வெண்ணிற அன்னம்!

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 8,581 
 

நாங்கள் ஏர்போர்ட்டை சென்றடைந்தபோது காலை மணி ஒன்பது. என் மகள் ஆர்த்தி என்னை உட்காரச் சொல்லிவிட்டு, போர்டிங் பாஸ் வாங்கி வந்தாள். நான் போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இளைஞர்களைக் காட்டிலும் இளைஞிகளே அதிகம். இளைஞிகள் எல்லார் முத்திலும் தன்னம்பிக்கை! எனக்கு எல்லாமே புதிது. இந்தக் கூட்டம், இளைஞர்கள், பெண்கள்!

ஐந்தாறு வருடங்களாக வீல்சேரில் அடைபட்டுக் கிடந்த எனக்கு இந்த மாற்றங்கள் அப்பட்டமாகத் தெரிந்தன. இந்த வருடம் மும்பைக்கு இது என்னுடைய நான்காவது விஸிட். முதல் தடவை டி.பி.எஸ். என்ற மூளை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள. ஏனைய மூன்று ஃபாலோ அப்புக்காக. இந்த நான்கு முறையும் தீர்க்கமாத் தேடியும் யாரும் அகப்படவில்லை. என்ன தேடுகிறேன்? யாரைத் தேடுகிறேன்?
கூட்டத்தில் தெரிந்தவர் யாராவது தென்படுகிறார்களா என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவரும் தென்படவில்லை. நான் காலாவதியாகிவிட்டேன் என்பது அப்பட்டமாக தெரிந்தது. என் பழைய அடையாளம் மதிப்பிழந்து செல்லாக் காசாகிவிட்டது. என் படிப்பு, அதன் பின்னர் நான் ஈடுபட்டு இருந்த வேலைகள், அதில் நான் நிகழ்த்திய அல்லது நிகழ்த்திய தாய் நினைத்த சாகசங்கள் ஆகியன பொருளின் காலாவதியான வெர்ஷனைப் போல எல்லார் மனத்திலிருந்தும் அழிக்கப் பட்டுவிட்டன.

உலகம் கடந்து ஐந்தாறு வருடங்களில் எவ்வளவு மாறிவிட்டது! இத்தக் கதையுடன் சகஜமாக உறவாட வேண்டுமென்றால் என்னைப் பற்றிய சில முக்கிய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் பார்கின்சன்ஸ் என்னும் கொடுமையான பக்கவிளைவுகளைக் கொண்ட மூளை மற்றும் நரம்பியல் நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தேன் சென்ற வருடம் வரை. இந்நோய் கண்டவர் தம் கடைசி நாட்களை சிரமத்துடன் வீல் சேரில் தான் கழிக்க வேண்டும். நானும் வீல் சேரைத் தஞ்சம் அடைந்து வருடங்கள் பலவாகிவிட்டன. கடந்த பிப்ரவரியில், மும்பையில் எனக்கு எந்தவொரு சிக்கலுமின்றி டி.பி.எஸ். என்ற மூளை ஆப்பரேஷன் நடந்தது. நோயின் கொடிய பக்க விளைவுகளில் இருந்தும் வீல்சேரிலிருந்தும் ஒருசேர விடுதலை பெற்றேன்.

ஆறு வருடங்களுக்கு முன்னால், நானும் ஒரு மென்பொருள் தயாரிக்கும் கம்பெனி வைத்திருந்தேன் என்றால் நம்புவீர்களா? என் கம்பெனி ஒரு காலகட்டத்தில் சுமார் 200 பணியாளர்களைக் கொண்டிருந்தது. என் பிரதான கஸ்டமரெல்லாம் மும்பை சார்ந்திருந்ததால் நானும் வாரத்துக்கு ஒருமுறையேனும் மும்பை சென்று வருவேன். எவ்வளவு முறை இங்கே அமர்ந்திருப்பேன்! என்னுடன் எப்போதும் கூட்டமிருக்கும். பின்னர் பார்கின்சன்ஸ் வந்தது. கம்பெனியில் கவனம் பிசகியது. கவனிப்பின்றி பணியாளர்கள் சிதறிப்போயினர். இருந்ததையெல்லாம் பேரீச்சம்பழம் போல எடைக்கு எடை போட்டாயிற்று. பந்தம் தொலைந்தது. எனது இரண்டாவது இன்னிங்ஸில் நான் ஒரு மலர துடிக்கும் கதாசிரியர். ஒரு அமச்சூர் ஜோதிடர்.

ஆர்த்தி முதல் மகள். அமெரிக்காவில் சிகாகோவில் பணிபுரிகிறாள். லீவுக்கு சென்னை வந்திருக்கிறாள். எனக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டரை நேரில் பார்த்து நன்றி சொல்ல விழைந்ததால், இம்முறை மும்பை வந்திருக்கிறாள். முதல் மூன்று முறையும் என்னை இரண்டாம் மகள் அனன்யா கூட்டி வந்தாள். பாதுகாப்பு சோதனை முடித்து ஃபரீயாக உட்கார்ந்துக்கலாமே என்றாள் ஆர்த்தி.

பாதுகாப்பு சோதனையின்போது பாதுகாப்பு வளையத்தினூடே நான் செல்லக் கூடாது. சென்றால், அதிலுள்ள மின்காந்த அலைகள் எனக்குள் வைக்கப்பட்டிருக்கும் பேஸ்மேக்கரில் உள்ள செய்திகளையெல்லாம் அழித்துவிடும். பேஸ்மேக்கர் தன் செயல்பாடு இழந்து, பார்கின்சன்ஸ் மறுபடியும் தலைதூக்கிக் கொடூர முகத்தைக் காட்டும் என்பது நிச்சயம். என் நிலைமையை விளக்கி டாக்டர் எழுதிக் கொடுத்த கடிதம் ஒன்று எப்போதும் என்னுடன் இருக்கும்.

ஆர்த்தி வேகமாகச் சென்று பாதுகாப்பு அதிகாரியிடம் தனக்கு தெரிந்து ஹிந்தியில் என் நிலைமை பற்றி விளக்கினாள். அவர் காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே தெரியவில்லை. டாக்டர் அளித்த கடிதத்தை ஆர்த்தி அவரிடம் கொடுத்தாள். “யாருக்கு தேவையோ அவருக்கு’ என்று ஆரம்பிக்கும் அக்கடிதம் எனக்கு மின்காந்த அலைகளிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியது. அதை வாங்கிப் படித்த அந்த அதிகாரி க்கடிதத்தில் இருக்கும் என் பெயரைப் பார்த்ததும் உஷாரானார். உஷாராவதற்கு என்ன இருக்கிறது? என் பெயரை நின்று நிறுத்தி, தப்பும் தவறுமாக ஒருமுறை படித்தார். ஆர்த்தியைப் பார்த்து சைகையில் சரியா என்றார். ஆர்த்தி சரியென்று தலையாட்டினார். எங்களுக்கு முன் அந்த அதிகாரி க்ளியர் செய்த ஒரு பெரியவரை அழைத்து, எங்களருகில் இருந்த பெஞ்சில் அமரச் சொன்னார். என்னையும் ஆர்த்தியையும் அங்கேயிருந்த இன்னொரு பெஞ்சில் அமரச் சொல்லிவிட்டு அருகில் உள்ள அறையில் சென்று மறைந்தார்.

எங்களுக்கு முன் அந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவருக்கு சுமார் 55/60 வயது இருக்கும். அவருடன் இளைஞன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அந்த வயதானவர் முகத்தில் மெலிதான கோபம் தெரிந்தது. ஐந்து நிமிடம் கழித்திருக்கும். அந்த அறையிலிருந்து மேலதிகாரி ஒருவர் வந்தார். நேராக என்னிடமும் அந்தப் பெரியவரிடமும் வந்தார், “தம் கீழ் வேலை செய்யும் அதிகாரி எங்களை ஆர்வ மிகுதியால் நிறுத்தி வைத்ததற்கு மன்னிப்பு’ கேட்டுக் கொண்டார்.
பிறகுதான் தெரிந்தது அந்தப் பெரியவர் பெயரும் ஆராவமுதன் என்றும், அவர் தந்தை பெயரும் கோபாலன் என்றும், அவரும் டி.பி.எஸ். செய்து கொண்டவர் என்றும்.

“என்ன ஒரு அபார் கோ-இன்ஸிடன்ஸ். இதில், சந்தேகப் பட ஒன்றுமில்லை. ஆச்சர்யப்படத்தான் விஷயம் இருக்கிறது. மறுபடியும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்றார் அவர். எங்களிருவருக்கும் முகமன் கூறி வழியனுப்பி வைத்தார்.
இதற்குள் ஆர்த்தி அவருடன் வந்த பையனுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தாள். அவன் பெயர் ரகுராம் என்று எனக்கு அறிமுகம் செய்துவைத்தாள். ரகுராம் என்னிடம் மிகவும் மெலிதான குரலில், “தம் தந்தை ஒரு நான்-பிலீவர் என்றும், சற்று முன் கோபக்காரர் என்றும், அவருடன் ஏதேனும் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டால் கடைசியில் அவர் சொல்வதே சரி என்று ஒப்புக் கொள்ளுமாறும்’ கேட்டுக் கொண்டான்.

மேலும் சில கோ-இன்ஸிடன்ஸ்களை ரகுராம் மூலம் தெரிந்துகொண்டேன். அவரும் கடந்த பிப்ரவரியில் டி.பி.எஸ். பண்ணிக் கொண்டார். அவர் மனைவி பெயரும் கல்யாணி. அவருக்கும் என்னைப் போலவே வயது 53தான். நான் ஆர்த்திக்கு தீவிரமாக வரன் பார்த்துக் கொண்டிருப்பது போலவே அவரும் அவர் பையனுக்குத் தீவிரமாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் பையனுக்கும் ஆர்த்தி போலவே 26 வயதாகிறது. அவர் பையனும் சிகாகோவில் தான் பணிபுரிகிறான். மிகவும் ஆச்சர்யமான விஷயங்கள்!

“என்ன ஒரு அமேசிங் கோ-இன்ஸிடென்ஸ். இது எதைக் காட்டுகிறது?’ என்றேன்.

“எதையும் காட்டவில்லை. லிஸ்ட் ஆப் கோ-இன்ஸிடென்ஸ் என்பதைத் தவிர’ என்றார்.

“லிஸ்ட் ஆப் மீனிங்ஃபுல் கோ இன்ஸிடன்ஸ்’.

“கோ-இன்ஸிடன்ஸ்சில் என்ன மீனிங் வேண்டியிருக்கிறது, ரப்பிஷ்’ என்றார் மெலிதான கோபத்துடன். “ஆனால், உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. என் மனைவியிடம் சொன்னால் சந்தோஷப்படுவாள். உங்களிடம் நிவர்த்தி செய்து கொள்ள அவளிடம் கேள்விகள் நிறைய உண்டு,’ என்றார் உண்மையான சந்தோஷத்துடன்.

“அப்படியா, எனக்கும் மிக்க மகிழ்ச்சி’ என்றேன். பிறகு விட்ட இடத்தில் தொடர்ந்தேன். “இப்படி கோ-இன்ஸிடன்ஸ் சாதாரணமாக நடக்கும் என்கிறீர்களா? நமது சந்திப்புக்கு வேறு ஏதும் பர்பஸ் இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.’

“கோ-இன்ஸிடன்ஸ் என்றாலே போதும். இதில் மீனிங், பர்ப்ஸ் ஆகிவற்றை கொண்டு சேர்ப்பது மனிதனின் எதிர்காலம் பற்றிய பயத்தையே காட்டுகிறது. மீனிங்ஃபுல் கோ-இன்ஸிடன்ஸ், பர்பஸ் ஃபுல் கோ-இன்ஸிடன்ஸ் எல்லாம் ஆக்ஸிமொரொன்ஸ்.’

ரகுராம் என்னிடம் வந்து “காஃபி சாப்பிடுகிறீர்களா, அங்கிள்’ என்றான். நான் அவரைப் பார்த்தேன். “சாப்பிடலாம். சூடான விவாதங்களுக்கு காஃபி தான் சரி’ என்றார்.

“சரி நமது விவாதம் முடிவுக்கு வராது. வேறு ஏதேனும் பேசுவோம். காஃபி சாப்பிட்ட பிறகு தொடர்வோம்,’ என்றார். தமது வெள்ளை கர்சிஃபை வெளியே எடுத்துக் கொடி அசைத்தார். நான் என் பார்கின்சன்ஸ் பூர்வாங்கக் கதையை அவரிடம் சொன்னேன். உண்மையான அக்கறையோடு கேட்டுக் கொண்டார். அவர் கதையை சொன்னார்.
எதனாலோ இவரை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ஒருவேளை, பார்க்கின்சன்ஸ் இருப்பதால் இருக்கலாம். காஃபி சாப்பிட்டோம்.
நான் தற்போது எழுத்தாளனாக முயற்சிக்கிறேன் என்றவுடன், “அதானே பார்த்தேன். நமது இந்தச் சந்திப்பை நீங்கள் ஒரு கதையாக்கப் பார்க்கிறீர்கள். அதை ஸ்திரப்படுத்தும் பொருட்டு, இதில் மீனிங், பர்பஸ் ஆகியவற்றை வெளியிலிருந்து கொண்ட வந்து நுழைக்கிறீர்கள். சரிதானே நான் சொல்வது?’ என்றார் சிரித்துக் கொண்டே.

“நிச்சயம் நான் இந்த விநோத சந்திப்பை வைத்து ஒரு கதை புனைய முயற்சிப்பேன். ஆனால், அதற்கு எதை நான் ஸ்திரப்படுத்த வேண்டும்? என் கதை சொல்லும் திறமை மேல் எனக்கு அபார நம்பிக்கையிருக்கிறது. எதையும் வெளியிலிருந்து கொண்டு வந்து நுழைக்காமல் வாசகரின் கவனிப்பை என்னால் பெற முடியும் எனவும் நம்புகிறேன்.’

“தயவு செய்து மன்னிக்க வேண்டும். நான் தங்களைக் காயப்படுத்திவிட்டேன் போலிருக்கிறது. எந்த நம்பிக்கையுமற்ற நான் இந்த நம்பிக்கைசார் மனிதர் வாழும் உலகத்தில் பிறரைக் காயப்படுத்தாமல் ஜீவிக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டும் பாருங்கள்.’

“நான் நிச்சயம் காயப்படவில்லை. ஆகவே, நீங்கள் கேட்ட மன்னிப்பு தேவையற்றது. மன்னிப்பு கேட்பவர்கள் நல்லவர்கள் என்று நான் நினைக்கிறேன்’ என்றவன் தொடர்ந்து, “எந்த நம்பிக்கையும் இல்லை என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? நாளைய பொழுது நல்லதாய் விடியும் என்று நம்புகிறீர்களா? அல்லது தங்கள் மகன் ரகுராம் தங்களை வீட்டுக்கு பத்திரமாகக் கொண்டு சேர்ப்பான் என்றாவது நம்புகிறீர்களா? மனித உறவுகளெல்லாம் நம்பிக்கை பரஸ்பரம் சார்ந்தது தானே. நம்பிக்கை என்று எதை மீன் பண்ணுகிறீர்கள் என்பதை பொறுத்தது.’

“நம்பிக்கை என்ற வார்த்தையின் அர்த்தமே நம் இருவர் அகராதிகளிலும் வேறுபடுகிறது என்று நினைக்கிறேன். அதை சரி செய்து கொண்டு மேற்கொண்டு பேசலாம்.’

“என் அகராதி நம்பிக்கை என்பது மனிதனின் ஆதார உணர்வு. வாழ்வின் அடிப்படை. நம்பிக்கையில்லையேல் வாழ்க்கையில்லை. தீயைத் தொடாதே, சுடும் என்கிறாள் அம்மா. இதைக் கேட்டுக் கொண்டு தீயைத் தொடாமல் இருத்தல் நம்பிக்கையின் வெளிப்பாடா?’

“நீங்கள் உங்களையும் குழப்பிக் கொண்டு என்னையும் குழப்புகிறீர்கள். நான் சொன்ன நம்பிக்கை மெடா-பிஸிகல் விஷயங்கள் சம்பந்தப்பட்டவை. உதாரணமாக, கடவுள், ஜோதிடம் போன்றவை. நிரூபிக்க முடியாதவை. முடிவில்லாத தர்க்கம். நம்புகிறவனை அவன் நம்பும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். அதை விடுங்கள். நான் என் மகனுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன் ஜாதகம் இதோ இருக்கிறது. உங்கள் அமச்சூர் ஜோதிடம் என்ன சொல்கிறது.’

“உங்களுக்குத்தான் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லையே.’

“அதனாலென்ன, நீங்கள் ஜோதிடம் பார்க்கும் எல்லோரும் நம்பிக்கை சார்ந்தவர்களா? கேட்டுக் கொண்டுதான் ஜோதிடம் பார்ப்பீர்களா.’
“நான் இதுவரையில் நம்பிக்கையுள்ளவருக்கோ அல்லது அவ்வாறு நான் நினைத்துக் கொண்டிருந்தவருக்கோ தான் என் ஜோதிடக் கணிப்புகளைச் சொல்லியிருக்கிறேன். நம்பிக்கை இல்லாதவருக்கு ஜோதிடம் பார்ப்பது சிரமமான காரியம். மன்னிக்கவும்.’

“உங்கள் வாதம் சரிதான். நம்பிக்கை இல்லாதவருக்கு ஜோதிடம் பார்ப்பது சிரமம்தான். அதற்கு முன்னால் வேறு ஒரு விஷயம். நம் குழந்தைகளுக்கு ஒருத்தரையொருத்தர் பிடித்து போயிற்று என்று நினைக்கிறேன். மேற்கொண்டு பேசலாமா?’

“மன்னிக்கவும். மேற்கொண்டு பேச ஒன்றும் இருக்காது. கோ-இன்ஸிடன்ஸ் பற்றி என நம்பிக்கை சரியாக இருக்கும் பட்சத்தில், நம் இரு குடும்பங்களும் ஒரே கோத்ரம் சார்ந்திருக்கும். நமக்கு சம்பந்தியாக வாய்க்காது என்றே தோன்றுகிறது.’

“அப்படி வாருங்கள் வழிக்கு. அப்படி கோத்ரம் வேறாயிருந்து அவர்களும் சரியென்றால் மேற்கொண்டு எந்தத் தடையுமின்றி பேசலாம் சரியா? நீங்கள் என்ன கோத்ரம்?’

“ஸ்ரீவத்ஸ கோத்ரம்’ என்றேன்.

ரகுராம் ஜாதகமும் ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்றது. அதெப்படி என்று உண்மையாகவே ஆச்சர்யப்பட்டவர், பின்பு “மற்றுமொரு கோ-இன்ஸிடன்ஸ் தவிர வேறேதுமில்லை’ என்றார். இவருடன் சம்பந்தியாக வாய்க்கவில்லையே என்ற வருத்தம்தான் மேலோங்கி நின்றது. இவர்தான் எதையும் நம்புவதில்லை என்று தமக்குள் நம்பி கொண்டிருப்பதாகப்பட்டது. ஒருவேளை, நம்பிக்கைக்கு வேறேதேனும் விளக்கம் இருக்கிறதோ? பாவம், கோத்ரம் விஷயத்தில் நான் சாகசம் செய்துவிட்டதாக நம்புகிறார். அவருக்கென்ன தெரியும்? துரதிஷ்டத்தில் என் நம்பிக்கை மிக வலுவானது.

“நமது சந்திப்புக்கு வேறு ஏதும் பர்பஸ் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது என்று சொன்னேன், ஞாபகம் இருக்கிறதல்லவா? அது என்ன பர்பஸ் என்று இப்போதேனும் தெரிந்ததா?’

“இன்னும் தெரியவில்லை. எப்படியேனும் நமது நட்பு மற்ற பிளேன் சினேகிதம் போல இத்துடன் முடியப்போவதில்லை. தெரிந்தவுடன் சொல்கிறேன்.’

“எனக்கென்னவோ என் மகளின் திருமணம் தங்கள் வீட்டாரின் உதவியுடனேயே நடக்கும் எனத் தோன்றுகிறது’ என்றேன்.

“அப்படி நடந்தால் என்னை விடவும் சந்தோஷம் அடைபவர் யாரும் இருக்கமுடியாது. பிளாக் ஸ்வான் சின்ட்ரோம் பற்றித் தெரியுமா?’
“தெரியாது. சொன்னால் தெரிந்து கொள்கிறேன்.’

“ஸ்வான் அல்லது அன்னப்பறவை வெள்ளை நிறமுடையதென்று நமக்குத் தெரியும். சர்வ நிச்சயமாக தெரியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். எவ்வளவு வெள்ளை நிறமுடைய ஸ்வானைப் பார்த்தால் அதன் நிறம் வெள்ளையென்று அறுதியிட்டுச் சொல்லமுடியும்? உலகிலுள்ள எல்லா ஸ்வான்களையும் பார்த்தால் சொல்லலாம். உலகில் மொத்தம் இவ்வளவு ஸ்வான்கள்தான் இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?’

“என்ன சொல்ல வருகிறீர்கள்?’

“அதாவது, எவ்வளவு சரியாக இருந்தாலும் ஜோதிடர் உண்மையென்று சொல்லிவிட முடியாது. அடுத்து வரும் கணிப்பு தவறாக வாய்ப்பு உண்டு.’

“நான் எல்லா அன்னப்பறவைகளும் வெள்ளை நிறம் கொண்டவை என்று நம்புகிறேன். ஆகவே, அடுத்து வரும் கணிப்பும் சரியாகவே இருக்குமென்றும் நம்புகிறேன்.’

“நம்புகிறவர்களை அவர்கள் நம்பும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.’

அப்போது, ரகுராம் என்னைக் கூப்பிட்டான். “அங்கிள், என் நண்பன் ஒருவன் சிகாகோ வர இருக்கிறான். மிகவும் நல்லவன். அவனைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு ஆர்த்தியே தனக்கு எல்லாவிதத்திலும் ஏற்றவன் போல என்கிறாள். நான் சொன்னால் கேட்டுக் கொள்வான். ஜாதகம் பொருந்தியிருந்தால் பேசி முடிக்கப் பார்க்கட்டுமா?’ என்றான்.

“பர்பஸ் சரிதான் போலிருக்கிறது! இன்னுமொரு வொய்ட் ஸ்வான்’ என்றார்.

– ரங்க ராமானுஜம் (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *