா?”

“ இல்ல. ஒரு கன்சல்டன்சிக்காக”

“ நாங்க மாசம் ஒரு தரம் இவளுக்காக”

நாங்கள் மேலே ஏதும் கேட்கவில்லை. அதற்குள் போண்டா ஆள் வந்துவிட கல்யாணி ஆரம்பித்து விட்டாள்.

“ நன்னா இருக்காது கல்யாணி. நா பிஸ்கட் வாங்கித்தரேன்”

“ எல்லாம் நீ பண்றத விட நன்னா இருக்கும். இப்பவே வாங்கித்தா”

சீனுவாசன் திரும்பி, “ இந்தாப்பா, ஒரு ப்ளேட் போண்டா கொடு”

“வேண்டாம்னா. கொழந்தைக்கு ஏற்கனவே ஜலதோஷம் வர மாதிரி இருக்கு. அப்புறம் யார் பதில் சொல்றது”?

“ சும்மா இர்றி! இப்ப யாரு சமாளிக்கறது?”

கொச கொசவென்று கையில் எல்லாம் ஈஷிக்கொண்டு சாப்பிட்டது.

சீனுவாசா! மூச்சா”

அவர் எழுந்து போனார். போகும்போது கல்யாணி எங்களைப்பார்த்து “ அங்கிள்! காபி வந்தா வாங்கி வெக்கறேளா ?”.

அசந்து போய் பார்த்தோம்.

“கொஞ்சம் தூங்கறேளா?”

“ எங்கேடி தூக்கம்”. கவலை தோய்ந்த வார்த்தைகள்.

“ நா பாத்துக்கறேன். நேத்திக்கு வேற தூங்கவேயில்லையே?”

“நீ கூடத்தான்”

“நான் மத்யானம் தூங்கிப்பேன். நீங்க வந்தவுடனே ஆபீஸ் ஓடணுமே?”

“ப்ச்”

சந்திரசேகர் பேச்சு கொடுத்தார்.

“ நீங்க சென்னையா இல்ல சேலமா?”

“சென்னைதான் சார். நாளைக்கு திரும்பிடுவோம். இவளுக்காகதான் நாமக்கல்”

“எங்க வேலை?”

“ கிரானிக்கிள் ல அசிஸ்டன்ட் எடிட்டரா இருக்கேன்”.

அவர்கள் பேச்சு பாலிடிக்ஸ், விளையாட்டு என்று திரும்பியது. சீனுவாசன் சுவாரஸ்யம் இல்லாமல் பேசினார். அலுப்பு தெரிந்தது. கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுவார். மறுபடி ஜன்னல் பக்கம்.

கொஞ்ச நேரத்தில் அவர்கள் பேச்சும் நின்று போயிற்று,.

சாய்ந்தவாறே கண்ணசந்தேன்.”

மறுபடி வீல் சத்தம்.

“ இப்பவே சாப்பாடு குடு கௌசி”

“மணி ஒண்ணு கூட ஆகலை. போண்டா வேற சாப்டுருக்கே. கொஞ்சம் போகட்டும்”

“முடியாது. இப்பவே வேணும்”

கௌசி பையை எடுத்து சாமக்கிரியைகளை பரப்பி பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து எலுமிச்சை சாதமும் சிப்ஸும் எடுத்துக்கொடுக்க, கல்யாணி சாப்பிட்டது.

மிளகாயை கடித்து விட்டு அலறியதும், சீனுவாசா, கௌசி என்று கூப்பாடு போட்டதும், அதன் பின்புல நடவடிக்கைகளும் கொஞ்சம் அதீதமாகவே பட்டது எங்களுக்கு.

செல்லம் கொடுப்பார்கள்தான், ஆனாலும் இப்படியா?

ஒரு வழியாக தூங்கியது.

நாங்களும் எங்கள் பொட்டலத்தை பிரித்தோம்.

“ஏன்னா! சாபிடறேளா ?”

“வேண்டாம்”

“ ப்ளீஸ்! நீங்களும் படுத்தாதேங்க. அவ தூங்கறச்செ சாப்டுடலாம்”

ஏதோ கொறித்தார்.

“என்ன இன்னும் மூட் அவுட்டா இருக்கேள்?”

“பேசாம இருடி.”

கண்ணை மூடிக்கொண்டார். கௌசியும் உட்கார்ந்தவாறே கண்களை மூடினாள்.

ஜோலார்பேட்டை வரும் வரை சுகமான பயணம்.

“ ஐஸ்க்ரீம் ஐஸ்க்ரீம்”

எழுந்துவிட்டது.

“சீனுவாசா! ஐஸ்க்ரீம் வாங்கித்தா”

“ கல்யாணி! உனக்கு ஜலதோஷம் வேண்டாம்”

அது பண்ணுகிற உலப்பளுக்கு பேசாம நாங்களே வாங்கிக்கொடுத்துவிடலாம் என்று இருந்தோம்.

“சொன்னா கேக்கா மாட்டா.” இந்தாப்பா, ஒரு ஐஸ்க்ரீம்”

“நாம்தான் பதில் சொல்லியாகணும்னா. ஒண்ணுமில்லாத்துக்கே கொட்டுவா உங்க மன்னி. ஜலதோஷம் வேற வந்தா அடுத்த மாசம் கஷ்டமாயிடும்”

“விடு பாத்துக்கலாம்”

சேலம் சிடி தாண்டி வண்டி மெதுவாய் நகர சீனுவாசனும் கௌசியும் அமைதியாகி விட்டார்கள்.

சேலத்தில் வண்டி நிற்கு முன் ஏதோ தீ விபத்து போல எல்லோரும் முண்டி அடித்து வாசலுக்கு ஓட நாங்கள் நிற்கட்டும் என்று காத்திருந்தோம்.

இறங்கின போது சீனுவாசனும் கௌசியும் வரவேற்க வந்த கொஞ்சம் வயதான தம்பதியரிடம் பேசிக்கொண்டிருக்க, அந்த பெண் கல்யாணியை தூக்கி முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்.. அவர்களிடம் சொல்லிவிட்டு புறப்படலாம் என்று நானும் சந்திரசேகரும் சற்று அங்கேயே நின்றோம்.

“ கௌசி! இன்னிக்கு வருவேளோ மாட்டேளோ ன்னு பட படப்பா ஆயிடுத்து”

“அதெப்படி வராம போவோம் மன்னி”?

“போன மாசம் எங்கே சொன்ன நாளுக்கு வந்தேள்? கொழந்தையை அனுப்பிட்டு நான்னா கெடந்து அல்லாடிண்டு இருந்தேன் இங்கே”

“என்ன மன்னி இப்படி சொல்றேள்?”

“நா என்னடியம்மா சொல்லிட்டேன். ஊருல இல்லாத வழக்கமா இருக்கு உங்காத்துல. கொழந்த இல்லேன்னா அது நீங்க பண்ணின பாவம். ஏதாவது அநாதை கொழந்தையை தத்து எடுத்துக்க வேண்டியதுதானே. எங்கொழந்தையை மாசா மாசம் இப்படி சேலத்துக்கும் மெட்ராசுக்குமா அலக்கழிச்சா, என்ன ஞாயங்கறேன்? எங்காத்துக்காரரைச்சொல்லணும், சொந்த தம்பின்னாலும் இப்படியா!”

சீனுவாசன் கல்யாணியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க அது அந்த இன்னொருவரிடம் “அப்பா! எனக்கு ஜூஸ் வாங்கித்தறேளா” என்று அன்பொழுகக்கேட்டுக்கொண்டிருந்தது.

நாங்கள் சட்டென்று சொல்லிக்கொள்ளாமலேயே நகர்ந்தோம்.

சேலம் பிளாட்பாரம் முழுவதும் நடந்து, கும்பகோணம் டிகிரி காபி வேண்டாம் என்று முடிவெடுத்து வெளியே வந்து காத்திருந்த காரில் ஏறி அடுத்த ஒரு மணி நேரம் நாமக்கல் அடையும் வரை…

அதுதான் முதலிலேயே சொன்னேனேனே, நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை.

Print Friendly, PDF & Email

0 thoughts on “வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

  1. முடிவில ஏதோ ஒண்ணு வரும்னு புரிஞ்சது. அது என்ன என்கிறதைக் கண்டுபிடிக்கர வரைக்கும் கதை வெஸ்ட்கோஸ்ட் மாதிரி ஓடுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *