நான் ஒரு வழியைத் தேடி நடந்துகொண்டிருக்கிறேன். வெளியே போகும் வழி.
நடையைத் தொடங்கி வெகு நேரமாயிற்று. நான் தளர்ந்திருக்கிறேன். உடம்பு முழுவதும் வலி. கால்கள் மிகவும் கடுக்கின்றன. கைகள் வாழைநார்கள் போலவாயின. சதையும் எலும்புமச்சையும் வற்றிப்போயின. எலும்புகள் மெலிந்து உலர்ந்திருக்கின்றன. எந்த நிமிஷமும் அவை ஒடிந்து போகலாம். இனி, எனக்கு இந் நடை இயலாது.
வெளியேபோனால் விடுதலை கிடைக்கும். வெளியே என்னவெல்லாம் இருக்கின்றனவென்று எனக்குத் தெரியாது. ஆனாலும் வெளியே விடுதலை கிடைக்காமல் இருக்காது. தாடிக்காரக் கூனக்கிழவன் சொல்லித் தந்தான் வெளியே நித்தியமான சந்தோஷம் உண்டென்று; அங்கே அடைவது மட்டுமே இந் நடையின் இலட்சியம்; அதனால் அங்கே போகும் வழியைக் கண்டு பிடிப்பவர்கள் அதிருஷ்டசாலிகள் என்று என்னவோ? நான் அவனுடைய வார்த்தைகளை நம்புவதில்லை. நித்தியமான இன்பம் என்ற ஒன்றிற்காக நான் காத்திருக்கவில்லை. ஆனாலும் ஒன்று நிச்சயம். வெளியே மகிழ்ச்சி அதிகமாகும். காரணம் என்ன வென்றால் இங்கே கஷடம் அவ்வளவு கடினமானது. இதைவிடத் தேவலை வேறு எந்த இடமும். அதனால்தான் நான் வெளியே போகும் வழியை விசாரிக்கிறேன்.
இதொரு பெரிய அரண்மனை. இத்தனை பெரியதென்று எனக்குத் தெரியாமலிருந்தது. எவ்வளவு என்று இப்போதும் தெரியாது. இது வளர்கிறதோ? நடக்க நடக்கப் பரவலான வெளிச்சமுள்ள, நீண்ட வராந்தாக்கள் முன்னால் வளர்ந்து வளர்ந்து போகின்றன. வளைந்தும் நெளிந்தும் வளர்கிறது. கிளைகளாக விரிகிறது. முடிவதில்லை.
வராந்தாக்களின் ஓரத்தில், கனத்த கருங்கற் சுவர்கள் கொண்ட சிறிய அறைகளிலிருந்து குரூரமான முகங்கள் பல்லிளிக்கின்றன. குஷ்டம் பிடித்த முகங்கள். கண்களில் தீ பறக்கிறது. நுனிமேல் நோக்கி மலர்ந்த மூக்குகள். வெடித்து கீறிய உதடுகள். கன்னங்களிலும் நெற்றிகளிலும் பருக்கள். பொள்ளிய அப்பளம் போல இரணங்களுள்ள விரல்கள். நுனி தடித்த விரல்கள் தாவிப் பிடிக்க நீண்டு வரும். ஒதுங்கித் தூர நடக்கவேண்டும். ஆனால் எப்போதும் முடியாது. பிடிபட்டுவிட்டால் குஷ்டம் பீடிக்கும்.
அங்கஹீனமடைந்த குஷ்டரோகிகளிடம் தின்பண்டங்களும், தங்கமும், பணமும் உண்டு. அவர்களுடைய அறைகளின் பின்பக்க சிவப்பு மஸ்லின் திரைச் சீலைகளுக்குப் பின்புறம் நிர்வாணமான ஸ்திரீகள் உளர். கருத்த, ஊடுருவித் துளைக்கும் கண்கள். மறக்கடிக்கும் லாகிரிப் பொருட்கள். கட்டிப்புணர நீளும் கொழுத்த அவயவங்கள். ஆலிங்கனத்தில் ஈடுபட்டு முடியும்போது, அதரங்களின் வீக்கம் உறிஞ்சிக் குடித்து முடியும்போது நீங்கள் நீண்டதொரு மயக்கத்தில் விழுகிறீர்கள். மயக்கம் தெளியும்போது மேலே புண்.
என் உடம்பில் புண் இருக்கிறதோ? வெப்பப்புண்? குஷ்டம், சே இருக்காது. இல்லை. இது புண்ணல்ல, மூட்டைப்பூச்சி கடித்ததாயிருக்கும். இல்லாவிட்டால் எறும்பு.
குஷ்டம் பிடித்த இந்த இடைவழிகள் முடிவதில்லை. தளர்ந்த தலையும், தளர்ந்த உடலும், தளர்ந்த கால்களுமான நான் என்று முதல் நடக்கிறேன்?
என்று முதல்?
என்று நான் இங்கே வந்தேன்? எனக்கு நினைவில்லை. ரொம்பக் காலம் ஆகியிருக்கிறது.
வந்தது தனியாக. உற்றவர் யாருமில்லாமல். புட்டுக் குழலிலிருந்து விழுவது போலவே நெம்பிப் பிதுங்கித்தான் நான் இக் கட்டடத்தில் வந்து விழுந்தேன். சிறியதோர் துவாரம் வழியாக. வளையினுள்ளிருந்து எட்டிப் பார்க்கும் எலிக்குஞ்சைப்போல நான் தலை நீட்டிப் பார்த்தேன். விழித்த கண்களுடன் மிரண்டு எதையோ தேடினேன். எதை நான் தேடினேன்? எதை இன்னும் தேடுகிறேன்? எனக்குத் தெரியவில்லை. நான் இங்கே வந்து விழுந்தபோது எனக்குப் பின்னால் வாசல் அடைத்துவிட்டது. இனிமேல் அக் கதவு எனக்காகத் திறக்கப்படப் போவதில்லை. திரும்பி அங்கே போக எனக்கு ஆசையுமில்லை, காரணம் என்னவென்றால் அவ்விடம் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாது. இக் கட்டடத்துள் வந்தடைந்தபோதுதான் எனக்குப் பார்வை உண்டாயிற்று. அப்படியே, ஏதாவது மாயா சக்தியாலோ அல்லது மனப் புண்ணாலேயோ எனது ஞாபக சக்தி போய்விட்டதோ? அப்படியானால் நான் விட்டு வந்த இடம் எனது நீண்ட, நித்யமான மறதியின் இருளில் ஆழ்ந்து கிடக்கிறது. எனக்கு அதை நினைவுகூர முடியவில்லை.
சில சமயம் மயக்கத்தில் ஈரமும் வெப்பமும் மென்மையுமான ஒரு உறையில் நானொரு தொட்டிலில் கிடப்பதுபோலப் படுத்திருப்பதாகக் கனவு காண்பதுண்டு. அதுவாயிருக்குமோ ஒரு வேளை நான் விட்டு வந்த ஜன்ம பூமி? அங்கேயிருந்துதானே மிருதுவான ஒரு வாசல் வழியாக நான் இந்த ஆபத்து மிக்க வளைவிற்குள் நெட்டித் தள்ளப் பட்டேன்?
நான் இங்கே வந்து விழுந்தபோது சுற்றிலும் நின்ற முகங்கள் பல்லைக் காட்டிச் சிரித்தன. அவர்கள் பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடினார்கள். என் வரவைக் கொண்டாடினார்கள். எனக்கு அவர்களிடம் பிரியம் உண்டாயிற்று. பருவும் படையும் பீடித்த அவர்கள் உடம்பில் நான் அழகைக் கண்டேன். எனக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
அவர்கள் எனக்கு அவர்களுடைய மொழியைக் கற்றுத் தந்தார்கள். நடக்கவும், ஓடவும், குதிக்கவும் சொல்லிக்கொடுத்தார்கள். பல விஷயங்களும் கற்றுத் தந்ததற்குப் பின்னால் ஒரு உத்தேசம் அவர்களுக்கு இருந்ததென்பது எனக்குப் பிற்பாடே புரிந்தது. அவர்களது சிரிப்புக்குப் பின்னால் என்னுடைய இரத்தம் வேண்டி தாகம் இருந்தது.
இவர்களுக்கிடையில் நான் நடையைத் தொடங்கினேன். இருள் மூடிய பாதைகள் வழியாக. இவர்களில் யாரோ என் பாதைகளில் கல்லையும் முள்ளையும் தூவினார்கள். என்னை விழக்க, கண்ணிகள் விரித்து வைத்தனர். நான் பார்த்துப் பார்த்து நடந்தேன். சோர்வுற்றபோது நான் காலியான அறைகளைக் கண்டுபிடித்துப் படுத்து மயங்கினேன். அப்போதுதான் கனவுகள் என்னைத் தேடி வந்தன. கனவில் நான் முகத்தில் பருக்கள் இல்லாத மனிதர்களைக் கண்டேன். அழகு, விரூபம் இவற்றிற்கிடையிலுள்ள வேறுபாடு எனக்கு அப்படித்தான் புரிந்தது.
இக் கட்டடத்தை யார் கட்டினார்கள் என்பது எனக்குத் தெரியாது. மிகப் பழையது. ஆனால் என்றும் வளர்வதால் பழமை தெரியவில்லை. புது அறைகள், புதிய அலங்காரங்கள். இது மிகவும் பழமையானதும் மிகவும் புதியதுமாகும்.
கொஞ்சம் விசித்திரமான ஜீவன்களே அங்கே வாழ்கிறார்கள். அவர்களெல்லாம் மறைந்து வளர்கிறார்கள். எங்கேயிருந்து இங்கு வந்து சேர்ந்தார்கள் என்று கேட்டால் தெரியாது. எங்கே போகிறார்களென்றும் தெரியாது. பலரும் இருப்பார்கள் என்னைப்போல வெளியே போகத் துடிப்பவர்கள். சிலர் முயற்சித்துச் சோர்ந்தார்கள். இனி இங்கேதான் கடைசிவரை என்று தீர்மானித்திருக்கிறார்கள் அவர்கள். அவர்களுக்கெல்லாம் தலையிலும் உதட்டிலும் சிரங்கு பிடித்திருக்கிறது. ஒருநாளும் உலராத சொறி.
சில பேர் வழிகாட்டிகள்.
அவர்களில் ஒருவனே கூனன்.அவனுகுத் தாடி உண்டு.கழுத்தில் ஒரு ஜபமாலை.இடையில் முத்திரை குத்திய மேலங்கி.சுகந்த தூபங்கள் புகைத்துக்கொன்டு இடைவழியின் ஓரத்தில் ஒரு மறைவில் அவன் உங்களுக்காகக் காத்திருக்கிறான். தடித்த நாக்கை வெளியே தொங்க விட்டு, தங்கம் பூசிய பற்களைக் காட்டி, இறைச்சியைக் கண்ட நாயைப் போலச் சிரித்துக்கொண்டே அவன் என்னை ஏற்றுக் கொண்டான். அவனுடைய முகப்புண் தாடி மயிர்களில் மறைந்திருந்தது.அதனால் அவன் கூப்பிட்டபோது நான் பயப்படாமல் போனேன்.பருக்களி லிருந்து சிந்தும் துர்க்கந்தத்தை அவன் சாம்பிராணிப் புகையில் ஒளித்து வைத்திருந்தான்.அவன் என்னை “மகனே” என்றழைத்தான். உட்காரச் சொன்னான்.நான் உட்கார்ந்ததும் அவன் பேசத் தொடங்கினான்.
“நீ நடந்து தளர்ந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்.உனக்குச் சோர்வை அகற்ற வேண்டும் இல்லையா?”
“வேண்டாம்.எனக்கு இங்கேயிருந்து போகவேண்டும்.” நான் குறையை உணர்த்தினேன்.
“ஆமாம்.அதுதான் மேலான லட்சியம்.இங்கிருந்து போக வேண்டும். இதற்கு வெளியே நிலையான மகிழ்ச்சியுண்டு.அங்கேபோய்ச் சேரவேண்டும்.ஆனால் உன் நேரம் வரவில்லை.நேரம் ஆவது வரை நீ நடக்க வேண்டும்.நேராக நட. உனக்கு வெளியே செல்லும் வழியை நான் காட்டுகிறேன்.ஆனால் நீதான் அதை நடந்து தீர்க்க வேண்டும்.இந்தா,ஜபமாலையைக் கழுத்தில் போட்டுக்கொள். தளர்ச்சியடையும்போது இம் மாலையின் ஜபம் சொல்.என்னை நினைத்துக்கொள். சோர்வு நீங்கும். மீண்டும் நட.”
கழுத்தில் அவன் போட்ட மாலையும் உதட்டில் அவன் கற்றுத் தந்த மந்திரமுமாக நான் வெளியே போகிறேன்.
நடந்து சோர்வடைந்தபோது நான் அவனது மந்திரத்தைச் சொன்னேன். என்ன அற்புதம், அவன் காட்சியளித்தான். ஆனால் கருப்பு மேலங்கியும் தாடியுமாக அல்ல.தடித்து உருண்ட ஒரு உருவத்தில். அவனுடைய வயிறு மிகவும் வீங்கியிருக்கிறது. தலை மொட்டையடித்திருக்கிறது. அவனுக்குத் தும்பிக்கை இருக்கிறது.சுகந்த திரவியங்களின் மணத்தில் அவன் நுர்நாற்றங்களை மறைத்து வைத்திருந்தான். தும்பிக்கைக்கு அடியில் இரணங்களை நான் பார்த்தேன்.குரலிலிருந்துதான் நான் அவனை அடையாளம் கண்டுகொண்டேன். நடக்கச் சொல்லித்தான் மறுபடியும் உபதேசம்.வெளியே செல்லும் வழி தெரியும் வரை நடக்கும்படி. கூனனின் வாரத்தைகளை நம்பவில்லை. நம்புவதற்கு வேறெதுவும் இல்லாததினால்தான் நான் நடந்ததும், நடப்பதும்.
குஷ்டரோகிகளின் வெறிமூண்ட கண்களின் முன்பாக நான் ஊன்றி ஊன்றி நடந்தேன். என் கால்கள் தேய்ந்து தேய்ந்து சிறியவை ஆவதாக எனக்குத் தோன்றியது. ஆனாலும் வழி முடிவில்லாமல் நீண்டது.
மறுபடியும் சோர்வுற்றபோது நான் திரும்பவும் படுத்தேன். மயங்கிய போது கனவுகள் என்னைத் தேடி வந்தன. என் மகிழ்ச்சிகள் எனது கனவுகள் மட்டுமேயல்லவா? வழவழப்பும், ஈரமும், சிறு வெம்மையும், மென்மையும் கொண்ட உறையில் நான் கிடக்கின்றேன். என் சொந்த இடத்தில். அந்த ஜன்ம பூமிக்குத் திரும்பிப்போக என்னால் முடியுமானால்! பிறகும் கனவுகள் வந்தன. கனவுகளில் குஷ்டமில்லாத மனிதர்களும்.
விழிப்பு வந்தபோது நான் கனவுகண்டுகொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. கனவில் மனிதரைப் போன்ற ஒரு உருவம் என்னை எழுப்பிற்று. முல்லைப்பூவின் மணமும், கருங்குவளைப் பூவின் அழகும், உழுது தள்ளிய புதுமண்ணின் வெம்மையும் கொண்ட ஒரு பெண். அவள சிரித்தபோது என் சோர்வு நீங்கியது. அவளுடைய சப்தத்தில் என் பீதிகள் உலைந்து போயின. அவளுடைய தழுவலில் நான் என்னையே மறந்தேன்.
அவள் சொன்னாள்: “நான் உனக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.”
நான் அறியாமலேயே பதில் சொன்னேன்! “நான் உன்னைத் தேடி நடந்து கொண்டிருந்தேன்.”
நான் கூறியது பொய்யல்லவா? நான் தேடி நடந்தது வெளியே போகும் வழியையல்லவா? ஆனால் நான் அப்படித்தான் சொன்னேன். அவள் சந்தோஷமடைந்தாள். நானும் சந்தோஷமடைந்தேன்.
அவள் சொன்னாள்: “நான் உனக்காக மணவறை தயாராக்கியிருக்கிறேன். பூ வேலைப்பாடு செய்த தலையணைகளும், நறுமணம் பூசிய வெண்விரிப்புகளும்
தயார் செய்திருக்கிறேன்.”
“எங்கே?” நான் கேட்டேன், நான் தொடர்ந்தேன்: “எங்கே? என்னை அங்கே அழைத்துப் போ. அந்த இன்பத்தை விசாரித்துக் கொண்டுதான் நான் நடந்தேன்.”
நான் அவள் கையைப் பிடித்தேன்.
யாரோ மணியடித்தார்கள்.
யாரோ எங்கள்மேல் மலர் தூவினார்கள்.
யாரோ சொன்னார்கள்: “நீங்கள் இணைபிரியாமல் இருங்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். அன்பில் ஒன்றாகுங்கள்.”
நான் அவளுடைய கைப் பிடித்து மணவறைக்குள் நுழைகையிலும் அவ்வொலிகள் தொடர்ந்துகொண்டிருந்தன. சுகந்தம் நிறைந்த அறையின் மங்கிய வெளிச்சத்தில் நாங்கள் பிரவேசித்ததும் பின்னால் வாசல் அடைத்தது. சப்தங்களெல்லாம் மாய்ந்தன. வேறு உலகம் போன்ற மணவறையின் மணத்திற்குள், நிசப்தத்திற்குள் கண நேரத்திற்குப்பின் புனிதமான ஒரு ராகத்தின் மெல்லிய அலைகள் எங்கிருந்தோ நுழைந்து வந்தன. மணம் பூசின விரிப்பு, சந்தனம் மணக்கும் தலையணைகள் படுக்கையில் அவளது நிர்வாணத்தின் லாகிரி.
“இதுதான் நான் தேடி நடந்த வாசல். இதுதான் என் சொர்க்கம்.” நான் அவளுடைய காதில் ஜபித்தேன்.
தசையின் வெம்மைக்கிடையில் அவள் கொஞ்சி மொழிந்தாள்: “என்னை ஒருபோதும் விட்டுப் பிரிய மாட்டீர்களே.”
“ஒருபோதும் மாட்டேன்.”
நான் அவளுள் பிரவேசிக்க முயற்சித்தேன். அவளுள் என்னை, என் பயங்களை, என் துக்கங்களை மறைத்து வைக்க விரும்பினேன். அதே வெறியுடன் அவள் என்னுடைய பாகமாக ஆகவும் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
காலம் தெய்வீகமான ஒரு ராகமாகிக் கழிந்தது. வாயில் போதையேற்றும் லாகிரி வஸ்து. ராகமும் போதையும். இருள் வழியாக, ஈரம் வழியாக, வெப்பம் வழியாக, போதை கூடியது.
என் நாவில், மார்பில், இதயத்தில்,உணவுக்குழாயில், நரம்புகளில் எல்லாம் அவள் நுழைந்து, கிசுகிசு மூட்டி இழைந்து புகுந்தாள்.
நான் கூப்பிட்டேன்: “என் கண்ணே!”
அவளும் கூப்பிட்டாள்: “என் கண்ணே!”
காலமென்ற ராகத்தின் சுருதி தவறிய போதாக இருக்கவேண்டும். நான் மயங்கி விழுந்தேன். கனவற்ற முதல் மயக்கம்..
மயக்கம் தெளிந்தபோது ஒளி உண்டாகியிருந்தது.
மார்பில் சில்லென்ற ஒரு பெரும்பாம்பு இழைவதுபோலத் தோன்ற நான் பார்த்தேன். அவளுடைய கை. வெட்டிய சேனைக்கிழங்கின் நிறங் கொண்ட ஒரு கை. நிறைய சிவந்த தடிப்புக்கள், கொப்புளங்கள். நான் அரண்டு புரண்டேன். அவள் என்னைக் கட்டியணைத்திருக்கிறாள். அவளுடைய உடம்பு முழுதும் தடிப்புக்கள்; புறப்பாடுகள்; இரணங்கள்.
நான் ஓலமிட முயன்றேன். என் ஒலி வெளியே வரவில்லை. நான் அவளைக் குலுக்கியழைத்தேன். அவள் விழிக்கவில்லை. அவளுடைய சில்லிட்ட கையை நான் பலமாக என்னிடமிருந்து விலக்கினேன். குளிர்ந்து மரத்துக்கிடந்த அவளைப் பார்த்தபோது, கடந்துபோன லாகிரியின் நிமிடங்களை நினைவுகூர்ந்து நான் நடுங்கினேன்.
அடைக்கப்பட்டிருந்த வாயிலை மிதித்து உடைத்து நான் வெளியே வந்தேன். நடுக்கமுற்றவனாக, தளர்வுற்றவனாக நான் ஓடினேன். அயர்ச்சியுற்றபோது நான் படுத்தேன். மயக்கம் பீடித்தபோது அந்தச் சில்லிட்ட, சிவந்த, மரத்துப்போன கை என்னைப் பிடித்துக் குலுக்கி எழுப்பியது.
நான் மீண்டும் ஓடினேன். தளர்வுற்றபோதும் நான் படுக்கவில்லை. படுத்தால் கடைசியாகக் கண்ட அவளது உருவம் வந்து என்னைக் கூப் பிட்டு எழுப்புமென்று நான் பயந்தேன். இப்போதும் பயப்படுகிறேன். நான் படுக்க மாட்டேன். உறங்கமாட்டேன்.
தளர்ந்த கால்களும், தளர்ந்த தலையும், தளர்ந்த மனமுமாக நான் இப்படி நடக்க மட்டுமே செய்வேன்.
குஷ்டரோகிகளிடமிருந்து நீங்கி, கூனன்மார்களின் பார்வையில் படாமல். இருண்ட வராண்டாக்கள் வழியான இந் நடை என்று முடியுமோ, என்னவோ? வெளியே செல்லும் வழி, என்று எனக்குத் திறந்து கிடைக்குமோ?
– காக்க நாடன்
– சமீபத்திய மலையாளச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1980, தொகுப்பு: எம்.முகுந்தன், மொழிபெயர்ப்பு: ம.இராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.
நன்றி: https://www.projectmadurai.org/