வெறும் கணக்கு

4
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 32,058 
 
 

தாமோதரன் மாமா வந்திருந்தார்.

காலை 6:30 மணிக்கு எங்களின் வீடு தேடி வருவது என்றால், அவர் அதிகாலை 4 மணிக்கே எழுந்து, வீட்டில் இருந்து கிளம்பியிருக்க வேண்டும். மாமாவின் வீடு, காட்டாங்கொளத்தூர் பகுதியில் இருந்தது. மின்சார ரயில் பிடித்துப் பயணித்து, கோடம்பாக்கத்தில் இறங்கி, நகரப் பேருந்து பிடித்து வடபழநி வந்து, வீடு தேடி நடந்து வந்திருக்க வேண்டும். அவரது முகத்தில் தூக்கமற்ற அசதியும் களைப்பும் படிந்திருந்தன. சோபாவில் கிடந்த நியூஸ் பேப்பரை எடுத்து ஒழுங்காக மடித்துவைத்துவிட்டு, ஓரமாக உட்கார்ந்துகொண்டார்.

நந்தினி அவருக்கு காபி கொண்டுவந்தபோது மாமா அதை மறுத்து தலை ஆட்டியபடியே, ”நான் காபி குடிக்கிறது இல்லை… விட்டுட்டேன்” என்றார்.

வெறும் கணக்குமாமாவுக்கு, அப்பாவைவிட நான்கு வயது அதிகம். ஆனாலும் உடலில் தளர்ச்சி இல்லை. ஆள் குள்ளம். நல்ல கறுப்பு. கசங்கிய வேஷ்டியைக் கட்டியிருந்தார். கயிறு சுற்றிய மூக்குக்கண்ணாடி, அவரின் சட்டைப் பையில் இருந்தது. தனது கையில் வைத்திருந்த மஞ்சள் பையை எடுத்து நீட்டியபடியே மாமா சொன்னார், ”ரமணா, இந்தக் கணக்கை ஒருக்கா பார்த்துரு. ஒரு மாசமா வெச்சுக்கிட்டே இருக்கேன்” என, பையில் இருந்த வெள்ளை பேப்பரையும் 40 பக்க நோட்டு ஒன்றையும் எடுத்தார். பேப்பரோடு நிறைய ரசீதுகளும் இணைக்கப்பட்டிருந்தன.

”இருக்கட்டும் மாமா… கணக்கு எல்லாம் எதுக்கு?” என்றேன்.

”அப்படி இல்லை… காசு குடுத்தவன் நீ. கணக்கை ஒருதடவை முழுசா பார்த்துடணும்” என அழுத்தமாகச் சொன்னார்.

”இதுலபோயி எப்படி மாமா கணக்கு பார்க்கிறது?” எனத் தயக்கத்துடன் கேட்டேன்.

”அப்படிச் சொல்லக் கூடாது. சாவும் ஒரு செலவுதான். உங்க அப்பா இறந்துபோன அன்னைக்குக் காலையில என்கிட்ட இருபதாயிரம் ரூபாய் குடுத்தே. அப்புறம் மூணு மணிக்கு இன்னும் முப்பதாயிரம் ரூபாய் குடுத்தே. ஐஸ்பாக்ஸ்ல இருந்து மயானம் வரைக்கும் ஆன எல்லா செலவுகளையும் சேர்த்து 42,316 ரூபாய் ஆச்சு. மிச்சத்தை உன்கிட்ட தந்துட்டேன். இதுல கணக்கு இருக்கு.”

”நீங்க கூட இருந்து ஒத்தாசை செய்ததே பெரிய விஷயம். இதுல என்ன மாமா கணக்கு? அதெல்லாம் சரியாத்தான் இருக்கும்” என்றேன்.

”இல்லை ரமணா. அப்படி விடக் கூடாது. ஒவ்வொரு காசும் நீ உழைச்சு சம்பாதிச்சது. கணக்கு பார்க்கிறது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லை. ஒண்ணைப் பத்தி முழுசா புரிஞ்சிக்கணும்னா, கணக்கு பார்க்கணும். அதுலயும் சாவுக் கணக்கைப் பார்த்தாதான், உலகம் இப்போ எப்படி இருக்குனு தெரிஞ்சுக்க முடியும்.”

”அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை மாமா. ஆபீஸ் போகணும். நிறைய வேலை கிடக்கு. இயர் எண்டு வேற” என்றேன்.

”புரியுது. இதுக்கு அரை மணி நேரம் ஒதுக்கினா போதும். கணக்கை நானே விளக்கிச் சொன்னாதான் புரியும். நீ ஃப்ரீயா இருக்க நேரம் போன் பண்ணு, வர்றேன்.”

”இதுக்காக நீங்க அலைய வேண்டாம் மாமா. கணக்கு எல்லாம் மெதுவா பார்த்துக்கலாம்” என்றேன்.

”உங்க அப்பா சாவுல நான் நிறையக் கத்துக்கிட்டேன் ரமணா. ராயப்பேட்டையில கம்மியான வாடகைக்கு ஐஸ்பாக்ஸ் கிடைக்குது. இது தெரியாம, ஒரு கடன்காரன் என்னை ஏமாத்தி ரெண்டாயிரம் ரூபாய் ஜாஸ்தியாப் பிடுங்கிட்டான். அப்புறம் அன்னைக்கு காபியும் நல்லாவே இல்லை. தெரியாம ராயர் கடையில சொல்லிட்டேன். அவன் லோக்கல் காபித்தூள் போட்டிருக்கான்போல, பூச்சிமருந்தைக் குடிக்கிற மாதிரியே இருந்துச்சு. ‘சாவு வீடுதானே, யாரு கேட்கப்போறா?’னு நினைப்பு.

அம்பாள் மெஸ்ல சொல்லியிருந்தா, நல்ல காபி குடுத்திருப்பான். வாட்டர் கேன் வாங்கினது, மாலை, ஊதுபத்தி, பேப்பர் கப், பூ, ப்ளாஸ்டிக் சேர் வாடகைக்கு எடுத்தது, சாமியானா எல்லா செலவுகளும் ஜாஸ்தி. யார்கிட்டயும் பேரம் பேசவே முடியலை. முன்அனுபவம் கிடையாதே. இது பரவாயில்லை, சாவு வீட்டுக்கு வர்ற மனுஷங்களுக்கு செருப்பை எங்க விடுறதுனு தெரியலை. எதிர் வீட்டு முன்னாடி போட்டுட்டு ஒரே பிரச்னை. இதெல்லாம் உங்க அப்பாவுக்குப் பிடிக்காத விஷயம்.”

”விடுங்க மாமா, அவர் என்ன திரும்ப வந்து கேட்கவாபோறார்?”

”அப்படி விடக் கூடாது ரமணா. சாவு வீட்லதான் நம்மளை நிறையப் பேரு ஏமாத்துறாங்க. நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. சாவை வெச்சு, எத்தனையோ பேர் தொழில் பண்ணுறாங்க; கைநிறையச் சம்பாதிக்கிறாங்க. ஒவ்வொண்ணுக்கும் காசு, எதுவும் ஓசி கிடையாது. உதவிக்கு ஆள் கிடையாது.”

”இது ஒண்ணும் நம்ம கிராமம் கிடையாது மாமா, பல்லுல பச்சை தண்ணிகூட படாம கூடமாட இருந்து ஓடி ஆடி உதவி செய்றதுக்கு.”

”அதுவும் சரிதான். முன்னாடி எல்லாம் சாவு வீடுன்னா, தெருவே அமைதியா இருக்கும்; அழுகைச் சத்தம் மட்டும்தான் கேட்கும். இப்போ சாவு வீட்டுக்குள்ளே ஒரே செல்போன் பேச்சு… வம்பு… வழக்கடி. இது போதாதுனு நியூஸ் பேப்பர்ல வந்த பாலிட்டிக்ஸ் பற்றி சத்தமா அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்காங்க. ‘வாயை மூடிட்டு இருங்கடா’னு செவுட்டுல அறையலாம்போல இருந்துச்சு. அடக்கிக்கிட்டேன். மனுஷனுக்கு இதெல்லாம்கூடவா கத்துக்குடுக்கணும்?!”

”காலம் மாறிட்டு வருதுல்ல. சாவு வீடும் ஒரு சம்பிரதாயம் ஆகிருச்சு.”

”சிட்டியில ஒரு மனுஷன் செத்தா, இவ்வளவு செலவு ஆகும்னு இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். காசு இல்லாதவன் செத்தா, நிறைய அவமானப்படணும். அதான் எனக்கு பயமா இருக்கு.”

”நாங்க இருக்கோம், பார்த்துக்கிட மாட்டோமா? இதுக்கே இப்படிச் சொல்றீங்க, வெளிநாட்டுல கல்லறை நிலத்தை அட்வான்ஸ் புக் பண்ணி வாங்கிக்கச் சொல்றாங்க. அதுக்கு மாதத் தவணைத் திட்டம்கூட இருக்கு.”

”எதிர்காலத்துல மனுஷன் பொறக்கிறதும் சாகுறதும்தான் பெரிய தொழிலா இருக்கும்போல. ரமணா, நாலஞ்சு பேர் பில் தரலை. அதனால நானே ரசீது புக் ஒண்ணு வாங்கி, அதுல கையெழுத்து வாங்கிட்டேன். பரவாயில்லைதானே?”

”நாம என்ன ஆடிட்டிங்கா பண்ணப்போறோம். அதெல்லாம் தேவை இல்லை மாமா.”

”உங்க அப்பா பத்து பைசாவுக்குக்கூட டைரியில கணக்கு எழுதிடுவார். ஒருத்தர்கிட்டயும் பைசா பாக்கி வெச்சது இல்லை. நான் ஒருத்தன்தான் அவர் கடனைத் திருப்பித் தராத கடன்காரன்.”

”அப்படி பைசா பைசாவா எழுதி கணக்குப் பார்த்தா, தேவை இல்லாத கவலை வரும்; பிபி ஏறிப்போயிரும்.”

வெறும் கணக்கு2”காசு விஷயத்துல கவலைப்படுறது தப்பு இல்லை. உங்க ஜெனரேஷனுக்கு, காசோட அருமை தெரியலை. பத்து ரூபாய்தானேனு நினைக்கிறீங்க. பத்து ரூபாய்ங்கிறது எவ்வளவு பெரிய பணம்? எனக்குக் கல்யாணம் ஆன புதுசுல ஒரு மாச வாடகையே பத்து ரூபாய்தான். அதுகூட இல்லாம எத்தனையோ நாள் அவதிப்பட்டிருக்கேன். இன்னைக்கு ஸ்கூல் பசங்ககூட கையில் ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக்கிட்டு கடைக்கு வர்றாங்க. ஆயிரம் ரூபாய் எல்லாம் இன்னைக்குப் பெரிய பணமே இல்லை. அந்தக் காலத்துல நூறு ரூபாய் நோட்டை நான் தொட்டுக்கூடப் பார்த்தது கிடையாது. ஒரே ஒருதரம் பேங்க்ல குடுத்தாங்க, கையில வெச்சிருக்கவே பயமா இருந்துச்சு.”

”இப்போ லட்சம் ரூபாயே பெரிய விஷயம் இல்லை மாமா” என்றேன்.

”அதான் பிரச்னையே. என்னாலே இந்தக் கணக்கை வெச்சுக்கிட்டு நிம்மதியாத் தூங்க முடியலை. நேரம் ஒதுக்கிப் பார்த்துரியா!” என ஆதங்கமாகக் கேட்டார் தாமோதரன் மாமா.

”பார்க்கலைன்னா நீங்க விட மாட்டீங்கபோல. சரி, அடுத்த வாரம் கூப்பிடுறேன்” என்றேன்.

”நந்தினி… பழைய துணி ஒண்ணு இருந்தா குடும்மா” எனச் சத்தமாகக் கேட்டார் மாமா.

எதற்கு எனப் புரியாமல், பழைய துணி ஒன்றை நந்தினி தந்தபோது மாமா அதை வாங்கி, எனது மகனின் பள்ளிக்கூட ஷூவைத் துடைக்க ஆரம்பித்தார்.

”சே! இதைப்போயி நீங்க செஞ்சுக்கிட்டு, விடுங்க… வைங்க மாமா” என்றேன்.

”சும்மா பேசிக்கிட்டுத்தானே இருக்கப்போறோம். அப்படியே இதைச் செய்றதுல என்ன ஆகிடப்போகுது? ஸ்கூல் பசங்களுக்கு ஷூவைத் துடைச்சுப் பழக்கம் இல்லை. அந்தக் காலத்துல எல்லாம் ஷூல முகம் தெரியும். அப்படித் துடைப்பேன். இல்லைன்னா எங்க அப்பா மணிக்கட்டுலயே அடிப்பார்.”

”போதும் வைங்க மாமா” என, உரத்தக் குரலில் சொன்னேன்.

மாமா, ஷூவைத் துடைத்து வைத்துவிட்டுக் கேட்டார், ”உங்க அப்பாவோட பழைய டிரெஸ், மணிபர்ஸ், மூக்குக்கண்ணாடி, ஃப்ளாஸ்க், செப்பல்… எல்லாத்தையும் எடுத்து வைக்கச் சொல்லியிருந்தேனே… கட்டி வெச்சிருக்கியா?”

”அதை எல்லாம் வெச்சு என்ன செய்யப்போறீங்க?”

”ஹோம்ல குடுக்கப்போறேன். அவங்களுக்கு யூஸ் ஆகும்.”

”இதைப்போயி யாராவது குடுப்பாங்களா?”

”இந்த மாதிரி பேன்ட், ஷர்ட், செருப்பு இல்லாம எத்தனையோ பேர் கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு உதவியா இருக்கும். எதுவும் வீணாப்போற விஷயம் இல்லை. நான் கிளம்புறேன். நந்தினி… வர்றேன்மா.”

”சாப்பிட்டுப் போங்க” என, நந்தினி உள்ளே இருந்தபடி குரல் கொடுத்தாள்.

”இல்லை… காலையில அவிச்ச காய்கறிகள் மட்டும்தான். அதை வீட்ல செஞ்சிவெச்சுட்டு வந்திருக்கேன். போயி சாப்பிட்டுக்கிறேன்” என்ற மாமா கிளம்பும்போது அவர் அதுவரை உட்கார்ந்திருந்த சோபாவைத் துடைத்து, மடிப்பு நீக்கிச் சரிசெய்துவிட்டு புன்சிரிப்போடு வெளியேறினார்.

அவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அப்பா இறந்த நாளில், மாமா ஒற்றை ஆளாக உடன் நின்று ஓடியாடி வேலை செய்தார். இவ்வளவுக்கும் அப்பாவுக்கும் அவருக்கும் ஆகாது. அப்பா இருந்த நாட்களில், மாமா வீடு தேடி வந்ததே கிடையாது.

ஆனால், மருத்துவமனையில் அப்பா இறந்துபோன தகவல் கேட்டு வந்த நிமிடம் முதல் இறுதிக் காரியங்கள் முடியும் வரை கூடவே இருந்தார். சாவு செலவுக்குக் கொடுத்த கணக்கைப் பார்த்துவிடச் சொல்லி இப்படி அலைந்துகொண்டும் இருக்கிறார். ‘என்ன மனிதர் இவர்..?!’ எனப் புரியவே இல்லை.

மாமா போன பிறகு, கதவைச் சாத்திவிட்டு நந்தினி சொன்னாள், ”நீங்க கணக்கைப் பார்த்திருங்க. உங்க மாமாவை நம்ப முடியாது. சுத்த ஃப்ராடு… இதுலயும் கை வெச்சிருப்பார். பேச்சுவாக்குல தானே ரசீது போட்டு வாங்கி வெச்சிருக்கேன்னு சொல்றார் பார்த்தீங்களா? அது பித்தலாட்டம், ஃப்ராடுத்தனம்!”

”பணத்தை எடுத்தா எடுத்துட்டுப் போகட்டும். யாரு இத்தனை அக்கறையா கூடவே இருந்து கவனிப்பா? நான் மாமாவை நம்புறேன்” எனக் கோபமாகச் சொன்னேன்.

”நம்புங்க… நல்லா நம்புங்க. ஆனா, கட்டின பொண்டாட்டியும் பெத்தப் புள்ளைங்களும் நம்பாமத்தானே அவரை வீட்டைவிட்டு விரட்டிவிட்டுட்டாங்க. ஒத்தைக் குரங்கா தனியா வாழுறார். அதை மறந்துராதீங்க” என்றாள் நந்தினி.

”அது நமக்குத் தேவை இல்லாத விஷயம். அப்பா சாவுக்கு, இவர்தான் கூடவே இருந்து பார்த்துக்கிட்டார். அந்தக் கணக்கை நான் பார்க்க மாட்டேன். எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு” என்றேன்.

”இப்படித்தான் உங்களை எல்லாரும் நல்லா ஏமாத்துறாங்க. ஏமாளியாவே இருந்துட்டுப்போங்க… யாருக்கு நஷ்டம்?” என்றாள் நந்தினி.

”பரவாயில்லை… இப்படி ஏமாளியாவே இருந்துட்டுப்போறேன்” எனப் பேச்சைத் துண்டித்துக்கொண்டு, குளிப்பதற்குக் கிளம்பினேன். நந்தினி, மாமாவை பற்றி இன்னும் ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தாள். எதையும் நான் கேட்டுக்கொள்ளவில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு, ஒருநாள் மாமா என் அலுவலகத்துக்கே வந்து காத்திருந்தார்.

”இங்கே எப்படி மாமா கணக்கு வழக்கு பார்க்கிறது? இது ஆபீஸ்” எனத் தயக்கத்துடன் சொன்னேன்.

”அதுக்கு இல்லை… நாள் ஆகிட்டேபோகுது. கணக்கை வெச்சுக்கிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியலை. என் மேல உனக்குக் கோபம் ஒண்ணும் இல்லையே… இருந்தா சொல்லிடு” என தழுதழுத்தக் குரலில் கேட்டார் மாமா.

”அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா. நேரம் கிடைக்கலை அவ்வளவுதான். கணக்கு எதுவும் வேண்டாம்” என்றேன்.

”அது என் சுமை. தட்டிக்கழிக்காதே. பத்து நிமிஷம் போதும். எல்லா பில்லையும் தனித்தனியா பின் பண்ணிவெச்சிருக்கேன். ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்!”

”நான் உங்களை நம்புறேன் மாமா. காசு ஒண்ணும் பெரிசு இல்லை” என்றேன்.

”அதான் பிரச்னையே… நீ என்னை நம்புறேல்ல. அதுக்காகத்தான் கணக்கைப் பார்க்கச் சொல்றேன் ரமணா. காசு விஷயத்துல ஒரு மனுஷன் மேல நம்பிக்கை வர்றதுதான் பெரிய விஷயம். என்னை என் பொண்டாட்டியே நம்ப மாட்டா. ஃப்ராடுனு திட்டுவா. ஆனா,

நீ என்னை நம்புற. அப்போ கணக்கைப் பார்க்கத்தானே வேணும்” என்றார்.

”உங்க முன்னாடி கணக்கு பார்க்க, எனக்கு இஷ்டம் இல்லை. அந்தப் பையைக் கொடுத்துட்டுப் போங்க… நானே கணக்கைப் பார்த்துக்கிறேன்.”

”அது சரிவராது. நானே விளக்கிச் சொல்ல வேண்டிய விஷயம் அதுல நிறைய இருக்கு. ஒரு ரூபாய்னாலும் ஏன் எடுத்துக் குடுத்தேன்னு நீ தெரிஞ்சுக்கணும்ல.”

”தெரிஞ்சு என்ன ஆகப்போகுது? ஏன் மாமா இவ்வளவு பதற்றப்படுறீங்க?”

”என் அனுபவம் அப்படி. ஊரே என்னை ஃப்ராடுனு சொல்லுதே. கேன்டீன்ல போயி உட்கார்ந்து கணக்கைப் பார்த்துரலாமா?”

”சரி வாங்க… கேன்டீனுக்குப் போவோம்!” என்றேன்.

இருவரும் ஆபீஸ் கேன்டீனுக்குப் போனபோது கூட்டமே இல்லை. ஓரமான டேபிளில் உட்கார்ந்து, தனது பையில் இருந்த பேப்பர்களை எடுத்து வைத்து, கணக்கை மறுபடியும் ஒருமுறை படித்து சரி பார்த்துக்கொண்டார்.

ரசீதுகளை முறையாக அடுக்கி, கணக்கைத் துல்லியமாக எழுதியிருந்தார். தனது இத்தனை வருட அனுபவத்தில் இப்படி ஒரு கணக்கை அலுவலகத்தில் எவரும் காட்டியதே இல்லை. அதைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ”சரியா இருக்கு மாமா” என்றேன்.

”அப்படி இல்லை. ஒவ்வொண்ணுக்கும் நான் விவரம் சொல்ல வேண்டாமா?” எனக் கேட்டார்.

”வேண்டியது இல்லை… போதும்” என அந்தக் காகிதங்களை அவரிடம் இருந்து வாங்கிக்கொண்டேன்.

”ரொம்ப நன்றி ரமணா!” என்றார்.

”எதுக்கு மாமா நன்றி?” என்றேன்.

”எனக்கு பயமா இருந்துச்சு. ஏதாவது விடுபடல் இருக்குமோ… ஜாஸ்தி செலவு செய்துட்டேனோனு… உன் காசை நான் வீணடிச்சிரலயே?” எனக் கேட்டார்.

”உங்க மனசு யாருக்கு வரும். இதுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியலை” என்றேன்.

”இந்தக் கணக்குல நான் நூத்தி இருபது ரூபா, ஆட்டோ செலவுக்குப் போட்டிருக்கேன். அன்னைக்கு மாலை வாங்கிறதுக்காக அவசரத்துல வேற வழி தெரியலை. பஸ்ல போனா லேட் ஆகிரும்னு அப்படிப் பண்ணிட்டேன். அந்தப் பணத்தைத் திருப்பிக் குடுத்துரவா?”

”என்ன மாமா இப்படிப் பேசுறீங்க?”

”மனசை உறுத்திக்கிட்டே இருக்கு ரமணா. சாவுக் கணக்குல அஞ்சு ரூபாய் ஏமாத்திட்டேன்னு யாராவது பேசிட்டா என்ன ஆகுறது? உனக்கு ஒரு விஷயம் தெரியாது. என் பொண்டாட்டி, புள்ளைங்க சொல்றது எல்லாம் உண்மை. நான் நிறையப் பேரை ஏமாத்தியிருக்கேன்; ஃப்ராடு பண்ணியிருக்கேன். ஆபீஸ்ல கள்ளக் கணக்கு எழுதி, பணத்தைச் சுருட்டியிருக்கேன். பொறுப்பு இல்லாம குடிச்சுட்டு செலவு பண்ணியிருக்கேன்.

ஒருதடவை, உங்க அப்பன் நூறு ரூபா பணத்தை என்கிட்ட கொடுத்து, சீட்டு பணம் கட்டச் சொன்னான். அதை நான் குடிச்சு செலவு பண்ணிட்டேன். நேர்ல பார்த்தா உங்க அப்பன் திட்டுவான்னு ஒளிஞ்சு திரிஞ்சேன். அயோத்தியா மண்டபம்கிட்ட ஒருநாள் பார்த்துட்டான். ‘காபி சாப்பிடலாம் வா…’னு கூட்டிட்டுப் போயி, காபி வாங்கிக் கொடுத்தான். பணத்தைப் பத்தி ஒரு வார்த்தைகூட கேட்கவே இல்லை. பஸ் ஏத்திவிட வரும்போது சொன்னான், ‘நீ கேட்டா, அந்தப் பணத்தைக் குடுத்திருப்பேன். பணமாடா முக்கியம்?’ அமைதியா தலை கவிழ்ந்து நின்னேன்.

‘ஒரு ஆள் நம்மளை நம்பி பணம் குடுக்கிறதுங்கிறது ஒரு பரீட்சை. அதுல எவ்வளவு நேர்மையா இருக்கோம்னு நிரூபிக்கணும். ஏமாத்தினா, யாரும் உடனே தண்டிச்சிர மாட்டாங்க. ஆனா, அதுக்கு அப்புறம் உன்னை நம்ப மாட்டாங்க. அதான்டா பெரிய அவமானம். அப்படி ஏய்ச்சி… பிடுங்கி வாழ்றதுக்கு விஷத்தைக் குடிச்சுட்டு செத்துப்போயிரலாம். மனசாட்சிக்குப் பயந்தவன்தான்டா, கணக்கு எழுதுவான்; கரெக்டா கணக்குக் கொடுப்பான். உன்னைப் பார்த்தா எனக்குப் பரிதாபமா இருக்கு. நீ என்னை ஏமாத்தலை… உன்னையே ஏமாத்திட்டிருக்கே. இப்பவும் நான் உன்னை நம்புறேன். கை சுத்தமா இருக்கிறவனுக்குத்தான் மனசும் சுத்தமா இருக்கும். உனக்கு ஏதாவது பணம் வேணும்னா,

கடனா கேளு. திருப்பிக் குடு. புரியுதா?’னு கேட்டார்.

எனக்கு செருப்பாலே அடிச்ச மாதிரி இருந்துச்சு. ‘நாம ஏன் இப்படி இருக்கோம்?’னு தலையைக் குனிஞ்சிட்டு நின்னேன்.

‘செட்டியார் கடையில உனக்கு பாக்கெட் நோட்டும் பேனாவும் வாங்கித் தர்றேன். இனிமேலாவது ஒழுங்கா கணக்கு எழுதிப் பழகு’னு சொன்னதோடு, நோட்டும் பேனாவும் வாங்கித் தந்துட்டுப் போனார்.

அதுக்கு அப்புறம் நான் மாறிட்டேன். ஆனா, வீட்ல யாரும் என்னை நம்பலே. கணக்கு எழுதிக் காட்டினாக்கூட சந்தேகப்படுவாங்க. ஆபீஸ்ல பொய்க் கணக்கு எழுதி காசை அடிச்சிட்டேன்னு சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. சம்பாதிக்காத ஆள் வீட்டுக்கு எதுக்குனு பொண்டாட்டி – புள்ளைங்க என்னை வெளியே அனுப்பிட்டாங்க.

உங்க அப்பன் சாவுக்கு வேலை செய்தது, ஒரு சுயநலம். நான் நியாயமான ஆள்னு நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம். அதான் துல்லியமா செலவுக் கணக்கு எழுதி ஒப்படைச்சேன். நீயும் ஏத்துக்கிட்டே. இன்னைக்குதான் மனசு நிறைவா இருக்கு. நான் இப்படி கரெக்ட்டா கணக்குக் கொடுத்தேன்னு தெரிஞ்சா, உங்க அப்பன் சந்தோஷப்படுவான். பாவிப் பய செத்துட்டான்” என்றபடியே மாமா எழுந்துகொண்டார்.

பிறகு, தனது மஞ்சள் பையில் இருந்த பழைய காகிதம் ஒன்றை எடுத்து, யாரோ குடித்தபோது தரையில் சிந்திய காபியை குனிந்து சுத்தம் செய்யத் தொடங்கினார். யார் காலிலும் விழுந்து ஆசி வாங்க விரும்பாத எனக்கு, முதன்முறையாக தாமோதரன் மாமா காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் என அப்போது ஆசையாக இருந்தது!

– ஜூலை 2015

Print Friendly, PDF & Email

4 thoughts on “வெறும் கணக்கு

  1. ‘வெறும் கணக்கு’ தாமோதரன் மாமா நெகிழ்வான கதாபாத்திரத்தில் அருமையான கதை.

    1. மிகவும் அருமையான கதை.உடனே படித்துவிட்டேன்.மற்ற கதைகளையும் படிக்க வேண்டும்என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.எஸ் ரா. அவர்களது மேடை பேச்சுக்களை மிக ஆர்வமாக கேட்டுக்கொண்டிருக்கறேன். அற்புதம்.

    1. வெறும் கணக்கு கதைக்கு பொருத்தமான தலைப்பு. அருமையான கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *