வெறும் சோற்றுக்கே வந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 4,107 
 
 

(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யன்னல்களைத் திறந்து விட்டால் வெளியே றோட்டுத் தெரிகிறது. நீண்ட, அகலமான, தார் ஊற்றப்பட்டு ஒப்பரவு செய்யப்பட்ட நேர்த்தியான றோட்டு அது. எந்த நேரமும் அந்த றோட்டு சுறுசுறுப்பாகக் காணப்படுகிறது. அடிக்கடி பஸ்களும், கார்களும், அங்குமிங்குமாக அலையெறிந்து கொண்டிருக்கும் மனித வெள்ளமுமாக, அது நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாள் பூரா கண்ணாடி யன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு, அவளது பார்வைக்கு எட்டக்கூடிய தூரத்திலேயுள்ள அந்த றோட்டிலே என்ன நடந்து கொண்டிருக்கிறதென்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வள்ளிக்குப் பழக்கப்பட்டு விட்டது. இதற்கு முன்பெல்லாம் அவளுக்கு இத்தகைய பரபரப்பான மஹேந்திர ஜாலங்கள் நிறைந்த றோட்டுகளைத் தெரியாது. அவள் கண்டதெல்லாம் வெறும் புழுதி றோட்டுகளும், காட்டுமரஞ் செடிகளும், காய்ந்து கறுத்த சில மனிதர்களும் டிராக்டர்களும் மட்டுமே. கிளிநொச்சி வட்டாரமொன்றைச் சேர்ந்த குடியேற்ற நிலப்பகுதியொன்றில் ஏழு குழந்தைகளுக்கு ஒரு அக்காவாக ஒரு சிறிய குடிசையொன்றுக்கு பசியும் பட்டினியும் அழுகையும் அச்சமுமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வேளையில் தான் அவளை அதிர்ஷ்டம் வந்து அணைத்து விட்டதாகப் பெற்றோர் சொன்னார்கள்.

அவளுக்கு அது எப்படியான அதிர்ஷ்டம் என்பது தெரியாது. தாயைக் கேட்டாள். அவளுக்கு மூன்று நேரமும் வேளாவேளைக்கு, இறைச்சி, மீன், முட்டையோடு சாப்பாடு கிடைக்கப்போகிற தென்றும் விதம்விதமான சட்டைகளை அவள் அணியலாமென்றும், வசதியும் காற்றோட்டமும் நிறைந்த பெரியதொரு வீட்டிலே பொழுது கழியப் போகிறதென்றும், மகிழ்ச்சி நிரம்பிய முகத்தோடு தாய் கூறினாள். இறைச்சி, மீன், முட்டையென்றதும், முதலில் வள்ளிக்குத் தலைகால் புரியவில்லை. இத்தகைய சாப்பாடுகளை அவளது சொந்த வீட்டிலே எங்கே காண முடிகிறது? சாம்பல் மொந்தன் வாழைக் காய்களை வெட்டி நறுக்கி பூசனிக் காய்களைப் பிளந்து துண்டுகளாக்கி-தினம் தினம் சமையல் நடக்கிறது. சாப்பிட்டு நாவுக்கும் சலிப்புத் தட்டிவிட்டது. வாழைக்காயையும் பூசனிக் காயையும் கண்ட வள்ளிக்கும் ஒருவித வெறுப்பு வந்து விட்டது.

வள்ளிக்குக் கொழும்பிலே ஒரு வீட்டில் வேலை கிடைத்திருக்கின்ற செய்தி மற்றக் குழந்தைகளுக்குள் பரவியது. இறைச்சி, மீன், முட்டை, இந்தச் சொல் லேசாக ஒரு பொறாமையையும் அவர்களுக்குள் கிளறிவிட்டது. வள்ளிக்கு நேரே இளையவளான காந்தி, தாயின் சேலைத் தொங்கலைப் பலாத்காரமாகப் பற்றி இழுத்துத் தன்னையும் வேலைக்கு அனுப்பும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். அவளின் கெஞ்சல் தாயின் காதுகளில் ஏறவில்லையென்றதும் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது. அவளது ஆக்கினையால் சினமுற்று, தாய் கைகளை ஓங்கிய போது காந்தியின் உள்ளம் ஆவேசமடைந்து, விம்மலுக்கிடையே புலம்பினாள்.

“அவவுக்கு நெடுக-வாரப்பாடு தன்ரை மூத்த மேளிலை தான்! எங்களிலை எப்பெனும் பாசமில்லை ….. அவளுக்கு இறைச்சி, மீன், முட்டையோடு சாப்பாடு போட்டுக் கொழுக்க வைக்க வேணுமெண்டு, அனுப்ப நினைக்கிறா. எங்களைப்பற்றி, எள்ளளவும் நினைக்கிறா இல்லை. அவளைவிட நான் தானே ஓல்லி? எனக்குத்தானே கைகாலெல்லாம் எலும்பு தெரியுது….. நான்தானே பேத்தைச்சி மாதிரி இருக்கிறேன்? என்னை அனுப்பினால், கொழுத்துவந்திடுவேன் எண்டு அவவுக்குப் பொறாமையா இருக்கு….. ஒரு வாழைக் காயையும், கோதம்பைப் புட்டையும் காய்ச்சிக் காய்ச்சித் தந்துட்டு வேலை மட்டும் மாடு மாதிரி வாங்கிப் போடுவா. பாப்பம் …… பாப்பம்…… இனிப் பாப்பம், பிள்ளை எண்டு கெஞ்சிக் கொண்டு வேலை செய்விக்கவா, வா, காட்டித் தாறன்.”

தாயும் தந்தையும் கம்பீரமான தமது உடலைக் கோணிக்குறுகலாக்கி முகம் விகசிக்க ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அவளை யாரோ ஒரு அந்நியனுடன் வழியனுப்பி வைத்தபொழுது காந்தி சொன்னது போல அவளுக்கு இனிக் கோதுமைப்புட்டும் வாழைக்காய்க்கறியும் சம்பலும் நித்திய சாப்பாடாகாது என்ற எண்ணமே பிரிவுத் துயரைப் போக்கடித்திருந்தது. இறைச்சி…..! மீன்! முட்டை! அவற்றை அவளால் கற்பனை செய்ய முடியவில்லை! அவளது வீட்டிலே நிற்கும் நாலைந்து கோழிகள் ஒன்று மாறி ஒன்று இட்டுத் தள்ளும் முட்டைகளை, ஸ்கூல் மாஸ்டர் வீட்டுக்கும் சனிற்ரறி வீட்டுக்கும் எடுத்துச்சென்று காசாக்கி மீண்டதையே, அவள் தனது வாழ்க்கையில் கண்டிருக்கிறாள். அந்த முட்டைகள் அவளது வீட்டில் கோதம்பை மா வாங்குவதற்காகவும், மண்ணெண்ணெய் வாங்குவதற்காகவும் கறி மிளகாய் வாங்குவதற்காகவும், காசுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் படுகின்ற ஒரு பண்டமாகிவிட்டது. கோழிகள் அடைகிடந்து விட்டால் போதும், மண்ணெண்ணையோ, கோதம்பைமாவோ வாங்க முடியாமல் அந்த வீடு தவியாய்த் தவித்துவிடும். அடைகிடக்கிற கோழிகளைப் பார்த்து “படுவான் அடிச்சதுகள் என்று அவளது தாய் திட்டித்தீர்ப்பதையே இப்படியான சந்தர்ப்பங்களில் கேட்கலாம். ஒருவிதத்தில் அது கோழிகளுக்கே உரித்தான வசவுகளல்ல. மறைமுகமாக அது அவளது கணவனையும் சாடுகிறது. வயிறுமுட்ட, எங்கோ சென்று கள்ளை நிரப்பிவிட்டு வந்து, பிதற்றலும் அதட்டலும்

அட்டகாசமுமாகக் கொட்டிலுக்குள் முடங்கிக் கிடக்கும் அவளது கணவனை, கோழியைச் சாட்டி, ஆட்டைச் சாட்டி, குழந்தைகளைச் சாட்டி. தனது வயிற்றெரிச்சலையெல்லாம் அவள் கொட்டிக்கொண்டிருப்பாள். நேரடியாக அவனைத் தாக்கினால் அவன் கொடுக்கும் அடிகளையும் உதைகளையும் வாங்கிக் கட்ட முடியாது. உடலில் எள்ளளவும் இடமில்லை. முன்பெல்லாம் வாங்கிக் கட்டியாகிவிட்டது. வள்ளி தலைச்சன் குழந்தையாக வயிற்றிலே இருந்த காலத்தில் கணவன் என்ற அந்த முரட்டு ஆத்மா பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைத் தூக்கிவந்து பார்த்துப்பாராமல் முதுகிலே இரண்டு குறிகளைக் கதறக் கதற வைத்திருக்கிறது. அவை இன்னும் பெரிய தழும்புகளாக சட்டையை அகற்றி விட்டுப் பார்த்தால் முதுகிலே தெரிகின்றன…

வீட்டில் சூழ்நிலையிலிருந்து விடுபட்டு, பெரிய வீதிகளையெல்லாம் பிரமிப்போடு கடந்துவந்து, கடைசியுல் பெரியதொரு பங்களாவின் வாசலில் வந்து நின்ற பொழுது வள்ளிக்கு உடலெல்லாம் புல்லரித்தது. அது ஒரு சொர்க்கத்தின் வாசல் போன்ற உணர்வு பரவியது. முற்றத்துக்கு வெளியே பூத்துக் குலுங்கிய, சிகப்பு, மஞ்சள், வெள்ளை, றோஸ்நிற ரோஜாமலர்கள் அவளது இதயத்திலே கற்பனைத் தந்தியை மீட்டின. அந்த வண்ண வண்ணப் பூக்களை அவள் முன்பு கண்டதில்லை. அவற்றைப் பிடுங்கி, சிறு வயதிலேயே அடர்த்தியும் நீளமுமாக வளர்ந்திருக்கும் தனது கரு நிறக் கூந்தலில் – பிறகு – சூட்டிப் பார்த்துக்கொள்ளலாம் என எண்ணிக் கொண்டாள். கூந்தலிலே மலர்களைச் சூட்டிப் பார்ப்பது அவளுக்குப் பிடித்தமான ஒன்று. குடியேற்றப் பகுதியிலுள்ள காட்டு ஓரங்களில் ஓங்கி நிற்கும் கொன்றை மரங்களிலும் பிச்சி மரங்களிலும் அலரி மரங்களிலும் ஏறி, மலர்களைப் பிடுங்கி, மலர்களை மாலை கோர்த்துத் தனக்கும் தனது தங்கைகளுக்கும் சூடி, அழகு பார்த்து அவள் மகிழ்ந்ததைப் போலவே இந்த மலர்களையும் பறித்து இங்கு சில விளையாட்டுத் தோழிகளையும் சேர்த்துக் கொண்டு அவள் துள்ளித் திரியலாம்.

இறைச்சி, மீன், முட்டை, இந்த இனிய கனவுகளுடன் மகிழ்ச்சியும் அச்சமுமாக அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த வள்ளிக்கு அதிர்ஷ்டம் வந்து அணைத்து விட்டதாகப் பெற்றோர்கள் சொன்னதன் பொருள் அப்பொழுது தான் புரிந்தது. காந்தி அழுது புலம்பியபோது தன் மீது அவளுக்கு ஏற்பட்டுவிட்ட பொறாமை குறித்து ஆத்திரப்பட்டது தவறு என்று மனம் வேதனைப்பட்டது. அவளுக்கும் எங்காவது ஒரு பங்களாவில் வேலை கிடைத்து தன்னைப் போல இறைச்சி, மீன், முட்டைகளை யெல்லாம் சாப்பிடக் கூடிய அதிர்ஷ்டம் அரவணைத்துக் கொள்ள வேண்டுமென அவள் உள்ளம் பிரார்த்தித்தது.

அவள் வேலைக்காரியாகப் பொறுப்பு ஏற்க வேண்டியிருந்த அந்த வீட்டிலே இரண்டே இரண்டு நபர்கள் மட்டும் தான் இருந்தார்கள்! அவர்கள் கணவனும் மனைவியும். காலையிலே இருவரும் எங்கோ ஒரு பெரிய கந்தோருக்கு, மிக நேர்த்தியாகப் புறப்பட்டுச் செல்வார்கள். பின்னேரம் திரும்பி வருவார்கள். இது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல! அவளது தாயும் தந்தையும் கூலிகள்! காலையிலே புறப்பட்டுச் சென்றால் பின்னேரம் சூரியன் மறைந்துவிட்ட பிறகு தான், அவர்களும் வீட்டுக்கு வருவார்கள். ஒருநாள் பூராவும் அவளும் அவளது சகோதரர்களும் வீட்டு வளவுக்குள்ளும் காட்டு நிலங்களிலும் அயல் அட்டைகளிலும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கூட்டாக அவர்களைப்போன்றே வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் அயல் வீட்டுச் சிறுசுகளான நந்தன், லச்சுமி, நாகன், மாணிக்கம் எல்லோருமாகக் கூட்டுச் சேர்ந்து விடுவார்கள். பற்றைகளிலே படர்ந்து வளர்ந்திருக்கும் குன்றுமணிச் செடிகளைத் தேடிப்பிடித்து இளம்பருவத்திலிருக்கும் குன்றுமணிக் காய்க் கொத்துகளைப்பறித்து அதற்குள் மெல்லிள றோஸ் நிறத்திலிருக்கும் மணிகளை மாலையாகக் கோர்ப்பது, அவர்களுக்குப் பிரீதியைத்தருகிறது. அல்லது குறிஞ்சாக் கொடியின் கீழ், முற்றிய காய்கள் வெடித்துப் பிளந்து, பஞ்சு பறந்து, உதிர்ந்து கிடக்கும் கோதுகளைப் பொறுக்குவார்கள். அது பாம்பைப் போன்றிருக்கும் அந்தக் கோதில் இரு சிறு துவாரமிட்டு, குன்று மணிகளை, கருமை நிறம் தெரியத்தக்கதாகச் சொருகி விட்டால் அப்புறம் பேசவே வேண்டியதில்லை. நிஜமான பாம்பேதான்! அது பட மெடுத்து, ஆடி அசைந்து சீறிச் சினந்து ஆடவேண்டாமா? அதை ஆட வைக்கிற இரகசியம் அவர்களுக்குத் தெரியும். நீண்ட கூந்தல் மயிரைக் கோதின் முனையில் துளை இட்டு முடிந்து இவ் இரண்டையும் தென்னை ஈர்க்கில் தொடுத்துவிட்டபின் பார்க்கவேண்டுமே! பாம்பு துள்ளித் துள்ளி ஆடும்! சீறிச் சினந்து ஆடும்! பாய்ந்து பாய்ந்து கொத்தும்! அதைக்கண்டு குழந்தைகளெல்லாம் ஆரவாரமாகக் கூச்சல் போடுவார்கள்! சிரிப்பார்கள்! அந்தப் பாம்பைத் தாங்களும் ஆட்டுவதற்குத் தரும்படி கெஞ்சுவார்கள். அழுவார்கள்….. அல்லது குரும்பட்டைத்தேர் கட்டி விளையாடிக்கொண்டிருப்பார்கள். இந்த விளையாட்டுகளால் நெடு நேரமாகப் பசி மறந்து போயிருக்கும்!

அந்த வீட்டுக்கு வந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் அவளுக்குப்பல உண்மைகள் தெரிந்து விட்டன. பதினொரு வயதுச் சிறுமியாக இருந்த போதிலும் எதையும் அவளால் சிந்திக்க முடியும். அந்தச் சுற்று வட்டாரத்திலே அவளுக்கு எந்த ஒரு விளையாட்டுத் தோழிகளுக்கும் இடமில்லை! மிக நேர்த்தியான- விலை உயர்ந்த உடைகள் அணிந்து அவர்கள் வண்ணப் பூச்சிகள் போலத் திரியும் சிறுமிகள்! அவர்கள் முகம் கொடுத்து அவளோடு பேச வேண்டுமே! ஊஹும்! அவர்களது முகத்தில்தான் என்ன இளக்காரம்! அவளை ஏற இறங்க வைத்துப் பார்க்கிற பொழுது தான் எத்துணை இளக்காரம் தெரிகிறது. யன்னலுக் கூடாக முகம் புதைத்துக் கைகளை அசைத்து அவர்களைக் கூப்பிடவே அவளுக்கு அச்சமாக இருக்கிறது! நடுக்கமாக இருக்கிறது! துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவள் நிற்கும் யன்னல்! ஓரமாகக் கடந்து சென்ற சிறுமி ஒருத்தியை அவள் கூப்பிட்ட பொழுது- “முடியாது” என எவ்வளவு வேகமாக அந்தச் சிறுமி தன் தலையை ஆட்டிவிட்டு ஓடிவிட்டது! அவள் ஓடியாடிய அவளது சொந்தப் புழுதி மண்ணில் நந்தா” என்று அவள் கூப்பாடு போட்டால் போதுமே. ஒரு பரிவாரமே அவளைத் தேடி ஓடிவந்து விடும்.

இறைச்சி …மீன்… முட்டை…. இந்த இனிய கனவுகளுடன் அடியெடுத்து வைத்த அவளக்கு, இறைச்சி மீன் முட்டை இவைகளைக்காண நித்திய வாய்ப்பு இருக்கத்தான் செய்தது! ஆனால்….. ஆனால்…… வீட்டிலே ஆரவாரமாகச் சத்தமிட்டு, தாயிடம் உரிமையோடு கேட்டு விரும்பியவாறு வாய் நிறையச் சாப்பிடுகிற அந்த உரிமையையே அவள் இழந்துவிட்டபின், இறைச்சி – மீன் – முட்டை – என்ற அந்த உணவு வகைகளே அவளுக்குச் சங்கடத்தை ஊட்டின. மௌனமாக ஆசைகளை அடக்கிக்கொண்டு, “பசிக்கிறதே” யென முரண்டு பிடிக்க முடியாமல் எஜமானும் சீமாட்டியும் சாப்பிடும் வரை காலம் தாழ்த்தி, வாயிழந்த, அந்த நிலைதான் அவளுக்குக் கிடைத்த அதிர்ஷ்டமா?

அன்றொரு நாள் ஏதோ ஒரு கதையில் அவளைப்பார்த்து, வீட்டு எஜமானி சொன்னாள்:

“டியோய் வள்ளி இப்படியெல்லாம் உன்ரை வீட்டிலே சாப்பிட உனக்குக் கிடைச்சிருக்காடி? வரையிக்கை பயித்தங்காய் மாதிரி, பேத்தைபத்தி வந்தாய். இப்ப என்னடா என்றால் ஆனைமாதிரி கொழுத்திட்டாய்! இந்தச் சொகுசெல்லாம் உனக்குத் தொடர்ந்து வேணுமெண்டால் நல்ல பிள்ளையாக எங்களோடை நெடுக இருக்க வேணும்! இல்லையோ பேந்தும் போய், உங்கடை குச்சிவீட்டுக்குள்ளை, நாய், பண்டி வாழ்க்கைதான் நீ வாழுவாய்! அங்கையென்ன, உனக்கு கோதம்பை றொட்டியும் அரை குறைச் சோறும், சம்பலும் தானே உன்ரை கொப்பன். கோத்தை சமைத்துப் போடுவினம்! உன்ரை அதிர்ஷ்டமடி! நீ எங்கடை வீட்டுக்கு வேலைக்காரியாக வந்தது! நீ ஊருக்குப் போகயிக்கை அங்கையுள்ளவங்கள் எல்லாம் உன்னைப் பார்த்து அதிசயிக்கப் போறாங்கள்! நீதான் அங்கை பெரிய இடத்துப் பெட்டை போல இருக்கப் போகிறாய்!”

எஜமானி இப்படிச் சொல்வதை ஆரம்பத்தில் கேட்ட பொழுது அவளுக்கும் பெருமையாகத்தான் இருந்தது! எஜமானியும் அடிக்கடி இப்படிச் சொல்லிக்கொண்டுதான் வருகிறாள் ……. அவள் ரொம்பப் பெரிய அதிர்ஷ்ட சாலியாம்!

***

அந்த வீட்டிலேயுள்ள பெரிய பெரிய நாற்காலிகளையும் தளபாடங்களையும் கண்ணாடிப் பொருட்களையும் அலங்காரங்களையும் மேலெழுந்த வாரியாகப் பார்த்து, பணக்கார வீடொன்றில் வேலைக்காரியாக இருக்கின்றாள் எனத் திருப்திப்படுவதாக இருந்தால், வள்ளிக்கு அந்த வீடு பெரிய அதிர்ஷ்டமாகத்தான் இருக்கவேண்டும். அப்படியே , அந்த வீடு தனது அதிர்ஷ்டத்தின் விளைவு என அவளும் கொண்டவள் தான்! ஆனால் அவளது பிஞ்சு உள்ளம் துடிக்கக்கூடிய முறையில், அவளை ஒரு தீண்டத்தகாதவள் போல அவர்கள் கருத்திற்கொண்டபொழுது தான் அவளுக்கென்று ஒரு புதிய விதியை” அந்தப் பணக்காரக் குடும்பம் சிருஷ்டிக்க முயல்வதை அவள் கண்டாள்…

வள்ளிக்கென்று ஒரு பழைய தட்டத்தைக் கொடுத்து, தரையிலே உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்றும் ஒரு பாயைக் கொடுத்து சமயலறையின் ஒரு மூலையிலே விரித்துப் படுக்குமாறும் அவர்கள் கூறியபொழுது – அவர்களது அந்த விதிக்குப் பணிந்தவளாக அவள் தன்னைக் காட்டிக்கொண்ட போதிலும் ஒரு கேள்வி அவளுக்குள்ளேயே பிறந்தது. ஒரு குரல் ஆவேசமாகக்கிளர்ந்தது. அவள் பிறந்து வளர்ந்த இந்த உலகத்தில் அவளுக்கு முதன் முதலாகத் தெரிய வந்த ஏற்றத்தாழ்வு, சாதி அமைப்பு ஒன்றேதான்! அதன்படி பார்த்தால், அவள் ஒரு வேளாளர் பெண்! தாழ்த்தப்பட்டவர்களை வீட்டுக்கு வெளியே நிறுத்தி, அவர்களது கை மண்டையிலே செம்பு ஒட்டிக்கொள்ளாமல் குபுகுபு வென்று தண்ணீர் ஊற்றிய ஒரு உயர்சாதிப் பெண்ணாகக் கிளிநொச்சியிலே உலாவி வந்த ஒருத்திக்கு – அதே விதிமுறைகளை அதோ இவர்களும் சிருஷ்டிக்கிறார்கள்! அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு இடம்! அவள் தரையில் தான் உட்காரலாம்! நாற்காலியில் உட்காரமுடியாது! வீட்டைப்போல சகஜமாக – தாராளமாக – சுதந்திரமாக – எந்த ஒரு பொருளையும் தீண்ட முடியாது!

எஜமானனையும் எஜமானியையும் தேடி வரும் நண்பர்களுக்கும் சினேகிதைகளுக்கும் இன்ன கிளாஸில் தான் தேநீர் வழங்கப்பட வேண்டு மென்றோ இன்ன கோப்பையில்தான் உணவு பரிமாறலாமென்றோ எந்த ஒரு நியதியும் கிடையாது. ஆனால் அவர்களோடு தப்பித் தவறி ஒரு வேலைக்காரி வந்து விட்டால் வள்ளியின் கிளாசில் தான் மரியாதை’ க்குப் பயந்து தேநீர் வழங்க உத்தரவாகிறதே!

– ஆனால் எஜமானி சொல்லுகிறாள்:- “உன்ரை வீட்டிலே அரையும் குறையுமாகச் சாப்பிடக்கூட வழியில்லாமல் கிடந்து, சாக இருந்த நீ உன்ரை நல்ல காலத்துக்குத் தான் இங்கே வந்திருக்கிறாய் இப்படியான ஒரு சொகுசான அறை கூட உனக்கு படுக்கக்கிடைச்சிருக்காது! என்னடி சொல்லுகிறாய்?”

காற்றோட்டமும் வெளிச்சமும் வசதிகளும் நிறைந்த வீடாக இது இருக்கலாம்….. அவள் இருந்தது, பலரும் ஒன்றாக அடைந்து கிடக்கும் ஒரு சிறு குடிசை என்பதும் உண்மையே.

அதன் ஒரு மூலையில் இருக்கும் சாக்குக் கட்டிலில் அவள் விரும்பியது போல ஏறிப் படுக்க முடிகிறது. இங்கே எத்தனை கட்டில்கள்! குளிரெடுத்தாலும் முடிகிறதா என்ன? உறைகளைத் தேய்க்கவும் படுக்கைவிரிப்புகளை அலம்பவும், மடித்து வைக்கவும் மட்டுமே முடிகிறது.

“உன்ரை அதிர்ஷ்டம் தானடி எங்களட்டை வந்திருக்கிறாய்”

ஒருநாள் இப்படி எஜமானி கூறிய சமயம் ஏதோ ஒரு துணிச்சலில் வள்ளி சொன்னாள் :

“எங்கடை வீட்டிலே இருக்கிற சொகுசை உங்களுக்கு என்னம்மா தெரியப்போகிறது?”

இந்தப் பதிலைக் கேட்டதும் அம்மாவும் ஐயாவும் ஒரு கணம் வெல வெலத்துப் போய்விட்டார்கள்! ஏதோ ஒரு போர்க்கோலத்தைக்கண்டு அஞ்சியவர்களைப்போல “என்னடி சொன்னாய்?” என அதட்டினார்கள் …. அம்மாவிடம் செல்லம் கொடுத்து விட்டாய் என ஆங்கிலத்தில் ஐயா சொன்னதும், அது தன்னைப்பற்றியது என அவளுக்குப் புரிந்தது.

4 அன்று வழக்கத்துக்கு மாறாக அன்பு ததும்ப வள்ளியை அழைத்த வீட்டு எஜமானி அவளுக்கு இரண்டு மூன்று – ரூபாய் பெறுமதியில்லாத இரு தோடுகளை அன்பளிப்பாக வழங்கிவிட்டு, அவளது அழகைப் பார்த்து ரசிக்க விரும்புகிறவள் போல வள்ளியிடம் சொன்னாள்.

“எங்கேடி சுரையைக் கழற்றித் தோட்டைக் காதிலை போட்டுக்கொண்டு வா… ஓட்டை குத்திவிட்ட கொப்பனுக்கு, பாவம் – இவ்வளவு நாளும் ஒரு தோடு போட்டு உன்னை அழகுபார்க்கத்தானும் வழியில்லாமை இருந்திருக்கடி! உன்ரை நல்லவிதிக்கு எங்களட்டை வந்திருக்கிறாய். போ… போ… போட்டுக் கொண்டு வா”

அவை வெள்ளித் தோடுகள்! அவை கிடைத்தது கூட பேரதிர்ஷ்டம் போல எஜமானி அபிநயித்துச் சொன்ன பொழுது வள்ளிக்கு முகமெல்லாம் விகசித்தது. பெண்களுக்கே உரித்தான நாணத்துடன் அவற்றை வாங்கி கண்களில் நன்றியுணர்ச்சி பொங்க அவள் தனது காதுகளில் அவற்றைப் பூட்டிக் கொண்டிருந்த சமயம் எஜமானி தனது கணவனைப்பார்த்து ஆங்கிலத்தில் சொன்னாள்:

“இது என்ன இந்தப் புதிய ஏற்பாடு என்று யோசிக்கிறீர்களா? இப்பொழுதெல்லாம் வேலைக்காரர்களைப் பிடிப்பதென்றால் எவ்வளவு ரொம்பப் பெரிய கஷ்டம் சொல்லுங்கள். போனமுறை பொங்கல் தினத்துக்கு ராணி வீட்டிலே நின்ற இரு வேலைக்காரிகளும் புதுச் சட்டை நகை என்றெல்லாம் வாங்கிக்கொண்டு பிறகு வருவதாகப் போனவர்கள் தான், திரும்பிவரவேயில்லை. ஏன் இறைவரிமதிப்பாளர் இராகவன் வீட்டை எடுத்துப்பாருங்களேன். அங்கே நிண்ட வேலைக்காரப் பெட்ைைட களவெடுத்து நல்லாச்சாப்பிடுமாம். ஒருநாள் தேத்தண்ணி போட்டு தன்ரையெண்ணத்துக்கு குடித்துக்கொண்டிருந்ததைக் கண்டுவிட்டு மிஸ்ஸிஸ் ராகவனக்குக் கோபம் வந்துட்டுது. நல்லா அடிச்சுப் போட்டா, அந்தக் கழிசறை…. அதுடைய பிச்சைக்காறப்புத்தி…… திண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யிற நாய் – பொலிசட்டைப் போய்ச் சொல்லி மானக் கேடாப் போச்சு. நல்ல காலத்துக்குப் பொலிஸ் ராகவனுக்குப் பழக்கமா இருந்ததாலை மேலுக்குப் போகவிடாமை உள்ளுக்கேயே சடைஞ்சாச்சு….. இதை நான் ஏன் சொல்றணெண்டால் இந்தப் பெட்டையை நாங்கள் இரண்டு மூன்று நாளைக்குப் பேய்க்காட்ட வேண்டியிருக்கு, அவளுடைய தகப்பன் வாறான். பிள்ளையைப் பார்க்கப் போறானாம். கடிதம் போட்டிருக்கிறான்.”

…வள்ளியோடு முகம் கொடுத்துக் கதைக்காத ஐயா மனைவியின் ஆங்கில லெக்ஸரைக் கேட்டதும் சொன்னார்.

“டியேய் வள்ளி! சோறு வீடுகளில் எண்டால் வேலைக்காரிகளுக்குச் சாப்பிடக் கூடக் குடாதுகள்! உனக்கு வேலையும் குறைவு. அம்மா உனக்குச் செல்லமும் தாறா! ஏதோ நல்ல விதியிருந்து எங்களட்டை வந்திருக்கிறாய்.”

***

வண்ணமலர்ச் செடிகள் மிகுதியாக வளர்ந்து நிற்கும் அந்த வீட்டுக்குள் நுழைந்த வள்ளியின் தந்தை கந்தனுக்கு அப்படிப்பட்ட ஒரு வீட்டை ஏழு தலைமுறை சென்றாலும் தனது சந்ததியால் கட்டிமுடிக்க இயலாதென்ற திடமான நம்பிக்கை அதைப் பார்த்ததும் ஏற்பட்டது. அங்குள்ள சுவர்கள்- அங்குள்ள விறாந்தைத் தரைகள் – அங்குள்ள மின் விளக்கு அலங்காரங்கள் – அங்குள்ள மீன் தொட்டில்கள் யாவுமே அவனைப் பிரமிப்பிலாழ்த்தின. உண்மையிலேயே வள்ளி அதிர்ஷ்டக் காரிதான்! அவள் பிறந்த நட்சத்திரத்தை அவன் நினைத்துப் பார்த்தான். திருவோணம். ராணியாட்டம் வாழுவாள் என்று சோதிடர் சொல்லி இருக்கிறார்……

ஒரு பக்கத்தில் ஒதுங்கி, கைகட்டி எஜமானனுக்கும் அவரது மனைவிக்கும்பதில் சொல்லிக்கொண்டிருந்த அவனுக்கு வள்ளிக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்த கிளாசில் தேநீர் வந்தது! புனிதமான கோயிலொன்றுக்குள் பிரவேசித்து, தேவி சமேதரராய் எழுந்தருளியிருக்கிற ஆண்டவன் முன்னால் பக்திப் பரவசமாக நிற்கும் ஒரு பக்தனைப் போல அவன் குரல் தளதளத்தது.

“எனது தெய்வங்களே! இதெல்லாம் என்னத்துக்கு? மூன்று நேரம் சாப்பாடு குறையாமல், வள்ளியை உங்க – சொந்தப் பிள்ளை போலப் பாக்கிறியள் ……. அவள் அதிர்ஷ்டம் செய்துதான் இங்கை வந்தவள். அவளை ஒருக்கா அவளது தாய் பார்க்க வேணும், கூட்டிக்கொண்டு வா எண்டு சொல்லி ஆசைப்பட்டவள் தான். ஆனா, தாய்க்குத் தாயாய் என்ரை அம்மா கவனிக்கையிக்கை, அவளை என்னத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டவேணும்…? ஆறுதலாக – தாய் பார்க்கட்டும்.”

சுவரின் ஒரு மூலையில் சாய்ந்து நின்ற வள்ளியின் குரல் திடீரெனத் தந்தையை நோக்கி எழுந்தது.

“ஏலாது! நான் வரப் போறன். இங்கே நிற்க மாடான்”

“ஏண்டி… அங்கை வந்து வயிறு காய்ஞ்சு சாகப் போறியோ? தெய்வம் மாதிரி இந்த அம்மாவையும் ஐயாவையும் விட்டுவிட்டு வாறனெண்டு சொல்ல உனக்கு என்ன பைத்தியமே?”

“முடியாது, நான் வரப்போறன்….காய்ஞ்சு செத்தாலும் சரி, வருவேன்.”

நில்லடி ….. என்ரை குணம் தெரியுமே?

“நான் மாட்டன்! வரத்தான் போறன்”

மகளை விலக்கி வெளியே செல்ல முற்பட்ட, அவனை அவள் பின் தொடர்ந்தாள். அய்யாவும் அம்மாவும் செயலற்று நின்றனர். அவள் குரல் சீற்றமாக ஓங்கி ஒலித்தது.

“நான் மாட்டன், வரத்தான் போறன்!”

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *