வெறும் பிரார்த்தனை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2013
பார்வையிட்டோர்: 30,162 
 
 

அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையாகியிருந்தது,

வரும் வழியில் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது அங்கேயே மதியசாப்பாட்டினை சாப்பிட்டு விடலாம் என்று அம்மா சொன்னாள்

ஆனால் அப்பா பழனிக்கு போனதும் சாப்பிடுவோம் என்று மறுத்துவிட்டார்,

ரமா மட்டும் எனக்கு பசிக்கு, இன்னும் எவ்வளவு தூரம்மா இருக்கு என்று ஆதங்கத்துடன் கேட்டாள்,

“அரைமணி நேரத்தில் போயிருவோம், நீ வேணும்னா ஒரு கொய்யாபழம் வாஙகி தின்னு“ என்று சொன்னாள் அம்மா.

ரமாவால் பசி தாங்கமுடியாது, அவள் தினசரியும் பள்ளியில் மதியம் பனிரெண்டரை மணிக்கே சாப்பிட்டுவிடுகின்றவள், ஆனால் இன்றைக்கு லீவு போட்டு இருப்பதால் அந்த நேரமானவுடன் அவளுக்கு பசிக்க ஆரம்பித்திருக்க கூடும்,

அப்பா நேற்றிரவு திடீரென்று தான் சாமி கும்பிட பழனிக்கு போக வேண்டும் என்று சொன்னார், காதம்பரிக்கு தான் வேலை செய்யும் பார்மசியில் எப்படி லீவு கேட்பது என்பது தயக்கமாக இருந்தது, ஏற்கனவே இந்த மாசத்தில் இரண்டு நாள் லீவு போட்டுவிட்டாள், இதற்கு மேல் லீவு கேட்டால் பார்மசி ஒனர் சபாபதி கேவலமாகத் திட்டுவார், மீறி லீவு போட்டால் சம்பளத்தைப் பிடித்துக் கொண்டுவிடுவார், அவளது ஒருநாள் சம்பளம் நூற்றுபத்து ரூபாய், அதை எப்படி இழப்பது, தயக்கத்துடன் தான் கோவிலுக்கு வரவில்லை என்று காதம்பரி சொன்னாள்,

“நீ வேலைக்கு போயி சம்பாதிச்ச மசிரு போதும், காலையில நாம பழனிக்கு போறோம், நீ வர்றே, காலைல ஆறுமணி பஸ்ஸை பிடிச்சா தான் வெயில் ஏறுறதுக்குள்ளே கோவிலுக்கு போக முடியும், “ என்று அப்பா கோபத்துடன் சொன்னார்,

மறுத்து பேசினால் அப்பாவின் கோபம் உக்கிரமாகிவிடும், தன்னோடு வேலை செய்யும் விநோதினியைப் பார்த்து யாராவது உறவினர் செத்து போய்விட்டார்கள் என லீவு சொல்லிவிட வேண்டியது தான், என்று முடிவு செய்து கொண்டாள்,

எதற்காக இப்போது உடனே பழனி கோவிலுக்கு போக வேண்டும் என்று யாரும் கேட்டுக் கொள்ளவில்லை, அப்பாவின் குணமே அப்படித்தான், திடீரென்று தனக்கு மனசு சரியில்லை, எல்லோரும் உடனே கிளம்புங்க என்று அவர்களை திருப்பரங்குன்றத்திற்கோ, திருச்செந்தூருக்கோ கூட்டிக் கொண்டு போவார், அப்படி கோவிலுக்குப் போய்வருவதற்காக யாரிடமாவது ரெண்டாயிரம் கடன் வாங்குவார், பின்பு அதற்கு வட்டி கொடுக்கமுடியவில்லை என்று குடித்துவிட்டு வந்து அம்மாவை கண்டபடி ஏசுவார், கடன்தொல்லை கழுத்தை நெருக்கும் போது உடனே ஏதாவது ஒரு கோவிலுக்கு கிளம்பிவிடுவார், இன்றைக்கும் அப்படித்தான் நடந்தது,

விடிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அம்மா எழுந்து குளித்துவிட்டு காதம்பரியை எழுப்பி குளிக்கச் சொன்னாள், டீ போட்டுக் கொண்டு அப்பாவை எழுப்ப முயன்ற போது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார், அம்மா அவரது முதுகை தொட்டு எழுப்ப முயன்ற போது கைகளை தள்ளிவிட்டு சும்மாபோடி நாயே என்று கத்தினார், ஒருவேளை கோவிலுக்குப் போக வேண்டும் என்பதே மறந்து போய்விட்டதோ,

அம்மா டீயை அவரது படுக்கையில் அருகில் வைத்துவிட்டு பாயில் உருண்டுகிடந்த ரமாவை எழுப்பிவிட்டாள், காதம்பரியும் ரமாவும் ஜடை பின்னிமுடித்த போது காலை விடிந்து நல்ல வெளிச்சம் வந்திருந்த்து.

அப்பொழுதும் அப்பா போதையில் உறங்கிக் கொண்டுதானிருந்தார், அவரது முகத்தில் எச்சில் வழிந்து காய்ந்திருந்தது, மயிர் வளர்ந்த அவரது பருத்த தொப்பை சீரற்று ஏறி இறங்கிக் கொண்டிருந்தது, அப்பாவின் கைகளைப் பிடித்து இழுத்து எழுப்பினாள் ரமா

“யப்பா, கோவிலுக்கு நேரமாச்சி எந்திரிங்க“

ம், ம் என்று மட்டும் ஒலி வந்தது, அவர் எழுந்து கொள்ளவில்லை, அவள் சோர்ந்து போனவளா தண்ணி ஊத்தி எழுப்பிவிடவா என்று அம்மாவிடம் கேட்டாள்,

“வேணாம், கத்துவாரு, அவரா எந்திரிக்கட்டும்“

என்றபடியே அம்மா சட்னி அரைப்பதற்கு தேங்காய் உடைக்க ஆரம்பித்தாள், காதம்பரி தனக்குப் பிடித்தமான ரோஸ்கலர் சுடிதாரை அணிந்து கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டாள், இந்த சுடிதார் எடுப்பாக இல்லை, லேஸ் வைத்து கறுப்பில் ஒரு சுடிதார் எடுக்க வேண்டும், எப்படியும் அதற்கு ஆயிரம் ரூபா வேணும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள், அம்மா சட்னி அரைத்து முடித்து அவர்கள் சாப்பிட்டுவிட்டு அப்பா எழுந்து கொள்வதற்காக காத்துக் கொண்டேயிருந்தார்கள், ரமா அலுப்பானவள் போல தான் பள்ளிக்கு கிளம்புவதாக சொன்னாள்.

“உங்கப்பா எந்திரிச்சா என்னை திட்டுவார்“ என்று அம்மா அவளை தடுத்துவிட்டாள்

அப்பா தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்ட போது மணி பத்தரையாகியிருந்த்து, அவர் எழுந்து தேநீர் குடித்துவிட்டு அவர்களை விசித்திரமாக பார்த்தபடியே மெதுவாக குளித்து, டிபன்சாப்பிட்டுவிட்டு, சந்தன கலர் கோடு போட்ட சட்டையை போட்டுக் கொண்டார், அவர்கள் வீட்டுக்கதவை பூட்டிக் கொண்டு கிளம்பிய போது வெயில் ஏறியிருந்தது,

பேருந்து நிலையம் வரை ஆட்டோவில் போகலாம் என்றாள் ரமா, அப்பா அதை கேட்டுக் கொள்ளவேயில்லை, வீட்டிலிருந்து நடந்தே அவர்கள் பேருந்து நிலையத்திற்கு போனார்கள், ரமா முகம் சுண்டிப்போனவளாக, வெயிலின் அசதி மேலிட மெதுவாக நடந்து வந்தாள்,

பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்த்து, அப்பாவிற்கு தெரிந்த பஸ் டிரைவர் என்பதால் அப்பா டிரைவர் சீட்டுவழியாக ஏறி உள்ளே போய் சீட்டு பிடித்தார், மூன்று பேர் உட்காரும் சீட்டில் அவர்கள் நால்வரும் நெருக்கடித்து உட்கார்ந்து கொண்டார்கள், வெக்கையில் பேருந்தினுள் இருக்க முடியவில்லை, வியர்த்து வழிந்தது. அப்பா திடீரென ஏதோ யோசனை வந்தவரை போல கூட்டத்தை விலக்கி கொண்டு கிழே இறங்கிப் போனார்,

ஒரு வயதான பெண் நிற்கமுடியாமல் அப்பா உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டாள், அப்பா அருகில் உள்ள பெட்டிகடையில் போய் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்து புகைக்க ஆரம்பித்திருந்தார், பேருந்து கிளம்புவதற்காக ஹார்ன் அடிக்கும்வரை அப்பா வரவில்லை, ரமா ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி அப்பா , வாங்க, பஸ் கிளம்புது எனறு கத்தினாள்,

அப்பா சாவகாசமாக பேருந்தை நோக்கி வந்து மறுபடியும் டிரைவர் சீட் வழியாகவே உள்ளே வந்தார், அப்படி அவர் ஏறிவருவதை பேருந்தே பார்த்துக் கொண்டிருந்த்து, தனது சீட்டில் உட்கார்ந்திருந்த கிழவியை எழுந்து நிற்கும்படியாக அப்பா திட்டினார்

அந்த பெண் தனக்கு கால்வலி தாங்கமுடியலை என்றாள், கோபம் அம்மா மீது திரும்பியது

“அறிவு கெட்ட நாயி, மனுஷன் கூட்டத்தில முண்டி அடிச்சி சீட் பிடிச்சி குடுத்தா, கொழுப்பெடுத்து அதை ஏன்டி விட்டுக்கொடுத்தே,அப்போ நீ எந்திரிச்சி நில்லுடி, அப்போ தான் புத்தி வரும்“

என்று அம்மாவின் கையை பிடித்து இழுத்தார், அம்மா எழுந்து நின்று கொண்டாள், அவர்களின் சண்டைய கண்ட கிழவி முகம் சுருங்கிப்போனவளாக எழுந்து கொண்டு அம்மாவின் கையை பிடித்து உட்கார சொன்னாள்

“பரவாயில்லை நீங்களே உட்காருங்க்ம்மா“ என்றாள் அம்மா

“நான் புளியம்பட்டிவிலக்கில இறங்கிடுவேன், நீ உட்காரும்மா“ என்று அவள் அம்மாவை உட்கார வைத்தாள், அம்மா சீட்டின் நுனியில் உட்கார்ந்து கொண்டாள், பேருந்து கிளம்பியது, ரமா ஜன்னலுக்கு வெளியே ஒடும் மரங்களையும், மனிதர்களையும் பார்த்தபடியே வந்தாள், அப்பா அவளை சீட் மாறி உட்கார சொல்லிவிட்டு தான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டார், ரமாவின் முகம் வாடிப்போனது, அதை உணர்ந்தவளை போல அம்மா அவளது கையை தன்னோடு சேர்த்து வருடத்துவங்கினாள்,

பேருந்து ரயில்வே கேட்டை கடப்பதற்குள் அப்பா உறங்கியிருந்தார், குறட்டை ஒலி பேருந்தையே திரும்பி பார்க்க வைத்த்து, பொது இடத்தில் எப்படி இப்படி குறட்டை விட்டு அவரால் உறங்கமுடிகிறது என்று காதம்பரிக்கு அவமானமாக இருந்தது ரமா ஏதாவது பேச முயற்சி செய்யும் போது அம்மா அப்பா தூங்குகிறார் என்பதால் பேச வேண்டாம் என்று சைகை காட்டினாள்,

சே, அம்மா ஏன் இப்படி எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறாள் என்று காதம்பரிக்கு ஆத்திர ஆத்திரமாக வந்த்து, எழுந்து வேறு சீட்டிற்கு போய் உட்கார்ந்து கொள்ளலாம் போலிருந்த்து, அப்படி செய்தால் அதற்கும் அம்மா தான் திட்டுவாங்க நேரிடும்,

அம்மா பழகிப்போய்விட்டிருந்தாள், சமையலறை உத்திரத்தில் வாழும் பல்லியை போல எங்கே அப்பா தன்னை துரத்திவிடுவாரோ என்ற பயத்திலே அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறாள், இவ்வளவிற்கும் அவர்களுக்கு திருமணமாகி பத்தொன்பது வருஷங்கள் முடிந்துவிட்டன,

அப்பாவை திருமணம் செய்து கொண்ட நாளில் இருந்து அம்மா நிறைய அழுதிருக்கிறாள், ஆரம்ப நாட்களில் அவரை மாற்றமுயற்சித்து அடியும் வசவும் வாங்கியிருக்கிறாள், அவளது இடதுகையில் அப்பா தோசைகரண்டியால் போட்ட சூட்டு தழும்பு இப்போதுமிருக்கிறது,

சில சமயங்களில் மனக்கஷடத்தை தாங்கி கொள்ள முடியாத போது தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு சப்தமேயில்லாமல் அழுவாள், அப்பா குடித்துவிட்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் நாட்களில் காதம்பரிக்கு ஆத்திரமாக வரும், ஆனால் ஏதாவது பேசினால் கையில் கிடைத்த் பொருளை வைத்து அடிப்பார் என்று அவளுக்கு தெரியும்,

அப்பாவின் போதை அதிகமாகிவிடும் நாளில் அம்மா, ரமாவையும் காதம்பரியையும் பக்கத்தில் உள்ள ராமச்சந்திரன் மாமா வீட்டிற்குள் உறங்குவதற்கு அனுப்பி விடுவாள், பாயை சுருட்டிக் கொண்டு போய் அவர்கள் வீட்டின் காலிங்பெல்லை அடிக்கும் போது கூச்சமாகவும் வேதனையாகவும் இருக்கும், உறக்க கலக்கத்தில் மாமா கதவை திறந்துவிட்டு ஒரமாக படுத்துக்கோங்க என்றபடியே உள்ளே போய்விடுவார், சைக்கிள் நிறுத்தும் இடத்தை ஒட்டி விரித்துக் கொண்டு அவளும் ரமாவும் உறங்குவார்கள், அது போன்ற நாட்களில் தூக்கமே வராது,

ஏன் இப்படி அடுத்தவீட்டில் வந்து உறங்குகிறோம், அப்பா ஏன் இப்படி குடித்துவிட்டு பிள்ளைகளிடமே மோசமாக நடந்து கொள்கிறார், என அழுது கொண்டேயிருப்பாள்,

ரமா ஒரு நாள் ஆற்றாமை தாளமுடியாமல் சொன்னாள்

அப்பா செத்து போனா தான்டி நமக்கு எல்லாம் விடிவுகாலம், அப்பா செத்த அன்னைக்கு தான் அம்மா நிம்மதியா தூங்குவா, ஒருவேளை அதுக்கு முன்னாடி அம்மா செத்து போயிட்டா, நாம எல்லாம் தெருவில தான் நிக்கணும், அப்பா நம்மளை அடிச்சே கொன்னுருவார்

என்ன பதில் சொல்வது என தெரியாமல் காதம்பரி அவளை கட்டிக்கொண்டு அழுதாள், ரமாவும் கூட அழுதாள், இருவரது அழுகைச் சப்தம் உறங்கி கொண்டிருக்கும் ராமச்சந்திரமாமா வீட்டோருக்கு கேட்டுவிடக்கூடும் என்று நினைத்து வாயைப்பொத்திக் கொண்டு விம்மினார்கள், நீண்ட கேவலின் பின்பு காதம்பரி சொன்னாள்

“நான் இருக்கேன், நீ ஒண்ணும் பயப்படாதே“

அந்த நிமிசத்தில் தான் அவள் தன்னை முழுமையாக ஒரு அக்காவாக உணர்ந்தாள் அவர்கள் இருவரும் உறக்கமில்லாமல் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு இரவெல்லாம் விழித்துக்கிடந்தனர், காதம்பரி அதற்காகவே பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடனே தான் வேலைக்கு போகப்போவதாக சொன்னாள்,

எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று மட்டும் தான் அப்பா கேட்டார், என்ன வேலைக்கு போகப்போகிறோம் என அன்று அவளுக்கு தெரியவில்லை, ரெண்டாயிரம் கிடைக்கும் என்று மட்டும் சொன்னாள்,

நாலு வருசம் நீ சம்பாரிச்சா அதை சேத்து வச்சி உன்னை கட்டிகுடுத்திரலாம் என்று அப்பா சொன்னார்

தான் கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது என்று அந்த நிமிசம் மனதில் தோன்றியது, மீனாவின் அண்ணன் தான் அவளுக்காக பார்மசியில் வேலைக்கு ஏற்பாடு செய்தவன், தனக்கு தெரிந்த கடை என்பதால் ஒழுங்காக நடத்துவார்கள் என்று சொல்லி அவளை வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தான்,

பேருந்து நிலையத்தின் வாசலில் அந்த மருந்துகடையிருந்தது, காலை எட்டு மணிக்கு போய்விட வேண்டும், இரவு ஒன்பது மணி வரை வேலை செய்ய வேண்டும், கடையில் அவளைப் போல இரண்டு பெண்களும், மூன்று பையன்களும் வேலை செய்தார்கள், மருந்துக்கடை என்பதால் நாள் முழுவதும் நின்று கொண்டேயிருக்க வேண்டும், மூத்திரம் பெய்வதற்கு பேருந்து நிலையத்திற்குள் உள்ள இலவச கழிப்பறைக்கு தான் போக வேண்டும், ஆனால் அதற்குள் கால்வைக்கமுடியாதபடி அசிங்கமாக இருக்கும் அதனாலே மூத்திரத்தை அடக்கி அடக்கி அவளுக்கு பலநாள் அடிவயிற்றில் வலியாகியிருக்கிறது,

காதம்பரி வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போய்விடுவாள், மதியம் முக்கால் மணி நேரம் ஒய்வு, அந்த நேரத்தில் அவர்கள் வெளியே போய்வருவார்கள், காதம்பரியும் விநோதினியும் தான் தோழிகள், அவர்கள் சாப்பிட்டுமுடித்தவுடன் ரோஸ்மில்க் குடிப்பதற்காக அருகாமையில் உள்ள பழரசக்கடைக்குப் போவார்கள், அந்த கடையின் சுவரில் மிகப்பெரிய டெலிவிஷன் ஒனறு மாட்டப்பட்டிருந்த்து, அதில் ஒளிபரப்பாகும் பாடலை பார்த்துக் கொண்டே ரோஸ்மில்க் குடிப்பார்கள், சிலநேரம் விநோதினி சாலையில் தென்படும் இளம்பையன்களைப் பற்றி கேலி பேசுவாள், அந்த அரைமணி நேரம் தான் அவளுக்கு விருப்பமான நிமிஷங்கள்,

நாள்முழுவதும் பார்மசி ஒனர் அவர்களை கடுமையாக திட்டுவார், அப்படியிருந்தும் இரவு கடையை விட்டு வெளியே போகும் போது பத்திரமா போகணும் பாப்பா என்று சொல்லி ஒரு சாக்லெட்டை நீட்டுவார், தலையாட்டியபடியே அதை வாங்கிக் கொள்வாள், பிள்ளையார் கோவிலை தாண்டும் வரை அதை கையிலே வைத்திருப்பாள், கிட்டங்கி தெருவந்தவுடன் அந்த சாக்லெட்டை வாயிலிட்டு சுவைத்தபடியே நடக்க துவங்குவாள், அப்போது தான் வீடு வரை சாக்லெட் கரையாமல் இருக்கும், ஒரு நாளின் மொத்த வலியையும் அந்த சாக்லெட் சுவை கரைத்துப் போகச் செய்துவிடும்,

அப்பா இரவில் தாமதமாகவே வீடு வந்து சேருவார், அவர் வருவதற்குள் பிள்ளைகள் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதில் அம்மா கவனமாக இருப்பாள், அப்பா தெருவில் செருப்பு தேயச் சப்தமிட்டு நடந்து வருவார், அந்த ஒசை தெளிவாக கேட்கும்,

அப்பா வரும்வரை வாசலில் உள்ள லைட் எரிந்து கொண்டிருக்கும் சிலவேளை ,

ஏன்டி களவாணி முண்டை உங்க அப்பனா கரண்டுபில் கட்டுவான் என்று திட்டுவார், லைட்டை அணைத்துவிட்டிருந்தால் ஏன்டி உங்க அப்பன் கரண்டு பில் கட்டுறானா, எதுக்குடி லைட்டை ஆப் பண்ணினே ,இருட்டில தடுமாறி விழுந்து மண்டை உடைச்சி செத்து போகட்டும்னு நினைக்குறயா என்றும் கத்துவார், அம்மா அந்த விளக்கை அதற்காக அணைப்பதேயில்லை, அது எரிந்து கொண்டிருந்தால் இன்னமும் அப்பா வீட்டிற்கு வந்து சேரவில்லை என்று அர்த்தம்

பலநாட்கள் அப்பா போதை அதிகமாகி அவளது பார்மசிக்கு வந்து ஒனரிடம் சண்டையிட்டு கடன்வாங்கிப் போவதுண்டு, அது போன்ற நேரங்களில் அவளுக்கு தாங்கமுடியாத துக்கமும் வலியும் தொண்டையை அடைக்கும், சில நாட்கள் அப்பா நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவர்களை எழுப்பி முட்டை பரோட்டா சாப்பிடச் சொல்லி பார்சலை பிரித்து வைத்து வற்புறுத்துவார், அவர்கள் பாதி உறக்கத்துட்ன் பரோட்டா சாப்பிடுவார்கள், என் செல்லம், உங்களை விட்ட எனக்கு யாருடா இருக்கா என்று அப்பா அர்த்தமில்லாமல் புலம்புவார், மறுநாள் காலையிலோ ஆத்திரம் அதிகமாகி உங்களை எல்லாம் விஷம்வச்சி கொல்லாம விடமாட்டேன், களவாணிநாய்க என்றும் கத்துவார்.

அப்பாவிற்குள் ஒரு பாம்பு வாழ்ந்து கொண்டிருக்கிறது, அது நினைத்தாற் போல படமெடுத்து சீறுகிறது, அதற்கு இரைபோட ஆட்கள் தேவை, அதற்கு தான் குடும்பம்,

கொத்தி கொத்தி பாம்பின் விஷம் மெல்ல அவர்கள் உடலில் கலந்து விட்டிருக்கிறது, அவரை விலக்கவே முடியாது, தனியாக வேறு எங்கும் போய் வாழவும் முடியாது, பேசாமல் அம்மாவும் அவர்களும் மட்டும் எங்காவது வட இந்தியாவிற்கு ஒடிப்போய் பிழைத்துக் கொண்டால் என்ன, அம்மா வரமாட்டாள், அவளால் அப்பாவை கைவிட முடியாது,

•••

இப்படி காதம்பரி ஏதேதோ யோசனைகளுட்ன் பயணம் செய்து கொண்டிருந்தாள். பேருந்து ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலையோர உணவகத்தில் நின்றது, அப்பா இறங்கி போய் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார், அம்மா கொண்டு வந்திருந்த தண்ணீர்பாட்டிலை திறந்து ஒரு மடக்கு குடித்துவிட்டு அவளிடம் நீட்டினாள், காத்ம்பரி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது ரமா ரகசியமான குரலில் கேட்டாள்

“இறங்கி போயி கோன் ஐஸ் வாங்கிட்டு வருவமா“

காதம்பரி வேண்டாம் என்று மறுத்தாள், பேருந்து கிளம்பிய போது அப்பா பஸ்ஸில் ஏறி ஒரு ரோஜாப்பூவை அவர்களிட்ம் நீட்டினார், அம்மா கையில் வாங்கிக் கொண்ட போது சொன்னார்

“சில்லறை மாத்துறதுக்காக வாங்கினேன், தலையில வச்சிக்கோ“

ரோஜா வாடிப்போயிருந்தது, அம்மா காதம்பரியிடம் நீட்டினாள், அவள் வேண்டாம் என மறுத்தபோதும் அம்மா அவளது கூந்தலில் ரோஜாவை சொருகிவிட்டாள்,

யாராவது இப்படி பசிநேரத்தில் காசு கொடுத்து ரோஜாப்பூ வாங்குவார்களா என்று காதம்பரிக்கு எரிச்சலாக வந்த்து, இதற்கு ஒரு இளநீர்வாங்கிவந்தால் கூட வெக்கை தணிய குடித்திருக்கலாம், அப்பா பான்பராக் பாக்கெட் ஒன்றினை பிரித்து வாயிலிட்டபடியே டிரைவருடன் அரசியல் பேச ஆரம்பித்தார், பசியால் ஏற்பட்ட கிறக்கம் அவர்களை சோர்வடைய செய்திருந்தது, அப்பா உற்சாகமாக நாட்டுநலன் குறித்த கவலையுடன் பேசிக்கொண்டே வந்தார்

••

பழனி பேருந்து நிலையத்தின் தென்பகுதியில் அந்த உணவகமிருந்த்து, அப்பா அதன் வாசலில் அவர்களை நிற்க சொல்லிவிட்டு சாப்பாடு எவ்வளவு ரூபாய் என்று விலை கேட்பதற்காக உள்ளே போயிருந்தார், அம்மாவும் காதம்பரியும் பெட்டிகடை ஒரமாக நின்று கொண்டார்கள், ரமா அப்பா கூடவே உணவகத்திற்குள் போனாள், சாப்பாடு முடிந்துவிட்டது என்றும் சப்பாத்தி, தோசை இரண்டு மட்டுமே இருப்பதாக கல்லாவில் இருந்த ஆள் சொன்னார்,

பரவாயில்லை அதையாவது சாப்பிடலாம் என்று ரமா சொன்னாள், டாக்சி ஸ்டாண்ட் அருகே வேறு ஒரு ஹோட்டல் இருக்கிறது என்று சொல்லிய அப்பா தான் அங்கே போய் பார்த்துவருவதாக சொல்லி அவர்களை நிற்க வைத்து போனார்,

காதம்பரியும் ரமாவும் கோவிலுக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறவர்களை பார்த்துக் கொண்டேயிருந்தார்கள், அம்மா ஹோட்டல் வளாகத்தினுள் இருந்த வேப்பமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டாள், ரமா தனக்குப் பசிக்கிறது என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தாள்

ஹோட்டலைத் தேடிப்போன அப்பா மணி ஐந்தாகியும் வந்து சேரவேயில்லை, அம்மா போன் பண்ணி கேளுடி என்று காதம்பரியிடம் சொன்னாள், அப்பாவின் செல்நம்பருக்கு போன் செய்தாள் காதம்பரி, ரிங் போய்க் கொண்டேயிருந்த்து, அப்பா போனை எடுக்கவேயில்லை, எங்கே போய் தொலைந்தார் என்று ஆத்திர ஆத்திரமாக வந்த்து, பசி வேறு அவளுக்கு தலைவலியை உண்டுபண்ணியிருந்த்து,

அவர்களை வேப்பமரத்தடி நிழலில் உட்கார சொல்லிவிட்டு அம்மா தான் தேடிப்போய் பார்த்து வருவதாக சொன்னாள்,

“நீ ஒண்ணும் அலைய வேண்டாம், நான் போயி பாத்துட்டு வர்றேன்“

என்று காதம்பரி சாலையை கடந்து நடக்க ஆரம்பித்தாள், எந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை, நீண்டு செல்லும் பஜாரில் ஆட்கள் முண்டியத்து போய்க் கொண்டிருந்தார்கள், சாலையோரம் மஞ்சள் சேலை கட்டிய இரண்டு பெண்கள் கையில் வேலுடன் உட்கார்ந்திருந்தார்கள், ஒருவன் குரங்கை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தான்,

குதிரை வண்டிகள் நின்றிருந்த இடத்தை கடந்து அவள் மேற்குபக்கமாக நீளும் பஜாரினுள் நடந்து போக துவங்கினாள், அருகருகே இரண்டு மூன்று சைவ உணவகங்கள் இருந்தன, இதை விட்டுவிட்டு அப்பா எங்கே போய் தொலைந்தார் என்று எரிச்சலாக வந்தது, ஒரு ஹோட்டலின் உள்ளே போய் அப்பா இருக்கிறாரா என்று தேடிப்பார்த்துவந்தாள், அப்பாவைக்காணவில்லை

காய்கறிகடைகள், வெற்றிலை கடைகள், சந்தனம் பூமாலை விற்கும் கடைகளை தாண்டி பஜார் விரிந்து கொண்டேயிருந்த்து, சிக்னல்வரை நடந்துவிட்டு மறுபடி அப்பாவிற்கு போன் செய்தாள், இப்போது போன் அணைக்கபட்டிருந்த்து,

துப்பட்டாவை தலையில் போட்டபடியே அவள் கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தாள், பேருந்துகள், ஆட்டோக்களை கடந்து காதம்பரி நடந்து வந்த போது ஒரு டுரிஸ்ட் பஸ் வந்து நின்று ஆட்கள் சோம்பலுடன் இறங்கி போய்க் கொண்டிருந்தார்கள், அங்குமிங்குமாக சுற்றியலைந்து தேடிய போதும் அப்பாவை காணமுடியவில்லை,

ஒருவேளை தான் தேடிச்சென்ற போது அப்பா வந்து சேர்ந்திருந்தால் என தோன்றியது, அவசரமாக அம்மாவும் ரமாவும் உட்கார்ந்திருந்த இடத்திற்கு போனாள், அங்கே அவர்கள் இருவரையும் காணவில்லை, காதம்பரிக்கு திகைப்பாக இருந்தது, எங்கே போய் விட்டார்கள் என்ற ஆத்திரத்துடன் சுற்றிலும் திரும்பி பார்த்தாள்,

சாலையின் இடது பக்கமிருந்த சினிமா போஸ்டர் அருகே ரமா மட்டும் தனியே நிற்பது தெரிந்தது, ஆனால் அம்மாவைக் காணவில்லை, காதம்பரி அவளை நோக்கி நேராக நடந்து போய் எரிச்சலான குரலில் கேட்டாள்

“அம்மா எங்கடி போனா“

“அப்பா எங்கயாவது குடிச்சிட்டு விழுந்துகிடப்பாரு, போயி கூட்டிகிட்டு வர்றேனு அப்பவே கிளம்பி போயிட்டா, ஒத்தையில தனியா உட்கார்ந்திருக்க பயமா இருந்துச்சி, அதான் இங்கே வந்துட்டேன்“

அம்மா எந்த மதுபானக்கடையில் போய் அப்பாவைத் தேடுகிறாளோ, ஒரேயொரு முறை காதம்பரி அப்பாவை தேடி டாஸ்மார்க் கடைக்குள் போயிருக்கிறாள், அப்பா ஒரு பிளாஸ்டிக் ஸ்டுலில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார், அவளைக்கண்டதும் நீ எதுக்குடி இங்கே வந்தே என்று சப்தம் போட்டார், அம்மா குடிபோதையில் கிடக்கும் அப்பாவை பலமுறை தூக்கி கொண்டு வந்திருக்கிறாள், இன்றைக்கும் அப்பா அப்படி எங்காவது குடித்துவிட்டு கிடக்ககூடும், அம்மாவை நினைக்கையில் வருத்தம் கவ்வியது,

“சாப்பிட்டயாடி“ என்று ரமாவிடம் கேட்டாள் காதம்பரி

“நீ போனதும் அம்மா என்கிட்ட இருபது ரூபா குடுத்து சாப்பிட்டு வரச்சொன்னா, நான் தனியா போயி ஒரு தோசை சாப்பிட்டு வந்துட்டேன்“ என்றாள்,

காதம்பரிக்கு அலைந்து திரிந்த அயர்ச்சியில் பசியடங்கி போயிருந்த்து, உடம்பெல்லாம் கசகசப்பும் வியர்வையும் அதிகமாகியிருந்தது, எங்காவது கொஞ்சநேரம் காலை நீட்டி படுத்தால் தேவலை என்பது போல தோணியது, ரமாவை இழுத்துக் கொண்டு மறுபடியும் அதே வேப்பமரத்தடிக்கு வந்து சேர்ந்தாள், சிவப்பு நிற டீசர்ட் அணிந்த ஒருவன் காதம்பரியை வெறித்து பார்த்து உதட்டை கடித்துக் கொண்டிருந்தான், இவன் ஒருவன் நேரம்காலம் தெரியாமல் காதலித்துக் கொண்டிருக்கிறான் என்று ஆத்திரமாக வந்தது. அவர்கள் இருவரும் சாலையை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார்கள்,

வெயில் மங்கி மழை வரப்போவதைப் போல மேகம் இருட்டிக் கொண்டுவந்தது, , உனக்கு ஒரு டீ வாங்கிட்டு வரட்டுமாக்கா என்று கேட்டாள் ரமா,

வேண்டாம் என்றபடியே நெற்றியை பிடித்தபடியே உட்கார்ந்திருந்தாள் காதம்பரி, சாலையில் செல்லும் யானையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ரமா,

நீண்ட நேரத்தின் பிறகு ஒரு ஆட்டோ வேப்பமரத்தடியின் அருகில் வந்து நின்றது, அதன் உள்ளிருந்து அம்மா இறங்கினாள், ஆட்டோவின் உள்ளே அப்பா போதை அதிகமாகி முகம் கோணி சரிந்து கிடந்தார், வாந்தி எடுத்திருக்க கூடும், சட்டை ஈரமாக தெரிந்த்து, அம்மா இறங்கிவந்து காதம்பரியிடம் சொன்னாள்

“உங்கப்பா புல்லா குடிச்சிருக்காரு, அவர் தூங்கி எந்திரிச்சா தான் நாம கோவிலுக்கு போக முடியும், எங்காவது ஒரு ரூம்போட்டு தங்கியிருக்க வேண்டியது தான், தேவஸ்தான விடுதியில் ரூம் வாங்கி தர்றேனு ஆட்டோகாரர் செர்ல்லியிருக்கார், வந்து ஏறுங்க,“

ஆட்டோவிற்குள் ரமாவும் காதம்பரியும் ஏறிக் கொண்டார்கள், அம்மா ஒண்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள், அப்பாவின் வாயிலிருந்து பீறிடும் மதுவின் வாசனை முகத்தில் அடித்த்து

அவர்கள் தேவஸ்தான விடுதியில் ரூம் போட்டபோது காதம்பரி தான் கையெழுத்து போட்டாள், அப்பாவை கைத்தாங்கலாக அம்மாவே பிடித்துக் கொண்டு அறைக்குள் கொண்டு போனாள், அவரது கால்கள் துவண்டுபோய் நடக்க மறுத்தன, அவர் தன்னை அறியாமல் எதையோ உளறிக் கொண்டுவந்தார், அறையில் இருந்த மின்விசிறியைப் போட்டு அப்பாவை படுக்க வைத்தாள் அம்மா, அவரது சட்டை பையில் இருந்த பணம் ரசீதுகள் செல்போன் யாவும் கிழே விழுந்தன, அதை எடுத்து அம்மா தனது கூடையில் வைத்துக் கொண்டாள்,

ரமாவும் காதம்பரியும் விடுதியின் வராந்தாவில் கிடந்த மரபெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள், அங்கிருந்து பார்த்தால் மலை நன்றாக தெரிந்த்து, அம்மா அறையின் கதவை ஒரமாக சாத்திவிட்டு வெளியே வந்தாள்,

அம்மா எப்படி அப்பாவை கண்டுபிடித்தாள் என்று தெரியவில்லை, அவள் அசதியோடு சேலையில் முகத்தை துடைத்துக் கொண்டு சாப்பிட்டயா என்று காதம்பரியை கேட்டாள்,

இல்லைம்மா என்றாள் காதம்பரி

“நீயும் இவளும் போயி சாப்பிட்டு எனக்கு ஒரு கப் காபி வாங்கிட்டு வாங்க, கிறுகிறுனு வருது“ என்று நூறு ரூபாய் பணத்தையும் சிறிய சில்வர் தூக்குவாளியையும் நீட்டினாள்

அவர்கள் இருவரும் அருகில் இருந்த சிற்றுண்டி நிலையத்திற்கு போனார்கள், சூடாக பூரி போட்டுக் கொண்டிருந்தார்கள், இருவரும் சாப்பிட்டுவிட்டு அம்மாவிற்கு பூரியும் காபியும வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார்கள்,

அம்மா மரப்பெஞ்சில் களைத்து போய் படுத்துகிடந்தாள், அவளை எழுப்பி சாப்பிடச்சொன்ன போது பசிவேகத்தில் அவரசரமாக பூரியை இரண்டு மூன்றாக பிய்த்து சாப்பிட்டுவிட்டு காபியை சூட்டோடு குடித்தாள்

தூக்கத்திலே அப்பா பிதற்றும் சப்தம் கேட்டது

அம்மா காபி வாங்கிய தூக்குவாளியை அருகில் இருந்த திருக்கு குழாயில் கழுவிவிட்டு அவர்களிடம் சொன்னாள்

“நீங்க வேணும்னா, மலை ஏறிப்போய் சாமி கும்பிட்டு வர்றீங்களா“

இருவரும் ஒரே நேரத்தில் வேணாம்மா என்றார்கள், அம்மா அவர்களை கட்டாயப்படுத்தவில்லை, அம்மா அறைக்குள் போய் வெறுந்தரையில் படுத்துக் கொண்டாள்,

இரவாகும்வரை ரமாவும் காதம்பரியும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள், அருகாமை அறை ஒன்றில் இருந்த மூன்று வயது சிறுமி பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள், மலையின் மீது பிரகாசமாக விளக்குகள் எரியத்துவங்கின, படி வழியாக ஏறிப்போகின்றவர்கள் கடந்து போவது தெரிந்த்து, மனம் கனத்து போய் வேதனையோடு அப்பா உறங்கிக் கொண்டிருந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தாள் காதம்பரி,

ஒரு மனிதரால் எத்தனை பேருக்கு துயரம், அப்பா ஏன் இதை புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்,

நினைக்க நினைக்க துயரம் பீறிட்டுக் கொண்டிருந்த்து, அம்மா உறக்கம் கலைந்து எழுந்து முகம்கழுவிட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டுவிட்டாள், யாரோடும் ஒரு வார்த்தை பேசவில்லை, அவளது கண்களின் அப்பியிருந்த சோகமும் வேதனையும் காதம்பரியை ரணமாக்கியது

அப்பா இரவு மணி பத்தாகியும் எழுந்து கொள்ளவில்லை, அம்மா அருகில் உள்ள கடையில் போய் அப்பாவிற்காக நாலு இட்லி வாங்கி வந்து படுக்கை அருகே வைத்துவிட்டு அவளும் படுத்துக் கொண்டாள்,

மீதமிருந்த ஒரு போர்வையை விரித்து காதம்பரியும் ரமாவும் சுவரை ஒட்டி படுத்துக் கொண்டார்கள், இருவருக்கும் உறக்கம் கூடவேயில்லை, பேசாமல் இப்படியே செத்துபோய்விட்டால் என்னவென்று காதம்பரிக்கு தோன்றியது, ரமா அவள் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்,

திடீரென வெளியே மழைக்காற்றும் மின்னல்வெட்டுமாக இருந்த்து. அம்மா எழுந்து ஜன்னல்களை மூடிவைத்தாள், சட்டென மின்சாரம் துண்டிக்கபட்டது, இருட்டில் அந்த அறை ஒரு சவப்பெட்டி போலவே இருந்தது, அப்பா மின்சாரமில்லாத புழுக்கத்தை உணர்ந்தவரைப் போல எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

எப்போது உறங்கினாள் என்று காதம்பரிக்கு தெரியவில்லை, அவள் விழித்து கொண்ட போது வாசற்கதவு திறந்து கிடந்தது, மணி ஆறுக்கும் மேலாக இருக்ககூடும், இன்றைக்கு லீவு சொல்லவில்லை, நிச்சயம் பார்மசி ஒனர் தன்னைத் திட்டி தீர்க்கப்போகிறார், ரமா உருண்டு கட்டிலின் அடியில் போய் கிடந்தாள், படுக்கையில் இருந்த அப்பாவை காணவில்லை, அம்மா எங்கே போனாள என தேடினாள், அவளையும் காணவில்லை, வராந்தாவிற்கு வந்து பார்த்த போது அம்மா தூக்குவாளியில் காபி வாங்கி கொண்டு அவசரமாக நடந்து வருவது தெரிந்த்து,

காதம்பரி அம்மாவை முறைத்தபடி இருந்தாள், அறைக்கதவை திறந்து உள்ளே பார்த்த அம்மா உங்க அப்பா எங்கடி என்று கேட்டாள்

“நான் பாக்கலே“ என்றாள் காதம்பரி

“காபி வாங்கிட்டு வர்றதுக்குள்ளே எங்க போயி தொலைஞ்சார்“ என அம்மா அலுத்துக் கொண்டாள்

இந்த மனுஷனுக்காக எதற்கு அம்மா இப்படி ஒடியோடி உழைக்கிறாள் என்று ஆத்திரமாக வந்தது, அப்பாவைத் தேடி அம்மா வராந்தாவின் கடைசிவரை நடந்த போது காதம்பரி அம்மாவை திட்டினாள்

“நீ இரும்மா, அவரு தானா வருவார், இல்லே அப்படியே போய் தொலையட்டும்“

அம்மா திரும்பிவந்து மரப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்

காலை எட்டு மணி இருக்கும் போது அப்பா தலையை மொட்டை அடித்து சந்தனம் பூசி கழுத்தில் ஒரு மாலை போட்டுக் கொண்டு நெற்றி நிறைய திருநீறுடன் விடுதியின் உள்ளே நடந்து வந்து கொண்டிருந்தார்,

ரமாவும் காதம்பரியும் அந்த விசித்திர கோலத்தை முறைத்து பார்த்தபடியே இருந்தார்கள்

“சரஸ்வதி, சாமி கும்பிட்டாச்சி, இப்போ தான் மனசு நிம்மதியா இருக்கு, நாம ஊருக்கு கிளம்பலாம்லே“ என்றார் அப்பா

அம்மா சரியென தலையாட்டினார், அவர்கள் நடந்து பேருந்து நிலையத்தை நோக்கி போகையில் அப்பா திடீரென ஏதோ யோசனை வந்தவரை போல பாக்கெட்டில் இருந்த திருநீறு பொட்டலத்தை பிரித்து பூசிக்கோங்க என்றார், அவர்கள் மௌனமாக திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார்கள்

அப்பா யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டே நடந்தார்

“பேமிலியோட பழனிக்கு வந்து சாமி கும்பிட்டு இப்போ தான் பஸ் ஏறப்போறேன், மதியம் வந்துருவேன், நல்ல தரிசனம், இனிமே எல்லாம் நல்லதா தான் நடக்கும் “

அவர்கள் பேருந்து நிலையத்தினுள் உள்ளே போன போது அப்பா சொன்னார்

“பஸ்ல போற வழியில ஒட்டன்சத்திரத்துகிட்டே டிபன் சாப்பிட்டுகிடுவோம், இங்கே வேணாம் “

அம்மா அதற்கும் சரியென்றே தலையாட்டினாள், அதைக்கேட்டு ரமா கேலியாக காதம்பரியிடம் கண்ஜாடை காட்டினாள், அவளால் சிரிக்கமுடியவில்லை, முட்டிக் கொண்டுவரும் அழுகையை விழுங்கிக் கொண்டு தலைகுனிந்தபடியே தனியே நடந்து கொண்டிருந்தாள் காதம்பரி.

அவர்கள் ஒரு குடும்பமாக போய்க் கொண்டிருந்தார்கள்,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *