வெறும் செருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 22,148 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது வரையில் தீர்மானத்துக்கு வராதிருந்த மனது அன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. முதலையின் பிளந்த வாயைப்போன்ற செருப்புடன் எத்தனை மணிகள்தான், எத்தனை நாட்கள் தான் ஓட்ட முடியும்? நடக்கும் போதெல் லாம் செருப்பின் கீழ் அட்டை மடித்துக் கொள்ளும். அப் பொழுது ஒட்டகையின் முதுகின்மேல் நடப்பது போன்ற வேதனையும் கஷ்டத்தையும் அடைந்தேன். நல்ல வேளை! அன்று மனதே உத்தரவு கொடுத்துவிட்டது;

விர்ரென்று கடைத் தெருவுக்குச் சென்று நவீன செருப் புக் கடைக்குள் நுழைந்தேன். கடைக்காரப் பையன் வித விதமான செருப்பு, பூட்ஸு தினுசுகளை என் முன் கொணர்ந்து பரப்பினான். அதையும் இதையும் புரட்டிப் பார்த்து தோல் வந்த கப்பல், கப்பல் கிளம்பிய நாடு, நாட் டின் கால்நடை வளம் இவ்வளவையும்பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டு முடிவாக ஒரு ஜோடி ஸ்லிப்பர் ஆறரை ரூபாய்க்கு வாங்கினேன். 

சிவப்பு ஸ்லிப்பர், மஞ்சள்நூல் தையல், மேல்புறத்தில் தாமரைப்பூ – இவ்வளவு லட்சணங்களுமுள்ள ஸ்லிப்பர் என் சொத்தான உடனே அதை அனுபவிக்காமல் இருக்க முடியுமா? 

காலில் மாட்டிக் கொண்டே வீட்டை நோக்கி திரும்பி னேன். பட்டென்று ஸ்லிப்பர் கால் அடிபாகத்தில் படுவதி னால் பின் பராக் யாரோ சொல்லிக் கொண்டு வருவது போலிருந்தது. அரசர்களுக்கு முன்னால் பராக் சொல்லிக் கொண்டு வருவார்களாமே, எனக்குப் பின்னால் சொன்னால் போதாதா? ஒவ்வொரு ஓசையைக் கேட்டதும் என் மனது கம்பீரமாய் விரிந்தது. புதுச்செருப்பு வாங்கினால் புது மனித னல்லவா? வானத்தைத் தொட்டுவிடக்கூடிய உன்னத மும் தெம்பும் நெஞ்சில் குமிழியிட்டன. முன்புறம் மார்பைத் தள்ளி தெருவெல்லாம் நடந்து வந்தேன். 

வீட்டை அடைந்ததும் ஸ்லிப்பரைத் துடைத்து சுவரில் மாட்டினேனோ இல்லையோ? ஒரு நினைப்பு வந்தது. பழைய செருப்பு இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன் இனி அதை எடுத்து எறிந்து விடலாமா என்று யோசித்தேன். 

இவ்வளவையும் என் மனைவி கவனித்து வந்தாள் என்பது அவள் கேட்ட கேள்வியிலிருந்து தான் விளங்கிற்று. 

“நான் கிழவியாகி விட்டால் என்னையும் தள்ளித்தான் விடுவார்கள், இல்லையா? கேள்வி சுருக்கென்று மனதில் தைத்தது. காலுடன் காலாய் எவ்வளவு கஷ்ட சுகங்களில் அது என்னை தாங்கி வந்திருக்கிறது. அவ்வளவு ஈரமில்லா மல் எடுத்தெறியப் போகலாமா? என் மனதில் இரக்கமில்லை என்று நினைக்க நான் விரும்பவில்லை. ஆகையால் என் யோசனையை கைவிட்டுவிட்டு, என் ஜோலியைப் பார்க்கப் போனேன். புலனெல்லாம் ஒடுங்கித்திண்ணை மூலையில் குந்தி யிருக்கும் கிழவியைப்போல் செருப்பு மூலையிலே கிடந்தது. இளைய தாரத்துடன் உலாவப்போகும் எழுச்சியுடன் புது ஸ்லிப்பர் மாட்டிக்கொண்டு ஆபீசுக்குப் போய் திரும்பினேன். 

வீட்டிற்கு வந்து உட்கார்ந்த ஜந்து நிமிஷத்திற்குள் ளாகவே, ஒரு தந்திக் கிடைத்தது. உயிருக்குயிரான நண்பன் காலமாகி விட்டதாக அதில் கண்டிருந்தது. என்னால் செய்தியை நம்ப முடியவில்லை. நானும் தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த நண்பனும் ஒரு வாரத்திற்கு முந்தி நான் ஒரு கல்யாணத்திற்குச் சேர்ந்து போயிருந்தோம். சேர்ந்து சாப்பிட்டோம். பகலொளியும் இரா நிலவும் படுக்கப் போகும் வரையில் பேசித் தீர்த்தோம். சேர்ந்தே தூங்கினோம். நண்பன் உடம்பிலோ மனத்திலோ எவ்வித மான நோயும் தென்படவில்லை. பின் செய்தியை எப்படி நம்ப முடியும்? ஆனால் பொய்த் தந்தி கொடுக்கக் கூடிய விஷமிகள் யாரும் எனக்கோ என் நண்பனுக்கோ இல்லை. பின் செய்தியை எப்படி நம்பாமலிருப்பது? குழப்பம். மனது தெளியவில்லை. மறுநாள் மற்றொரு கடிதம் வந்தது. வேறொரு நண்பன் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு சந்தேகத்திற்கே இடத்தைக் காணோம். 

கிராமபோன் தட்டு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே சாவி குறைவினால் பிறக்கும் அவ ஒலியைப்போல் என் நெஞ்சின் துயர் எழுந்தது. தாங்கமாட்டாமல் விம்மி விம்மி அழுதேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று யார் கண்டது? 

எதிர் வீட்டுப் பையனொருவன் கோவில் மணி கணீரென்று அடிப்பதுபோல், 

“ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் 
மாண்டார் வருவரோ மாநிலத்தில்”

என்று பாடினான். 

என் அழுகை தானே நின்று விட்டது. இனிச் செய்ய வேண்டியதைப் பற்றிய நினைப்பு எழுந்தது. சாயங்கால ரயிலில் நண்பன் ஊருக்குப் போய், அவன் வீட்டிலுள்ளவர் களுக்காவது தேறுதல் சொல்லிவர வேண்டியது என் கடமை என உணர்ந்தேன். 

மாலை ஐந்து மணி ரயிலுக்கு ஒரு பாடியையும் ஜிப்பா வையும் மாட்டிக்கொண்டு கிளம்பி வீட்டு ரேழிக்கு வந்தேன். சுவரில் புது ஸ்லிப்பர் அசட்டுப் பெண்ணைப் போல் இளித்துக் கொண்டிருந்தது. ஸ்லிப்பரை எடுத்துக் காலில் மாட்டப் போனேன். 

“கல்யாணத்துக்குப் போகிறாயா குஷாலாக?” என்று மூலையில் இந்த பழஞ் செருப்பு முனகுவது போல் தோன் றிற்று. கொஞ்சம் தயங்கினேன்; காலையில் புது ஸ்லிப்பர் வந்தது. மாலையில் செய்தி வந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை என்று அறிவு சொன்ன போதிலும் நெஞ்சு கேட்கவில்லை. 

அதற்குள் என் ஆபீஸ் நண்பன் ஒருவன் வந்தான். “என்ன யோசித்துக் கொண்டு ரேழியில் நிற்கிறாய்?” 

“ஒன்றுமில்லை” 

“நான் இதோ ரயிலுக்குப் போகிறேன். மத்தியான்னம் இடி போன்ற அந்தச் செய்தி வந்தது. கடவுள் என்கிறார் களே அது எனக்கு விளங்கவில்லை. சரகு உதிர்வதில் வண்டு வருந்துவதில்லை. தளிரும் பூவும் உதிர்ந்து தரையில் கிடக்கும்பொழுது எவ்வளவு வண்டுகளும் தேனீக்களும் அவைகளை மொய்த்துக் கொண்டு புலம்புகின்றன!” 

“எனக்கும் செய்தி வந்தது. என் நெஞ்சே சூன்யமாகி விட்டது. இதோ நானும் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.” 

“பின்னே கிளம்பு.” 

கிளம்பு என்று சொன்னபிறகு கூட நான் சொஞ்சம் தயங்கினேன். 

“என்ன யோசனை?” 

மனதை வேரோடு பிடுங்கினது போல் நிலைகுலையச் செய்யும் துயரம் மூண்டிருக்கும் வேளையில் ஸ்லிப்பர் போட்டுக் கொள்ளலாமா கூடாதா என்று யோசிக்கலாமா என்ற நினைப்பு வரவும் மூலையில் கிடந்த பழஞ் செருப்பு அடக்கத்துடன்கண் காட்டிற்று. அதைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன். 

ரயில்வே ஸ்டேஷன் போகும் வரையில் ஒரே யோசனை. புது ஸ்லிப்பர் வந்தது நன்மைக்கன்று. ஒரு நாளைக்குள் ஒரு உயிரைக் கொண்டு போய்விட்டதே; அதை மாதக் கணக்கில் வைத்துக் கொண்டால் என்ன வெல்லாம் நேரிடும் அல்லது என்னதான் செய்யக் கூடாது? இதே யோசனையில் மௌனமாக இருந்தேன். 

ரயில்வே ஸ்டேஷன் மாடிப்படி ஏறும்பொழுது ஒருதரம் செருப்பின் அடி அட்டை பின்புறமாக மடித்துக் கொண்டது. 

“என்ன தடுமாறுகிறாயே?” என்றான் நண்பன். 

“ஒன்றுமில்லை. செருப்பு அடி அட்டை கிழிந்துபோய் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றும் போயின. அட்டை மடித்துக்கொண்டு இடறி விட்டலு. நல்லவேளை விழாமல் தப்பித்தேன்.’ 

“பிறகு நாங்கள் பேசவில்லை. என் மனது மறுபடியும் ஓடத் துவங்கி விட்டது-கிழிந்த செருப்புகளைப் பற்றிய ஞாபகங்கள். 

ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து உட்கார்ந்தோம். ரயில் கிளம்புவதற்கு இரண்டு.. மணி நேரம் இருந்தது. நண்பன் பிளாட்பாரத்தில் நிலவின் கீழ் வேஷ்டியை விரித்துப் படுத்துக் கொண்டான். எனக்குப் படுக்கத் தோன்றவில்லை, உம்மென்று….உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரத்திற்கெல்லாம் திடீரென்று யோசனை ஒன்று முளைத்தது. 

“உன்னிடத்தில் ஒரு ஹூக் இருக்கிறதா?” என்றேன்.

“எதற்கு?” 

“இந்த இரண்டு அட்டைகளையும் சேர்த்து ஹூக் போட்டு விட்டால் இந்த மாதிரி அட்டை மடியாது”

“இதென்ன. செருப்பையே கடவுளாக்கித் தியானம் செய்கிறாயே -தூக்கி எறிந்தாலும் போச்சு, தைக்கச் சொன் னாலும் போச்சு.” 

”பேச்சு நியாயமாகத்தான் பட்டது சரிதான் என்றேன். ஆனால் மனதில் பல மட்டங்கள் இருக்கின்றன என்பதும், மேல் மட்டம் பேசினால் அடிமட்டம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது இல்லை என்றும் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். 

கால் மணி நேரத்திற்குப் பிறகு என் கை என்னை அறியாமலேயே ஒரு செருப்பை எடுத்துவிட்டது. என் கண்கள் இருள் குகை ஒன்றைக் காணும் ஆச்சரியத்துடன் அச் செருப்பின் பிளந்த அட்டைகளைப் பார்த்துக் கொண் டிருந்தன. மன உலகத்தில் ஒரு பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. மனத்தின் நடுமட்டம்…” அதெல்லாம் சரிதான். நீ போகும் காரியமென்ன? நாளைப்போய் மெனக் கட்டு செருப்பைத் தைத்துவிடுவாயா? முடியுமா?” மனத்தின் மேல் மட்டம்; “அதற்கென்ன, வேண்டாமே. செருப்பையே எறிந்துவிட்டால் போகிறது. சொத்தே போய்விடுமா? நஷ்டம் தாங்காதா?” 

நடுமட்டம் “அதுவா பேச்சு! வீணடிக்கவே கூடாது. அப்படியாவது பணம் பெருத்த ஆளா? சாதாரணமாக தோட்டத்திற்குப் போவதற்கும் இந்த மாதிரி சந்தர்ப்பங் களுக்கும் உபயோகப்படுமே. மூத்தாளும் முட்டுக்கு உதவு வாள் என்று பாட்டி சொல்லவில்லையா?” 

படுத்திருந்த நண்பன் எழுந்து கண்கொட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டே, “நீ என்ன யோகியா, கருமியா, தெரியவில்லையே! யோகியைப் போல ஒரே எண்ணத்தில் லயித்திருக்கிறாயே. ஆனால் லயித்திருக்கும் விஷயமோ சிறியது. கருமியைப் போல் கிழிந்த சருப்பைக் கூட தடவித் தடவிப் பார்க்கிறாயே” என்றான். 

புண்ணில் நெருஞ்சி முள் குத்தியது போலிருந்தது. சிவனே என்று மன ஓட்டத்தை அடக்கி, மல்லாந்து படுத்துக் கொண்டேன். 

சிறிது நேரத்திற்கெல்லாம் ரயில் வந்தது, நானும் நண்பனும் ஏறிக் கண்ணயர்ந்தோம். 

காலைக் கரிச்சான் குரல் துயிலைக் கலைத்தது. கண் விழித்து வெளியே தலை நீட்டிப் பார்த்தேன். வானத்தின் கிழக்கு மைதானத்தில் செம்மறி ஆட்டு மந்தைபோல் மேகத்துணுக்குகள் விரைந்து கொண்டிருந்தன. இருளில் வினோத மான தேத்தாங் கொட்டையைப் போட்டதுபோல் ஒளி தெளிந்து மேலே தோன்றிற்று. அடுத்த ஸ்டேஷன் நாங்கள் இறங்க வேண்டிய இடம். நண்பன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தான். 

மனதில் இரண்டு நிலைகள்தான் இருப்பதாக நினைத்த நான் மூன்றாவது நிலை ஒன்றிருப்பதை அப்பொழுது உணர்ந் தேன். பரந்தவெளி உலகின் காலை அமைதியில் உள்ளுல கினின்று ஒரு மெல்லிய குரல் கேட்டது. 

“நீ வரும் வேலை நினைவிருக்கிறதா? உடம்பு உயிர் என்றெல்லாம் சொத்துரிமை கொண்டாடுகிறாயே அது சரியா? யோசித்துப் பார், நேற்றிருந்தான்; இன்றிறந்தான், பழுத்தும் உதிரலாம். பழுக்காதும் விழலாம். பழுக்காது விழுந்த வேதனை-உயிரின் விசித்திர விபரீதப் போக்கல் லவா உன்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது. வெறும் செருப்பு ஒரு பொருளா? அதைப்பற்றி யோசிக்க அவ்வளவு பிராணனை செலவழிப்பது நியாயமா?”

இக்குரல் பேசியபொழுது உள்ளத்திலே பெரிய அமைதி நிலவியிருந்தது. மாறுபட்ட மன அலைகளே காணோம். 

ஏறிவரும் ஒளியையே நோக்கிக் கொண்டிருந்தேன். மளத்தில் அசைவே இல்லை. ஆதற்கு ஏற்றாற்போல, அசைந்து கொண்டிருந்த ரயிலும் ஸ்டேஷனை அடைந்து நின்று விட்டது. 

நண்பனை எழுப்பி வண்டியை விட்டு இறங்கி மாட்டு வண்டியில் ஏறி நண்பன் வீடு சென்றோம். 

பஞ்சைக் குழந்தைகள் – சூதுவாதற்ற மனைவி – இவர்களை கொழுக் கொம்பற்றுத் துடிக்கும் கொடிபோல பரிதவிக்க விட்டுச் சென்ற ஒரு குடும்பத் தலைவன் – வயது அதிகம் ஆகாதவன் – எதிர்பாராமல் திடீரென்று காலகதி அடைந் தவன் – அவன் மறைந்துவிட்ட பிறகு எவ்விதமான ஆறுதல் தான் சொல்ல முடியும்? வாய் திறந்து வார்த்தைகளைக் கொட்டாமல் பகல் முழுதும் கழித்தோம். 

மத்தியானம் மணி மூன்றிருக்கும். ஊருக்குத் திரும்பு வதற்காக வண்டி நிற்கும் இடத்திற்குக் கிளம்பினோம். 

சரியான வெயில், மூன்று என்றாலும் தலை வெடிக் கிறது. பொடி ஒட்டுகிறது. நான் காலை மாற்றி மாற்றி நொண்டி போல் தத்தித்தத்தி நடந்தேன். 

அப்பொழுதுதான் என்னுடன் கூடவந்த நண்பன் என் காலைக் கவனித்தான். 

“செருப்பெங்கே? இந்த வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தாயா?” என்றான். 

“அதெல்லாம் மறக்கவில்லை.” 

“அப்படி என்றால் வேண்டுமென்றே வைத்துவிட்டு வந்தாயா?” 

“அதுவுமில்லை.” 

“பின்?” 

“ஒரு நிமிஷம் தயங்கினேன். 

“பின் செருப்பெங்கே?” 

“ரயிலிலேயே வைத்துவிட்டேன்.” 

“மறந்து விட்டாயா?”

”இல்லை. நினைப்புடனேயே விட்டு விட்டேன்.”

“இரவில் நான் செருப்பு மயமாய் இருந்ததையும் இப்பொழுது செருப்பையே விட்டு விட்டதையும் பற்றியோ என்னவோ நினைத்துக்கொண்டு ஆச்சரியத்தால் வாய் திறந்து ஒருவினாடி நின்றான். பிறகு என்னவென்று கேட் டான். 

“கிழியாத செருப்பைக் கூட அவன் திடீரென்று விட்டுச் சென்றுவிட வில்லையா? ஒரு ஓட்டைச் செருப்பைப்பற்றி பெரிய துயரத்தின் முன்னிலையிலே என் மனது அவ்வளவு குழம்பலாமா என்ற எண்ணம் உதித்தது.’ 

“எப்பொழுது?” 

“இந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்ததும்!”

“பிறகு?”

“ரயிலை விட்டு இறங்கியபொழுது செருப்பை மாட்டிக் கொள்ளாமல் இறங்கி விட்டேன். அவ்வளவுதான்.” 

நண்பன் பேசவில்லை. ஒரு வினாடி கழிந்தது. 

“ஆமாம். இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் வழிப்போக்கன் எப்பொழுதும் எந்த நிலையிலும் இதைக் கழட்டி எரியலாம். யாரால் தடுக்க முடியும்?” என்றான். 

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *