வெள்ளை நிறத்தொரு பூனை!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 3,917 
 
 

மஞ்சு சூட்கேஸில் மூன்று நாட்களுக்கு வேண்டிய துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.நைரோபியில் ஒரு கான்ஃப்ரன்ஸ்.. நேற்றுதான் டொரென்டோவிலிருந்து வந்திருந்தாள். மனு அம்மா காலைக் கட்டிக் கொண்டான்.

“Mom… Not again …. I don’t know why God is giving you so much work….’

மஞ்சு அடக்கமுடியாமல் சிரித்து விட்டாள்…

‘God இல்லடா… என் Boss..’ என்று நினைத்துக் கொண்டாள்… அப்புறம் தோன்றியது… Boss தானே God….! !!!!!!!!

மூன்று வயது மனுவை அள்ளி எடுத்துக் கொண்டாள்.

“மனுக்குட்டி….God கிட்ட சொல்லி இனிமே வேல தராதீங்கன்னு சொல்றேன்..ஓக்கே தானே…!!!”

பெரியவன் குரு வாயே திறக்கவில்லை.. சாதாரணமாய் அவனும் ஏதாவது சொல்வான்…

“குரு….நீ மட்டும் ஏன் அமைதியா இருக்க..??? நீயும் கடவுள் கிட்ட கோபமாயிருக்கியா???”

“இல்ல மாம்…..!!!

You take care of your life.
We’ll take care of ours….!”

“நிஜமாத்தான் சொல்றியா…???”

“Yes mom…..”

குருவுக்கு வயதுக்கு மீறிய அறிவு…! அப்படியே சூட்கேசை வைத்து விட்டு இரண்டையும் அள்ளி அணைத்துக் கொண்டாள்..

“அம்மா அடுத்த வாரம் முழுசும் இங்கதான் இருப்பேன்… சரியா..?? வீக் எண்ட் எங்க போகலாம்னு plan பண்ணி வைங்க…!! அப்பாவும் இருப்பாரு..சரியா…??”

சரியாக அவள் கிளம்பும் முன் பேபி ஸிட்டர் லாரா வந்து விட்டாள்…

“Bye… chocolate chips….Be good…!”

“Love you mom. Miss you so much…”

குருவும் மனுவும் ஏக குரலில் bye சொன்னார்கள்.

***

மஞ்சுவும் ஜானும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். Urbana Champaign University யில் முதுநிலை பட்டப்படிப்பில் போது ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். இருவருமே இந்தியாவில் சென்னையிலிருந்து வந்தவர்கள். மஞ்சு மிகவும் ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவள். ஜானோ அதே மாதிரியான கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன். Very handsome guy. சிவந்த மெலிந்த உடல்.மஞ்சு நல்ல கறுப்பு…. அவர்களுடைய குடும்பத்திலேயே அவள் ஒருத்திதான் கருத்த நிறம்.அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிய நிறம். ஆமாம்… அவளிடம் அதை உருவாக்கியதே இந்த சமூகம் தான்.

மஞ்சுவின் அப்பாவும் அம்மாவும் சிவந்த நிறம், முதலில் பிறந்தவள் ரேகா. அப்படியே அப்பா. மூன்று வருஷம் கழித்து பிறந்தாள் மஞ்சு. கண்கள் திராட்சை பழம் போல கருகருவென்று, நிறமும் அப்படியே….! பிறந்த குழந்தையைக் கையில் வாங்கியதும் ஒரே ஒரு வினாடிதான் அதிர்ந்தாள் உமா. அது கருவண்டு விழிகளை உருட்டி அவளைப் பார்த்து முழித்ததும் அவள் நிறத்தை மறந்தே போனாள்.
முதல் விமரிசனம் நர்ஸ் சூசனிடமிருந்துதான், முதல் பிரசவத்தில் கூடவே இருந்தவள்.

“உமா…ரேகா எத்தினி சிவப்பா இருந்திச்சு, உங்க வீட்ல யாரு கறுப்பு….??”

அவளை முறைத்துப் பார்த்தான் அசோக், உடனே வாயை மூடிக்கொண்டாள் சூசன். அன்று தொடங்கிய விமர்சனம் மஞ்சுவை தொடர்ந்து வேட்டையாடிக்கொண்டேயிருந்தது. மூன்று நான்கு வயது வரை அவளுக்கு அவ்வளவு பாதிப்பு இருக்கவில்லை. ஏதோ கறுப்பு, சிவப்பு என்ற வார்த்தைகள் அடிக்கடி காதில் விழும், அதன் அர்த்தமும் விஷமத்தனமும் புரியாத வயது. ஆனால் பள்ளியில் சேர்ந்தபின் ஒவ்வோரு நாளும் ஒவ்வோரு விதமாக அவள் காயப்பட்டுத்தான் திரும்புவாள்.

”நீ ரேகாவின் தங்கையா…நம்பவே முடியல..”

“நீ ரேகா மாதிரி இல்லை…அவ நல்ல சிவப்பு இல்ல.???”

“மஞ்சு.. மீரா சொன்னப்போ நான் நம்பவேயில்ல. நீ நிச்சயமாக ரேகா சிஸ்டர் இல்லைன்னு அடிச்சு சொன்னேன்…”

சரி கூடப் படிப்பவர்கள் தான் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்கள் என்றால் ஆசிரியர்கள் கூடவா…??. முதலில் அவளுக்கு ரொம்ப கோபமாய் வரும்.நண்பர்கள்,ஆசிரியர்கள், ரேகா எல்லோர் மேலேயும். அப்புறம் அழுகை, தன் மீதே ஒரு வெறுப்பு. பெற்றோர் மீது ஆத்திரம். self pity….மன அழுத்தம், low self-esteem, கடைசியாக தற்கொலை எண்ணமும்.

உமா மஞ்சு ரொம்ப காயப்பட்டிருப்பதை புரிந்து கொண்டாலும் அவளை அதிலிருந்து மீட்கும் வழி தெரியாமல் தவித்தாள்.மஞ்சு யாரிடமும் தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.அசோக்கும் உமாவும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இருவரும் ஒரே பள்ளியில் படிப்பதால் தானே இத்தனை comparison. மஞ்சுவும் வேறு பள்ளிக்குச் செல்ல தயாராயிருந்தாள்.

புது பள்ளி… புதிய நண்பர்கள்..! ஆரம்பத்தில் அதே பயம்… தயக்கம்… ஒரு காம்ப்ளெக்ஸ்… ஆனால் அவள் நினைத்த மாதிரி அவளுடைய நிறத்தை யாருமே பெரிதாக பொருட்படுத்தவில்லை. அவளைப் போல எத்தனையோ பேர். அவள் முதல் முதலில் மஞ்சுவாய் இருந்தாள். ரேகாவின் தங்கையாக அல்ல. ஆனால் வீட்டில் எல்லோரிடமும் கண்டிப்பாக சொல்லிவிட்டாள். PTA மீட்டிங் தவிர யாரும் பள்ளி பக்கம் எட்டி பார்க்கக் கூடாது என்று. மஞ்சு இரண்டு விஷயத்தில் மிகவும் திறமைசாலி. ஒன்று கணக்கு. இரண்டாவது விளையாட்டு.வாலிபால் சேம்பியன். இப்போதெல்லாம் வாலிபால் மஞ்சு என்று தான் பிரசித்தம். அவள்தான் வகுப்பு லீடரும்.

ஆனால் வீட்டில்தான் இயல்பாய் இருக்க முடியவில்லை. ரேகா அவளுடன் ஆசையாய் பேச வந்தால் அவளைத் தவிர்த்து விடுவாள்.சின்ன சின்ன suggestions கூட அவளை பெரிதளவில் பாதித்தது.

“மஞ்சு… இந்த உடை உனக்கு நல்லா சூட் ஆகும்…!!”

“ஏன்.?? கறுப்பா இருக்கறவங்களுக்கு இந்த கலர்தான் சூட்டாகுமா??”

“அதோ… அந்த குழந்தையைப் பாரேன்…சிவப்பா….கொழுகொழுன்னு எத்தனை அழகு…..!!!”

“ஏம்மா… பக்கத்திலேயே கறுப்பா அழகா ஒரு குழந்தை இருக்கே……அது உங்க கண்ணுக்கு தெரியலையா…??”

இப்படி எதற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசும் பெண்ணிடம் எப்படி தொடர்ந்து பேச முடியும் …..??

அவளுடன் பேசுவதே எதோ ஒரு சண்டையில் தான் போய் முடியும்.

ஒரு நாள் ரேகாவின் தோழிகள் நாலைந்து பேர் வீட்டிற்கு வந்திருந்தார்கள். ஒரே ஆர்பாட்டம்… அமர்க்களம். சாப்பிட்டு விட்டு பத்திரிகை பார்த்துக் கொண்டு விமரிசித்துக் கொண்டிருந்தார்கள். மஞ்சுவும் அங்குதான் இருந்தாள்.

“கத்ரீனா கைஃப் எப்பிடி இருக்கா பாரு..!!! செக்கச் செவேல்னு??”

“இங்க பாருடி. ஆலியா பட்.. !!!என்ன நிறம்.பீச் மாதிரி…. எனக்கு பிடிச்சவ…!!”

“யாரும் கரீனா கபூர் பக்கத்தில கூட வரமுடியாது…!!!! அவளுடைய நிறமும்… அழகும்…!!!!”

திடீரேன்று மஞ்சு எழுந்து வந்தாள். எல்லாம் பத்திரிகைகளையும் எடுத்து அப்படியே கிழித்து வீசி எறிந்தாள்.

“உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை..?? இந்த டாபிக் தவிர பேச ஒண்ணுமேயில்லையா..? வெள்ளத்தோல் இருந்தால் அவள் என்ன தேவதையா..?? மூளையில்லா முட்டாள் அழகிகள்…! எல்லாரும் எழுந்திரிச்சு வெளிய போங்க..!!! I can’t tolerate your nonsense anymore…!”

வெறி பிடித்தவள் போல கத்தினாள்.எல்லோரும் பயந்துபோய்,

“சாரி ரேகா.. அப்புறம் மீட் பண்ணலாம்…’ என்று கிளம்பி விட்டார்கள்.

ரேகாவுக்கு ஒரே அவமானமாய் போய்விட்டது.

அசோக்கும் உமாவும் நிறைய ஆலோசனைக்குப் பின்னால் ஒரு நாள்.

“மஞ்சு…நீ ரொம்பவே டிஸ்டர்ப் ஆயிருக்க..வேணா ஒரு கவுன்சிலிங் போனால் என்ன ..??”

சீறிப்பாய்ந்தாள் மஞ்சு.

“உங்களுக்கெல்லாம் தான் கவுன்சிலிங் தேவை… முடிஞ்சா அத்தை…மாமா..சித்தி… பெரியம்மா எல்லொரையும் கூட கூட்டிட்டு போங்க..”

அதிலும் குறிப்பாக சச்சு அத்தை.

“ஏண்டி … எல்லாரையும் விட்டுட்டு போயும் போயும் சம்பு மாமியைக்கொண்டு பொறந்திருக்கியே…”

***

அவளைக் காயப்படுத்தியவர்கள் லிஸ்ட்டில் இவர்கள் எல்லோருமே அடக்கம். அசோக்கும் உமாவும் அப்புறம் அந்த பேச்சையே எடுப்பதில்லை ‌என்று தீர்மானித்து விட்டார்கள். பள்ளியிலேயே முதலாவதாய் தேறி பொறியியல் படிப்பை முடித்துவிட்டு உதவித் தொகை பெற்று Illinois ல் உள்ள Urbana Champaign University யில் சேர்ந்து விட்டாள். ரேகா C.A. முடித்து திருமணமாகி துபாயில் செட்டில் ஆகிவிட்டாள். மஞ்சுவுக்கு ஜான் அங்குதான் பரிச்சயமானான்.இந்தியாவிலிருந்து வந்த நான்கு பேரில் ஜான் மட்டுமே தமிழ் பேசுபவன். இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் பழகினார்கள். ஜானுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களை கூடிய மட்டும் தவிர்த்தாள் மஞ்சு. அவனுடைய சிவந்த நிறம் அவளை ஏதோ ஒரு விதத்தில் பயமுறுத்தியது. அவன் தன்னை விரும்புகிறான் என்று தெரிந்ததும் அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அவனால் நிச்சயம் ஒரு நாள் தான் காயப்பட்டு நிற்கப்போவதாய் உறுதியாக நம்பினாள்.

அவனுடைய மதத்தைவிட அவனது நிறமே அவளை அன்னியமாக்கியது.ஆனால் ஜான் அவளது அத்தனை கற்பனைகளையும் தவிடு பொடி ஆக்கிவிட்டான். யாருக்கும் திறக்காத மனக்கதவு அவனுக்கு திறந்தது. பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி அமெரிக்காவிலேயே பதிவுத் திருமணம் பண்ணிக் கொண்டு, இதோ இப்போது ஏழு வயது குருவுக்கும், மூன்று வயது மனுவுக்கும் பெற்றோராய் அவள் கற்பனையில் கூட நினைக்காத ஆனந்த வாழ்க்கை…!

***

மஞ்சு ஆபீசில் நைரோபி எனும் கென்யா நாட்டின் தலைநகரில் ஒரு கிளை திறப்பதாயும் அங்கு ஒருமாத ப்ராஜெக்ட் விருப்பம் உள்ளவர்கள் போகலாமென்றும் கேட்டிருந்தார்கள்.அவளுக்கு போக விருப்பமிருப்பதை ஜானிடம் சொன்னாள். அவன் குழந்தையைப் பற்றி கவலைப்படாமல் போய்வர சம்மதிக்கவே நைரோபியில் அலுவலக தோழி ஒருத்தியின் வீட்டில் paying guest ஆக தங்க ஏற்பாடுகள் செய்துவிட்டு கிளம்பினாள். அப்போது குருவுக்கு மூன்று வயதுதான் ஆகி இருந்தது. முதல் முறையாக அவனை விட்டுவிட்டு இவ்வளவு நாள் பிரிவு.ஒரு பேபி சிட்டரை ஏற்பாடு பண்ணியிருந்தாள்.

Jomo International Airport.

புது அனுபவம்… அவளுக்கு அன்னியமாகவே தோன்றவில்லை. அவளைச் சுற்றிலும் பெரும்பாலும் ஆப்பிரிக்க மக்கள். அவளுடைய மனதுடன் ஒன்றிப்போன நிறம். அவளை வேறுபடுத்திக் காட்டாத நிறம். இமிக்ரேஷன் முடித்து வெளியே வந்தாள். அவளை நோக்கி வந்த அந்த அழகிய சுருண்ட முடியுடன் மேக்ஸி அணிந்து மான் போல் துள்ளி வந்த பெண்.

“Hello !! I’m Elizabeth!! You are Manju guess ???”

அப்படியே இறுகத் தழுவிக் கொண்டாள்.அதில் அவளுடைய அன்பு பாசம் ஆனந்தம் எல்லாமே அடக்கம்.

“Lovely meeting you dear !!!”

என்னவோ காலம் காலமாய் தொடர்ந்து வந்த பந்தம் போல ஒரே நிமிடத்தில் இருவரும் மிகவும் நெருக்கமானர்கள். வழியெங்கும் வாய்மூடாமல் லாவகமாய் கரை ஓட்டிக்கொண்டு பேசிக்கொண்டே வந்தாள் லிஸ். சிறிய அழகிய apartment complex முன்னால் வண்டி நின்றது. மஞ்சுவின் கையிலிருந்து வலுக்கட்டாயமாக சூட்கேசை பிடுங்கிக் கொண்டு லிஃப்ட் பொத்தானை அமுக்கினாள்.அவளுடன் தங்கியிருந்த அந்த ஒரு மாதம்.

அவளுடைய Swahili பெயர் Firyali. அதன் அர்த்தம் அசாதாரணமானவள். அதிசயமானவள்! உண்மையிலேயே அவள் அப்படித்தான். மஞ்சு அசைவம் சாப்பிட மாட்டாள் என்று தெரிந்து விதவிதமான வெஜிடேரியன் உணவு வகைகள். சப்பாத்தி,பீன்ஸ்.சோளம், காய்கறிகள், பழங்கள், சாதம். ஒரு நாள் Sukuma Wiki, Ugali, கீரையுடன் சோளமாவில் இட்லி மாதிரி வேகவைத்த பலகாரம். இன்னோரு நாள் ‌Githeri என்ற வேகவைத்த பீன்ஸ் சோளம் கலந்த பொரியல்.

ஆபீசில் எல்லோரையும் அறிமுகப்படுத்தி ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை இருபது நாளில் முடித்துக் கொடுத்த அவளுடைய Brilliant performance…! இதெல்லாவற்றையும் விட அவளுக்கு தனிப்பட்ட வாழ்வில் அவளுக்கு நேர்ந்த துன்பங்களை அவள் கையாண்ட விதம்…! Hats off Liz..! மஞ்சு மனதில் நினைத்துக் கொண்டாள்.

எலிசபெத் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவள். அவளுக்கு எட்டு வயதானபோது அப்பாவும் அம்மாவும் பிரிந்து விட்டார்கள்.அவளும் அக்கா டிரேசியும் அப்பாவிடம் வளர்ந்தார்கள். அப்பாவின் Real Estate business நொடித்து போகவே அவள் படித்துக் கொண்டே வேலை பார்க்கும்படி ஆயிற்று. டிரேசி எப்படியோ போதை பழக்கத்துக்கு அடிமையானாள். பலவிதமான உறவுகள்.. ஒரு குழந்தைக்கும் தாயானாள். HIV + குழந்தை… இரண்டு மாதத்தில் விட்டுவிட்டு காணாமல் போய் விட்டாள். வளர்க்கும் பொறுப்பும் அவள் தலையில்.அதுவும் HIV + என்று தெரிந்தும் அவள் அடைந்த துன்பம்… அதற்கு எவ்வளவு மருத்துவம் கவுன்சிலிங். வேண்டுமோ அத்தனையும் ஏற்றுக் கொண்டாள். ஆனால் வீட்டில் வைத்து பராமரிப்பது இயலாமல் போகவே ஒரு காப்பகத்தில் வீக் எண்ட்டில் கூட்டிக்கொண்டு வருவாள். இடையில் அவளுடைய அப்பாவும் இறந்து விட்டார்.

லிஸ்ஸூம் மஞ்சுவும் நெருங்கிய தோழிகள் ஆகி விட்டனர். மஞ்சு தன் மனதை அரித்துக் கொண்டிருந்த எத்தனையோ விஷயங்களை அவளுடன் தயக்கமில்லாமல் பகிர்ந்து கொள்ள முடிந்தது..

“நாங்கள்தான் காலம் காலமாய் இனவெறிக்கு ஆளாகி சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்.ஆனால் உன்னுடைய நாட்டில் உங்களுக்கே இந்த நிலைமை என்பதை நினைக்கும் போது ஆத்திரமாய் இருக்கிறது….

“நாங்கள் ஆப்பிரிக்காவில் இருக்கும் வரை மிகவும் தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். ஆனால் வெளி நாடுகளில் பயணம் செய்யும் போது தான் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்த ஜந்துக்கள் போலவும் ஒரு குற்றவாளியைப் போலவும் பார்க்கப் படுகிறோம்…”

அவளுடைய பேச்சு மஞ்சு மனதை வருத்தியது.

“உனக்கு வெளிநாட்டில் கசப்பான அனுபவங்கள்…????”

“ஒன்றல்ல, நிறையவே. எனக்கு ஏற்பட்ட மிகக் கசப்பான அனுபவம் உங்கள் நாட்டில் தான் மும்பையில்…”

“என்ன சொல்கிறாய் Liz….??”

“நான் இதற்கு முன் ஒரு கம்பெனியில் sales and marketing வேலையில் இருந்தேன். முதன் முறையாக வெளிநாட்டு பயணம். அதுவும் இந்தியா. எனக்கு இந்தியர்களை ரொம்பவே பிடிக்கும்.”

சத்ரபதி சிவாஜி விமானநிலையம்.

இமிக்ரேஷன் முடித்து வெளியே வந்து எனது பெட்டிக்காகக் காத்திருந்தேன். அப்போது தள்ளுவண்டியுடன் விமான நிலைய ஊழியர் ஒருவன் என்னை நோக்கி வந்தான். “பெட்டிகளை நான் எடுத்து வைக்கிறேன்” என்றான். “வேண்டாம்… நான் பார்த்துக் கொள்கிறேன் …..” என்று கூறிவிட்டேன். ஒரே பெட்டிதான். அதுவும் என் பெட்டியைத் தூக்கும் அளவு என் கையில் பலம் உண்டு. அவன் விடுவதாயில்லை…! முன்னூறு ரூபாய் கொடுத்தால் போதும் என்றான். எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது. “Please leave me alone…”. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். அவன் விடுவதாயில்லை.நான் பெட்டியை எடுத்துக் கொண்டு வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். யாருமில்லாத இடத்தில் என் முன்னால் வந்து நின்றான்.!!

“இப்போது நான் உன் பையில் ஒரு போதைப் பொருள் பேக்கெட்டை போட்டு கஸ்டம்ஸில் புகார் செய்தால் உன்னால் என்ன செய்ய முடியும்… இருநூறு ரூபாயைக் கொடுத்து விடு…”

சற்றும் எதிர்பார்க்காத இந்த மிரட்டலால் ஒரு நிமிஷம் சப்த நாடியும் ஒடுக்கியது. உடனே சமாளித்துக் கொண்டேன்.

“என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று சொல்லி விட்டு விமான நிலையத்தை விட்டு விட்டு வெளியே வந்தேன். சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு போய்விட்டான்.

வெளியே வந்து சிறிது நேரம் நின்று விட்டேன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. பத்தே நிமிடத்தில் பழையபடி ஆகிவிட்டேன். பத்து நாட்கள் இந்தியாவில். நிறைய மகிழ்ச்சியான அனுபவங்கள். சில கசப்பானதும, யோசித்துப் பார்த்தேன். இதுவே ஒரு வெள்ளைக்காரனாயிருந்தால் அவன் காலைத் தொட்டு அல்லவா வணங்குகிறார்கள். கறுப்பின மக்கள் எந்த குற்றமும் செய்யத் துணிவார்கள் என்று ஏன் எண்ணுகிறார்கள்…?.

ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். இந்தியாவில் பாதிப்பேர் கருத்த நிறமுடையவர்களாயிருந்தாலும் ஆப்பிரிக்கர்களை அவர்கள் பார்க்கும் பார்வையில் ஒரு பயமும், வெறுப்பும் அன்னியத்தன்மையும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்தியாவில் பிறந்த உனக்கே இதுமாதிரியான அனுபவம் ஏற்பட்டுள்ளது மனித மனத்தின் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது….! இந்த சம்பவத்தை நான் யாரிடமும் கூறவில்லை… ஏன் தெரியுமா…?? என் ஒருத்தியின் அனுபவத்தை வைத்து ஒரு நாட்டின் அபிப்ராயத்தை எடை போடுவது அந்த நாட்டை நான் அவமதிப்பதாகும்…”.

“Liz….you are great….! எனது நாட்டு மக்களின் சார்பில் நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்…”

***

மஞ்சுவுக்கு உடனே பாரதியின் பூனைக்குட்டி பாடல் நினைவுக்கு வந்தது.

“லிஸ்…எங்கள் நாட்டில் பாரதி எனும் கவிஞன் எழுதி வைத்து கவிதையை நீ அவசியம் படிக்க வேண்டும்…!”

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

அவள் அந்த கவிதையை அணு அணுவாக ரசித்தாள்.

“இப்படிப்பட்ட கவிஞன் பிறந்த நாட்டில் பிறந்து நிறத்தை வைத்து மனிதனை எடை போடும் பழக்கம் இன்றும் இருப்பதைக் கேட்டு எனக்கு வேதனையாக இருக்கிறது…!!”

“எனக்கு அவமானமாயிருக்கிறது..”

***

அங்கு இருந்த ஒரு மாதமும் அவளுடைய அன்பில் திக்குமுக்காடிக் போனாள் மஞ்சு. நேஷனல் மியூசியம், மசைமாரா விலங்குகள் இருப்பிடம், நக்குரு…நைவாஷா, ஏரிகள், அம்பாஸலி பார்க்…இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. ஒரு நாள் மஞ்சுவை Nancy இருக்கும் காப்பகத்துக்கு கூட்டிக்கொண்டு போனாள். நான்சி தியோடர்..! தியோடர் என்பதற்கு கடவுளின் குழந்தை என்று அர்த்தமாம். நான்கு வயது தேவதை. அப்படியே எலிசபெத்தை கட்டிக் கொண்டு “மாம்.ஐ மிஸ் யூ..!!! “என்றாள்.

இரண்டு நாள் பொழுது போனதே தெரியவில்லை. குரு பற்றி நிறைய கேட்டாள். விட்டுப் பிரிய மனமில்லாமல் பாஸ்டன் விமானத்தைப் பிடித்தாள் மஞ்சு.

“குரு..இங்க பாரு..!!!ஆப்ரிக்காவிலிருந்து என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் !!!”

***

ஜானும் மஞ்சுவும் எங்கு போனாலும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி வரும் பழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை. அந்த ஊரின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை பரிசாகத் தருவது வழக்கம்.நான்சி ஒரு ஒட்டகச்சிவிங்கி குடும்பத்தை பரிசாக அனுப்பி இருந்தாள். அப்பா… அம்மா… குட்டி…குரு அன்று அதைக் கட்டிக்கொண்டு தான் தூங்கினான். அன்று இரவு Bed time story ஆப்ரிக்காவைப் பற்றிதான். அப்புறம் நிறையவே ஆப்பிரிக்க பயணம். மனுவும் பிறந்தான். இரண்டு தடவை லிஸ்ஸூம் நான்சியுடன் வந்தாள். மனுவுக்கும் குருவுக்கும் இப்போது ஆப்ரிக்காவில் ஒரு சகோதரி இருக்கிறாள் என்று ஒரே பெருமை.

“குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்திலே….
ஐக்கியமாகி விடும்
இது உண்மை ஜகத்திலே…….”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *