கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 2,597 
 

(1977 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இண்டையோடு றோட்டு ஒப்பதரவையாகப் போகும். இந்த இருபத்தி ஏழாங்கிழமையை மனதில் வச் சுத்தான் கல்லுப் பரவின சீமான் றோலர் உருட்டாம தார் ஊத்தியிருக்கான்”

தேநீர்க் கடைக் கிழவர் தனது ஒட்டமழித்த மொட் டைத் தலையை தடவிக்கொண்டே கூறினார். அவர் பேச்சில் அடக்கமாயுள்ள நகைச்சுவையை ரசிப்பதா, அது தன்னுள் உசுப்பிவிட்ட ஆத்திரத்தை கொட்டித் தீர்ப்பதா? இரண்டில் எதையுமே செய்ய முடியாமல் அவன் இடர்பட்டான். கிழவர் படு நகைச்சுவைப் பேர்வழி. அவரின் பகிடிகளில் கலைத்துவம் மிளிர்ந்திருக்கும். இதை அவன் விரும்பி ரசிப்பான். இன்றோ , ஏழை எளிய சனங்களைக் கிண்டல் செய்வதாக அமைந்த அதை அவனால் ரசிக்கமுடியவில்லை. ரசிக்க முடியவில்லையே ஒழிய, அவர் மொழிகளின் கருத்தாழத்தை அவன் மனம் அங்கீகரிக்கவே செய்தது.

குழந்தையின் கையில் ‘கஜுர்’ பலகாரம் ஒன்றை வாங்கிக்கொடுத்து திறந்திருந்த ஒற்றைப் பலகை இடுவ கலால் சிரமப்பட்டு வெளியே வந்தான், ஒற்றைப் பலகையை மாத்திரம் திறந்துவைத்துக்கொண்டு நோன்பை மரியாதை செய்தவண்ணம் கிழவர் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டிருந்தார். பலகை மறைவில் பலர் கஜுரும், காட்டாவும், பீடியுமாக நோன்பை கண்ணியப்படுத்திக்கொண்டிருந்தனர்.

குழந்தையைக் கொடுங்கையில் ஏந்தியவனாக வீதியின் மத்தியில் நின்றவாறே தெருவின் இருபக்கத்தையும் மாறி மாறிப் பார்த்தான். மத்திய வீதியாக இருந்து இப்பொழுது மஷூர் மௌலானா வீதியாக மாற்றப்பட்டிருக்கும் ஊரின் நடுநாயகமான அந்த வீதி முண்டுக் கற்களைத் துருத்திக் கொண்டிருக்கின்ற கோலம், அந்தக் கற்கள் தன் கால் நகங்களைப் பிடுங்கி எடுத்த கோரம் – இவற்றின் நினைவோடு தெருவில் வழியும் மனித வெள்ளத்தை ஊன்றிக் கவனித் தான், ஜன நெரிசலில் வீதி திமிலோகப்பட்டது. தள்ளு கிழங்கள், வலது குறைந்த ஊனங்கள், தாலியறுந்ததுகள், பராயமடைந்ததுகள், சின்னஞ்சிறுசுகள் ஆகியோரை உள் ளடக்கிய இந்த மனிதப் பேர்படை வீதியை ஒப்பமாக்குகின்றதா? இல்லை. தங்கள் வாழ்க்கையை ஒப்பமாக்க முடியுமா என நப்பாசை கொண்டலைகின்றனர்.

கடைக்குள் நுழைவதற்கு, சற்றே முன்னாலும், கடந்த ஒவ்வொரு வருடமும் அவன் கண்ணாரக் கண்ட காட்சிதான். இந்த வீதி மாத்திரமா? ஊரின் சகல வீதி களும்… ஒழுங்கைகளும்…. முஸ்லிம்கள் வாழுகின்ற சகல ஊர்களும்…. இதே திருக்கல்யாண கோலத்தில் தான் காட்சி நல்கிக்கொண்டிருக்கும். இப்பொழுதும் பலர் அவனைக் கடந்து செல்கிறார்கள். இவர்களிற் பலரைச் சென்ற ஆண் டும், சென்ற ஆண்டும், சென்ற ஆண்டுகளுக்கு சென்ற ஆண்டுகளும், இதே கோலத்தில் இதே வேட்டை வியூகத்தில் அவன் தரிசித்திருக்கிறான்.

கிழவனின் வார்த்தைகள் ஓர் அழுத்தத்தை அவ னுக்கு ஊட்டின. அந்த வார்த்தைகளின் வாத்சல்யம் அவன் மனத்தில் அமுங்கிப்போய் கிடந்த எண்ணப் புதையலை சுண்டிவிட்டது. அவலமும், இழிவரலும், அங்கதமும், நகைப்பும் சுவை கூட்டும் ஒரு காவியத்துக்கான பல்லவி யைக் கிழவன் தோற்றுவாய் செய்து கொடுத்துவிட்டான்.

குழந்தையை அடுத்த கைக்கு மாற்றிக்கொண்டே கேற்றுத் தூணில் சாய்ந்தவாறு தெருவில் சாரிபோகும் அந்தப் பஞ்சப்பிராணிகளை அர்த்தபுஷ்டியோடு நோக்கினான். நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன. சென்ற வெள்ளிக் கிழமைக்கு முந்தின வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை யின் பின்னர் அந்தத் துடிப்பான இளம் மௌலவி உபந்நி யாசம் புரிந்தது நினைவுக்கு வந்தது. தனது காவிய கதா பாத்திரங்களில் ஒன்றாக அவரையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அவர் தம் பேச்சின் இறுதியின் போது,

“பிச்சைக்காரப் பட்டாளத்தை உருவாக்க ஏழைவரி விதிக்கப்படவில்லை. ஏழைவரி வாங்குபவர்களும் காலக் கிரமத்தில் ஏழைவரி வழங்குவோராக மாறவேண்டும். அல்லாஹ்வுக்குப் பயந்து சரியாக கணக்கிட்டு உரியவர்களுக்கு முறையாக வழங்கி அதை அவர்கள் மூலதனமாக இட்டு வாழ்க்கையை ஆரம்பிக்க வழி செய்தல் வேண்டும். ஊருக் கொரு, பைத்துல்மால் நிதியை ஏற்படுத்துவோம். சக்காத் திட்டத்தை சரியாக அமுல் செய்வோம்” என அழுத்திக் கூறினார்.

வெயில் சுள் என்று சுட்டது, அவன் வீட்டுக்குள் வந்தான்; குழந்தையை மனைவியிடம் கைமாற்றிவிட்டு விசிறியை எடுத்து உடம்பை விசிறியவண்ணம் கதிரையில் அமர்ந்தான். மேசையில் கிடந்த சஞ்சிகை ஒன்றை புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த அவனது மகன் ஒருவன், ஒர் இடத் தில் சத்தம் போட்டு வாசிக்கத்தொடங்கினான்.

“ஒன்பது மாதங்கள் அங்கு தொடர்ந்து இரவு நீடிக் கும், நீண்ட மிக நீண்ட அந்த இரவில் நீர் நிலைகளெல்வாம் பனியாக உறைந்துவிடும். எங்கும் பனிமயம். அங்கு வாழ்ப வர்கள் அந்த நீண்ட குளிர் இரவை பனிக்குகைக்குள்ளேயே கழிப்பர். ஏற்கனவே வேட்டையாடிச் சேர்ந்த ‘சீல்’ மீன் களையும், பனிக்கரடிகளையும் உணவாக உண்பர். சூரியன் கடகக் கோட்டுக்கு வருகைதந்ததும் இரவு விடுதலை பெறும். பகல் தொடங்கும். பனி உருகும் குகைக்குள் நெட்டுயிர்த் துக்கிடந்த ஜீவராசிகள் ஜீவகானம் இசைத்துக்கொண்டு வெளியே வரும். நீண்ட குளிர் இரவை பனிக்குகைக்குள் கழித்த அந்த மனிதர்கள் புதிய தெம்புடன் வெளியே புறப் படுவர். ஈட்டியும், தூண்டிலும், தோணியும், வலையும் கொண்டவர்கள் போர்க்கோலம் பூண்டுவிடுவர். வருடம் முழுமைக்கும் தேவையான ‘சீல்’ மீன்களையும், துருவக் கரடிகளையும் பனிமான்களையும் வேட்டையாடிக் குவிப்பர்.

“ஆரிபு இங்கே வா…”

தாயின் அழைப்பு குசினிப்பக்கம் இருந்து வந்ததைத் தொடர்ந்து படிப்பை நிறுத்திவிட்டு பையன் உள்ளே சென் றான். விசிறியவண்ணம் கதிரையில் புதையுண்டுகிடந்த அவனின் சிந்தை மகன் வாசித்த சீல் வேட்டைக்காரர்கள் என்ற அந்தக் கதையிலே அமுங்கிப்போய்க்கிடந்தது.

சீல் வேட்டைக்காரர்களின் மூன்றுமாத வேட்டை வருடம் முழுவதும் போதுமாக இருக்குமாம்…இந்த ஸக்காத் வேட்டைக்காரர்களின் நோன்பு மாத வேட்டை…

ஒரு நீண்ட பெரு மூச்சை உதிர்த்துக்கொண்டே எழுந்து உள்ளேபோய்ப் பாயுந்தலையணையுமாக கிணற்றடி யைக் கடந்து மாமர நிழலுக்குச் சென்றான். புழுங்கி வடிந்த உடலுக்கு மர நிழல் சற்றே இதமாக இருந்தது. நீட்டி நிமிர்ந்து படுத்தவண்ணம் அந்த நிழல் சுகத்தை அனுப விக்கத் தொடங்கினான்.

வளவின் கிழக்குக் கோடியில் ஒழுங்கை வேலியில் தழைக்கம்புகள் தழைத்துச் சடைத்து நிழல் வழங்குகின்றன.

ஒழுங்கையும், தெருவும் சந்திக்கின்ற சந்தியை ஒட்டியது தான் வளவு. நாலு பக்கத்தாலும் அவிந்து கரிந்து மனம் வெதும்பிப்போய் வருகின்ற வேட்டைக்காரர்கள் தகைந்து தரித்து ஆறுதல் பெற்றுச்செல்ல வேலி நிழல் தாராளமாக உதவுகிறது. நான்கு பக்கத்தாலும் வந்த நான்கைந்து பெண் கிழங்கள் வேட்டை விபரத்தைத் துயரம் தொனிக்க பாமாறுககொண்டனா.

“ஆசியார்ர ஊட்ட ஒரு சிலின் கிடைச்சுச்சு. அத வாங்கிற்று மரைக்கார்ர ஊட்ட போனாத் தலவாசல் பூட் டிக்கிடக்கு. குடுத்து முடிச்சிற்றாங்களாம்.”

“அதென்னத்தகா லெக்கா பேசுவாய். முதலாளியார் ஒரு சீதேவி. ஒருரூபாய் தந்தார். ஆலிம்ட ஊட்ட போனா எல்லாம் ஒழிஞ்செண்டு கதவ அடைக்காங்க”

“ஒண்டி மகளே! ஒத்துப்பேசிச் செஞ்சமாதிரி எல்லா ரும் சதிமானம் செஞ்சிற்றாங்க. வழக்கமா அந்திய நேரம் குடுக்கவியளும். இண்டைக்கெண்டு இருட்டோடயில குடுத் திட்டாங்க”.

“சதக்காச் சக்காத்தா குடுக்காங்க? சும்மா ஒலகத்து ஒப்பினக்கி காட்டாப்பு காட்டுறாங்க”

“நம்மட ஹக்க அல்லாஹுதஆலா அவியளுக்கிட்ட குடுத்திருக்கான்; எண்டுதான் நாம போறம். நீயென்ன தந்து வெச்சத? எண்டு தமக்கிட்ட கேக்காங்க”

“காத்தான்குடி. ராச்சியமிருந்து வந்தங்கா புள்ள. பஸ்ஸுக் கூலிகூடக் கெடக்கல்ல”

“இந்த வகுத்தெரிச்சல்கள என்னத்துக்கு கதப்பான். அன்னா அந்த போக்கடி றோட்டால திரும்பப் போங்க. மிசினூட்டுல போகப்போகக் குடுக்காங்க. கெதியாப் போங்ககா”

ஆற்றாமையை, ஏ மாற்றத்தை, இதயக் குமுறலை வார்த்தைகளென்னும் நெருப்புக் கங்குகளாக உதிர்த்தனர். அவர்களில் ஒருத்தி மற்றவர்களை ஆற்றுப்படுத்திவிட்டாள். புதிய நம்பிக்கைகளோடு கலைந்து செல்கின்றனர்.

அவனது கூர்மையான செவிகள் அவற்றை எல்லாம் உறிஞ்சியெடுத்து உள்ளே பதியவைத்தன. ஆமாம் அவ னுக்கு காவிய கதாபாத்திரங்கள் உருவாகிக்கொண்டு இருக் கிறார்கள்.

“மத்த நாளயில போனா இருவத்தேழாங் கிழமைக்கு வரச்சொல்லுகாங்க. ஒரு மாசமாக் காத்துக் கெடந்து போட்டு இப்ப போனா குடுத்து முடிஞ்சுது; ஏன் பிந்தி வந்தீங்க?” என்றாங்க.

“ஓம் பாருங்க. ஏழை எளியதுகள்ள ஊட்டில இந்த மாசம் முச்சூடும் அஞ்சிசதமும் பத்துச்சதமுமா எரந்த சனங்களுக்குக் குடுத்தத்தக் கணக்குப் பாத்தா இருவத் தேழாங்கெழம பாத்து கதவடச்சு வெச்சுக்கிட்டு இவிய குடுக்கத்த உடக் கூடத்தான் வரும்”

தெருவில் செல்லும் ஆண் வேட்டைக்காரர்கள் அனுப வத்தை விமர்சனமாக்கி வேதனை பிழிந்து விநியோகம் செய்தார்கள். அவற்றையும் அவன் செவிகள் உள்வாங்கி மனத்திரையில் பதியவைத்தன. காவியத்துக்கான கதர் பாத்திரங்களின் எண்ணிக்கை இரண்டால் அதிகரித்தது.

கண்களை மூடி நித்திரையின் அணைப்புக்குள் வசமாகி இதயத்தைத் தேங்காய் பிழியும் அவசங்களை அவன் மறக்க விரும்பினான். மர நிழலும் தன்னியல் பிழந்து சுட்டெரிப்பது போன்ற உணர்வு அவனில் வியாபகமாகியது. வெய்யிலின் மீது ஆத்திரம் பொங்கிவந்தது. அடுத்தகணம் தன் அறியாமையைச் சபித்துக்கொண்டான். வெய்யிலின் கடனோ சுட்டெரிக்கவேண்டியது. அதை எப்படிக் கோபிக்கமுடியும். குளிரவேண்டிய இடங்களிலிருந்து குளிர் வெளிப்படாமைக்கு வெய்யிலா பொறுப்பு? ஏதோ ஞான வெளிப்பாடுகளும் அவனுள் கண்ணாமூச்சி காட்டின.

விசிறியின் தயவால் நித்திராதேவியும் அரைமன தோடு அவனை அணுகிப்பார்த்தாள். இமைகள் சொருக வாரம்பித்தன.

“என்ர அல்லாவே! என்ன மகுறுவமிது? இஞ்சயிங்க கெதியா வாங்க! உங்களத்தானே! கெதியா ஒடியாங்க!”

அச்சமும், துயரமும் கலந்து மனைவி பிலாக்கணம் வைத்து அழைத்தாள்.

“என்ன எளவு ! போராட்டத்துக்குப் பிறகு கண் ணயருகிற நேரமாப் பார்த்துத்தான் அவளுக்கும் அவசரம் வருகுது”

மனைவியை சினந்து கொண்டே எழுந்து முற்றத்துக்குச் சென்றான்.

முற்றத்தில்?

பிணக்கோலத்தில் ஒருத்தி கிடந்தாள். சீலைப்பை ஒன்று பக்கத்தில் அநாதரவாய்க் கிடந்தது. அரிசி, பையின் வழியாக வழிந்தும் சிதறியும் கிடந்தது. ஒரு நோட்டுப் புத்தகமும் பக்கத்தில் கிடந்தது. முற்றத்து மணல் கொதித் தது. மனைவியும் அவனுமாக அவளை அலாக்காகத் தூக்கித் திண்ணையிலே பாயில் கிடத்தினர்.

மனைவி குடத்தடிக்கு ஓடினாள். அவன் அவளை அவ தானித்தான். உடலிலே அசைவு துடிப்பு எதுவும் இலலை. வாயிலே நுரையில்லை. சுவாசம் ஒழுங்காக இயங்குகிறது. நெற்றியைத் தொட்டுப்பார்த்தான். கைகளை அமுக்கிப் பார்த்தான். அவை குளிர்ந்தன. மனைவி தண்ணீரை முகத் தில் தெளிக்க முயன்றாள். அவன் அதைத் தடுத்தான். இது சாதாரண மயக்கமுமல்ல; பித்த சுழற்சியுமல்ல என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டான். குளிர் ஜன்னிக்குரிய காலமுமல்ல. ஆனாலும் உடல் குளிர்கிறது. தனது ஊகம் சரியாகவே இருக்கும் என்ற முடிவுடன் மனைவியைப் பார்த்து,

“கொஞ்சம் வேர்க்கொம்பு தூளாக்கி எடு” என்று ஏவிவிட்டு சிறிது உலவினான். அம்மியும் குழவியும் கட கடத்து அரைந்தன. சிறிதுநேரத்தில் மனைவி வேர்க்கொம் புத் தூளோடு வந்தாள்.

“உச்சந்தலையிலும் உள்ளங்கைகளிலும் உள்ளங்கால் களிலும் தேய்”

மனைவி யந்திரமாக இயங்கினாள்.

“நல்லாச் சூடெழும்பட்டும், கசக்கின கையை மூக்கிலே புடி”

அவளுக்கு வயது முப்பத்தைந்து இருக்கலாம். சுமா ரான சதைப்பற்றான உடல்வாகு. அதில் சோகங்கலந்த வசீகரத்தின் குமிழ் சிரிப்பு. கலைந்த சேலையால் அம்மண மாகக் கிடக்கும் முழங்காலும், சட்டைக் கிழிசலினூடாகத் தெரியும் தோள்பட்டையும் அவள் எலுமிச்சை வண்ணத் தினள் என்பதை அறிக்கை செய்தன. பழைய ஒடுமாதிரிச் செங்கருமை பாய்ந்து கிடக்கும் முகமும், கைகளும், கழுத்துப் பாகமும் வெயிலாடியவள் என்பதை விபரித்தன. அங்கை களிலும் மென்மைக்கு விடைகொடுத்த சாங்கம்.

அவளை அவன் மேலும் ஊன்றிக் கவனித்தான்.

“ஓ…ஒரு ஜீவாத்மாவைத் தாங்கிக்கொண்டு, சவ மாகாத சவமாகச் சஞ்சாரம் பண்ணும் பிராண சவத்துக்குச் சிகிச்சை செய்யக் கிடைத்துவிட்டதே! ஓ…மேலாம் பரமான மாசம்…மேலாம் பரமான நாள்…மேலாம் பரமான பணி…

மீண்டும் அவளை அவதானித்தான்.

நெறுநெறுக்கும் பெண்மையின் பரிபூரணம், பிரித் தறியமுடியாத தத்துவமாகப் பூவில் மணமாக விசுசிக்கும் சௌந்தர்யம், அதை அசுரத்தனமாக அமுக்கி மறைக்கத் துடிக்கும் ஏழமைக்கோலம், இவை எல்லாவற்றோடும் பாலொடு வெண்மையாய், இசையொடு நாதமாய் இரண் டறக் கலந்த துயரம் என்பவற்றை அவன் தனித்தனியாக வும் கூட்டுக் கலவையாகவும் அந்தச் சவமாகாத சவத்தில் கண்ணுற்றான். அவள் யாரோ? வழுக்கி விழுந்தவளோ? வாழத் துடிப்பவளோ? மானம், மரியாதைகளை விலை பேசி விட்ட தளுக்குத்தாரியோ? எனவும் பலவாறாகச் சிந்தித் தான். அவள் இமைகள் திறந்தன. இழிவரலின் தேக்க மாகிக் கண்கள் சுழன்றன. நாணம் பிடுங்கித்தின்னச் சுதாரித்து எழுந்திருந்தாள். நீண்டகால உழைப்பின் மகிமை யால் சவுங்கிச் சாயம்போன சேலையின் முன்றாணையால் தலையை முக்காடிட்டுக்கொண்டாள். கண்கள் நன்றி கனிய மன்னிப்புக் கோரின. பரிதவிப்போடு முற்றத்தை நோக்கி தலை திரும்பியது. வீட்டுக்காரி சுளகோடு முற்றத்திலிறங்கினாள்.

“சுளக எங்கிட்டத் தாங்க சீதேவி, நான் புடைக்கன்”

“ஏன் அவ புடைச்சா ஆகாதோ. நீ சும்மா இரு” என அவன் அவளை மறுத்துரைத்தான். கண்கள் எரிவெடுத் தன. கிணற்றடிப் பக்கம் போனாள். வீட்டுக்காரி அரிசிப் பையையும், நோட்டுப்புத்தகத்தையும் திண்ணையில் கொண்டு வந்து வைத்தாள். முன்றாணையால் முகத்தைத் துவட்டி முக்காடிட்டுக்கொண்டு திண்ணையில் வந்தமர்ந்தாள். வீட்டுக் காரி கேட்டாள் :

“நோம்பில்லாட்டிச் சொல்லு, கோப்பி ஊத்தித் தாறன்.”

“வாணாஞ் சீதேவி. நான் நோம்பு சீதேவி”

பேச்சின் இசைப்பும், சேலை கட்டியுள்ள பாணியும், அவளில் மட்டக்களப்பு வாசனையைத் தரவில்லை. ஒரு நீண்ட பெருமூச்சை வெளிவாங்கிக்கொண்டு கண்கள் பனிக்க வாய் திறந்தாள்.

“ஊரு மாத்தள. இரிக்கிய அன்றாஸ்புரத்தில் கட்டுக் கெலியா ஊர். பதினைஞ்சு வருஷமா இரிக்கிய அங்கதான்”

“இந்த வயசில இவ்வளவு தூரம் தனியா வெளிக் கிட்டு வரலாமா?”

“என்ன செய்யிற வாப்பா! நஸீபு இப்படி ஆயிச்சுது. இன சனத்தால ஒரு உதவியும் இல்லை. மலையாளத்து மனி சன் ஓராள் நம்மைக்கிரங்கி முடிச்சார். அசலூரில் கொண்டு வெச்சிக்கொண்டு இருந்தார். பொடயன் கடிச்சுசுட்டி அவரும் மவுத்து. பாத்த எல்லாம் வேத்து முகம். அஞ்சு புள்ளயள்; ரெண்டு கொமர். சேனக்க வயலுக்க கூலிவேல செய்யித. அது சுட்டிக்குஞ்சுகளுக்குக் கஞ்சித்தண்ணி ஊட்டுத. குந்திக்கிரிக்க ஆண்டுவ இடத்தில் மண்ணால் ஒரு வீடு கட் டினா சுட்டி மூத்த கொமர ஒருவண்ட கையில் குடுக்க ஏலும். வெக்கம் பாக்காம றம்ழானில வெளிக்கிட்டா ஏதும் சல்லி கிடைக்கும்; காட்டுக்கம்பு வெட்டி வூட்டக் கட்டுவம் எண்டு தான் சீதேவி வெளிக்கிட்டன். ஸ்கொலகெட் சேர் அவருக் கும் ஊரு மட்டக்களப்புதான். அவருதான் பொத்தகத்தில் வாசகம் எழுதித்தந்திய”

அவள் தனது விருத்தாந்தத்தையும் வி ஜயத்தின் நோக்கத்தையும் சுருக்கத்தை சுருக்கும் முறையில் சொல்லி முடித்தாள். கண்கள் குத்திவிட்ட கொப்புளங்கள் போல் ஊற்றெடுத்தன. சேலைத்தலைப்பால் அவற்றை முடிக்கொண்டாள். அவளை, அவளுடைய பேச்சை அவன் அப்படியே நம்பினான். அதிலே பொய்மையை, பாசாங்கை, புன்மையை, விகல்பத்தை அவன் காணவில்லை. காவியநாயகி கிடைத்து விட்டாள் என்ற திருப்திகூட அவனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

“இந்த மயக்கம் அடிக்கடி வருமா?”

“மாசம் ரெண்டு மூணுதாக்கு வரும்”

அவன் ஏற்கனவே எடுத்த முடிவு சரியாகிவிட்டது.

“ஓ…நீயொரு ஹிஸ்டீரியாக் கேஸ்தான். நீமட்டுமா? பல்லாயிரம் பல்லாயிரம், பல்லாயிரம் தரங்கள் பல்லாயிரம் ஹிஸ்டீரியாக்களில் நீயும் ஒருத்தி”

மனசுக்குள் மௌனகீதமாய் முகாரி ராகத்தில் இசை கூட்டிப் பேசிக்கொண்டான். அந்த நோட் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தான். அதைச் சுக்கல் சுக்கலாக கிழித்துக் கசக்கி நெருப்பிலிட்டு சாம்பலாக்கி அந்தச் சாம்பலையும் பஸ்பமாக்கிக் காற்றில் உருத்தெரியாமல் ஊ விடவேண்டும் என்று அவன் நினைத்தான். உணர்வை அடக்கிக்கொண்டு அதை அவளிடம் நீட்டினான். அவள் பார்வை செங்கருமை பாய்ந்த அவள் முகத்தில் நிலைத்தது. அதனூடாக அண் வெளியையும், பேரண்டவெளியையும், அப்பாலும், அதற்கும் அப்பாலும் பார்க்கமுனைந்தான்.

அவன் பார்வையில் பல யுகங்கள், பல சாம்ராஜ் யங்கள், பல நாகரீகங்கள் என்பன தரிசனை தந்தன. குல பாயே ராஷிதீன்கள் வாழ்ந்துகாட்டினார்கள் என அவனுக்கு ஊட்டப்பட்ட எளிய அழகிய முன்மாதிரிகள் அவன் முன் தரிசனை தந்தன. அந்த லூசியா (ஸ்பெயின்) வின் அல்– ஹம்றா மாளிகையின் நந்தவனங்களிலும், நிலா முற்றங்களி லும் உமையா சுல்தான்கள் கம்பீரமாக உலாவிவரும் காட்சி கள் கண்முன் விரிந்தன. அப்பாஸியரும், துராணியரும், துருக்கியரும், ஈரானியரும் நடாத்திய வீர சாம்ராஜ்யங்கள் ராஜ கம்பீரம் நல்கின. முகல்-ஈ-ஆஸம்கள் ஹிந்துஸ் தானத்தின் மனோரம்ய மஹாசௌந்தர்ய மஹால்களிலும், குளிர் பூஞ்சோலைகளிலும் காதலியரோடு கை கோத்துச் சென்ற கலைக்கோலம் கண்முன் விரிந்தது. ஐ. நா. வின் சபா மண்டபத்தில் தத்தம் நாட்டின் ராஜப்பிரதிநிதிகளான, நாற்பதுக்கு மேற்பட்ட முஸல்மான்கள் ஆரோகணித் திருக்கிறார்கள். ஷேக்குகளின் அந்தப்புரங்களில் நவீன ஹோட்டல் அறைகளில் உலக அழகிகள் துவண்டு, கசங்கிக்கிடக்கிறார்கள்.

பின் நிஜ உலகுக்கு வந்தவனாய் வீட்டுக்குள் சென்றான். சட்டைப் பைக்குள் கைவிட்டு கசங்கிய என்வலப்பை எடுத்துக் கொட்டினான். புத்தக இடுவலுக்குள் கைவிட்டு இன்னொரு என்வலப்பை எடுத்துக் கொட்டினான். ஓர் உண்டியலையும் எடுத்து உடைத்தான். 49 ரூபா 60 சதக்களை எண்ணி எடுத்தான்.

கொழும்பில் முஸ்லிம் பிரமுகர்கள் அளித்த வரவேற் பில் ஒரு மாபெரும் முஸ்லிம் நாட்டின் சட்ட அமைச்சர் பேசியதாக பத்திரிகையில் அவன் படித்த செய்தியை மனம் அசைபோட்டது.

‘ஸக்காத் செல்வத்தை புனிதமாக்கும் அருமருந்து, ஸகாத் வாங்க கடமைப்பட்டவர்களை நாம் தேடிச்சென்று கொடுக்கவேண்டும். நாம் அவர்களது நன்றிக்குரியவல்லர். அவர்கள் தாம் எம் நன்றிக்குரியவர்கள்’

‘Oh! Honourable Minister, yor are great !
your words too, are marvellous’

‘அம்மணி நான் உன்னைத் தேடிவராதது என் குற்றமல்ல. காரணம் நான் 400 ரூபாச் சம்பளக்காரன் மாத் திரமே. ஏழை வரி செலுத்தக் கடமைப்பட்டவன் அல்ல. என்னால் இயன்றது இவ்வளவுதான்’ என்ற மௌன மொழி யோடு திண்ணைக்கு வந்தவன் “இங்கே ஒரு 40 சதம் தா” என மனைவியைப் பார்த்துக் கேட்டான். மனைவி முன்றாணையின் முடிச்சை அவிழ்த்தாள்.

(யாவும் கற்பனை)

– வீரகேசரி 1977,

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *