வெளிச்சம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 5,920 
 

வயிற்று வலியும் மயக்கமும் வர வீட்டு வாசலிலே விழுந்துவிட்டேன். “அய்யய்யோ….! தொளசி விழுந்துட்டானே…..” என் தாய் ஆரியமாலா அழுது ஓடி வர அனைவரும் வந்துவிட்டனர். பாதி கெரக்கத்தில் இருந்த என்னை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். ஓரளவு மயக்கம் தெளிந்தேன். வயிற்று வலி நின்றபாடில்லை. என்னை என் பிடித்துக்கொள்ள அண்ணன் ரவி மோட்டார் சைக்கிளில் வைத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசரகால சிகிச்சை பிரிவில் அட்மிட் செஞ்சாங்க…

டாக்டரும் என்னை பரிசோதனை செய்து மருந்துகள் கொடுத்தார். அது பத்து படுக்கைகள் கொண்ட அறை. நான்கு நோயாளிகள் படுத்திருந்தார்கள். என்னை ஒரு படுக்கையில் படுத்திரு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து கம்பவுண்டரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“இன்னா தொளசி ஆச்சு… ஊட்டுக்கு போயிருந்தேனா அம்மா சொன்னச்சு. ஓடி வந்துட்டேன். எப்புடி இருக்குது…..” என்றான் கோயம்பேட்ல இருக்கும் பாலிய சினேகிதன் ஆறுமுகம்.

“வயித்துலதான் வலிச்சுக்கிட்டே இருக்கு… டாக்டரு சரியாய்டும்னுருக்கார்….”

“ஒடம்ப கவனுச்சுக்க இந்தா செலவுக்கு நூறுரூபாய வச்சுக்க …” கொடுத்த பிறகு புறப்பட்டான்.

சுருங்கிப் போன முகம் சட்டை போடாமல் சேலையால் மூடிய தேகம். தொளதொளனு ஆடும் கைகள். வெண்பஞ்சு போல் முடி, கிணத்துக்குள் நீந்தும் மீன்போல குழிவிழுந்த கண்களை உடைய அந்த பாட்டியை தள்ளுவண்டியில் படுக்கவைத்து தள்ளிக்கொண்டு வந்தார்கள். டாக்டர் அவசர அவசரமாக காலில் கட்டு கட்டினார். இரத்தம் வழிவது நின்றது.

“வயசான ஆளுங்கிறதால காலு ரொம்ப வீக்காயிருக்கு. ஆப்ரேசன் செஞ்சாதான் சரியாகும். எட்டாயிரம் ரூபா செலவாகும். ஏற்பாடு செய்ங்க….” என்றார் டாக்டர்.

“பணத்துக்கு என்ன பண்றதா யோசிச்சுருக்கே.. என்கிட்ட ஆயிரம் ரூபாதான் இருக்கு. ஓன்கிட்ட எவ்ளோ இருக்கு….”

“”ரெண்டாயிரம் ரூபா நா வச்சுருக்கண்ணே. மீதி ஐயாயிரம் ரூபாய் தான்…” மகன்கள் இருவரும் பேசிக்கொண்டனர்.

படியில் இருந்து இறங்கும்போது வழுக்கிருச்சு. வயசானதால காலு ஒன்னு ஒடிஞ்சே போச்சு. வயசானவளாக இருந்தாலும் அந்தப் பாட்டி மீது மகன்கள் இருவரும் அளவு கடந்த பாசம் வைத்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் தலையை விரித்துக் கொண்டு கண்களில் நீர் ஒழுக “ஆத்தா வொன்கு என்னாச்சு…” கத்திக்கொண்டு வந்தாள் மகள் லெட்சுமி.

“ஆத்தாள பாத்துக்க பணத்துக்கு ரெடி பண்ணிட்டு வர்றோம். கண்விழிச்சா … பக்கத்துல இருக்க முனியங்கடையில் சாப்பாடு வாங்கிக் கொடு….” இருவரும் புறப்பட்டனர். பாட்டி நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தார்.

“மயக்கம் தெளிஞ்சவுடனேயே சோறு கொடுக்கனுமே….”அவள் மகள் என்னிடம் “எங்க ஆத்தால பாத்துக்கங்க சாப்படு வாங்கிட்டு வந்தர்றேன்….” என்று தேமிய குரலோடு பேசிவிட்டுச் சென்றாள்.

மயக்கம் தெளிஞ்சு எந்திருச்ச அந்தப் பாட்டி ” நா எவ்ளோ கஸ்டப்பட்டு வளத்தேன். நாயா பேயா ஒழச்சு காப்பாத்துனேன். என்னய அனாத மாறி தூக்கிப் போட்டுட்டு எல்லோரும் போயிட்டாங்களே…. நல்லா இருப்பாங்களா…” புலம்ப ஆரம்பித்தாள்.

அந்தப் பாட்டிக்கு தன் பிள்ளைகள் தனக்காக கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியாது. நான் உண்யை எடுத்துச் சொன்னேனஸ.

உடனே அவள் “ஏம் புள்ளங்க மாறி முடியுமா….” என்று பெருமையாக சொல்லிக்கொண்டே அந்தப் பழைய சேலையால் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

தன் தாயின் முகத்தில் ஏதோ வெளிச்சம் தெரிவதாய் உணர்ந்தாள் உள்ளே வந்த லெட்சுமி.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

1 thought on “வெளிச்சம்

  1. வெளிச்சம் கதை நன்றாக உள்ளது. ஒரு தாய்க்கு எப்பொழுதும் தன்னை கைவிட்டு விடுவார்களோ என்ற பயம் இருக்கும். அந்த பயம்தான் வார்த்தைகளாக வெளிவருவது.அதை தக்க இடத்தில் பயன்படுத்திய கதாசிரியருக்கு பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)