கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 20,080 
 
 

எவ்வளவுதான் யோசித்துப் பார்த்தாலும் அவளுக்குப் புரியவில்லை. அவள் அவனை எப்பொழுதிலிருந்து வெறுக்க ஆரம்பித்தாள்? இந்த அருவெறுப்புக் கலந்த வெறுப்பு அவள் மனதில் எத்தருணத்தில் தோன்றியது? வெறுப்பைத் தந்த அந்த வினாடி எது?

அவன் தட்டை வழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே பாயசத்தை ‘சுர்’ என்று உறிஞ்சிக் குடித்துக் கொண்டு இருந்தான். (எந்த மனநிலையிலும் அவள் பண்டிகைகளைக் கொண்டாடத் தவறுவதில்லை. அப்படிச் செய்வதன் மூலம் தன் வாழ்க்கை ‘அப் நார்மலானது’ இல்லை என்று அவள் தனக்குத்தானே நிரூபிக்க முயன்று கொண்டிருந்தாள்). அவன் சாப்பிட்ட விதமே அவளுக்கு ஒருவித அருவெறுப்பை உண்டாக்கியது. சிறு வயதில் அவனுக்கு அவனுடைய அம்மா வேண்டிய அளவு உணவு கொடுக்கவில்லையோ என்னவோ, இப்பொழுது பெருந்தீனிதான்! ருசியான உணவு, ருசியற்ற உணவு, வீட்டுச் சாப்பாடு, ஓட்டல் சாப்பாடு, ஓசிச் சாப்பாடு – எதுவாயிருந்தாலும் சரி, ஒரு கை பார்த்து விடுவான். எல்லாவற்றிற்கும் மேல் தனக்குப் பிடிக்காதவர் வீட்டிற்குப் போய் அவர்கள் கொடுக்கும் உணவையும் கூட விழுங்கி விடுவான்.

அவளுக்குப் பழைய ஞாபகம் வந்தது. கல்யாணம் ஆன பத்தாம் நாள் டெல்லியிலே அப்பாவின் நண்பரை எதேச்சையாகச் சந்தித்ததும், அவனுக்கு அவரைக் காரணமில்லாமல் பிடிக்காமல் போனதும், அப்படியும் அவருடைய அழைப்பை ஏற்று அவர் வீட்டுற்குப் போய் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே டிபனை அவசர அவசரமாக அடைத்துக் கொண்டு ‘சட்டென்று’ அவன் வெளியேறியதும் – எல்லாமே அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் அப்பொழுது எவ்வளவு அதிர்ச்சியுற்றாள்? எவ்வளவு வெட்கிப் போனாள்? இருப்பினும் அவன் அவ்வளவு மட்டமானவன் என்பதை அவள் மனம் ஏற்க மறுத்ததால் அவனுடைய நடத்தைக்கு அப்பொழுது அவள் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டாள். அதாவது தனக்குப் பிடிக்காதவர் மனது கூட நோகாமல் இருப்பதற்காகத்தான் அவன் அவர் அழைப்பை ஏற்பதாகவும், டிபனைச் சாப்பிட்டதாகவும், தன்னை அவள் நம்ப வைத்துக் கொண்டாள். அந்த நம்பிக்கை தூள்தூளாகி அவனுடைய அப்பட்டமான கீழ்த்தரமான சுயநலம் நிதரிசனம் ஆகும் போதுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி பிறந்ததோ? அவளுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பாயசப் பாத்திரத்தில் இருந்த எல்லா முந்திரிப் பருப்பையும், திராட்சையையும் தன் கிண்ணத்தில் போட்டுக் கொண்டு தின்று முடித்தான். அவளுக்கோ, குழந்தைக்கோ எதையும் மிச்சம் வைக்க வேண்டும் என்ற உணர்வு எப்பொழுதுமே அவனுக்கு இருந்ததில்லை. திருமணமான புதிதில் அவன் எதையாவது முழுவதும் சாப்பிட்டு விட்டால் அவள் கேட்பாள். “எனக்கு மிச்சமே வெக்கலயா” என்று. அதற்கு அவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு “ஐய்யய்யோ! உள்ளே இருக்குதாக்கும்னு நெனைச்சேன்” என்பான். அவள் சிரித்த முகத்தோடு “பரவாயில்ல எனக்கு அது அவ்வளவா பிடிக்காது” என்று சொல்லும் வரை மன்னிப்புக் கேட்டுக் கொள்வான். இந்த நாடகம் பல தடவை நடந்தும் இது நாடகம் என்று அவளுக்குத் தெரியவில்லை. தான் எப்படி அவ்வளவு முட்டாளாக இருந்தோம் என்று இப்பொழுது அவளுக்கு வியப்பாக இருந்தது. பிறந்த வீட்டில் அவள் தாய் தந்தையருக்குச் செல்லப் பெண். சூதுவாது தெரியாமல் வளர்ந்தவள். உண்மையான உறவுகளை மட்டுமே அறிந்தவள். அதனால் பொய்யும் புனை சுருட்டுமே அஸ்திவாரமாகக் கொண்ட அவனுடைய சுபாவத்தை அவளால் சீக்கிரமாக புரிந்துகொள்ள இயலவில்லை. அந்த இயலாமையிலும் ஒரு லாபம். ஆம், அதன் காரணமாகத்தான் அவள் சில மாதங்களையாவது ஒரு அசட்டு சுவர்க்கத்தில் கழித்தாள். அச்சுவர்க்கம் நீர்க்குமிழியாய் வெடித்த போது வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்திருக்க வேண்டும். அவன் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அவள் எப்பொழுது உணர்ந்தாள்? அவளுக்கும் தெரியவில்லை.

நினைவுகளில் மூழ்கி இருந்தவளுக்குத் திடீரென்று நினைவு வந்தது. குழந்தைக்காகக் கொஞ்சம் பருப்பை எடுத்து உள்ளே வைக்கவில்லை என்று. உடனே பருப்புக் கிண்ணத்தைப் பார்த்தாள். அவள் பயந்தபடியே அவன் பருப்பைக் காலி செய்து விட்டிருந்தான். அவள் மேலோ அல்லது குழந்தையின் மேலோ உள்ள வெறுப்பினால் அப்படிச் செய்தான் என்பதில்லை. அவனைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் சகல ஆத்மாக்களும் ஒன்று (இதில் மட்டும் அவன் கீதையின் உபதேசத்தைப் பின்பற்றினான்). சாப்பாடு என்று வந்து விட்டால் அவனுடைய உலகம் மிகச் சிறியதாகி விடும். அதில் அவனை ஆட்டுவிக்கும் அவனுடைய அம்மாவுக்குக் கூட இடம் கிடையாது. ஒருநாள் குழந்தைக்கென வாங்கி வைத்திருந்த வாழைப்பழத்தை திருட்டுத்தனமாக வாயில் அடைத்துக் கொண்டு அவன் அவசரமாகச் சமையலறையிலிருந்து வெளியேறுவதைப் பார்த்துவிட்டாள். அதுவரை இம்மாதிரியான ‘சில்லறை’ உணவுத் திருட்டுகளுக்கெல்லாம் அவள் தன் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் பதினான்கு வயதுச் சிறுமியைச் சந்தேகித்துக் கொண்டிருந்தாள். உண்மை வெளிச்சத்துக்கு வந்த அந்தக் கணம் வீட்டில் ஒரு திருடனை வைத்துக் கொண்டு, ஒரு அப்பாவி ஏழைக் குழந்தையைச் சந்தேகித்து வந்ததற்காகக் குற்ற உணர்வு அவளைத் தாக்கியது. ஒரு வேளை அந்தத் தாக்குதலின் எதிரொலியாகத்தான் அவள் மனதில் வெறுப்பு எழுந்ததோ? இருக்கலாம்.

அவன் தண்ணீரைக் குடித்துப் பெரியதாக ஒரு ஏப்பம் விட்டான். அவன் முகத்தில் திருப்தி மண்டிக்கிடந்தது. இது அவளால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அவன் அவளை இரவும் பகலும் எப்படி யெல்லாம் திட்டுகிறான்? “நான் ஒன்னைக் கல்யாணம் செஞ்சுண்டதே தப்பு. எங்கம்மா அப்பவே சொன்னா, இந்தப் பொண்ணு வேண்டாம். இவ ஜாஸ்தி படிச்சிருக்கா, திமிரா இருப்பான்னு. நீ இப்பவே வீட்டை விட்டு போய்டு” இதைக் கேட்டுக் கேட்டு அவளுக்கு அலுத்து விட்டது. இப்படி அவளைத் தினமும் கரித்துக் கொண்டே எப்படி அவனால் அவள் சமைத்த சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட முடிகிறது? அவள் நினைத்துக் கொண்டாள் “அவனுடைய வெறுப்புக் கூடப் போலிதானே” என்று. ஆம், அவனுடைய உணர்ச்சிகளெல்லாம் போலி. பொம்மலாட்டக்காரன் பொம்மைகளின் உடல் உறுப்புகளை மட்டும்தான் ஆட்டுவிப்பான். ஆனால், அவனுடைய அம்மாவோ அவனுடைய உணர்ச்சிகளையே ஆட்டுவிப்பாள். வாரம் ஒரு முறை அவனுடைய அம்மாவிடமிருந்து அவனுக்குக் கடிதம் வரும் – அவனுடைய ஆபீஸ் விலாசத்திற்கு. ஒவ்வொரு கடிதத்தின் பாதிப்பும் இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடரும். அந்நாட்களில் அவன் சீக்கிரம் வீடு திரும்புவான் (சண்டை போட நேரம் வேண்டுமல்லவா?). அப்பொழுது அவன் முகத்தில் ரௌத்திரம் குடி கொண்டிருக்கும். மற்ற நாட்களில் நேரம் கழித்து வருவான். முகத்தில் ஒரு புன்னகையுடன். அவனுடைய ரௌத்திரத்திற்கும் ஆழம் கிடையாது. புன்னகைக்கும் ஆழம் கிடையாது.

வெகுநாட்களாகவே அவனுடைய ரௌத்திரம் அவளை அதிகம் பாதிப்பதில்லை. வாசற்கதவைத் திறந்து அவன் முகத்தைப் பார்த்தவுடன் அடிவயிற்றில் ‘சில்’ லென்ற ஒரு உணர்ச்சி. நெற்றி நரம்புகளில் ஏதோ ஒன்று சூடாகப் பாய்வது போன்ற உணர்வு. அவ்வளவுதான். அதன் பிறகு அவள் மனம் மரக்கட்டையாகி விடும். அவனுக்கு டிபன் காபி கொடுத்து விட்டு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, சுவற்றில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்து விடுவாள். அவன் டிபன் சாப்பிட்டவுடன் ஆரம்பிப்பான். கல்யாணசத்திரத்தில் குளிக்க வெந்நீர் சூடாக இல்லாதது முதல் தொடங்கி, முன் தினம் அவள் ஏதோ சொன்னது வரை தேதி வாரியாக வரிசைப்படுத்தி அவளையும் அவளுடைய பெற்றோரையும் குற்றம் சாட்டுவான். முன் தினம் அவள் என்ன சொன்னாள் என்பது முக்கியமில்லை. எது சொல்லியிருந்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கும் திறமை அவனுக்கு இருந்தது. அவள் ஒருவேளை முன்தினம் ஒன்றுமே பேசாமலிருந்திருந்தால் அதுவே அவளுடைய குற்றமாகி விடும்.

மாலை ஆறு மணிக்குத் தொடங்கும் இந்த ஒத்தை நடிகன் நடத்தும் ஒத்திகையில்லா நாடகம் இரவு எட்டு மணி வரை நடக்கும். பிறகு அவன் சாப்பிடுவதற்காக இடைவேளை. குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு அவள் சாப்பிட உட்காரும் போது மறுபடியும் ஆரம்பிப்பான். மனம் மரக்கட்டையாகும் போது அவளுடைய வயிறும் சுருண்டு விடுமோ என்னவோ, அவள் தன் சாப்பாட்டை அப்படியே குப்பைத் தொட்டியில் கொட்டுவாள். அவன் பின்தொடர்ந்து வந்து கத்திக் கொண்டிருப்பான். அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இதற்குப் பிறகு நாவல் படிப்பதற்காக இரண்டாவது இடைவேளை. வேலைகளை முடித்துக்கொண்டு குழந்தைக்குத் தூக்கத்திலேயே பாலூட்டி விட்டு வெகு நேரம் முயற்சித்து தூங்கத் தொடங்குவாள். அதற்குள் அவன் நாவலை முடித்து விட்டு அவளை எழுப்பி மறுபடியும் போர் தொடுப்பான். அவனுக்குத் தூக்கம் வரும் வரை இது தொடரும்.

ஒரு முறை போரின் உச்சக் கட்டத்தில் அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவைத் தாளிட்டு விட்டான். சப்தம் கேட்டுத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட குழந்தை அரைகுறையாக நிலைமையைப் புரிந்து கொண்டு ‘ஓ’ வென்று அழத் தொடங்கினாள். இதுவும் ஒரு நாடகம்தான் என்றும் அவளுக்குத் தெரியும். அதனால்தானோ என்னவோ நடுநிசியில் வீட்டிற்கு வெளியில் தள்ளப்பட்டதற்காக அவள் அவமானப்படவில்லை. டில்லியின் ஜனவரி மாதத்துக் குளிர் கூட அவளுடைய மனதில் எழுந்த ஒரே எண்ணம் தன் குழந்தையின் மனத்தில் பயம் உறையும் முன் அந்த நிலைமைக்கு எப்படியாவது முடிவு கட்ட வேண்டும் என்பதுதான். அவளிடம் அவன் மனிதத் தன்மையற்று நடந்து கொள்வதை மற்றவர் அறிவதை அவன் விரும்பமாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். ஆகவே அவனுடைய அந்த பலவீனத்தைத் தாக்கினாள். உணர்ச்சிகளைத் தாண்டிய சன்னக்குரலில் சொன்னாள், “கதவெ தெறங்கோ. அடுத்த வீட்டு மாதாஜி வௌக்கெ போட்டு கதவெ தெறக்கறா. அவ பாத்துட்டா உங்களை தப்பா நெனப்பா”. அவன் உடனே கதவைத் திறந்து வைத்தான். அவனைத் தள்ளிச் சென்று குழந்தையை வாரி அணைத்து சமாதானப்படுத்தினாள். இரவு முழுவதும் குழந்தை, மடியிலேயே தூங்கினாள். தூக்கத்தில் கூட குழந்தைக்கு நடுநடுவே பயத்தினால் தூக்கிப்போட்டது. அன்று அவள் அவனைப் பார்த்த பார்வையில் அதற்குப் பிறகு அந்த நாடகத்தை அவன் நடத்தவில்லை.

அவள் நினைத்துக்கொண்டாள். “ஒரு வேளை இப்படி அவன் சண்டை போட ஆரம்பித்த பிறகுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்ததோ? இல்லையென்று தோன்றியது. இப்படி அவன் அதி உக்கிரமாகச் சண்டை போடத் தொடங்கியது கடந்த ஒரு வருடமாகத்தான். திருமணமான புதிதில் கூட அம்மாவின் கடிதங்கள் அவனைப் பாதித்தது உண்டு. ஆனால், அப்பொழுதெல்லாம் அவன் தன் கோபத்தை வேறு விதமாகத்தான் காண்பிப்பான். நாட்கணக்கில் அவளுடன் பேசாமலிருப்பான். அவனைத் தன் சிறிய சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக எண்ணியிருந்த அவளுக்கு இது சித்ரவதையாக இருக்கும். தூண்டித் தூண்டி காரணம் கேட்டபின் திருமணத்தின் போது அவளுடைய பிறந்த வீட்டினர் அவனுக்கோ அல்லது அவனுடைய அம்மாவுக்கோ செய்த அவமரியாதை அல்லது செய்யத்தவறிய மரியாதைக்காக அவர்களைக் குற்றம் சாட்டுவான். அவளை நேரடியாக ஒன்றும் சொல்ல மாட்டான். திருமணத்தன்று உள்ளங்கை வேர்க்க ஹோமப் புகையில் குருடாகி அமர்ந்திருந்த அவளுக்கு அவனுடைய குற்றச்சாட்டுகளில் முக்கால் பாகம் அவனுடைய அம்மாவின் கற்பனை என்று தெரியாது. அவன் சொல்வதை நம்பி நடந்த தவறுகளுக்கும் நடக்காத தவறுகளுக்கும் பலமுறை தன் பிறந்த வீட்டினர் சார்பில் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வாள். மாமியாருக்கும் மன்னிப்புக் கேட்டுக் கடிதங்கள் எழுதுவாள். அவனுடைய சுயரூபத்தை அவள் அறிந்து கொண்ட பிறகு நிலைமை மாறியது. தன் வேஷம் கலைந்து விட்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெட்கப்படுவதற்குப் பதில் அவள் மேல் கோபம் வந்தது. ஏற்கனவே அவனைப் புரிந்து கொண்டதால் அடைந்த ஏமாற்றம், துக்கம் இவைகளுடன் அவனுடைய இந்த அநியாய கோபத்தினால் வந்த ஆத்திரமும் சேர்ந்துதான் அவள் மனதில் வெறுப்புக்கு அடிகோலியிருக்க வேண்டும். அவள் மனதில் இவ்வாறு வெறுப்புத் தோன்றிய பிறகுதான் அவனுடைய சண்டைகளும் உக்ரமடைந்தன. அவள் எவ்வளவுதான் முயற்சித்து அதைத் தன் முகத்தில் காட்டாமல் மறைத்தாலும் அவளுள் மண்டியிருந்த வெறுப்பை அவனுடைய உள் மனது உணர்ந்திருக்க வேண்டும். ‘அவனுடைய அந்த உணர்தல் மட்டும் போலி அல்ல’ என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

தட்டிலேயே கையைக் கழுவி விட்டு அவன் தலை நிமிர்ந்தான். எண்ணங்களில் மூழ்கி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவள் சட்டென்று தன் கண்களை அவன் முகத்திலிருந்து அகற்றினாள். ஆனால், அதற்கு முன் அவன் பார்த்துவிட்டான், அக்கண்களில் தெரிந்த வெறுப்பை. அதை நேருக்கு நேர் அவன் சந்திப்பது இதுவே முதன் முறையாகும். அந்த வெறுப்பின் ஆழம் அவனை நிலைகுலையச் செய்தது. கண நேர மௌனத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு “ஏய்! என்ன மொறைக்கிறே” என்று இரைந்தான். அவள் மௌனமாக இருந்தாள். அவளுக்கு ஆயாசமாக இருந்தது. அவளுக்குத் தெரியும். அவளுடைய வெறுப்பின் ஆழம் அவனை அதிர்ச்சியுறச் செய்தாலும், அது நிரந்தரமானது அல்ல. அவனுடைய தேவைகள் மட்டுமே அவனுக்கு பிரதானம். அவளுடைய கை சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடவும், அவள் இணங்கினால் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளவும் அவன் என்றைக்கும் தயாராக இருப்பான். அவனுக்குத் தன் மேல் அன்பு இல்லை என்று தெரிந்தது முதல் அவள் அவனுடைய இச்சைக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டாள். அன்பில்லாத கணவனுடன் உடலுறவுகொள்வது சோரம் போவதற்குச் சமம் என்பது அவளுடைய உறுதியான அபிப்பிராயம். அப்படி ‘சோரம்’ போவதற்கு அவளை அவன் அழைத்த போதுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்ததோ? இல்லை. அந்நேரம் அவளுடைய உடம்பெல்லாம் தீப்பற்றினாற் போல் எரிந்ததே தவிர வெறுப்பு அதற்கு முன்னரே அவளுடைய மனதில் பூரணமாய் வியாபித்து விட்டிருந்தது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு அவள் திடுக்கிட்டு எழுந்தாள். வாசற்கதவு திறந்திருந்தது. அவன் ஆபீசுக்குப் போய் விட்டிருந்தான். உடனே பீரோவைப் பார்த்தாள். அதன் கதவு திறந்திருந்தது. அவளுக்குப் புரிந்துவிட்டது. அவள் பூட்ட மறந்து விட்டிருந்தாள். அவன் நினைவுகளில் மூழ்கியிருப்பதை பயன்படுத்திக் கொண்டு அவன் வீட்டுப் பணத்தில் ‘கை’ வைத்திருப்பான். எவ்வளவு குறைகிறது என்று இன்று எண்ணத் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டாள். இன்று மட்டுமல்ல, இனி என்றுமே எண்ணத் தேவையில்லை என்ற எண்ணம் அவளுக்குப் பெருத்த நிம்மதியைக் கொடுத்தது.

குழந்தையைப் பார்த்தாள். தன் மூத்திரத்திலேயே வழுக்கி விழுந்து விட்டு அதற்கு வேறு யாரோ காரணம் போல உரத்த குரலில் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தாள் குழந்தை. அவளை சமாதானப்படுத்தி, குளிப்பாட்டி, அணிவிப்பதற்காக நல்ல கவுனை கையில் எடுத்தாள். நல்ல கவுனைக் கண்டவுடன் தான் வெளியே போகப் போவதைப் புரிந்து கொண்டாள் குழந்தை. சந்தோஷம் எல்லை மீறி சிரித்துக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். அவ்வப் பொழுது அம்மாவைத் திரும்பிப்பார்த்துக் கொண்டாள். இவளும் சிரித்துக் கொண்டு அவளைச் சற்று துரத்திக் கொண்டு ஓடிவிட்டு பின் தன்னால் பிடிக்க முடியாதது போல் நின்றாள். உடனே குழந்தை ‘களுக்’ என்று சிரித்து விட்டு ஓடி வந்து அவள் முன்னே நின்று கவுன் அணிவப்பதற்காக தன் இரண்டு கைகளையும் தூக்கினாள். குழந்தையைத் தயார் செய்து பால் கொடுத்து விட்டு அவளும் தயாரானாள்.

தயாராகும் போது சொந்த வீட்டிலேயே திருடும் அந்தப் புது மாதிரியான திருடனைப் பற்றிச் சிந்தித்தாள். திருமணமான புதிதில், (அவள் கனவுலகில் மிதந்த நாட்களவை) அவன் தன் சம்பளம் முழுவதையும் (அப்படி அவன் சொல்ல, அவள் நம்பினாள்) அவளிடம் கொடுத்து கூறினான்: “இந்தா, இதெ பீரோல வை. நாம ரெண்டு பேரும் அவாவாளுக்கு வேணுங்கறச்சே எடுத்து செலவழிச்சுக்கலாம்.” அவளுடைய பிறந்த வீட்டிலோ அப்பாவின் அனுமதியில்லாமல் அம்மாவால் ஒரு பைசா செலவழிக்க முடியாது. ஆகையால் அவளுக்குத் தன் கணவன் தனக்கு ஏதோ நிறைய அதிகாரம் கொடுத்து விட்டாற் போல் இருந்தது. சந்தோஷத்துடன் சொன்னாள், “சரி யாரு எடுத்தாலும் கணக்கு எழுதணும்.” அவன் சம்மதித்தான். அவள் கணக்கு எழுதினாள். அவள் எதிரே எப்பொழுது பணம் எடுத்தாலும் அவனும் எழுதினான். ஆனாலும் மாதக் கடைசியில் கணக்கு உதைத்தது. அவன் சொன்னான், “ஒனக்கு மறதி ஜாஸ்தி. நீ ஏதாவது எழுத மறந்திருப்ப”. அவள் நம்பினாள். கணக்கு எழுவது நின்றது. ஒவ்வொரு மாதக் கடைசியிலும் பற்றாக்குறைதான். அவளுக்கு முதல் தேதி எப்பொழுது வரும் என்று இருக்கும். ஆனால், அவன் கவலையே படமாட்டான். அவளுக்கு அது வியப்பாக இருக்கும். “இவருக்கு மன திடம் ரொம்ப அதிகம்” என்று எண்ணி அவனைப் பற்றிப் பெருமை கொண்டாள். அப்பா அவளுடைய பிறந்தநாள், பண்டிகை என்று ஏதாவது சாக்கிட்டு அனுப்பும் பணத்தை வைத்து ஒப்பேற்றுவாள். அவன் சொல்லுவான். “சேச்சே, ஒன்னோட பணத்தை எடுக்காதே” என்று. “என்ன இது? என்னோட பணம் நம்மளோடது இல்லையா?” என்று அவள் கோபிக்க, “சரி உன் இஷ்டம்” என்று கூறிவிட்டு போய் விடுவான்.

அவள் மாதாமாதம் ‘பட்ஜெட்போட்டாள். தனக்கென்று ஒரு உள் பாவாடை கூட வாங்கிக் கொள்ளமாட்டாள். தலை தீபாவளிக்குப் பிறந்த வீட்டுக்குப் போன போது அம்மா அவள் பெட்டியைப் பார்த்துவிட்டு நிலைமையைப் புரிந்து கொண்டு புடவை முதல் கைக்குட்டை வரை வாங்கித் தந்தாள். அது அவளுக்கு அவமானமாக இருந்தது. ஆனால், அவற்றை வாங்க மறுத்து அம்மாவின் மனதை நோகடிக்கவும் பிடிக்கவில்லை. பொறுக்காமல் அம்மாவிடம் பற்றாக்குறையைப் பற்றி கூறினாள். அம்மா அதற்கு, “அவர் கொண்டு வரது ஒங்க ரெண்டு பேருக்கும் ஏதேஷ்டம். ஒனக்குக் குடித்தனம் பண்ணத் தெரியல” என்று கூறிவிட்டாள். இவளும் நம்பினாள். வீடு திரும்பியதும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தாள். காய்கறி, பழத்தைக் குறைத்தாள். தான் பால் சாப்பிடுவதை நிறுத்தினாள். குறைந்த சம்பளத்திற்கு ஆள் பேசிக் கொண்டு முக்கால்வாசி வீட்டு வேலைகளைத் தானே செய்தாள். நான்கு மாதக் கருவை வயிற்றில் சுமந்து கொண்டே தண்ணீர்க் குடத்தை இடுப்பில் சுமந்து மூன்றாவது மாடியிலிருக்கும் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். இதையெல்லாம் அவள் சந்தோஷமாகச் செய்தாள். ஏனென்றால் அந்தப் பற்றாக்குறை அவனால் உண்டாக்கப்பட்டது என்று அப்பொழுது அவளுக்குத் தெரியாது. அவன் மேல் அவள் வைத்திருந்த நம்பிக்கை எப்பொழுது சிதைந்தது? அவன் தன் வீட்டிலேயே திருடுபவன் என்பதை அவள் எப்பொழுது புரிந்து கொண்டாள்? பொங்கலுக்காக அப்பா அனுப்பிய பணத்தில் குழந்தைக்காக வாங்கிய பால் பவுடரைத் தின்று விட்டு அவன் சமையலறையில் இருந்து வெளியில் வந்த பொழுது அவனுடைய கடைவாயில் ஒட்டிக்கொண்டிருந்த வெள்ளைத் துகள்கள் அவனைக் காட்டிக்கொடுத்தனவே, அப்பொழுது தானா? அதுதான் வெறுப்பின் ஆரம்பப் பொழுதோ? இல்லை. இல்லை. அதற்கு முன்பே இந்த வெறுப்பு அவளுடைய மனதை முழுவதுமாய் ஆக்ரமித்துவிட்டிருந்தது.

முதன்முதலாக அவன் தன் வீட்டிலேயே கன்னக்கோல் வைப்பவன் என்பதைப் புரிந்து கொண்ட போதுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி ஜனித்ததோ? அப்படி இருக்க முடியாது. ஏனெனில் அதைப் புரிந்து கொண்ட அந்நொடியை தனியாகப் பிரித்து அடையாளம் காட்ட முடியாது. வெகுநாட்கள் அவன் திருட்டுத்தனத்தைப் புரிந்து கொள்ளாமல்தான் இருந்தாள். ஆனால், இப்பொழுது வெகு நாட்களாகவே பீரோவைப் பூட்டி, சாவியைத் தாலிக்கயிற்றில் கோர்த்துக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். அவனுக்கு வேண்டிய பணத்தை அவ்வப்பொழுது கொடுக்கத் தொடங்கியிருந்தாள். அவள் எப்பொழுதிலிருந்து இப்படிச் செய்யத் தொடங்கினாள் என்று அவளுக்கு நினைவில்லை. உண்மையை அவளுடைய உள் மனது எப்பொழுதுதோ உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், எத்தருணத்திலிருந்து அது அவளுக்குத் தெரிந்த விஷயமாகிற்று என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிந்தது. அந்தத் திருட்டுத்தனத்தை உணர்ந்த நாழியிலிருந்து அவள் அவனுடன் சண்டைபோடுவதை நிறுத்தி விட்டாள். அதற்குக் கூட அவனுக்குத் தகுதியில்லை என்று அவளுக்குத் தோன்றி விட்டது. அவனுடைய திருட்டுத்தனத்தை உணரும் முன்பே அவனுடைய போலித்தனத்தை அவள் தெரிந்து கொண்டு விட்டாள். அவளுக்குத் தெரிந்து விட்டது. அவனுடைய அன்பு போலி, கோபம் போலி, அதிகாரம் போலி, கத்தல் போலி, வார்த்தைகள் இரவல்.

இத்தனை யோசனைகளுக்கும் நடுவே அவள் கை மட்டும் வேலை செய்து கொண்டிருந்தது. தன் உடைகளையும் குழந்தையின் உடைகளையும் சூட்கேசில் எடுத்துவைத்தாள். திறந்திருந்த பீரோவடின் கீழ்த்தட்டிலிருந்து தன் போட்டோக்களைக் கீழெல்லாம் இரைத்துக் கொண்டே குழந்தை எடுத்து வந்தாள். அம்மாவும் தானும் சேர்ந்திருந்த போட்டோவுக்கு ‘இச்’ என்று முத்தம் கொடுத்து ‘அம்மா’ என்று அறிமுகம் செய்தாள். குழந்தைக்கு கிட்டத்தட்ட இரண்டு வயதாகியிருந்தது. மகா புத்திசாலி. எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாள். ஆனால், ‘அம்மா’வைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பேச வரவில்லை. இவளுக்கு ஒரு சந்தேகம், தன்னுடைய நிகழ்கால வாழ்க்கைதான் இதற்குக் காரணமோ என்று.

அவன் அவளுடன் சண்டைபோடுவது குழந்தையை உண்மையில் வெகுவாகப் பாதித்தது. அவன் கத்தும் போதெல்லாம் குழந்தை அவளுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அம்மாவின் முகத்தில் வேதனையின் சாயலைக் கண்டு விட்டால் கூட குழந்தையின் உதடுகள் துடிக்கத் தொடங்கும். ஓர் அழுகையின் ஜனனம். அதனால் அவள் பல்லைக்கடித்துக் கொண்டு தன் உணர்ச்சிகளை மனத்தின் அடித்தளத்தில் அழுத்தி, குழந்தையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருப்பாள். திடீரென்று தன் அம்மாவின் உபதேசம் ஞாபகத்திற்கு வர, அவன் அவளை அடிக்கக் கையை ஓங்குவான். குழந்தை அரண்டு விடுவாள். அவள் குழந்தையை அணைத்துக் கொண்டு அவனையே சலனமில்லாமல் பார்ப்பாள். அவனுடைய கை இறங்கிவிடும். அடிக்க அவனுக்கு தைரியம் கிடையாது. அவளுக்கு இருந்தது அந்த தைரியம். ஆனால், அடியில் அவளுக்கு நம்பிக்கை இல்லை.

அவள் தினம் சண்டை போடுவதில்லை. அதற்கு சில வழிமுறைகள் உண்டு. மாதத் தொடக்கத்தில் அவன் கையில் பணம் புரளும். (அவனுடைய உண்மையான சம்பளம் அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்). அப்பொழுதெல்லாம் அவன் ‘நைட் டியூட்டி’ என்று கூறி எல்லாவிதத்திலும் ‘புல்’லாக நேரங்கழித்து, வந்த உடனேயே தூங்கிவிடுவான். ‘நைட் டியூட்டி’ ‘நைட் ஷோ’ வில்தான் என்பது அவளுக்குத் தெரியும். அம்மாவின் கடிதத்தால் அவன் பாதிக்கப்படும் நாட்களில் சண்டை, கத்தல், குற்றச்சாட்டுகள் என்று நாடகங்கள் நடக்கும். கையில் அதிக பணமும் இல்லாமல், அம்மாவின் ‘ரிமோட் கண்ட்ரோலும்’ இயங்காத நாட்களில் மறுபடியும் ‘நைட் டியூட்டி’ தான். ஆனால், ஒரு வித்தியாசம். அவனுடைய பாக்கெட்டில் டிக்கெட்டுகள் ஒன்றுக்குப் பதில் இரண்டு இருக்கும். முதலில் இது அவளுக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் அவனுக்கு நண்பர்களே கிடையாது. ஆனாலும் அவள் அவனை ஒன்றும் கேட்கவில்லை. ஏனெனில் அதற்குள் அவள் வெறுப்பின் எல்லையைத் தொட்டிருந்தாள்.

ஒரு முறை துணிமணிகளை சலவைக்குப் போடுமுன் அவனுடைய பாக்கட்டைத் துழாவுகையில் ஆண்களுக்கான கருத்தடைச் சாதனம் ஒன்று அகப்பட்டது. திருமணம் நிச்சயமான போதே அப்பாவின் நண்பர் ஒருவர் அவளை நல்லெண்ணத்தோடு எச்சரித்தார். “மாப்ளெயோட உத்தியோகத்தில் பல பொண்களுக்கு ‘காண்ட்ராக்ட்’ குடுக்கற அதிகாரம் இருக்கும்மா. சில பொண்கள் இதுக்காக எது வானாலும் செய்யத் தயாரா இருப்பாம்மா. நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று. அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு விட்டாள். ஆனால், அதிர்ச்சியுறவில்லை. வருத்தம் கூட அடையவில்லை. அவளுக்கு அவனை விசாரிக்கப் பிடிக்கவில்லை. ஏனெனில் ஒரு மனைவியின் உரிமையை எடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. பெண்களுடன் ஊர் சுற்றுகிறான் என்பது புரிந்தது. அவள் எண்ணிக் கொண்டாள். “எது எப்படியிருந்தாலும் ஒன்று நிச்சயம். இவனால் யாரையும் காதலிக்க முடியாது. ஏனென்றால் அந்த உணர்ச்சியே இவனுக்குத் தெரியாத ஒன்று. இவனால் யாரையும் வைத்துக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் அவளுக்குப் பணம் செலவழிக்க இவனுடைய சுயநலம் இடம் கொடுக்காது’’. இப்படித் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்ட பிறகும் கூட அன்று விக்கி விக்கி ஏன் அழுதோம் என்று இப்பொழுது கூட அவளுக்குப் புரியவில்லை. ஆனால் வெறுப்பின் ஆரம்பம் அன்று இல்லை என்று மட்டும் புரிந்தது.

மனம் நினைவுகளில் மூழ்கியிருந்தாலும் அவள் முக்கியமான சாமான்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள். அம்மி முதல் சோபா செட் வரை எல்லாமே அவள் அப்பா வாங்கித் தந்தது. அவனுடைய முக்கால்வாசி உடைகளையும் சேர்த்து. தன்னுடைய பொருட்கள் எல்லாவற்றையும் அவள் எடுத்துக் கொண்டால் இந்த வீடே காலியாகிவிடும். அவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை. ஆகவே பல சாமான்களை அவனுக்கு பிச்சை இட்டு விட்டாள். தன்னுடைய எம்.எஸ்.ஸி. புத்தகங்களையும் சான்றிதழ்களையும் எடுத்து வைக்கும் போது, “இனி இவைகள்தான் என் மூலதனம்” என்று எண்ணிக் கொண்டாள்.

வாசலில் வந்து தெருவில் போன டாக்சியைக் கூப்பிட்டாள். வயதான சார்தார்ஜி டிரைவர் அவளை ஒரு சாமானும் தூக்க விடவில்லை. அடுத்த வீட்டுக்காரி முகத்தில் ஒரு பெரிய கேள்விக் குறியோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல வேளை அதிகம் பழகாததால் கேள்வி நாக்குக்கு வரவில்லை. அதைச் சாதகமாக்கிக் கொண்டு வீட்டின் சாவியை அவளிடம் கொடுத்து, அவன் வீடு திரும்பும் போது கொடுத்து விடச் சொன்னாள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு டாக்சியில் ஏறி “ஸவுத் எக்ஸ்டென்ஷன் ஜாயியே” (ஸவுத் எக்ஸ்டென்ஷனுக்கு போங்கள்) என்றாள்.

குழந்தை ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டும் நடுநடுவே கைக்கொட்டிச் சிரித்துக் கொண்டும் இருந்தாள். டிரைவரின் முன் இருந்த சிறிய கண்ணாடி வழியே அவளுடைய வெள்ளைத் தாடியைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தாள். அவரும் அன்பு பொங்கச் சிரித்து “க்யோன் பேட்டி? குடியாகே பாபா நஹி ஆயே?” (ஏன் மகளே… இந்த பொம்மைக் குட்டியின் அப்பா வரவில்லையா?) என்றார். அவள் மௌனமாக இல்லையென்று தலையை ஆட்டினாள்.

கையில் இருந்த விலாசத்தைப் பார்த்து அவருக்கு வழி சொன்னாள். வீடு வந்து விட்டது. “நல்ல வேளை அண்ணாவுக்கு டில்லி மாற்றல் ஆகியது. இல்லாவிட்டால் இன்னும் சிரமமாக இருந்திருக்கும்” என்று எண்ணிக் கொண்டாள். டாக்சி நின்ற சப்தம் கேட்டு அப்பாவும் அம்மாவும் வாசலுக்கு, வந்தார்கள். அவள் குழந்தையோடு இறங்குவதைப் பார்த்தவுடன் அவர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இந்த மட்டிலும் மாப்பிள்ளை தன் விதியைத் தளர்த்தி அவளையும் குழந்தையையும் அனுப்பி வைத்தாரே என்று. மூன்று மாதக் குழந்தையோடு சீர் செனத்தியோடு அவனை அனுப்பிய பிறகு அவர்களுக்கிடையே எல்லாப் போக்குவரத்தும் (கடிதம் உள்பட) நின்றுவிட்டிருந்தது.

வேற்று முகம் பாராமல் குழந்தை பாட்டியிடம் தாவினாள். சர்தார்ஜி ‘டிக்கியை’ திறந்து சாமான்களை எடுத்து ஹாலில் வைக்க ஆரம்பித்தார். சாமான்களைப் பார்த்தவுடன் அப்பா அம்மாவின் முகங்கள் பேயறைந்தாற் போல் ஆகிவிட்டன. சர்தார்ஜி பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையின் கன்னத்தை தட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

அவள் சூட்கேசிலிருந்து தன்னுடைய சான்றிதழ்களை எடுத்து அப்பாவிடம் கொடுத்து “இதற்கெல்லாம் ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் குடுங்கப்பா” என்றாள். அப்பா உடனே சட்டையை மாட்டிக் கொண்டு குழந்தையுடன் வெளியே கிளம்பி விட்டார். அவர் நடையில் திடீரென்று வயதின் தளர்ச்சி தெரிந்தது.

அம்மா டிபன், காபி கொண்டு வந்தாள். அப்பொழுதுதான் இவளுக்கு நினைவுக்கு வந்தது, தான் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்பது. மௌனமாக சாப்பிட்டு விட்டுக் கை கழுவியதும் அம்மா நியூஸ் பேப்பரைக் கொண்டு வந்தாள். “இந்த அட்வர்டைஸ்மென்டைப் பாரு. டெல்லி யூனிவர்சிடியில் ஃபிசிக்ஸ் லெக்சரர் கேட்டிருக்கா” என்றாள். அவள் படித்தாள். உடனே உட்கார்ந்து, ஒரு விண்ணப்பத்தாள் அனுப்புமாறு கடிதம் எழுதி நிமிர்ந்தாள். அம்மா அருகே வந்து நின்றாள். தயங்கித் தயங்கி மெதுவாகக் கேட்டாள். “எப்போலேருந்தும்மா நெலமை இத்தனை மோசமாகப் போச்சு?” அவள் சொன்னாள். “எனக்கேத் தெரியலம்மா.”

– பெப்ரவரி 1992

***

வத்ஸலா

ராஞ்சி பல்கலைக்கழத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டமும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணி பொறியியலில் முதுநிலை ஆராய்ச்சி பட்டமும் பெற்றவர். இருபத்தியைந்து வருடங்கள் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-Chennai) கணினி மையத்தில் பணிபுரிந்த சிஸ்டம்ஸ் இஞ்சினியரான இவர் 1999ம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.

தனது நாற்பத்தி எட்டாவது வயதில் முதன் முதலாக எழுதத் தொடங்கிய இவருடைய கவிதைகளும் சிறுகதைகளும் பெரும்பாலும் ‘சுபமங்களா’, ‘கணையாழி’, ‘புதியபார்வை’ போன்ற சிறு பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவருடைய ‘அதுவும் கடந்து’ எனும் சிறுகதை இலக்கிய சிந்தனை மாதப் பரிசைப் பெற்றது. இவருடைய ‘கோபங்கள்’ எனும் சிறுகதை ‘அக்னி – சுபமங்களா’ நடத்திய போட்டியில் ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றது.

இவருடைய ‘சுயம்’ என்கிற கவிதைத் தொகுப்பு கவிஞர் ஞானக்கூத்தனின் முன்னுரையுடன் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 2000ம் ஆண்டு வெளி வந்தது.

இவருடைய நாவல் ‘வட்டத்துள்’ உயிர்மை பதிப்பகத்தால் 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருதைப் பெற்றது. அந்த நாவலை இவரும் ஆங்கில எழுத்தாளரான இவருடைய மகள் முனைவர் ஸ்ரீலதாவும் மொழி பெயர்த்து, ‘Once there was a girl’ எனும் தலைப்பில் (கொல்கத்தாவின் ரைட்டர்ஸ் ஒர்க் ஷாப் பதிப்பகம்) 2012ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறார்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “வெறுப்பைத் தந்த வினாடி

  1. நல்ல சிறுகதை நிச்சயம் பிரசுரமாகும்
    (வெறுப்பைத் தந்த வினாடி என்கிற அற்புதமான சிறுகதையை… என்று கோமல் சுவாமிநாதன் அவர்களே கூறியதை என் செவியால் கேட்ட நாளை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

    பிப்ரவரி 1992 சுபமங்களாவில் வந்த இந்தக் கதையை நான் பல முறை படித்தேன். மிகவும் ரசித்தேன்.
    மார்ச் 1992ல் கும்பகோணம் காந்தி பார்க்குக்கு எதிலே ஜனரஞ்சனி சபா என்று நினைவு ஒரு செமினார் நடைபெற்றது. கரிச்சான் குஞ்சு அவர்களை போற்றும் விதத்தில் நினைவு நாள் விழா நடைபெற்றது.

    எம் வி வெங்கட்ராம் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
    திரு எம் வி வெங்கட்ராம்
    திரு அசோகமித்திரன்
    திரு மாலன்
    திரு தேனுகா
    திரு சா கந்தசாமி
    திரு அ மார்க்ஸ்
    திரு கோமல் சுவாமிநாதன்
    மற்றும் பல இலக்கிய மேதைகள் வந்திருந்தார்கள். என்னைப் போன்ற அறிமுக எழுத்தாளர்கள் இருபது இருபத்தைந்து பேர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டோம்.
    திரு கோமல் சுவாமிநாதன் அவர்கள் விழாவில் பேசும்போது ஒரு அறிமுக எழுத்தாளர் எழுந்து “சுபமங்களாவில் பிரபலமான எழுத்தாளர்களின் கதைகளைத்தான் போடுகிறீர்கள். இளம் எழுத்தாளர்கள் எழுதினால் போடுவதில்லை என்று குறை கூறினார்.
    உடனே அதை வன்மையாக மறுத்தார் கோமல் அவர்கள்.
    சென்ற மாதம் சுபமங்களா படித்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார் கோமல்.
    முதல் வரிசையில் அமர்ந்திருந்த நான் எழுந்து படித்தேன் சார் என்று கை உயர்த்தினேன்.
    வேறு யாரும் கை உயர்த்தியதாக நினைவில்லை.
    அதில் சிறுகதை படித்தீர்களா..? என்று கேட்டார்
    படித்தேன் என்று உணர்ச்சி வசப்பட்டு வத்ஸலா என்பவர் எழுதிய வெறுப்பைத் தந்த வினாடி என்ற சிறுகதையை பல முறைப் படித்தேன் சார். (என் மனைவி பெயரும் வத்ஸலா என்பதால் நான் எழுதியிருப்பேனே என்று கூட சில நண்பர்கள் கேட்டார்கள்.) மிக அருமையான கதை. என்று கூறி முடித்தேன்.
    அப்போதுதான் விளக்கமாகக் கூறினார் கோமல்.
    வத்ஸலா என்பவர் அறிமுக எழுத்தாளர்தான். சுபமங்களா அலுவலகத்தில் கதையை படிக்க சிலரை நியமித்திருக்கிறேன். ஒரு ஸ்பார்க் இருந்தால் போதும் இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்துவிடுவார்கள்.
    இந்த வத்ஸலா எழுதிய கதை படிப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. தமிர் சரியாக எழுதவராவர் எழுதியது போல இருந்தது. அங்கங்கே தாவித் தாவிப் படித்தபோது ஏதோ ஸ்பார்க் இருப்பது தெரியவே மிகவும் அந்த ஸ்கிரிப்ட்டை படித்துப் புரிந்துகொண்டு வெளியிடப்பட்ட சிறுகதை அது.
    வாசக எழுத்தாளர்களே..நல்ல கதையை பத்திரிகை அலுவலகத்தில் நிச்சயமாகப் பிரசுரிப்பார்கள். குறிப்பாக சுபமங்களாவில் ஒரு சின்ன ஸ்பார்க் இருந்தாலும் அதை விடாமல் பிடித்துக் கொண்டு பிரசுரிப்போம். இதற்கு தமிழ் எழுத்துச் சிதைந்த நிலையில் எழுதி அனுப்பப்பட்டிருந்த ஒரு சிறுகதையைஎ பலமுறை பலர் படித்துப் புரிந்து கொண்டு சென்ற மாதம் அதை பிரசுரித்த வெறுப்பைத் தந்த வினாடி என்கிற அற்புதமான சிறுகதையே சாட்சி..’ என்றார்.
    இன்றும் ஒரு முறை படித்திருக்கிறேன். இனி பல முறையும் படிப்பேன். ஏனே அந்தக் கதை எனக்க மிகவும் பிடித்துப் போயிற்று.
    கதாசிரியர் வாழ்க வளமுடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *