கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 4,434 
 
 

பாலம் நெருங்க நெருங்க இன்னொரு உலகத்தின் நுழைவது மாதிரி இருந்தது. இரண்டு ஓரத்திலும் நின்று பாலத்தின் கீழ் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டியின் சக்கரம் நகர நகர, ஆறு புரண்டு கொண்டிருந்தது தெரிந்தது.

வழக்கமாக ஆற்றுக்கு நடுவில் உறை இறக்கி, யாராவது இரண்டு பேர் வெளியில் மொண்டு குளித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு ரிப்பன் போல தண்ணீர் நெளிந்து கொண்டு கிடக்கும். தலை சிதைந்த பாம்புபோல அந்த இடத்திலேயே ஈரம் கிடந்து தத்தளிப்பது இவ்வளவு அகலமும் நீளமுமான பாலத்தில் இருந்து பார்க்க கஷ்டமாக இருக்கும். இன்னொரு பக்கம் பூராவும் சலவைத் துறை. ஆற்றின் நடுப்படுகையிலேயே துணி உலர்ந்து கொண்டிருக்கும். காற்றின் விசிறலில் துணிகளின் நீள அகலங்களில் அலை எழும்பிப் படபடக்கும் போது மடியிலிருந்து தடவி எடுத்துக் கொண்டது போல இருக்கும். யாராவது இதுதான் பாடல்பெற்ற அந்த ஆறு என்று சொன்னால் நம்ப முடியாது.

ஆனால் இன்று நம்பும்படியாக இருக்கிறது. அந்தப் பழைய பெயரைப் புதுப்பித்துக் கொண்டதுபோல கரையற்றுச் சீறிக்கொண்டிருந்தது. தன்னுடைய பெயரைத் தானே சொல்லிக் கொண்டு, நான்தான் நான்தான் என்று நிரூபிப்பதுபோல, புத்தம்புதிதாக நுரை தெறித்துக் கொண்டிருந்தது. வெள்ளம் அப்படி உரக்கக் கத்தக் கத்த, கத்தலின் எதிரொலி மீண்டும் வெள்ளத்தில் கனத்து வந்து விழுந்து, விழுந்த இடத்திலிருந்து நீர் சுழன்று சுழன்று நாலாபுறமும் தெறித்தது. செம்மண்ணும் செங்காவியுமாக நிறத்தைக் கரைத்துக்கொண்டு அப்படியே வானத்தோடு போய் அப்பிக் கொள்வதுபோல தண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. கருத்த மேகங்கள் வெள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்ததா அல்லது தண்ணீர் சுருண்டு மேலே ஏறிக் கொண்டிருந்ததா தெரியவில்லை.

“அம்மாவைக் கொண்டுவந்து காட்டுங்க “ப்பா” – தினகரி பின்னால் இருந்து கொண்டே சொன்னாள்.

“காலேஜூக்கு லீவ் போட்டிடுறியா” – நிஜமாகவே கேட்டேன்.

“பரீட்சை இல்லாவிட்டால் இங்கேயே நின்றுவிடலாம்” தினகரி சொல்லும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. இது போன்ற நேரத்தில் அலுவலகம் போகக் கூடாது. கல்லூரி போகக்கூடாது. சமைக்கக்கூடாது துவைக்கக் கூடாது. வெள்ளம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். வெள்ளம் மட்டும் தானா. மழை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். மழையும் பெய்யாமல் வெயிலும் அடிக்காமல் இருக்கிற நாட்களில் தட்டான்கள் பறப்பதை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். கடற்கரையில் அலை நனைத்துக் கொண்டு நிற்கவேண்டும்.

தம்பி கையை தினகரி பிடித்துக்கொள்ள தினகரி விரல்கள் அம்மா கையை கவ்வி இருக்க கவ்வின கையில் என்கை புதைத்துக்கொண்டு, மலையின் சரிவுகளில், சருகுகுளை மிதித்துக் கொண்டு நடந்து கொண்டே இருக்கவேண்டும். கல்தூண்கள் நிரம்பிய கோவில் பிரகாரங்களில் உட்கார்ந்திருக்க வேண்டும். நிலாச்சாப்பாடு சாப்பிட என்று மொட்டை மாடிக்குப் போய், அப்புறம் நிலாவைப் பார்க்காமல் உட்கார்ந்திருக்க வேண்டும். தம்ளர்கள், தண்ணீர்ச் செம்பு, சாப்பிட்ட தட்டுகள் போல வேறு சிலசில பாத்திரங்களாக மாறி அவரவர் நினைவில் வேர்விட்டு இருட்டில் முளைக்க வேண்டும். இப்படி நல்லதும் கெட்டதுமாய் எவ்வளவோ தோன்றுகிறது. ஆனால் அது எல்லாம் நடக்கக்கூடியதா என்ன. அலுவலகக் கதவும் பள்ளிக்கூடத் கதவும், சமையல் கட்டுக் கதவும் அகலமாகத் திறந்து கொண்டிருக்கையில் இதையெல்லாம் அவ்வப்போது இப்படி நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

“என்னைக் கொண்டுபோய்க் காலேஜில் விட்டுட்டு அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்து காண்பியுங்க அப்பா” தினகரி வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டேதான் சொல்லியிருக்கவேண்டும். எல்லோரும் வெள்ளத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பக்கத்தில் நிற்கிறவரை யாரும் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை. தனித்தனியாக வெள்ளம் ஒவ்வொருவரையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போய்விடும் போல. சில்லென்ற குளிருக்குச் சேலையைப் போர்த்திக் பல்லில் கடித்துக் கொண்டிருந்த முகத்தில் வெள்ளம் தளும்பிக் கொண்டிருந்தது. புத்தகப் பையுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பையனை சைக்கிள் காரியரில் வைத்துக் கொண்டு காலை ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர் முகத்தில் தளதளவென்று ஈரம் சிலுப்பி அலையடித்தது.

வடக்கு வளவுத் தாத்தா உன்னைத் தூக்கிட்டுப் போய் நம்ம ஊரிலே வெள்ளம் காண்பிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கா? – இன்றைக்கு மட்டுமல்ல. தினகரியை இதற்கு முன்பு எத்தனையோ தடவை கேட்டாயிற்று. ஒவ்வொரு தடவையும் சிரிக்க மட்டும் செய்திருக்கிறாள். பார்த்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம். பார்க்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு சிரிப்பு. அவள் ஒன்றரை வயதுக் கைப்பிள்ளையாக இருக்கும்போது பார்த்தது என்ன ஞாபகம் இருக்க முடியும்? ஆனால் அரசரடிப்பாலம் முங்க முங்க, பேட்டை ரோடு வரை தண்ணீர் வந்த அந்த வெள்ளம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தினகரியின் விவரிக்க முடியாத ஞாபகங்களின் மடிப்புகளில் கண்டிப்பாக அந்த வெள்ளம் எங்கேனும் ஈரமாக ஒளிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எப்போதாவது சொல்வாள். சொல்லாவிட்டாலும் ஒரு ஈரம் இன்னொரு ஈரத்தையும், ஒரு தீ இன்னொரு தீயையும் உடனடியாகத் தொட்டுவிடும்படியாக ஏதேனும் சங்கிலிகளை அவளுக்குள் வைத்திருக்கும்.

“அம்மாவைக் கூட்டிக் கொண்டாந்து காட்டுங்க “ப்பா” என்று சொல்வது கூட அப்படி ஒரு ஈரம் அல்லாமல் வேறு என்ன. காட்டணும் தான். காட்ட வேண்டும் கூட சதா வீட்டுவேலை என்று இருக்கிற பெண்களை இப்படிக் கொஞ்சநேரம் மழையிலும், பணியிலும், மலையடிவாரத்திலும், அருவிக் கரையிலும் நிறுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்

தினகரி அம்மா மட்டுமல்ல. எல்லோருடைய முகமும் அப்படி இருக்கும்போது கொள்கிற தோற்றமும் வேறு. குறுக்குத்துறை முன்னடித்துறையில் பித்தளைக் குடத்துடன் படியேறுகிற முகம், குடையும் வைத்துக்கொண்டு நனைந்தும் வந்துகொண்டிருந்த முகம், கட்டுமானம் ஆகிக்கொண்டிருக்கிற கட்டிடத்துக்குள்ளேயே தலையில் வைத்த துணிச்சுருளையும் பாண்டுச் சட்டியும், சிமெட்டிப் பாலுமாக நிற்கிற முகம், கரியும் கலர் சாக்பீஸ் கட்டியுமாக இரண்டு மணி நேரமாக நடுரோட்டில் வரைந்த படம் கொஞ்சம் கொஞ்சமாக மழையில் கரைவதையும், ஈயத்தகடு போல வீசப்பட்டிருந்த நாணயங்களின் மேல் மழைத் தண்ணீர் விழுவதையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டிருக்கிற, இடுப்பில் பிள்ளை வைத்திருக்கிற நைந்த முகம், ஆட்டோவிலிருந்து இறங்கி, வீட்டுக்குள் வருவதற்குள் நனைந்துவிட்ட சிரிப்பு முகம், மேலே ஒரு பாறை விளிம்பில் இருந்து, கீழே புரள்கிற கடலையே பார்த்துக் கொண்டிருக்கிற சிவப்புப் புடவை கட்டின கருகமணிப் பாசிமுகம். இப்படியெல்லாம், எல்லோரும் அழகாகத்தான் இருக்கிறார்கள். தினகரி அம்மாவும் அப்படித்தான் இருப்பாள். இப்போது மறுபடியும் வீட்டுக்குப்போய், அவளை இவ்வளவு தூரம் கூப்பிட்டுக் கொண்டுவந்து காண்பித்து, மறுபடியும் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அலுவலகம் போக முடியாது. நேரமாகிவிடும். ஏற்கனவே இன்று தாமதம். இன்னும் கொஞ்சம் நின்று பார்க்கலாம் என்று தோன்றுகிற நாட்களில் தான் இதைவிடச் சீக்கிரமாய் போகவேண்டும்படி ஏதாவது ஒரு நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது. ஏற்கனவே நிர்ணயித்து வைத்திருந்த வேலைகள் அலுவலகத்தில் இப்போது காத்திருக்கும்.

சாயந்திரம் கண்டிப்பாகக் கூப்பிட்டுக்கொண்டு வரவேண்டும். மறுபடியும் தினகரி, தினகரி அம்மா என்று இந்த இடத்தில் நிற்க வேண்டும். கங்கையும், யமுனையும் ருத்ரப் பிரயாகையும் திரிவேணி சங்கமும் இதுதான். பெயர் இழந்து, பெயர் அழிந்து, பெயர் புனைந்து ஓடுகிற மகாநதியின் ஏதாவது ஒரு கரையில் நிற்கவேண்டும் இதுதான் அந்த நதி. அந்தக் கரை.

யோசித்துக்கொண்டே ஓட்டும்போது, பாலம் பின்னால் போயிற்று. “ஹோ” என்கிற காவிச்சுழிப்பு எட்டுத்திசையிலும் கைபரப்பிக் கொண்டிருந்தது. பார்வையில் விழுந்தது ஒரு பகுதியின் ஏதோ ஒரு தெறிப்பு, ஏதோ ஒரு நுரை எனினும் என்கூடவே ஆறு வந்தது. இரண்டு சக்கரங்களுக்கு அடியில் வெள்ளம் கீறிப்பிளந்து வகிடு எடுத்து உறுமுவதுபோல இருந்தது. குனிந்தால் கையில் அள்ளிவிடுகிற அண்மையில் தண்ணீர்த் தகடு அலைந்தது

அன்றைக்கு முழுவதும் அலைச்சலாகத்தான் போயிற்று. அலுவலகத்தில் நுழைந்ததுதான் தெரியும். வேலை ஆளை உள்ளே இழுத்தது. அது இன்னொரு மாதிரி வெள்ளம். இன்னொரு மாதிரிக் கசம்.. வெறும் மணல்திட்டு மாதிரிக்கிடக்கிறதே சற்று உட்காரலாம் என்று நினைத்தால் திடீரென்று ஆளை முக்குகிறமாதிரி அடித்துப் புரண்டு கொண்டு வரும், வேலை இருக்கிறது என்று தயாராகி நின்றால், மருத மரத்தையும், பாசஞ்சர் ரயிலையும் பார்த்துக் கொண்டு நிற்கவைத்து, கரண்டையை நனைக்கிற அளவு நகர்ந்துகொண்டுபோகும்.

ஒன்று மாற்றி ஒரு சிக்கல், ஒரு சிக்கலை எடுப்பதற்குள் இன்னொரு முடிச்சின் இறுகல் என்று தொட்டுக் கொண்டேபோய், பழைய புள்ளி விபரங்கள், கணக்கெடுப்புக்கள், விவாதங்கள், தட்டச்சுக்கள், ஒப்புதல்கள், மீண்டும் விவாதங்கள், தொலைபேச்சுக்கள், மறு ஆலோசனைகள், கையெழுத்துக்கள், இடையில் தேநீர், மறுபடி தேநீர் என்ற இரவு பத்தாகி விட்டது. எப்போது இருட்டு விழுந்தது என்று தெரியவில்லை. இரண்டாவது “ஷிப்ட்” காவலர்கள் “பஞ்ச்” செய்துகொண்டிருந்தார்கள். எல்லா மேஜைகளிலும் ஃபைல்கள், மின்விளக்கு விசிறிக் சுழற்சி.

வண்டியை ஷெட்டிலிருந்து எடுக்கும்போது மழைபெய்து கொண்டுதான் இருந்தது. வாட்ச்மேன் குனிந்து பிளாஸ்டிக் குவளையில் பாலூற்றிக் கொண்டிருந்தார். பிறந்து இரண்டு நாள் இருக்குமா தெரியவில்லை. நாய்க்குட்டிகள் ஐந்தாறு முட்டிக் கொண்டு இருந்தன. ஒரு சமயம் எல்லாம் அழகாக இருப்பதுபோல இருந்தது. எல்லாம் சரியாக இருப்பதுபோல் இருந்தது. வாட்ச்மேனைத் தொந்தரவு செய்ய மனமில்லை. இறங்கிப் போய் கதவை திறந்து, மறுபடி சாத்தி வெளியேறுகையில் மழை மீண்டும் வலுக்க ஆரம்பித்திருந்தது. நிற்கத் தோன்றவில்லை நனைய நனைய மேலும் விரைவு கொள்கையில் நடமாட்டம் குறைவான பாதையின் சரிவுகளில் தண்ணீர் ஓட ஆரம்பித்திருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாய்ப் பெய்கிற மழையில் ஒரு குளிரின் கனத்த திரை இறங்கியிருந்தது.

வெள்ளம் இன்னும் அதிகரித்துவிட்டிருக்கும் என்று தோன்றியது.

இன்றைக்கு முடியவில்லை. நாளைக்குக் காலையாவது தினகரி அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டுப் போய்க்காட்ட வேண்டும். ஒரு வேலை தினகரியே இதற்குள் அம்மாவைக் கூட்டிக்கொண்டு போயிருப்பாளோ. தினகரியும் அம்மாவும் குடையில் போவது மாதிரி, ஒரு குடைக்குள் இரண்டு பேரும் ஒடுங்கிக் கொண்டு பாலத்தின் மேல் நிற்கிற மாதிரி, அவர்களைத் தவிர யாருமற்ற பாலத்தில், அடர்ந்து இறங்குகிற மழையில் காணாமல் போன, தென்னை அசைவுகளும், கரையோரத் தோப்புகளுமாக அவர்கள் வந்து கொண்டிருக்கிற மாதிரி….

வீடு அதற்குள் வந்துவிட்டிருந்தது. மின்சாரம் இல்லைபோல. எங்கும் இருட்டாக இருக்கையில், வண்டியின் முன்விளக்கு வெளிச்சம் கற்றையாக அலைந்து எங்கெங்கு எல்லாமோ ஈரத்தில் விழுந்தது. ஹார்ன் அடிக்காமலேயே நான் வந்துகொண்டுவிட்டதைத் தெரிந்து, கதவைத் திறக்கும் போதே….

“நனைஞ்சுக்கிட்டா வாரீங்க” – என்று சத்தம் வந்தது.

“துண்டை எடுத்துகிட்டு வாம்மா. அப்பா தலையை துவட்டிகிடட்டும்” என்று தினகரி பெயரைச் சொல்லி உத்தரவு போட்டது. பார்த்து வாங்க. இருட்டா இருக்கு என்று பத்திரப்படுத்தியது.

“பார்த்து வீட்டுக்குள்ளே வாங்க. ஆட்கள் இருக்கு” நான் வீட்டுக்குள் நுழையும்போது ஹாலின் மத்தியில் ஒரு அரிக்கேன் லைட் பொருத்திவைக்கப்பட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் யாரோ இரண்டு பேர் எழுந்திருந்தார்கள். வணக்கம் சொன்னார்கள். சுவரோரமாக ஒரு பெண் குழந்தை சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தது. அந்த மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது என்னைப் பார்த்ததும் எழுந்திருந்து நின்றவர்களின் காலடியில் பதுங்கியிருந்த இருட்டுக்குள் அந்தக் குழந்தை படுத்திருப்பது போல இருந்தது.

தலையை துவட்டுவதற்குத் துண்டை என் கையில் கொடுத்தவாறு சொல்ல ஆரம்பித்தாள்.

“பெரிய தெரு, நடுத்தெரு, வேம்படித்தெரு பூராவும் ஒரே வெள்ளக்காடாம். வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணியாம். தறிக்குழி எல்லாம் தெப்பத்திலே நிற்குதாம். பாவு மட்டத்துக்கு முங்கிப்போச்சாம். நெசவு செஞ்சது பாதி நின்னது பாதியிண்ணு அப்படி அப்படியே விட்டுவிட்டு, எல்லா ஜனமும் தெருவுல நிக்கிதாம். பத்து அறுபது வருஷத்துல இவங்க கண்காண இப்படி ஒரு கஷ்டம் வந்தது இல்லையாம்.” இதை இவள் சொல்லும்போதே இருட்டுக்குள் நின்றவர்கள் திடீரென்று பெருங்குரலில் அழ ஆரம்பித்தார்கள். முக அடையாளமே தெரியாமல் நிற்கிற அவர்களின் குரல் மட்டும் விக்கித்து ஒரு கூரான ஆயுதம்போல நெஞ்சில் செருகியது. “நாங்க இனிமே என்னம்மா ஐயா எந்திரிக்க போறோம்” என்று வாய்விட்டு அதே குரலில், நிர்ணயிக்க முடியாத வயது நடுங்கியது. எனக்கு அவர்கள் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

“தெரிஞ்சவங்களோ, தெரியாதவங்களோ, நம்மளால் வேறு என்ன பண்ணமுடியப்போகுது. அந்தப் பச்சைப் பிள்ளையாவது படுத்துகிடட்டும்னு நான்தான் இவங்களை கூட்டியாந்தேன். பள்ளிக்கூடம் ரெம்பிக் கிடக்கு. கல்யாண மண்டபம் ரெம்பிக் கிடக்கு. நம்ம வீடும் ரெண்டு நாளைக்கு ரெம்பிக் கிடக்கட்டுமே”

இதை சொல்லும் போது அவள் தினகரியைத் தன்னோடு அனைத்துக் கொண்டு நின்றாள். கை தினகரியின் தலையை வருடிக் கொண்டிருந்தது. இன்னும் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஹரிக்கேன் லைட் வெளிச்சத்தில் அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. வயிறு இறங்கி ஏறியது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

வெள்ளத்தைப் பாலத்தின் அடியில்தான் பார்க்கவேண்டுமா என்ன?..

நன்றி: நடுகை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *