வீரமும், விவேகமும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,854 
 
 

மாலை ஐந்து மணி.
நானும், பாலாவும், இனியனும், கோவில் திடலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
சம்பத்தும் வந்து சேர்ந்தான்.
“”என்னடா… நம்ம வீராதி வீரரைக் காணோம். நமக்கு முன்னாடியே வந்து உட்கார்ந்திருப்பாரே?” என்றான் பாலா. அவன், “வீராதி வீரன்’ என்று குறிப்பிட்டது, கண்ணன் சாரை தான்.
“”எங்காவது போர் மூண்டிருக்கும். அவர் அங்கே போய் களத்தில் இறங்கி, வாள் வீசிக் கொண்டிருக்கிறாரோ என்னமோ,” என்றான் இனியன்.
“”அப்படியே இருந்தாலும், பொழுது சாயும் நேரத்தில், போரை நிறுத்தி அவரவர் முகாம்களுக்கு திரும்பி இருப்பார்களே,”
என்றான் சம்பத்.
“”நம்ம ஆளைப் பத்தி சொல்லணுமா. அவர் ஓவர் டைம் வாள் வீசிகிட்டிருப்பாரு,” என்றான் இனியன்.
“”எதிரிகளே இல்லாத களத்தில், இவர் என்ன, காத்தோடு சண்டை போடுவாரா?”
வீரமும், விவேகமும்!“”இருக்கும் இருக்கும்…” என்று சிரித்தான் சம்பத்.
இவர்களின் பரிகாசத்துக்கு ஆளான கண்ணன் சார் வந்து சேர்ந்தார்.
தாங்கித் தாங்கி நடந்து வந்ததில், என்னவோ பிரச்னை என்று தோன்றியது.
குனிந்து பார்த்த போது, அவரது இடது கால் விரல்களில் கட்டுப் போடப்பட்டிருந்தது.
“”என்ன சார்… இந்த வயசுல கால்கட்டு போட்டிருக்கீங்க?” என்று கேட்டான் இனியன்.
“”கால் கட்டு இல்லடா. யுத்தத்துல ஏற்பட்ட விழுப்புண்,” என்றான் சம்பத்.
“”விழுப்புண் என்றால், மார்பில் ஏற்படணும்டா. இது, புறமுதுகிட்டு திரும்பி வரும்போது, கல் தடுக்கி விழுந்ததால் ஏற்பட்ட புண்ணாக இருக்கும். அப்படித்தானே சார்?”
“”அதுவும் விழும்புண்தாண்டா… விழுந்ததால் ஏற்பட்ட புண்,” என்று ஆள் ஆளுக்கு கலாய்த்தனர்.
“”நான் அடிபட்டது, உங்களுக்கெல்லாம் வேடிக்கையா போச்சு,” என்றபடி, சற்று சிரமமாக அமர்ந்தார் கண்ணன்.
“”எப்படி காயம் ஏற்பட்டது?” என்று கேட்டேன்.
விரல்களில் போட்டிருந்த கட்டையும் மீறி, ரத்தம் கசிவதைப் பார்த்து, சம்பத்தும், இனியனும் கூட சீரியசாயினர்.
“”பைக் காரன் அடிச்சுட்டான் சார்…” என்றார், கண்ணன் வலியால் முகம் சுழித்தபடி.
“”எப்படி சார். நீங்கள் எப்பவும் கவனமாக இருப்பீங்களே?” என்று பாலா கேட்க, “”நாம கவனமாகத்தான் இருக்கிறோம். எதிரில்
வர்றவங்களும், அப்படி இருந்தால் தானே. ராங் சைடுல வந்து, இடிச்சதோடு நில்லாம, “என்ன பெருசு… வூட்ல சொல்லிட்டு வந்தியா?’ன்னு, எகத்தாளமா கேட்டுட்டு போறான்.”
“”சும்மாவா விட்டீங்க?”
“”எனக்கு கோபம்தான். ரெண்டு காட்டு காட்டினால்தான் அவனுக்கு புத்தி வரும்ன்னு, சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினேன். அவன் விருட்டுன்னு பைக்கை ஓட்டிகிட்டு போய்ட்டான்.
விரட்டிப் பிடிக்க, அஞ்சு நிமிஷம் ஆகாது. பைக் போற ரூட் எது… எந்த தெருக்கள் வழியாக போனால், எந்த இடத்தில் வச்சு அவனை மடக்கலாம்…
எல்லாம் தெரியும். கூடியிருந்த ஜனங்கள் தடுத்துட்டாங்க. “ரத்தம் கொட்டுது, முதல்ல டாக்டரை பாருங்க. அவன் எங்க போயிடுவான். என்னைக்காவது சிக்காமலா போயிடுவான்?’ன்னு சொன்னாங்க.”
“”நீங்களும் சரி போயிட்டு போறான்னு விட்டுட்டீங்க?”
“”என்ன செய்யறது. இதுவே, எங்க ஊராக இருந்தா, இந்த மாதிரி போக்கிரி பையன்களை கட்டி வச்சு, தோலை உரிச்சுடுவோம். அடுத்த முறை தப்பு பண்ணாதபடிக்கு, சரியான பாடம் கத்துக் கொடுப்போம்.
இப்படித்தான் ஒரு சம்பவம்… அப்ப எனக்கு பதினாலு வயசு, ஒன்பதாம் வகுப்பு படிச்சிகிட்டிருந்தேன்,” என்று துவங்கினார்.
“ஆரம்பிச்சுட்டார்டா…’ என்று, தலையில் கைவைத்துக் கொண்டான் பாலா. மற்றவர்களும், பார்வையை வேறெங்கோ திருப்பினர்.
கண்ணன் சார் எதையும் கவனிக்காமல், அவர் போக்கில் சொல்லிக் கொண்டு போனார்…
“”ஒரு நாள் காலையில், பள்ளிக்கூடம் போய் கிட்டிருந்த போது, ஒரு பையன் வேகமா சைக்கிள் ஓட்டி வந்து, வாத்தியாரையே இடிச்சுட்டு, “சாரி’ கூட சொல்லாம ஓடிட்டான். நான், ஒரே ஓட்டமா ஓடி, அவனை சைக்கிளோடு கீழே தள்ளி, புரட்டி எடுத்துட்டேன்.
“”இழுத்து வந்து ஆசிரியர் கால்களில் தள்ளி, மன்னிப்பு கேட்க வச்சேன். அவன் பத்தாவது படிக்கிறவன்; போக்கிரி. உள்ளூர் தலைவர் மகன். ஆசிரியர்களே அவனைக் கண்டால், ஒதுங்கித்தான் போவர். நான் பயப்பட மாட்டேன்; தப்பு செஞ்சவன் எவனாயிருந்தாலும், தட்டி கேட்டுடுவேன். அடிபட்டவன், ஒரு கும்பலை திரட்டி வந்து, என் வீட்டுக்கு முன்னால் நிறுத்திட்டான்,” என்று, அவர் சொல்லிக் கொண்டு போகவும், நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, நமட்டு சிரிப்பு சிரித்தனர்.
“இவருக்கு மட்டும் எப்படி புதுசு புதுசா தோணுது? சினிமாவுக்கு போயிருந்தால், நல்ல கதாசிரியரா ஆகியிருப்பார். பாவம், கற்பனை எல்லாத்தையும், இந்த கோவில் திடல்ல வீணாக்குறாரே தெய்வமே…’ என்று, பாலா நொந்து கொண்டான்.
கண்ணன் சாருக்கு, 60 வயதிருக்கும். தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவர்; என்றாலும், இளவயது போல சுறுசுறுப்பு. பேன்ட் – ஷர்ட் போட்டு, எப்போதும் எங்காவது போவதும், வருவதுமாக இருப்பார்.
சென்ற வருட பிள்ளையார் சதுர்த்தி விழாவின் போது தான், எங்களுக்கு அறிமுகமாகி, நெருக்கமானார். எங்களுக்கும், அவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும், அவர் எங்களுடன் பழகுவதில் ஆர்வமாக இருந்தார். எங்களுக்கும், அவர் சொல்லும், “ப்ளாஷ் பேக்’ கதைகளால், ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
அவர் பேசத் துவங்கினாலே, கடந்த காலத்துக்கு போய் விடுவார். அவர் சொந்த ஊரான வெள்ளயங்கிரியில், அவர் செய்த சாகசங்களை எடுத்து விடுவார். எத்தனையோ காலம் மனதில் ஊறிக்கொண்டிருந்த சங்கதிகள், கேட்பதற்கு ஆட்கள் கிடைத்த மகிழ்ச்சியில், துள்ளி வெளியில் பாயும்.
ஊரில் ஆடுகள் திருடு போன போது, அவர் தனி ஆளாக புறப்பட்டு போய், திருடர்களைக் கண்டுபிடித்து, அடித்து போட்டுவிட்டு, ஆடுகளை ஓட்டி வந்த கதையா கட்டும், இரண்டாவது காட்சி சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவில் திரும்பும் போது, வழி மறித்த கொள்ளைக்காரனை, கையில் இருந்த கம்பை சுழற்றியடித்து ஓடவைத்ததாகட்டும், பங்காளி சண்டையில், ஒரே கையில் பெரியப்பன் மகனை சுழற்றி, வைக்கோல் போரின்மேல் தூக்கி வீசியதாகட்டும், ஒவ்வொரு சந்திப்பின் போதும், அவர் சொல்லும் ஒவ்வொரு கதையும், எங்களை ஆச்சரியப்படுத்தும். சண்டைகளுக்கு ஆதாரமாக, அப்போது ஏற்பட்ட காயங்களின் தழும்புகளை காட்டுவார்.
ஒவ்வொன்றாய் சொல்லிவிட்டு, பெரிய தழும்பைக் காட்டி, “இது போலீஸ்காரங்களோடு மோதிய போது விழுந்த லட்டி அடி… அது, ஆயிடுச்சு முப்பது வருஷம்…’
“போலீசோடு ஏன் மோதுனீங்க?’
“எங்க ஊர் ஏரியில், கள்ளச் சாராயம் காய்ச்சினாங்க சில பேரு. மேலிடத்துக்கு புகார் கடிதம் அனுப்பினேன். அவங்க உத்தரவின் பேரில், உள்ளூர் போலீஸ்காரங்க ரெய்டுக்கு வந்தாங்க. வந்தவங்க, சாராய பானைகளை உடைச்சு, ஊரல்களை தோண்டி எடுத்து, வெளியில் கொட்டி அழிச்சு, காய்ச்சினவங்களையும், குடிச்சவனுங் களையும் கூட்டிப்போய் முட்டிக்கு முட்டி தட்டுவானுங்கன்னு பார்த்தால், காய்ச்சறவன் கிட்ட பணத்தை வாங்கிகிட்டு, கண்துடைப்பாக ரெண்டு காலி பானைகளை உடைச்சிட்டு போனாங்க…
“அவங்களை வழி மறிச்சு, அவங்க கடமை உணர்ச்சியை பாராட்டி, தலா பத்து ரூபாய் பரிசு கொடுத்தேன். போட்டு விளாசிட்டாங்க. அந்த காயத்தோடயே சூப்பிரன்டன்ட் ஆபீஸ் போய், புகார் பண்ணினேன். நாலு போலீசை வீட்டுக்கு அனுப் பிட்டுத்தான் வீடு திரும்பினேன்…’ என்று, அட்டகாச சிரிப்போடு சொல்வார்.
“இப்படியே போய்கிட்டிருந்தால், பையன் பிழைப்பு கெட்டு போகுமோன்னு பயந்து, பெத்தவங்க என்னை இந்த ஊருக்கு அனுப்பிட்டாங்க… இங்க வந்தும், தொல்லை எங்க விடுது. கம்பெனியில் சேர்ந்ததிலிருந்து சரியா சமைக்காத கேன்டின் நிர்வாகம், சம்பளம் சரியா கொடுக்காத நிர்வாகம், பொய்யா வாக்குறுதி கொடுத்து, சக ஸ்டாபை மோசம் பண்ணி, கைவிட பார்த்த எம்ப்ளாயி… இப்படி நிறைய பேரை தட்டிக் கேட்ட எனக்கு, நியாயமா வரவேண்டிய புரோமஷன், இன்க்ரிமென்ட்டில் எல்லாம், மண்ணை போட்டுகிட்டேன் தெரியுமா?’ என்று சிரிப்பார்.
பாலாதான் முதலில் சந்தேகத்தைக் கிளப்பினான்.
“எனக்கென்னவோ, மனுஷன் ரீல் விடறாருன்னு தோணுது…’
“ஒரு வருஷமா பார்க்கறோம். அவர் ஏரியாவில் எந்த சாகசமும் செய்து பார்த்ததில்லை நாம். ஒரு முறை அவர் வீட்டிலேயே, திருட்டு முயற்சி நடந்திருக்கு. வந்தவன்தான், இவரை ரெண்டு அடி அடிச்சிட்டு போயிருக்கானே தவிர, இவர், அவனை பிடிக்கவோ, அடிக்கவோ மெனக்கெட்டதாக தெரியவில்லை. @கட்டதுக்கு, “போய்ட்டு போறான். அந்த மட்டுக்கு, வீட்டில் எதுவும் திருட்டு போகலை. சந்தோஷம்…’னார்.
“இன்னொரு முறை, பக்கத்து வீட்டுக்காரரோடு தகறாரு. அவர் மனைவி, மகன்கள் எல்லாம் களத்தில். இவரானால், எதுவும் பேசாமல் வீட்டில் போய் முடங்கி விட்டார். “அடிதடி பண்ண, அதிக நேரமாகாது. பக்கத்து வீடு. நாளைக்கு ஒருவர் முகத்தை, ஒருவர் பார்க்கணும்ல…’ன்னு ஒரு சமாதானம். வஸ்தாது மாதிரி காமிச்சுக்கறார்; நிஜத்தில் அப்படி ஒண்ணும் தெரியலையே. சும்மா, நம்மை இம்ப்ரஸ் பண்றதுக்காக கதை விடறாரு…’ என்றான்.
எனக்கும், சில சம்பவங்கள் நினைவுக்கு வரத்தான் செய்தது. அவரும், நானும் சேர்ந்து ஒரு இடத்துக்கு போய்க் கொண்டி ருக்கும் போது, வழியில் ஒரு சம்பவம்… ஒருவன் குடித்து விட்டு, தன் மனைவியை நடுத்தெருவில் போட்டு, நைய்ய புடைத்துக் கொண்டிருந்தான். அவள், உயிரே போவது போல், கூப்பாடு போட்டு அலறினாள். உதவிக்கு யாரும் வராத நிலையில், என்ன பண்ணலாம் என்பது போல, கண்ணன் சாரை பார்த்தேன்.
“இவ்வளவு அடிக்கிறானேன்னு, அந்த பொம்பளை, புருஷனை வெறுக்கப் போறதில்லை. பகல்ல அடிச்சுக்குவாங்க. ராத்திரில கூடிக்குவாங்க. அந்தப் பொண்ணுக்காக பரிஞ்சுகிட்டு போனால், “நான், உன்னை அடிச்சா, இவனுக்கு ஏண்டி நோகுது… அவனுக்கும், உனக்கும் என்ன தொடர்பு’ன்னு கேட்டு, அதுக்கும் அடிப்பான். வண்டியை ஓட்டு ரவி… ‘ என்றார்.
“ஓட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திபுதிபு என்று உள்ளே புகுந்த நாலுபேர், சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களை, பலவந்தமாக வேறு டேபிளுக்கு போகச்சொல்லிவிட்டு, எங்கள் இருக்கையை அவர்கள் ஆக்கிரமித்து, அட்டகாசம் செய்தனர். எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கண்ணன் சார் கை அமர்த்தினார். கை கழுவி விட்டு, வெளியில் வரும் போது, கேட்டே விட்டேன். “இவ்வளவு தானா உங்க வீரதீர பராக்கிரமமெல்லாம்…’ என்றேன்.
“அததுக்கு ஒரு நேரமிருக்கு ரவி. வெளியில் பார்த்த இல்ல. கட்சி கொடி கட்டினவேன். வந்தவங்க கட்சிக்காரங்க…’
“பயந்துட்டிங்களா?’
“எனக்காக பயப்படலை. கூடவே நீங்க இருக்கீங்க, அவங்க பார்வை உங்க மேல பட்டால் ஆபத்து. எம்மேல் உள்ள கோபத்தில், உங்களை பழி வாங்க பார்ப்பாங்க…’ என்றார்.
அப்போதைக்கு, அவர் சொன்னது சரிபோல இருந்தாலும், இப்போது சந்தேகத்தை கிளப்பவே செய்தது. தன்னை சுற்றியிருக்கும் எல்லாரும், அவரை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருப் பதை உணராமலோ, உணர்ந்தும் பொருட்படுத் தாமலோ, அவர் அந்த மாணவனை அடித்த கதையை தொடர்ந்து கொண்டிருந்தார். பாவமாக இருந்தது என்றாலும், பொழுது போக வேண்டுமே என்று, கேட்டுக் கொண்டிருந்தோம்.
அப்போது… கோவிலின் எதிர் திசையிலிருந்து, ஒரு அலறல் சப்தம்…
“கண்ணன் சார்…’
சடாரென எழுந்தார், விரைந்தார். என்ன ஏது என்று புரியாமல், நாங்கள் சுதாரித்து எழுந்து, அவர் போன திசையைப் பின்பற்றி விரைந்தோம். அங்கே நாங்கள் கண்ட காட்சி, எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. இரண்டு முரடர்களோடு மோதி, அவர்களை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார். தலைவிரி கோலத்தில், ஒரு பெண் பயந்து ஓரமாக நின்று, அழுது கொண்டிருந்தாள்.
எங்கள் உதவி இல்லாமல், அவராகவே அந்த இரண்டு பேரை புரட்டி எடுத்து, ஓட ஓட விரட்டியடித்துவிட்டு, “”வாம்மா போகலாம்…” என்று காவல் நிலையத்துக்கு அழைத்து போனார். நாங்கள் சாட்சிகளாக பின் தொடர்ந்தோம். அந்தப்பெண் பெயர் காவ்யா. வீட்டில், அவளுக்கு பிடிக்காத இடத்தில், சம்பந்தம் பேசியதால், மனம் உடைந்து, வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறாள். அவளை கொன்று விடும் ஆவேசத்தோடு, அந்த மாப்பிள்ளையும், உடன் ஒருவனுமாக கிளம்பி இருக்கின்றனர்.
மறுநாள் திடலில் சங்கமித்த போது, இது தான் எங்கள் பேச்சாக இருந்தது. அப்போது வந்த கண்ணன் சார், “”பொண்ணுக்கு புடிக்கலைன்னு சொன்னால், விட்டுரணும். வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணினால், வாழ்க்கை வீணாகிப் போகும்ல. ரெண்டு பேருக்குமே சுகம் இருக்காது. இப்படித்தான் ஒரு முறை…” என்று, அவர் இன்னொரு கதை சொல்லத் துவங்கினார். நாங்கள் கடுகளவும் சந்தேகமில்லாமல், அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானோம்.
வீரம் என்பது, எப்போதும் வெளிக்காட்டிக் கொள்வது அல்ல; அவசியமான நேரத்தில் பொங்கி எழுவது என்பதையும், மற்ற இடங்களில் விவேகமாக நடந்து கொள்வது தான் வீரம் என்றும், அவர் நிரூபித்துவிட்ட பின், எப்படி வரும் சந்தேகம் அவர் மேல்.
“”சொல்லுங்கள் சார்…” என்றோம்.
சித்தி மகளின் வாழ்வை காப்பாற்றிய கதையை, விவரிக்கத் துவங்கினார் கண்ணன் சார்.

– அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *