வீர வெங்கிட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2024
பார்வையிட்டோர்: 265 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கும்பகோணம் பெரிய தெருவில் உள்ள ஒரு மாடிவீட்டில் ராமஸ்வாமி ஐயங்கார் என்ற பெரிய வக்கீல் இருந்தார். அவர் தொழிலைச் சரியாய் நடத்தி வந்ததால் பல கக்ஷிக்காரர்களிடம் அவருக்குக் கண்ணியம் ஏற்பட்டது. அதற்குத் தகுந்தாற்போல் அவருடைய வருமானமும் அதிகரித்தது. மாதம் சுமார் ஆயிர ரூபாய் அவர் சம்பாதிப்பார் என்பது மற்றவர்களுடைய மதிப்பு. அதற்கேற்ப அவர் சில தான தருமங்களையும் செய்யத் தொடங்கினார். ஜட்ஜ், கலெக்டர் முதலிய பெரிய உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி தேநீர் விருந்து’ அளிப்பார். கோவில் குளங்களுக்கும் தம்மா லான உதவி செய்வார். ஏழை உறவினர்களுக்கும் சமயோசிதம் போல் கை கொடுப்பார். ஆயினும் தம் பெண்சாதி குழந்தை களின் நன்மையையும் மறவார். அவருக்குச் சில நாள் வரையில் புத்திரபாக்கியமில்லாமல், கடைசியில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானின் அனுக் கிரகம் எனக் கருதி அதற்கு வெங்கடரமணன்’ என்ற பெயர் வைத்தார்கள். 

இதற்குள் மூத்த பையன் முறையாகக் கற்றுத்தேர்ந்து பி.ஏ. பட்டமும் அடைந்தான். புத்திக்கூர்மையோடு கூடப் புஜபல பராக்கிரமும் இருந்தமையால் அவனைப் பலர் ‘போலீஸ்’ இலாகாவுக்குத் தகுந்தவன் என்று சொன்னார்கள். ஆயினும் இது தகப்பனாருக்குப் பிடிக்கவில்லை, ஜோசியர்களை ரகஸ்யமாகக் கேட்டதில், “புது மாதிரி உத்தியோகம் செய்து ஆகாசம் வரையில் கிளம்புவான் ” என்று புதிர் போட்டது மாதிரி சொன்னார்கள். 

இதுவும் தாய் மூலமாகப் பையன் காதிற்கு எட்டியது. அதற்கேற்றபடி ” ஹிந்து’ முதலிய தினஸரிகளைப் புரட்டுவதில் ஆகாய விமானப் படைக்கு ஆள் தேவை’ என்ற பத்தியும் தினம் தினம் அவன் கண்ணுக்குத் தென்பட்டது. 

நற்குடிப் பிறந்தோன், திடகாத்திரன், பெரிய பட்டம் பெற்றவன் என்ற இறுமாப்பால் சிறிய உத்தியோகத்தில் இறங்கு வது கௌரவக் குறைச்சல் என்று எண்ணினான். ஆதலால் ஒரு வருக்கும் தெரியாமல், தபாலாபீஸுக்குப் போய், எடுத்தவுட நூறு வராகன், அதாவது முந்நூற்றைம்பது ரூபாய்க்குக் குறை வில்லாமல் தனக்குச் சம்பளம் கொடுத்தால்தான் விமானப் படையில் சேரமுடியும் என்பதைக் குறிப்பிட்டு, தன் ஸகல வல்லமைகளையும் விவரித்து ஒரு மனு மேலதிகாரிகளுக்குப் போட்டான். மகா யுத்தத்தின் பலனாய், முன்னால் இந்தியர்களுக் குக் கொடுபடாதிருந்த ராணுவ உத்தியோகங்களையும் கொடுப்பதாக அரசாங்கத்தார் ஏற்பாடு செய்திருந்ததால், அவன் மனு வுக்குப் பத்து நாளைக்குள் பதில் வந்தது. 

இனி வீட்டில் மறைத்துவைப்பதில் பலனில்லை என்று தெரிந்து, இரவு சாப்பாட்டுக்குப்பின் ஓய்வு நாற்காலியில் சாய்ந்து தம் மனையாளுடனும், குழந்தைகளுடனும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த தன் தகப்பனாரிடம் விஷயத்தைச் சொன்னான். 

முதலில் பெரிய சம்பளம் வருவதை மட்டும் கூறினதால், அவன் காரியம் ஒருவாறு பலித்தது. “கோழை மனசுடையான் என்பது ஒரு வசைமொழி; அதை நாம் எப்படியும் தடுக்கவேண் டும் என்ற மனப்பான்மை மேற்கொண்டிருந்ததால் எல்லாரும் சுலபமாகவே சம்மதித்தார்கள். 

உடனே பெங்களூருக்குப் போய் அங்கே ராணுவ அதிகாரி களைப் பேட்டி கண்டு, அவர்களும், இவன் நல்ல ஆஸாமி” என்று சொன்னதால், வட இந்தியாவிலுள்ள அம்பாலா என்ற விமானப் பயிற்சி அளிக்கும் இடத்திற்குப் புறப்பட்டான். 

ஒவ்வொரு வாரமும், செல்லப் பிள்ளையாகிய வெங்கிட்டு விடமிருந்து கடிதம் வரும். நாலைந்து பக்கங்களுக்குக் குறைச்ச லில்லாமல் தான் பார்த்தும் கேட்டும் வரும் விஷங்கள் அனைத்தை யும் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியும்படி எழுதுவது அவன் வழக்கமாய்விட்டது. 

ராமஸ்வாமி ஐயங்காரும், ஒவ்வொரு கடிதத்தையும் தம் ஆப்த நண்பர்களிடம் காட்டி, அவர்களுடைய ஆனந்தத்தில் தாமும் ஈடுபட்டுச் சந்தோஷப்படுவார். 

இளங்காளை யாதலால் விமானம் ஓட்டும் வீத்தையை வெகு சீக்கிரம் கற்றான் வெங்கிட்டு. ஆதலால் தன் மேலதிகாரிகளுடன் சரி சமானமாய்ப் பழகுவானே ஒழியத் தான் சிறு பிள்ளை என்ற எண்ணம் அவனுக்கு இல்லவே இல்லை. போரின் கொடுமை அதிகரித்ததால் கைதேர்ந்த சில வீரர்களைப் பிரான்சு தேசத்துக்கு அனுப்பவேண்டும் என்ற உத்தரவு வந்தவுடன், முன்னணியில் நிற்கும் வெங்கிட்டுவின் பெயரும் ஐரோப்பாவுக்குச் செல்லும் வீரர்களின் ஜாப்தாவில் சேர்க்கப்பட்டது. 

இந்தச் சமாசாரம் தகப்பனாருக்குத் தெரிந்தவுடன் குழந்தை யின் பெயரால் வீட்டில் ஸஹஸ்ர நாமார்ச்சனையும், கோவில்களில் விசேஷமான அபிஷேகம், பூஜை, நைவேத்தியம் முதலியனவும் செய்வதற்கு ஏற்பாடுகள் பண்ணினார். பையனிடமிருந்து ஒரு மாதத்துக்கொரு தடவையாவது, “க்ஷேமம் நீ கவலைப்படாதே என்ற சில வார்த்தைகளடங்கிய தந்தி வந்துகொண்டிருந்தது. 

இப்படியாக, ஆறு மாதத்தையும் ஆறு யுகமாகக் கழித்தனர், ராமஸாமி ஐயங்காரும் அவர் தர்ம பத்தினியும். ஊரை விட்டுப் போய் மூன்று வருஷங்கள் ஆனதால், இரண்டு மாதம் லீவ் வாங்கிக்கொண்டு வெங்கிட்டு கும்பகோணத்துக்குத் திரும்பினான். 

அவன் திரும்பி க்ஷேமமாய் வந்து சேர்ந்ததால் வீட்டில் ஒரே கூத்தும் கொம்மாளமும். தினம் ஒருவித பக்ஷணம். தினம் ஒரு கச்சேரி. தாயாருக்கும், தகப்பனாருக்கும் கடவுளிடம் இருந்த பக்தி மேலிட்டு, “திருவேங்கடத்தான் அருளால் எங்கேயாவது க்ஷேமமாய்த் தீர்க்காயுஸுடன் இருந்தால் போதும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். 

இப்படியாக இந்த இரண்டு மாதமும் இரண்டு க்ஷணமாகப் பறந்தன. கல்கத்தாவுக்கு வரும்படி உத்தரவு பிறந்தது. 

கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப்போய் ஒரு மாதத்துக்குள்ளாக, ‘கொடிய ஐப்பானியரின் கொட்டத்தை அடக்கப் பல விமானிகள் வேண்டும் என ராணுவக் கட்டளை பிறந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டதால் களைப்பற்ற வீரனாம் வெங்கிட்டுவை மற்றவர்களுடன் பொறுக்கிப் போர் முனையில் அனுப்பியது ஆச்சரியமல்ல. ஒவ்வொரு தரமும் கல்கத்தாவுக்கு வரமுடியாது; ஆதலால் விமானத் தாக்குதல் ஆனபின் அஸ்ஸாம் மாகாணத்திலுள்ள ஒரு சிற்றூருக்கு வீரர்கள் திரும்புவது என்று ஏற்பாடாயிற்று. போர்முனை யில் எவ்வளவு சௌகரியங்கள் கிடைக்குமோ அவ்வளவும் வெங்கிட்டுவுக்குக் கிடைத்தன. தனிக் கூடாரம். தன் உடுப்புக் களைச் சரிவரப் பார்த்து வருவதற்கு ஒரு சிப்பாய். தேயிலை, ரொட்டி முதலிய ஆகாரங்கள், பதினைந்து நாளுக்கொருதரம் பெற்றோர்களுக்கு க்ஷேமலாபத்தைப்பற்றி எழுத வசதிகள், எல்லாம் இருந்தன. 

ஒரு தரமல்ல, பல தரமும் ஜப்பானியர்கள் கூடி இருந்த இடங் களிலும், அவர்கள் ஆதிக்கமிருந்த இடங்களிலும் வெங்கிட்டு வின் குண்டு வீச்சு பலமாயிருந்தது. சத்துருக்கள் பீதி யடையும் படி ஒவ்வொரு தரமும் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அவ்வளவுக் கவ்வளவு, நேசப்படைகளில் அவன் செல்வாக்கு அதிகப்பட்டது. வரவர, அவன் கையாண்ட முறைகளைக் கூர்மையாய்க் கவனி சத்துருக்கள் ‘ஆக் ஆக்’ பீரங்கிகளை உபயோகித்தனர். தண்ணீ ரில் எப்படி மீன் வளைந்து வளைந்து நீஞ்சுமோ அப்படியே வெங்கிட்டு ககன மார்க்கத்தில் கீழும் மேலுமாகப் புரண்டு புரண்டு அதிசாதுரியமாகத் தப்பிவிடுவான். 

இப்படிப் பலநாள் சென்றன. மாரிக்கால மத்தியில் அவன் எதிரிகளுக்கு ஏராளமான சேதம் ஏற்படுத்தித் திரும்பும்பொழுது ஒரு தரம் ‘ ஆக் – ஆக்’ பீரங்கி அவன்மேல் சுடப்பட்டதைக் கண்டு, அவன் கீழே இறங்கப் பார்த்தான். விமானம் ஓட்டும் யந்தரத்தைத் திருப்ப யத்தனித்ததில் கை நழுவிற்று. அவ்வளவு தான் தாமதம், விர்ரென்று குண்டு தன் விமானத்தைத் தாக்கவே, விமானம் தீக்கிரையாயிற்று. வெங்கிட்டு உடல் நீத்துக் கீழே விழுந்தான். 

விஷயம் ஊருக்குத் தெரிவதற்கு ஒரு வாரம் ஆயிற்று. வெள்ளிக்கிழமையன்று அவன் தாய்க்கு ஏதோ மனம் 

(குறிப்பு: பக்கம் 63 கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்).

தாய்மார் இத்தேசத்தில் தோன்றவில்லையா? இப்போது நீயும் ஒரு வீரனின் தாயானாய். நாம் ஏன் அழவேண்டும்? மனிதன் சரீரமா? அல்லது ஆத்மாவா? பரமாத்வானின்றும் வேறாய் வந்த ஜீவன் மறுபடி பரமாத்மாவுக்குத் திரும்பிப் போயிற்று. இது ஸகஜந் தானே?” என்று ஒருவாறு தேற்றினார். 

எப்பொழுதுமே கொஞ்சம் தர்ம வாசனை உடையவர் ஐயங்கார். அதிலும் இந்தச் சம்பவம் நடந்தபிறகு, “உலகம் அநித்தியம்” என்ற உண்மையை நன்கறிந்தார். 

இரவில் தூக்கம் வராத சமயங்களில், தம் வாழ்வில் மின்னல் போல் தோன்றி மறைந்த தனயனைப்பற்றி நினைப்பார். அபூர்வ வாசனையுள்ள புஷ்பம், முழுதும் மலர்ந்து எல்லோருக்கும் இன்பம் தராமல் கருகிய மொட்டாய்விட்டதே என்று ஏங்குவார். பிறகு ஆத்மாவுக்கு ஒருவிதக் கிலேசமுமில்லை என்று கிருஷ்ணன் கீதையில் கூறிய வாக்கை நினைந்து தேற்றுவார். 

அவர் வாழ்க்கையிலேயே ஒரு பெரிய மாறுதல் உண்டா யிற்று. சாத்விக குணம் மேலோங்கி ரஜோகுணமும் தமோ குணமும் பின் வாங்கின. மனத்தெளிவு அடைய அடைய, தம் பித்ருக்களின் ஆசீர்வாதத்தால் நிஜ வீரனைத் தாம் பிள்ளையாகப் பெற்றது ஒரு பாக்கியந்தான் என்ற முடிவுக்கு வந்தார். ஆதலால், எல்லாப் படியாலும் வெறும் வெங்கிட்டு வீர வெங்கிட்டுவாய்த் திகழ்ந்தான்.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *