வெயிலும் பனியும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 1,578 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ஒரு மாசி மாதம்… பிற்பகல் நாலரை மணியிருக்கும். ஹாலிலுள்ள ‘கனப்பே’யில் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்த தங்கம்மாவுக்கு புரக்கேறியது போலிருந்தது. கண்கலங்கி நீர்த்துளி விழுந்தது. உரத்துச் செருமி அடக்கிக் கொண்டார். 

ஒரு கையால் நாரியைப் பிடித்துக்கொண்டும் மறு கையால் ‘கனப்பே’யின் மூலையைப் பிடித்துக் கொண்டும் எழுந்து, மெல்ல நடந்து குசினி மேசையிலிருந்த தண்ணீரில் கொஞ்சம் எடுத்துக் குடித்துக் கொண்டார். 

மீண்டும் ஹாலுக்குள் வந்து பல்கனிப் பக்கமாகவுள்ள கதவுத் திரைச்சீலையை விலக்கி, கண்ணாடிக் கதவினூடே வெளியே பார்த்தார். மங்கல் பொழுதின் அழகிற்குள் புகுந்து, தேங்காய்ப் பூவை வானத்திலிருந்து கொட்டியது போல் பனிப்பூக்கள் பறந்து கொண்டிருந்தன. 

“ஆஹா..என்ன அற்புதமாயிருக்குது…” தங்கம்மா எல்லாக் கவலைகளையும் மறந்து பனிப்பூக்கள் கொட்டுவதை நீண்ட நேரம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். குளிர் உறைந்த கண்ணாடியில் முகம்பட்டு ஜில்லெனக் குளிர்ந்த போதும் அவர் பார்வையை விலக்கவில்லை. 

குதிக்காலில் ஏற்பட்ட விறைப்பு நாரி வரை வந்து முதுகுத்தண்டு வழியாக தோள்பட்டைவரை வந்து வலியெடுத்தபோது தான் தங்கம்மா பார்வையை விலக்கி மெல்ல மெல்ல நகர்ந்து மீண்டும் ‘கனப்பேயில்’ வந்து அமர்ந்தார். 

அது மூன்றுபேர் இருக்கக்கூடிய நீண்ட கனப்பே…’ கால்களை மெல்ல மெல்ல நீட்டி, தலைக்கும் ‘குசனை’ அணைவைத்து படுத்துக் கொண்டார். 

‘பனி கொட்டுறதைப் பார்க்க என்ன தான் வடிவா இருந்தாலும் சுவாத்தியத்துக்கு நம்ம நாடு மாதிரி வருமா… நம்ம பிள்ளையளப் பிடிச்சுக்கொண்டுபோய் சிறையில் பூட்டி வைச்சிருக்கிறாங்கள் எண்டு சொல்லுவினமே… அந்த சிறை வாழ்க்கையும் இப்பிடித்தான் இருக்குமோ…’ 

மீண்டும் கண்கலங்கத் தொடங்கியது….. 

‘அவர் உயிரோட இருந்தா எனக்கு இந்த நிலைமை வருமா… என்ர ராசா… சாப்பிட்டுட்டு படுக்கப் போனவர் தான்… அரை மணித்தியாலம்கூட இருக்காது… கட்டிலால விழுந்தார். பேச்சு மூச்சு இல்லை… அப்பு எங்கள் விட்டுட்டுப் போய்ச் சேர்ந்திட்டார்… இந்த வைகாசியோட இருபத்திநாலு வருஷம் முடியப் போகுது…’ 

‘இந்த சின்னக் கண்ணால எத்தனை காட்சியளக் கண்டிட்டன்… வாத்தியார் வேலை பார்த்ததால் கிடைச்ச அவர்ர பென்சன வைச்சுக் கொண்டு பிள்ளையள வளர்க்க நான் பட்டபாடு… ஏதோ… வயல் காணியளில் நெல்ல விளைவிச்சும்… வளவுக்குள்ள எல்லாப் புரோசனங்களையும் வடிவாப் பராமரிச்சும், காலநேரம் பார்த்து வீட்டுத் தோட்டம் போட்டும்… படாதபாடெல்லாம் பட்டு இதுகள வளத்தன்..’ 

‘அவர் போகேக்க… இவன் தம்பிக்குப் பதினாறு வயசு… நல்லது… கெட்டதுகளப் பாக்க அவருக்குக் குடுத்து வைக்கல்ல…’ 

‘என்ர அண்ணன் கண்ணையா… அவர் இருக்கேக்க எத்தனை தரம் கேட்டிருப்பான்… வடிவுக் குஞ்சான வசந்தாவை தருவியே தங்கச்சி… நான் இப்பவே கொண்டு போய் பூப்போல வளக்கிறனெண்டு…’

‘அவர் போனதும் நாங்க எல்லாருக்கும் இளக்காரமாப் போயிற்றம்… அண்ணன்ர மூண்டு பெடியன்களும் கனடாவில்… அவன் நடுவிலுப் பெடியனுக்கு வசந்தாவை செய்து வைப்பமெண்டு… நான் நடந்த நடையிலதானே எனக்குக் குதிவாதம் வந்திருக்க வேணும்…’ 

கடைசியில் பெடியனுக்கு ஒரு இடமும் சரிவராமப் போய்…..அவன் பெடியன்தான் எனக்குக் கடதாசி எழுதி வசந்தாவைக் கேட்டவன்… என்ர மருமகன் என்ர ரத்தம் தானே… அதுக்குக் கூட என்ர சகோதரம் எவ்வளவு ரொக்கம் தருவாயெண்டு… விடாப்பிடியா நிண்டு…நாலு லட்சம் காசா வாங்கினவன் எல்லோ…நான் சும்மாவே விட்டனான்…வீடு வளவையும் எழுதிக் குடுத்து எல்லா நகையும் போட்டு முறைப்படிதானே அனுப்பினனான்…’

‘பிள்ளையும் கனடா போய் இப்ப இரண்டு குஞ்சுகளோட ஏதோ சுக பலமா இருக்குதுகள்…இவன் பெடியன் பாலன் தான் என்னட்ட பென்சன் காசையும் பறிச்சு சோக்கடிச்சவன்… படிப்பையும் குழப்பிப் போட்டான்… என்ன செய்யிறது… செல்லம் குடுத்து அக்கம்பக்கம் விடாம பொத்தி வளத்தன்…. ஆனா..அவன் கூட்டாளிமாரோட சேந்து பழகாத பழக்கமெல்லாம் பழகிட்டான். சனத்தின்ர கதையளக் கேக்க சங்கயினமாப் போச்சு..’ 

“எட மோனை… இப்பிடித் திரியாதை… நாட்டு நிலமையும் மோசமாகி வருகுது… நீ மோனை… ஏதாவது வேலையைத் தேடி உன்ர வாழ்க்கையைப் பார்க்க வேணும்…” எண்டு நித்தமும் அழுதழுது கெஞ்சிக் கேட்டன்…’ 

“அம்மா… நான் கப்பலுக்குப் போகப் போறன்… காசு ரெடி பண்ணு…” எண்டு ஒரு நாள் சொன்னான்…’ 

‘அவன் சொன்ன தொகை காசுக்கு நான் என்ன செய்வன்…வயல் காணியள அறாவிலைக்கு வித்தன்… மனுசன்ர நினைவா வைச்சிருந்த தாலிக்கொடி… இரண்டு சோடிக் காப்பு.. ஒரு அட்டியல்.. பதக்கம் சங்கிலி… எண்டு என்னட்ட இருந்த நகை எல்லாம் வித்துக் காசாக்கினன். இருந்த ஒரு தேயிடை ஒற்றப்பட்டு சங்கிலி மட்டும்தான் என்ர கழுத்தில…’ 

‘ஆறு மாதம் கொழும்பில நிண்டு… சோக்கடிச்ச பிறகு… கப்பல் ஏறியிட்டன் எண்டு பம்பாயில இருந்து கடிதம் போட்டான்… பிறகு கனகாலம் கடிதமே இல்லை…நான் வேண்டாத கடவுள் இல்லை…’ 

‘பக்கத்து வீட்டு ராசம்மா தான் எனக்கு உதவி.. நாடும் குழம்பிக் கொண்டு வந்தது.. தபால் போக்குவரத்தும் குறைஞ்சு போச்சுது.. எண்டு சொல்லிச்சினம்’ 

‘ஒரு வருஷத்துக்குப் பிறகு ஒரு நாள் கள்ளியங்காட்டுப் பெடியன் ஒருவன் வீடு தேடி வந்தான்.. வந்தவன் பாலாவோட கப்பலில் வேலை செய்யிறதெண்டும்… இப்ப லீவில் வந்ததெண்டும் சொல்லி…பாலா தந்ததெண்டு கடிதமும் காசு 25,000 ரூபாயும் தந்தான்… என்ர.. முருகா எண்டு.. கையெடுத்து கும்பிட்டு வாங்கினன்…’ 

“அம்மா.. நான் அடுத்த மாதம் பம்பாய் போய் கப்பல் ஏறுவன்… பிறகு கப்பல் எகிப்துக்குப் போகும்… பிறகு பிரான்சுக்குப் போகும்… அப்ப… நானும் பாலனும் பிரான்சில இறங்கியிருவம்… அங்க அகதி அடைக்கலம் கேட்கலாமாம்…அங்க தொழில் வசதிகள் இருக்காம்… நீங்க… ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ… பிரான்சில இறங்கினவுடன பாலன் கடிதம் போடுவான்…” அந்த பெடியன் சொல்லிற்றுப் போச்சுது… பெரிய ஆறுதலா இருந்தது…’ 

‘தம்பி பாலனும் பிரான்சுக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாகப் போகுது… பிரான்சுக்கு வந்து இரண்டு வருஷத்தில என்னையும் கொழும்பில வந்திருக்க ஒழுங்கு செய்திற்றான்…ஊரில் நிலைமை மோசமாகிப் போச்சுது… போட்டது போட்டபடி விட்டுட்டு வெளிக்கிட்டனான் தான்… வீடுவளவு என்னமாப் போச்சுதோ…ஆரு கண்டம்…’

‘கொழும்பில இரண்டு இடத்தில மாறி மாறி பதினொரு வருஷம் இருந்திட்டம்… என்ர பென்சன் காசு எனக்கு மட்டுமட்டாகக் காணும்… ஆனாலும் அவள் பிள்ளை வசந்தா இருந்திட்டு ஐஞ்சு.. பத்து எண்டு அனுப்புவாள்.. இவனும் அப்பிடித்தான் அனுப்பினவன்… எனக்கென்ன செலவு… அங்க எல்லாக் கோயிலுகளுக்கும் போனன்… மாறி மாறி பிள்ளைகளுக்கெண்டு அருச்சினை தான் செய்தன்…’ 

“அப்ப ஒரு நாள் தான் பக்கத்து வீட்டில் இருந்த குடும்ப மொண்டு அறிமுகமாச்சு… அதுகளுக்கு மூண்டு பொம்பிளைப் பிள்ளையள்… ஒண்டு கலியாணம் செய்து கனடா போயிற்றுதான்… இரண்டாவது ஏதோ பேச்சுக் காலோ… அல்லது காதல் கீதலோ தெரியாது… சுவிசுக்குப் போகப்போறனெண்டு சொல்லிச்சுது… அதுகளும் தகப்பன் இல்லாததுகள்… கனடா போன பிள்ளைதான் இடைக்கிடை கொஞ்சம் காசு அனுப்பிறதாம்…’ 

“இந்தப் பிள்ளையள வைச்சுக்கொண்டு நான் என்ன செய்யப் போறன்…” தாய் மனிசி என்னைக் காணும் போதெல்லாம் கண்ணீர் விடும்.. ஒருமூக்கு மின்னி நகை யும் இல்லையெண்டு சொல்லும். எனக்கும் அப்பதான் ஒரு நினைவு வந்தது… எந்தப் பகுதி ஆக்களெண்டு விசாரிச்சன் தூரத்து அடியில எங்களுக்கு உறவாத் தான் வந்திச்சுது…’ 

‘பிள்ளையின்ர சாதகத்தை வாங்கிக்கொண்டுபோய் மகனின்ர சாதகத்தோட பொருத்தம் பார்க்க தெகிவளைச் சாத்திரியிட்டக் குடுத்தன்… எண்பது வீதம் நல்ல பொருத்தம்…. செய்யலாம் எண்டான்…’ 

‘மகன் ரெலிபோன் எடுக்கேக்க விஷயத்தைச் சொல்லி முற்றாக்கிப் போட்டன்… அப்ப அவனுக்கு ‘நஷனாலிற்றியும் கிடைக்கேல்ல… சிங்கப்பூருக்குப் பொம்பிளையை அனுப்பச் சொன்னான்… எனக்கு உடல்நிலை சரியில்லாததால போக முடியேல்ல… பொம்பிளையையும் அதுகளின்ர ஒண்டவிட்ட அண்ணன் முறையான ஒருவனையும் சேத்து அனுப்பிவைச்சன்… அங்க செலவு பொம்பிளைக்கான நகை நட்டு எல்லாம் என்ர செலவு தான்… ஏதோ நல்லவிதமா கலியாணமும் நடந்து இரண்டு கிழமையால் பொம்பிளை கொழும்பு திரும்பிச்சுது…’ 

‘அந்தக் கையோட கொஞ்ச நாளையில் பாலனுக்கும் நாஷனாலிற்றி கிடைச்சிட்டுது… பிறகு ஆறு மாதத்துக் கிடையில் மருமகளும் பிரான்சு போயிற்றா… தாய் மனிசி… அதுதான் சம்மந்தி… என்னை கையெடுத்து கும்பிட்டுது… அது நல்ல பிறவி…’ 

‘இப்ப இரண்டு வருஷத்துக்கு முந்தி இவன் கொழும்புக்கு வந்து என்னவோ அலுவல் எல்லாம் பபாத்து இவன் என்னையும் இஞ்ச கொண்டுவந்திட்டான்.’ 

‘இஞ்ச வந்து பாத்தா இவன் இரவு பகலா ‘றெஸ்ரோறன்ற்’ வேலையெண்டு பறந்து திரியிறான்… அவளும் அங்க தான் வேலையெண்டு பகலா இரவா ஓடித் திரியிறாள்… ஏதோ கார் வைச்சிருக்கிறதால அலுப்பில்லாம ஓடுதுகள் போல…’ 

‘இரண்டு கடுவன்கள் பெத்து வைச்சிருக்கிறாள்… ஐயோ… அதுகளின்ர நெட்டூரம் தாங்கேலாது… மத்தியானம் இரண்டும் பள்ளிக்கூடத்தில் சாப்பிட்டு பின்னேரம்தான் வருவினம்…. நான்தான் மத்தியானம் சோறு கறி காய்ச்சி வைக்கிறது…’ 

‘அதை இரவு கடுவன்கள் சாப்பிடாங்கள்….அவங்களுக்கு ‘சான்விச்’ செய்து குடுக்கவேணும். இல்லை யெண்டாரொட்டி சுட்டு அதோட ஏதோ பெரிய பேனை மாதிரி இறைச்சி உறுண்டையாம்… அதைப் பொரிச்சோ அல்லது அதுமாதிரி இருக்கும் இன்னுமொரு உறுண்டையை சின்னன் சின்னதாக வெட்டிப் பொரிச்சு இருக்கவேணும்.. படுக்கப் போகேக்க பால் காச்சி அதுக்குள்ள ‘சொக்கோளா பவுடர்’ எண்டு போட்டுக் குடுக்கவேணும்.’ 

‘நடுச்சாமத்தில தாய் தகப்பன் வரும்வரை அறைக்குள்ள பிரெஞ்சு ரி. வி. பாத்தபடி இருப்பாங்கள். கதவில சத்தம் கேட்டவுடன… போத்துக்கொண்டு படுத்திருவாங்கள்… நான் ஏதும் சொன்னா… “அப்பம்மா சாப்பாடு தரேல்ல.. அது நல்ல சாப்பாடு இல்ல… பாலுக்குள்ள உப்பை போட்டுத் தாறா…” எண்ட மாதிரி கோள் சொல்லு வாங்கள். இது ஆர்ர பரவணிக் குணமோ தெரியாது…’

‘சாமத்தில வந்து அவன் கொஞ்சநேரம் தமிழ் ரி. வி. பார்ப்பான். எனக்குத்தானே நித்திரை வராது…நானும் போயிருந்து செய்தி கேட்பன்… அப்பிடித்தான் காலமையும் கொஞ்சநேரம் அவனோட இருந்து பாப்பன்…. பிறகு அவை வெளிக்கிடைக்க… அவள் பொடிச்சி அந்த ரி. வி. ரிமோட்டை ஒளிச்சுவைச்சுப் போட்டு போவா..நானும் அதை தேடுறதில்லை… இது அவனுக்குத் தெரியாது. ஒரு நாள் தம்பி “ரி.வி.யில பகல் முழுக்க சுனாமி அடிச்ச தெல்லாம் காட்டினாங்களாம்… பாத்திங்களா.. அம்மா…” எண்டு கேட்டான்… நான் ஒண்டும் பேசயில்லை… “ஏனம்மா… பாக்கேயில்லையா…” எண்டு திருப்பித் திருப்பிக் கேட்டான். நான் என்ன சொல்லுறது… “அது தான் ரிமோட்டைக் காணேயில்லையே”… எண்டன். 

‘அவள் சொன்னாள்… “பகல் முழுக்க அவ ‘ரி.வி.’ பாத்தா ‘கறண்ட் பில்’ எங்க வரும்.. பிறகு ஏதோ இரவிரவா அறைக்குள்ள அடிபிடிப் பட்டினம்…’ 

‘ஒரு கிழமையா அவ என்னோட மூஞ்சி நீட்டினபடி தான்…! மூக்கு மின்னி தொட்டு சகலதும் போட்டு நான் அனுப்பின பொம்பிளை…இப்ப எனக்குக் கணக்கு வழக்குப் பாக்குது…’ 

‘ஏதோ அவளின்ர சிக்கனத்தால் தான்… மாடிவீடு வளவும் வாங்கி.. நகைநட்டும் அந்த மாதிரி வாங்கி வைச்சுக் கொண்டு வாழுதுகள்… அவையின்ர சந்தோ பாத்திற்றன்…’ 

‘எனக்கு… என்ர ராசா.. கண் மூடின இடத்தில கிடந்து தான் போகவேணுமெண்டு ஆசை… ஒண்டுக்கு மேலே ஒண்டு எண்டு இரண்டு ‘சொக்ஸும்’ போட்டுக்கொண்டு இங்க… இந்தக் குளிருக்க… இந்த நாட்டில் கிடந்து சாக வேணுமா…?’ 

‘என்ன சுவாத்தியமான நாட்டை விட்டுட்டு.. எப்ப தான் நாட்டுப் பிரச்சினை தீருமோ….. ம்… என்ர முருகா…ம்…’ 

நீண்ட பெருமூச்சு….. 

‘குதிக்கால் கொதிக்குது… கால் நரம்பெல்லாம் இழுக்குது… டொக்டரிட்ட கொண்டுபோய் காட்டினா… சலரோகம் வந்திற்றுது எண்டு சொல்லி குளிசை தந்திருக்கிறார். மூக்கால… கண்ணால ஓடுது… தலை  கொதிக்குது… சளி அடைப்பு… கண் மூடி ஒரு நிமிஷம் நித்திரை கொள்ளவிடாது… அஞ்சாறு குளிசைகளையும் போட்டுக்கொண்டு பகல் பொழுதில இந்த இடத்திலேயே கிடந்து நினையாது நினைச்சு அழுகிறன்…’ 

‘அவள் பிள்ளை வசந்தாவும் “கனடாவுக்கு வா அம்மா..” எண்டுதான் கேக்கிறாள்… ஒருக்கா இஞ்ச வந்து பாத்திற்றும் போனாள். இஞ்சயே இப்பிடியெண்டா… கனடா குளிர கேள்விப்பட்டதும்… நான் அந்தப் பக்கம் திரும்பியும் பாக்கமாட்டன் எண்டு சொல்லிப் போட்டன்…’ 

‘இப்பிடியே இந்த சிறை வாழ்க்கை எத்தனை நாளைக்கோ…என்ர சீவன் எங்க தான்…எப்பிடிப் போகப் போகுதோ…?… ம்…!’ 

– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *