வெளிநாட்டு வேலைக்காரி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 7,415 
 

அறையில் படுத்திருந்த தினகருக்கு உள்ளமெல்லாம் தித்திப்பு. நான்கு வருட இடைவெளிக்குப் பின் முதலிரவு !

வனிதா இன்று மதியம்தான் வீடு வந்து சேர்ந்தாள். எட்டு, பத்து வயது ராமு, கோமு குழந்தைகளுடன் கார் எடுத்துக் கொண்டு சென்று சென்னை விமான நிலையத்திலிருந்து அவளை அழைத்து வந்தான். அவளுக்குத் துபாயில் வேளை.

கை நிறைய பணம். குழந்தைகளுக்கு விதவிதமான துணிமணிகள், விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள். கணவனுக்கும் பேண்ட், சட்டைகள். துணி வகையறாக்கள் அள்ளி வந்திருக்கிறாள்.

நாலு வருட ஏக்கம்… மணி பத்துக்கு மேலாகியும் பிள்ளைகள் தூக்கம் பிடிக்காமல் அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அடுத்த அறையில் படுத்திருக்கிறார்கள். அவர்கள் தூங்கிய பிறகு இவள் கணவனிடம் வர வேண்டும். அவர்கள் எப்போது தூங்குவார்களோ தெரியாது. ஆனாலும் அவர்களின் தொணதொணப்பு பேச்சு முடிந்து விட்டது. சீக்கிரம் தூங்கவேண்டும். தூக்கம் வந்துவிடும்.

பத்து சதுரத்திற்கு வீடு. கட்டில், மெத்தை, தொலைக்காட்சிப் பெட்டி, தொலைபேசி….. இத்தியாதி என்று பணக்காரத்தனமான வாழ்க்கை. தினகர் நினைத்துக் கூட பார்க்காத ஒன்று. அவன் செய்த விவசாய கூலி வேலையில் இதெல்லாம் சத்தியமாய் முடியாது. எல்லாம் உருவாக்கியது வனிதா.

தினகர், வனிதா பெரிய படிப்பாளிகள் இல்லை. பத்து, எட்டாம் வகுப்புகள். உறவு முறை காலாகாலத்தில் முடிச்சுப் போட….கட்டிய மனைவிக்குக் கஞ்சி ஊற்றவேண்டும்ன்கிற கட்டாயத்தில் விவசாய கூலியாக வேலையைத் தொடங்கி தினகர் கோமுவைப் பெற்று குடும்பத்தைக் காப்பாற்றினான். வனிதா குடும்பப் பெண்ணாக இருந்தாள். சின்னவனுக்கு நாலு வயதாகும்போதான் அதிர்ஷ்டம் அவள் வீடு தேடி வந்தது,

பக்கத்து ஊர் பரமு…. தினகருடன் படித்தவன் பால்ய நண்பன் துபாயிலிருந்து வந்தான். நண்பனைக் பார்க்க வந்த நண்பனுக்கு…. அவன் அடிமட்ட கூலி வேலை செய்வதும் இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதும் புரிந்தது. இருவரும் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது….

‘‘தினகர் ஒரு நல்ல வாய்ப்பிருக்கு பயயன்படுத்திக்கிறீயா ?‘‘ பரமு கேட்டான்.

‘‘என்ன ?‘‘ இவன் ஏறிட்டான்.

‘‘துபாய்ல எனக்குத் தெரிஞ்ச பெரிய பணக்கார குடும்பம். ரொம்ப நல்லவங்க. வீட்டு வேலை, குழந்தைகளைப் பராமரிக்க ஒரு நல்ல பெண்ணாய் வேணும்ன்னு என்கிட்ட கேட்டாங்க. இந்தியாவுல அப்படிப்பட்ட பெண்ணாய் இருந்தா சொல்லு விசா குடுத்து அழைச்சிக்கிறோம். நல்ல சம்பளம் தர்றோம்ன்னு சொன்னாங்க. எனக்கு உன் மனைவி அந்த வீட்டுக்குச் சரியா இருப்பாங்கன்னு தோணுது. என்ன சொல்றே அனுப்பலாமா ?….ஆனா எனக்கு உன் மனைவிக்குத் துணையாய் இருக்க முடியாது. எனக்கு அந்த வீட்டைத் தாண்டி… தொலை தூரத்துல வேலை. இவுங்களைக் கொண்டு விட்டதும் என் வேலை முடிஞ்சுது.’’ சொன்னான்.

தினகருக்கு விருப்பமில்லை.

‘‘பார்க்கலாம்.‘‘ பட்டும் படாமல் தலையாட்டினான்.

‘‘என்ன தலையாட்டுறே ? சரியாச் சொல். விருப்பமா இல்லையா ?’’ கறாராய்க் கேட்டான்.

‘‘மனைவியை வெளிநாட்டுல சம்பாதிக்க விட்டுட்டு நாம எப்படி இங்கே நிம்மதியாய் இருக்கிறது, கஷ்டப்படுறது ?’’ என்றான்.

‘‘அது ஒன்னும் பெரிய விசயம் இல்லே. மனசு இருந்தால் மார்க்கமுண்டு. நல்லா யோசனைப் பண்ணி சொல்லு. சரின்னா….நான் கிளம்பறதுக்குள்ளே எல்லா ஏற்பாடும் செய்து.. கையோட அழைச்சுப் போறேன்.’’ சொன்னான்.

அதற்கப்புறம் அவர்கள் இதைப் பற்றிப் பேசாமல் வேறு பேசி சிறிது நேரத்தில் கலைந்தார்கள்.

தினகர்.. வீட்டை விட்டு அவனோடு சிறிது தூரம் வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டு திரும்பினான்.

‘‘என்ன யோசிச்சீங்க ?’’ காத்திருந்த வனிதா…ஆள் உள்ளே நுழைந்ததும் கேட்டாள்.

‘‘உன்னை வெளிநாட்டுல விட்டுட்டு நாங்க இங்கே குப்பைக் கொட்டுறதாவது ? அதெல்லாம் நடக்காத விசயம்.’’ இவன் நண்பனிடம் சொன்ன பதிலையே திரும்ப மனைவியிடம் சொன்னான்.

‘‘ஏங்க நடக்காது ? இதே வேலைதான். எங்க ஊர்ல என் தோழி ஒருத்தி போயிருக்கா. ரெண்டு வருசத்துல குடும்பம் மாடி வீடு கட்டி வசதியாயிடுச்சு.’’ என்றாள்.

தினகர் மௌனமாக இருந்தான்.

‘‘நீங்க மனசு வைச்சா நாமும் அப்படி ஆகிடலாம் தோணுது. எனக்கு என்னமோ இந்த வாய்ப்பை நழுவ விட்டால் வலிய வர்ற லட்சுமிய விரட்டியடிக்கிறதாப் படுது.’’ தன் மனதில் பட்டதைச் சொன்னாள்.

அவளுக்கும் குடும்பப் பொறுப்பு. மற்றவர்கள் போல் வசதியாக வாழ ஆசை.!

‘சம்பந்தப்பட்டவளே சம்மதிக்கிறாள், விருப்பப்படுகிறாள். ஆளை அனுப்பி விட்டுவிட்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு கொஞ்சம் கஷ்டப்பட்டால் நாமும் ஏன் அப்படி ஆகக்கூடாது ?’ தினகருக்குள்ளும் இப்படி மனசு புரண்டு நினைத்தது.

கொஞ்சம் தீவிர யோசனை… கஷ்ட, நஷ்டங்களை ஆராய்ந்த பிறகு, ‘‘சரி ‘‘ சம்மதித்தான்.

‘‘ஏற்பாடு பண்ணுங்க.’’ வனிதா முகத்தில் சட்டென்று சந்தோசக்களை, மலர்ச்சி. சொன்னாள்.

தினகர் நண்பனிடம் விசயத்தைச் சொன்னான். அதோடு பணம் புரட்ட முடியாத கஷ்டத்தையும் சொன்னான்.

‘‘அந்த கவலையை விடு நான் பார்த்துக்கிறேன்!’’ தைரியம் சொன்ன பரமு உடனே தொலைபேசியில் துபாய்க்குத் தொடர்பு கொண்டான்.

விசாவும் பணமும் அனுப்பினால் தான் கையோடு அழைத்து வருவதாக சேதி சொன்னான். சரியென்று அங்கேயிருந்து பச்சைக் கொடி அசைந்தது. திண்ணையில் சமைந்த பெண்ணிற்குத் திடுக்கென்று திருமணம.; முடிந்ததைப் போல வனிதா ஒரே மாதத்தில் பறந்து விட்டாள்.

முதல் மாதம் பத்தாயிரம் அனுப்பினாள். அடுத்த மாதம் இருபது. அடுத்து ஆறு மாதம் கழித்து பிளாட் வாங்கச் சொல்லி ஒரு சில லட்சங்கள். அடுத்து வீடு கட்டச் சொல்லித் தேவையான பணம். இரண்டே வருடங்களில் எந்த வித கஷ்டமுமில்லாமல் கொஞ்சம் சொத்து எல்லா வசதிகளோடு குடும்பம் உயர்ந்து விட்டது, இதோ திரும்பி வந்திருக்கிறாள்.

தினகர் நினைவு கலைய…. வனிதா மெல்ல அறைக்குள் நுழைந்து கதவைச் சத்தம் போடாமல் சாத்தி இவன் அருகில் வந்து கட்டிலில் அமர்ந்தாள். சுவர்க் கடிகாரத்தில் மணி 12.30.
தினகர் ஆசை, ஆவலாய் மனைவியை அணைத்தான்.

வனிதா முகத்தில் ஆர்வம், விருப்பமில்லை. கணவன் கைக்கு எட்டாமல் கொஞ்சம் விலகி அமர்ந்தாள்.

‘பயணக்களைப்போ….!?’

‘‘என்ன வனிதா ?’’ தினகர் தாபமாய் ஏறிட்டான்.

‘‘நமக்குள்ளே கொஞ்சம் பேசி தீர்க்கவேண்டிய விசயமிருக்கு.’’

‘‘சொல்லு ?’’

‘‘நீங்க அதிர்ச்சி அடையக் கூடாது ?’’

‘‘நான் எதையும் தாங்கும் இதயம் என்ன ?’’

‘‘துபாய்ல எனக்கொரு கலியாணம் முடிஞ்சிருக்கு.’’

‘‘வேடிக்கை வேணாம் விசயத்தைச் சொல்லு ?’’

‘‘நான் சொல்றது உண்மை !’’

தினகர் இப்போது அதிர்ந்து அவளைப் பார்த்தான்.

வனிதா தொடர்ந்தாள். ‘‘எனக்கு முதல் ஆறு மாசம் எந்த பிரச்சனை தொந்தரவும் இல்லே. அப்புறம்தான் கஷ்டம். மொதலாளிக்கு என் மேல கண். அவர் மட்டுமில்லாம அவருக்கு ரெண்டு வயசுப் புள்ளைங்க. அவனுங்களுக்கும் என் மேல ஆசை. வீட்டுல உள்ள பொம்மனாட்டிக்குத் தெரியாம ஆளாளுக்கு வந்து தொந்தரவு பண்ண ஆரம்பிச்சாங்க. ஒத்துப் போனால் ஆபத்து. நாலு பேரும் கொத்தி குதறிடுவாங்க சின்னா பின்னம். அதுமட்டுமில்லே அங்கே கள்ளத் தொடர்புக்குக் கடுமையானத் தண்டனை. பொழைக்க வந்த நம்மை காட்டிக் கொடுத்துட்டு,பழி சுமத்தி அவுங்க தப்பிச்சுடுவாங்க. ஆனா….நான் ! உசுருக்கு உயிர் போய் இங்கே குடும்பம் சின்னாபின்னம். எந்தவித சேதாரமுமில்லா எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிச்சேன். அப்போ அங்கே அதே வீட்டில் டிரைவராய் வேலை பார்க்குற சிலோன்காரர்கிட்டே என் நிலைமை, கஷ்டத்தைச் சொன்னேன். அதுக்கு அவர்…வெளி நாட்டுல வந்து… வேலை செய்யிற வீட்டுக்குள்ளேயே தங்குறது பெரிய பிரச்சனை. ராத்திரி தூங்கக்கூட விடாம கண்ட நேரத்திலேயும் எழுப்பி இருபத்திநாலு மணி நேரம் வேலை வாங்குவாங்க. அடுத்து ஆம்பளைங்ககிட்ட இந்த தொந்தரவு.’’ சொன்னார்.

‘‘இதுக்கு என்னதான் தீர்வு. தப்பிக்க என்ன வழி சொல்லுங்க ?’’ கேட்டேன்.

‘‘வழி இருக்கு வனிதா அதுக்கு நீ மனசு வைக்கனும்’’ என்றார் அவர்.

‘‘என்ன ?’’ ஏறிட்டேன்.

‘‘நீ இங்கே ஒரு திருமணம் முடித்து ஆம்பளைத் துணையோட இருந்தால் ஒருத்தனும் நெருங்க மாட்டான்.’’ சொன்னார்.

‘‘சார் !!’’ அலறினேன்.

‘‘அலறாதே வனிதா…நிசம்.! உன்னை மாதிரி வேலைக்கு வர்றவங்க ஒன்னு ஒத்துப் போய் உசுரைக் காபந்து பண்ணிக்கனும். இல்லே இப்படி செய்துக்கனும். எங்கும்… தாலிகட்டிய தம்பதிகளை யாரும் வீண் விவகாரம்ன்னு தொடத் தயங்குவாங்க. அதனால் இந்த ஏற்பாடு. அதுக்கு ஏன் திருமணம் ? ஆண் பெண் நட்பாய் ஒரு இடத்துல சேர்ந்து வாழ்ந்து வேலைக்கு வரக்கூடாதான்னு நீ கேட்கலாம். அதுல சிக்கல் சிரமம் இருக்கு. இங்கே ஆம்பளைப் பொம்பளை திருமணமில்லாம சேர்ந்து வாழறது தப்பு. கடுமையான தண்டனை !’’ சொன்னார்.

எனக்கு உடம்பு வெலவெத்து ஆடிப் போச்சு. பரிதாபமா அவரைப் பார்த்தேன்.

‘‘உனக்கு விரும்பம்ன்னா நாம அப்படி வாழலாம்!’’ சொன்னார்

‘‘ஐயோ…!!’’ காதைப் பொத்திக் கத்தினேன்.

அந்த ஆள் அசரலை.

‘‘இதோ பார் வனிதா ! நாம புருசன், பொண்டாட்டி, புள்ளைங்களை விட்டு இங்கே பொழைக்க வந்த தனிக்கட்டைங்க. இங்கே நமக்கு எந்த ஆபத்து வந்தாலும் நாமதான் சமாளிக்கனும். தவிர்க்க முடியாதது. இவனுங்க தொந்தரவு, கஷ்டங்களுக்காக நாம இந்தியா திரும்பி சொந்த ஊர் போனா நமக்கு நஷ்டம். கஷ்டம். தவிர்க்க நாம போராடியே வாழனும். அதுக்கு இந்த வழியைத் தவிர வேற நல்ல வழி இல்லே.’’ நிறுத்தினார்.

புருசன் தொல்லை தாங்காமல் தங்கை ஓய்வெடுக்க அக்கா வீட்டுக்குப் போனால் அவள் தங்கையைத் தூக்கித் தன் புருசனிடம் போட்ட கதையாய் நாம கஷ்டத்தைச் சொன்னால் இவன் நம்மை வளைச்சி குடும்பம் நடத்த அழைக்கிறானே ! பார்த்தேன்.

அந்த ஆள் என் மனசைப் படிச்சதைப் போல. ‘‘நீ நெனைக்கிறது தப்பு வனிதா. நம்ம கஷ்டம் தீரவே இந்த யோசனை. அடுத்து இங்கே நடக்கிறது நாம சொன்னாலொழிய ஊருக்குத் தெரியாது. அது நமக்கு பெரிய ஒரு பலம். அப்புறம் இங்கே கலியாணம் கட்டி ஒன்னா வாழும்போது உணர்ச்சி வசப்பட வாய்ப்புண்டு. செக்ஸ் ஒரு பிரச்சனையாய் இருக்கும்ன்னு நீ நெனைக்கலாம். நியாயம்.! கட்டுப்பாடாய் இருக்கப் பழகிட்டால் பிரச்சனை தீர்ந்தது. அதையும் மீறி தேவைன்னா யார் தொட்டாலும் காசுன்னு நமக்குள்ளே ஒரு முறை ஏற்படுத்திக்கொண்டால் அதிகம் போகாது.‘‘ முடித்தார்.

எனக்கு அந்த ஆள் சொன்ன நீதி நியாயங்கள் தெளிவாகத் தெரிந்தது. பெண் எங்கு சென்றாலும் செக்ஸ் பிரச்சனை! புரிந்தது. கண்டவர்கள்; கை பட்டு காக்கைகள் கொத்தும் எருமைப் புண்ணாய் சிதைவதை விட இப்படி ஒருத்தனிடமிருந்து வாழ்வது நல்லது. தோன்றியது. சரி ஒப்புத்துக்கிட்டேன். அடுத்து… ஒரு வாரத்தில் எங்கள் திருமணம். தனிக்குடித்தனம் இப்போ அவரும் தன் சொந்த ஊருக்குப் போயிருக்கார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே லீவு போட்டுப் புறப்பட்டோம்.’’ நிறுத்தினாள்.

தினகருக்கு அதிர்ச்சியின் உச்சியில் ‘உம்’ கொட்ட திராணி இல்லை. சிறிது நேரம் கழித்து…

‘‘ நீங்க ரெண்டு பேரும் நிசக்கணவன் மனைவி ஆகியாச்சா ?’’ மெல்ல கேட்டான். குரல் கிணற்றுக்குள்ளிருந்து வருவதுபோல் ஒலித்தது.

‘‘ம்ம்… எத்தினியோ தடவை.’’ வனிதா அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

தினகருக்கு நெஞ்சில் சம்மட்டி அடி வலி !

‘‘அப்படின்னா….ந்த துணிச்சல்ல இங்கே வந்தே ?’’ ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.

‘‘ஏன் என்ன விசயம் ?’’ அவளும் அமைதியாய்க் கேட்டாள்.

‘‘நீ இந்தியா வந்திருக்கக்கூடாது. இந்த அறைக்குள் நுழைஞ்சிருக்கக் கூடாது.!’’

‘‘நீங்க நல்லா யோசனைப் பண்ணித்தான் பேசுறீங்களா ?’’

‘‘இதுல என்ன யோசனை ?’’

‘‘இங்கே இருக்கிற எல்லா சொத்துக்கும் நான் சொந்தக்காரி !’’

‘‘ஓகோ…! அந்த அகங்காராமா ? எனக்குத் தேவை இல்லே.’’

‘‘புள்ளைங்க ?’’

‘‘வேணாம்.’’

‘‘விவாகரத்து ?’’

‘‘தாராளமா வாங்கிக்கலாம். நான் தயார்.’’

‘‘நல்லா யோசனைப் பண்ணி சொல்லுங்க. என் வாழ்க்கை… இங்கே நமக்கு மட்டும்தான் தெரியும். அதுவும் நான் சொல்லித்தான் உங்களுக்கேத் தெரியும். நான் உண்மையான மனைவியாய் உங்ககிட்ட வாழனும் என்கிறதுக்காகத்தான் விசயத்தைச் சொன்னேன். விவாகரத்து நம்ம புள்ளை மனசைப் பாதிக்கும். அது அவர்கள் எதிர்காலத்தை சிதைக்கும், குலைக்கும். மூடி மறைச்சு வாழ்ந்தால் யாருக்கும் எந்த கஷ்டமுமில்லே.’’

‘‘உன் நல்ல மனசுக்கு நன்றி. ஆனா… உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் கம்பளிப் பூச்சு ஊறும். மனசைப் பாதிக்கும்.’’

‘‘காலம் அதை மாத்தும். ஓ.கே. நான் இங்கே இல்லாத இந்த நாலு வருசத்துல நீங்க யோக்கியமா இருந்திருக்றீங்களா ?’’

‘‘சாமி சத்தியமா நான் தப்பு செய்யலை !’’

‘‘நம்பறேன். என்னை மன்னிக்க உங்களுக்கு மனசு இல்லியா !?’’

‘இல்லை !‘ சட்டென்று ஏடுத்தெறிந்தாற்போல் சொல்ல வாய் வரவில்லை தினகருக்கு.

மௌனமாக இருந்தான்.

வனிதா தொடர்ந்தாள்

‘‘இன்னைக்கும் இது ஆணாதிக்கம் உள்ள உலகம்ங்க. எத்தனையோ ஆம்பளைங்க மனைவி இல்லாத மத்தவளைத் தொட்டு வீட்டுக்குள் நுழையுறாங்க. பொம்மனாட்டி அவர்களை மன்னிச்சு ஏத்துக்கிறாள். அந்த பெரிய மனசுத்தனம் இன்னும் ஆம்பளைங்களுக்கு வரலை. ஆம்பளைக்கு…கம்பளிப்பூச்சு, அவருப்புன்னா பொண்டாட்டிக்கும் அப்படித்தானே இருக்கும் ?! நாம எல்லாரும் மனுச சாதி. துப்பு செய்தா ஆண், பெண் அனைவருக்கும் அப்படித்தான் இருக்கும். நான் என் செய்கையை நியாயப்படுத்துறதுக்காக இதை சொல்லலை. அது வழி இல்லாம தெரிஞ்சு நடந்த தப்பு. வம்பு வேண்டாம்ன்னு நான் ஊர் திரும்ப விருப்பப்பட்டால் விசா கொடுத்து விட்டவங்க விடுவாங்களா ? பணத்தை வைச்சுட்டுப் போ இல்லே உழைச்சுட்டுப் போன்னு சொல்லுவாங்க. நம்ப சக்திக்கு பணம் திருப்பப் முடியாது. உழைச்சுட்டுத்தான் திரும்பனும். எதிர்த்தபிறகு கஷ்டம் அதிகம் இருக்கும். நாலையும் யோசிச்சுத்தான் நான் அந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கிட்டேன். நல்ல மனைவி மனசுல கள்ளங்கபடம் இருக்கப்படாது. சொல்லிட்டேன். ஏன் மன்னிக்கக்கூடாது ?!’’ நிறுத்தினாள்.
தினகர் நிதானித்தான்.

அங்கு….ஆண் புத்திசாலியோ இல்லை பெண் புத்திசாலியோ வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள். மனதில் பட்டது. அதே சமயம் யார் புத்திசாலியாக இருந்தால் என்ன ?அது புரண்டது. நல்ல கணவன் மனைவிக்குள் ஒளிமறைவு இருக்கக்கூடாது. வனிதா கொட்டிவிட்டாள். ஏன் மன்னிக்ககூடாது ? அருவருப்பு என்பது மனசு சம்பந்தப்பட்ட விசயம். பெண்கள் பெரிய மனசுக்காரிகளாய் தப்பு செய்யும் ஆண் மன்னித்து வாழும்போது…. ஆணும் ஏன் அப்படி மாறக்கூடாது ? சட்டென்று பிரிந்து விவாகரத்து கொடுத்து கூட்டைக் கலைத்து விடுவதென்பது சுலபம். ஆனால் பின் விளைவுகள், பிள்ளைகள், பிரிவு மனசு…அபாயம். தம்பதிகளின் சொந்த விருப்பு வெறுப்பு விவாகரத்து காரணமாக எத்தனைக் குழந்தைகள் அல்லாடுகின்றன.!! அவனுக்குள் யோசனைகள் விரிய நடுங்கினான்.

சிறிது நேரத்திற்குப் பின் ‘‘புள்ளைங்களுக்காக மன்னிக்கிறேன். ஆனா மறக்க முடியாது. அடுத்து சம்பாத்தியம் போதும்;. வெளிநாட்டு உறவு வேலையெல்லாம் ஒரு கெட்ட கனவாய் நெனைச்சு மறந்துடனும்.!’’ தீர்மானமாய்ச் சொன்னான்.

பெரிய சுமை நீங்கிய உணர்வு வனிதா ‘‘நன்றிங்க…’’ தழுதழுத்தாள். ஆனந்தம் கலங்க…கணவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *