வெயிலும் மழையும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 2,726 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சொக்கம்மாளுக்கு எத்தனையோ ரகசியங்களை இனிக்க இனிக்கச் சொல்லும் ஒரே தோழி அவளுடைய கண்ணாடிதான்.

விலை குறைந்த சாதாரணக் கண்ணாடிதான் அது. இருக்கட்டுமே! சொக்கம்மா மட்டும் பட்டும் படாடோப ஆடைகளும் கட்டி மினுக்கும் சீமாட்டியா என்ன? வேலைக்காரி சீதையம்மாளின் மகள் தானே.

சீதைக்குத் தன் மகள் மீது அதிக அன்பும் ஆசையும் உண்டு. அவளைப் பற்றி தாய் கொண்டிருந்த பெருமைக்கும் அளவு கிடையாது. “எங்க சொக்கம்மா அதைச் சொன்னாள். எங்க சொக்கு இதைச் செய்தாள்” இப்படி ஒரு நாளைக்கு நூற் றெட்டுப் புகழ் பாடுவதில் அவள் மிகுந்த மகிழ்ச்சி கண்டு வந்தாள்.

சின்ன வயசிலிருந்தே அப்படி, இப்போ கொஞ்ச நாட்களாக சீதையின் பெருமையும் ஆனந்தமும், பெளர்ணமி இரவின் கடல் அலைகள் போல், பொங்கிப் பொங்கிப் புரண்டு கொண்டிருந்தன.

“தாய்க்கண்ணோ பேய்க் கண்ணோ என்பார்கள். என் கண்ணே உனக்குப் பட்டு விடுமோ என்று நான் பயப்படுகி றேன். சொக்கு, நீ ராணி மாதிரி இருக்கிறே. சிலுக்கும் சீட்டியுமா உனக்கு புதுப் புது டிரசுக கட்டிப் பார்க்கணுமின்னு எனக்கு ஆசையா இருக்கு. குரங்குகளும் கோட்டான்களும் என்னமா மினுக்கிக்கிட்டுத் திரியுதுக. ராசாத்தி மாதிரி இருக்கிற உனக்கு நல்லா உடுத்தி அழகு பார்க்கிறதுக்கு என்கிட்டே காசு பணம் இல்லேயடியம்மா” இவ்வாறு வெளிப்படையாகவே தனது மனக்குறையை அருமை மகளிடம் சொல்லித் தீர்த்தாள் சீதை.

சொக்கம்மா சமயம் கிடைத்த உடனேயே கண்ணாடி முன் ஓடினாள். “ஆமாம். நீராணியே தான். உன் அழகு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என்று கண்ணாடி அவளுக்கு உணர்த்தியது.

கண்ணாடி மட்டும்தானா அவ்வாறு சொல்லும்? அவள் வீதி வழியே போகையில், எதிரே தென்பட்ட ஆண்களின் கண்களும் அதே கதையைத் தானே கூறின! நீ அழகி. ரொம்ப ஜோராக இருக்கிறாய்” என்று அவர்களது பார்வை புகழ் ஒளி சிந்த வில்லையா என்ன? சிலர் ஒருதரம் பார்த்ததில் திருப்தி அடைய முடியாமல், மறுபடியும் மறுபடியும், திரும்பித் திரும்பி, அவளைப் பார்க்கத் தானே செய்தார்கள்?

இதை எல்லாம் எண்ண எண்ண சொக்கம்மாளுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. சந்தோஷத்துக்கும் குறைவு இல்லை. எண்ணிப் பார்த்தால், எல்லாம் கொஞ்ச காலமாக ஏற்பட்டு வருகிற நிகழ்ச்சிகளே.

அவளிடம் அவளை அறியாமலே ஏதோ ஒரு மாறுதல் திடீரென ஏற்பட்டிருக்க வேண்டும். அல்லது, மெது மெதுவாக உள்ளூர ஏற்பட்டு, திடுமென ஒளி வீசத் தொடங்கியதோ என்னவோ! முந்திய மாலை வரை உறங்குவது போல் அழகற்று நிற்கும் மொக்கு அதிகாலையில் வசீகர வனப்பும் இனிய மணமும் பெற்றுத் திகழ்கிறதே, அதுமாதிரி.

சொக்கம்மாளுக்கு எதுவும் விளங்கவில்லை. ஆனால், அந்த மாறுதல் அவளுக்கு மிகுதியும் பிடித்திருந்தது. மற்றவர்கள் அவளைச் “சிறு பிள்ளை” என்று கருதுவதில்லை. இப்போதெல் லாம் அலட்சியமாக மதிக்கவில்லை. “ஏட்டி – வாட்டி” என்ற தன்மையில் ஏவுவதையும் விட்டு விட்டார்கள். அவள் பெரிய வளாக வளர்ந்து விட்டாள். அவளது தந்தை கூட “வாம்மா, என்னம்மா” என்ற முறையில் தான் பேசினார். முன்பெல்லாம் அப்படியா? “ஏ முண்டம். ஏட்டி சின்னமூதி, பரட்டைக் கழுதை” என்றெல்லாம் ஏசிக் கொண்டிருப்பார்.

இப்போ, எல்லோரும் “சொக்கம்மா வளர்ந்து விட்டாள். நாளைக்கே இன்னொரு வீட்டில் போய்க் குடியும் குடித் தனமுமாக இருந்து நல்ல பேரு வாங்குவாள்” எனும் ரீதியில் பேச்சுக்குப் பேச்சு சொல் உதிர்த்தார்கள்.

சீதை அம்மாள் அவளைச் “சின்னப் பொண்ணு” என்று கருதுவதை விட்டு விட்டாள். தனக்குச் சமமானவள், தனக்குத் துணை என மதித்தாள். எல்லா விஷயங்களையும் மகளிடம் சொல்லுவாள். சில விஷயங்களில் மகள் தனக்கு வழி காட்ட முடியும் என்று கூட அவள் எண்ணினாள். மகளின் ஆலோச னையை அடிக்கடி நாடுவாள்.

சொக்கம்மாளுக்கு இதெல்லாம் மிகவும் பிடித்திருந்தது. இந்த வாழ்க்கையில் விளையாட்டுப் பிள்ளை அல்ல அவள்; அவளும் முக்கியமானவள் தான் என்ற கர்வம் கூட அவளுக்கு ஏற்பட்டது.

சொக்கம்மாளுக்கு வயசு பதினாறு. “நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லை, பாவாடை தாவணி கட்டிக்கிட்டு அலையிறதுக்கு. இனிமேல் சேலைதான் கட்டணும்” என்று அம்மா உத்திரவு போட்டு விட்டாள். அம்மா விசேஷம், விழா நாட்களில் அணிவதற்காக வைத்திருந்த நல்ல சீலையையும் ஜாக்கெட்டையும் உடுத்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பதில் அவள் அடைந்த மகிழ்ச்சி இவ்வளவா, அவ்வளவா?” கப்பல் காணாது அதை அடக்கிக் கொள்ள!”

தினுசு தினுசான புடவைகளைக் கட்டிக் கொள்வதற்கு சொக்கம்மாளுக்குப் பிடிக்கும். எந்தப் பெண்ணுக்குத் தான் பிடிக்காது? ஆனால் வாங்குவதற்கு வசதி இல்லை. நாகரிக ஜவுளிக்கடைகளின் முன்னால், கண்ணாடிப் பெட்டிகளுக்குள், நிற்கிற ஆள் உயரப் பொம்மைகள் தன்னைவிட அதிர்ஷ்டம் செய்தவை என்று அவள் நம்பினாள். பின் என்ன? அப்பொம்மைகள் நவம் நவமான ஸாரிகளை – விலை உயர்ந்த ஆடைகளை – அழகும் கவர்ச்சியும் நிறைந்தவற்றை நாள் தோறும் கட்டிக் கொள்ள முடிகிறதே! ஒரே நாளில் அநேக தடவைகள் டிரஸ் மாற்றம் செய்யவும் முடிகிறதே! தனக்கு ஒன்றிரண்டு அழகான ஸாரி, நாகரிகப் புடவை கூட இல்லையே….

இந்த விதமாக எண்ண ஆரம்பித்தால் தான், சொக்கம்மா முகத்தில் வாட்டம் படரும். இல்லாது போனால், அவள் முகம் ரோஜாப்பூ தான்.

சந்தேகமில்லை. சொக்கம்மா பூச்செண்டு தான். கதம்பக் கொத்து. மலர்த் தோட்டம் என்றே சொல்லி விடலாம்.

பக்கத்து வீட்டில் குடியிருந்த சுந்தர மூர்த்தி அப்படித்தான் சொன்னார். அவளிடமே சொன்னார்.

சொக்கம்மா ஒரு நாள் புது வாயில் புடவையும், எடுப்பான ஜாக்கெட்டும் அணிந்து, அந்த வனப்பிலும் அது தந்த ஆனந்தத் திலும் “ஜம்மென்று விளங்கினாள். அவளது கண்ணாடி சொன்ன புகழ்ச்சி மட்டும் அவளுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமெல்லாம், “எப்படி இருக்கு? புடவை நல்லாயிருக்குதா? எனக்குப் பொருத் தமா இருக்குதா?” என்று கேட்டு, கிடைக்கிற பாராட்டுரைகளை ஏற்று, குதூகலம் அடைந்து கொண்டிருந்தாள். சுந்தரத்திடமும் கேட்டு வைத்தாள்.

“ஜோராக இருக்கு. நீயே ரோஜாப்பூ மாதிரி அருமையாக இருக்கிறே!” என்றார் அவர்.

பொதுவாகவே புகழ்ச்சி பெண்களுக்கு மிகவும் உகந்ததா கவும் இனியதாகவும் அமைகிறது. அந்தப் புகழ்ச்சி ஆணின் வாய் மொழியாக வருவது பெண்ணுக்கு மிகுதியும் பிடிக்கும். சொல்லும் திறமை பெற்றவர்கள், சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்லக் கூடிய விதத்தில் சொல்கிற போது அவள் கிறங்கி விடுகிறாள். சொக்கம்மாளும் பெண் தானே!

அவள் உள்ளத்தில் தேன் நிறைந்தது. முகத்திலே மகிழ்வு மலர்ந்தது. அதனால் அழகிய புஷ்பத்தின் மீது வெயிலின் பொன்னொளி பாய்ந்தது போலாயிற்று.

சுந்தரமூர்த்தி அதை ரசித்து வியந்தார். “ஆகா, எவ்வளவு அழகு! உன்னை வெறும் பூ என்று மட்டும் சொன்னால் போதாது. அழகு அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் என்றே சொல்ல வேண்டும்…”

அவர் பேசப் பேச, சொக்கம்மாளுக்கு இனிமையான பன்னிரை அள்ளி அள்ளி மேலெல்லாம் தெளிப்பது போன்ற சுகம் ஏற்பட்டது. வெட்கமும் வந்தது. “சும்மா இருங்க. கேலி பண்ணாதீங்க” என்று முணுமுணுத்தாள்.

“கேலி இல்லே, சொக்கம்மா. நிசமாகத் தான் சொல்கிறேன்” என்று சுந்தரம் கூறிய விதம் அவளுக்கு நம்பிக்கை ஊட்டுவ தாகத் தான் இருந்தது.

அது முதல் அவள் சுந்தரமூர்த்தியின் புகழ் மொழிகளையும் இனிய பேச்சுகளையும் கேட்பதில் ஆர்வமும் ஆசையும் அதிகம் கொண்டாள். அடிக்கடி அவர் வீட்டின் அருகே வளைய மிட்டாள். வலிய வலியப் பேச்சுக் கொடுத்தாள்.

சுந்தரம் அவள் போக்குகளை ஆதரித்ததோடு, வளரவும் வகை செய்தார். ஏதோ ஒரு கம்பெனியில் என்னவோ 6ԲՓ5 வேலை அவருக்கு. தனியாகத்தான் இருந்தார். ஓட்டலில் சாப்பாடு. வறண்ட பொழுதுகள் நிறைந்த அவரது வாழ்க்கையில் இனிமை நிரப்புவதற்குப் பெண் துணை எதுவும் கிட்டிய தில்லை. எனவே, சொக்கம்மாளின் சிரிப்பும் பேச்சும், வருகையும் போக்கும், அவருக்கு இனிய நிகழ்ச்சிகளாக விளங்கின.

ஒரு நாள் அவள் கேட்டாள், “ராசா மகளே, ரோசாப்பூவே என்று பாடுகிறார்கள். ராசாமகள் அப்படித்தான் இருப்பாளோ?” என்று.

“ராசா மகள் என்ன! நீயே ரோஜாப்பூ தான். நான் தான் அடிக்கடி சொல்கிறேனே. ரோஜாப்பூவைப் பார்க்கிற போதெல் லாம் எனக்கு உன் நினைப்பு தான் வருகிறது” என்று சுந்தரம் சொன்னார்.

“இன்று நான் வருகிற வழியில் ரோஜாப்பூ விற்றார்கள். நானும் அஞ்சாறு பூ வாங்கி வந்தேன். அழகான பூக்களைப் பார்த்துக் கொண்டிருப்பதில் எனக்கு எப்பவுமே ஆசை உண்டு. உன் தலையில் சூடிக் கொண்டால் உன் அழகும், பூவின் அழகும் இன்னும் அதிகமான கவர்ச்சி பெறும் என்றும் கூறினார். அவளிடம் ஒரு பூவைக் கொடுத்தார்.

சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கூந்தலில் சொருகிக் கொண்ட் சொக்கம்மா, “நன்றாக இருக்குதா? ஊம்ங்?” என்று குழைவுடன் கேட்டாள்.

“ஜோர். வெகு அருமை!” என்று அவர் அறிவித்ததும், ஐஸ் க்ரீம் சாப்பிட்டது போலிருந்தது அவளுக்கு.

“எனக்கு அடிக்கடி பூ வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்படும். கனகாம்பரம், கதம்பம், முல்லை எல்லாம் விற்கும் போது – எல்லோரும் நிறைய நிறையத் தலையில் வைத்திருப்பதைப் பார்க்கிற போது – எனக்கும் ஆசை வரும். ஆனால் காசுக்கு எங்கே போவேன்?” என்று அவள் தன் மனக் குறையை வெளியிட்டாள்.

”ஏன், என்னிடம் கேட்டிருக்கலாமே.”

“உங்களிடம் எப்படிக் கேட்பது?” என்று வெட்கத்தோடு இழுத்தாள் அவள்.

“பரவால்லே. இனிமேல் பூ வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீஆசைப்படுகிறபோது என்னிடம் காசு வாங்கிக் கொள். அழகு தன்னை மேலும் அழகு படுத்திக் கொண்டு கண்ணுக்கு இனிய காட்சியாக விளங்குவது ரசிக்க வேண்டிய விஷயம் தான்”” என்று அவர் அளந்தார். அதன் பிறகு, அவ்வப்போது சொக்கம்மா பூவும் தலையுமாகக் காட்சி தருவது இயல்பாகி விட்டது. “ஏது பூவு?” என்று சீதை சில சமயம் கேட்பதும், “என் சிநேகிதி ஒருத்தி வாங்கினாள். எனக்கும் தந்தாள்” என்று மகள் சொல்வதும் சகஜமாகி விட்டது.

சிவப்புச் சாந்தும், நைலான் ரிப்பனும், காதுக்கு கோல்டு – கவரிங் நாகரிக அணியும் வேண்டும் என்று அவள் ஆசைப்பட்ட போதும், சுந்தரமூர்த்தி அவற்றை அன்பளிப்பாக அவளுக்கு வாங்கித் தந்தார்.

“இப்படி எல்லாம் நீங்கள் ஏன் எனக்காகக் காசு செலவு செய்கிறீர்கள்?” என்று சொக்கம்மாள் கேட்டாள்.

சுந்தரம் மகாரகசியத்தை எடுத்துக் கூறுவது போல, மென் குரலில் பேசினார். “உன் மேலே எனக்கு ஆசை. அதனால் தான்” என்று.

அவ்விதம் அவர் சொன்ன விதமும், பார்த்த வகையும், சிரித்த சிரிப்பும் அவளுக்கு இன்பக் கிளுகிளுப்பு உண்டாக்கின. அவளிடமும் இனம் கண்டு கொள்ள முடியாத பரவச உணர்வு கிளர்ந்து புரண்டது.

அவர் முகத்தையே கவனித்து நின்றவளின் கன்னத்தை சுந்தரம் தன் விரலால் லேசாகத் தட்டினார். மோவாயைப் பற்றி அன்புடன் அசைத்து விட்டு, விரல்கைளைத் தன் உதடுகளில் பொருந்திக் கொண்டார்.

அவர் கைபட்ட இடத்தில் இதமான உணர்ச்சி படர்வதை அவள் உணர்ந்தாள். உள்ளத்தில் குதூகலம் பொங்கியது. காலை இளம் வெளியிலே குளிர் காய்வது போன்ற சுகானுபவம் அவளை ஆட்கொண்டது. நாணம் மீதுற அவள் அங்கிருந்து ஒடிப்போனாள்.

தனது புது அனுபவத்தை – இதயத் துடிப்புகளை – யாரிடமாவது சொல்லி, எண்ணி எண்ணிப் பார்த்து, மகிழ்வுற வேண்டும் என்று வந்தது அவளுக்கு. ஆனால் யாரிடம் சொல்ல முடியும்? அந்தப் பழைய கண்ணாடிதான் அவளுக்குத் துணை. அதில் தன்னையே கண்டு, தனது உணர்வுக் கிளர்ச்சிகளுக்கு விளக்கமும் விடையும் காண முயல்வதே அவளது வழக்கமாகி விட்டது.

வெயிலில் நின்று இதமான அனுபவம் பெறும் ஆசை சொக்கம்மாளுக்கு இல்லாமல் போகுமா? சுந்தரத்தின் பேச்சு, பார்வை, சிரிப்பு முதலியவற்றை அடிக்கடி அனுபவிக்க வேண்டும் என்ற தவிப்பைத் தான் அவள் அடக்க முடியுமா?

“வயது வந்த பெண் இப்படி ஒரு ஆண் பிள்ளையோடு பேசுவதும் சிரிப்பதும் விளையாடிப் பொழுது போக்குவதும் நன்றாக இல்லை” என்று அக்கம் பக்கத்தினர் பேசலானார்கள். “பெரியவளாகி விட்ட பெண்ணுக்குக் கொஞ்சமாவது அடக்கம் ஒடுக்கம் வேண்டாம்? நீயாவது உன் மகளை கண்டித்துவை, சீதை” என்று உபதேசமும் செய்தார்கள்.

சீதை அதைப் பெரிது படுத்தவில்லை. அவளுக்குத் தன் மகளிடம் நம்பிக்கை இருந்தது. தனது மகள் தவறான காரியம் எதையும் செய்யமாட்டாள் எனும் அகந்தையும் இருந்தது. எனினும், மற்றவர்கள் சொல்வதை மகள் காதிலும் போட்டு வைத்தாள் அவள்.

சொக்கம்மா சிரித்தாள். “அவர்களுக்கு வேலை என்ன!” என்று ஒதுக்கி விட்டாள்.

ஒரு நாள் சுந்தரம் அழகான புது மாடல் நெக்லேஸ் ஒன்றைச் சொக்கம்மாளிடம் காட்டினார். அவள் சிறுமி போல் வியப்புடன், “அய்யா! அருமையாக இருக்கிறதே? ஏது?” என்று கேட்டாள்.

“வாங்கி வந்தேன். உனக்காகத்தான்” என்று கூறி அவள் கையில் வைத்தார் அவர்.

அவள் ஆர்வத்தோடு அதைக் கழுத்தில் அணிந்து கொண் டாள். முகமெலாம் உவகையின் மலர்ச்சி. அந்த அறையில் கிடந்த கண்ணாடியில் பார்த்தாள். “நல்லாயிருக்குது. இல்லே? நீங்க சொல்லுங்க. எப்படி இருக்குது?” என்று துடிப்போடு விசாரித்தாள்.

“ஜம்னு இருக்குது. அதுவும் நல்லாயிருக்குது. நீயும் நல்லா யிருக்கிறே!” என்று அவர் சொன்னார்.

அவள் அவர் பக்கம் வீசிய பார்வையில் ஆனந்தம் இருந்தது. பெருமை இருந்தது. ஆசையும் கலந்திருந்தது. யுவதியின் கண்களுக்கே இயல்பான கூரிய காந்த ஒளியும் இருந்தது.

அவற்றால் வசீகரிக்கப்பட்ட சுந்தர மூர்த்தி அவளருகே சென்று அவளை இழுத்துத் தழுவிக் கொண்டார். அவள் கண்களுள் மறைந்து கிடந்த அற்புதத்தை ஆராய விரும்புவார் போல் உற்று நோக்கினார்.

அவள் திடுக்கிட்டுத் திகைத்த போதிலும் செயல் திறம் இழந்து விட்டாள். உணர்வுகள் அவளை ஆட்டுவித்தன. இந்தப் புது அனுபவம் சுகமாகவும் மனோரம்மியமாகவும் இருந்தது. அவளும் அவரோடு இணைந்து, தலையை அவர் மார்பில் சாய்த்துக் கொண்டாள். என்ன பரமானந்த நிலை! இருவருமே இன்பச் சிறகு பரப்பி, பொன்மயமான அற்புத வெளியிலே மிதப்பதுபோல் பரவசமுற்று நின்றனர்.

அவ்வேளையில்தானா சீதையம்மாள் அந்தப் பக்கம் வரவேண்டும்? தற்செயலாக அவள் கண்ணில்பட்ட தோற்றம் பகீரென அவள் உள்ளத்திலும் வயிற்றிலும் தீ இட்டது. “நல்லாத்தானிருக்கு இந்த நாடகம்” என்று சுடு சொல் உதிர்த்தாள் அந்தத் தாய். “சீ, வெட்கமில்லை?” என்று காறி உமிழ்ந்தாள். இருவருக்கும் பொதுவான அந்தப் பேச்சு இருவரையும் சுட்டது.

சொக்கம்மா வேகமாக விலகி, தன் வீட்டுக்கு ஓடி விட்டாள். “அறியாப் பெண்ணை ஏமாற்றி, தன் வலையில் விழ வைத்த அயோக்கியனை” – சுந்தரமூர்த்தியை அவள் இவ்விதம் தான் எடை போட்டாள் – கண்ணெடுத்துப் பார்க்கவும் விரும்ப வில்லை சீதை.

மகளின் சமாதானங்களும் உறுதிமொழிகளும், நெஞ்சில் அடிபட்ட – நம்பிக்கைச் சிதைவு பெற்றுவிட்ட – தாய்க்கு மன ஆறுதல் அளிக்கவில்லை. அவளும் அவள் கணவனும் தீவிரமாக முயற்சி செய்து, அவசரம் அவசரமாக ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து முடித்தார்கள்.

சொக்கம்மா அழுதாள். அரற்றினாள். பட்டினி கிடந்தாள். சுந்தரத்துக்குத் தன் மீது ஆசை என்றும், தனக்கும் அவர் மீது ஆசை என்றும், அவர் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வார் என்றும் சொன்னாள். அவள் பேச்சு எடுபட வில்லை. சினிமாவிலே, நாடகத்திலே பார்க்கிறபடி எல்லாம் வாழ்க்கையில் நடக்கணும் – நடந்துவிடும் – என்று அவள் எதிர்பார்ப்பது பிசகு என்று தாய் போதித்தாள். பெற்றோர் தேர்ந்தெடுத்த மண மகனையே கல்யாணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

அவன் கண் நிறைந்த கட்டழகுக் குமரனாக இல்லை. அதற்கு யார் என்ன பண்ணுவது? அவரவர் தலையெழுத்துப்படி தான் நடக்கும்” என்று அம்மா சொல்லி விட்டாள். மகள் மெளனமாகக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தாள்.

“முதல்லே இப்படித் தான் இருக்கும். போகப் போக எல்லாம் சரியாகி விடும். அவள் நன்மையைத் தானே நாம் விரும்பு கிறோம்?” என்று சீதையம்மாள் கூறினாள். உலகம் தெரிந்தவள் இல்லையா அவள்!

தனது வாழ்க்கையில் பிரகாசிக்கத் தொடங்கிய வசந்தகாலப் பொன்னொளி திடுமென இப்படி வறண்டு விடும் என்று சொக்கம்மா கனவு கூடக் கண்டதில்லை. வாழ்வின் வானமே இருண்டு, மழை பொழியத் தொடங்கி விட்டதாக அவள் நம்பினாள். அறியாப் பிராயத்தில் காலை இளம் வெயில் போல் தோன்றுகிற காதல் அன்றாட வாழ்வில் சிறிது நேரம் பகட்டி விட்டுப் போகிற அந்தி வெயில் தான்; அதன் மோகனம் வெகுகாலம் நீடிக்காது என்பதை அந்தப் பேதை அறியவில்லை.

சொக்கம்மாளின் சந்தோஷத்துக்கு சாட்சியாக இருந்த அவளுடைய கண்ணாடி தான் அவளது அழுகைக்கும் ஆறுதல் கூறத் தெரியாத அப்பாவித் தோழியாக அமைந்தது.

– அமுத சுரபி, ஜூன் 1965

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *