வெள்ளை சேலைக்காரி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2024
பார்வையிட்டோர்: 1,117 
 
 

கணவன் இறந்து முப்பது வருடங்களாக வெள்ளை சேலை கட்டி வந்த எழுபது வயதைக்கடந்து விட்ட கங்கம்மா, இன்று தனது பேத்தி ரம்யாவின் பிடிவாத விருப்பத்திற்க்கிணங்கி பூ போட்ட கலர் சேலை கட்டியதில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துப் பார்த்துப் பூரித்தாள். 

எழுபது வயதில் இருபது வயதின் உணர்வு பெற்ற சந்தோசம் மனதில் ஊற்றெடுத்து பொங்கியது. ஆனால், ஊருக்குள் எவ்வாறு இந்தக்கோலத்தில் தலை காட்டுவது…? ‘வயசான முண்டச்சி கிழவிக்கு வாலிபப்பொண்ணோட ஆசை வந்திருச்சு’ என கேலி பேசி விடுவார்களோ? எனும் அச்சம் மேலோங்கியது.

பேத்தி ரம்யா தனது செல் போன் கேமராவில் கலர் சேலையணிந்திருந்த பாட்டியை போட்டோ எடுத்து மகிழ்ந்தாள். பேத்தி ஆசைப்பட்டாலும் மருமகளுக்கு பிடிக்கவில்லை என்பது அவளது முகமே காட்டிக்கொடுத்தது. 

“படிச்சுப்போட்டம்னு எல்லாத்தையும் மாத்திப்போடுவியா? உன்ற அப்பத்தாக்காரி ஊருக்குள்ள போயிட்டு வந்ததும் மறுபடியும் வெள்ளைச்சேலைய எடுத்துக்கட்டிக்கப்போறாளோ, இல்லையோன்னு பாரு. இது தேவையில்லாத வேலை உனக்கு. புருசனை எழந்த பொம்பளைய பிரிச்சுக்காட்டறதுக்குத்தான் முன்னோர்கள் அந்தக்காலத்துல கிராமத்துல இப்படி வெள்ளை சேலைய கட்ட வெச்சாங்க… அதப்போயி மாத்தி கட்ட வெச்சிருக்க. ஆரம்பத்த மாத்துனா அவமானந்தான் மிச்சமாகும். அந்தக்கெழடும் உன்ற பேச்ச நம்பி கேவலப்படப்போகுது பாரு” எனக்கூறிய தாய் மோகினியை கோபமாகப்பார்த்தாள் ரம்யா.

“அப்படின்னா மனைவிய இழந்த ஆம்பளைங்களுக்கு இதே மாதிரி வெள்ளை தான் கட்டோணும்னு சட்டம் போட்டிருக்கலாமே….? மறுபடியும் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கலாமே…?” தனது இருபத்து நான்கு வயதுள்ள மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள் மோகினி.

இப்பேச்சுக்களையெல்லாம் தான் அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தாலும், சிறு வயதில் பாவாடையிலிருந்து முதன் முதலாக வயசுக்கு வந்த போது தாவணி போட்ட தருணம், இது போன்ற மனநிலை ஏற்பட்டதை உணர்ந்த போது கூச்ச மனநிலை கங்கம்மாவை தற்போது தொற்றிக்கொண்டது.

தாவணியை கட்டி கண்ணாடியில் பார்ப்பதும், யாராவது வீட்டிற்கு வந்தால் அதை கழட்டி வைத்து விடுவதும் வாடிக்கையானது. பின் இரண்டு வருடங்களுக்கு பின்பே தொடர்ந்து தாவணி போடும் தைரியம் வளர்ந்திருந்தது.

வேலைக்கு சென்று விட்டு வந்த மகன் கண்ணன் தன் தாயைப்பார்த்து வியந்தான். சிறுவயதில் தந்தை உயிரோடிருந்த போது தாயைப்பார்த்த ஞாபகம் வந்ததும் அவனையறியாமல் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனைக்கண்ட தாயும் மனதை கல்லாக்கி திண்ணைத்தூணுக்கருகே இன்னொரு தூணாக உணர்ச்சியற்ற ஜடமாக நின்றாள். என்ன பேசுவதென புரியாமல் வார்த்தை கிடைக்காமல் தடுமாறினாள். எப்போதும் போல மகனிடம் இயல்பாகப்பேச ஏதோ தடுத்தது. மகன் அருகே வந்ததும் மகனைப்போலவே அவளும் அழுகையையே பதிலாக்கினாள். 

கணவனுடன் குதூலகமாக வாழ்ந்த பழைய நினைவுகள் வந்து போன போது கலர் சேலை கட்டிய மகிழ்ச்சி, வேதனையில் கரைந்து காணாமல் போனது. கலர் சேலை கட்டினாலும் தான் முன்பு வைத்திருந்த பெரிய வடிவிலான குங்குமத்தை வைக்க மட்டும் மனம் பிடிவாதமாக இடம் தரவில்லை. ‘ஔவையார் பாட்டி என தன்னை பக்கத்து வீட்டுக்குழந்தைகள் அடைமொழி வைத்து கூப்பிட்டவர்கள் இனிமேல் எப்படிக்கூப்பிடுவார்களோ….?’ என கவலையும் வந்து போனது.

“இது தப்பா சாமி…‌? எனக்கு புடிக்கல. ரம்யா சொன்னான்னு தான்…. ரம்யாவை ஒரு குழந்தை மனதுடன் பார்த்தவள் வார்த்தையை இழுத்தாள். ரம்யாவும் முகஸ்துதியால் தன் தந்தையைப்பார்த்து ‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்தாள். 

கண்ணனுக்கும் இது பிடித்திருந்தாலும் ‘பொது நிகழ்ச்சிகளில் அம்மா மற்றவர்களை எவ்வாறு சமாளிக்கப்போகிறாளோ….? இன்றைய நாகரீக உலகில் மறுமணமே செய்து கொள்ளும் பெண்களுக்கு மத்தியில் கலர் சேலை கட்டிக்கொள்வது ஒன்றும் தவறில்லை. தந்தை இறந்த போதிருந்து கட்டியிருந்தால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். நீண்ட நாட்களுக்குப்பின் கட்டுவதால் அவ்வாறு கட்ட தைரியமில்லாத பெண்கள் தான் குற்றம் சாட்டுவார்கள். மற்றவர்களும், தற்போதைய தலை முறையும் வரவேற்கவே செய்யும். ம்… எது எப்படியோ அவரவர் வாழ்வு அவரவர் விருப்பம் தானே. மற்றவர்களுக்கு இதில் எடையூறு ஏதுமில்லையே…?’ என தன் மனதை முதலில் முழுமையாக ஏற்க பயிற்ச்சி கொடுத்து சாந்தமானான்.

இது வரை தினமும் வெளியில் செல்லவே பயப்படுவாள்.  ‘வெள்ளைச்சேலைக்காரி எதுக்க வந்திட்டாளே…. எப்படி போற காரியம் விருத்தியாகும்…?’ என பேசியவர்கள் இனி மேல் பேச மாட்டார்கள் என நினைத்தும் பேத்தியின் விருப்பத்துக்கு கட்டுப்பட்டவள், இன்று வெளியில் சென்ற போது ‘சேலைய மாத்திக்கட்டீட்டா முண்டச்சி இல்லீன்னு ஆயிப்போகுமா…?’ என சிலர் பேசியது மனதை வலிக்கச்செய்தது. திரும்பவும் வெள்ளை சேலையை எடுத்துக்கட்ட முயன்ற போது பேத்தி ரம்யா பிடிவாதமாகத்தடுத்து, மீண்டும் பூப்போட்ட டிசைனுடன் கூடிய சேலையையே கட்டவைத்தது போகவிருக்கும் காது குத்து நிகழ்ச்சியில் எப்படி சமாளிப்பதோ….? என பயம் கூடியிருந்தது.

விழா கூட்டத்தில் அவரவர் வேலையை அவரவர் கவனித்துக்கொண்டிருந்ததால் கங்கம்மாளிடம் யாரும் வந்து பேச்சு கொடுக்கவில்லை. சிலர் பார்த்தும் பார்க்காதது போல் சென்றனர். ‘ஒரு வேளை இந்த சேலை கட்டியதால் தன் மீது கோபமோ….?’ என சந்தேகித்தாள். ‘சேலையை மாற்றியதால் அடையாளம் தெரியாமல் பேச யாரும் வரவில்லையோ….?’ எனும் சந்தேகம் வர தாமாக வலிய சென்று உறவுக்காரப்பெண்ணிடம் பேசினாள்.

“அடையாளம் தெரியலையா…? ராணி…. நான்தான் கங்கம்மா. பேங்க் வேலைக்குப்போற கண்ணனோட அம்மா, டீச்சர் மோகினியோட மாமியா, டாக்டர் ரம்யாவோட அப்பத்தா…’ என உறவுப்பெண்ணிடம் கூற, “என்ன பெரியாத்தா இப்படி பேசறே….? உனக்கென்ன பைத்தியமா….? உன்ற மொகத்தப்பார்த்தா நீ யாருன்னு தெரியாதாக்கும்? சேலைய மாத்திக்கட்டினா கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சிட்டியா…?இந்த சேலை உனக்கு நல்லாத்தா இருக்குது… ” என மகள் முறையுள்ள உறவுக்காரப்பெண் கூறிய போது மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள்.

‘எல்லாரும் இப்படியே பேசுனா பரவாயில்ல. ஒன்னி ஆரு கேவலமா பேசப்போறாங்களோ தெரியலையே…?’ மனம் பயம் கொள்ள அங்கிருக்கும் இருக்கையில் ஓரமாகச்சென்று அமர்ந்து கொண்டாள். கலர் சேலை உடலில் ஒட்டியிருந்தாலும் உள்ளத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தது புரிந்தது.

கங்கம்மா எதிர்பார்த்தபடியே வடகிழக்கு மூலையில் மையம் கொண்டிருந்த ரங்கம்மா எனும் சம வயதுடைய உறவுக்காரப்புயல் கங்கம்மாவை நோக்கி கரையைக்கடந்து வேகமாக கோபமான கோர முகம் காட்டி வந்தது.

வந்தவள் உக்கிரமாக கங்கம்மாவைப்பார்க்க தலை கவிழ்ந்தாள். “அல்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில கொடைப்புடிப்பானாம். அந்தக்கதையால்ல இருக்குது உன்ற கதை. எதுக்கு காலம் போன கடைசில, கட்டைக்கு போற நேரத்துல இந்தக்கோலம்…? கேவலமா இல்லியா…? அப்படியே ஒரு புருசனையும் பார்த்து கட்டிக்குவே…..?” இந்தக்கேள்வி கங்கம்மாவுக்கு சாட்டையில் அடித்தது போலிருந்தது. உடனே வீட்டிற்கு சென்று விடலாம் என தோன்றியது.

கண்களில் வடிந்த கண்ணீரை கங்கம்மாவாள் நிறுத்த இயலவில்லை. பேசிய உறவுக்கார பெண்ணின் மகள் வந்து தன் தாயை திட்டினாள். “ஏம்மா உனக்கு புத்தி இருக்குதா? பெரியம்மாவ இப்படியா பேசறது? அவங்களுக்கு புடிச்சதை அவங்க பண்ணறாங்க. உனக்கும் புடிச்சிருந்தா பண்ணு. இல்லேன்னா கம்முன்னு இரு” என பேசிய போது” போடி நீயும் அவளுக்கு சப்போட்டா பேசறியா? காலங்கலிகாலம். ஆரயும் பேசற மாதர இல்ல. ம்… நாம் போறேன்” எனக்கூறி சென்ற பின்பே நிம்மதி வந்தது கங்கம்மாவிற்கு. இதை தூரத்திலிருந்த கவனித்த மகன் கண்ணன் ‘இதற்கு மேல் தன் தாயை இங்கே விட்டு வைத்திருக்கக்கூடாது’ என நினைத்து கட்டாயமாக வீட்டிற்கு கூட்டிச்சென்றான்.

கங்கம்மாவிற்கு இரவு தூக்கம் வர மறுத்தது. ‘அப்படியே ஒரு புருசனையும் பார்த்து கட்டிக்குவே….’ எனும் வார்த்தை நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்து மனதை ரணகளமாக்கியிருந்தது. முப்பது வருடங்களாக கட்டிக்காத்து வந்த துறவியைப்போன்ற நிலைக்கு இழுக்கு வந்தது போலிருக்க, உடனே எழுந்து போய் கலர் சேலையை கழட்டி வீசி விட்டு எப்போதும் கட்டும் வெள்ளை நிற சேலையை எடுத்து வந்து கட்டிய பின் கசப்பான வார்த்தைகள் மனதிலிருந்து கரைந்து போனதால் நிம்மதியாக உறக்கம் வந்தது.

பழக்கப்பட்டுப்போன சில சம்பிரதாயங்கள் உறக்கத்துக்கும் கூடத்தேவைப்படுகிறது. இந்த பூமியில் நம் விருப்பப்படி வாழ்வது மிகவும் கடினம் என்பது இன்று முதலாகப்புரிந்தது ரம்யாவிற்கு.

‘கலர் துணி காமத்தை வெளிப்படுத்தும், வெள்ளை நிறம் பரிசுத்தத்தையும், ஒழுக்கத்தையும் கொடுக்கும் என்பது சரியான கருத்தாக இருக்குமா? காமமில்லாத நிலை தான் ஒழுக்கமென்றால் இனப்பெருக்கம் எவ்வாறு மனித வாழ்வில் நிகழும்? உணவைப்போல் காமமும் உடலுக்குத்தேவையானது தானே…. அதைக்கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறைக்கு நாம் கட்டுப்பட்டு விட்டோம். வேறு கலரில் ஆடையணிவதால் முப்பது வருடங்களாக தன் பாட்டியின் உடலில் உறங்கிக்கிடந்த  உணர்வுகளில் மாற்றம் நிகழ்ந்து விடுமா என்ன?’ உறவுக்காரப்பெண் பாட்டியின் வயதைக்கூட ஆராயாமல் வார்த்தையை அள்ளி வீசியிருக்கக்கூடாது. பல கேள்விகள் மனதில் தோன்ற தீர யோசித்தாள் ரம்யா.

ஒருவருக்கு ஒருத்தி முறை என்பது, திருமணம் செய்து கொள்வது சமூக ஒழுங்குக்கான கோட்பாடு என்பதைப்புரிந்து தான் முப்பது வருடங்கள் கணவனை இழந்த பின் தன் உடலின் ஆசைகளை, விரும்பிய சேலையைக்கட்டும்  ஆசைகளைக்கூட முழுசாக கட்டுப்படுத்தி, சமூகக்கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளித்து வாழ்ந்த நிலையில்  தற்போது கட்டிய ஒரு கலர் சேலை அதை மொத்தமாக உடைத்து விடும் என மற்றவர்கள் நினைப்பது போல் கற்பனையிலும் நினைத்திருக்கமாட்டாள் தன் அப்பாவி பாட்டி என நினைத்து மனம் வெதும்பினாள். உறவுக்கார சம வயது, ஒரே நிலை கொண்ட விதவைப்பெண்ணின் வன்மமான பேச்சை ஏற்க முடியவில்லை, அதன் முழுத்தன்மையும் ரம்யாவால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. 

நன்கு குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்த பாட்டியின் உறக்கத்தை ஒரு தாயின் பார்வையால் ஒரு குழந்தையின் உறக்கத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தாள். கலர் என்பது வெண்மையையும் சேர்த்தது தானே…? மனம் வெண்மையாக இருப்பவர்களுக்கு ஆடை எந்தக்கலரில் கட்டினால் என்ன? மனம் அழுக்காக இருப்பவர்கள் வெள்ளை கட்டினால் தவறு செய்ய மாட்டார்களா….? உடையைப்பார்த்து ஒழுக்கத்தை முடிவு செய்யும் உலகில், உள்ளத்தைப்பார்ப்பது அரிது. தன் பாட்டியின் வெகுளித்தனமான பரிசுத்த உள்ளத்தைப்பற்றி தன்னைத்தவிர யாருக்கும் தெரிந்திருக்கவில்லையே…. என ரம்யா தனக்குள் நினைத்ததில் எழுந்த நியாயமான கேள்விக்கு நினைவுகளை மறந்து உறங்கிக்கொண்டிருக்கும் போது தன்னை அறியாமல் அவளது பாட்டியின் கண்களில் வெளிப்பட்ட கண்ணீரே பதிலானது.

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *