வெளவ்வால் மனிதர்கள்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 5,046 
 
 

(இதற்கு முந்தைய ‘கடைசி அத்தியாயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

“…அப்படியொரு விவேகமில்லாத அட்வைஸையும் பண்ணிவிட்டு, என்னை இருந்து சாப்பிட்டுவிட்டுப் போ என்று சொல்ல நாச்சியப்ப மாமாவைப் போன்ற சொரணை கெட்ட ஆசாமிகளுக்கு வேண்டுமானால் வாய் கூசாமல் இருக்கலாம்.

நான் சொரணை உள்ளவன் அண்ணாச்சி. அவர் வாங்கித்தரும் கொத்துப் புரோட்டாவில் கை வைக்க என் கை மட்டும் அல்ல நகமே கூசும்!

அன்று ராத்திரி என் படுக்கையில் யாருக்கும் தெரியாமல் நான் ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்தேன் அண்ணாச்சி. மாமாவின் அட்வைஸ் உங்க மனதைக் காயப்படுத்தியதாகச் சொன்னீர்கள். என் மனதிற்கு ஏற்பட்டதும் அதுதான். ஆழமான ரத்தக் காயம் அது.

அழகிய பெண் மனைவியாக வரவேண்டும் என்பது என் இயல்பான நியாயமான ஆசைதானே தவிர, அது கண்மூடித்தனமான மோகமோ, கொள்கையோ கிடையாது. டாக்டருக்குப் படித்துவிட்டதால் அழகான மனைவிக்கு ஆசைப்படும் தகுதி இருப்பதாக எனக்குள் ஒரு நினைப்பு இருந்ததை நான் மறுக்கவில்லை.

ஆனால் என்னுடைய அத்தனை எண்ணங்களையும் நாச்சியப்ப மாமாவின் அட்வைஸ் உருத் தெரியாமல் அழித்து விட்டது. அழகானவளைப் பார்த்து வைப்பாட்டியாக வைத்துக்கொள் என்று எனக்குத் தரப்பட்ட அட்வைசே முதலில் எனக்கு இழுக்கு அண்ணாச்சி! கேவலமான அவமானம் எனக்கு.

அழகுக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ ஒரு பெண்ணை மனைவி என்கிற உறவில் இணைத்துக் கொள்ளாமல் வைப்பாட்டியாக வைத்துக் கொள்வது என்பது என்னுடைய கல்லறைக்கு அப்பால்கூட சாத்தியமில்லாதது! என்னைப் பொறுத்தவரையில் அது நெறி இல்லாத நடத்தை. நெறி கெட்ட வாழ்க்கை எனக்குக் கை வராது.

எதற்காகவோ ஒரு பெண்ணை வைப்பாட்டியாக பிணைத்துக் கொள்வது நாச்சியப்ப மாமா போன்றவர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். வெளவ்வால்களின் உலகத்தில் எல்லாமே தலை கீழாக இருக்கலாம். மாமா ஒரு வெளவ்வால் மனிதர். ஒரு மனிதனுக்கு வெளவ்வால்கள் எப்படி உதாரணமாக இருக்க முடியும்?

எல்லாவற்றையுமே பணம் படைத்த ஆண் என்ற அரியாசனத்தின் மேல் ஏறி நின்றுகொண்டே பார்க்கிறார் அவர். மலையாளத்துக்காரியை வைப்பாட்டியாக வைத்துக்கொள் என்றார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடி போல இருந்தது.

வாழ்க்கையில் உங்களுக்கு ஸ்ட்ராங் எத்திக்ஸ் உண்டு என இங்கே வந்திருந்தபோது நீங்கள் சொன்னீர்கள். அதை என்னுடைய மனசாட்சியின் குரலாக நினைத்தேன் அண்ணாச்சி! ஒரு பெண்ணை வைப்பாட்டியாக வைத்துக் கொள்வது என்பதே எப்படி எனக்கு இழுக்கோ, அதேபோல் ஒரு பெண்ணையும் இழிவு செய்ததாகும் அவளை வைப்பாட்டியக்கிக் கொள்வது. தன்னையும் ஒரு பெண்ணையும் இழிவு செய்வது சுய மரியாதை இல்லாதவர்களுக்கு உரித்தான குணம் என்று எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய சுய மரியாதையால்தான் இரண்டுமே எனக்கு ஒவ்வாததாக இருந்தது.

இதுவரை நான் சொன்னது அனைத்தும் இந்தக் கோணத்தில்தான்…

கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் அதுவரைக்கும் நானே பார்த்திராத இன்னொரு கோணமும் எனக்குத் தெரிய வந்தது.

அழகாக இருக்கிறாள் என்கிற ஒரே காரணத்திற்காக யாரோ ஒரு பெண்ணை வைப்பாட்டியாக்கிக் கொள்வது எப்படி நெறி கெட்ட பார்வையோ; அதே மாதிரி அழகு இல்லாதவள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள மறுத்து நிராகரிப்பதும் நெறி இல்லாத பார்வைதான் என்ற ஞானக்கண் எனக்குள் திறந்துகொண்டது அண்ணாச்சி!

அழகு இல்லாத பெண் அருமையான மனைவியாக இருக்க மாட்டாளா? அன்பும், கனிவும், பரிவும் உள்ள தாயாக அவள் இருக்க மாட்டாளா? அழகு இல்லாதவள் சிறந்த மனுஷியாக இருக்க வாய்ப்புக் கிடையாது என்று யார் சொல்ல முடியும்? ஒருவேளை வெளவ்வால்கள் சொல்லலாம். நேர்மையான மனிதனாக நான் சொல்ல முடியுமா?

நாச்சியப்ப மாமா அவருடைய வெளவ்வால் முறைப்படியான ஒரு வழியை எனக்குக் காட்டினார். ஆனால் அதுவே மானிட தர்மத்தின் அற வழியை எனக்குத் திறந்து காட்டிவிட்டது. அவருக்கே தெரியாமல் நாச்சியப்ப மாமா எனக்கு நிஜமான வழிகாட்டியாகி விட்டார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் அண்ணாச்சி!

அழகானவள்தான் மனைவியாக வர வேண்டும் என்கிற ஆசை மோகம் என் மனதில் இருந்து விலகியது. நிதானமாக நீண்ட யோசனை செய்து பார்த்தேன். பொற்கொடி அழகாக இருக்க மாட்டாள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளை நிராகரிப்பது அறம் கெட்ட செயல் என்பது எனக்கு நன்கு புரிந்தது. உடனே அவளைப் பெண் பார்க்க சம்மதித்தேன்.

என் சம்மதத்தைச் சொல்வதற்கு முன்பு சிறிது நேரம் அவளுடன் நான் தனியாகப் பேசவேண்டும் என்றேன். பொற்கொடியின் அப்பா அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் நானும் அவளும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு எங்கள் மனதிற்கு நிறைவு தரும் விதத்தில் இருந்ததால், நாங்கள் இருவரும் ஒருமித்த மனதுடன் திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொன்னோம். உடனே எங்கள் கல்யாணம் நிச்சயம் செய்யப் பட்டது.

பொற்கொடியின் அழகு என்று ரொம்ப சிலாகிக்கக் கூடியது அவளின் மேலான குணம். எல்லோருக்குமே அவள் ரொம்ப இனிமையானவள். குடும்பத்தைக் கவனமாகப் பராமரித்துக்கொண்டு; என்னுடைய ஹாஸ்பிடல்களையும் கருத்துடன் நிர்வாகம் செய்துகொண்டு; வெளியில் ஏழை எளிய ஜனங்களுக்கு கருணையுடன் தர்ம காரியங்களிலும் அயராமல் ஈடுபாடு காட்டி வரும் சிறந்த மனுஷி அவள். கோழிக்கோடு மக்களுக்கு அவளிடம் மிகுந்த மரியாதை.

ஒரு தேர்தலில் போட்டியிட்டால் கோழிக்கோடு தொகுதியில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் பொற்கொடி வெற்றி பெறுவாள்! அவளுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்த இருபத்தைந்து வருஷ மண வாழ்க்கையில் சந்தோஷத்தையும் மனம் நிறைந்த உற்சாகத்தையும் தவிர வேறு எதையும் நான் கண்டது கிடையாது அண்ணாச்சி.

கொஞ்சம்கூட நான் எதிர்பாராமல் இதையெல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில் என் மனம் வெகுவாக நெகிழ்ந்து போயிருக்கிறது. அதுவும் நான் போற்றும் எழுத்தாளரான உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது.

இத்தனை வருஷமும் ஞாபகத்தில் வைத்திருந்து அக்கறையுடன் என்னைப் பொருட்படுத்தி நீங்கள் கேட்டதால்தான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லி என்னையும் என் வாழ்க்கையையும் ஒரு சுய விளக்கம் மாதிரி வெளிப்படுத்திக் காட்டிக்கொள்ள முடிந்தது. அதற்காக என் நன்றிகளை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

இக் கடிதத்தை முடிப்பதற்கு முன் உங்களிடம் கேட்டுக்கொள்ள எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. அந்த வேண்டுகோளை நிறைவேற்றுவது உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளிதான காரியம்.

இங்கே நான் வெளியிட்டு இருக்கும் விஷயங்களை வைத்து ஒரு கதையை எழுதுங்கள் அண்ணாச்சி. அந்தக் கதையை வாசிக்கப் போகிற அனுபவத்துக்கு மேலான, ஒரு உயர்ந்த அனுபவம் வேறு எதுவும் இருக்காது என் வாழ்க்கையில்.” பொற்கொடி மிக அழகுடன் பிரதி எடுத்திருந்த ராஜாராமனின் கடிதம் முடிந்து கீழே அவனுடைய கையொப்பம் இருந்தது.

கணவன் எழுதிக் கொடுத்த கடிதத்தை மனைவி அமர்ந்து அழகாக பிரதி எடுத்திருந்த தன்மையிலேயே அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் உறவின் எழிலும் மேன்மையும் தெரிந்தன. இருபத்தைந்து வருடங்கள் எனக்குள் இருந்த நெருடல் நீங்கியதில் என் மனம் சாந்தம் பெற்றது.

மனிதர்களைப் பற்றிய நம்பிக்கை புதிய வேர்களை எனக்குள் பதித்தது. தாமதிக்காமல் ராஜாராமனை உடனே மொபைலில் தொடர்புகொண்டு, “உன் வேண்டுகோள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். கதையைப் படிக்கத் தயாராக இருக்கவும்.” என்றேன்.

— முற்றும்.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

2 thoughts on “வெளவ்வால் மனிதர்கள்

  1. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி திரு.வெங்கடேசன். என் பெயர் மீது கர்ஸரை க்ளிக் செய்தால் என்னுடைய கதைகள் வரிசையாக இருக்கின்றனவே? அப்போது தொகுத்து வாசிக்க ஏதுவாக இருக்குமே? எனினும் இதை நான் மனதில் இறுத்திக் கொள்கிறேன். நமஸ்காரங்கள்.

  2. சிறுகதைக்கென உண்டான தளத்தில் வெவ்வேறு தலைப்பில் வெளியான தொடர்கதை மனித மனங்களை படம் பிடித்து காட்டியது. எல்லா வாசகர்களாலும் இதனை தொகுத்து வாசிப்பென்பது இயலாத காரியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *