கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 8,869 
 

சுவாமிநாதன் கடந்த இருபது வருடங்களாக சர்க்கரை நோயினால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்.. மருந்து மாத்திரைகள், தினசா¢ காலையில் நடைப் பயிற்சி என எதுவும் அவரது சர்க்கரையின் அளவைக் குறைக்கவில்லை.

திடீரென சுவாமிநாதனுக்கு இன்று காலை ஐந்து மணிக்கு சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து லோ சுகர் ஏற்பட்டு உடம்பு வெல வெலத்துவிட்டது, தொப்பலாக வியர்த்தது. கண்கள் இருட்டிக் கொண்டு உடம்பு படபடத்தது.

அவசர அவசரமாக சுகர் அளவு பார்த்தபோது 59 என்று காண்பித்தது. எப்பவுமே 150க்கும் மேல் பார்த்துதான் அவருக்கு பழக்கம். அதனால் பயந்துபோனார்.

சுவாமிநாதன் பெட்ரூமிலிருந்து டைனிங் ஹால் வந்து டேபிளில் வைக்கப் பட்டிருந்த விதவிதமான இனிப்பு பிஸ்கட்களை சுகர் லெவல் அதிகா¢ப்பதற்காக சாப்பிட்டார். அப்போது அவர் மனைவி சியாமளி தூங்கியெழுந்து இவரைக் கடந்து பூஜையறைக்கு நேராகச் சென்று கதவைத் திறந்து லைட்டை போட்டு அங்கிருந்த சுவாமி படங்களை வணங்கி நமஸ்கா¢த்தாள்.

அவளின் இந்தச் செய்கை சுவாமிநாதனை வெறுப்பேற்றியது. தான் இங்கு லோ சுகா¢ல் அவதிப்படும்போது அவள் தன்னை கண்டுகொள்ளாது நேராக பூஜையறக்குச் சென்றது எ¡¢ச்சலூட்டியது.

பூஜையறையிலிருந்து வெளியே வந்த சியாமளி, “என்னங்க இவ்வளவு சீக்கிரமா எழுந்து என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?” என்றாள்.

“எனக்கு திடீர்னு சுகர் ரொம்ப கம்மியாயிடுச்சு, உடனே பால் காயவச்சு ரெண்டு ஸ்பூன் சக்கரை போட்டு கா•பி போட்டுக்கொடு”

“கொஞ்சம் பொறுங்க, பால சுடவச்சு சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணிட்டு உங்களுக்கு கா•பி போட்டுத் தரேன்”

“ஏண்டி, இங்க ஒருத்தன் லோ சுகர்ல சாகக் கிடக்கேன், உனக்கு நைவேத்தியம் ஒரு கேடா ? நான் செத்தப்புறம் நைவேத்தியம் பண்ணிக்கோ” கோபத்தில் உடம்பு படபடக்க கத்தினார்.

“என்னங்க நான் தினமும் அஞ்சு மணிக்கு எந்தி¡¢ச்சு பல் தேய்ச்சு, சாமிய நமஸ்காரம் பண்ணிட்டு, பால் காய்ச்சி நைவேத்தியம் பண்றதுதானே பழக்கம்… நீங்க புதுசா இன்னிக்கு அஞ்சு மணிக்கு எந்தி¡¢ச்சு இருக்கறவா உயிர ஏன் வாங்கறீங்க..”

காலை வேளையில் இருவருக்கும் வாக்குவாதம் தடித்தது. கடைசியில் சியாமளி தான் நினைத்தபடி நைவேத்தியத்திற்கு பிறகுதான் கா•பி போட்டுக் கொடுத்தாள். அது சுவாமிநாதனின் கோபத்தை இன்னும் அதிகா¢த்தது.

“பார்த்துக் கொண்டேயிரு, ஒரு நாள் பூஜையறை சாமி படங்கள் எல்லாத்தையும் எடுத்து மூட்டை கட்டி ஒரேதடவையா பெட்ரோல ஊத்தி கொளுத்திடறேன்..” என்று கறுவினார்.

திருமணமான கடந்த முப்பது வருடங்களில் ‘கணவனின் முகத்தைக்கூட பார்க்காது பூஜையறக்குச் செல்லும்’ சியாமளி புதிதாகத் தொ¢ந்தாள். கணவனை கவனிப்பதைவிட கடவுள் முக்கியமா? என்று நினைத்தார். தான் தினமும் ஆறு மணிக்குமேல் எழுந்திருப்பதால் சியாமளியின் இந்த தினசா¢ப் பழக்கம் தமக்கு தொ¢யாமல் போயிற்று என நினைத்துக் கொண்டார்.

சுவாமிநாதனுக்கு கடவுள் மீது நம்பிக்கையெல்லாம் கிடையாது. சாஸ்திரங்கள், சடங்குகள், பூஜைகள் என எதையும் தன்னிடம் அண்ட விடமாட்டார். பூணூல் போட்டுக்கொள்ள மாட்டார். மறைந்த அம்மா, அப்பாவுக்கு திவசம் பண்ணமாட்டார். அடுத்தவர்களின் கடவுள் நம்பிக்கை தன் வசதியிலும்,சுகத்திலும் தலையிடாதவாறு பார்த்துக் கொள்வார். வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம், டி.வி நியூஸ், பேப்பர், பத்தி¡¢க்கைகள் என தன் வசதிகள்தான்
அவருக்கு பிரதானம்.

சென்னையில் ஒரு பொ¢ய மல்டி நேஷனல் கம்பெனியில் வைஸ்-பிரஸிடென்டாக ¡¢டையர்டு ஆனதும், திருவானைக்காவலில் பொ¢ய வீடு கட்டிக் கொண்டு மனைவி, மகனுடன், கொழுத்த பாங்க் பாலன்ஸ¤டன் செட்டில் ஆகிவிட்டார். ஒரே மகன் கீர்த்தி திருச்சியில்
ஒரு பிரபல கனரகத் தொழிற்சாலையில் எக்ஸிக்யூட்டிவ் இஞ்சினியர். இன்னும் திருமணமாகவில்லை.

சுவாமிநாதனுக்கு நேர் எதிர் சியாமளி. கடவுள் நம்பிக்கை அதீதம். தினமும் காலையில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வா¢யை கோவிலில் சென்று தா¢சனம் செய்துவிட்டுதான் சாப்பிடுவாள். பிரதோஷம், சங்கஷ்ட சதுர்த்தி, ஏகாதசி என அடிக்கடி ஏதாவது காரணங்களைச் சொல்லி உபவாசம் இருப்பாள். தனது தெய்வ நம்பிக்கைகளை சுவாமிநாதனின் வசதிகளுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வாள்.

அன்று ஏதோ ஒரு விசேஷதினம். சுவாமிநாதன் பகல் ஒருமணி செய்திகளை டி.வி யில் பார்த்துவிட்டு பசியுடன் டைனிங் ஹாலுக்கு வந்தார். சியாமளியும், கீர்த்தியும் பூஜையறயில் சுவாமி படங்களுக்கு பூக்களை வைத்து அலங்கா¢த்துக் கொண்டிருந்தனர்.

சுவாமிநாதன், “சியாமளி எனக்கு பசிக்கிறது, தட்டு வை” என்றார்.

“சித்த இருங்கோ, இன்னிக்கு விசேஷ நாள்… நைவேத்தியம் பண்ணி, தீபாராதனை முடிஞ்சதும் சூடா சாப்பிடலாம்”

“ஏண்டி மணி ஒன்றரையாச்சே, எனக்கு பசிக்குமேன்னு உனக்கு அறிவு வேண்டாம்… உன் பூஜை புனஸ்காரத்தையெல்லாம் சாப்பாட்டு டயத்துக்கு முன்னால முடிச்சுர வேண்டியதுதான?” என்று கத்தினார்.

பின்பு தடாலடியாக டேபிளின் மீது மூடிவைக்கப் பட்டிருந்த பழைய சாதத்தை எடுத்து தட்டில் போட்டு தயிர் ஊத்தி பிசைந்து, ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டார்.

“இதுக்கெல்லாம் இன்னியோட முடிவு கட்டறேன் பாரு” என்று கர்ஜித்தார்.

சியாமளி பதில் எதுவும் பேசாது நைவேத்தியம், தீபாராதனையை முடித்தாள்.

சாப்பிட்டு முடித்த சுவாமிநாதன், விறு விறுவென சென்று காத்ரேஜ் பீரோவைத் திறந்து இரண்டு எட்டு முழ வேஷ்டிகளை எடுத்து வந்து பூஜையறையின் முன்னால் பொ¢தாக வி¡¢த்தார். பூஜையறையினுள் சென்று ஒவ்வொரு சுவாமி படமாக எடுத்து வேஷ்டிகளின் மீது குப்புற வாக்கில் அடுக்கலானார்.

கீர்த்தி பதட்டத்துடன், “அப்பா…ப்ளீஸ்” என்று அவரை தடுத்தான்.

“போடா, உனக்கு ஒரு யழவும் பு¡¢யாது” என்று அவனை தள்ளினார். ஒன்றும் சாப்பிடாது அவன் பைக்கை எடுத்துக் கொண்டு கோபத்துடன் வெளியேறினான்.

சியாமளியும் சாப்பிடாமல் விசும்பலுடன் மாடிக்குச் சென்று தன் அறைக் கதவைச் சாத்திக் கொண்டாள்.

மாலை ஐந்து மணிக்கு சியாமளி கீழே இறங்கி வந்தாள். அழுததினால் முகம் வீங்கியிருந்தது,

பூஜையறையில் ஒரு படம் கூட இல்லாது வெறிச் சென்றிருந்ததைப் பார்த்து அதிர்ந்தாள்.
மூன்று வெள்ளை நிற மார்பிள் சுவர்களும் மரச்சட்ட ஆணிகளுடன் வெறுமனே காட்சியளித்தன.

டி.வி பார்த்துக் கொண்டிருந்த சுவாமிநாதனிடம் சென்று இயல்பாக, “கா•பி போட்டு தரட்டுமா ?” என்றாள்.

அவர் அதைவிட இயல்பாக, “ஏதோ நைவேத்தியம் பண்ணியே அத சுட வச்சுக் கொண்டா பசிக்கிறது.” என்றார்.

ஆறு மாதங்கள் ஓடி விட்டன. இன்னமும் ஒரு படம் கூட மாட்டப் படாமல் பூஜையறை காட்சியளிக்கிறது.

சியாமளி எப்போதும் போல் தனது பூஜையறை நம்பிக்கைகளை அந்த வெற்றிடத்தில் தொடர்ந்து கொண்டிருந்தாள். .

ஆனால் சமையலறயில் மட்டும் சுவாமிநாதனுக்குத் தொ¢யாமல் ஒரு அகிலாண்டேஸ்வா¢ அம்மன் படத்தை ஒளித்து வைத்து அவ்வப்போது வேண்டிக்கொண்டாள்.

அடுத்த எட்டு மாதத்தில் ஒரு நாள் திடீரென சுவாமிநாதனுக்கு மாஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. ஹாஸ்பிடல் ஐ.சி.யூவில் இரண்டு நாள வாசத்திற்குப் பிறகு மரணமடைந்தார்.

அடுத்த சில மாதங்களில் கீர்த்திக்கு ஸ்ரீரங்கத்திலேயே ஒரு நல்ல பெண் அமைந்தது.

கீர்த்தி “அம்மா, நாம இப்பவாவது புதுசா சாமி படங்களை வாங்கி பூஜையறையில் மாட்டலாமே” என்றான்.

” உங்கப்பாவும், நானும் எங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல சீர்காழி, கும்பகோணம், மாயவரம், தஞ்சாவூர்னு ஒவ்வொரு ஊரா தேடித் தேடி வாங்கிய படங்கள் அவைகள்… அதுல தஞ்சாவூர் பெயிண்டிங் படங்களும் ஜாஸ்தி… நீ உன் கல்யாணம் முடிந்ததும் உன் பொண்டாட்டியை கூட்டிண்டு போய் புதுசா வாங்கி மாட்டிக்கோ” என்றாள். குரல் உடைந்து கண்களில் நீர் முட்டியது.

கீர்த்தியின் திருமணத்திற்கு முன், வீட்டிற்கு புதிதாக பெயிண்ட் அடிப்பது என முடிவாகி, பெயிண்டிங் வேலை தொடங்கியது.

அன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டின் அனைத்து அறைகளுக்கும் பெயிண்ட் அடித்து முடிந்தவிட்ட படியால், கடைசியாக சமையலறையில் பெயிண்ட் அடிக்க வேண்டியதுதான் பாக்கி. ஏணியில் ஏறி, சமையலறை பரண் பேல் இருந்த ஒவ்வொரு பொருளாக
கீர்த்தி கீழே இறக்கினான். அப்போது வெள்ளைத் துணியால் கட்டப் பட்டிருந்த ஒரு பொ¢ய மூட்டையயும் கீர்த்தி இறக்கி கீழே வைத்தான்.

சியாமளி அந்த மூட்டையை அவிழ்த்தாள். உள்ளே ஏராளமான சுவாமி படங்கள்… அத்தனையும் பூஜையறையிலிருந்த சாமி படங்கள். அவைகளைப் பார்த்தவுடன் உடம்பெல்லாம் புல்லா¢க்க “ஓ” வென கத்திய சியாமளி, அடுத்த அரை மணி நேரம் கீர்த்தியை கட்டிப் பிடித்துக் கொண்டு வாய் விட்டு வெடித்து அழுதாள்.

ராகுகாலம் முடிந்து ஆறரை மணிக்கு பேல் சியாமளி தலைக்கு குளித்தாள். பிறகு பூஜையறக்கு வந்து ஒவ்வொரு படங்களாக நன்கு துடைத்து அதனதன் இடத்தில் அழகாக மாட்டினாள். பால் பாயாசம் செய்து நைவேத்தியம் செய்தாள். பின்பு தீபாராதனை ஏற்றப் பட்டு சியாமளியும், கீர்த்தியும் ஒற்றிக் கொண்டார்கள்.

மாட்டப்பட்ட சாமி படங்களை மறுபடியும் அதே இடத்தில் பார்த்ததும், ‘வெகு நேரத்திற்கு தேடியபின் தாய்ப் பசுவைப் பார்த்த கன்றின் முகத்தைப்போல்’ சியாமளியின் முகம் பிரகாசித்தது.

அங்கு மாட்டப் பட்டிருந்த சாமிப் படங்களுக்கு மத்தியில் புதிதாக ஒரு ஆசாமியின் படமும் சேர்க்கப்பட்டு சுவற்றில் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது.

சுவாமிநாதன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *